இதழ் 19 - ஜூலை 2010   அட்ரா சக்க... அட்ரா சக்க...
சீ. முத்துசாமி
 
 
 
  நேர்காணல்:

சமூகத்தை நோக்கி நகர்த்தப்படும் எந்த முயற்சியும் வீண் போகாது!
பசுபதி சிதம்பரம்

பத்தி:

அட்ரா சக்க... அட்ரா சக்க...

சீ. முத்துசாமி

(இ)ராவணன் பார்த்த கதை
சு. யுவராஜன்

இயற்கை (4) - மழை
எம். ரிஷான் ஷெரீப்

மழைத்தூறல்கள்
க. ராஜம்ரஞ்சனி

கட்டுரை:

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வேற்று முகம்
நெடுவை தவத்திருமணி

தாண்டவராயன் கதையும் சில கதையாடல்களும்
எச். முஜீப் ரஹ்மான்

திரைவிமர்சனம்:

The Songs Of Sparrows
கிரகம்

சிறுகதை:

குடை
சின்ன‌ப்ப‌ய‌ல்


நடுக்கடலில்...
ராம்ப்ரசாத்

தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...1
எம். ஜி. சுரேஷ்

ப‌ல வேடிக்கை ம‌னித‌ர்க‌ள் போல‌ ...7
ம‌. ந‌வீன்

எனது நங்கூரங்கள் ...12
இளைய அப்துல்லாஹ்

நடந்து வந்த பாதையில் ...7
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...9

ஏ. தேவராஜன்

லதா

ராம்ப்ரசாத்

செல்வராஜ் ஜெகதீசன்

எதிர்வினை:


படைப்புகள் விலைபோகுமோ இல்லையோ நிச்சயம் விமர்சனம் விலைபோகும்
வேலுநாச்சி

சுவைக்குதவாத வெறும் அக்கப்போர்
சுப்பிரமணியன் ரமேஷ்
 
முள் கிரீடச் சுவர்களும் மனம் பிறழ்ந்த மனிதர்களும்
ராக்கியார்
     
     
 

அவன் மனம் நொந்து நூலாகி தனது அறைக்குள் அடைந்து கிடக்கிறான் சில நாட்களாக. தன்னுடைய இந்த அவல நிலைக்கு தனது செயலேதான் காரணம் என்பதை நன்கு உணர்ந்திருந்தும் - அது குறித்து குற்ற உணர்வு ஏதும் இல்லாதவராக வேறு வகையான மன உளைச்சலில் இருந்தார் கோதண்டம் என்கிற கோ.

‘இப்படி முட்டாள்தனமாக மாட்டிக்கொண்டோமே!’ என்கிற சுய பட்சாதாப உணர்வில் தன்னை நொந்தபடி அறைக்குள் உலவிக் கொண்டிருந்தார். அப்போதுதான் அந்த செல்போன் அழைப்பு. “என்ன கோ! ஒன்னோட வெளியூர் பயண ஏற்பாடு எல்லாம் எப்படி இருக்கு?”

“இன்னும் எதுவும் முடிவு பண்ணல குருஜி!”

“அட என்னப்பா நீ! இன்னுமா முடிவு பண்ணல? நானே ஒரு ஏற்பாடு பண்ணி குடுக்கிறேன்... போய்ட்டு வர்றியா? மனசுக்கு ஆறுதலா இருக்கும்பா!”

“சொல்லுங்க குருஜி!”

கோதண்டம் என்ற கோ தனது காதுகளை கூர்மையாக்கினான்.

“அடுத்த மாசம் நம்ம இதய தெய்வம் நடத்தற உலக தமிழர் காது குத்து மாநாட்டுக்கு போக ஏற்பாடு நடக்கிறது தெரியுமில்லை?”

