இதழ் 19 - ஜூலை 2010   நேர்காணல் : சமூகத்தை நோக்கி நகர்த்தப்படும் எந்த முயற்சியும் வீண் போகாது!
பசுபதி சிதம்பரம்
ச‌ந்திப்பு : ம‌. ந‌வீன்
 
 
 
  நேர்காணல்:

சமூகத்தை நோக்கி நகர்த்தப்படும் எந்த முயற்சியும் வீண் போகாது!
பசுபதி சிதம்பரம்

பத்தி:

அட்ரா சக்க... அட்ரா சக்க...

சீ. முத்துசாமி

(இ)ராவணன் பார்த்த கதை
சு. யுவராஜன்

இயற்கை (4) - மழை
எம். ரிஷான் ஷெரீப்

மழைத்தூறல்கள்
க. ராஜம்ரஞ்சனி

கட்டுரை:

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வேற்று முகம்
நெடுவை தவத்திருமணி

தாண்டவராயன் கதையும் சில கதையாடல்களும்
எச். முஜீப் ரஹ்மான்

திரைவிமர்சனம்:

The Songs Of Sparrows
கிரகம்

சிறுகதை:

குடை
சின்ன‌ப்ப‌ய‌ல்


நடுக்கடலில்...
ராம்ப்ரசாத்

தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...1
எம். ஜி. சுரேஷ்

ப‌ல வேடிக்கை ம‌னித‌ர்க‌ள் போல‌ ...7
ம‌. ந‌வீன்

எனது நங்கூரங்கள் ...12
இளைய அப்துல்லாஹ்

நடந்து வந்த பாதையில் ...7
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...9

ஏ. தேவராஜன்

லதா

ராம்ப்ரசாத்

செல்வராஜ் ஜெகதீசன்

எதிர்வினை:


படைப்புகள் விலைபோகுமோ இல்லையோ நிச்சயம் விமர்சனம் விலைபோகும்
வேலுநாச்சி

சுவைக்குதவாத வெறும் அக்கப்போர்
சுப்பிரமணியன் ரமேஷ்
 
முள் கிரீடச் சுவர்களும் மனம் பிறழ்ந்த மனிதர்களும்
ராக்கியார்
     
     
 

பசுபதி சிதம்பரம். ஒரு வழக்கறிஞர் என்ற அடையாளத்தையும் மீறி சமூகச் சேவையாளராகப் பலராலும் அறியப்பட்டவர். இந்நாட்டில் ஒவ்வொரு முறையும் தமிழர் வளர்ச்சிக்கான தடைகளும் சுரண்டல்களும் நிகழும்போது தன் வலுவான எதிர்க் குரலைப் பதிப்பவர். எழுத்து, அறிக்கைகள், ஆர்ப்பாட்டமான கோஷங்கள் என்றிருக்கும் தமிழர்களின் எதிர்ப்பின் வடிவத்திலிருந்து மாறுபட்டதாக அமைகிறது இவரது சமூகம் ஒட்டிய செயல்பாடுகள். அதிகார மையங்கள் செய்யத் தவறியதை, செய்ய மறந்ததை அல்லது மறுத்ததைப் பசுபதி தன் அறிவார்ந்த குழுவினரைக் கொண்டு மலேசியத் தமிழ்ச் சமூகத்துக்குச் செய்து வருகிறார். வெற்றுச் சொற்களின் வடிவில் இவரது எதிர்ப்பின் வடிவம் இல்லாமல் துல்லியமான நகர்ச்சியால் அடுத்த தலைமுறையை இவர் உருவாக்க முனைந்திருப்பது ஆரோக்கியமான ஒரு எதிர்பார்ப்பை மலேசியத் தமிழர்களிடம் வழங்கியுள்ளது. ஒரு மதிய வேளை ‘வல்லினம்’ இதழுக்காக அவரைச் ச‌ந்தித்தேன்...


உங்களின் கல்வி மற்றும் தொடக்ககால வாழ்வு குறித்துக் கூறுங்கள்?

