|
எம்.ஜி. சுரேஷ் பின் நவீனத்துவ எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர்.
நாவல், சிறுகதை, கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார். அரசு சுகாதாரத்
துறையில் பணியாற்றி வந்த இவர், விருப்ப ஓய்வு பெற்று முழுநேர
இலக்கியவாதியாக இயங்கி வருகிறார். இவரது 'இரண்டாவது உலகைத் தேடி' என்கிற
சிறுகதைத் தொகுப்பு 1981-இல் வெளிவந்தது. 1984-இல் 'தாஜ்மஹாலுக்குள் சில
எலும்புக் கூடுகள்' எனும் நாவலும், 1985-இல் 'கான்கிரீட் வானம்' என்கிற
நாவலும் 1998-இல் 'கனவுலகவாசியின் நனவு குறிப்புகள்' எனும் சிறுகதைத்
தொகுப்பும் வெளியாகியுள்ளன. இவை நான்கும் நவீனத்துவ படைப்புகளாகும்.
'அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்' (1999), 'அலெக்சாண்டரும் ஒரு
கோப்பைத் தேநீரும்'(2000), 'சிலந்தி' (2001), 'யுரேகா என்றொரு
நகரம்'(2002), '37'(2003), ஆகிய ஐந்து பின்நவீனத்துவ நாவல்களும்
'பின்நவீனத்துவம் என்றால் என்ன?' (2004) என்கிற நூலும் தொடர்ந்து
வெளிவந்துள்ளன.
'வல்லினம்' வாசகர்களுக்கு இவர் பிரத்தியேகமாக எழுதும் 'அனைத்துக்
கோட்பாடுகளும் அனுமானங்களே' எனும் கட்டுரைத் தொடர் இவ்விதழிலிருந்து
தொடங்குகிறது.
நமது யுகம் உண்மைகளைத் தொலைத்த யுகம். நாம் நகல்களின் நடுவே வாழ்கிறோம்.
கடவுளின் நகல்; உண்மையின் நகல்; காதலின் நகல்; என்று எல்லாமே நகல்களாக
இருக்கின்றன. இதற்கு முந்தைய காலங்களில் எல்லாம் மனிதன் இரண்டு விதமான
உற்பத்தியை மேற்கொண்டான். ஒன்று பொருள் உற்பத்தி; இன்னொன்று மறு உற்பத்தி.
இன்றைக்கு நிலைமை வேறாக இருக்கிறது. தகவல் உற்பத்தியும் நகல்களின்
உற்பத்தியுமே இன்றைய பிரதான அம்சங்களாக இருக்கின்றன. அதேபோல் முன்பெல்லாம்
'அறிவு' என்பது கற்றல் மற்றும் கற்பித்தல் என்ற அளவில் இருந்தது. இன்றைக்கு
அறிவு என்பது 'சரக்காக' மாறிவிட்டது. அறிவை கொள்முதல் செய்யலாம்.
விற்கலாம். அப்படியானால் இன்றைய தேதியில் அறிஞன் என்பவன் யார்? சரக்கை
விற்பவன். அறிவைத் தேடுபவன்.....? நுகர்வாளன். இன்றைக்கு எல்லாமே தலை கீழாக
இருக்கின்றன. நமது முன்னோர்கள் பணம் சம்பாதித்து, பின் அதைச் சேமித்துப்
பொருட்கள் வாங்கினார்கள். இன்றைய யுகம் பிளாஸ்டிக் யுகம். கையில் பணம்
தேவையில்லை; பிளாஸ்டிக் கார்டு இருந்தால் போதும். எதையும் வாங்கலாம்.
வேண்டியது வேண்டாதது என்று எதை வேண்டுமானாலும் வாங்கிக் குவிக்கலாம்.
