|
ஆகாயத்திற்கென்றொரு சாட்டை இருக்கிறது. மாறும் அதன் உணர்வுகளுக்கேற்ப அது
பூமியை நோக்கிச் சாட்டையை வீசுகிறது. அச் சாட்டை சில வேளைகளில் பலத்த
ஓசைகளோடும், சில வேளைகளில் மென்மையாகவும் வீசப்படுகிறது. வீசப்படும்
சாட்டையின் வீச்சுக்கேற்ப, காற்றுத் தோல் கிழிந்து, பூமி தண்ணீர்க்
குருதியால் நனைகிறது. அழுகிறது. ஈரலித்துக் குளிர்கிறது. அதன் குருதியில்
நனையும் அனைத்தும் சிலவேளைகளில் பசுமை பெறுகின்றன. சில வேளைகளில் அழிந்தும்
போகின்றன.
அரச மருத்துவமனைக்குள் நுழையும்போது வரும் ஒரு விதமான வாடையைப் போல, நீண்ட
காலத்தின் பின் முதன்முதலாக பூமிக்குள் நுழையும் மழையும், வெளியெங்கும் மண்
வாசனையைக் கிளப்பிக் கொண்டே வருகிறது. மழையை முழுமையாக ரசித்தவர்களென்று
இவ்வுலகில் யாருமே இல்லை. மழையின் அறிகுறிகள் ஆரம்பித்தவுடனேயே, நகரவாசிகள்
நனைந்துவிடக் கூடாதென்ற பதைபதைப்போடு மழைச் சாட்டை தங்களைத் தொடாத
இடங்களுக்குப் போய் ஒளிந்துகொள்கின்றனர். கிராமவாசிகள் முதல்மழையை
நனைந்துகொண்டாடுவதோடு, அதற்கு பிறகு வரும் நீர்ச் சாரல்களுக்குத் தங்களை
மறைத்துக் கொள்கின்றனர். மழையை எப்பொழுதும் முழுவதுமாக ஏற்றுக் கொள்வன
பூமியின் வனாந்தரங்களும், நதிகளும், கடல்களும்தான். மனிதனால் முடியாது.
எந்தப் பெரிய சாதனை செய்தவராலும் கூட மழைக்குக் கீழே படுத்து அண்ணாந்து
விழிகளை மூடாமல் மேலே நேரே பார்த்துக் கொண்டு ஒரு வினாடி கூட இருந்து விட
முடியாது.
மழைக்கு பல்லாயிரக்கணக்கில் கரங்கள் இருக்கின்றன. அவை கணத்துக்கொன்றாய்ப்
பிறந்தழியக் கூடிய குறுகிய ஆயுள் கொண்டவை. வாரியிறைக்கும் கொடையாளியைப் போல
மழை தனது ஒவ்வொரு கரத்தாலும் நிலத்துக்கு வாரியிறைத்துக்
கொண்டேயிருக்கின்றது. வெயிலைப் போன்ற அமைதியான நடை மழைக்கில்லை. மழையின்
பாதைகள் இசைகள் சேர்ந்த பாடல்களாலானவை. அதன் ஒவ்வொரு துளியும் இசையை
வெளிக்குக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறது.
