|
முதல் நாளிலிருந்தே கணவர் தொலைபேசாத, [கணவர், குழந்தைகளின் குரல் கேட்காத]
கவலையில் இவள் சோகமாய் அமர்ந்திருக்க, சந்திரா ஓடி வந்து, "சேச்சி, நிங்ஙளை
பார்க்க ஒருவர் வந்திருக்கிறார். உடனே வாருங்கள்" என்று
கையைப்பிடித்திழுக்க, ஒருவேளை, முதல்நாள் சந்தித்த சந்திரலேகா தானோ என்று
கீழே இறங்கி வந்தால், ஆசிரியரின் [முத்துசாமிசாரின்] மனைவி. அய், ஜக்கம்மா,
என்று இவள் தனை மறந்து கூவ, கட்டபொம்மன் [முத்துசாமி சார்] விழிக்க,
ஆசிரியரின் மனைவி, happy birthday, என்றவாறே, அன்போடு வந்து
அணைத்துக்கொண்டார் .
கூத்துப்பட்டறையில் தொலைபேசி வேலை செய்யாததால், முத்துசாமிசாரின்
வீட்டுக்கு தொலைபேசி, விவரம் சொல்லியிருக்கிறார் கணவர். "மதிய உணவுக்கு
அழைக்கத்தான் வந்தோம்" என்று ஆசிரியரும் மனைவியும் அழைக்க, மகிழ்வில்
கண்கள் பனித்தது. கவலை பனிப்படலமாய் விலக, ஆசிரியரையும், மனைவியையும்
முகமாய் நிற்கவைத்து, இவள் நமஸ்கரித்தாள். மதிய உணவு ஆசிரியரின் வீட்டில்
உண்ணச் சென்றபோதுதான் அவர் பிராமணர் என்ற உணர்வே பிறந்தது.
மணக்க மணக்க அவ்வளவு அருமையான உணவு. ஆனால் ஜானகி ராமனின் நாவல்களில்
எல்லாம் வருமே... வற்றக்குழம்பு, அது ஏனில்லை? என்று இவள் கேட்க, அம்மா
"நாளையே கொடுத்துவிடுகிறேன்" என்றிட, "எப்படிச் சமைப்பது" என்று, இவள்
சமையல் பாகம் கேட்க, "அட, என்டெ ஊர், புளிக்கூட்டானில்
வற்றலைப்போட்டுவிட்டால் அதுதான் வற்றக்குழம்பா? என்ன அது சுண்டை வற்றல்?"
என்றெல்லாம் சாதாக்கேள்விகளால், இவள் அவரை குடைய அம்மா அழகாய்ச்
சிரித்தார். முத்துசாமி சார் ஆறடிக்குமேல் உயரம், நல்லநிறம், கணீரென்ற
குரல், சதா முறுக்கிவிட்டுக்கொண்ட மீசையில், இப்படித்தானாக்கும் என்ற
கட்டபொம்மன் தோற்றம். ஆனால் அம்மா, அதிகம் உயரம் கூட இல்லை. மாநிறம். ஆனால்
பேச்சுக்கூட எந்தா ஒரு மென்மை தெரியுமா? முத்துசாமி சாரின் அனைத்து
வெற்றிக்கும் பின்னால் எத்தகு மாசக்தி அவர் என்பது அம்மாவைக்கண்டதுமே
புரிந்துவிட்டது.
அப்பொழுது அவர் [அம்மா] அரசு உத்தியோகத்தில் இருந்தார். ஆனால் தோற்றம்
அப்படியே அம்பிகையைக் காண்பதுபோல்தான் மனதில் நிற்கிறார். விடைபெறும்போது,
குங்குமமிட்டு, சந்தனம் ,மஞ்சள், ப்லவுஸ் துண்டு என மங்கலப்பொருட்கள்
எல்லாம் தர, மீண்டும் அவர்களை நமஸ்கரித்து, விடைபெற்றபோது முத்துசாமி
சாரின் மற்றொரு உலகம் தெரிந்தது.
