|
அலைகள் அணைத்துச் சிதறும் லங்காவித் தீவில் 1991
வாக்கில் நான் வேலைக்கு அமர்த்தப்பட்டேன். நெடுநாளைய தீபகற்ப உறவை
சுருங்கிக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டாலும் தீவு தரும்
தனிமைச்சுகம் அலைகள் அசதி மறுத்து நாள் முழுக்க எழுப்பும் ஓசை,
கடற்கரைகளில் நீர் தன் கைகளில் ஏந்தி நிற்கும் உல்லாசப்படகுகளின் நடனம்,
பயணிகளை அக்கரைக்கும் இக்கரைக்குமாய் சுமந்து செல்லும் ரம்மியமான உல்லாச
பெர்ரிக்கள், துறைமுகத்தின் செயற்பாடுகளில் சுறுசுறுப்பாக இயங்கும்
மனிதக்கால்கள், முதன் முதலாக மிதந்து வந்த பிரம்மிப்பின் புன்முறுவல்
பூக்கும் உவப்பான முகங்கள் போன்றவை எனக்குப் புது உறவுச் சாமரத்தை
வீசத்தொடங்கியிருந்தன.
எனக்கு பள்ளிக்கூடத்தைச் சதா பார்த்துக் கொண்டிருக்கும் வகையில் ஒரு சிறிய
புராதாண வீடு வழங்கப்பட்டிருந்தது. அதனுள் குடியேறிய நான் எத்தனையாவது
தலைமை ஆசிரியராக இருக்கக்கூடும் என்ற சிந்தனை தெறிப்பை வழங்கிய
வண்ணமிருக்கும் விநோத உள்முகக் கட்டமைப்புக்கொண்ட பலகை வீடு. வீட்டின்
கூரைகளின் மேல் தாத்தாவின் மடியில் சாவகாசமாய் வீழ்ந்து கிடக்கும் பேரனைப்
போல் அடர்த்தியான மாமரக்கிளைகளும் பச்சைப்பசேலென கட்டித் தழுவியவாறு
களித்திருக்கின்றன, அதன் இலைக்கூட்டங்கள்.
குளிர்ச்சாதன வசதிகளை மறுதலித்தவாறு ஜன்னல்களினூடே ஊடுருவிய வண்ணமிருக்கும்
ஈரப்பசை ஏந்தி வரும் கடற்காற்று; பலகை வீட்டின் முன்புறம் அகல
விரிந்திருக்கும் பச்சைக்கம்பளப்பரப்பாக புல் திடல், என சொர்க்க வாசலை
எனக்காக திறந்து விடப்பட்ட சுகமான அனுபவத்தில் திளைத்தவாறு என் பணியை
ஆற்றத்துவங்கியிருந்தேன். வேலைக்கமர்ந்த ஓரிரு வாரங்களில்
மாமரக்கிளைகளினூடே தாவி வரந்தா சட்டத்தின் மேல் அமர்ந்து, பார்வையை
நாலாபுறமும் தாவவிட்டு சற்றே நிதானித்து, வாசற்படிகளில் தாவி நின்று
மீண்டும் தன் பார்வையில் சுற்றுச்சூழலை அவதானித்து, ஒரு கள்வனைப்போல்
ஒவ்வோர் அடியையும் பொறுமையாகவும் பொறுப்பு நிறைவோடும் முன்னகர்ந்து
வருகிறது ஒரு மணிப்புறா. மணிபுறாவின் வருகையை நிராகரித்தவாறு, வராந்தா
பலகைத் தரை தீனிகளற்று வெறுமனே அகன்று கிடக்கிறது.
பிராணிகள் எதற்காக சதா பறந்தும் திரிந்தும் அலைமோதியும் கிடக்கின்றன?