எனக்கும் மழைக்குமான நட்பு சிறப்பியல்பானது. எக் குளிர்காலத்திலும் மழையில்
நனையும் அவா தோன்றாமலிருந்ததில்லை. மழையிலிறங்கி நனைய முடியாப் பொழுதுகளில்
கூட வெறுமனே மழையைப் பார்த்துக் கொண்டிருப்பதுவும் ஒரு அமைதியைத் தரக்
கூடியது. மழையை ஆவலுற்று, நனைந்து, நடுநிசிகளிலெல்லாம் குரலெழுப்ப
தவளைகளால் மட்டுமே முடியும் போலும்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலைகளிலும் இலங்கை, கொழும்பில் விகாரமகாதேவி
பூங்கா வேலியோரத்தில் ஒரு திறந்தவெளி ஓவியக் கண்காட்சி நடக்கும். அந்தி
மஞ்சள் வெயிலடிக்கும் ஒரு ஞாயிறு மாலை, ஓவியங்களைப் பார்வையிடவென நானும்
நண்பரும் கவிஞரும் ஓவியருமான எஸ்.நளீமும் சென்றிருந்தோம். அழகழகான,
விதவிதமான ஓவியங்களை வேலியில் கொழுவி காட்சிக்கு வைத்து அருகிலேயே
ஓவியர்கள் நின்றிருந்தனர். வர்ணங்கள் வெளிப்படுத்தும் ஓவியங்களின் மொழியை
அவரவர் பார்வையில் உணரத் தலைப்பட்டோம். விவாதித்தோம். கருத்துக்களோடு
ஒன்றித்துப் போனோம். ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒவ்வொரு வகையில் மொழி
வசப்படுவது போல ஒவ்வொரு ஓவியரது ஓவியங்களும் அவரவர் சிறப்பியல்பைப்
பிரதிபலித்தன. இந்த ஓவியர்கள் யாரும் பெரும் வசதிகளையுடையவர்களல்லரென்பது
பார்த்தவுடனேயே தெரிந்தது. வசதிகள் நிறைந்த பெருநகரத்து நவீன மக்கள்
மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிலர் ஓவியங்களை வாங்கிச் சென்றனர்.
மாமிசப் பட்சியொன்றிடமிருந்து தங்கள் குஞ்சுகளைக் கோழி காப்பதுபோல,
திடீரென்று ஓவியர்கள் தங்கள் ஓவியங்களை ஒவ்வொன்றாக எடுத்து அடுக்கத்
தொடங்கினர். அவர்களது பரபரப்பு ஒரு சுழற்காற்றைப் போன்றிருந்தது. அதன்
ஒவ்வொரு அசைவும் ஓவியங்களைச் சேகரித்தது. அடுக்கியது. பாதுகாப்பான இடம்
நோக்கிக் காவிச் சென்றது. வானத்தின் மஞ்சள் நிறம் ஓரிரு துளிகள் விழும்போதே
கழுவப்பட்டுப் போயிருந்தது.
நாங்கள் கடற்கரைக்கு வந்தோம். கடற்கரையில் ஞாயிறுகளில் வெளியிறங்கும் சனம்,
கூட்டம் கூட்டமாக நகர்ந்துகொண்டிருந்தது. ஆங்காங்கே விழும் ஓரிரு துளிகள்
ஒருவரது இயக்கத்தையும் சிறிதும் சலனப்படுத்தவில்லை. நாங்கள்
கதைத்துக்கொண்டே நடந்தோம். ஒரு சந்தைக் கூட்டம்போல மக்களின் ஆரவாரத்தை
முதல் தூறலில் கேட்டோம். பிஞ்சுக் குழந்தைகளை முந்தானைக்குள் போர்த்தி
தாய்மார் மழை எட்டிப் பார்க்காத இடம் நோக்கி வேகமாக நகர்ந்தனர். நனைவதை
விரும்பாத பலரும் கூட மழைக்கு ஒதுங்க இடம்தேடி ஓட, மழை வலுக்காதெனச்
சொல்லிக் கொண்டு இருவரும் மெதுவாகவே நடந்தோம். மழை வலுத்தது. ஆசை தீர,
நன்றாக நனைந்தோம். உண்மையில் நனையும் ஆர்வமும் தவிப்பும் இருவரிடமும்
உள்ளுக்குள்ளேயே இருந்திருக்கிறது அவ்வேளை. பின்னர் பேரூந்து
நிறுத்துமிடத்துக்கு வந்து நனைந்தபடியே பேரூந்துக்காகக் காத்திருந்தோம்.
