|
வேலை முடிந்து வீடு திரும்பும் வேளையில் மழை இடைமறித்து வாகன நெரிசலில்
தத்தளிக்க செய்திருந்தது. மழையில்லாமலேயே வாகன நெரிசல் இயல்பாய் தோன்றிவிட
மழையின் குறுக்கீடல் இன்னும் அதை உற்சாகமூட்டுவதாய் இருந்தது. இத்தகைய மழை
இடைமறிப்புகளும் தத்தளிப்புகளும் என் அன்றாட தினங்களில் அவ்வப்போது
தலைக்காட்டவே செய்கின்றன. ஆனாலும் அத்தகைய தருணங்கள்தான் மழையை உற்று
நோக்கும் வாய்ப்புகளாய் எனக்கு அமைகின்றன. இல்லாவிடில் மழையை உற்று
நோக்குவதற்கென நேரத்தை ஒதுக்குவது பணிச்சுமைகள் நிரம்பி வழியும்
பொழுதுகளில் இயலாமல் போகின்றது. மழையே அதைப் புரிந்து கொண்டு சரியான தருணம்
பார்த்து இடைமறிப்பது திறமையான செயல் என்றே எண்ண தோன்றுகின்றது.
அத்தருணங்களில் பலரின் திட்டுகளும் ஏச்சுகளும் அதன் காதில் விழாது போலும்.
ஒருவேளை விழுந்தாலும் அதைப்பற்றிய கவலை மழைக்கு இல்லாமலும் இருக்கலாம்.
மழை இயற்கையின் கதாபாத்திரத்தை ஏந்தி இப்பூமியில் வலம்வந்து
கொண்டிருக்கின்றது. கவிதை தொடங்கி திரைப்படம் வரை மழை வந்து போவது தவிர்க்க
இயலாத சூழல்கள். அத்தகைய சூழல்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுவதும்
உண்மை. சிறு வயதில் பள்ளியில் கற்ற பாடல் வரிகள்:
வானம் கறுத்தால் மழை பெய்யும்
மழை பெய்தால் மண் குளிரும்
மண் குளிர்ந்தால் புல் தழைக்கும்
புல் தழைத்தால் பசு மேயும்
பசு மேய்ந்தால் பால் சுரக்கும்
பால் சுரந்தால் கன்று குடிக்கும்
கன்று குடித்து மிஞ்சியதைக்
காப்பியிலிட்டு குடித்திடலாம்’
ஆசிரியர் கற்று தந்த உடனேயே மனதில் எளிதாய் பதிந்து விட்டது. அப்பருவத்தில்
வானம் கறுப்பதைக் கண்டவுடனேயே வாய் முணுமுணுக்கத் தொடங்கிவிடும். இப்போது
முணுமுணுப்பு இல்லாவிட்டாலும் பல பாடல்கள் மழையை நமக்கு நினைவு
படுத்திக்கொண்டே இருக்கின்றன. மழைக்கு நாம் தரும் மதிப்பு அதற்கு
ஏற்புடையதாகவே உள்ளது.
இடம், நேரம், சூழல் என தன் சுயத்தன்மையை மாற்றிக்கொள்ளாத மழையின் மீது
எனக்கும் மிகுந்த மதிப்பும் பிரியமும் உண்டு. சுயத்தன்மையைத் தக்க வைத்துக்
கொள்வது இன்றைய உலக சூழலில் அரிதான ஒன்று. மழையினால் அவ்வாறு செய்ய
இயல்கின்றதே என பல சமயங்களில் வியந்ததுண்டு. மழை நீரால் மனிதமனங்களின்
அழுக்கு நீங்குவதை என் கனவுகளில் மட்டும் கண்டு களிக்கின்றேன். கனவோடு அது
முடிந்த பின்னரும் அதன் குளிர்ச்சியும் செழுமையும் மனதோடு ஒட்டிக்
கொள்கின்றன.
மழையின் சுயத்தை உற்றுப்பார்த்தால் அது வெறும் நீர் என்பதை உணர முடியும்.
ஆனாலும் அதன் மதிப்பு எதனால் என மழைப் பொழுதுகள் சிந்தனையைத் தீண்டி விட்டே
செல்கின்றன.
கண்களுக்கும் அப்பால் இருக்கும் உயரத்திலிருந்து பிறந்து மண்ணைத் தொடும்
பணிவுதான் மழைக்கு மிக பெரிய மதிப்பைத் தருவதாய் என்னுள் எப்போதோ எழுந்த
ஓர் உணர்வு இன்னும் அகலாமல் மனதைத் தழுவி நிற்கின்றது. அது உண்மையாகவும்
இருக்கலாம். கல்வி, அறிவு, பணம், பொருள், செல்வம் பெருக பெருக நம்மிடையே
இருக்கும் கர்வம், ஆணவம், செருக்கு எல்லாமும் குறைந்து கொண்டே போக
வேண்டும். அதை அடிக்கடி ஞாபகப்படுத்துவதை மழை தன்னுடைய கடமையாக கொண்டு
தவறாமல் பொழிந்து வருகின்றதாக நான் எண்ணிக் கொள்வதுண்டு. ஆனால்
அக்கடமையினைப் பலர் புரிந்து கொள்ளவில்லையோ என என் மனதிற்குள் அவ்வப்போது
பெருமூச்சு எழ தருணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
மழைப்பொழுதுகளில் எவ்வித பாராபட்சமின்றி எல்லாவற்றையும் நனைய செய்கின்றன
தூறல்கள். இயற்கையின் ஆசிர்வாதமாய் மழை அனைவரையும் ஆசியோடு அணைக்கின்றது.
இத்தகைய உயர்ந்த பேதமற்ற அன்பை இயற்கையிடம் மட்டுமே காண முடிகின்றது.
மழைக்குப் பகைமை என்பது இல்லை. மழையின் பகைமையற்ற குணத்திற்கு அதன் மாசற்ற
நிறத்தை ஒரு குறீயீடாக கொள்ளலாம். வெள்ளம் சிலரது வாழ்வில் மழையின் மீதான
கோபத்தை உருவாக்கியிருக்கலாம். பல மனித செயல்கள் வெள்ளத்திற்கான காரணிகளாய்
இருக்கும் பட்சத்தில் மழையின் மீது மட்டுமே குற்றம் சுமத்தி வெள்ளத்திற்கான
முழு பொறுப்பையும் மழையே ஏற்பது நியாயமானதாக படவில்லை...
உயிரினங்களின் நீர்த்தேவைக்கு அடித்தளமாகும் மழையின் சிறப்பியல்புகள்
பலவற்றை நாம் மறக்க முயன்றாலும் இயற்கையே நாம் மறக்க இயலாவண்ணம்
இயங்குகின்றது. தொடர்ச்சியாக மழையின்றி அளவு கடந்த உஷ்ணத்தை உடல்
உணரும்பொழுதும் அதனைத் தொடர்ந்து வரும் வியாதிகளும் மழையையும் மழையின்
செம்மையையும் இல்லாத அருமையை நமக்குத் தெளிவுப்படுத்துகின்றன. மழையில்லா
காரணங்களால் காய்கறிகள் விலையேற்றம் அடையும் பொழுதும் மழையின் மகிமை
புலப்படுகின்றது. உஷ்ணத்தைத் தீர்க்கும் மருத்துவராக, பயிரைச்
செழிப்பாக்கும் விவசாயியாக, உணவும் நீரும் அளிக்கும் அட்சய பாத்திரமாய்
பலவித தோற்றங்களில் இயங்கும் மழைக்கு என் அன்பான பாராட்டுகளும் நன்றிகளும்.
|
|