இதழ் 19 - ஜூலை 2010   எதிர்வினை : சுவைக்குதவாத வெறும் அக்கப்போர்
சுப்பிரமணியன் ரமேஷ்
 
 
 
  நேர்காணல்:

சமூகத்தை நோக்கி நகர்த்தப்படும் எந்த முயற்சியும் வீண் போகாது!
பசுபதி சிதம்பரம்

பத்தி:

அட்ரா சக்க... அட்ரா சக்க...

சீ. முத்துசாமி

(இ)ராவணன் பார்த்த கதை
சு. யுவராஜன்

இயற்கை (4) - மழை
எம். ரிஷான் ஷெரீப்

மழைத்தூறல்கள்
க. ராஜம்ரஞ்சனி

கட்டுரை:

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வேற்று முகம்
நெடுவை தவத்திருமணி

தாண்டவராயன் கதையும் சில கதையாடல்களும்
எச். முஜீப் ரஹ்மான்

திரைவிமர்சனம்:

The Songs Of Sparrows
கிரகம்

சிறுகதை:

குடை
சின்ன‌ப்ப‌ய‌ல்


நடுக்கடலில்...
ராம்ப்ரசாத்

தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...1
எம். ஜி. சுரேஷ்

ப‌ல வேடிக்கை ம‌னித‌ர்க‌ள் போல‌ ...7
ம‌. ந‌வீன்

எனது நங்கூரங்கள் ...12
இளைய அப்துல்லாஹ்

நடந்து வந்த பாதையில் ...7
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...9

ஏ. தேவராஜன்

லதா

ராம்ப்ரசாத்

செல்வராஜ் ஜெகதீசன்

எதிர்வினை:


படைப்புகள் விலைபோகுமோ இல்லையோ நிச்சயம் விமர்சனம் விலைபோகும்
வேலுநாச்சி

சுவைக்குதவாத வெறும் அக்கப்போர்
சுப்பிரமணியன் ரமேஷ்
 
முள் கிரீடச் சுவர்களும் மனம் பிறழ்ந்த மனிதர்களும்
ராக்கியார்
     
     
 

பகுதி 1:

வல்லினம் இதழ் பதினெட்டில் (ஜூன் 2010) ‘முனைவர்’ - திருமதி ஸ்ரீலஷ்மி எழுதிய அக்கப் போரைப் படித்தேன். சிரித்து மாளவில்லை. சிறந்த நகைச்சுவைக் கட்டுரை. வல்லினம் ரொம்ப சீரியஸான இதழ் என்றல்லவா நினைத்துக்கொண்டிருக்கிறேன்! கிளி ஜோசியப் பகுதியை ஆரம்பிப்பதாக எந்த அறிகுறியும் இல்லாமலே வல்லினம், ‘கிளி ஜோசியப் பகுதியை’ ஆரம்பித்து சிங்கப்பூரின் கவிதைகளைக் குறித்து ‘ஆரூடத்தை’ சொல்லியிருக்கிறதே!

ஆராய்ச்சிக் கட்டுரையாதலால் மிகத் தீவிரமான ஆராய்ச்சியில் விஞ்ஞானிகளை மிஞ்சிய கண்டு பிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறார். நான் பிரபல எழுத்தாளர்களுடன் எடுத்து இணையத்தில் வெளியிட்டுக் கொண்ட புகைப்படங்களின் தரவுகளை அனுப்பி வைத்தால் நானும் பார்க்கலாமல்லவா. புகழ் விரும்பியான நான் வெளியிட்டுக்கொண்ட புத்தகத்திலும், வலைப்பூக்களிலும் தேடிப்பார்த்தும் என் புகைப்படம் எனக்குக் கிட்டவில்லை. அடுத்த புத்தக சந்தைக்கு வரும்போது முன் கூட்டிச் சொன்னால் அகில உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர், விமர்சகர், ‘முனைவர்’ ஸ்ரீலஷ்மியுடன் புகைப்படம் எடுத்து அதன் மூலம் புகழடைய முயற்சிக்கிறேன். முன்பு தமிழ் நாட்டில் நிகழ்ந்த உங்களின் ஒரு விழாவிற்கு வர முடியாமல் போனதால் உங்களின் கோபத்திற்கு ஆளானதைப் போன்று இம்முறை நிகழாதென உறுதி கூறுகிறேன். மின்னஞ்சல்களையும் உடனுக்குடன் பார்க்கும் நல்வழக்கத்தை முயற்சித்தேனும் கற்றுக்கொள்கிறேன்.