கூத்துப்பட்டறைக்குள் நுழைந்த அரை மணி நேரத்தில், கணவரின் குரல். [தொலைபேசி
சரியாகிவிட்டது]. குழந்தைகளின் வாழ்த்தும், மன்னவரின் ஸ்னேஹம் நிறைந்த
திட்டுமாக, இவள் உலகம் உல்லாசமாகிவிட்டது.
சிங்கப்பூர் திரும்பும் நாள் நெருங்கிவிட்டதால், இவளது, ஸ்க்ரிப்டை இன்னும்
முழுமையாக்காத கவலை இருந்தது. ஸ்க்ரிப்டில் பல மாற்றங்கள் அவள்
செய்திருந்தாள். எல்லாமே அவளின் சொந்தக்கற்பனை என்றிட முடியாது. இங்கு
கற்றது, ஆசிரியர்களின் அறிவுரைகள், என எல்லாமே சேர்ந்து, நிச்சயம் இந்த
நாடகம் இலக்கிய சிறப்புப்பெறும் எனும் நம்பிக்கை இருந்தாலும், ஏனோ எங்கோ
இடறியது. நெருடல் எங்கே என்று மட்டும் புலப்படவேயில்லை. எங்கே? எங்கே?
மூளையைக்கசக்கிவிட்டெல்லாம் யோசிக்க அவளால் இயலாது. கவலை இம்மட்டு அம்மட்டு
அல்ல. பட்டென்று உடனே தோன்ற கணவருக்கு தொலைபேசினாள்.
உடனே கணவர் ஸ்க்ரிப்டில் உள்ள மாற்றத்தைக்கேட்டார். இவள் விளக்கியதும்
பொட்டென்று போட்டு உடைத்தார், நிலவரத்தை. என்டெ பொன்னே, கடைசியில் விஷயம்
இதுதானா? சாரே, சாஹித்யம் என்றால் என்ன? இலக்கியத்தில், சிறுகதையோ,
கவிதையோ, நாடகமோ, நாவலோ, எந்த வடிவமாயினும் உருவகம் வாழ்க்கையிலிருந்துதானே
பிறக்கிறது? மனித மனம் என்பது அங்கு எவ்வளவு பெரிய விஷயம்? அந்தரங்கமும்,
கிசுகிசுப்பும், ஆழமனக்கொந்தளிப்பும், காமமும், குரோதமும், காதலும்
ப்ரேமமும், என மனிதன் அல்லாடிக்கொண்டிருக்க, வாழ்க்கையை, அப்படியே
வாழ்க்கையாகத்தானே வடிக்கவேண்டும்? நிகழ்கலையிலும் கூட அப்படித்தானே?
பின்னே எங்கே வந்தது, சிங்கப்பூர் வாழ்வியலுக்கே சற்றும் ஒவ்வாத பொய்மையான
ஜோடனை?
அட, இவ்வளவும் சொல்லிவிட்டு, இவளது நாடக எழுத்தில், குறிப்பிட்ட சில
காட்சிகளில், மட்டும் ஏனிந்த தடுமாற்றம் என்று சொல்லவில்லையே? இவளது
குறிப்பிட்ட காட்சியில் close up shots ல் மட்டுமே வேண்டி எழுதப்பட்ட
வசனங்கள் தான் பிரச்சினை. எப்படிக்காட்டினாலும், எப்படி எழுதினாலும்,
வரையறுக்கப்பட்ட பதத்திலிருந்து விலகாத sub-codeல் தானே எல்லாமே?
டெல்லியில் அல்காசியோ, கேரளத்தில் காவாலம் பணிக்கரோ, தமிழ்நாட்டில்
அருமைமிகு ராமானுஜம் சான்றோர், என யாராயினும் அவரவர் வாழும் மண்ணின் மணம்
வீசத்தானே இலக்கியம் படைக்கிறார்கள். அப்படியிருக்க, இவளும் கூட
அப்படித்தானே? multi-racial எனப்பலமொழி மக்கள் வாழும் சிங்கப்பூரில்,
கதகளி, தெருக்கூத்து, யக்ஞகானம், போன்ற பாரம்பரியக்கலைகளை
பார்வையிலக்கியத்தின் அங்கதக்கூறுகளாகக் காட்டலாமே தவிர, இதையே சாஹித்யம்
என்றிட இயலுமா?