பிறந்தது பத்து ஆராங்கில்தான். எங்கள் குடும்பம் கீழ் நடுத்தரக் குடும்பம். எனது ஆரம்ப காலக்கல்வி பத்து ஆராங் தமிழ்ப்பள்ளியில்தான் தொடங்கியது. ஆயினும், என் ஆளுமையை அறிந்து என்னை ஒரு நல்ல மனிதனாக வார்த்தெடுத்தது என் இடைநிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர்கள்தான். அதன் பின்னர் ‘தார்’ கல்லூரியில் எனது கல்வியைத் தொடர்ந்தேன். தொடர்ந்து பிரிக்பில்ட்ஸ் விவேகானந்தர் ஆசிரமத்தில் தங்கி எனது ஆறாம் படிவ உயர்நிலைக் கல்வியைத் தொடர்ந்தேன். எனக்குத் தேசிய பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது. அக்காலக் கட்டத்திலேயே நான் என் சக நண்பர்களோடு சமூகப் பிரச்சனை ஒட்டிய கலந்துரையாடலில் ஈடுபடுவேன். அரசியல் மாற்றம் குறித்தெல்லாம் அப்பொழுதே எனக்கு விழிப்பு நிலை இருந்தது. தொடர்ந்து மாற்றுக் கருத்துகளை நாங்கள் முன் வைத்ததால் எங்களிடமிருந்து பலரும் விலகிச் சென்றனர்.

எந்தப் புள்ளியில் உங்களை நீங்கள் தனி மனிதனாக உணராமல் ஒரு சமூக மனிதனாக அடையாளம் கண்டு கொண்டீர்கள்?

நான் இடைநிலைப்பள்ளி படிக்கும் போது என் ஆசிரியர்கள் எங்களுக்கு இலவசமாக வகுப்புகள் நடத்துவார்கள். அதோடு மட்டுமல்லாமல் பாடப் புத்தகங்களையும் பணம் கொடுத்து வாங்கும் சூழல்தான் அப்போது இருந்தது. எங்கள் ஆசிரியர்கள் தங்களுக்குக் கிடைத்த ஆசிரியர்க் கையேடுகளை எங்களுக்குக் கொடுத்துப் படிக்க வைத்தார்கள். முன்னாள் மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களின் பயன்படுத்தாத பக்கத்தை அப்புறப்படுத்தி, புதிய முகப்போடு எங்களுக்குப் பயன்படுத்தக் கொடுத்தார்கள். நாங்கள் கேட்காமலேயே எங்களின் வறுமை நிலையையும் எங்கள் தேவைகளையும் எங்கள் ஆசிரியர்கள் அறிந்து செய்த உதவிகள் ‘சேவை’ எனும் அர்த்தத்தை எனக்குப் போதித்தன. இதைத் தவிர்த்து நான் கன்னியாஸ்திரிகளிடம் ஆங்கிலம் கற்றது, மேற்கல்விக்கு அரசாங்கத்திடம் உபகாரச் சம்பளம் பெற்றது என என் வாழ்வின் ஒவ்வொரு வளர்ச்சிக்கும், சமுதாயமும் சமுதாய இயக்கங்களுந்தான் உதவின. மீண்டும் இந்தச் சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அப்போதே வேரூன்றி விட்டது. எனக்கு உதவிய இயக்கங்கள் பிரதி பலனை எதிர்பார்க்காதவை. எனவே, நான் செய்ய விரும்புவதை நேரடியாக என் சமுதாயத்திற்கே செய்கிறேன்.

வழக்கறிஞராக இருப்பது, உங்கள் சமூக அக்கறைக்கு ஒரு காரணமாக இருக்கிறதா?

நிச்சயமாக. நாட்டில் வழக்கறிஞர்கள் பலர் அரசியலில் ஈடுபடுவது தொடங்கி, அரசாங்கத்தை நோக்கித் தங்கள் வலுவான எதிர்வினையை அவ்வப்போது பதிவு செய்வதால் உங்களுக்கு இந்தக் கேள்வி எழுந்திருக்கலாம். எங்கள் தொழில் மக்கள் பிரச்சனையைத் தீர்ப்பதுதான். எளிய குடும்பப் பிரச்சனைகள் கூட சட்டப்பிரச்சனையாக மாறும்போது நாங்கள் அவற்றை அலசி ஆராய்கிறோம். வழக்கறிஞர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதலாவது, “நல்ல பிரச்சனை இதில் எத்தனை ஆயிரம் கிடைக்கும்?” என ஆராய்வது. இரண்டாவது, “எப்படி இவர் தேவையில்லாமல் இந்தப் பிரச்சனையில் மாட்டிக் கொண்டார்?” என ஆராய்வது. நான் இரண்டாம் இரகம். ஒவ்வொரு பிரச்சனைக்குப் பின்பும் அதில் பின்னிப் பிணைந்துள்ள சமூகக் குறைபாடுகளை அடையாளம் காண முடிகிறது. இந்தத் தன்மை என் சமுதாயத்தை மேலும் கூர்மையாக அவதானிக்க உதவுகிறது. மருத்துவர் ஒருவர் நோயின் மூலம் தேடிச் செல்வது போல் நாங்கள் இந்தச் சமூகத்தில் பீடித்துள்ள பிணியின் வேரினை ஆராய்கிறோம்.

