|
நான்காம்
வகுப்பில் எனக்கு தமிழாசிரியராக இருந்தவர் திரு. சந்தியாகு ஐயா. சிற்றுண்டி
நேரம் முடிந்ததும் எங்களை வகுப்பினுள் அனுமதிக்கும் முன் வரிசையாக நிற்க
சொல்லி நாளும் ஒரு பழமொழி சொல்வார். அப்படி ஒரு நாளில் அவர் சொல்லி
தந்ததுதான் ‘துஷ்டனைக் கண்டால் தூர விலகு’. நான் எப்பொழுதும் ஆசிரியர்
சொற்பேச்சை
அப்படியே ஏற்று நடப்பவன். ஆகையால் துஷ்டர்களை மட்டுமல்லாது, நமக்கு
ஒத்து வராதவர்களோடும் ஒத்துக் கொள்ளாததோடும் நெருங்குவதில்லை.
இப்படிதான் ஒருநாள் மணிரத்னம் எனக்கு ஒத்துக் கொள்ளாதவரானார். அப்போது
‘இருவர்’ படம் வெளியாகியிருந்த நேரம். என் அப்பா தீவிர எம்.ஜி.ஆர் இரசிகர்.
ஆகையால்
கிட்டதட்ட அத்தனை எம்.ஜி.ஆர் படங்களையும் நான் பார்த்திருந்தேன்.
உலகத்திலுள்ள அத்தனை நல்ல பண்புகளின் உறைவிடம் என நான் நம்பி வந்த ஒருவர்
இவ்வளவு
‘மோசமானவரா’ என அறிந்து அதிர்ந்தேன். கலைஞர் தாத்தாவையும் சும்மா சொல்லக்
கூடாது. ஆனால் படம் பிடிக்காமல் போனதற்கு என்னுடைய வெகுளித்தனமே என
கொஞ்சநாளில் புரிந்துக் கொண்டேன்.
இன்னும் கொஞ்ச நாள் கழித்து எனக்கு ‘ஆய்த எழுத்து'ம் பிடிக்காமல் போனது.
இம்முறை என் வெகுளித்தனம் காரணமில்லை. முக்கியமான உலகத்திரைப்படங்களை ஒரு
சுற்று பார்த்திருந்தேன். என்னை மிகவும் பாதித்திருந்த ‘Ameros Perros’
படத்தின் கதை நகரும் விதத்தை மோசமாய் உள்வாங்கி நாராசமாய் வெளித்
தள்ளியிருந்தார்
மணிரத்னம். ‘பாபா’ படத்திற்கு பிறகு பாதியிலேயே நான் பதறியடித்துக் கொண்டு
வெளியே ஓடி வந்த படமாய் ‘ஆய்த எழுத்து’ இருந்தது.
பிறகு திரு. சந்தியாகு அவர்களின் உபதேசத்தைச் சிரமேற்கொண்டேன். தோழி
எவ்வளவு சொல்லியும் ‘குரு’ பார்க்க மறுத்துவிட்டேன். சாரு ரொம்ப நல்ல படம்
என்று
பாராட்டியிருப்பதாகக் கூட தோழி சொன்னார். சாருவை நாம் அறிய மாட்டோமா என்ன?
நிற்க.
நமது முகநூல் (Facebook) நண்பர்கள்தான் மிகவும் ஆர்பாட்டமாக இருந்தார்கள்.
ஆரம்பத்திலேயே வெளியிடப்பட்ட ராவணன் படப்பாடல்களின் இணைப்பை வழங்கி ‘உசுரு
போக’ச் செய்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு இசையைப் பற்றி ஒரு மண்ணும்
கல்லும் தெரியாது. நண்பர் அகிலன் கொஞ்ச காலமாக அமைதியாக இருக்கிறார்.