“தெரியும் குருஜி! தெனம் ஒரு அறிக்கையை ஒங்க குடும்ப பத்திரிகையில போட்டு நீங்க பண்ற அமர்க்களத்துல சின்ன புள்ளக்கிகூட தெரியுமே குருஜி. அத பாத்து இந்த நாட்டு தமிழர் சனங்க பூரிச்சு நிக்கறது பார்க்கறப்ப ஒங்க பெரும என்னன்னு ஒங்க எதிரிங்களுக்கும் ரொம்ப நல்லா புரிஞ்சிருக்கும் குருஜி!”

“அதெல்லாம் ஒண்ணும் பெரிய காரியமில்லை கோ! துட்டு பெரளணும்ன்னா நா எத வேணும்ன்னாலும் செய்வேன்! இன்னுமா என்ன புரிஞ்சுக்கல கோதண்டம்?”

“சரி என்னமோ ஏற்பாடு செய்யறதா சொன்னீங்களே அத சொல்லுங்க குருஜி!”

“பெரிய வேல ஒண்ணுமில்லை கோதண்டம்! மாநாட்டுக்கு போற நம்ம ஆளுங்களுக்கு மாநாட்ட ரசித்து பார்த்து சந்தோஷப்பட கொறிக்க நெறய பக்கோடா வேணுன்னு ரொம்ப தொல்ல பண்றாங்க! திருச்சி பக்கோடாதான் பெஸ்ட்’னு சொல்றாங்க! நீ போய் ரெண்டு கொண்டெய்னர் பக்கோடா ஆர்டர் பண்ணிட்டு அப்படியே பத்துநாள் ஓய்வெடுத்துட்டு வந்துடு!”

கோதண்டம் என்ற கோவுக்கு சிறிது நேரம் என்ன சொல்வதென்று தெரியவில்லை. தனது பிசினஸ் விருத்தி சம்பந்தமாக திருச்சிக்குப் போக வேண்டிய வேலை ஒன்று இருப்பதும் அப்போது நினைவுக்கு வந்தது.

“என்ன கோ? என்ன ஆச்சு? பேச்சு காணோம்! செலவ பத்தி யோசிக்கிறாயா? அத பத்தி நீ கவலைப்படாதப்பா! நாம எப்பப்பா நம்ம பணத்தை போட்டு சுற்றுலா போயிருக்கோம்? மாநாட்டு செலவுல இந்த செலவையும் சேத்து நம்ம கவிஞர்கிட்ட சொல்லிட்டா முடிஞ்சு போச்சு. சரிதானே?”

கோதண்டம் என்கிற கோவின் மனம் எம்பிக் குதித்து நடனமாடியது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஓசியில் மன ஆறுதலுக்கான ஓய்வு, பிசினஸ் கொள்முதல் என இரண்டு மாங்காய்கள்.

“சரிங்க குருஜி! நீங்க சொன்னா எல்லாம் சரியாத்தான் இருக்கும்! எப்ப பொறப்படணும் குருஜி?”

உரையாடல் முடிந்து ஒரு வாரத்தில் குருஜி ஓசி டிக்கெட்டை ஏற்பாடு செய்து கோதண்டம் என்கிற கோ வை விமானம் நிலையம் வரை கொண்டு போய் சேர்த்து வழியனுப்பி வைத்தார்.

நேரே திருச்சியில் போய் இறங்கிய கோதண்டம் முதல் வேலையாக முதல் தர பக்கோடா இரண்டு கொண்டெய்னர் ஆர்டர் கொடுத்துவிட்டு ஊட்டிக்குப் போய் தனது மனக் காயம் ஆற பத்து நாள் ஓய்வெடுத்துக் கொண்டார்.

திரும்பும்போது, தனது பிசினஸ் விருத்திக்காக திருச்சியில் அலைந்து திரிந்து வாங்கிய ஒட்டியாணங்களைப் பத்திரமாக தன் இடுப்பில் அணிந்து - சுங்க வரி அதிகாரிகளின் கண்களில் படாமல் வெளியேறி வெற்றிப் புன்னகையோடு வீடு போய் சேர்ந்தார்.

