கூழாங்கல்
கூழாங்கல்
ஓர் அற்புத ஜீவி
ஏற்றத் தாழ்வில்லா சமத்துவத்தோடு
எல்லைகளை அறிந்து வீற்றிருக்கும்
சரியாக
கூழாங்கல் அர்த்தங்கள்
மட்டுமே பொதிந்திருக்கும்.
யாருக்கும் எதையும்
ஞாபகப்படுத்தாத இரகசியத்தோடும்
யாரையும் அச்சுறுத்தாமலும்
ஆசையைத் தூண்டாமலும் அமைந்திருக்கும்
அதன் உத்வேகமும்
உணர்வற்ற உள்ளீடும்
தார்மீகத்தோடு கௌரவமானவை
அதை கையிலேந்தும்போது
எனக்குள் கனக்கும் குற்றவுணர்வு
அதன் கம்பீரமான ஆகிருதியை
ஊடுருவும் போலியான சூடு
கூழாங்கற்களை அடிபணியவைக்கமுடியாது
இறுதிவரை நம்மை அவை
தெளிவான கண்ணால்
பொறுமையோடு
ஏனென்று
பார்த்துக்கொண்டேயிருக்கலாம்.
ஸ்பிக்னியு ஹெர்பெர்ட்
இரஷ்ய அடக்குமுறைக்கு பலியான போலந்தின் இலக்கியவாதிகள் அஃறிணைப்பொருட்களை
தங்கள் கவிதா வெளியீட்டிற்கு அதிகமாக பயன்படுத்தினர். இரண்டாம் உலகப்
போருக்கும் பிந்திய இவ்விளைவு போலிஷ் இலக்கியத்தைப் பெரிதும் பாதித்தது.
புதிய தடங்களையும், கவிஞர்களையும் அறிமுகப்படுத்தியது. ஹெர்பெர்ட்
அவர்களில் ஒருவர்.
|