|
கனடாவில் ஆண்களின் சாரசரித் தூக்க நேரம் நாளுக்கு 8 மணி 7 நிமிடம்; அதே
மாதிரி பெண்களின் சராசரி தூக்க நேரம் 8 மணி 18 நிமிடம். கனடா புள்ளி விவரம்
இப்படித்தான் சொல்கிறது.
இதை படித்த நேரத்திலிருந்து எனக்கு பெரும் வெட்கமாகிவிட்டது. பெண்களின்
நேரம் ஆண்களின் நேரத்தை முந்திக்கொண்டிருந்தது இன்னும் பெரிய அவமானமாகப்
பட்டது. எப்படியும் ஆண்களின் சராசரி தூக்கநேரத்தை கூட்டுவதற்கு என்னாலான
பங்களிப்பை செய்யவேண்டும் என முடிவு செய்தேன். இந்த வருட ஆரம்பத்திலிருந்து
என் தூக்க அளவை அரைமணி நேரம் நீட்டினேன். பெண்களின் சராசரி தூக்க நேரத்தை
ஆண்கள் எப்படியும் இந்த வருடம் முடிவதற்கிடையில் முந்தவேண்டும் என்பதுதான்
என்னுடைய நோக்கம். ஆனால் என்னுடைய முயற்சி ஏப்ரல் 21ம் தேதியுடன்
நிறுத்தப்பட்டது.
உலக புத்தக தினம் ஏப்ரல் 21. அன்று ஒரு நண்பர் வீடு தேடிவந்து எனக்கு ஒரு
புத்தகம் பரிசளித்தார். இது அவர் எழுதாத புத்தகம்; காசு கொடுத்து வாங்கி
எனக்கு அவர் பரிசளித்ததுதான் ஆச்சரியம். பிறந்த நாளுக்கு பரிசளிப்பார்கள்.
திருமண நாளுக்கு பரிசளிப்பார்கள். புத்தக நாளுக்கு பரிசு கொடுக்கலாம்
என்பது எனக்கு புதிது. நண்பர் என்னை நினைத்து வீட்டுக்கு கொண்டுவந்து
புத்தகத்தை தந்ததால் மகிழ்ச்சிப்படலாம் என்று தீர்மானித்தேன். என்னிடம்
படிக்காமல் இருக்கும் 20 புத்தகங்களையும் படித்து முடித்தவுடன் இதைப்
படிக்கலாம் என்று மனதுக்குள் நினைத்தேன்.
நண்பருக்கு அது தெரிந்துவிட்டது. அவர் விடைபெறும்போது சொன்னதுதான்
அதிர்ச்சி தருவதாக இருந்தது. நான் புத்தகத்தை படித்துவிட்டு அவருக்கு
தரவேண்டுமாம். அவர் இன்னும் புத்தகத்தை படிக்கவில்லை, அவரும் படித்து
முடிக்கலாம் என்றார். இவர் என்ன பரிசு தருகிறாரா? அல்லது இரவல் தருகிறாரா?
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நண்பரை எப்படி நான் 20 புத்தகங்களை படித்து
முடிக்கும்வரை காத்திருக்கச் சொல்லுவது? எனவே என்னுடைய தூக்க நீடிப்பு
சங்கல்பம் நிறுத்தப்பட்டது. காலையில் ஒரு மணிநேரம் முன்னதாக எழுந்திருந்து
நாளுக்கு ஒரு மணி நேரம் அந்தப் புத்தகத்தை படித்து முடிப்பதுதான் சரி என்று
முடிவெடுத்தேன். அப்படி தொடர்ந்து ஒன்பது நாள் படித்து நேற்றுத்தான்
புத்தகம் முடிந்தது. நண்பருக்கு புத்தகத்தை படிக்க திரும்பவும் நாளைக்கே
கொடுத்துவிடலாம்.
புத்தகத்தின் பெயர் The Golden Mean. அதை எழுதிய ஆசிரியர் ஒரு கனடியப்
பெண்மணி, அவருடைய பெயர் Annabel Lyon. இந்தப் பெண்மணியின் சிறுகதைகளை நான்
படித்திருக்கிறேன். எனக்கு பிடிக்கும்படியான சுவாரஸ்யமான எழுத்து
அவருடையது. சிறுகதை அளவுக்கு அவருடைய நாவல் பிரகாசிக்கவில்லை என்றாலும்
அவருடைய அழகான எழுத்து நடைக்காகப் படிக்கலாம்.
இது ஒரு சரித்திர நாவல். யேசு பிறப்பதற்கு 380 வருடங்களுக்கு முன்பு
நடப்பதாக தொடங்குகிறது. சோக்கிரட்டீஸின் சீடரான பிளேட்டோவின் சீடர்
அரிஸ்டோட்டல். இவர் மாசிடோனியா அரசன் பிலிப்பின் பள்ளித் தோழன்.