***

உலக தமிழர் காது குத்து மாநாட்டுக்குச் செல்வதற்கான நாள் நெருங்க நெருங்க அதன் மலேசிய ஏஜெண்டான சில்லறை சிங்காரத்திற்கு டென்ஷன் கூடிக்கொண்டே போனது.

அதற்கான முன் தயாரிப்புகள் எல்லாம் திருப்திகரமாக இருப்பதற்கான அனைத்தையும் அவ்வப்போது நினைவுப்படுத்தி செயல்படுத்தினார்.

அவற்றில் சில:-

1. உலகத் தமிழர் காது குத்து மாநாட்டுக்கு தான் அழைத்துப் போகும் ஜென்மங்களுக்கு முதுகெலும்பு என்பது மருந்துக்கும் இருத்தல் ஆகாது என தனக்கு விடுக்கப்பட்டிருந்த கட்டளையை நிவைவேற்ற கோலாலம்பூரிலுள்ள ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் மூன்று நாள் பயிற்சி:

பயணப் பட்டியலில் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு பெற்றவர்களிள் அனைவரையும் ஓர் உடற்பயிற்சி நிபுணரைக் கொண்டு பெண்டு எடுத்து முதுகெலும்புகள் முற்றாக வளைக்கப்பட்டன.

அதன்வழி அங்கு மாநாட்டு மண்டபத்தில் தனது இதய தெய்வத்தை முற்றிலுமாக வளைந்து காலைத் தொட்டுக் கும்பிட்டு ஆசி பெற ஏதுவாக உடல்கள் பக்குவப்படுத்தப்பட்டன.

மேலும் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வழங்குவதற்கு ஏதுவாக உடலைத் தயார்படுத்த ஒரு யோகா மாஸ்டரின் உதவி நாடப்பட்டது. அதன்வழி பக்தர்கள் ஒவ்வொருவரும் நின்ற வாக்கில் தடாலென நெடுஞ்சாண் கிடையாக விழ பக்குவப்பட்டனர்.

இந்தப் பயிற்சிகளில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களும் மிகுந்த ஆர்வத்துடனும் கட்டுப்பாட்டுடனும் தங்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியின் நோக்கம் குறித்தெல்லாம் எவ்வித கேள்வியும் எழுப்பாமல் சிரித்த முகத்துடன் பயிற்சிகளை மேற்கொண்டு தேர்ந்ததைக் கண்ட சில்லறை சிங்காரத்திற்கு மிகுந்த மனத் திருப்தி உண்டானது.

அதிலும் இந்தப் பயணத்திற்கான முதற்கட்ட தேர்விலேயே தான் கவனமுடன் செயல்பட்டதும் இந்த வெற்றிக்கான மூல காரணங்களில் ஒன்று என்பதை அவர் தெளிவாக உணர்ந்திருந்தார்.

அவர்களில் பெரும்பாலோர் ஏற்கனவே பல பொது நிகழ்வுகளில் வெட்கமோ கூச்சமோ அசூசையோ ஏதுமின்றி பிரதான மேடையை ஆக்கிரமித்திருக்கும் பெருந் தலைகளை குஷிப்படுத்தும் ஒரே சோக்கில் அவர்கள் முன் குனிந்தும் நெளிந்தும் வளைந்தும் மண்டியிட்டும் அசடு வழிந்தது நிறைய பயிற்சிகளை மேற்கொண்டு ஓரளவு தங்கள் உடல் அமைப்பை தனது எதிர்பார்ப்புக்கு ஒப்ப தயார் நிலையில் வைத்திருந்ததை அவர் தனது தேர்வின்போது கவனத்தில் கொண்டிருந்தார்.

