|
முன்னெச்சரிக்கை:
இந்த பத்தியை மிகுந்த மன உளைச்சலில் எழுதுகிறேன். எனவே கருத்துகளை
இதில் தேட வேண்டாம். மனம் பலவீனமானவர்கள்... குழந்தைகள்...
பெண்கள் இதை படிக்க வேண்டாம்.
இதே வல்லினத்தில்தான் சை. பீர்முகம்மதுவின் புத்தக வெளியீட்டை
அடிப்படையாக வைத்து அவரின் இலக்கிய நிலைபாடு குறித்தக் கேள்விகள்
எழுப்பினோம்.
காட்சிக்குப் பின்னால்:
சை. பீர்முகம்மது சில நண்பர்களிடம்
தொலைபேசியில் கொச்சை வார்த்தையில் வல்லினத்தைத் திட்டித்
தீர்த்திருந்தார். நண்பர்களின் மோசமான குணம் தெரியாததால் அவர்கள்
அந்தத் திட்டுதலைப் கைத்தொலைபேசியில் பதிவு செய்கிறார்கள் என்று
அறியாமல் அவர் உஷ்ணம் கூடியிருந்தது. போதாக் குறைக்கு ஒரு நண்பரின்
கைத்தொலைப்பேசி, குரல் பதிவுக்குப் (voice mail) போக அதிலும் தடாலடி
வசனங்கள். இப்போதுகூட நண்பர்கள் ஒன்றிணையும் போது அந்தப்
பதிவுகளைத்தான் கேட்டு மகிழ்கிறோம். பரபரப்பான கோலாலம்பூர்
வாழ்வில் இது போன்ற வசனங்கள்தான் சிரிக்க வைக்க உதவுகிறது.
வல்லினம் அகப்பக்க அமைப்பாளர்கூட அந்த குரல் பதிவை
வல்லினத்தில் வெளியிடலாம் எனும் திட்டத்தை முன்வைத்துள்ளார்.
வாசகர்கள் நேரடியாகவே குரலைக் கேட்கலாம். எல்லோரும் மகிழட்டுமே
என்ற பெரிய மனது அவருக்கு. என்ன பேசி என்ன இருக்கிறது. அவ்வருடமே
சை. பீர்முகம்மதுவின் சிறுகதை தொகுதிக்குத்தான் 'மாணிக்க வாசகம்'
விருது கிடைத்தது. வழக்கம் போல 'விருது வேண்டும்... விருது
வேண்டும்... பொன்னாடை வேண்டும்' என அலையும் எங்களுக்குப் பெரிய இடி.
(எப்போது இராஜேந்திரன் தன் மனைவிக்கு அந்த விருதை வழங்கினாரோ அப்போதே
அவ்விருது எல்லா மரியாதைகளையும் இழந்துவிட்டது என்பதெல்லாம் என்
போன்ற வயிற்றெரிச்சல் பிடித்தவர்களின் வெற்று வாதம்)
இதே வல்லினத்தில்தான் எழுத்தாளர் சங்கத்தின் கீழான நடவடிக்கைக்கு
எதிராக பதினான்கு எழுத்தாளர்களின் கருத்துகளைச் சேகரித்து
பிரசுரித்தோம்.
காட்சிக்குப் பின்னால்:
அந்தப் பதினான்கு பேரில் எத்தனைப் பேர் தொடை
நடுங்கிக் கொண்டு கருத்தைக் கொடுத்தார்கள் என்பதும், எத்தனைப் பேர்
மலுப்பலாக எழுதிக் கொடுத்தார்கள் என்பதும் தனிக் கணக்கு.
என்னளவில் இவர்களுக்கு முதுகுத் தண்டு இல்லாததை உணர்ந்து கொள்ள
முடிந்ததில் திருப்திதான். இன்னும் தருவதாகக் கூறி அழைப்பை
எடுக்காதவர்கள், தத்துவங்கள் கூறி ஓடியவர்கள் என பலரது
முகங்கள் இப்போது கண்முன் தோன்றி குமட்டலை ஏற்படுத்துகிறது. இந்தப்
பதினான்கு பேரின் கேள்விக்கும் எழுத்தாளர் சங்கத்திடமிருந்து எந்த
பதிலும் இல்லை. மாறாக வரப்போகும் செம்மொழி மாநாட்டிற்கு சிறப்பான
ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள். கண்டிப்பாக இந்தக் கூட்டத்திற்கு
மிஸ்டர் மசாலைதான் இலக்கியத் 'தலை'யாக இருப்பார். (கருணாநிதியை
'கலைஞர்' என்று அழைப்பதே காமடியாக இருப்பதால், இந்த நாடகத்தில்
எழுத்தாளர் சங்கத்தின் பங்களிப்புப் பெரும் சிரிப்பை உண்டு
பண்ணுகிறது. பொதுவாக நான் வடிவேலுவைப் பார்த்தாலே விழுந்து விழுந்து
சிரிப்பேன். இதில் நாகேஷ், சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன்,
கவுண்டமணி, செந்தில், விவேக், வையாபுரி என நகைச்சுவைப் பட்டாளத்தையே
பார்த்தால் சிரிக்காமல் வேறென்ன செய்வது. இந்தச் சிரிப்பு கூட என்
போன்ற வேலையற்றவர்களின் வெற்றுச்சிரிப்புதான்) மற்றபடி
கருணாநிதியைப் பார்க்கவேண்டும், அவருடன் ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள
வேண்டும், வைரமுத்துவுடன் வியாபாரம் பேச வேண்டும் என்ற எங்கள்
ஆசையில் மண். மீண்டும் நாங்கள் தோல்வி அடைந்திருந்தோம்.