புணர்ந்து இனப்பெருக்கம் செய்வதும், பசிக்கு உணவு தேடுவதுமே அவற்றின்
தினசரி வேலையாகிவிடுகிறது. வீட்டு வராந்தவரை ஒரு ஒட்டுறவுள்ள
விருந்தாளியைப் போல வருவது எதற்காக என்ற எண்ணம் எழும்போது அவற்றிற்கு
ஏதாவது பருக்கைகள் போட வேண்டும் என்று ஆயாசம் எழவே கைப்பிடி பருக்கைகளை
வராந்தாவில் விரவி விடுகிறேன். போடப்பட்டது தீனி என்று உணராது தன்னை விரட்ட
வீசப்பட்ட கற்கள் என சற்று மிரண்டு பின்வாங்கி, உற்றப்பார்த்து அவை
உள்ளபடியே பருக்கைகள்தான் என மீண்டும் நம்பிக்கை மலர்ந்து தீனியை நோக்கி
முன்னகர்ந்து வருகிறது! ஒவ்வொரு பருக்கையையும் தன் வசீகர அலகால் கொத்திய
பின்னர் மீண்டும் தன் பார்வையை அவதானித்தவாறு அடுத்த பருக்கையை நோக்கி
கவனத்தோடு நகர்ந்துவருகிறது.
பிராணிகள் உணவு உண்ணும் அழகு மனிதர்களை தன்னிலை மறக்கச் செய்துவிடுகிறது.
காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாரதி பாடியிருப்பதன் உள்ளர்த்தம்
ஆத்மார்த்தம் நிறைந்த பொருளைத்தரக் கூடியவை என உணரவைப்பவை அந்த
மணிப்புறாவின் உருவ அமைப்பு, உடலசைவு, அதன் மேல் இயற்கை பூசிய வண்ணம்,
மொழியறியாமை மனிதர்களை வெகுவாகக் கவர்ந்து விடவே பிராணிகளை மனிதர்கள் பலர்
நெருக்கமாக நேசிக்கத்துவங்கிவிடுகின்றனர் போலும்.
தனிமையாக வாழும் மனிதர்கள், பிராணிகளை தான் பெற்ற பிள்ளைகளைப்போல கருத்தோடு
அரவணைத்து அதனோடு வாழ்நாளைக் கழிப்பதும், லட்சக்கணக்காக அதற்கு காப்புறுதி
எடுத்துக் காப்பாற்றுவதும் வெளிநாடுகளில் இன்றும் நடந்து வருகிறது.
சூரியத்திசையை நோக்கி மலர்ந்து சிரிக்கும் சூர்யகாந்தி மலரைப்போல, நானும்
அந்த மணிப்புறாவின்பால் பையப்பையக் கவரப்பட்டேன். நான் தேநீர் அருந்தும்
சாயங்கால வேளையில், அந்த மணிப்புறாவும் சரியான நேரத்தில் கடமை உணர்வோடு நேர
அட்டையை `பஞ்ச்’ செய்யவரும் ஊழியனைப்போல் பறந்து திரிந்து முடிந்து
மரக்கிளையில் அமர்ந்து,கிளைகளுக்குத்தாவி வராந்தாவுக்கு வந்து ஓஉன் உணவில்
எனக்குப் பங்கில்லையா..?” என்று உரிமையோடு கேட்பதாக எனக்கு
உணர்த்திவிடுகிறது.
வராந்தாவில் நானிருக்கிறேனோ இல்லையோ, அதன் வருகை மட்டும் தவறியதே கிடையாது.
எனக்கும் அதற்குமான உறவு நாளுக்கு நாள் வலுத்து, ஏதோ கடந்து போன
ஜென்மங்களின் ரத்த உறவாக இருந்திருக்குமோ என்று உள்ளுணர்ந்து கொள்ளும்
அளவுக்கு எங்களின் நேசம் வளர்ந்தது. அதை நான் மனதார சந்தித்து நேசிக்கும்
வேளை இறைவனை தரிசிக்கும் உண்மை பக்தனைப்போன்ற உணர்வில் ஆட்பட்டு
இன்புற்றிருந்தேன். இந்த நேசம் அர்த்தமுள்ளதா? ஏன் இந்த உறவு நீடிக்கிறது?