2. டாக்டரின் ஆலோசனை

இத்தனை தயாரிப்புக்கிடையில் சில்லறை சிங்காரத்திற்கு தனது கணிப்பு சரிதானா என்கிற சிறு ஐயம் தொடர்ந்தபடி இருந்ததால் அவர் ஒரு மருத்துவரை நாடி தனது ஐயப்பாட்டை வெளிப்படுத்தினார்.

‘சார் இவுங்களுக்கு முதுகெலும்பு இருக்கா இல்லியாங்கிறத எப்படி உறுதிப்படுத்தறது சார்? எக்ஸ்ரே ஏதாவது எடுக்கணுமா?'

டாக்டர் இலக்கியப் பரிட்சயம் மிகுந்தவர் இந்நாட்டு தமிழ் இலக்கியத்திற்கு சிறந்த பங்களிப்பு செய்திருப்பவர். மேலும் இந்நாட்டு இலக்கியவாதிகளின் நாடித் துடிப்பை நன்கறிந்தவர்.

‘என்னங்க சிங்காரம்! எதுக்கு எக்ஸ்ரே? இவுங்க தொழில் என்னன்னு சொல்லுங்க. முதுகெலும்பு இருக்க இல்லியான்னு பட்டுன்னு சொல்லிடறேன்!’ சில்லறை சிங்காரம் உள்ளூர சிரித்துக் கொண்டார். டாக்டரின் பேச்சில் எப்பொழுதுமே ஒரு சூட்சுமம் ஒளிந்திருப்பதை அவர் நன்கறிந்தவர்.

‘என்னங்க சார்? எல்லாம் நம்ம ஜாதிதான்! எழுத்தாளர்கள்! கவிஞர்கள்!'

டாக்டரின் முகத்தில் மெலிதான புன்னகை படர்ந்தது. கண்களில் ஒரு குறும்பு. இந்தச் சிரிப்புக்கும் குறும்புக்கும் பின்னே ஒளிந்துள்ள மர்மத்தை இதுவரை எவராலும் முடிச்சவிழ்த்து பார்க்க இயன்றதில்லை. அது அவருடைய விசிட்டிங் கார்ட் என்று சொன்னால் அது மிகையில்லை. மோன லிசாவின் மர்மப் புன்னகைக்கு ஒத்த ஒரு புன்னகை அவருடையது என்பது ஒரு நண்பரின் கணிப்பு.

Confirmed No Backbone! சான்றிதழ் தருகிறேன்! பயன்படுத்திக் கொள்ளுங்கள் சிங்காரம்!

சிங்காரம் நீண்ட நேரம் அசடு வழிந்தபடி டாக்டரைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

என்ன இது, எந்த பரிசோதனையும் செய்யாம இப்படி உறுதியா முதுகெலும்பு இல்லன்னு சொல்றாரு! ஏதாவது ஜோசியம் படிச்ச டாக்டரா இருப்பாரோ! சரி எப்படி இருந்தா என்ன? நம்ம பெருங்கவிஞர் சொரிமுத்து ஐயா சொன்னபடி சர்டிபிகேட் வாங்கிட்டோம் அதுபோதும்!

டாக்டரிடம் விடைபெற்று வெளியே வந்த சில்லறை சிங்காரம் செல்போனை ஆன் செய்து நம்பரை தட்டினார்.

‘ஹலோ வணக்கம் கவிஞர் ஐயா! நீங்க சொன்னபடி டாக்டர்கிட்ட சர்டிபிகேட் வாங்கிட்டேன். சந்தோஷம்தானே?'

‘மிக்க மகிழ்ச்சி ராஜா! தலைவர் உங்களோட கொஞ்சம் பேசணுமாம்! பேசுங்க...’

சில்லறை சிங்காரத்திற்கு உடல் சிலிர்த்து மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன. பக்தி பரவசத்தில் நாக்கு குழறியது. தனது இதய தெய்வம் தன்னிடம் பேச விழைவது தான் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம் என்கிற உணர்வு வெள்ளத்தில் மூழ்கி கண்ணீர் பெரு தெய்வத்தின் குரலைக் கேட்க தயாரானார்.