இந்த இரு தோல்விகளும் எனக்குப் பெரும் படிப்பினையைக்
கொடுத்திருக்கிறது. எந்தக் காலத்திலும் அதிகாரத்தோடு ஒரு சாமானியன்
சண்டையிட்டு வெல்ல முடியாது என உறுதியாகிவிட்டது. எனவே நல்ல
விலைக்கு என் முதுகு தண்டை விற்பனை செய்யலாம் என முடிவெடுத்துவிட்டேன்.
அறுபத்தோராயிரம் ரிங்கிட் கிடைக்காவிட்டாலும் ஆறாயிரமாவது தேறும்.
இப்படி நான் முடிவு எடுத்திருந்த சில நாட்களில் இரண்டு புதுப்
பிரச்சனைகள்.
இரண்டுமே ஏறக்குறைய ஒரே வகைதான். கோ. புண்ணியவான் ஏற்கனவே மக்கள்
ஓசைக்கு அனுப்பி பிரசுரமான சிறுகதை 'பேரவைக் கதை'க்கு
அனுப்பப்பட்டு முதல் பரிசு கிடைத்திருக்கிறது. இதேபோல் சை.
பீர்முகம்மது 'உயிரெழுத்து' இதழுக்கு அனுப்பிய சிறுகதை 'தென்றல்'
போட்டிக்கதைக்கு மீண்டும் அனுப்பப்பட்டு முதல் பரிசை
வென்றிருக்கிறது. எப்போதுமே உணர்ச்சிவசப்படும் கூட்டம் இதற்கும்
சத்தம் போட்டுக்கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் இனி நான் எந்த
எதிர்ப்பும் தருவதாய் இல்லை. நானும் சம்பாதிக்க வேண்டாமா என்ன?
அதிகாரத்தின் பாதங்களை நக்கிக் கொடுக்க வேண்டாமா? அப்போதுதானே
ஒன்றிரண்டாவது பார்க்க முடியும். அப்புறம் ஏதாவது தொப்புள் படம்
போட்ட இதழில் 'செ குவேரா, கார்ல் மார்க்ஸ், பெரியார்' என எழுதி
தீர்ப்பதாலும் 'அறிஞர்' நிறைந்த சபையில் "எனக்குத் தமிழ் நாட்டுல
அவனத் தெரியும், இவனத்தெரியும்..." என தம்பட்டம் அடிப்பதாலும்
மக்கள் என்னை மன்னிக்க மாட்டார்களா என்ன?
எழுத்தாளர் சங்கத் தலைவர் மிகவும் நல்லவர். தன்னை
எதிர்ப்பவர்கள் அன்புடன் கை கொடுத்தால் அந்தக் கையில் ஒரு விருதைத்
திணிக்காமல் விடமாட்டார். அப்படி ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கை
குலுக்கி விருதை பெற்றுவிட வேண்டும். அப்புறம் கிடு கிடுவென இலக்கிய
வானில் சிறகடிக்கலாம். எழுத்தை எப்படி விற்பது என்ற தந்திரம் வெகு
எளிதாகக் கைவரும். நானும் தமிழகத்தில் மலேசிய இலக்கியத்திற்கு
பீடம் வைத்துள்ளேன்... நாற்காலி வைத்துள்ளேன்... மேசை வைத்துள்ளேன்...
கக்கூஸ் வைத்துள்ளேன் என பேட்டி கொடுக்கலாம். அதற்குப் பிறகு 'தீவிர
எழுத்தாளர்கள்' எனத் தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளும்
குறுங்கூட்டத்தைக் கண்டவுடன் ஓடி விடவேண்டும். இந்த நாட்டிலேயே
அவர்கள் மிக மோசமானவர்களாதலால் எப்படியும் துரத்திப்
பிடித்துவிடுவார்கள். அதை நினைத்தால்தான் கொஞ்சம் பயமாக இருக்கிறது.
இப்படி நானே மிகுந்த மன உளைச்சலில் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை
எழுதிக் கொண்டிருக்கையில் கோ. புண்ணியவானிடமிருந்து ஒரு குறுந்தகவல்.
"பேரவை கதையின் தீர்ப்புகள் போட்டிக்கு முன்னே
தீர்மானிக்கப்பட்டுவிடும் என்ற கருத்தை வெளியிட்டுள்ளீர்கள்.
உங்களுக்கும் ஒரு முறை சிறுகதைக்குப் பரிசு கிடைத்துள்ளது.
அப்படியானால் உங்கள் கதையும் அவ்வாறுதான் தேர்வு பெற்றதா?"
கொஞ்சம் கூட யோசிக்காமால் எனக்கு இன்னும் முதுகெலும்பு இருக்கின்ற
நினைப்பில் பதிலுக்கு இப்படி அனுப்பிவிட்டேன், "அந்தச் சந்தேகம்
இருந்ததால்தான் ஒரு முறைக்கு மேல் நான் சாக்கடையில் விழவில்லை...
உங்களுக்கு சாக்கடை இவ்வளவு பிடிக்கும் எனத் தெரியாது சார்!"
நான் சொன்ன இந்த வார்த்தை என் மன உளைச்சலை அதிகப்படுத்தியது. எனவே
சற்று யோசிக்காமல் சட்டையைக் கழற்றி நானும் சாக்கடையில் குதிக்க
அடியாழத்தில் யாருடையத் தலையோ தட்டுப்பட்டது.
"பேராசிரியர் சார்... எப்ப பினாங்கிலிருந்து வந்தீங்க...?"
|
|