|
தோட்டப்புற வீடுகளில் வாழ்ந்த வளர்க்கப்பட்ட பிராணிகளில் ஆடு கோழி வாத்து
நாய்கள் அபூர்வமாய் பூனைகள் தவிர்த்து மேலுமொரு விஷேச பிராணியும் அந்தப்
பட்டியலில் இணைந்திருந்தது.
சாக்லெட் நிறமா இல்லை வேறு ஒரு கலவையில் முகிழ்ந்த நிறமா என்று எவரும்
அறுதியிட்டுக் கூறிவிட முடியாத ஒரு நிறக் கலவையில் குண்டுமணி கண்களும்
நெல்மணி அளவிலான கூரிய அலகும் துறுதுறுத்த இயல்பும் உள்ளங் கையில் வைத்து
மூடிக் கொள்ளும் அளவிலான உடல் பருமனும் கொண்ட உடலோடு வேறுவித விஷேச
கவர்ச்சி அம்சங்கள் ஏதுமில்லாமலே, தோட்டப்புற வீடுகளை தங்கள் வாழ்விடமாக
நிலைநிறுத்திக் கொண்டதோடு, அந்த மக்களின் மனதிலும் தங்களுக்கான ஒரு ஈர
நிலத்தை ஆக்கிரமித்திருந்தன.
பெரும்பாலான வீடுகளின் அஞ்சடி வாசலின் மேற்கூரை அவற்றின் தொங்கும்
வீடுகளின் உறைவிடமாக மாற்றம் கண்டிருந்தன. உரிக்கப்பட்ட தேங்காய் மட்டைகளை
பந்துபோல் இணைத்து நடுவாய் வட்ட நுழைவாயிலோடு கம்பிகளின் நுனியில் தொங்கும்
கூடுகள்.
ஒரு பிடி அரிசி மணிகளோ நெல் மணிகளோ வடித்த சாதமோ வீட்டிலுள்ள யாரேனும்
ஒருவர் நினைத்தபோது வீட்டு வாசலில் வந்து இறைத்துப் போவார்கள். பெரும்பாலான
வீடுகளில் வயதான கிழங்களின் பொறுப்பிலேயே அது விடப்பட்டிருந்தாலும், ஒரு
சந்தோஷத்திற்காக பிற குடும்ப உறுப்பினர்களும் அவ்வப்போது அதில் பங்கு
பெறுவதைப் பார்க்கலாம்.
எங்கள் வீட்டு வாசலிலும் சில கூடுகள் காற்றுக்கு ஆடி நின்றன. கூட்டாளிகளின்
உதவியோடு கட்டப்பட்ட வீடுகள். திக்குவாயர் கடையிலிருந்து பொறுக்கி வரப்பட்ட
மட்டைகள். கம்பி வைத்துக் கட்டி இணைத்து தொங்கவிட சில மணி நேரங்கள் ஆனது.
முதல் முறை எட்ட நின்னு பார்க்க நிறைவாய் இருந்தது. வீட்டின் முகப்புக்கே
தனியொரு அழகு சேர்ந்திருப்பது போன்றதொரு திருப்தி.
அதன்பின் சில நாட்கள் அதனைக் கவனிப்பதே முழுநேர வேலையாகிப்போனது. பள்ளி
முடிந்து வீடு வந்து சேரும்வரை நண்பர்களோடு அதே பேச்சுதான். வீட்டை
நெருங்கும்போதே கண்கள் ஆவலாய் வாசல் முகப்பில் தொங்கும் கூடுகளை
நோட்டமிடும். பல நாட்கள் மிஞ்சியது ஏமாற்றமே. வெறிச்சிட்டுக் கிடந்தன
கூடுகள்.
ஒருநாள் எனது தேடலுக்கும் ஆவலுக்கும் ஆசிர்வாதம் கிடைத்திருந்தது. வீட்டை
நெருங்கும்போதே கண்களில் பட்டது. கூட்டில் வாசலிலிருந்து வெளிப்பட்டு
பறந்தது ஒரு சிட்டு. சில நாட்களில் எல்லாக் கூடுகளிலும் குடித்தனம்
தொடங்கிவிட்டிருந்தது.