இ.டபிள்யூ.ஆர்.எஃப் (EWRF), தமிழ் அறவாரியம், சைல்ட் (CHILD) எனப் பல்வேறு சமுக அமைப்புகளுடன் ஏதாவது ஒரு வகையில் உங்களின் பங்களிப்பு உள்ளது. உண்மையில் இவற்றின் மூலம் உங்கள் பயணம் எதை நோக்கிச் செல்கிறது? அதன் மையம் என்ன?

கல்வி மூலமாக ஒரு வலுவான, வளமான சமூகத்தை உருவாக்குவதுதான். அதிலும் குறிப்பாகப் பின்தங்கிய மாணவர்களுக்கு அடிப்படைக் கல்வியை வலுவாக்குவது. 7ஏ பெறும் மாணவனுக்கு எங்களின் சேவை அவசியம் இல்லாதது. காரணம், பெரும்பாலும் அது போன்ற மாணவர்களுக்கு நல்ல குடும்ப அமைப்பும் பொருளாதார பின்புலமும் இருக்கும். சில விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால், குறைந்த மதிப்பெண்கள் பெறும் மாணவன் ஒருவன் கவனிப்பாரற்றுக் கிடக்கிறான். அவன் எதிர்காலம் குறித்துக் கவலைப்பட யாரும் தயாராக இல்லை. அது போன்ற மாணவனுக்கே தூக்கிவிட அன்பு நிறைந்த ஒரு கரம் தேவைப்படுகிறது. அந்தக் கரம் எங்களுடையதாக இருக்க முனைப்புக் காட்டுகிறோம்.

தொடக்கத்தில் உங்களைச் சார்ந்த அமைப்புகளும் 7ஏ பெற்ற மாணவர்களுக்குத்தான் முக்கியத்துவம் வழங்கியது அல்லவா?

உண்மைதான். அது தமிழ்ப்பள்ளியை மத்தியவர்க்கமும் இளக்காரமாகவே பார்த்து வந்த காலக்கட்டம். தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சியையும் அதில் பயிலும் மாணவனும் சாதிக்க முடியும் என்பதைக் காட்டவே அத்தகையதொரு நிலைப்பாட்டில் இருந்தோம். இன்றைய நிலை வேறு. பல இயக்கங்களும் 7A பெறும் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு வழங்கத் தயாராக உள்ளது. பலரும் இன்று தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியைக் கண்கூடாகப் பார்க்கின்றனர். இந்நிலையில் எங்களின் செயல்பாடு மாற்றம் கண்டுள்ளது. ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எல்லாக் காலத்திலும் ஒரே வகையான அணுகுமுறைகள் பொருத்தமானதன்று. ஒரு திட்டத்தின் பலன், காலம், சூழல் எனப் பலவற்றையும் ஆராய்ந்து அதற்கேற்ப நமது நகர்ச்சி முதிர்ச்சி பெற வேண்டும்.

தொடர்ந்து சமூக அக்கறையோடு இயங்கிவரும் தங்கள் பார்வையில், இந்தச் சமூகம் பின்தங்கி இருப்பதற்கு எது காரணம் எனக் கருதுகிறீர்கள்?

கடந்த 30 ஆண்டுகளாகத் தேசிய வளர்ச்சியில் நாம் விடுபட்டு போனதுதான். இந்த விடுபட்ட வளர்ச்சிக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, அரசாங்கத்தில் நம்மைப் பிரதிநிதித்தவர்களின் அக்கறையின்மை. மற்றொன்று, அரசாங்கத்தின் அலட்சியப் போக்கு. தேசிய வளர்ச்சியில் நாம் விடுபட்டுள்ளதை அறிந்தும் இவ்விரு தரப்பினருமே மௌனம் சாதித்தனர். இவற்றைத் தவிர்த்து இந்தியர்களை நம்பி பணம் சம்பாதிக்கும் பெரும் நிறுவனங்கள் நன்றியுணர்ச்சியற்று இச்சமூகத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்யாததும் முக்கியக் காரணம் என்பேன். ஒரு புத்தக வெளியீட்டில் 1000 ரிங்கிட் கொடுத்துப் புத்தகம் வாங்குவதாலும், ஒரு தமிழ்ப்பள்ளி அணுகி வந்தால் 500 ரிங்கிட் கொடுப்பதாலும் தங்கள் கடமை முடிந்து விட்டது எனத் திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள். இதெல்லாம் ஒருவகை சுரண்டல்தான். இந்தச் சுரண்டலைச் சாதாரண உணவக முதலாளிகளிலிருந்து பெரிய தொலைக்காட்சி நிறுவனங்கள் வரை செய்துவருகின்றன.

