நகர் மாடு
நகர நட்டநடுத்தெருவில்
பூர்வ ஜென்ம ஞாபகங்களை
அரைக்கண் மூடிய தியானத்தில்
அசைபோட்டுக்கொண்டே
நகராத் தவமிருந்தது
மாடு.
நகர இதயத்தின் நகர்மையத்தில்
காலவுணர்வின்றி சர்வாதிகாரியாய்
முன்னேற்ற வேகத்தை முடக்கிய
புன்னகை மன்னனாய்
பூரித்திருந்தது
மாடு.
மாட்டை யார்
ஓரங்கட்டச் சொல்வது?
என்ன திமிரோடு
நிற்கிறது பார்!
காரை நிறுத்து!
எதற்கு இந்த வேகம்?
அடேய் சைக்கிள் தம்பி...
பார்த்து பார்த்து...!
மாடு இன்னும் நகரவில்லை.
தொழில் வளர்ச்சிக்கு எதிரி!
அகிம்சாவாதி!
வீரசைவன்!
தீவிர ஒழுக்கவாதி!
தெருமுகத்தில் எப்பொழுதுமே
பருவாயிருக்கும் போலிருக்கின்றது.
மாட்டுக்குத்தான் சொரணையில்லை!
இந்தியனுக்கு?
ஸ்ரீ ஸ்ரீ (1910 - 1983)
1920களில் எழுத வந்த ஸ்ரீரங்கம் ஸ்ரீனிவாசராவ் தெலுங்கு
மரபுக்கவிதையின் முதலாளித்துவ முதுகுச்சொறியல்களுக்கு முடிவு கட்டிய
'நயாகரா' என்னும் கவிதை தொகுப்பின் முன்னோடிகளில் முதன்மையானவர். மனித
வாழ்க்கையின் நடுத்தரவர்க்க எதார்த்தப்பிரச்னைகளை அலசியதோடு கவிதை
வாழ்கையின் சாதனம் என்றவர்.
1970ல் இவரது மணிவிழாக் கொண்டாட்டத்தின்போது, மேடை, மைக், மாலை,
பொன்னாடை எல்லாம் கவிஞனுக்கு விபசாரத்தை விடக் கேவலமானதென்றும் தனது
மானுடக் கொள்கைகளுக்கு எதிரானதென்றும் உதறிவிட்டு நடையைக் கட்டியதில்
தெலுங்குக் கவிஞர்கள் மூன்று குழுக்களாய் பிரிந்தனர். 'நயாகரா'க்
கவிஞர்கள், தற்காலத் தெலுங்குக் கவிதையை உலக அரங்கில் உயர்த்திய திகம்பரக்
கவிகளுக்கும் மூத்தவர்கள்.
|