(கிருஷ்ணரையும் குசேலரையும்போல என்று வைத்துக்கொள்ளலாம்.) அரிஸ்டோட்டல் தன்
வாயால் சொல்வதுபோல நாவல் விரிகிறது. அரிஸ்டோட்டல் மணமுடித்த புதிதில்
ஏதென்ஸ் நகரத்துக்கு புறப்படுகிறார். பிளேட்டோவுக்கு பிறகு ஏதென்ஸின்
புகழ்பெற்ற கல்விச் சாலைக்கு தலைமை பொறுப்பை வகிப்பது அவரது நோக்கம். ஆனால்
வழியில் அரசன் பிலிப் அவரை அலெக்சாந்தருக்கு குருவாக இருக்கும்படி
கேட்டுக்கொள்ள இவரும் மறுக்க முடியாமல் ஒப்புக்கொள்கிறார். அலெக்சாந்தர்
அதிசயமான மாணவன்; எதையும் விரைவில் அறிந்துகொள்ளத் துடிக்கும் அதே சமயம்
அவன் மனம் போர் செய்வதிலேயே லயித்திருக்கிறது. ஆசிரியர் ஓணானை வெட்டி
பரிசோதிப்பதும் மீனை வெட்டி ஆராய்வதும் அவனை கவரவில்லை. சில இடங்களில்
அவனுடைய கூரிய புத்தி அரிஸ்டோட்டலை தடுமாற வைக்கிறது. ஒரு பானையின் வாயில்
தோலைக்கட்டி கடல் நீருக்குள் அமிழ்த்தி வைத்தால் நீர் கசிந்து பானை
நிறையும். பானை உப்பை வடிகட்டிவிடும் என்பதால் அந்த நீர் நல்ல நீராக
இருக்கும் என்று அரிஸ்டோட்டல் சொல்கிறார். நீர் அதைச் செய்து பார்த்தீரா
என்று கேட்கிறான் அலெக்சாந்தர். இல்லை என்று பதில்கூறுகிறார் அரிஸ்டோட்டல்.
அலெக்சாந்தருக்கு அவர் கற்பித்த முக்கியமான விசயம் 'நல்ல சமநிலை'
என்பதுதான், அதாவது The Golden Mean. எந்த ஒரு விசயத்திலும் இரண்டு
எதிர்முனைகள் இருக்கும். அதில் இரு முனைகளையும் ஆராய்ந்து நல்ல சமநிலையை
எடுக்கவேண்டும் என்பதுதான் அவர் போதனை. அலெக்சாந்தரின் மனநிலைக்கும்
வேட்கைக்கும் எதிரான போதனை அது. அலெக்சாந்தரின் இலக்கு எதிலும் உச்சத்தை
அடைவது.
அரிஸ்டோட்டல் பற்றிய சுவையான தகவல்களும் கிடைக்கின்றன. அரிஸ்டோட்டல் கவிதை
எழுதுவார் அதே சமயம் பறவை, ஓணான், கடல்வாழ் பிராணிகள் என சகலதையும் கூறு
கூறாக வெட்டி விஞ்ஞானக் குறிப்புகள் எழுதிவைப்பார். இந்த ஆராய்ச்சிகள்
படுக்கை அறைக்குள்ளும் நுழைந்துவிடும். அரிஸ்டோட்டலுக்கு வயது 37, அவருக்கு
பரிசாகக் கிடைத்த பெண்ணுக்கு 15 வயது. அவர்களுக்கிடையில் 22 வயது
வித்தியாசம். மனைவியை படுக்கவைப்பார். அவள் காத்திருப்பாள், இவரோ வேறொருவர்
காணமுடியாத அவளுடைய உடல் பகுதிகளை வரைந்து குறிப்புகள்
எழுதிக்கொண்டிருப்பார்.
புத்தகத்தில் ஓர் இடத்தில் அந்தக் காலத்து மருத்துவ நம்பிக்கைகளும்
குறிப்புகளும் வருகின்றன. இறந்தவர்களை மயானத்துக்கு அனுப்பும்போது அவர்கள்
வாயினுள் ஒரு நாணயத்தை போட்டு அனுப்புவது அந்தக் கால வழக்கம். மறு
உலகத்துக்கு அழைத்துச் செல்லும் ஓடக்காரனுக்கு கூலி தருவதற்குத்தான் அந்த
நாணயம். ஒரு பெண் கர்ப்பம் தரிப்பாளா இல்லையா என்று பார்ப்பதற்கும்கூட
எளிமையான சோதனை ஒன்று உண்டு. பெண்ணின் பிறப்புறுப்பில் ஒரு வெள்ளைபூண்டை
இரவில் சொருகிவிடவேண்டும். அடுத்தநாள் காலை அந்தப் பெண்ணின் வாய் மணந்தால்
அந்தப் பெண்ணுக்கு பிள்ளை உண்டாகும். வாய் மணக்காவிட்டால் கர்ப்பம்
தரிக்கும் வாய்ப்பே இல்லை.