நமது சமூகத்தில் நிலவும் இந்தக் குறைபாடுகளை அரசியல் கட்சிகள் மூலமாகத்தான் தீர்க்க முடியும் எனும் நம்பிக்கை பரவலாக நிலவுகிறது. உங்கள் கருத்து?

நமது நாட்டின் கட்டமைப்பு அவ்வாறு உள்ளது. இன ரீதியாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வோர் இனத்திற்குமான கட்சிகளின் மூலம் நம் அரசாங்கம் இயங்கி வருகிறது. இதில் நமது இந்தியர்களைப் பிரிதிநிதித்த ம.இ.கா செய்ய வேண்டிய கடமையைச் செய்ய தவறியது என்பது உண்மை. அடிப்படைத் தமிழ்ப்பள்ளியிலே ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும்போது, நமக்கு இப்போது மருத்துவக் கல்லூரி தேவையா? அதுவும் சமுதாயப் பயணத்தில் உருவான ‘ஏய்ம்ஸ்ட்’ மருத்துவக் கல்லூரி உண்மையில் ஏழை தமிழ் மக்களுக்குச் சேவை வழங்க தோன்றியதென்றால், ஒரு கனவுந்து ஓட்டுனரின் மகள் அங்கு மருத்துவம் கற்க முடிந்திருக்க வேண்டும். அரசாங்கப் பல்கலைக்கழகத்தில் முப்பதாயிரம் ரிங்கிட்டில் கற்க வேண்டிய மருத்துவத்துக்கு அங்கு இரண்டு இலட்சத்திற்கும் மேல் வசூலிக்கப்படுகிறது. இதனால், ஏழை இந்தியர்களுக்கு என்ன நன்மை? இப்போது அங்குப் பயில்வதில் பிற இனத்தவர்கள்தான் அதிகம். இதெல்லாம் மக்களைச் சுரண்டிப் பிழைக்கும் வியாபார உத்தி. சீனர்களின் தூரநோக்குச் சிந்தனை அபாரமானது. ஓர் இனக்கலவரத்தை மலேசியா கண்ட பின்னர், அவர்களின் திட்டங்கள் இன்னும் செம்மைப் படுத்தப்பட்டுள்ளன. ‘தார்’ கல்லூரி (TAR College), ‘தார்’ பல்கலைக்கழகம் எனத் தொடங்கி இப்போதுதான் அவர்கள் மருத்துவக் கல்லூரிக்குக் கவனம் செலுத்துகின்றனர். ஆனால், நாம் தொடங்கும்போதே மருத்துவக் கல்லூரிக்குத் தாவுவதால் என்ன இலாபம்?

பொதுவாகவே நமது அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் இனம் சார்ந்த அல்லது மதம் சார்ந்த விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றன. இந்த அக்கறை மொழி சார்ந்த பிரச்சனைகள் வரும்போது பிறக்காதது ஏன்?

அப்படி மொழி சார்ந்து பேசாதவர்களிடம், கொஞ்ச நேரம் மனம் விட்டுப் பேசிப்பாருங்கள். தமிழ்ப்பள்ளிகள் தேவையா? என்ற கேள்வி அவர்களிடமே நிழலாடுவதை உணர்வீர்கள். சமூகத்தின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம் தமிழ்ப்பள்ளிகள்தான் என அது போன்றவர்கள் நினைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தமிழ்ப்பள்ளிகள் ஏழை மாணவர்களுக்கு ஒரு சரணாலயமாகி இருக்கிறது. எல்லா நிலைகளிலும் புறக்கணிப்புக்கு உள்ளாகும் ஒரு மாணவன் ஆசிரியரால் தமிழ்ப்பள்ளிகளில் மட்டுமே அரவணைக்கப்படுகிறான். புறக்கணிப்பு ஒருவனை வன்முறைக்குத் தயார்ப்படுத்துவது போல அரவணைப்பு ஒரு மாணவனை மனிதப் பண்பிலிருந்து விலகாமல் காக்கிறது. இந்த நாட்டில் தமிழ்ப்பள்ளிகளுக்கான தேவை நிச்சயம் உண்டு. தமிழ் சார்ந்த சங்கங்களாவது மொழி மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கு நெருக்கடிகள் இந்நாட்டில் நிகழும் போது வன்மையாக எதிர்க்குரல் எழுப்ப வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

அவ்வாறு ஆளுமை மிக்க அமைப்புகள் இந்நாட்டில் உள்ளதென நம்புகிறீர்களா?

