|
காத்திருப்பை ஒரு கவிதையாற் தின்று விடுதல்
என்
இதயத்தை வருடி
மிதந்து வரும் சொற்களால்
தானொரு
குழைந்து போன உயிரியாகிச் சொல்லப்பட்டது.
"மீண்டும் சற்று நேரத்தில் பேசலாம்"
அவ்வார்த்தைகளின் சத்தத்தில்
வோட்காவால் பியரால் வைனால் மற்றும் கஞ்சாவால்
இன்னபிற
எனக்குப் போதை தரும் பொருட்களால் தமிழ் ஒலித்தது.
சமையலை விரைந்து செய்து
அவசரமாய்ப் பாத்திரங்ஙள் கழுவி
புத்துணர்வுடன் பேசவென
வெதுவெதுப்பான குளியலொன்றை
முணுமுணுப்பான பாடல்களுடன் முடித்து
வாசனை தடவி முகத்தில்
பேசிடக் காத்திருக்க,
வீடு உறங்கியது.
ஊரும் நிசந்து இருளானது.
நான் மட்டும் தனித்திருந்தேன்.
கதகதப்பும் குறுகுறுப்புமான கைகளில்
தொலைபேசியை பற்றியிருந்தேன்.
வாயை மீறி வழிந்த சிரிப்புடன்
குறிப்பேட்டுத் தாள்களை விரல்கள் புரட்ட
எப்போதும் பார்க்கும் பெயர் தானது
இப்போது மட்டும் புதிதாகத் தெரிய
இரகசியமாக உதடுகள் பெயரை உச்சரித்தபடியே...
பறத்தலைத் தாண்டிய செக்கன்களில்
அழைப்பொலியில்லை.
மறந்து போனது நித்திரையினாலோ
தோழர்களுடன் உரையாடுதலிலோ
அல்லது
அலுப்பான அழைப்பாக அலட்சியம் செய்தலிலோ
காதுகள் சொற்களின் கிறக்கத்துக்காக...
காத்திருத்தலை
இன்றே தின்று விடும் வேகமாகக் காத்துக் கொண்டிருந்தேன்.
உறக்கமின்றி,
நள்ளிரவு முடிந்து
அடுத்த நாளும் ஆரம்பித்து.
ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு
சுற்றி வந்து கொண்டிருந்தது மணிக்கூடு.
நேரம் தாண்டிப் போய்க் கொண்டே...
ஒரு கவிதையை எழுதாமல்
காத்திருத்தலையோ நிறைவு செய்ய முடியவில்லை.
|
|