ஒவ்வொரு நாள் சாயங்கால வேளை எனக்கு ஏன் ஆழ்ந்த அர்த்தத்தை வார்த்துக்
கொண்டிருக்கிறது? என்று சிந்திக்கும் என்னைப்போன்று பிராணிகள் பால்
மெய்மறந்து, சுயநினைவிழந்து தியானிக்கும் மனிதர்கள் வாழ்ந்து கொண்டுதான்
இருக்கிறார்கள் என்ற உண்மையை சுந்தர ராமசாமியின் `காகங்கள்’ கதை
மெய்ப்பித்து விடுகிறது.
பலநூறு காகங்களும், அதன் இருப்பை நேசிக்கும் மனநோயளி என்று மருத்துவராலும்,
அவரின் வாக்குமூலத்தால் பாதிக்கப்பட்ட சக மனிதர்களாலும் அபிப்பிராயத்துக்கு
உட்படுத்தப்படும் கதையின் நாயகனுமே இக்கதையின் முகாமையான கதை மாந்தர்கள்.
காகங்கள் கூட்டமாய் பறந்து வந்து அமர்ந்து படபடப்பதையும் அவை வான விதானத்தை
மட்டுமின்றி பூமிக்கோலத்தை தன் கருமைச் சிறகுகளால் வனப்பாக்குவதை மிகுந்த
ஈர்ப்போடு ரசித்த வண்ணம் இருக்கிறான் கதைச் சொல்லி. காகங்கள் நலனில் அவன்
காட்டும் அபரிதமான அக்கறை அவனை உள்ளபடியே மனநோயாளியாகப் பார்க்க வைத்து
விடுகிறது. மனிதர்களை சரிவர நேசிக்கத் தெரியாத பெரும்பாலான
மானிடக்கூட்டத்தில் இப்படியொரு அபூர்வமான பிறவியை சமூகம் வேறு எப்படிப்
பார்க்கும்?
எல்லாரும் அம்மணமாய் இருந்து பழகிவிட்ட உலகத்தில் ஒரே ஒருவன் மட்டும் உடல்
முழுக்க ஆடையணிந்து திரிவது அம்மணமாக இருப்பவர்களை அதிசயவைக்கத்தானே
செய்யும்! காகங்களை யாராவது நேசிப்பார்களா? இது என்ன பைத்தியகாரத்தனம்?
அதிலும் அவன் ஒரு கவிஞன் வேறு. காகங்கள் பற்றிக் கவிதை புனையும் கவிஞன்
என்ற ஏளனப்பெயர் வேறு! சபையில் காகங்கள் நலனுக்கு அவன் எழுப்பும் குரல்
எடுக்குமா என்ன?
அரிசி ஏற்றிவரும் லாரிகளிலிருந்து சிதறும் பருக்கைகளே காகங்களுக்கான
தீனிகளாகியிருந்தன. போக்குவரத்து நெரிசல் காரணமாக இருவழிப்பாதையாக இருந்ததை
ஒருவழிப்பாதையாக்க வேண்டும் என்று வணிகர்கள் குரல் எழுப்ப கலக்டர்
தலைமையில் கூட்டம் கூடுகிறது. அது ஒருவழிப்பாதையாகும் பட்சத்தில்
காகங்களுக்கு கிடைக்கும் பருக்கைகள் பறிபோகும் நிலைமை உண்டாகிறது.