நிச்சயமாக. ஆனால், அவை இன்னும் தத்தம் ஆளுமையைப் பெருக்கிக் கொள்ளவேண்டும். சமூக நன்மைக்காக ஒன்றிணைய வேண்டும். ஒரே சக்தி அனைத்தையும் இயக்குவது தவறு ஏற்பட வாய்ப்பாகிவிடும். ஒரே பெரும் சக்தியாக ம.இ.கா இந்தியர்களுக்கு விளங்கியதால்தான் நமக்கு இத்தனை குறைபாடுகள். தமிழ்ப்பள்ளி, கோயில், சமூகப்பிரச்சனை என அனைத்திற்குமே ம.இ.கா.வை நம்பியே நாம் பறிகொடுத்தவை பல. ஒரே பெரும் சக்தி இயல்பாக ஓர் அதிகாரத் தோரணையை வழங்கிவிடலாம். நாங்கள் இருக்கின்ற அமைப்புகளோடு இணைந்து அவர்களின் ஆளுமையை வளர்க்க விரும்புகிறோம். இதன் மூலம் பலதரப்பட்ட சமூகப் பிரச்சனைகளையும் கருத்தில் கொண்டு களைய முடியும்.

சமூகம் சார்ந்த உங்கள் நகர்ச்சியில், உங்களை நோக்கி வரும் விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

விமர்சனம் ஒருவேளை தேவையில்லை என்றால் சமூக சேவை செய்யத் துணியக்கூடாது. ஐந்து மணியோடு வேலை முடிந்து வீட்டின் கதவைச் சாத்திக் கொள்ள வேண்டியதுதான். அதோடு ஒரு கப் தேநீர் குடித்துவிட்டு, 2 சீரியல்கள் பார்த்துவிட்டுச் சிரித்துப் பேசிவிட்டு உறங்கி, மறுநாள் வேலைக்குப் போய் விடலாம். எந்த விமர்சனமும் வராது. பொது வாழ்வென்று இறங்கினாலே விமர்சனங்களைச் சந்தித்தே ஆக வேண்டும்.

அதுபோன்ற நேரத்தில் உங்களுக்குக் கோபம் வருமா? உங்களுக்கு அதிக கோபம் வரும் என்று கேள்விப்பட்டேன்... அதனால் கேட்கிறேன்.

(சிரிக்கிறார்) ஒரு பல்கலைக்கழக மாணவர்கள் என்னை வந்து சந்தித்தார்கள். ஒரு தமிழ்ப்பள்ளிக்குப் புதிதாகச் சாயம் அடிக்க பணம் தேவை என்றும் அதற்காக ஒரு கலை நிகழ்ச்சி செய்யப் போவதாகவும் கூறினார்கள். நான் அவர்கள் கேட்கும் வர்ணங்களை வாங்கிக் கொடுத்து விடுவதாகக் கூறினேன். அவர்களின் உணவு மற்றும் தேவையான உபகரணங்களையும் தருவதாகக் கூறினேன். அதற்கு அவர்கள், பணம் கொடுத்தால் போதும் நிகழ்ச்சி நடத்தி பணம் சேர்த்துக் கொள்வதாகக் கூறி அடம்பிடித்தனர். இதுபோன்ற சமயங்களில்தான் எனக்குக் கோபம் வரும். சமூகச் சேவை என்ற பெயரில் கேலிக் கூத்தும், ஆட்டமும் போட்டால் அதற்கு உதவவும் உடன் போகவும் நான் எப்போதும் தயாராக இல்லை. இப்படிச் சமூக சேவை என்று என்னைச் சந்திக்க வருபவர்களை எளிதில் என்னால் அடையாளம் காண முடிகிறது. மிக எளிதாகத் தீர்க்க வேண்டிய பிரச்சனைகளைச் சுய இலாபத்திற்காகவும் தங்களை முன்னிலைப் படுத்துவதற்காகவும் கையிலெடுத்து ஆரவாரம் பண்ணும் கூட்டத்திற்கு எதிராக என் கோபம் எப்போதும் இருக்கும்.

நீங்கள் சார்ந்த அமைப்புகளின் மேல் அண்மையில் சில விமர்சனங்கள் வந்தன. அதில் பணப் பயன்பாட்டில் முறைகேடும் அடங்கும். இதை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?

