|
இரவின் கனவுகள்...
உறக்கத்தின்
வெறியில்
திடுக்கிட்டு
விழிக்கையில்
பிறப்பெடுத்து வெளியேறின இரவின் கனவுகள்...
மூடிய படி இருக்கும் சன்னல் கதவுகளில்
முட்டி மோதி
வெளியேறும் வழி மறந்து
திறக்கப்படும் பொழுதுக்காக
சில தவமிருந்தன...
தலையை சுற்றியபடி காற்றில் மிதந்த
கனவுகளை உள் இழுக்க முயல்கையில்
கதவிடுக்குகளில் வெளியேறின
சில...
இரக்கமின்றி சுழலும் மின் விசிறியில்
தலை அறுபட்டு
துள்ள துடிக்க முண்டமாக கிடந்தன சில...
தப்பி பிழைத்து வெளியில் போன
கனவுகள்
அறுத்து போன சிறகுகளோடும்
பெருகி
வழியும் குருதியோடும் திரும்பி வந்தன...
எல்லாமுமான பிறகு,
எழுந்து பார்க்கையில்
லேசாய் தலை வலிப்பது போல்
மட்டும் இருந்தது...
நாயொன்று இறந்தது குறித்த கதை
இறத்தல் என்பது ஏதென்று தெரியாமலே
நாயொன்று இறந்தது குறித்து கதை சொல்ல தொடங்குகிறாள்
குழந்தை...
சட்டென திறந்து கொள்கின்றன இதுவரை திறக்கப்படாத
பக்கங்கள்...
இதற்குமுன் இறந்து போகாத அந்த நாயும்
அதன் எஜமானியும் உலவி திரிகின்றனர்
வீதியெங்கும்...
கண்களை அகல விரித்து கதை சொல்லும் குழந்தை
திடிரென குடை பிடிக்கிறாள்
மழை என கூறி...
தெருவில் நடப்பவர்கள் தாழ்வாரம் நோக்கி
ஓடுவது மங்கலாக தெரிகிறது...
தன்னை போலவே நாய்க்கும்
மழை பிடிக்கும் எனவும்
அது மழையில் நடப்பதாகவும் தொடர்கிறாள்....
கண நேரமாக நடப்பதை பற்றி
கதை சொல்லியபடி
இருந்தவள் எழுந்து நிற்கிறாள் நாய் பாலம் ஒன்றை
கடப்பதாக...
சில நேரங்கள் அமைதியாய் போய் கொண்டிருந்தன...
நாய் இறந்தது குறித்து
சொல்லாமலே தூங்கி போயிருந்தாள் குழந்தை...
சாரல் வழியும் சன்னலை மூடி விட்டு
படித்த பக்கங்களுக்கு அடையாளமிட்டு
தெருவில் நடந்து கொண்டிருந்தேன்
பாலத்தை கடந்து
கொண்டிருக்கும் நாயை தேடியபடி...
|
|