படைப்பாளிக்கு அவன் படைப்பே முகவிலாசம் என்று நினைத்திருக்கும் என்போன்ற அப்பிராணிகளைத் திருத்தி நல்வழிப்படுத்தும் மூத்த வழிகாட்டிக்கு வணக்கம்! பொருள் சேர்ந்ததும் ஓடி விட்டதாக அடுத்த கிசுகிசு. ஒரு இலக்கியக் கட்டுரையை இதுபோன்ற அவசியத் தகவல்களால் நிறைப்பது உங்களின் பின் நவீனத்துவமாக்கும். எண்பது வயதான இதய நோயாளியான அப்பா, புற்றுநோய்க்குச் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் அம்மாவிற்கும் ஒரே பையனான என்னுடைய கடமைகளைப் பற்றியும் முனைவர் எனக்கு விளக்கிக் கூறுமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். சிங்கப்பூரின் நிரந்தரவாசியான என் வேலைக்கு உத்திரவாதம் அளித்து, என்னை சிங்கப்பூர் குடிமகனாக்கவும் உதவ முனைவர் காத்துக் கொண்டிருப்பது குறித்து சந்தோஷம்! உடனடியாக வாங்கித் தந்தால் என்றும் நன்றியுடையவனாக இருப்பதுடன், அவர் சொன்ன தலைப்புகளில் தளை தட்டாமல், இலக்கணப் பிழையின்றிக் கவிதைகளை எழுதி புகைப்படத்துடன் அனுப்பிப் பிரசுரித்து, குருவின் புகழை நிலை நாட்டுவேன் என்று சூளுரைக்கிறேன்! (விக்ரமாதித்தியன் மகனின் கடமைகளைப் பற்றி ஏதும் சொல்லியிருக்க மாட்டாரென நம்புகிறேன்) அண்ணாச்சி விக்ரமாதித்தியன் சொல்லியிருக்கும் ‘கலை அழகியலை' அணுகும் போதனா பொறுப்புணர்வைப் பற்றி அறிய முயற்சிப்பதைவிட, தகவல்களைத் தொகுத்து இன்னொரு முனைவர் பட்டம் பெறுவது எளிது என்பதை அவரைக் கேட்டால் சொல்லி விடுவார். கவிதைகளை எழுதுவது எளிதோ எளிதானதால், முனைவர் கவிதைகளை எழுதுவது சிறந்த சமூக சேவையாகும். சிங்கப்பூர் பள்ளிச் சிறார்களின் மன அழுத்தத்தை கவனத்தில் கொண்டால் பாப்பா பாடல்களும், கிளிப்பாட்டுகளும் மிக முக்கிய தேவை.

பகுதி 2:

அக்கப்போர்

விமர்சனக் கட்டுரை என்று கூறிக்கொள்ளும் கட்டுரையில் விமர்சனம் செய்ய எந்தெந்த வரையறைகளைக் கொண்டார்? எந்தெந்த கவிஞர்களை கணக்கில் கொண்டார்? கொள்வதற்கும் தள்ளுவதற்குமான அடிப்படைக் காரணிகள் என்ன? புலம் பெயர்ந்தோர், உள்ளூர்காரர் என்பது மட்டுமே காரணியானால்தான் எந்தெந்த உள்ளூர்க் கவிஞர்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டார்? புலம்பெயர்ந்தோரை எப்படி வரையறுக்கிறார்? முன்பிலிருந்தே கவிதை ஆக்கிக்கொண்டிருக்கும் பழம் கவிஞர்கள் தொண்ணூறுக்குப் பிறகும் எழுதிக் கொண்டிருந்தால் அவர்களும் கவனிப்புக்குள்ளானார்களா? கவிதை, நல்ல கவிதை என்பதற்கான வரையறை என்ன? சிங்கப்பூரின் ஆன்மசாரமாக இவர் கண்டடைந்ததென்ன, அதை வெற்றிகரமாக கைக்கொண்ட சிங்கப்பூர் படைப்பாளிகள் யாவர்?

