|
தமிழ் நாட்டில் ப்ளஸ் டூ ரிசல்ட் வந்த பிறகு பத்திரிக்கைகளில் கல்லூரிகளின்
விளம்பரங்கள் தூள் கிளப்புகின்றன. தனியார் பள்ளிக்கூடங்களின்
விளம்பரங்களும் பட்டையைக் கிளப்புகின்றன. பத்திரிக்கைகள் அனைத்தும்
விளம்பரத்தாலேயே நிரம்புகின்றன. செய்திகள் துணுக்குகளாய் மாறி விட்டன.
அந்தளவுக்கு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் காசு கொட்டுகிறது. கொஞ்ச
நஞ்சமல்ல கோடிகளில் கொட்டுகிறது. ஒரு நல்ல அரசின் பணி தன் மக்களுக்கு இலவச
கல்வியைக் கொடுப்பது. ஒரு மாணவன் என்ன கல்வியைப் படிக்க விரும்புகின்றானோ
அக்கல்வியைப் அவன் இலவசமாய் படிக்க வேண்டும். அதற்குரிய வசதிகளைச் செய்வது
தான் ஒரு அரசின் தலையாய கடமை. கல்வி இலவசமானால்தான் சமூகமும், நாடும்
முன்னேற்றமடைய முடியும். ஆனால் இந்தியாவில் நடப்பதோ மன்னராட்சி. மந்திரி
பிரதானிகளும், அல்லக்கை எடுபிடிகளும், கூட்டிக் கொடுக்கும் மாமாக்களும்,
பிசினஸ் என்ற பெயரில் கொள்ளையடிக்கும் கூட்டத்தினரும், அவர்களின்
குடும்பத்தினராலும் கல்வி விற்பனை பொருளாக மாற்றப்பட்டு விட்டது. இன்னும்
கொஞ்ச நாள் பொறுங்கள். பி.எஸ்.சி, பி.ஈ. கோர்ஸ்களைக் கூட ஷேர் மார்கெட்டில்
லிஸ்ட் செய்து விடுவார்கள். கருப்புப் பணம் புழங்கும் மற்றொரு இடமாக
கல்வித்துறையை மாற்றிக் காட்டியது தான் காங்கிரஸ் அரசின் முதல் வெற்றி.
காங்கிரஸ் கட்சியின் அடுத்த சாதனைக்கு மற்றுமொரு உதாரணம் : இந்தியாவில் 36
கோடியிலிருந்து 40 கோடியாக ஏழைகள் அதிகரித்து இருக்கின்றார்கள் என்பதுதான்
சினிமாவில் எந்தளவுக்கு கருப்புப் பணம் விளையாடுகிறதோ அதே அளவுக்கு தனியார்
கல்லூரிகள், பள்ளிகளின் தாளாளரிடத்திலும் கோடிகளில் கருப்புப் பணம்
விளையாடுகிறது. அட்மிஷன் என்ற பெயரில் அடிக்கும் கொள்ளை தான் முதல்
ஆரம்பம். டொனேஷன் என்பது வேறு வசூல். எல்லையே இல்லாமல் பணமழை கொட்டும்
இடம்தான் தனியார் பள்ளிகள். லாபம் ஏதும் வராமல் கடை விரிக்க முதலாளிகளுக்கு
பைத்தியமா பிடித்திருக்கும். இவர்கள் தான் அரசு கல்விக் கட்டணத்தை
நிர்ணயித்து உத்தரவிட்டவுடன் சுப்ரீம் கோர்ட் சென்றவர்கள். அங்கும் ஒன்றும்
பெயரவில்லை என்றவுடன் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். முதலாளிகளின்
கண்ணீரை மன்னர் துடைத்து விடுவார் என்று உறுதியாகச் சொல்ல முடியும். மேலும்
இவ்விடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். அதாவது, திமுக
அரசு தற்போது கல்விக் கட்டணம் என்ற அறிவிப்பையும், கல்விக் கட்டணத்தையும்
அறிவித்த காரணம் என்ன தெரியுமா? இதுவரையிலும் கல்லூரிகளில் இருந்து வந்த
பெட்டிகள் போதாது என்று பள்ளிகளிலிருந்தும் பெட்டிகள் வர வேண்டுமென்ற
நோக்கத்துடன் தான் மேற்கண்ட உத்தரவு வெளியிடப்பட்டிருக்கிறது என்ற சந்தேகம்
ஏற்பட்டு இருக்கிறது. காரணம் மேற்படிக் கட்டணம் அறிவித்த பிறகும் தனியார்
பள்ளிகளில் அட்மிஷன் வழக்கம் போல நடந்து வருகின்றது. எந்த எந்த பள்ளிக்கு
எவ்வளவு கட்டணம் என்று இதுவரையிலும் அரசு பொதுமக்களுக்கு அறிவிக்கவில்லை.