நாங்கள் எங்கள் கணக்கை மிகத் தெளிவாகக் காட்டிவிட்டோம். முறையான கணக்காய்வுக்கும் வழங்கிவிட்டோம். இது போன்று பேசுபவர்களுக்கு வேறு அரசியல் நோக்கங்கள் இருக்கலாம். அப்படிப் பேசுபவர்கள் பலரும் தங்களாலான சமூகச் சேவைகள் செய்வதையும் எங்களால் அறிய முடிகிறது. அதை நாங்கள் நிச்சயம் பாராட்டுகிறோம். நான் சொல்வதெல்லாம் சமூகச் சேவையை இணைந்து செய்யலாம் என்பதைத்தான். அப்படி இணைந்து செய்ய விருப்பம் இல்லாமல் வேற்றுமைகளை வளர்க்கும் பேச்சுகளை நான் பொருட்படுத்துவதில்லை.

இலங்கைத் தமிழர்களிடம் நீங்கள் காட்டும் ஆத்மார்த்தமான அக்கறையின் பின்னணி என்ன?

இலண்டனில் இருக்கும் போதே எனக்குள் ஒரு போராளியின் குணம் இருந்தது. அப்போதே ஆங்கிலேயர்களின் இனவாதத்தை எதிர்த்து நெல்சன் மண்டேலா கட்சிக்கு ஆதரவாக அணி திரண்டுள்ளோம். எங்கள் பல்கலைக்கழகம் ஒதுக்குப் புறமாக இருந்ததால் இலங்கைப் பிரச்சனை தொடர்பாக அப்போது அதிகம் வாசிக்கக் கிடைத்ததில்லை. ராஜிவ் காந்தியின் கொலைக்குப் பிறகு அவர்களைப் பொருட்டாகவும் கருதவில்லை. பிறகு, மலேசியா வந்தபோது மேலும் பல தகவல்கள் கிடைக்கப் பெற்றேன். ஒரு சமூகம் ஓர் அரசுக்கு எதிராகப் போர் தொடுக்கிறதென்றால் அதில் நிச்சயம் காரணம் இருக்கும் எனப்பட்டது. இலங்கைப் பிரச்சனை குறித்துத் தீவிரமாக வாசிக்க ஆரம்பித்தேன். அறியாமையில் இருந்த எனக்கு வாசிப்பு நல்லதோர் அறிமுகத்தைக் கொடுத்தது. நமது நாட்டை எப்படிப் போர்த்துக்கீஸியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் ஆண்டார்களோ அதே போலத்தான் இலங்கையும் ஆளப்பட்டிருந்தது. இலங்கையில் தமிழர்களின் பாரம்பரியத்தை என்னால் அறிய முடிந்தது. 2001-ஆம் ஆண்டு தலைவர் பிரபாகரன், தமிழ்ச்செல்வன், நடேசன், அண்டன் பாலசிங்கம் போன்றவர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர்களின் போராட்டத்தில் இருந்த உண்மையை என்னால் உணர முடிந்தது. அங்குப் பாதிக்கப்பட்ட மக்களின் மேல் அக்கறை ஏற்பட்டது. அவர்களும் நம் சகோதரர்கள் என்பதை உணர்ந்தேன். முழுமையாகப் 15 வருடங்கள் என்னை இந்தப் போராட்டத்தோடு ஆத்மார்த்தமாக இணைத்துக் கொண்டேன்.

பெரும் இழப்புகளுக்குப் பின் முடிந்துள்ள இந்தப் போரால், இத்தனை ஆண்டுகள் செய்த போராட்டமும் உதவிகளும் வாக்குறுதிகளும் அர்த்தம் இழந்ததாகக் கருதவில்லையா?

வெற்றி தோல்வி என்பதைக் காலந்தான் தீர்மானிக்கிறது. ஒரு போராட்டம் என்பது ஒவ்வொரு காலத்திலும் வேறு வடிவம் பூணுகிறது. அந்த வகையில் இலங்கைப் போராட்டம் இன்னும் முடியவில்லை என்றே நம்புகிறேன். அது மிக விரைவில் அனைத்துலக ரீதியில் தன்னை மீண்டும் நிறுவ முயலும். முதலில் நான் ஒரு தமிழன்... பிறகுதான் மலேசியன். அந்த வகையில் என் இனத்துக்காக நான் செய்த எதையும் இழப்பு என்று கருதவே மாட்டேன். நான் என்னைத் தமிழனாக உணர்ந்தபோதுதான் மலேசியன் என்னும் அடையாளம் என்னை இன்னும் நெருங்கி வந்தது.

அடுத்த தலைமுறை உருவாக்கம் குறித்து எந்த இயக்கங்களும் கவலை கொள்வதில்லை. உங்கள் திட்டங்களால் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மேம்பட்ட மக்களை உருவாக்க முடியும். சமூக அக்கறை கொண்ட இளைஞர்களை உருவாக்குவதில் உங்கள் பங்கு என்ன?