நான் பாஷோ, பூஷன், கபீர், மிளரிபா, ஆண்டாள் இவர்களின் வரிசையில் சுந்தரராமசாமி, சுகுமாறன், சேரன், கலாப்பிரியா இவர்களையும், இன்னபிற கவிஞர்கள் அனைவரையும் ஒரே வரிசையில் வைத்து ஒரே அளவு கோலைப் பயன்படுத்தி மதிப்பிட முடியுமானால் என் கவிதை அழகியலையும், கவிதைகளை நான் புரிந்து கொள்ளும் விதம் பற்றியும் உங்களின் மதிப்பீடு என்ன? சிங்கப்பூரின் மூத்த கவிஞர்கள் திரு. க.து.மு. இக்பால் அவர்களின் கவிதைகளையும், திரு. இளங்கோவனின் கவிதைகளையும், திரு. பிச்சினிக்காடு இளங்கோவின் கவிதைகளையும் எப்படி மதிப்பிடுவீர்கள் என்பதை விளக்குவீர்களா? உங்களின் பார்வையில் இந்திரஜித்தை வந்தேறி எனக் கொள்வதாக வைத்துக் கொள்கிறேன் - (அவரை பரிசு பெற்ற வெளிநாட்டினராக இணைத்திருப்பதினால்) அப்படியானால் ரே. பாண்டியன் அப்படியில்லையா? சரி இவர்கள் இன்னமும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களின் இடமென்ன விளக்குங்களேன்.

என்னைப் பொறுத்த வரை வேலைக்கு வந்தவரை வேலை மட்டுமே செய்ய வேண்டுமென நினைப்பது, மனிதர்களைக் கருவிகளாகச் சிறுமைப்படுத்துவது, நிலப்பிரபுத்துவ காலத்திய மேட்டிமை மனோபாவம், இதுதான் கட்டுரையாளரின் அளவு கோலா? அல்லது மனிதர்களைப் பிரித்து அதன் அடிப்படையில் படைப்புகளை நிராகரிப்பதென்பது பாசிஸ அணுகுமுறை கொண்டது இதுதான் கட்டுரையாளரின் நோக்கமா? இவை சிங்கப்பூரின் இறையாண்மைக்கு எதிரானதல்லவா?

***

சிங்கப்பூருக்கு வருவதற்கு முந்தைய ஆண்டுகளில் எழுதப்பட்ட கவிதைகளில் சிங்கப்பூர் வாழ்வனுபவத்தைத் தேடினால் எப்படி கிடைக்கும். கடைசி கொஞ்சம் கவிதைகள் சிங்கப்பூரின் அனுபவப் பின்னணி கொண்டவை உதாரணமாக, எளிமையான வார்த்தைகளில் எழுதப்பட்ட ஒரு கவிதை:

ஏக்கம்

அதிவேக ரயில் பிடிக்க
ஈசலென மோதிப் போகிறீர்கள்
‘வருத்தங்களும் மன்னியுங்களும்
புறத்தே உருக்கொண்டு புறத்திலே மரித்து விழ
மின் தூக்கியில் அருகாண்மை
துருத்தி வெளித்தள்ள முயலும் அமைதி
பயத்தின் விரல்கள் பதறிட
நாற்புறமும் சுவரைச் சுரண்டும் விழிகள்
உணவு விடுதியில்
எதிர் ஆளாய் அமர நேரிட்டால்
மலரக் கூசி
கையடக்கத் தொலைபேசியில்
கதைக்கத் துவங்குகிறீர்கள்...
கரிசனத்தை இழந்து வாழ்வில்
அர்த்தமுள்ளதாய் எதையெல்லாம் பெறுவீர்கள்
புன்னகைக்கும் முகம் பார்க்க ஏங்கும்
என்னை என்ன செய்ய உதேசித்திருக்கிறீர்கள்.