கடலில் குளிக்கும் ஆர்வத்தோடு வந்திருந்த சிலர் மழையில் குளிப்பதைச்
சற்றுப் பொறாமையுடன் பார்த்தபடியே பேரூந்தில் ஏறினோம்.
இப்படித்தான் இப்பொழுது எப்பொழுதேனும் தற்செயலாக பெருநகரத்தில் பெய்யும்
மழையில் நனைய முடியுமாக இருக்கிறது. பெரிய நகரங்களில் வசிப்பவர்கள் பலர்
தொழில் நிமித்தமாகவும், கல்விக்காகவும் தமது சொந்த ஊரை விட்டு வந்தவர்கள்.
மழையில் நனைந்து ஏதேனும் நோயைத் தேடிக் கொண்டால் தன்னைக் கவனிக்க இங்கே
யாரிருக்கிறார்கள் என்ற அச்சமே அவர்களை மழையில் நனையவிடாமல் தடுக்கிறதென
எண்ணுகிறேன். அந்த அச்சம் மட்டுமில்லையென்றால் நகரத்தில் பெய்யும்
பெருமழையை யாரும் நனையாமல் வீணடிக்கவே மாட்டார்கள்.
மழை, ஒரு வஞ்சக அரசியல்வாதியை ஒத்தது. எப்பொழுதும் பெரும் இரைச்சலோடு
வரும். தனது சிறு அசைவையும் உலகுக்கு விளம்பரப்படுத்தும். விழும்
இடத்திற்கேற்ப, சந்தர்ப்பத்திற்கேற்ப ஓடை, நதி, கடலெனப் பெயர் மாற்றிக்
கொள்ளும் சந்தர்ப்பவாதி. வெயில், நேர்மையான ஒரு மனிதனை ஒத்தது. எப்பொழுதும்
அமைதியானது. அதன் குணநலன்களை மட்டுமே உலகுக்கு வெளிப்படுத்துவது.
முக்கியமாக அதன் வருகை எவ்விடமாயினும் அங்கு எளிமையாக வரும் அது, தான்
நின்றிருக்கும் இடத்துக்கேற்ப தனது பெயரை எப்பொழுதும் மாற்றிக்
கொள்வதில்லை.
இவ்வாறான வெயில், மிக அதிகளவில் வாட்டியெடுக்கும் மத்திய கிழக்கு நாடுகளில்
பொதுவாக வருடத்தில் சில நாட்களில் மட்டுமே மழை பெய்யும். அடர்த்தியான அம்
மழைத் துளிகள், வெப்பத்துக்குள்ளேயே வாழ்ந்து சலித்துப் போன அம் மக்களுக்கு
பெரும் உவப்பைக் கொண்டு வருவன. இந்தியத் திரைப்பட நாயக, நாயகிகளைப் போல
தெருவிலிறங்கிக் கூத்தாட வைப்பன. பெரியதொரு பொக்கிஷத்தை வானத்திலிருந்து
யாரோ தூவுவதைப் போல ஆரவாரிக்கச் செய்வன. நனையும் எல்லோரையும் கழுவி,
முகத்தில், உடலில் பூரிப்பின் ஆடையை அணியச் செய்வன.
மழையும், கண்ணீரும் வடிவத்திலும் குணத்திலும் ஒன்றுதான். இரண்டுக்குமே
பொதுவாக அதீத ஆனந்தம், தாங்க முடியாத் துயரம் என இரண்டு முகங்கள் மட்டுமே
இருக்கின்றன. கண்ணீர் மேற்சொன்ன இரண்டிலும் உருவாகும். மழையோ மேற்சொன்ன
இரண்டையும் உருவாக்கும். ஒழுகாத கூரை, இராத் தங்க வசதியான இடம் அமைந்த
மனிதர்களுக்கு இரவில் பெய்யும் மழை என்றும் பிரச்சினையாக அமைந்ததில்லை.