இதற்கு எங்கள் இயக்கத்தையே உதாரணமாகச் சொல்ல முடியும். எங்கள் இ.டபிள்யு.ஆர்.எஃப் நிர்வாகியான செல்வமலருக்கு வயது 26தான். அவருக்குக் கீழ் பணியாற்றும் அனைவரும் இளைஞர்கள். டாக்டர் சண்முகசிவாவும் அடிக்கடி சொல்வார். இளைஞர்களை உருவாக்குங்கள் என்று. எனது முக்கிய நோக்கமும் அதுதான். அதனால்தான் மிக முக்கியப் பொறுப்புகளில் இளையர்களை அமர்த்தியுள்ளேன். இளைஞர்கள் இன்றைய தொழில்நுட்பத்தை நன்கு உணர்ந்தவர்களாக உள்ளனர். எஸ்.எம்.எஸ் தொடங்கி இன்றை ஃபேஸ் புக் வரை அவர்களின் தொடர்புகள் விரிந்துள்ளன. இன்றைய உலகின் வேகத்திற்கு ஏற்ப அவர்களால்தான் பணியாற்ற முடியும். என்னைப் பொருத்தவரை ஒரு வயதுக்குப் பின் மூத்தவர்கள் இளைஞர்களுக்கு வழிவிட்டு ஆலோசகராக இருக்கலாம். அனுபவமும் அறிவும் ஒன்றினையும் இடம் ஆரோக்கியமாக இருக்கும்.

ஹிண்ட்ராப் குறித்த உங்கள் பார்வை என்ன?

ஹிண்ட்ராப் மிகைப்படுத்திப் பேசப்படும் ஒரு சொல். ஹிண்ட்ராப் பல்வேறு மக்களின் உணர்வுகளை ஒன்றாகக் குவிக்க உதவிய ஒரு தினம் என்றே எனக்குப் படுகிறது. அரசாங்கத்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் அன்று ஒலித்தது. அந்த உணர்வுகளை ஒன்றிணைக்க நான்கு ஐந்து பேர் உதவினர் என்பதும் உண்மை. ஆனால், இந்த ஐவரால்தான் அடுத்த சமூகத்தை வழி நடத்த முடியும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத கூற்று. ஹிண்ட்ராப்பின் அதிர்வு இந்தியர்களுக்குச் சில நன்மைகளை ஏற்படுத்தின என்பதையும் மறுக்க முடியாது.

இலங்கைத் தமிழர்களுக்கு ‘ஆறாம்திணை’ என்று இணையம் அவர்கள் ஒன்றிணைய வழிவகுக்கிறது. நாம் ஒரே தேசத்தில் இருந்தாலும் நிறைய பிளவுகள் உள்ளன. தோட்டத் துண்டாடலில் நாம் சிதறியிருக்கிறோம். தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய கட்சிகளைவிட தகுந்த சாதனம் எது?

அப்படி ஒரு சாதனம் தேவையில்லை என்றே படுகிறது. நீங்கள் கூறுவது ‘அப்ஸ்ட்ரேக்’ (abstract) ஆனது. ஒரு கலகம் நிகழும்போதுதான் இன ஒற்றுமையைக் காணமுடியும். இந்நாட்டில் அதுபோல பல சமயங்களில் நடந்து வந்துள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான நம்பிக்கைகள் உள்ளன; கொள்கைகள் உள்ளன. இத்தனை வேறுபாடுகளைக் கொண்ட மனிதனை ஒன்றிணைப்பது ஆகாத காரியம். ஆயினும், சில அடிப்படைச் சீர்குலைவுகள் ஏற்படும்போது இன ஒற்றுமை நிச்சயம் வெளிபடும். நாம் நம்மை ஒன்றிணைப்பதற்கு அதிக நேரத்தை செலவு செய்வது வீண். அஃது இயல்பாக உருவாகும். முன்னிலும் நம் இந்தியர்கள் முன்னேறியுள்ளார்கள். அரசியல் தலைவர்களைக் கண்டதும் வளையாத முதுகை இன்றைய இளைஞர்கள் கொண்டிருக்கிறார்கள். நல்ல இலக்கிய ஆளுமைகள் உருவாகியுள்ளார்கள். அரசியல் பிரக்ஞை உள்ள சமூகம் மலர்ந்துள்ளது. அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசும் புதிய சமூகம் உருவாகிவருவதையும் நான் அவதானிக்கிறேன். ஒவ்வொருவரும் தத்தம் கடமைகளை முறையாகச் செய்தால் எல்லா வளர்ச்சியும் படிப்படியாக நடக்கும்.