இவளது ஸ்க்ரிப்டில் நதிபுத்ரா [மலாய்மொழிக்கவிஞரின்] வின் கவிதையும்,
திரு.சியாவின் [சீனப்பாட்டாளியின்] ஆங்கில உச்சரிப்பும், மலையாளத்தின்
மகரந்தமும், செந்தமிழ்த்தேன்மொழியின் சுகானுபவமுமாகத்தான் கதாபாத்திரங்களை
உருவாக்கியிருந்தாள். சிங்கப்பூரில் அதுதான் வாழும் மொழி. அதுதான் என்டெ
மண்ணின் விழுமியம் சார்ந்த எழுத்து. ஞான் மலையாளி, அதனால் மலையாளம்
மட்டுமே, என்றிட்டால் அதைவிட அபத்தம் வேறுண்டா? பசாரும், சீனர்களின் ஞோஞா
குவேயும், பிரானாக்கான் எனப்படும் செட்டிமலாக்கா வம்சாவாளியினரின் டெவில்
கறியும், மலாய்க்காரர்களின் குவே கெத்துப்பாட்டும் சர்வ சாதாரணமாய் இவளது
கதாபாத்திரங்களின் வாய்மொழி உரையாடலில் ஒலிக்கும். ஒலிக்கவேண்டும்.
இல்லையேல் உழைப்புக்கு சிங்கப்பூர், வாழ்க்கை சுகத்துக்கு சிங்கப்பூர்,
சுரண்டிச்சம்பாதிக்க மட்டுமே சிங்கப்பூர் எனத் தாய்மடி மறந்த சேயாய், நன்றி
கொன்ற இலக்கியவாதியாக அல்லவா நடமாடவேண்டும். நினைக்கவே நெஞ்சு விம்மியது.
எங்கு வாழ்ந்தாலும், மானுட யதார்த்தத்தில் எனக்கே எனக்கான நேர்த்திக்கடன்
என்ன என்பதை எப்படி மறந்துபோனேன்? அன்றாட வாழ்வியலில் ஞான் கண்ட சின்ன
சின்ன அதிசயங்களும் கூட எனக்கு அற்புதம் தானே? பட்டதை, மனதில் தொட்டதை,
கண்ணில் மலர்ந்ததை, காட்சியில் நின்றதை, எல்லாமே அதனதன் அழகோடும்,
அழகின்மையோடும், அழுக்கோடும், அழுக்காறோடும், உற்றுக்கவனிக்கும் நுட்பமான
நுண்ணிய உணர்வுகளே கூட படைப்பாளிக்கு வைப்பு நிதிதானே. புதுமைப்பித்தனும்,
அடூர் கோபால க்ரிஷ்ணனும், எம்.டி. வாசுதேவன் நாயரும், யு. ஆர். அனந்த
மூர்த்தியும், சொல்லாத ஒன்றை ஞான் என்ன சொல்லவேண்டும்? மானுடவியல் பயன்
பாட்டுக்காக எப்படி எழுதலாம்? முடிவெடுத்துவிட்டாள். அப்படியே துளிக்கூட
சம்சயமின்றி எழுதத்தொடங்கியபோது பேனா ஓடியது. கொஞ்சிகொஞ்சி, இழைந்து
இழைந்து, ரசித்து ரசித்து ஸ்க்ரிப்டை விறு விறுவென்று முடித்துக்கொடுத்தது.
இனி தான் கதையே வருகிறது?
என்ன புரியலையா? தமிழே, எண்டெ சுந்தரத்தமிழே? என்னென்பேன்?
எப்படிச்சொல்வேன்?
|
|