சேமிப்பு எதுவும் வேண்டியதில்லை. வீடு முதல் வீடு கூட்டிப்பெருக்கும்
துடைப்பம் வரை சகலமும் கடனில் கிடைக்கும். கடனை ஒழுங்காகக் கட்டும் வரை
பிரச்சனை இல்லை. திடீரென்று வேலை போய்விட்டால் அல்லது வந்துகொண்டிருந்த
வருமானம் நின்று விட்டாலோ அவ்வளவுதான். வீடு, வாகனம், குடும்பம், மானம்,
மரியாதை அனைத்தையும் இழக்க வேண்டியதுதான். ஒரு வேளை, சிறை செல்லவும்
நேரலாம். இதுதான் இன்றைய மனிதனின் நிலை. கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகக்
கட்டமைக்கப்பட்டு வந்திருக்கும் தத்துவம்இ அரசியல், மதம், கலை-இலக்கியம்
சார்ந்த கோட்பாட்டுச்சட்டகங்கள் யாவும், மனிதனை இத்தகைய
நிர்க்கதிக்குத்தான் ஆளாக்கி இருக்கின்றன.
அது மட்டும் அல்ல. நம்மையும் அறியாமல் நமது யுகம் பல மரணங்களைச்
சந்தித்திருக்கிறது என்பதை நாம் அறிவோமா? கடவுளின் மரணம்; நாவலின் மரணம்;
மனிதனின் மரணம் போன்ற பல மரணங்கள் நிகழ்ந்துவிட்டன. அது குறித்துக் கவலை
எதுவும் படாமல் நாம் எல்லாம் இயல்பாக இருப்பதாக நினைத்து
நடமாடிக்கொண்டிருக்கிறோம். நாம் நினைப்பது போல் எல்லாமே 'இயல்பானவை'தானா
அல்லது அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளனவா என்று யோசிக்க வேண்டியது நமது
காலத்தின் கட்டாயமாகும். தலைக்கு மேல் சதா தொங்கும் கத்தி. எந்த நேரமும்
திவாலாகும் வாழ்க்கை. சாக்ரட்டீஸ் முதல் சார்த்தர் வரைஇ இயேசு கிறிஸ்து
முதல் முகமது நபி வரை போதித்த போதனைகள் என்ன ஆயின? பிளேட்டோ முதல் கார்ல்
மார்க்ஸ் வரை தொடர்ந்து உருவாக்கப்பட்டு வந்த கோட்பாடுகளின் பயன்
என்னவாயிற்று? இது போன்ற கேள்விகள் நம் மனத்தை நெருடுகின்றன அல்லவா?
முதலாளிய ஜனநாயகம், தேசிய விடுதலை, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், ஜனநாயக
சோஷியலிசம், போன்ற எல்லா அமைப்புகளும் வெறும் கருத்துக்களாக முடிந்து போய்,
நடைமுறையில் தோல்வி அடைந்து விட்டதை நாம் பார்க்கிறோம். பொன்னுலகுக்கு
உத்திரவாதம் கொடுத்த சிந்தனையாளர்கள் சுவடின்றி காணாமல் போனார்கள். அவர்கள்
கட்டமைத்துக் கொடுத்த கோட்பாடுகள் யாவும் எலும்புக்கூடுகளாக மியூஸியத்தில்
பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இது எதனால் நேர்ந்தது?
இதற்கான பதிலை ஒற்றை வரியில் சொல்ல முடியாது. இதற்கான பதிலைக் கண்டு
பிடிக்க ஒரு பகுப்பாய்வு தேவை. அந்தப் பகுப்பாய்வுக்கும் அடிப்படையாக ஒரு
தொகுப்பறிவு தேவை. அப்போதுதான் இதற்கான பதில் சாத்தியம். அந்த பதிலைச்
சாத்தியப்படுத்தும் ஒரு சாத்தியப்பாட்டின் பெயர்தான் பின் நவீனத்துவம்.
பின் நவீனத்துவம் என்பது ஒரு கோட்பாடல்ல; ஒரு சட்டகமும் அல்ல; அது ஒரு
மனோபாவம். எல்லாக் கோட்பாடுகளையும் சந்தேகிக்கும் மனோபாவம். கோட்பாடுகளை
நம்பி நடைமுறை அறிவைக் கைவிட்ட அபத்தத்தைச்சுட்டிக்காட்டும் மனோபாவம்.