இந்தச் சிட்டுக்குருவிகளுக்கு இணையான முக்கியத்துவத்தோடு சில வீடுகளை
ஆக்கிரமித்திருந்தது மேலும் ஒரு பறவை.
இரண்டு குச்சிக்காட்டுக்கு ஒரு வாய் ஓடியது சின்ன ஆறு. அதனையொட்டி
கிழக்குப் பகுதியில் எங்கள் தோட்டத்து கள்ளுக்கடைத் திடல். திடல்
முகப்பிலேயே இருந்தது கள்ளுக்கடை. நான்கு மணிக்கு மேல் ஓரளவு வெயில்
தணிந்தவுடன் சந்தோஷக் குரல்கள் கேட்கத் தொடங்கியிருக்கும் அதற்கும் சிறிது
தள்ளிப்போனால் ஆற்றை ஒட்டி உயர்ந்து நிற்கும் தென்னை மரங்கள். அதன்
உச்சியில் மைனாக்களின் ஆரவார அமளி.
எங்களுக்கு அவைகளின் மேல் நீண்ட நாட்களாக ஒரு கண். அதற்கு காரணம் தொங்கவூடு
குருவி சண்முகம் ஏற்படுத்திக் கொடுத்த நம்பிக்கைதான். மைனாக்களை சிறு
குஞ்சிலிருந்து வளர்த்து பழக்கினால் அவை சுதந்திரமாக வீட்டில் நடமாடி பூனை
நாய்போல் நம்மோடு ஒட்டிக் கொண்டு சிநேகமாகிவிடும் என்பதை அவர்
நிரூபித்திருந்தார்.
மேட்டுக் குச்சியில் கடைசி லயத்தில் தொங்கல் வீடு. ஒரு மினி விலங்கியல்
பூங்கா போல் விளங்கியது எனது நினைவுக்கு எட்டிய தூரத்தில் வழக்கமான கோழிகள்
வாத்துகள் பூனை நாய்கள் தவிர்த்து இரண்டு அணில்கள் ஒரு ராஜா குரங்கு ஒரு
கீரிப்பிள்ளை மற்றும் ரொம்பவும் விஷேசமாய் அங்கே இருப்பதாக பலரும் கூறிய
ஒரு நீர்நாய்.
தொங்கவூடு குருவி சண்முகம் நீர்நாய் வளப்பது குறித்து பல்வேறுபட்ட கதைகள்
குச்சிக்காட்டில் உலவின. அவற்றில் பெரும்பாலானவை ஒருவகை மர்மத்தையும்
திகிலையும் ஊட்டுவதாக விளங்கி ஒவ்வொரு நாளும் புதிய புதிய பரிமானங்களை
வெளிப்படுத்தி வளர்ந்தோங்கிய வண்ணம் இருந்தது.
அந்த வீடு குறித்த மர்மத்தை மனதில் மேலும் விரித்தபடி இருந்தது பெரும்பாலான
பொழுதுகளில் மூடியே கிடக்கும் அதன் கதவும் உள்ளிருந்து வெளிக்கசிந்த பலவித
ஒலிகளும். கடைசி லயத்தின் தொங்க வீடு. அதனைத் தொட்டு நீண்டுபோனது
ரப்பர்காடு. ரிசப்தங்கள் உறைந்த மர்ம தேசம். பொழுது சாய அதன் அடர்ந்த
இருளுள் தொங்கல் வீடு மறைந்து விடும். திகிலூட்டும்.
குருவி சண்முகத்தின் அந்த தொங்கல்வூடு குறித்து பின்னப்பட்டிருந்த மர்ம
வலையின் ஒரு முக்கிய இழைதான் அந்த நீர்நாய். பெரும்பாலும் எவருமே
பார்த்திராத அந்த நீர்நாய் குறித்த பல்வேறு கிளைக் கதைகள் பிறந்த விதமோ
வளர்ந்த விதமோ புரிந்து கொள்ள இயலாத ஒரு புதிராகவே நிலைத்துவிட்டது.
