|
(நல்ல திரைப்படங்கள் குறித்தும் அதில் உள்ள நுட்பங்கள் குறித்தும் இந்தக்
கட்டுரை பேசுகிறது. மிகக் கடுமையான திரைப்பட நுணுக்கங்களை மிக எளிதாக
காளிதாஸ் இக்கட்டுரையின் மூலம் முன்வைக்கிறார். காளிதாஸ் சில குறும்படங்களை
இயக்கியுள்ளார் என்பதும் உலக திரைப்படங்கள் குறித்த பரந்த அறிவு கொண்டவர்
என்பதும் குறிப்பிடத்தக்கது. - ஆசிரியர்)
அண்மையில் ‘கற்றது தமிழ்’ படத்தின் இயக்குநர் ராம் அவர்களின் பேட்டியைப்
பார்ப்பதற்கான வாய்ப்பு கிட்டியது. இதுவரை கேட்டிராத கலை மற்றும் சினிமா
சம்பந்தமான பல புதிய தகவல்களையும் புரிதலையும் மிக நேர்த்தியாகவும்
ஆழமாகவும் அவர் விவாதிக்கக் கண்டேன். அதிலிருந்து கலை சம்பந்தமான சில
தகவல்களைப் பரிமாறி கொள்கிறேன்.
கலை என்பது சதா நம்மை துன்புறுத்தி கொண்டிருக்கும், கேட்டு கொண்டிருக்கும்
கேள்விகளுக்கான பதிலை தேடும் ஒரு நிகழ்வு. எல்லா உன்னதமான படைப்புகளும் சில
அடிப்படை கேள்விகளைச் சார்ந்திருக்கிறது. உலகம் உண்மைகளை சார்ந்தது. அது
தாஸ்தாவிஸ்கி (Fyodor Dostoyevsky), லியோ டோல்ஸ்டாய் (Leo Tolstoy), லெனின்
போன்றவர்களின் காவியப் படைப்பாகட்டும், அகிரா குரோசாவா, சென்லி குப்ரிக்
(Stanley Kubrick), ரோபாட் பிரஸ்ஸன் (Robert Bresson) படமாகட்டும். மனிதன்
தோன்றும் முன் உருவாகி இன்றையவரைக்கும் பதிலே தெரியாத கேள்வியுடைய
சாரங்கள்தான் உன்னத்தப் படைப்புகளில் வீற்றிருக்கின்றன.
இது போன்ற கேள்வியுடைய சாரத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டுத்தான்
இயற்பியலும் கணிதவியலும் மனப்பாடம் செய்து கற்க வேண்டிய ஒரு பாடமாக
நினைத்துகொண்டிருந்தேன். கல்லூரிக்கு வந்த பிறகுதான் இவ்விருப்பாடங்களும்
இலக்கியம் கேட்கக்கூடிய அதே கேள்விக்கான பதிலை மற்றொருயிடத்தில்
தத்துவரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் தேடிக்கொண்டிருக்கின்றன என்று மிகத்
தாமதமாகவே உணர்ந்துகொண்டேன். பாஸ்கால் (Pascal) என்ற ஒரு கணிதவியல் அறிஞர்
ரொம்ப அழகாக மனிதனைப் பற்றி ஒரு விளக்கம் கூறுகிறார். ‘மனிதனும் நாணலும்
இயற்கையின் முன்னே ஒன்றுதான். ஆனால் மனிதனுக்கும் நாணலுக்கும் ஒரு
வித்தியாசம் உண்டு. நாணலுக்கு தெரியாது தான் எதனால் சாகிறோம் என்று. ஆனால்
மனிதனுக்குத் தான் சாகும் காரணம் தெரியும்.’ ஆகவே மனிதனாக இருப்பவன் தான்
செத்துக்கொண்டிருக்கிறோம் என்ற அறிவுள்ளவனாக இருக்கிறான். தன்னை யார்
கொன்று கொண்டிருக்கிறார்கள் என்ற ஞானத்தை உடையவனாகிறான். இந்த அறிவை,
ஞானத்தை நாம் அடைய வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியது என்ன? தகவல்
தொடர்பியல் படிப்பதால் ஒருவன் இயக்குனராகவோ ஒளி ஓவியராகவோ அல்லது
கலைப்படைப்பாளியாகவோ ஆக முடியாது.
படித்தப்படிப்புக்கும் செய்கின்ற தொழிலுக்கும் என்றைக்கும் சம்பந்தமில்லை.