மறுமுனையிலிருந்து கரகரத்த குரல்.

‘வாடா என் கண்மணி! கடமையே கண்ணாக கண் துஞ்சாது அல்லும் பகலும் பாடுபட்டு என் அகவையான 86 எண்ணை மனதில் இருத்தி 86 கொலு பொம்மைகளை தயார் செய்துவிட்ட வீரத் திலகமடா நீ!'

நீ ஒருவன் போதுமடா கண்மணி! இந்த உலகத் தமிழர் காது குத்து விழாவை உலகமே புகழ கோலாகலமாக நடத்தி முடித்திடுவேனடா, இந்த ஏழைப் பங்ககாளன்!

ஐயன் வள்ளுவனுக்கு அடியேன் தென் குமரியில் சிலையெடுத்தது வீண் போகவில்லையடா என் கண்மணி.

அதனால் அன்றே ஐயனின் அருள்மொழி கடல்வழி கடந்து கடாரம் கண்ட சோழன் கால் பதிந்த மலேசியா என்னும் புண்ணிய பூமியில் விரவிப் படர்ந்து இன்று நமது தலையாய கொள்கையான மானம் ஈனம் சொரணை ஏதுமற்ற தமிழனை உருவாக்கவே முழு நேர பணியாக சிர மேற்கொண்டு கடமையாற்றிடும் இந்த எளியோனுக்குத் துணையாக கடல் கடந்த மண்ணில் அதே நோக்குடன் உழைக்கும் உதயசூரியனாய் உன்னை படைத்திட்டானடா என் செல்வமே!

ஆனால் மனதில் ஒரு பெருங்குறை உண்டடா என் செல்வமே! மலேசிய மண்ணில் பிறப்பெய்திய நீ சற்றொப்ப தள்ளியிருக்கும் இந்தோனேசிய தீவில் பிறந்திருப்பின் பெரியதொரு வரப்பிரசாதமாக அது அமைந்திருக்குடா!

எங்கள் அனல்மின் நிலையங்களுக்கு இப்போது அங்கிருந்துதான் நாங்கள் நிலக்கரிகளை கொள்முதல் செய்வதை நீ அறிந்திருப்பாய் என் அறிவுத் திலகமே! அதில் கமிஷன் என்கிற பெயரில் நாங்கள் அடிக்கும் பல்லாயிரம் கோடி கொள்ளை உனக்கு இந்த ஏழை சொல்லும் புதிய தகவலாக இருக்கலாம்! ஆமாம் என் செல்வமே! அதுதான் உண்மையடா! அதில் சில கோடிகளை உனக்கென ஒதுக்கி இந்நேரம் என் பேரன்களுக்கு நிகரான ஒரு கோடீஸ்வரனாக உன்னை ஆக்கி பார்த்து மகிழ்ந்திருப்பேனடா என் செல்வமே!

அது மட்டுமா? இங்கே எனது மகன்களுக்கும் மகள்களுக்கும் மருமகள்களுக்கும் பேரன்களுக்கும் பேத்திகளுக்கும் நமது அரசுக் கட்டிலிலில் பதவியும் அதிகாரமும் பகிர்ந்து அளிப்பதையே எமது வாழ்நாள் அரசியல் பணியாக சிரமேற்கொண்டு இரவு பகலாக உழைத்து வரும் இந்த ஏழைகளின் பங்காளன் - அங்கே இந்தோனேசிய மண்ணில் அதே போன்றதொரு அரும்பணியை உனக்காக முன்னின்று நடத்தி இருப்பேனடா!