ஆனால், தெருவோரங்கள், கடைத் திண்ணைகளில் உறங்கி இரவைக் கழிக்கும் எத்தனையோ
மனிதர்களுக்கு மழையைப் போன்றதொரு பிரச்சினை வேறில்லை. தங்களை நோக்கி வரும்
மற்ற எல்லாப் பிரச்சினைக்குரியவர்களிடமிருந்தும் கெஞ்சி, மன்றாடி, மிரட்டி
தங்களைக் காத்திடலாம். ஆனால் மழையிடம்?
மழை இரவுகளில் ஈரலித்த கடைத் திண்ணைகளில் படுத்துறங்க வழியற்று,
ஒடுங்கிப்போய் உட்கார்ந்துகொண்டு உறங்கிவழிந்தபடி, மழையை வெறுப்போடு
வெறித்துப் பார்த்தபடியிருக்கும் யாசக மனிதர்களை நடுநிசி தாண்டிய
பிரயாணங்களின் போது பார்த்திருக்கிறேன். மழை பெரும் சாபமாக அவர்களுக்குத்
தோன்றக்கூடும். யாசக சனங்களின், ஓய்வுக்கு வழியற்று நனையும் மனிதர்களின்
சாபங்களைச் சுமந்த மழைதான் எப்பொழுதும் நள்ளிரவுகளில் பெய்கிறது.
பகலில் பெய்யும் மழையும் பலரது சாபங்களைச் சுமந்ததுதான்.
பள்ளிக்கூடத்துக்கு பிள்ளைகளை அனுப்பிவிட்டு, அவர்கள் நனைந்துவரக்
கூடாதேயென்ற தவிப்புடன் காத்திருக்கும் தாய்மார்கள், கழுவி, ஈரம் போக
வெளியில், மொட்டை மாடியில் உலர வைத்திருக்கும் துணிகள் நனைந்துவிடக்
கூடாதேயென்ற தவிப்புடன் காத்திருக்கும் பெண்கள், ஆண்கள் என சகல மனிதரும்
பகலில் திடீரென வரும் மழையைச் சபிக்கும் நேரங்களுமுண்டு.
முன்னறிவித்தலின்றி வாசலில் வந்து நிற்கும் விருந்தாளியைப் போன்ற இந்தச்
சடுதி மழையைப் பெரிதும் வரவேற்பவர்கள் முச்சக்கரவண்டி, வாடகைக்கார்
சாரதிகள். அவர்களுக்கு அன்று ஓய்வின்றிய பயணம் வாய்க்கும். பை கொள்ளாத
அளவுக்குப் பணம் கிடைக்கும்.
அண்மைய மாதங்களில் இலங்கையின் எல்லாப் பாகங்களையும் கழுவிப் போகவென மழை
கொட்டித் தீர்த்தது. தலைநகர் கொழும்பில், மழை வீழ்ச்சியின் அளவு அதிகளவாக
இருந்ததுடன், நனைத்த இடங்களிலேயே தேங்கி, எல்லாப் பகுதியையும் தனது
நீரினைக் கொண்டு வெள்ளத்தினால் மூழ்கடித்தது மழை. தெருவெங்கும் வெள்ளக்
காடு, யாராலும் அகற்றமுடியாச் சங்கிலியாக அவரவர் இருப்பிடங்களிலேயே கட்டிப்
போட்டிருந்தது. வெளியூர்களிலிருந்து தலைநகருக்கு வரமுடியாதபடியும்,
தலைநகரிலிருந்து பிற ஊர்களுக்குத் தப்பிச் செல்லவிடாமலும் மழை எந்தச்
சட்டத்தின் துணையுமின்றி, எந்த இராணுவத்தின் உதவியுமின்றி ஊரை
அடக்கிவைத்திருந்தது. இவ்வாறு ஊரைக் கட்டிப் போட்ட மழை, எதைச் சொல்லிச்
சென்றது?