அத்தகைய மனோபாவத்துடன் தொகுப்பறிவுடன் கூடிய பகுப்பாய்வை நாம் மேற்கொள்ளும்
போது சில விஷயங்கள் நமக்குத் தெரிய வருகின்றன. கடந்த இரண்டாயிரம்
ஆண்டுக்கால கலை, இலக்கிய, தத்துவ, அரசியல் வரலாற்றைப் புரட்டிப்பார்க்கும்
போது ஏற்படும் அதிர்வுகள் அவை. வரலாற்றைப்பற்றி நமக்குப் புகட்டப்
பட்டிருக்கும் அறிவுக்கும் நாம் எதிர் கொள்ளும் அறிவுக்கும் இடையிலான
வித்தியாசங்கள் அவை.
நாம் நினைப்பதுபோல் அறிவு என்பது ஒற்றையானது அல்ல. குறைந்தபட்சம் அது
ஒன்றுக்கு மேற்பட்டது.ஒன்று: புகட்டப்படும் அறிவு - அதாவது, அதிகாரத்தைக்
கையில் வைத்திருக்கும் அமைப்பு தனது நலன்களுக்கு ஏற்ப ஓர் அறிவைக்
கட்டமைத்து, அதை சமூகத்தில் உலவ விடுவது. அந்த அறிவு புழக்கத்தில்
இருப்பதால் அது இயல்பான அறிவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஜாதி, மதம்,
கோட்பாடுகள் போன்றவை இத்தகைய புழக்கத்தில் விடப்பட்ட அறிவுகளே. இன்னொன்று
எதிர்கொள்ளும் அறிவு. இந்த அறிவு இரண்டு விதமாக செயல்படுகின்றது. ஒன்று:
புகட்டப்படும் அறிவை 'இயல்பானதாக' நம்பி ஏற்றுக்கொள்வது; இரண்டு: அதை ஏற்க
மறுப்பது.இரண்டாயிரம் ஆண்டுக்கால மேற்கத்திய வரலாற்றிலும் சரி, அதே கால
அளவினாலான கிழக்கத்திய வரலாற்றிலும் சரி இது போன்ற அறிவுப் போக்குகள் நிலவி
வந்து கொண்டிருப்பதை நாம் கவனிக்க முடியும். பண்டைய ஏதென்சில் அதிகார
வர்க்கம் புழக்கத்தில் விட்ட அறிவுக்கு எதிராக, சாக்ரட்டீஸ் பரப்பிய அறிவு
இருந்ததால் ஏதென்ஸ் அரசு அவரை 'ஹெம்லாக்' என்ற விஷம் கொடுத்துக் கொன்றது.
ரோமானியர்கள் புழக்கத்தில் விட்ட அறிவுக்கு எதிரான அறிவை ஏசுகிறிஸ்து
பரப்பியதால், ரோமானிய அரசு ஏசுவுக்கு மரண தண்டனை வழங்கியது. ஆக, அறிவு
இரண்டு விதமான அறிவுகளாக இருந்து கொண்டிருக்கிறது. ஒன்று 'இயல்பானதாக
நம்பப்படும் அறிவு'. இன்னொன்று அதற்கு எதிரானதாக இயங்கிக்கொண்டிருக்கும்
அறிவு. அந்த எதிர் அறிவு இருப்பதையே, நம்பப்படும் அறிவால் சகித்துக் கொள்ள
முடிவதில்லை. இத்தனைக்கும் சாக்ரட்டீசும், ஏசுவும் தங்களின் அதிகார
அமைப்புக்கு எதிராக கலகம் செய்யவில்லை; ஆயுதம் தாங்கிய போர் தொடுக்கவிலை.