நாம் வழங்கிய கமிஷன் வழி கோடீஸ்வரனாகிவிட்ட உன்னை அங்கு ஆட்சிக் கட்டிலில் தற்போது அமர்ந்திருக்கும் அதிபர் சுசிலோ பம்பாங் (Susilo Bambang) அன்னாருக்கு மருமகனாக்கி அதன்வழி கனிமவள மந்திரி சபையை உன் காலடியில் வளைத்துப்போட்டு அங்குள்ள அனைத்து நிலக்கரி சுரங்கங்களையும் என் குடும்பத்துப் பெயரில் பட்டா எழுதி வாங்கி இருப்பானடா இந்த ஏழைகளின் ஏழை!

என்ன செய்வது என் கண்மணி? இயற்கையின் சதிக்கு நாம் யாரைக் குறை சொல்வது சொல்? நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என நம் ஏழை மனதை தேற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லையே கண்மணி!

என்னடா இவன்? உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என மூச்சுக்கு முந்நூறு முறை மந்திர உச்சாடனம் செய்பவனா இப்படி எல்லாம் பேசுகிறான் என்று நீ அங்கே எண்ணமிடுவது இந்த எளியோனின் பகுத்தறிவில் பட்டொளி வீசி தெரிகிறதடா என் செல்வமே! கேளடா என் பகுத்தறிவு விளக்கத்தை என் கண்மணி.

உண்மையை உடைத்துச் சொல்வதனால் அதுதானடா இந்த ஏழை நடத்தும் பித்தலாட்ட அரசியலின் சூட்சுமம்! இதுதானடா எனது ஆசான் எனக்கு கற்றுத் தந்த பகுத்தறிவுப் பாடம்! உனக்கும் அதனையே சமர்ப்பணம் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறானடா இந்த எளியோன்!

கற்க கசடற கற்றபின் நிற்க அதற்குத் தக என எனது ஐயன் வள்ளுவன் உரைத்ததன் பொருளும் அதுதானடா என் செல்வமே!

எது எப்படியோ கண்மணிச் செல்வமே! இந்த ஏழைகளின் பங்காளன் இந்த நல்ல வேளையில் ஒன்றை மட்டும் எனது இதய தெய்வமான ஐயனின் தலைமேல் கை வைத்து எனது உடன் பிறப்புகளில் ஒன்றாகிவிட்ட இந்த மஞ்சள் துண்டின் மேல் ஆணையிட்டு சொல்கிறேனடா.

வாடா என் கண்மணி! வந்து வெற்றிக் கனியைப் பறித்துச் செல்லடா செல்வமே! 86 கொத்தடிமைகள்! அடடா யாருக்கு கிட்டுமடா இப்படியொரு பாக்கியம்! நீ வரும் நாளில் உள் வருகைக்காக வழிமேல் விழி வைத்து மாநாட்டு பந்தல் வாசலில் கால் கடுக்க ஆள் உயர மாலையோடு காத்திருப்பானடா இந்த தமிழ்த் தியாகி.

என் செல்வமே! ஒரு சிறு வேண்டுகோள் நிறைவேற்றுவாயா?

‘நிச்சயம் நிறைவேற்றுகிறேன். ஆணையிடுங்கள் தலைவா?’

உனக்கென இந்த முறை காஷ்மீரிலிருந்து தனி விமானம் அமர்த்தி தருவித்திருக்கும் அபூர்வ ரோஜா மலர்கள் கனம் மிகுந்தவை. அவற்றை நீ ஒருவனாக சுமப்பது இயலாதடா! எனவே கடந்த முறை உன்னோட மாலையைப் பகிர்ந்துகொண்ட அந்தப் பெரிய வரை மறவாமல் அழைத்து வா! அவர் ஒருவர் போதாது! எனவே இன்னுமொரு படித்த பெரியவர்... பெயரென்னடா செல்வமே?

‘ஹி...ஹி... சபா... சபா...!’

ஆம் செல்வமே! அவரேதான்! உனது கழுத்தில் விழும் மாலைக்கே இவர்கள் இருவருக்கும் பங்கு கொடுத்திடடா என் கண்மணி!