இளம் ஆய்வாளர் விழா, ஆங்கில முகாம் என நீங்கள் சார்ந்த இயக்கங்கள் செயல்படுகின்றன. இவை உண்மையில் மாணவர் வளர்ச்சிக்குப் பலன் அளிக்கின்றனவா? இவற்றில் ஆசிரியர்களின் பங்குதானே அதிகம் உள்ளது?

இளம் அறிவியலாளர் விழா குறித்து இது போன்ற விமர்சனங்களைச் சந்தித்துள்ளோம். இந்த நிகழ்வினால் மாணவர்களிடம் ஏற்படும் மனமாற்றங்களையும் வளர்ச்சியையும் இந்தக் காலக்கட்டத்தில் ஆசிரியர்கள் தீர்மானிக்க முடியாது. எங்கள் திட்டங்கள் அனைத்துமே தூர நோக்கானவை. முன்பே நான் கூறியது போல, நான் ஒரு தேவாலயத்தில் கன்னியாஸ்திரிகளிடம்தான் ஆங்கிலம் கற்றேன். இன்றைய எனது ஆங்கிலத் திறமைக்கு அவர்கள்தான் காரணம். முன்பு நான் அவர்களிடம் கற்ற ஆங்கிலப் பாடல்கூட இன்றளவும் நினைவில் உண்டு. இவற்றையெல்லாம் மீறி அவர்களின் அன்பும் அரவணைப்பும் ஒரு தன்னம்பிக்கையை எனக்குள் ஊட்டின. பயமில்லாமல் ஆங்கிலத்தில் உரையாட அந்தத் தன்னம்பிக்கை உதவியது. ஒரு மாணவன் தன்னை ஓர் அறிவியலாளனாய் உருவகித்து ஒரு பெரும் மக்கள் திரள் முன் நிற்பதே ஒரு வகை கம்பீரத்தை அவனிடத்தில் ஏற்றுகிறது. இந்தக் கம்பீரமும் தன்னம்பிக்கையும் வருங்காலத்தில் அவன் தயக்கமின்றி சவால் மிகுந்த வருங்காலத்தைச் சந்திக்க முடியும் என்பது திண்ணம்.

இது போன்ற நடவடிக்கைகளில் ஒரு தொடர் நகர்ச்சியைக் காண முடியவில்லையே?

இந்தக் கருத்தை நானும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், மிக விரைவில் இந்தக் குறைபாடும் களையப்படும். குறிப்பாக ஆங்கில முகாம் இரண்டாம் பகுதி மற்றும் மூன்றாம் பகுதி எனத் தொடர்ச்சியாக மாணவர்களைப் பயிற்றுவிக்கும் திட்டம் உள்ளது. இதனால், மாணவர்கள் பயிற்சியிலிருந்து விடுபடாமல் தொடர்ந்து தங்கள் ஆங்கிலத் திறனை வளர்த்துக் கொள்ள இயலும். ஆக, எங்கள் திட்டங்களை நிச்சயம் அடுத்தடுத்த கட்டங்களுக்கு மேம்படுத்த உள்ளோம். ஆனால், இவற்றால் எந்த நன்மையும் இல்லை நான் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் பகவத் சிங். ஆனால், அவர் இந்தியா சுதந்திரம் அடைந்த போது உயிருடன் இல்லை. அதன் வெற்றியை அவரால் பார்க்க இயலவில்லை. சமூகத்தை நோக்கி நகர்த்தப்படும் எந்த முயற்சியும் வீண் போகாது. நாம் இருக்கும் போது அதன் வெற்றியைக் கணிக்கவோ காணவோ முடியாமல் போகலாம் என்பது மட்டும் நிதர்சனம்.

இயக்கச் செயல்பாடுகளைத் தவிர்த்து உங்கள் ஆர்வம் வேறு எந்தத் துறைகளில் உள்ளது?

(சிரிக்கிறார்). அப்படி வேறெதிலும் இல்லையென்றே நினைக்கிறேன். தொடர்ச்சியான வாசிப்பு மட்டும் உண்டு. செ குவேரா, நெல்சன் மண்டேலா போன்ற ஆளுமைகளைத் தொடர்ந்த வாசிப்பில் உள்வாங்குவது மூலம், சமூகத்தின் மேல் உள்ள பிடிப்பு இன்னும் உந்துதல் அடைகிறது.

உங்கள் பார்வையில் எதிர்கால மலேசியத் தமிழர் நிலை என்ன?

சவால் மிக்க ஒரு சூழலை மிகப் பக்குவமாகவும் அறிவார்த்தமாகவும் எதிர்கொள்ளும் வல்லமை படைத்தவர்களாகத் திகழ்வார்கள் என்ற நம்பிக்கை வலுவாக உள்ளது.

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768