இந்தக் கவிதை சிங்கப்பூரருக்கு பொருள் தருமா அல்லது தமிழ் நாட்டின் ஒரு குக்கிராமத்தில் வசிப்போருக்கா? (நல்ல தமிழில் எழுதப்பட்டிருப்பதாலேயே தமிழ் நாட்டு வாசகருக்கு அன்னியமாகப் பட வாய்ப்புண்டு. ‘lift’ஐ - லிப்ட் என்று எழுதினால் அவர் இன்னமும் நெருக்கமாக உணர்வார்!)

சிறுகதைக்கான முதல் பரிசாக ‘தங்கமுனைப் பேனா‘ விருது பெற்ற செய்தி புகைப்படங்களுடன் வெளியான நாளில் எழுதிய மற்றொரு கவிதை, சித்திரம் கறையும் வெளி தொகுப்பிலிருந்து:

உயிர்த்துடிப்பான புன்னகைக்கான
நற்சான்று பத்திரத்துடன்
காட்சிப் படுத்தப்பட்டு
தொங்கிக்கொண்டிருந்தன
ஐந்துப் பிணங்கள்
நிரந்தர இளிப்புடன்
மேடையின் விளக்கொளிக்கு
மேல் நோக்கிச் செருகின விழிகள்
போதை கொள்வதான தோற்றத்தில்
தங்க முனை ஆணிகளால்
அறையப்பட்டு
பைண்டு செய்த சவப்பெட்டிகளில்
நிரந்தரம் பெற
நாறி முடையெடுத்த புண்களுடன்
இறக்க ஓயாமல் ஆசைகொண்டு
ஜடங்கள்
சில்லிடும் காற்று கதவையும்
கதவு சமவெளிக்கான பாதையையும்
உணர்த்திக் கொண்டு
இன்னமும் அங்கே.

தலித்துகளின் இலக்கியத்தை தலித்துகள்தான் எழுதவேண்டுமென சொல்வதில் ஓரளவிற்கு உண்மையிருக்கிறது, (இலக்கிய அரசியலும் இருக்கிறது, அதன் மூலம் சமூக விழிப்புணர்வும் அவர்களின் நோக்கம்) ஏனெனில் அது பிரச்னைகளில் நேர்மையற்ற தன்மையை விலக்கவும், மேலோட்டமான போக்கினால் திசை திரும்பாமலிருக்கவும் பயன்படும் என்பதினால், மற்றவர்கள் முயற்சித்துப் பார்க்கலாம். ஆனால் தலித்தோ தலித்தில்லையோ நேர்மையான இலக்கியமே முன்னிருக்கும் சவால், காலமே அதன் கட்டளைக் கல். சிங்கப்பூரரின் பிரச்னைகளும், புலம் பெயர்ந்தோரின் பிரச்னைகளும் வேறு வேறானவை. ஒன்றுக்கொன்று எதிரானவையா என்பதை மேலோட்டமான ஆராய்ச்சியில் முடிவு செய்துவிட இயலாது. சிங்கப்பூரின் கதையை சிங்கப்பூரர்கள் எழுதிட முன் வருவதன் மூலமாகவே நிரப்ப இயலும். அதற்கான சூழலை உருவாக்குவதே ஆக்கப்பூர்வமான பணியாக இருக்கும். அதை நேர்மையான அணுகுமுறையின் மூலம் நிகழ்த்தலாம் என்பது என் எண்ணம். ஒரு விளக்கின் மூலம் பல விளக்குகளை ஏற்றுவது போல.