தமிழ்நாட்டுக்கும் மலேசியாவிற்கும் இடையில் பறந்து கொண்டிருப்பதாகக்
கேள்வி. அவர் நிலத்திற்கு வந்ததும் அவர் பாடல்களைப் பற்றி எழுதுவதைப்
படித்துத் தெரிந்து
கொள்ளவேண்டியதுதான். நிற்க.
முகநூல்
நண்பர் மாமல்லன் கார்த்தி, ‘ராவணன்: கண்ணைக் கட்டி காட்டில் விட்ட கதை’
என்ற தலைப்பில் இப்படம் பற்றி ஒரு குறிப்பு வரைந்திருந்தார். ராவணன் படத்தை
ஜீவனற்ற சவம் எனக் குறிப்பிட்டிருந்தார். அக்குறிப்புக்குக் கிட்டதட்ட 77
பின்னூட்டங்கள். சும்மா சொல்லக் கூடாது. நண்பர்கள் பின்னி எடுத்து
விட்டார்கள். எதற்கும்
கலங்காதவராகக் காட்டிக் கொள்ளும் மணிரத்னம் இதையெல்லாம் படித்தால் ரொம்பக்
கலங்குவார். இதற்கு மேல் எனக்குப் பொறுமையில்லை. படம் பார்க்கச் சென்றேன்
(Reverse Psychology). 25 வருடங்களாக பெரும்பாலும் ஜீவனற்ற சவங்களையே
உருவாக்கி முன்னணி இயக்குநராக இருக்கிறார் என்றால் அதை நாமும் பார்க்க
வேண்டாமோ.
நண்பர்கள் பகிர்ந்துக் கொண்டதென்னவோ பெரும்பாலும் உண்மைதான். பனியும்
குளிரும் ஊறும் காடுகள், அருவிகள், மரங்கள். இறுதி உச்சக்கட்ட காட்சிக்கு
முன்பான
பனிசூழ்ந்த பள்ளதாக்கு காட்சியைக் கண்டபோது எனக்கு அழுகை முட்டிக் கொண்டு
வந்தது. மணிரத்னம் தைரியமாக national geographic நிகழ்ச்சிகளை இயக்கச்
செல்லலாம்.
இப்படத்தின் மிக பெரிய பலவீனம் படத்தில் தெரிந்த பாதாளம் அளவிற்கு உள்ள
ஓட்டையான திரைக்கதையே. கதை இராமாயணத்தை அடியொற்றியதென சொல்லிக்
கொண்டார்கள். முடிந்த வரை மணியும் அதை பின்பற்ற பிரயாசை எடுத்துள்ளார். சில
இடங்களில் மீறியும் உள்ளார், இது ஒன்றும் பாதகமில்லை. இதிகாசங்களை மறு
ஆக்கம் செய்யும்போது தன் சிந்தனைகேற்ப வளைப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதே.
உணவில் சோறுப் போல இருக்கவேண்டிய திரைக்கதை ஊறுகாய் அளவுக் கூட
இல்லாமல் எடுப்பதை என்னால் புரிந்துக் கொள்ளமுடியவில்லை.
ஏற்கெனவே புகழ்பெற்ற படைப்புகளை மறு ஆக்கம் செய்வது மணிரத்னத்திற்கு
ஒன்றும் புதிதல்ல. MBA முடித்தப் பிறகு படங்களை இயக்க வந்தவரின் முதல்
இரண்டு
படங்களைத் தவிர மற்றவை இத்தகைய மறு ஆக்கங்கள் அல்லது சாயல்கள் கொண்டவை
எனலாம். தளபதி மகாபாரதத்தை அடியொற்றி எடுக்கப்பட்டது. அக்கதைப்படி
ரஜினிதான் கர்ணன். ‘தளபதி எங்கள் தளபதி’ என்ற பின்னணி இசையோடு மற்றவர்களை
வாழை மரத்தை சீவுவதுபோல் சீவிக் கொண்டிருப்பார். மகாபாரத கதைப்படி
கர்ணன் சாக வேண்டும். படத்தில் ரஜினி செத்தால் அவருடைய இரசிகர்கள்
தாங்குவார்களா? மணிரத்னத்தின் MBA பட்டம் சரியாக வேலை செய்யும் இடம் இது.
