|
'வேதாந்திகள் கைக்குள் சிக்காத கடவுள்மாதிரி தான் ஞான் பிறப்பித்துவிட்ட
கதைகளும். அவை உங்கள் அளவுகோள்களுக்குள் அடைபடாதிருந்தால் அதற்கு ஞான்
பொறுப்பாளி அல்ல. ஞான் பிறப்பித்து விளையாட விட்டுள்ள ஜீவராசிகளும்
கூடபொறுப்பாளிகளல்ல' என்றார் புதுமைப்பித்தன்.
எவ்வளவு அழுத்தம் திருத்தமான சுய அலசல். அழுத்தமான நோக்கம் இல்லாதவை கதைகளே
இல்லை எனில், ஒரு படைப்பாளிக்கு தனது பொறுப்பு பற்றி எவ்வளவு அக்கறை
இருக்கவேண்டும்? வணிக பத்திரிக்கைக்கு எழுதுவதால் நாங்கள் தார்மீக
இலக்கியம், படைக்க முடியவில்லையே எனும் சுய பச்சாதாபம் சிங்கை, மலேசிய
எழுத்தாளர்களுக்கில்லை. மலையாள இலக்கியம் தேடித்துருவி, தரமான
இலக்கியத்துக்கு மட்டுமே இடம் என்று கறாராய் இருப்பதால் இங்கு ’ஞஞ்ஞா
மிஞ்ஞா‘ என்று எழுதிவிட்டு குளிர் காயமுடியாது. இது சிறுகதை,
கவிதைக்குமட்டுமல்ல. மிகப்பெரும் எதிர்பார்ப்போடு, விளம்பரத்தோடு, முதலீடு
செய்யும் நாடகங்களுக்கும் கூட இன்னும் ஆழமான எதிர்பார்ப்பு உண்டு.
இலக்கியம் சமூக மாற்றத்துக்கு ஒரு கருவியாக இருக்கவேண்டுமென்ற நினைப்பில்
தப்பில்லை. ஆனால் பின் நவீனத்துவமென்ற பார்வையில் வரும் பல அபத்தங்கள்
ஏற்புடையதுதானா?
'அற்புதமான மரபுக்கவிதைகள் இருக்கும்போது புதுக்கவிதை என்ற ஒரு எழுச்சி
எதற்காக? எதுகை, மோனை, யாப்பிலக்கணம் முறையாகப் பயின்று எழுதவரும்
மரபுக்கவிதைகளில் இல்லாத எந்த அழகைப் புதுக்கவிதையில் கண்டு விட்டோம்?
வெறும் வார்த்தைவிளையாட்டு என்ற பெயரில் வரும் குப்பையைக்கூடக் புதுக்கவிதை
என்கிறார்கள்? ஏன்? ஏன்? சார்?' என்றேன்.
ஆசிரியர் முத்துசாமி : அது குப்பை என்று பட்டாலே அதை ஏற்க வேண்டியதில்லையே?
அதே தலைப்பில் நிங்ஙள் ஏன் சற்று மாறுபட்ட கோணத்தில் எழுதிப்பார்க்ககூடாது?
ஞான் : சங்க இலக்கியத்தில் இதிகாசம் காண்பவளாக்கும் ஞான். சங்க
இலக்கியத்தில் சொல்லாத எதை புதுக்கவிதையில் சொல்லிவிட்டார்கள்?
ஆசிரியர் : இது தவறு. பரந்த வாசிப்பனுபவம் உங்களுக்கிருக்கிறது. வ.வே.சு.
ஐயர் தொட்டு, இன்றைய பிரபஞ்சன் வரை, சமகால இலக்கியம் பற்றி விரல்நுனியில்
பேசுகிறீர்கள், பல மொழிகளும் கற்றிருக்கிறீர்கள். ஆனால் இந்த
ஆற்றலையெல்லாம் புதிய கோணத்தில் சிந்திக்க மட்டும் ஏன் மறுக்கிறீர்கள்?