சிங்கப்பூர் இலக்கியத்தில் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை கவிதையில்தான் நிகழ்த்த வேண்டுமென்பதில்லை. இன்றைய சூழலில் இளையோர்களிடம் தமிழ் பரவ வேண்டுமானால் தமிழைப் புனிதப் பசுவாகக் கருதும் சூழலை விடுத்து அதை சிங்கப்பூரின் கலாச்சார சூழலுக்கேற்ப மாற்றிக் கொள்வதிலும், இடையறாது மரபினை மறுபரிசீலனை செய்து, கொள்ளத் தக்கவைகளை மட்டுமே கொண்டு தள்ளத் தக்க சுமைகளை தள்ள வேண்டும். சிங்கப்பூரின் பிரச்னைகளும், சூழலும், தமிழ்நாட்டின் பிரச்னைகளிலிருந்து மாறுபட்டது. தமிழ் நாட்டின் இலக்கிய அளவீடு, சிங்கப்பூரின் இலக்கியத்திற்கு அளவீடாகாது. உலகமயமாக்கலின் விளைவாக சிங்கப்பூரை ஒத்த ஒரு பெரு நகரத்தில் வாழும் மனிதனின், சமூகத்தின், பிரச்னைகள் வரும் ஆண்டுகளில் தமிழ் நாட்டின் பிரச்னைகள் ஆகும் பட்சத்தில், சிங்கப்பூரின் இலக்கியம் தமிழ் நாட்டிலும் பொருள்படக் கூடும். ஆனால் அத்தகைய இலக்கியங்கள் இதுவரை சிங்கப்பூரில் தோன்றவில்லை, என்பது மட்டுமல்ல இலக்கிய போலிகளால் உண்மையான சிறு முயற்சிகளும் தனிமை படுத்தப்படுகின்றன. எனவே மீட்சி இளையோர்களின் பங்களிப்பிலிருக்கிறது. அதற்கு அவர்களின் உலகினை நாம் மேலிருந்து பார்க்கும் மேட்டிமைத்தனத்தை ஒழித்து, அவர்களின் உலகினை விமர்சனங்களின்றி அங்கீகரிப்பதிலும், அவர்களின் உலகிற்கான மொழியாக தமிழ் தன்னைப் புதுப்பித்துக் கொள்வதிலும், (அவர்களுடனான தொடர்ந்த உரையாடலிலும் மூலம்) இருக்கிறது. தாகம் கொண்ட வாசகனுக்குத் தமிழின் வளங்களும், பொக்கிஷங்களும் தானாகவே அறிமுகமாகும். வாசகர் வட்டம் மூலமாக நவீன இலக்கியம் இளைஞர்களை அடையவும், நேற்றிருந்தோம் மூலமாக வேகமாக அழிந்து கொண்டிருக்கும் நேற்றைய சிங்கப்பூர் வாழ்க்கையை இளையோருக்கு அறிமுகப்படுத்தவும் விழைந்தோம். (இவற்றை ஆவணமாக்கி, ஆவணக்காப்பகத்திலும், புத்தகங்களாகவும் கொண்டு வருவது இப்போதைய சூழலில் இயலக் கூடியது.) ஆனால் இவை இளையோரின் கவனத்தை கவரும் வலிமையற்றும், ஆர்வத்தை தூண்ட இயலாததாகவும் இருக்கின்றன. இளையோர்களை அழைத்து வருவதில் தோல்வி ஏற்பட்ட பின்னர், அவர்களின் இடத்திற்கு நாங்கள் செல்ல முயற்சித்தோம். ரே. பாண்டியன் ஒரு ‘நவீன கவிதையை புரிந்து கொள்வது’ குறித்த ஒரு பயிலரங்கினை உயர்நிலைப் பள்ளியில் நிகழ்த்தினார். மாணவர்களுக்கும், எங்களுக்கும் பல திறப்புகளை நிகழ்த்தும் சாத்தியங்கள் கொண்டதாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக எங்களின் வேலை சூழலில் அவை கோரும் உழைப்பினை எங்களால் தர இயலாமல் போய்விட்டது. புதிய புத்தகங்கள், பத்திரிகைகள், மங்கா கார்ட்டூன்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வலைப்பூக்கள், வலைமணைகள், நூலகங்கள், விளையாட்டுகள், கணினி விளையாட்டுகள், மொழி பெயர்ப்புகள், பள்ளியில் - பாட திட்டங்களில் நேரம் ஒதுக்குதல் இப்படி அனைத்து சாத்தியங்களின் ஊடாக மரபினை அறிமுகப்படுத்துவதையும், மொழியின் சாத்தியங்களை நவீன வாழ்வின் வெளிப்பாட்டுக்கு சாத்தியப்படுத்தலையும் முயன்று பார்க்கலாம்.

பகுதி 3:

போர்? அல்லது Bore!