அரிஸ்டோட்டல் நேரடியாகச் சொல்வதாக கதை புனையப்பட்டிருப்பதால்
அலெக்சாந்தரின் யுத்த வாழ்க்கையும் சுவாரஸ்யமான சம்பவங்களும்
இடம்பெறவில்லை. இருபது வயதில் அலெக்சாந்தர் முடி சூடுகிறான். எட்டு மாதம்
கழித்து அரிஸ்டோட்டல் அலெக்சாந்தரிடம் விடைபெறுகிறார். அவர் தன் மாணவனுக்கு
பரிசாக தன்னுடைய பொக்கிச நூல்களான ஹோமரையும், யூரிப்பிடீசையும்
கொடுக்கிறார். அலெக்சாந்தர் அவற்றை தன் வாழ்நாள் முழுவதும் தன்னுடனே
வைத்திருப்பான். பலதடவை அரிஸ்டோட்டலை தன்னுடன் போர்களத்துக்கு வரும்படி
கேட்டும் அவர் மறுத்துவிடுகிறார். 'என்னுடன் வாருங்கள், எல்லா வசதிகளும்
செய்து தருகிறேன். நீங்கள் எனக்கு தெரியாதது எல்லாவற்றையும்
தெரியவையுங்கள்' என்கிறான். அவர் ஏதென்ஸ் நகருக்கு சென்று லைசியம் என்ற
கல்விச்சாலையை அமைக்கிறார். அலெக்சாந்தர் பிரியுமுன்னர் இறுதியாகக்
கேட்கும் கேள்வி மனித வாழ்க்கைக்கு முக்கியமானது என்ன என்பது. மனித
புத்தியின் எல்லையை அடைவது என்று குரு சொல்கிறார். அலெக்சாந்தர் தனக்கு ஆக
மகிழ்ச்சி தருவது மனித ஆற்றலின் உச்சத்தை அடைவது என்கிறான். அத்துடன்
அவர்கள் பிரிகிறார்கள்.
இந்த நாவலுக்காக ஆசிரியர் நிறைய ஆராய்ச்சிகள் செய்திருப்பார். சரித்திர
நாவல் என்றால் அதுதான் பிரச்சினை. நினைத்ததையெல்லாம் நாவலில் எழுதமுடியாது.
280 பக்க நாவலை எழுதுவதற்கு 2000 பக்கங்களில் ஆசிரியர்
குறிப்பெடுத்திருப்பார். நாவலைப் படிக்கும்போது ஆசிரியரின் கடும் உழைப்பு
தெரிகிறது. ஆசிரியர் கனடாவின் கில்லர் பரிசுக்கும் ஆளுநர் பரிசுக்கும்
பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். அடிக்கடி குறும்பட்டியலில் அவர் பெயர்
இடம்பெறும், ஆனால் இறுதிப் பரிசு அவருக்கு கிட்டாமலே போகிறது.
நாவலில் எனக்கு என்ன பிடிக்கவில்லை என்பதையும் சொல்லிவிடவேண்டும்.
ஏறக்குறைய 2400 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு கதையை 21ம் நூற்றாண்டு
ஆங்கிலத்தில் படிக்கும்போது நாவலின் வரலாற்றுக் காலத்துக்குள் நுழைவதை மொழி
தடுக்கிறது. இரண்டாவதாக, ஆரம்பத்தில் நாவலில் காணப்பட்ட உற்சாகமும்
எழுத்தும் வர்ணனைகளும் போகப் போக மெலிந்து தளர்ந்து கதையை தொய்வடைய
வைக்கின்றன. இதை 'நாய் ஓடிக்களைப்பது' என்று இலக்கியத்தில் சொல்வார்கள்.
எனினும் அன்னாபெல் எனக்கு பிடித்த எழுத்தாளர். தூக்கத்தை நீட்டுவதிலும்
பார்க்க இவரைப் படிப்பது முக்கியம். இவருடைய அடுத்த புத்தகம் வரும்போது
வாங்கிப் படிப்பேன். ஒரு நண்பர் பரிசு தரும்வரைக்கும் காத்திருக்கமாட்டேன்.
|
|