எதுவுமே படிக்காமல் மிகப் பெரிய கலைஞராக உருவாகியவர்கள் இங்குப் பலர். ஒரு
தகவல் தொடர்பியல் படிப்பில் தொழில்நுட்பம், கேமரா, லென்ஸ், வெளிப்பாடு
போன்ற விசயங்களை கற்றுக்கொள்வதற்குக் குறைந்த பட்சம் ஒரு வாரமாகும். ஆனால்
அந்தக் கருவிகளை வைத்துக்கொண்டு ஒரு விசயத்தை உருவாக்குவதற்கு என்னவாக மாற
வேண்டும் என்பதுதான் சவால். எடுத்துக்காட்டாக விநாயக சிலையை அனைவரும்
பார்த்திருப்போம். ஏன் அதனை நாம் கைவினைக் கலை என்று சொல்கிறோம். முதல்
விநாயக சிலையை ஒருவன் உருவாக்கிவிட்டான். அந்த விநாயக சிலையைப் பார்த்து
திரும்ப திரும்ப அதே கைவினையைப் பயன்படுத்தி செய்வதுதான் தொழில்நுட்பம்
என்கிறோம். அது கலையல்ல. ஆக, கலை என்பது உத்திகளை முதன்முதலாக
கண்டுப்பிடிப்பது. உதாரணத்திற்கு ஒரு பிரிஸ்மாவில் (prisme) ஒளித்தெரிப்பு
செய்தால் ஏழு வர்ணங்களாக பிரிகிறது. அதை முதன்முதலாக கண்டுபிடித்தவன்
விஞ்ஞானி. அந்த ஆய்வை தன்னுடைய விதத்துக்கு ஒவ்வொருமுறையும்
பயன்படுத்துபவன் தொழில்நுட்பவாதி. இங்கு நாம் தொழில்நுட்பவாதியாக ஆக
போகிறோமா? அல்லது விஞ்ஞானியாக ஆக போகிறோமா? என்பதுதான் ஒரு கலைஞனுக்கும்
அதை பிரதியெடுப்பவனுக்கும் உள்ள வித்தியாசம். ஒரு இயக்குனராகவோ, ஒரு
சிறுகதை ஆசிரியராகவோ, அல்லது ஒரு ஓவியராக உருவாக வேண்டுமென்றால் முதலில்
பயணப்பட வேண்டும்; தத்துவம் படிக்க வேண்டும்; இலக்கியம் படித்தாக வேண்டும்;
ஓவிய பற்றும் இருக்க வேண்டும். முக்கியமாக இன்றைய உலகத்தில் என்ன நடக்கிறது
என்பது தெரிந்திருக்க வேண்டும்.
அந்த வரிசையில் சினிமா மாமேதைகளில் ஒருவரான செர்கீ மிக்கைலோவிச்
ஐசென்ஸ்டைன் (Sergei Mikhailovich Eisenstein) பற்றிய சினிமா ஆளுமையும்
அவர் உருவாக்கிய montage (putting together) கோட்பாடு பற்றி ஒரு எளிமையான
கண்ணோட்டம் குறித்து பார்ப்போம். செர்கீ மிக்கைலோவிச் ஐசென்ஸ்டைன் (Sergei
Mikhailovich Eisenstein) ஜனவரி 23-ம் 1898-ன் ரீகா சோவிய ரஷ்யாவில்
பிறந்தார். அவர் புரட்சிக்கர சோவியத் திரைப்பட இயக்குநரும் திரைப்பட
கோட்பாட்டாளுரும் ஆவார். பேசாப்படங்களான ஸ்டிரைக் (Strike), பட்டில்சிப்
போட்டெம்கின் (Battleship Potemkin), அக்டோபர் (October) ஆகிய படங்களும்
சரித்திர படங்களான அலெக்சாண்டர், நெவ்ஸ்கி இலான் த டெரிபிள் போன்ற
படங்களும் இவருக்குப் புகழைத் தேடிக் கொடுத்தன. இவரது ஆக்கங்கள் தொடக்க
காலப் படத்தயாரிப்பாளர்கள் மீது பெரும் செல்வாக்குச் செலுத்தின. ஆரம்பகால
படமான பட்டில்சிப் போட்டெம்கின் (Battleship Potemkin) படத்தில் தான்
எழுதிய montage (putting together) கோட்பாட்டை odessa steps படப்பகுதியில்
முதன்முதலாக அந்த கோட்பாட்டின் உத்திகளைப் சோதனை முயற்சியாக
பயன்படுத்தினார். இப்படம் திரைக்கண்ட பிறகு, சினிமா வல்லுனர்களாலும்
விமர்சகர்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்டது
படக்காட்சி-1 ஒருவன் கடைதெருவோரத்தில் நடந்து கொண்டிருந்தான். - (long
shot)
படக்காட்சி-2 இளைஞன் விரைவாக நடந்து கொண்டிருந்தான். (முகப்பாவனை
காட்டப்படுகின்றது) - (middle shot)
படக்காட்சி-3 ஒரு வாழைப்பழத்தோல் காண்பிக்கப்படுகிறது. - (close up shot)
படக்காட்சி-4 இளைஞனின் கால்கள் மட்டும் மிக அருகில் காண்பிக்கப்படுகிறது.