படத்தில் மணியோடு வேலை செய்தவர்களின் பெயர்கள் வெறெந்த இயக்குநர்களையும்
பொறாமை கொள்ள வைக்கும். சந்தோஷ் சிவன், மணிகண்டன், ரஹ்மான், விக்ரம்,
ஐஸ்வர்யா ராய் என்று போகிறது பட்டியல். இருந்தும் என்ன சொல்ல? பாட்டி
அடிக்கடி ஒரு பழமொழி சொல்வார். ‘வித்தக்கள்ளி வீராத்தா விறகொடைக்கப்
போனாளாம்,
கத்தாழ முள்ளு கொத்தோடு குத்திகிச்சாம்’.
கொஞ்சம் அபத்தமாக இருந்தாலும் இங்கே எனக்கு குரோசாவா நினைவிற்கு வருகிறார்.
குரோசாவாவின் பல படங்கள் அளவில் பிரமாண்டமானவைதான். Seven Samurai,
Kagemusha, Ran, Dreams போன்றவை உடனடியாக ஞாபகத்திற்கு வருகின்றன. ஆனால்
அத்தனை பிரமாண்டங்களும் அவருடைய திரைக்கதைக்கு முன்னால் கைக் கட்டிக்
கொண்டுதான் இருக்கும். Kagemusha-வில் எதிர்ப்பக்க அணியினரின்
துப்பாக்கிகளுக்கு, வெறும் கத்தியைத் தூக்கிக் கொண்டு முன்னேறும் தன்
குதிரைப் படைகள்,
துப்பாக்கிக்கு எளிதாக பலியாகி வீழும் காட்சியை அந்த நிழல் அரசனின் கண்களை
காட்டி மட்டும் எடுக்கும் தைரியம் குரோசாவா எனும் கலைஞனுக்கு உண்டு. (நமது
மணிரத்னம், சங்கர் வகையறாக்களை இங்கே வைத்து கொஞ்சம் யோசித்துப்
பாருங்கள்.)
குரோசாவாவின் Ran கூட சேக்ஸ்பியரின் Hamlet நாடகத்தின் பாதிப்பில்
எடுக்கப்பட்டதுதான். அந்நாடகத்தின் ஆன்மாவை உள்வாங்கிக் கொண்டு முழு
ஜப்பானிய படமாக
மாற்றிய குரோசாவாவின் ஆற்றல் பார்ப்பவரை நிச்சயம் பிரமிக்க வைக்கும். Ran
படத்தை மணிரத்னம் நிச்சயம் பார்த்திருப்பார். என்னைவிட இன்னும் ஆழமாக
இப்படத்தை
அவர் உள்வாங்கிக் கூட இருப்பார். இருப்பினும் ஏன் அவரால் ஆன்மாவைத் தொடும்
படங்களை எப்போதுமே எடுக்க முடியவில்லை. அதற்கான பதில் ராவணன்
படத்திலேயே இருந்தது. ‘மேட்டுக்குடிகளுக்கு ஒடுக்கப்பட்டவர்களின் வலியை
எப்போதும் உணர முடியாது’ என்று ஒரு வசனம் வருகிறது. குரோசாவா படம்
எடுக்கும்போது
கலைஞனாக மாறிவிடுகிறார். கலைஞர்களுக்கு ஒடுக்கப்பட்டவர்களின் வலி தெரியும்.
ஒடுக்கப்பட்டவர்களின் வலியை அறிந்தவர்களின் சினிமா நிச்சயம் ஆன்மாவைத்
தொடும்.
மணிரத்னம் MBA பட்டம் பெற்றவராக மட்டுமே இன்னும் இருக்கிறார்.
|
|