ஞானக்கூத்தன், பிரமிள், நகுலன், கலாப்ரியா, என எல்லாரையுமே
வாசிக்கிறீர்கள். எதைப்படித்தாலும் இலக்கியத்தில் ஆழ்வேர் வரை
துருவிப்பார்த்து ஆராயும் அறிவும் உண்டு. ஆனால் இவ்வளவு ஆற்றலையும்
புத்திலக்கியப் பார்வையில் சிந்திக்க மட்டும் ஏன் மறுக்கிறீர்கள்?
ஞான் : புத்திலக்கிய சிந்தனை என்று எதைச்சொல்கிறீர்கள்? முரண்பாட்டின்
மொத்த உருவமாக வரும் எழுத்தா சார்? புதுமைப்பித்தனும், ஜெ.கா.வையும்
அருமையாக ஏற்கமுடிகிறது. ஆனால் இன்று வரும் --------, -----, எழுத்தா சார்
அது? அவர்களெல்லாம் எந்த மாயையில் எழுதுகிறாரகள்? ஒ.கே. அப்படியே நிங்ஙள்
கூற்றை ஏற்றுக்கொண்டாலும் கூட இந்த பின்நவீனத்துக்கென ஓர் இலக்கணம் உண்டா
சார்? அவரவர் எழுத்தே அவரவர் நவீனத்துவம் எனில் என்டெ theatre researchல்
பல விஷயங்கள் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லையே?
ஆசிரியர்: முதலில் நவீன நாடகக்காரர்களாக எங்களை ஏன் பார்க்கிறீர்கள்?
முன்பு கவிதை பண்டிதர்களின் கைப்பாவையாக மட்டுமே இருந்தது. ஆனால்
புதுக்கவிதை எழுச்சி வந்த பிறகுதான், பலரும் ஆர்வத்தோடு எழுத
வந்திருக்கிறார்கள்? இது எவ்வளவு ஆரோக்கியமான வளர்ச்சி? ஜனரஞ்சகமான எழுத்து
பலரையும் சென்றடைகிறது என்பதற்காக, தரமிழந்த வணிக எழுத்துக்களை கொண்டாட
வேண்டிய தேவை என்ன?
ஞான்: எதுகை, மோனை, யாப்பிலக்கணம், பயிலாதவர்களின் பிழை அது. காவ்யங்கள்,
ப்ரபந்தங்கள், சித்தர் பாடல்கள் என வரும் மரபுக்கவிதைகளில் என்ன இல்லை?
புதுக்கவிதை, நவீன நாடகம் என்பதே ஒரு அதிர்ச்சியின் வெளிப்பாடுதானே?
ஆசிரியர் : புதுமை எப்போதுமே அதிர்ச்சியாகத்தானிருக்கும். ஒரு
படைப்பாளிக்கு சமூக சிந்தனைதான் உச்சம் என்கிறேன், ஆனால் அதைக்கூட
கூர்மையாகவும், பட்டவர்த்தனமாகவும் சொல்லும் திறன் வேண்டும். அறிவு
ஜீவித்தனமான வசீகரம், என்பது வெறும் வார்த்தை விளையாட்டு அல்ல.
ஞான் : கவிதை ஆத்மாவின் ஜீவரசம் சார். பாரதிக்கவிதைகளில் ஆத்ம தரிசனம்
காண்கிறேனே, அதுதானே என்டெ பரவசம் - நவீனக்கவிதையில், பிரமீளின்
கண்ணாடியுள்ளிருந்து, நகுலனின் மழை, மரம், காற்று, கலாப்ரியாவின் சுயம்வரம்
என்று தெறிவு செய்தேன். ஆனால் கவிதை எனும் தனிமொழியில் இப்பொழுதும் கூட...