பள்ளிகளுக்கு மட்டும் நோட்டீஸ் கொடுத்திருக்கின்றார்களாம். இனிமேல்
வரக்கூடிய பெட்டிகளின் கனத்திற்கு ஏற்ப கல்விக் கட்டணம் மறு சீரமைப்பு
செய்யக்கூடும்.அட்மிஷன் ஃபீஸ் வாங்கக்கூடாது என்று கல்வித்துறை அமைச்சர்
அறிவிக்கிறார். ஆனால் அனைத்துப் பள்ளிகளிலும் அட்மிஷன் ஃபீஸ்
வாங்குகிறார்கள். தனியார் பள்ளிகள் பழைய கட்டணத்தையே வசூலிப்போம் என்று
அறிக்கை வெளியிடுகிறார்கள். அரசிடமிருந்து பதிலொன்றும் இல்லை. எங்கு சென்று
முறையிடுவது? நடவடிக்கை எடுப்பார் யார்? ஒன்றும் புரியவில்லை. மாதம்
பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் தனியார் கம்பெனியில் வேலை செய்யும்
ஒருவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தால் சம்பாதிக்கும் சம்பளம் முழுவதும்
தனியார் பள்ளிக் கூடங்களே உறிஞ்சி விடுகின்ற அவலம் வேறு எங்கும் நடக்காத
அயோக்கியதனம். அக்கிரமம். இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன முந்தைய
அரசுகள்.
சமீபத்தில் ஒரு ஆய்வில் இந்தியாவில் 36 கோடியாக இருந்த ஏழைகள் 40 கோடியாக
உயர்ந்திருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கைக்கும்
கல்வித்துறைக்கும் சம்பந்தம் உண்டு. ஏழைகளுக்கு தரமான கல்வி கிடைக்கக்
கூடாது என்று தனியார் பள்ளிகளை அரசாங்கம் ஊக்கு வித்து வருகிறதோ என்ற
எண்ணமும் ஏற்படுகிறது. ஏனென்றால் ஏழைகள் இருந்தால் தான் தன் ஓட்டு வங்கி
நிலையானதாக இருக்கும் என்று அரசியல் கட்சிகள் ஏழைகளை அதிகரித்துக் கொண்டே
வருகின்றன என்று பலரும் சொல்கின்றார்கள். தமிழகத்தில் தான் வளர்ச்சித்
திட்டங்களுக்கு செலவிட வேண்டிய பணம், இலவசத் திட்டங்களுக்கு
செலவிடப்படுகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். சரி விஷயத்துக்கு
வந்து விடுவோம். படித்து விட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் விடாதீர்கள்.
கொள்ளை என்றால் என்ன என்பதற்கு இது ஒரு உதாரணம்.
முதலில் ஐந்தாம் வகுப்பு வரை ஆரம்பிக்கப்படும் தனியார் பள்ளிகள் தொடர்ந்து
பனிரெண்டாம் வகுப்பு வரையிலும் தரம் உயர்த்தப்படுவது எவ்வாறு என்பதையும்,
ஒரு பள்ளியின் மூலம் எந்தளவுக்கு லாபம் சம்பாதிக்கலாம் என்பதையும் கீழே
கொடுக்கப்பட்டிருக்கும் விபரம் மூலம் அறியலாம்.
40 வாத்தியார்கள் + 5 ஆஃபீஸ் கிளர்க்ஸ் + 5 அட்டெண்டர்ஸ் + 5 ஆயாம்மாக்கள்
+ 5 டிரைவர்கள் + 2 வாட்ச்மேன்கள் ஒரு பள்ளியில் வேலை செய்கிறார்கள். இங்கு
1200 மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் கணக்கைப் இப்போது
பார்ப்போம்.
