|
மதிப்பிற்குரிய முனைவர் ஸ்ரீலட்சுமிக்கு வணக்கம். படைப்புகள் விலைபோகுமோ
இல்லையோ நிச்சயம் விமர்சனம் விலைபோகும். தங்களது சிங்கப்பூர்த் தமிழ்க்
கவிதைச் சூழல் ஆய்வும் அலசலும் அவசியமே. விமர்சனத்திற்கு விமர்சனமோ என்று
கருதிவிட வேண்டாம். அந்த அளவுக்கு விளம்பர உத்தியைக் கையாளும் பக்குவத்தை
இன்னும் நான் கற்றுக்கொள்ளவில்லை.
படைப்பாளி என்பவனுக்கு வாழும் நாட்டின் தேசப்பற்றும் அவசியம்தான். பிறந்த
மண்ணின் பெருமை பேசுவது அவசியமற்றது என்பதன் அவசியம்தான் புரியவில்லை.
அவனால் கடக்கப்பட்ட அவன் கடந்துகொண்டிருக்கும் அனைத்துமே அவனது படைப்பின்
விதையாகத்தான் இருக்கும். அவன் கடக்காத ஒன்றின் தடம் பற்றிக் கூறுவதில்
சற்று தடுமாற்றம் இருக்கலாம். விதை இதுவாகத்தான் இருக்கவேண்டும் என்ற
விதிமுறையை விதித்தும் கட்டுப்படுத்தலாம். படைப்பில் அல்ல. பாடத்தில். ஆல
மரத்திலும் வேம்பு முளைக்கலாம். வேம்பிலும் ஆலம் முளைக்கலாம். இப்படித்தான்
படைப்பாளியும்.
ஒரு காலத்தில் கவிஞன் முளைத்தான்.
கவிதை புனைந்தான்.
அதன் கருத்து
உறங்கியவர்களைத் தட்டியெழுப்பியது.
உதைத்தவர்களைத் தட்டிக்கேட்டது.
அடிமைத்தனம், வேர்விடத்தொடங்கிய மூட நம்பிக்கைகள், கேள்விஞானமற்ற மக்கள்
இப்படி ஆயிரத்தெட்டுக் காரணிகள் இருந்தன. கவிதை எழுதுவதற்கல்ல. கவிதை
எழுவதற்கு. சமூகச் சீரழிவுகளைப் பொறுத்துக்கொள்ள முடியாத வெறி, பொது நலத்தை
முன்னிறுத்திய நல்ல ஆத்மாக்களின் வெறியின் வெளிப்பாடே கவிதையாக எழுந்தன.
விளங்காத மக்களுக்கு அறிவுபுகட்டி விழித்தெழச் செய்யவே கவிஞர்கள்
முளைத்தனர். இன்னொரு பக்கம் கடவுளைப் பகடையாக்கி மக்கள் பலியாக்கப்பட்டனர்
(உயிர்ப் பலியல்ல). அந்த மக்களை மீட்க மீண்டும் கவிஞர்கள் முளைத்தனர்.
ஆனால் அது பலிக்கவில்லை. இன்றோ நாம் ஒருமித்தவர்களாய் கடவுள் பகடையையும்
அதனால் வரும் பலியையும் ஏற்றுக்கொண்ட உத்தமர்களாகி விட்டோம். இன்றைக்குக்
கவிஞனுக்கு வேலையில்லை. இன்றைக்குக் கவிதைக்கும் வேலையில்லை.
கவிதைகள் காலமாகிப்போனாலும் நமக்கு கவிஞனாக ஆசை. என்ன செய்வது? அதனால்தான்
இப்படியெல்லாம்... கவிஞர்களாக நாமே நம்மை அடையாளம் கண்டு பறை
சாற்றிக்கொள்கிறோம்.
ஏற்கப்படும்வரை பல்லவி பாடவும் தொடங்கி விடுகிறோம். நானா நீயா அவனா என்று
அதற்கும் பல போட்டிகள். பொறாமைகள், ஆயிரத்தெட்டுப் பிரிவுகள். துப்பாக்கி
மட்டும் தூக்கவில்லை. பதிலாக எழுதுகோல் பிடிக்கிறோம். குண்டுகளைக்
கக்குவதற்குப் பதில் கொடுந்திராவக மையால் எழுத்துப் பரிமாற்றம்
செய்துகொள்கிறோம். அடடா என்ன அற்புதம்? எல்லாம் அவன் படைப்பு.
அந்தப் பல்லவிகளுக்கு ஆயிரத்தெட்டு ஆய்வுகளும் அலசல்களும் நிச்சயம்
அவசியம்தான். கவிதைகள் காலஞ்சென்றாலும் கவிஞர்களாவது வாழட்டும்.
|
|