ஒரு கிளைக் கதை அது குருவி சண்முகத்தை வந்தடைந்த விதம் எதுவென்ற கேள்விக்கு
விடையளிப்பதாக இருந்தது. ஒருநா ஆத்துல நல்ல வெள்ளம்பா. கர பொரண்டு ஓடுது.
கதவ சாத்தி வச்சு குச்சிகாட்டு சனம் வூட்டுகுள்ள மொடங்கி கெடக்கு. நல்ல
இருட்டு. சண்முகம் வூட்டு அஞ்சடிய என்னவோ சத்தம். கதவு தெறந்து வெளக்கோட
போய் பாத்தா அல்லூர்ல கெடக்கு நீர்நாய் குட்டி.
இந்தக் கிளை கதை குறித்து கேள்விகளும் உண்டு. நம்ப மறுப்பவர்களும் உண்டு.
உப்பு தண்ணில கெடக்கற நீர்நாயி எப்படி ஆத்து தண்ணில வந்துச்சு? அது
நீர்நாய் இல்ல! வேற ஏதோ ஒண்ணு!
அம்மாவும் அதைத்தான் சொன்னாள். அந்த தொங்கவூடு குருவி சண்முகம் வளக்கறது
நீர்நாய் இல்லடா பெரியவனே! அது ஒரு ஜின்னு பேய்னு சொல்லிக்கிறாங்க. பகல்ல
நாய் மாதிரி வூட்டுக்குள்ளயே கெடக்குது. ராத்திரில ஜின்னா குச்சிகாட்ல
தீம்பார்காட்ல திரியுது. பத்திரன்டா பெரியவனே! நீயும் கூட்டாளிங்களோட
சேந்துகிட்டு ராத்திரியானா அந்த வூட்டுப் பக்கமா போயிடாத. அப்புறம் ஜின்னு
பேயி அடிச்சு ரத்தம் கக்கிதான் சாவணும்! ரட்டமல சந்துல ஒருநா உச்சி
நேரத்துல சைக்கிள்ல போன வயித்தன் மாமாவ ஜின்னு பேயி அடிச்சு குச்சிகாட்ல
வந்து ரத்த வாந்தி எடுத்து செத்த மாதிரி ஆயிடும்!
இதற்கு வலு சேர்க்கும் விதமாக இருந்தது மேலும் ஒரு வதந்தி.
அந்த தொங்கல் வீட்டு குருவி சண்முகம் ஒவ்வொரு செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில்
இரவு பன்னிரெண்டு மணிக்கு மேல் ஊரே தூங்கப்போன பின் அரிக்கேன் விளக்கோடு
நீர்நாய் பின்தொடர பெரிய ஆத்துப் பக்கம் போய் வருவதாகவும் ஆத்தங்கரையில்
விளக்கோடு குருவி சண்முகம் உட்கார்ந்து பார்த்திருக்க நீர்நாய் நீரில்
குதித்து மூழ்கி மீன் பிடித்து கரைக்கு வந்து அவர் பக்கமே உட்கார்ந்து
துடிக்கும் மீனை ரத்தம் சொட்ட கடித்து உண்டு பசி தீர்ந்ததும் கோழி கூவும்
நேரம் வீடு திரும்புவதாகவும் ஒரு கதையும் உலவியது.
இந்த தொங்கவூடு குருவி சண்முகம் குறித்த பூர்வீக வரலாறு ஏதும் அங்குள்ள
எவருக்கும் அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை.
பெரும்பாலும் சிறிய வட்டமான தோட்டப்புறங்களில் அனைவருக்குமே பிறர்
அறியும்படியான ஒரு சுவடு இருக்கும். குறைந்தது இரண்டு தலைமுறைகளையாவது
கண்டிருக்கக்கூடிய தோட்டப்புறம் அதன் உறுப்பினர்களின் பூர்வீகம் தொடங்கி
அன்று வரையிலான அனைவரின் குடும்ப வரலாறுகளை வாய்வழி பதிவு செய்த வண்ணமே
நகர்ந்து செல்லும்.