படக்காட்சி-5ல் என்ன காட்சி நடக்கக்கூடும் என பார்வையாளர்களால் யூகிக்க
முடியும் .
இக்காட்சிகளை ஒவ்வொன்றும் காட்டப்படுகின்றவிதம் தொடர்பில்லாமல் இருக்கலாம்.
ஆனால் அக்காட்சிகள் பார்க்கின்றவர்களுக்கு தொடர்பு இருப்பதை உணர்த்துவதே
montage. இதனைத்தான் இவருக்குப்பின்பு வந்த பெரும்பாலான இயக்குநர்கள்
இன்றுவரை பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர். Hitchcock படமான Psycho படத்தில்
கழிவறைக் கொலைக் காட்சியும் Untouchtable படத்தில் ரயில் சம்பவக்
காட்சியில் பயன்படுத்திய விதம் இக்கோட்பாட்டை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி
சென்றது.
Montage கோட்பாட்டைப்பயன்படுத்த நாம் 5 வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
1) Metric - இயற்கையாக சில வினாடிக்குள் நடக்கக்கூடிய காட்சிகள் அல்லது
சம்பவம் பார்க்கின்றவர்களின் எதிர்பார்ப்பையும் உணர்வுகளையும்
பிரதிபலித்துவிடும்.
2) Rhythmic - பார்க்கின்றவர்களின் உணர்வுகளின் வெளிப்பாடு 3 அல்லது 4
வினாடி மட்டுமே இருக்குமாறு அக்காட்சிகள் அமையப்பட வேண்டும்
.அக்காட்சிகளின் ஊடே ஒலி,இசை,வசனம் சேர்க்கப்பட வேண்டும்.
3) Tonal- காட்சிகளின் துண்டிப்புப் பார்க்கின்றனர்களின் உணர்வுகளின்
வெளிப்பாட்டின் அளவைக் கொண்டே அமைய வேண்டும்.
4) Over tonal- மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று வழிமுறைகளையும் சேர்த்து
பார்வையாளர்களின் நிலையை இன்னும் abstrak and complicated effect ஆக
உருவாக்கும்.
5) Intellectual- சார்லி சாப்ளின் Modern Times - February 5, 1936
படத்தின் முதல் படக்காட்சியில் மக்கள் வேலைக்குக் கூட்டம்கூட்டமாக செல்வதை
காட்டப்படுகின்றது. அடுத்த காட்சியில் ஓர் ஆட்டு கொட்டகையிலிருந்து ஆட்டு
மந்தை கூட்டமாக வெளியேறுவதை காட்டப்படுகின்றது. இவ்விரண்டு காட்சியும்
பார்க்கின்றவர்களுக்கு படத்தின் கரு புரிந்து விடும். இவ்விதம்
அறிவுச்சார்ந்ததாகும்.
பெரும்பாலான செர்கீ மிக்கைலோவிச் ஐசென்ஸ்டைன் (Sergei Mikhailovich
Eisenstein) திரைப்படங்களின் montage கோட்பாட்டைத் தவிர கேமராவின்
கோணங்கள், காட்சியின் தொழில்நுட்பம் மற்றும் திரைக்கதை பெரிதும்
பேசப்பட்டுள்ளது. அவரது பெரும்பாலான படங்களின் பிரபலமான கதாநாயகர்களைப்
பயன்படுத்தியது இல்லை. சமூக பிரச்சனை மையமாக கொண்டதுதான் இவரது படங்கள்.
அவரது படைப்புகள் மூலமாக மக்கள் முதலாளித்துவத்திலிருந்தும் வெறுமனமே
பொருளீட்டும் மனப்பான்மையிலிருந்தும் விடப்படக்கூடிய சூழல் இக்கலைகளின்
மூலம் ஏற்படுகின்றது என்று முழுமையாக நம்பினார்.
அவரது படங்களில் குறைந்தது 500 பேராவது நடித்திருப்பார்கள். அனைவருமே சாதாரண
மக்கள். இதுதான் இவரின் படத்தின் பிரமாண்டம். நவீன சினிமா உருவாவதற்கான
அடித்தளம் இவர் உருவாக்கிய montage கோட்பாடு என்றால் மிகையாகாது.
|
|