1200 பேருக்கு புத்தக கட்டணம் ரூபாய் 3000 = 36,00,000
1200 பேருக்கு யூனிபார்ம் + இதர கட்டணம் ரூபாய் 2000 = 24,00,000
மொத்தமாய் ஸ்கூல் ஆரம்பித்த அன்று வசூல் செய்யப்படும் தொகை ரூபாய் :
60,00,000
1200 பேருக்கு மாத ஸ்கூல் ஃபீஸ் கட்டணம் ரூபாய் 1200
= 1440000 x 12
மாதங்களுக்கு : 1,72,80,000
700 பேருக்கு மாத வேன் வாடகை ரூபாய் ஆவரேஜ் 600
= 4,20,000 x 12
மாதங்களுக்கு : 50,40,000
ஒரு வருடத்திற்கு வசூலாகும் மொத்த தொகை ரூபாய் : 2,02,32,0000.00
40 ஆசிரியர்களும்மு மாதம் ரூபாய் 10,000 என்று கணக்கிட்டு வருடத்திற்கு(
12) = 48,00,000
5 ஆஃபீஸ் கிளர்க்குகளுக்கு மாதம் ரூபாய் 5000 சம்பளம் x 12 = 3,00,000
5 அட்டெண்டர்ஸுக்கு மாதம் ரூபாய் 3000 சம்பளம் x 12 = 1,80,000
5 டிரைவர்களுக்கும் மாதம் 2500 x 12 = 1,50,000
5 x 4000 x 12 = 2,40,000
2 x 5000 x 12 = 1,20,000
மொத்தம் ரூபாய் : 57,90,000.00
இதர செலவுகள் : 20,00,000.00
ஆக மொத்தமான ஒரு வருட பள்ளிக்கான செலவு ரூபாய் : 77,90,000.00. வருமானமோ 1
கோடியே 25 லட்சத்திற்கும் மேல். இதுமட்டுமல்லாமல் அட்மிஷன் போது
வசூலிக்கப்படும் தொகைக்கு அளவே இல்லை. 20,000 லிருந்து 50,000 வரை
ஆளுக்குத் தகுந்தாற் போல வசூல் செய்யப்படும் தொகை என்பது கணக்கிலேயே வராது.
அது இருக்கும் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல். இப்படி தனியார் பள்ளிகள்
அடிக்கும் கொள்ளையை அரசாங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டு தான்
இருக்கின்றன. மேலும் தனியார் பள்ளிகளில் நடக்கும் மற்றொரு அயோக்கியத்தனம்
என்னவென்றால் ஸ்பெஷல் கோச்சிங் என்ற பெயரில் வசூலிக்கப்படும் தொகை. இது போல
இன்னும் வெளியில் சொல்லமுடியாதவாறு பெற்றோர்களிடமிருந்து வசூலித்து
கோடிகளில் புரள்கின்றார்கள் தனியார் பள்ளி நிறுவனத்தார்கள்.
மிகக் குறைந்த முதலீடு. 1000 சதவீதத்துக்கும் மேலான வருமானம். இது தான்
தனியார் பள்ளிகளில் நடக்கும் அவலம். கல்லூரிக் கணக்கு என்பது இதை விட
அதிகம். மேற்படிக் கொள்ளைக்கு இதுவரையில் அரசே துணையாக இருந்து வந்தது.
என்ன இழவு நடந்ததோ தெரியவில்லை. அரசுக்கு மக்களின் மீது திடீர் கரிசனம்
ஏற்பட்டு கல்விக் கட்டணத்தை நிர்ணயித்திருக்கின்றார்கள். கல்விக் கட்டணத்தை
நிர்ணயித்து அரசு விடுத்திருக்கு அறிக்கை வெறும் வெட்டி அறிக்கையா? இல்லை
மக்களின் மீதான் உண்மையான அறிக்கையா என்பதை இனிமேல் வரக்கூடிய நிகழ்வுகள்
சொல்லிவிடும். இருப்பினும் திமுக அரசு எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை அமல்
செய்யப்பட்டால், பெற்றோர்களின் ஓட்டு திமுகவினருக்கே என்பதில் எள்ளளவும்
சந்தேகம் இல்லை. தனியார் பள்ளிக் கொள்ளைக்காரர்களை அடிபணிய வைக்கும் சக்தி
திமுக அரசுக்கு இருக்கிறதா இல்லை அவர்களின் பெட்டிக்கு திமுக அரசு பணிந்து
விடுமா என்பதை பொறுத்திருந்து அவதானிப்போம்.
|
|