‘ஹி...ஹி...ஹி...ஹி...’

***

காது குத்து மாநாட்டுக்குப் பயணமாகி பக்தகோடிகள் அனைவரும் விமானத்தில் பறந்து கொண்டிருந்தனர். கைகளில் பழரசம். சிறு பொழுதில் தலை கிறுகிறுக்க ஆட்டம் பாட்டம் ஆரம்பமானது.

அதில் ஒருவர் மட்டும் இந்த களேபரத்தில் கலந்து கொள்ளாமல் ஏதோ ஒன்றில் ஆழ்ந்து மூழ்கி இருந்தார்.

அவர் வேறு யாருமில்லை! முன்பே ஒரு முறை பக்கோடா வாங்கி வர காது குத்து மாநாட்டுக்கு ஏற்பாட்டாளர் சில்லறை சிங்காரம் திருச்சிக்கு அனுப்பி வைத்த சாட்சாத் அதே கோதண்டம் என்கிற கோ தான்! அவருக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்து அவரோடு ஏதோ உரையாடி மகிழ்ந்திருப்பவர் நமது சபாதான்!

கோதண்டத்தின் கைகளிலிருந்து ஒரு வாரத்திற்கு முந்தைய மக்கள் ஓசை நாளிதழ். அவரின் கவனத்தை அத்தனை வலிமையாக ஈர்த்திருந்த செய்தி இதுதான்-

மலேசிய தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு சகாப்தம்! முதற்பரிசு சிறுகதைக்கு பரிசு வெள்ளி 10,000.

அதன் கீழ் முக்கியக் குறிப்பு என்கிற இடத்தில் இப்படியொரு வாசகம்:

நாங்கள் நடத்தும் அனைத்து இலக்கியப் போட்டிகளிலும் முதற் பரிசுக்குரியவராக ஏற்கனவே ஒருவரோடு நாங்கள் ஒப்பந்தக் கையெழுத்திட்டுள்ளபடியால் இந்த முறையும் முதற் பரிசு அவருக்குத்தான் என இப்போது தெளிவாக அறிவித்துக் கொள்கிறோம்.

இத்தகையதொரு அறிவிப்பை ஏற்கெனவே நாங்கள் செய்யத் தவறியதன் விளைவாய் கடந்த முறை நாங்கள் அவருக்கு வழங்கிய முதற்பரிசுக்கு தேவையற்ற அநாகரிகமான புண்படுத்தும் வியாக்யானங்கள் முன் வைக்கப்பட்டன.

இந்த அறிவிப்பின் வழி இனி வரும் காலங்களில் அத்தகைய உண்மைக்குப் புறம்பான விஷமத்தனம் நிறைந்த வசைகள் தவிர்க்கப்படும் என எங்கள் காரியக் கமிட்டி உறுதியாக நம்புகிறது.

எனவே இந்த முறையும் 10,000 வெள்ளி பரிசுக்குரிய முதற் பரிசு சிறுகதை அவருடையதுதான் என்பதை எவ்வித ஒளிவு மறைவுமின்றி வெளிப்படையாகவே இந்த அறிக்கையின் வழி இப்போதே தெளிவுபடுத்திவிடுகிறோம்!

செய்தியை முழுமையாக வாசித்து முடித்த கோதண்டம் என்கிற கோவின் கண்களில் புத்தொளி கொஞ்ச காலமாக சஞ்சலத்தில் மிதந்த முகத்தில் இப்போது சந்தோஷக் கணை.

என்ன நினைத்தாரோ தெரியவில்லை. உடலில் உற்சாகமாக வெள்ளம் சீறிப் பாய இருக்கையை விட்டு எம்பிக் குதித்து அட்ரா சக்க... அட்ரா சக்க... என்று குத்தாட்டம் போடத் தொடங்கினார்.

விமானம் குலுங்கியபடி கோவை மாநகர் நோக்கி விரைந்தது!

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768