மண்ணோடு மக்கிப் போகாத மனிதர்களின் அன்றாடப் பாவனைப் பொருட்களான
பிளாஸ்டிக், பொலிதீன் மற்றும் சில குப்பைகள் போன்றவை வீதியோரக்
கால்வாய்களுக்குள் சிக்குண்டு, நீர் வடிந்து செல்லமுடியாதபடியான தடங்கலை
ஏற்படுத்தியிருக்கின்றன. அவை வடிகாலமைப்பைச் சிதைத்து, மழை நீரைத்
தெருவெங்கும் தேக்கிவைத்தன. நாட்டுமக்களுக்குப் போலவே பராமரிப்பும்,
சீர்திருத்தமும் அவற்றுக்கும் தேவையென்பதை மழைவந்து உணர்த்த
வேண்டியிருந்தது.
மழை மிகைத்த நாட்களில் வெயிலின் அருமையும், கோடையின் உக்கிரம் தாக்கும்
காலங்களில் மழையின் அருமையும் எல்லோர்க்கும் விளங்குகின்றன. ஆனால் இன்றைய
காலங்களில் மழையும், வெயிலும் அதனதன் பருவகாலங்களுக்கேற்ப சரியான முறையில்
மாறி மாறி வந்து செல்கின்றனவா? இல்லை. அதன் வருகையில் நாம் இடைஞ்சல்கள்
செய்திருக்கிறோம். பருவகாலங்கள் இளைப்பாறும் இடங்களை நாம்
சேதப்படுத்தியிருக்கிறோம். அவை உரிய காலங்களில் வர முடியாதபடி ஓசோன்
படலத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறோம். ஆகவேதான் அவையும் காலம் தப்பி
வந்து, உலகில் பல அழிவின் தடயங்களை விட்டுச் செல்கின்றன. இன்னும்
அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாதவர்களாகவே நாங்கள் இருக்கிறோம். இனி
அவை ஒவ்வொரு வருடமும் காலம் தப்பி வரக் கூடும். காலம் காலமாகத் தீராத
படிப்பினையொன்றைக் கற்றுத் தரவென, பெரும் அழிவின் தடயங்களை விட்டுச்
செல்லக் கூடும்.
வெறுக்கப்படும் மழைப்பொழுதுகள்
மழை
பிடித்திருந்தது
வேர்த்துப் புழுங்கிச் செத்து
மேற்சட்டை வெதும்பி
முதுகோடு ஒட்டும் கணங்களில்
நிலா மறைத்து
வானிலிருந்து துளித்துளியாய்க்
கீழிறங்கும்
நீர்த்துளிகளைப் பிடித்திருந்தது
நெஞ்சைக் குளிர்விக்கும்
ஈரச்சாரலோடு
நாசியை வருடும்
தூசு மணத்தில்
வினாடி நேரம் நான்
என்னை மறந்ததுமுண்டு
வாய்திறந்து நா காட்டி
மழைத்துளியை உள்வாங்க
மனம் விரும்பிச் சிறுபிள்ளையாய்ச்
செய்து பார்த்ததுமுண்டு
முகாம் கூரை விரிந்து
மழைத்துளி
முக்காடு நனைத்த கதைகளை
சுவர் இடிந்து விழுந்துயிர்கள்
நசுங்கிச் சக்காகிச் சாறாகிப்
பிரிந்த கதைகளை
வெள்ளம்
அழையா விருந்தாளியாய்
வீட்டினுள் புகுந்து
குடியிருந்தவர்களையெல்லாம்
கூரையிலேற்றிக் குடித்தனம் செய்யச்
சொன்ன கதைகளையெல்லாம்
பேசப்பார்க்கக்
கேட்கும் கணங்களிலெல்லாம்
ஏனோ மழையையும்
மழை சார்ந்த எதையுமே
பிடிக்காமல் போகிறது.
|
|