அது நூறு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு எங்கேனும் ஒரு தமிழகக்
கிராமத்திலிருந்து வெள்ளைக்கார துரைமார்களுக்கு ஆள்கட்ட வந்த மலாயா
கங்காணிமார்களின் ஆசை வார்த்தைகளில் மயங்கி கப்பலேறிய முப்பாட்டனோ பாட்டனோ
பாட்டியோ முன்னெடுத்த ஒரு குடும்ப வரலாறாக இருக்கும்.
இன்றும் கூட அத்தோட்டத்தில் வாழ்ந்து இன்னமும் உயிரோடிருக்கும் பெரியவர்
எவரையேனும் எங்கேனும் ஒரு தாமானில் சந்திக்க நேர்வதுண்டு. யாரோட பேரம்பா
நீ? என்கிற அவர்களின் கேள்விக்கு பெரிச்ச பலத்தாரு சின்னப்பனோட பேரன் எனும்
எனது பதிலை எதிர்கொண்டு அவரின் வரலாற்றை ஊரிலிருந்து மூன்று சொக்கரா
பையன்களோட தனி மனிதனாய் கப்பலேறி வந்தது தொடங்கி அவர் குறித்த பல இதுவரை
கேட்டறியாத நுணுக்கமான செய்திகளையும் பகிர்ந்து கொள்வதுண்டு.
“ஓ அந்த பெரிச்ச பலத்தாரோட பேரனா நீ?” என்கிற வியப்பில் தொடங்கி அவர்
மூன்று சொக்கரா பையன்களை கையில் பிடித்துக் கொண்டு தோட்டத்துக்குள் நுழைந்த
நாளை துல்லிதமாக நினைவில் வைத்திருந்தார்.
அம்மா இல்லாத குறையில் அப்பாவும் சித்தப்பாக்களும் அவர்களை தனி மனிதனாய்
நின்று கவனிப்பதில் தாத்தா பெரிச்சபலத்தாரும் எதிர்கொண்ட சிரமங்களை
பட்டியலிட முடிந்தது.
விறகு வெட்டி வர துணி துவைக்க சமைக்க என அந்தச் சொக்கரா வயிதிலேயே எல்லாம்
சுயமாகச் செய்து கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் அவர்கள் இருந்ததையும் முன்பே
அப்பா வழி அறிந்திருந்த போதிலும்- அதனை பக்கமிருந்து பார்தது உணர்ந்த ஒரு
மூன்றாம் மனிதரின் வழி கேட்க நேரும்போது மனதில் முற்றிலும் புதியதானதொரு
நெகிழ்வை உணர முடிந்தது.
தாத்தா பெரிச்சபலத்தார் பற்றி அவர் கூறிய செய்தியொன்று புதிதாக இருந்தது.
அவர் நல்ல வளத்தியான மனிதர் என்பதை மட்டுமே அறிந்திருந்த எனக்கு, தோட்டத்து
வீட்டுப் பின்புறம் வாழை மரங்களின் பின்னணியில் அரைக்கை சட்டையும்
வேஷ்டியும் அணிந்து நிமிர்ந்து நிற்கும் அவரது தனித்த கறுப்பு வெள்ளையில்
பழுப்பு ஏறிய நிழற்படத்தை பார்த்திருந்த நினைவில், அந்த முகச்
சித்திரத்தில் நுட்பமான கூறுகள் எதுவும் பிடிபட்டிருக்கவில்லை.
அவர் சொல்லிய கூடுதல் விவரணைகள், ஒங்க தாத்தனுக்கு பூன கண்ணுடா தம்பி!