விழிப்போடு வாழும் ஒவ்வொரு கணமும், நேர்மையான செயல்களையும் எதிர்வினைகளையும் கோரும் அது சமூகக் கோட்பாடுகள் மட்டுமல்ல. சமூகம் வேண்டுவது செயல்படத் தோதான சார்பியல் உண்மைகள். அவை ஒரு புகைப்படம் போன்றவை. கலை தேடுவது மாறிக்கொண்டேயிருப்பதாகத் தோற்றம் கொள்ளும் மாறா உண்மை. அதை தர்மம் என்றோ, அறம் என்றோ .....? என்றோ, விழிப்புணர்வென்றோ அழைத்துக் கொள்ளலாம். (வார்த்தைகள் உடனடியாக லேபிள்களை அழைத்து வந்துவிடும் என்பது மிகப் பெரிய சங்கடம். மிக மலிவாக சமூகத்தில் கிடைப்பது லேபிள்கள்தான். எஸ்ரா பவுண்டாகட்டும், ஏசுவாகட்டும், அடிப்படை உண்மைகளை பேச விழையும் எவரும், சமூகத்தின் மனசாட்சியாய் மாறும் எவருக்கும் எளிதில் துரோகி பட்டம் கிட்டுவதும், அவர் தனிமைப்படுத்தப்படுவதும் மிக இயல்பானது.) உண்மையில் கலைக்குக் கோடுகள் கிடையாது. தேசமோ, மொழியோ வேறெந்த சமூக விழுமியங்களோ கிடையாது. மாறிக்கொண்டே இருப்பதின் மூலமாக எதிரான நிலைகளிலும் தோற்றம் கொள்ள நேர்வதினால் தனக்குள்ளேயே முரண்படக்கூடியதாகத் தோற்றமும் கொள்ளக்கூடியது. ஒரு படைப்பாளி கலைஞனாய் இருந்தால் அவன் சிங்கப்பூரியனும் அல்ல, இந்தியனோ வேறு எந்த நாட்டினனோ அல்ல மனிதன். அவன் வந்தேறியின் துயரத்தையும் படைபாக்குவான், வந்தேறிகளால் வஞ்சிக்கப்படும் உள்ளூர்காரனையும் படைப்பாக்குவான். இன்னும் சொல்லப்போனால் அவன் மனிதன் கூட அல்ல. ஓர் உயிர். (வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் நானும் வாடினேன் - வள்ளலார்) தான் விழிப்புடன் இருக்கிறோமா? தன் படைப்பு, ‘தன் தர்மத்திற்கு’ நேர்மையோடு இருக்கிறோமா? என்பதை ஒரு படைப்பாளி மட்டுமே நேர்மையுடன் பரிசீலிக்க இயலும் என நான் நம்புகிறேன். நுண் வார்த்தைகள் வார்த்தைகளற்ற எண்ணங்களுக்கு நம் விழிப்புணர்வை விசாலப்படுத்தும், ஆனால் எண்ணமற்ற நிலைக்கு வார்த்தைகளை உபயோகிப்பது குறித்து எனக்கு ஐயப்பாடுகள் உண்டு என்பதினாலேயே நான் நிறைய எழுத முயற்சிப்பதில்லை. அதன் காரணமாகவே இதுபோன்ற விமர்சனங்களின் உண்மையான பயன் குறித்தும் எனக்கு ஐயப்பாடுகள் உண்டு. இலக்கிய அரசியலற்ற நேர்மையான விமர்சனங்களும் கூட புதிய சமூக விழுமியங்களை உருவாக்க மட்டும் பயன்படும். ஆனால் அவையும் புகைப்படங்களே, புகைப்படங்களுடன் எப்படி வாழ்க்கை நடத்துவது என்பதே என் நிலைப்பாடு. இந்நிலையில் இலக்கியம் ஒரு நேர்மையான விளையாட்டாக மட்டுமே என்னால் தக்க வைத்துக்கொள்ள முடிகிறது. அதை ‘லீலா‘ என அழைத்தால் வலுவான பொருள் நிறைந்த செயலாக தோற்றம் கொள்கிறது. எப்படி ஆயினும் அது அதுவேதான். எனவே இலக்கியக் கொள்கைகளைத் தேடுபவர்கள் என் கவிதைகளுக்கு அருகே வராதீர்கள்.

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768