பேசினார்கள். அவ்வளவுதான். பிரச்சனை என்னவென்றால் அவர்கள் பேசிய பேச்சு
ஏற்கனவே புழக்கத்தில் இருந்த அறிவுக்கு எதிராக இன்னொரு அறிவை உற்பத்தி
செய்திருந்தது.
அறிவு என்றால் என்ன?
மனிதன் அடிப்படையில் தேடல் குணம் கொண்டவன். தேடலின் மூலம் அறிதல்
அவனுக்குச் சாத்தியப்படுகிறது. அந்த அறிதல் ஒரு புரிதலை நோக்கி அவனை
நகர்த்துகிறது. அதன் பெயர் அறிவு.
நல்லது; அறிவின் தோற்றம் குறித்த வரலாறு என்று ஏதேனும் இருக்கிறதா?
நிச்சயம் இருக்கிறது.
கிரேக்கம்தான் உலகின் முதல் தொன்மைச் சமூகம். நவீன சிந்தனைகள்
யாவற்றுக்கும் கிரேக்கச் சிந்தனைதான் அடிப்படையாக இருக்கிறது. எனவே,
மேற்கத்திய சிந்தனை மரபு பண்டைய கிரேக்க சிந்தனையின் நீட்சியாகவே
இருக்கிறது. 2500 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கத்தில் இரண்டு
சிந்தனையாளர்கள் இருந்தனர். ஒருவர் பார்மினிட். இன்னொருவர் பெயர்
ஹெராக்ளிடஸ். பார்மினிட், 'பிரபஞ்சத்தில் எதுவும் மாறாது. நமது புலனறிவு
நம்பத்தக்கது அல்ல." என்றார். ஹெராக்ளிடஸ், 'பிரபஞ்சத்தில் எல்லாம்
மாறுதலுக்கு உட்பட்டதே. மாறாதது என்று எதுவும் இல்லை. நமது புலனறிவு
நம்பத்தக்கதே' என்று சொன்னார். இந்த இரண்டு எதிர் எதிர் சிந்தனைகளிலிருந்தே
பல எதிர் எதிர் சிந்தனைகள் - அதாவது அறிவுகள் - தோன்றின.
இந்தியாவிலும் கடந்த இரண்டாயிரம் ஆண்டுக்காலமாக எதிர் எதிரான இரண்டு
அறிவுகள் நிலவி வருகின்றன. ஒன்று வைதீகம். இன்னொன்று அவைதிகம். வைதீகம்
'நீயே அது' (தத்வமசி) என்று பரம்பொருளோடு சுயத்தை (தன்னை)ப் பொருத்திக்
கொள்கிறது. அவைதிகமோ, 'சுயத்தை' மறுத்து மற்றதை (ழவாநச) உயர்த்திப்
பிடிக்கிறது.
இந்த முரண்பட்ட அறிவுகள் தங்கள் இருத்தலை உறுதி செய்து கொள்ளும் பொருட்டு
கோட்பாடுகள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு கோட்பாட்டுக்குப் பின்னாலும்
சமூகத்தின் ஒரு பிரிவினரின் நலன் பாதுகாக்கப்பட்டு, அந்த உள்நோக்கம்
வெளியில் தெரியாதவாறு அதன் மேல் லேபில்கள் ஒட்டப்பட்டன. அந்த லேபில்கள்
அந்தக் கோட்பாடு 'உண்மையானது' 'இயல்பானது' 'காலங்களுக்கு அப்பாற்பட்டது'
என்று பிரகடனம் செய்தன.காலங்கள் தோறும் இந்த நிலைதான் நீடித்து
வந்திருக்கிறது. இதிலிருந்து தப்பியவர்கள் யாரும் இல்லை.
கடந்த ஈராயிரம் ஆண்டுக்காலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக எழுந்து நின்ற
கோட்பாடுகளையும், அவற்றின் உள் முரண்களையும், பின் நவீனத்துவம் எவ்வாறு
இவற்றை எதிர் கொண்டது; கொட்டிக்கவிழ்த்தது என்பதையும் இனி காண்போம்.
(தொடரும்)
|
|