ஆசிரியர்: புதுக்கவிதை, நவீனக்கவிதை என்று பிரிவினை ஏன்? கவிதை
இலக்கணத்தில் இது ஒரு புதிய பரிமாணம், சரி, உங்களுக்குப் பிடிக்கவில்லையா?
நிங்ஙள் எழுதிக்காட்டுங்கள். இவ்வளவு ஆற்றலையும் உங்கள் கோணத்தில்
வெளிப்படுத்துங்கள்.
படபடவென வந்தது அவளுக்கு. இவர் கேலி செய்கிறாரா? ஊஹூம் முத்துசாமி சார்
மிகவும் சீரியஸான பேர்வழியாயிற்றே? சிங்கை, மலேசியத்தமிழ்தான் எனக்கு
எழுதத் தெரியும். ஆனால் தமிழ் நாட்டுத் தமிழ் எனக்கு எழுதத்தெரியாது சார்
என்று சொல்லும்போதே இவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. இப்படிச்சொல்லி
உங்களை பயமுறுத்தியது யார்? என்றார் ஆசிரியர்.
[கண்ணீரை அடக்க மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது] நா தழுதழுக்க இவள்
கூறினாள். சார், இங்கு பல சொற்கள் எனக்குப்புரியவில்லை. மொழிதான்
இலக்கியத்தின் ஆணிவேர் என்ற என்டெ நம்பிக்கையே சிதறி விட்டது. கேட்டால்
வட்டாரத்தமிழ், சென்னைத்தமிழ் என்கிறார்கள் வேண்டாம் சார், எனக்குவேண்டாம்,
ஞான் போகிறேன், எனும்போதே பேச முடியவில்லை.
ஆசிரியர் : அடடா, அழக்கூடாது? கமலாதேவி... உங்களுக்கு கிராமம் தெரியாது.
கேரளத்திலும் கூட நிங்ஙளின் வாழ்வியல் நிலைப்பாடு அப்படி. நீங்கள்
தமிழிலக்கியம் படைக்க வந்ததற்கு உண்மையிலேயே தமிழர்கள் பெருமைப்படுகிறோம்.
ஆனால், முதலில் ஞான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். இலக்கியத்துக்கு
சொல்லாட்சி, பாவம், விவரணை, மட்டும் தெரிந்தால் போதாது. கிராமம் என்றல்ல.
நகரத்தில் கூட விளிம்புநிலை வாழ்விலக்கியத்தில், வரும் சொற்களில் தான்
உங்களின் தடுமாற்றம், என்று புரிகிறது. டீக்கடை, மெக்கானிக் பட்டறை,
ரிக்ஷா வண்டி, ஆட்டோக்காரன், ஐஸ் விற்பவன், சிறுபெட்டிக்கடைக்காரன்,
போன்றோரின் பேச்சு செந்தமிழ் இலக்கியமாக எதிர்பார்க்கக்கூடாது. கி.ரா.வின்
எழுத்தை எப்படி அருமையாய் ஏற்றுக்கொள்கிறீர்களோ, அது போலவே இந்த
மொழியாடலின் அழகையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் யதார்த்த இலக்கியத்தில்
இப்படியும் ஒரு கோணம் என்று யோசியுங்களேன்.
ஞான் : சம்மதிக்கிறேன்... ஆனாலும் சார் தமிழ், தமிழ், தமிழ், தேன் சார்,
தமிழ் அமுதம், தமிழ் தெய்வம் அல்லவா? ஆனால் எந்தா சார் அது? சைக்கிள்
கேப்பில, உதார் விட்டுக்கினு, தத்தாரி, ஜொல்லு, லொள்லு... எனக்கு மனசிலாகவே
இல்லை? எந்தா பாஷை சார் இது? என்று இவள் தொடர, முத்துசாமி குலுங்கக்குலுங்க
சிரித்தார். மாணவர்களும் சிரிக்க ஒருகணம் அழுகையை மறந்து, இவளும் சிரித்து
விட்டாள்.
-தொடரும்
|
|