காகங்களுக்கு கவிஞனைத்தவிர வேறு யாரும் குரல் கொடுப்பதாக இல்லை. அவன்
கருத்தை யாரும் பொருட்டாக மதிப்பதாகவும் இல்லை. ஒரு கட்டத்தில் “மனிதருக்கே
நாதியில்லை நொண்டிக் காகமாம், புத்தி கெட்ட முண்டம்” என்று கூட்த்தில்
எதிர்க்கண்டனம் எழுகிறது. இருப்பினும் காகங்கள்பால் அவன் கொண்ட கரிசனம்
குறைந்தபாடில்லை.
முடிவை மாற்றும்படி கலக்டரை நோக்கி ஒற்றைக் குரல் எழுப்புகிறான் கதை
சொல்லி, ஆதங்கத்தோடு, உடல் நலிவுற்ற நிலையிலும் காகங்கள் அரிசிப்பருக்கைகாக
தரை இறங்கும் வேளையும், அவை பருக்கைகளை பசியோடு கொத்தும் நிகழ்வும் அவனை
வசீகரித்த வண்ணம் இருக்கின்றன. அப்போதெல்லாம் அவன் அவற்றைப்பற்றி கவிதை
எழுதுவதில் ஆழ்ந்துவிடுகிறான். காகங்களின் சுதந்திர வெளிப்பாட்டுக்கு
உதவும் வகையில் வானமும் இந்தக் காலங்களில் விஸ்தீரணத்தை விரிவு
படுத்திக்கொண்டே போவதுபோல் தனக்கு தோன்றுவதாக இயற்கையின் விகசிப்பை
காகங்களின் சிறகசைப்போடு இணைத்து இன்புறுகிறார் கதைச்சொல்லி. காகங்களுக்கு
பெயரிடுவதும், அவற்றை கூர்ந்து நோக்கும் தருணம் தனக்கும் அதற்குமான உறவில்
இனம்புரியா ஒட்டுதல் கூடும்மென்று தோன்றுவதாக எழுதுகிறார்.
அதுமட்டுமின்றி தன்னையும் மற்றொரு காகமாக அவை கருதுகின்றன என்று சொல்லும்
உச்சத்துக்கு நேசிக்கிறார் கதைச்சொல்லி. காகங்களோடு மானசீகமான இவ்வாறான
உறவு கொண்டாடியவர், காகங்களின் இருப்பும், பசி போக்கிக்கொள்ளும் வாய்ப்பும்
பறி போவதை சகித்துக்கொள்ள முடியாத போது தனியொருவனாய் இருந்து காகங்களுக்காக
குரல் கொடுக்கிறார். அவனைத் தவிர மற்றவர்களெல்லாம் அவன் அபிப்பிராயப்படுவது
பைத்தியக்காரத்தனமாகவே புறம் தள்ளப்படுகிறது. கூட்டத்தின் பெரும்பான்மையோர்
கோரிக்கைப்படியே ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்ட பிறகு காகங்கள் தரைக்கு
இறங்காமல் இருப்பதும், பசிக்கொடுமையால் அவற்றின் கறைதல் கதறலாக மாறுவதையும்
பார்த்து அவர் மனம் துன்புறுகிறது.
சுந்தர ராமசாமி தனது ஆரம்ப காலங்களில் மார்க்சிய சிந்தனையை மையமாக வைத்து
கதை புனைந்த போது உருவானது இந்த `காகங்கள்’ சிறுகதை.காகம் என்ற படிமத்தை
கதையினூடே செலுத்தி எளியவர்களை வலியவர்கள் நசுக்கும் அவலத்திற்கு எதிரான
போர்க்குரலை இக்கதையினூடே ஒலிக்கச் செய்கிறார் சு.ரா.
கலை வெளிப்பாடு குறித்த சு.ரா வின் பார்வை இக்கதையில் உரக்க ஒலிப்பதாக
உள்ளது. மனிதனின் ஜீவத்துடிப்புகளை கலாப்பூர்வமாகச் சொல்வதில் அவர் கதை
எப்போதுமே முன்னிலை வகிப்பவைதான்.
|
|