கண்ணுக்கு மேல அந்த புருவம் பெருசுடா. வெள்ள வெளேர்னு நரச்ச முடி
பொதராட்டம் இருக்கும். அந்த நெத்தி இன்னும் நெனவிருக்குடா! அதுக்கு நடுவால
பொட்டு வச்ச கணக்கா ஒரு தழும்பு மச்சமாட்டம் இருக்கும். பேச்சு ரொம்ப
கொறச்சலு தம்பி!
இந்த தொங்கவூடு குருவி சண்முகம் குறித்து மட்டும் எவரிடம் கேட்டாலும்
‘தெரியலப்பா! சொக்கர வயசுல ஒருநா கோயில்ல வந்து படுத்துக் கெடந்திருக்கான்.
என்ன ஏதுன்னு கேட்டு பாத்தோம். ஒண்ணுமே பதுலு சொல்லாத உக்காந்து
கெடந்திருக்கான். வெசயம் பெரிய தண்டலுக்கு போச்சு. அவரும் வந்து வெசாரிச்சு
பாத்தாரு. எந்த தகவலும் வரல. அவரா எரக்கப்பட்டு பெரிய கிராணிகிட்ட பேசி
வெளிக்காட்டுல சொக்கரா வேலயில சேத்துவிட்டாரு. அன்னயலர்ந்து அவனும் இந்த
தோட்ட சனங்கள்ல ஒரு ஆளா ஆயிட்டான்’.
அதன் பின்பும் அவன் தனது பூர்வீகம் குறித்து எதுவுமே பேசியதாகத்
தெரியவில்லை. அப்படியே யாரேனும் ஒருவர் அதைத் தெரிந்து கொள்ளும் ஆவலில்
அவனை எதிர்கொண்டு தொடுக்கும் கேள்விகளுக்கு சலனம் ஏதுமற்ற முகபாவனையில்
அவன் கடந்துபோனதாகவே பேசிக் கொண்டனர்.
இந்த தொங்கவூடு குருவி சண்முகம் எங்களுக்குள் பதியம் போட்டிருந்த
மைனாக்களின் மீதான புதிய மோகத்தை மேலும் அதிகப்படுத்தும் விதமாக இருந்தது
எங்களில் ஒருவன் தந்திருந்த தகவல்.
“அவரு மைனாக்களுக்கு பேச கத்துக்குடுக்கிறதா பேசிக்கிறாங்கடா, அவரு அப்பானு
சொன்னா அப்பானு திருப்பி சொல்லுதான். சண்முகம்னு கூப்புடுனு சொன்னா
சண்முகம்னு திருப்பி சொல்லுதான். அது எப்படின்னு கேட்டதுக்கு. நாக்க
உரிச்சுட்டா பேசும்னு சொன்னாராம். நாமலும் ஆளுக்கொண்ணு வளத்து பேச கத்து
குடுத்து தோள்ல வச்சுகிட்டு பேச வச்சி குச்சிகாட்ல நடந்தா எல்லாரும் நம்மள
பாப்பாங்கடா. பின்னாலய வருவாங்க பையனுங்க சந்தோஷமா இருக்கும்டா.”
எனவே அனைவரின் சம்மதத்தோடு மைனா வளர்க்கும் முயற்சியை மேற்கொண்டோம். அதன்
தொடக்க நடவடிக்கையாக கள்ளுக்கடை திடலோரம் இருந்த தென்னை மர உச்சியை
கண்காணிக்கத் தொடங்கினோம்.
அங்கே மிக உயரமான குடியிருப்பு மைனாக்களுடையது மட்டுமே. மாடி குடியிருப்பு
என்று சொன்னால் பொருந்தும். அதிலும் வசதியான கிளைகள் கொண்ட ரப்பர் மரங்களோ
வேப்பிலை மரங்களோ அரச மரங்களோ, மூத்திர குண்டி மரங்களோ, பாதா மரங்களோ,
ஆத்தா பழ மரங்களோ, கொய்யா மரங்களோ, மா மரங்களோ அல்லாமல் கிளைகளோ இலைகளோ
ஏதுமற்று வானத்தில் மிக உயரத்தில் தலையசைத்து நின்ற தென்னை மரங்கள்.
