|
மா. சண்முகசிவா அவர்களுக்கு, தங்களின் முள் கிரீடச் சுவர்களும் மனம்
பிறழ்ந்த மனிதர்களும் படித்தேன்.
சமூகத்தில் மாற்றம் வேண்டி உங்களின் மன்றாடல் மனதை வருடுகிறது.
உங்களுக்குத் தெரியும்; என்ன நோய்க்கு என்ன மருந்து கொடுப்பது என்று.
நீங்கள் தேர்ச்சி பெற்ற மருத்துவராக இருப்பதால். ஆனால், எல்லா
மருத்துவர்களுக்கும் இந்த விடயம் பொருந்தாது (என்ன சொல்ல வருகிறேன் என்று
உங்களுக்குப் புரியும்). அதுபோலத்தான், இந்த சமூக மாற்றம் + சமுதாய
முன்னேற்றம் என்றெல்லாம் கதைகதையாய் கதைக்கும் பெருவாரியான சிந்தனை
(மன்னிக்கவும்) உற்பத்தியானவர்களுக்கு சமூகத்தில் மாற்றம்
வந்துவிட்டால் பிழைப்பே போய்விடும் என்பதில் கவனமாக காய்களை
நகர்த்துவார்கள். பத்திரிகைகளில் நன்கொடையாக நூறு வெள்ளிக்கும் ஐம்பது
வெள்ளிக்கும் முகம்காட்டி படம் போட்டு காட்டும் போலி வேடதாரிகள்
பெருகிவிட்ட இந்தநாளில் இந்த சமூகத்தில் மாற்றம்வேண்டி உண்மையாக உழைக்கும்
பல நல்ல மனிதர்கள்கூட இவர்களால் மிதிபட்டுத்தான் போகிறார்கள். அவர்கள்
நடத்தும் அத்தனை காரியங்களிலும் தங்களின் சுயநலம் பாதிப்புக்குள்
சிக்கிக்கொள்ளாதபடி பார்த்துக்கொள்வார்கள்.
இவைபோன்ற விடயங்கள் உலகிலுள்ள
எல்லா இன + மதம் சார்ந்த மனிதர்களிடமும் இருக்கத்தான் செய்கின்றன. இதில்
அதிகமாய் ஆளுமை செய்வது நம் சமூகத்தில்தான். மற்ற இனங்களின் அல்லது
மதத்தார்களின் போராட்டங்களை தமிழனுக்கு மதிக்கத் தெரிகிறது. ஆனால், தமிழனை
மதிக்கத்தான் எவனுக்கும் தெரியவில்லை. இந்தக் கேவலமான நிலைமைக்கு
அடிப்படைக்காரணம் நமக்கென்று நாம் எதையுமே நிர்ணயித்துக்கொள்ளவில்லை.
அல்லது நிர்ணயித்துக்கொள்ள மறுதலிக்கிறோம்.
நமக்கென்று ஒரு மொழில்லையா? சமயமில்லையா? வழிபாடுகள் இல்லையா? இலக்கியங்கள்
இல்லையா? வாழ்க்கை நெறிமுறைகள் இல்லையா? நம்மை நாம் அடையாளப்படுத்திக்கொள்ள
நல்ல தமிழ்ப்பெயர்கள்தான் இல்லையா. எல்லாவற்றையும் தூர எறிந்துவிட்டு
தனக்கென்று ஒரு தேசம்கூட இல்லாமல் உண்மையில் பிச்சை
எடுத்துக்கொண்டிருக்கின்றோம். நாம் நம்முடைய அடையாளத்தை இழந்து வெகு
தொலைவுக்குள் வந்துவிட்டோம்.
நமது சமூகத்தில் கரையான்போல் அரித்துக்கொண்டேபோகும் இந்த அவலங்களுக்கு யார்
பொறுப்பை சுமக்கப்போகிறவர். பட்டிமன்றங்களில் கலந்துகொண்டு கைதட்டிப்
பழகிப்போன நம்மவர்களுக்கு பட்டிதொட்டிகளைப்பற்றி கவலைப்பட நேரம்
கிடைக்காது. அதையும் பட்டிமன்றத்தில் விவாதித்தால் அதற்கும்
கைதட்டுவார்கள்.
"உருவாகிவரும் கணங்களில் நிகழ்ந்து (ஒவ்வொரு நொடியிலும் நிகழ்ந்து)
கொண்டிருக்கும் பிறழ்வுகளால்தானே 'மனம்' வளராமல், மலராமல், எங்கோ
நிலைகுத்திவிடுகிறது. அஃது உருவாக்கிய பாதுகாப்பின்மையும் நம்பிக்கை
வறட்சியும்தானே மதிப்பீடுகளைப் கலைத்துப் போடுகின்றன" என்ற உங்கள் மன
நியாயம் மலரவேண்டுமானால் ஒலி + ஒளி + செய்தி நாளிதழ் + நம்மவர்களை
ஏமாற்றும் மேடைப்பேச்சாளர்கள் + கலாச்சார சீரழிப்பாளர்களை
புறந்தள்ளவேண்டும். முடியுமா நம்மால்? முடியும் என்றால் முடியும்.
உங்கள் கூற்றுப்படி 'குற்றங்களை சமூகம் தயாரிக்கின்றது; அவற்றைக்
குற்றவாளிகள் செய்து முடிக்கின்றார்கள்' என்று சொன்னது சரியென்றே
தோன்றுகிறது.
|
|