எங்களது நோக்கம் அது குஞ்சுகள் பொரித்திருக்கும் தருணம் பார்த்து மேலேறி
குஞ்சுகளை கீழே கொண்டு வருவதுதான்.
அந்தத் தருணத்தை உறுதிசெய்யும் பொருட்டே இந்தக் கண்காணிப்பு வேலை.
குஞ்சுகள் இருப்பின் அவை அடிக்கொருதரம் வாயைப் பிளந்து கொண்டு பசிக்கு
குரல் கொடுக்கும் கீச்சொலி காட்டிக் கொடுத்துவிடும். அல்லது வாயில் பூச்சி
புழுவோடு தரையிலிருந்து மர உச்சி பார்த்து பறக்கும் தாய் மைனாவின் செய்கை
குஞ்சுகள் இருப்பதை உறுதிப்படுத்திவிடும்.
கண்காணிப்பு வேலை பல நாட்கள் பலனின்றியே நகர்ந்து போனது. மர
உச்சியிலிருந்து நாங்கள் எதிர்பார்த்த எவ்வித சமிக்ஞையும் தென்படுவதாகக்
காணோம். விளையாட்டு முடிந்து நடுத்திடலில் வட்டமிட்டு உட்கார்ந்து
வெளிச்சம் மறைந்து குச்சிக்காட்டில் மண்ணெண்ணெய் விளக்குகளின் மஞ்சள் ஒளி
தெரியும் வரை தென்னை மரங்களை நோட்டம் விட்டோம்.
ஒருநாள் நாங்கள் எதிர்பார்த்த குரல் மேலிருந்து கேட்டது. திட்டமிட்டபடி
பொழுது சாய காத்திருந்து எங்களில் தென்னை மரம் ஏறுவதில் அசகாய சூரனான சின்ன
முனிதான் ஒருநாள் மரம் ஏறினான். அவன் உச்சியை நெருங்க- நெருங்கி வரும்
ஆபத்தை உணர்ந்த மைனாக்களின் அலறல் ஏச்சு அழுகை எல்லாமும் ஒரு கலவையாக.
மூன்று குஞ்சுகளோடு கீழிறங்கி வந்தான் சின்னமுனி.
அதன் பிறகான காலங்களில்- நாங்கள் மைனா வளர்த்த கதையும்- அவற்றின் நாக்கை
நாங்கள் கொடூரமான முறையில் உரிக்க தொடங்கியது முதல் அவற்றைப் பேசப் பழக்க
இரவு வெகுநேரம் வரை கோயில் கூத்து மேடையில் மேற்கொண்ட முயற்சிகளும்
அதற்கெனவே தொங்கவூடு குருவி சண்முகத்தோடு உறவு கொண்டு அவரோடும் அவர்
வளர்த்த நீர்நாயோடும் நட்புகொண்டு இரவு பன்னிரெண்டு மணிக்கு மேல் அதற்கு
உணவு தேடி பெரிய ஆத்துப் பக்கம் திரிவதாகவும் யாருடனும் அதிகம் பேசியிராத
குருவி சண்முகம் எங்களோடு இரவு முழுக்க சிரித்து சிரித்துப் பேசுவதில் ஏதோ
பெரிய மர்மம் இருப்பதாகவும் பல்வேறு வர்ணப் பூச்சுகளால் அலங்கரித்து
(Magical Realism?) பறக்கவிடத் தொடங்கியிருந்தது தோட்டம்.
இரவு விளக்கு வைத்து, அஞ்சடி வாசலில் கால்நீட்டி உட்கார்ந்து பேரப்
பிள்ளைகளுக்கு தூங்க வைக்க கதை சொல்லும் பாட்டிமார்களின் கதையொன்றில்
நீர்நாய் வளர்த்த தொங்கவூடு குருவி சண்முகம் போலவே மைனா வளர்த்த எங்கள்
கதையும் பல்வேறு ரூபங்களில் நடமாடத் தொடங்கியது.
|
|