வல்லினத்தில் தேடுதல்

எழுத்துரு உதவி / Tamil Font Help 

 இதழ் 2
செப்டம்பர் 2007
முகப்பு  |  உள்ளடக்கம்

பத்தி

 

ஒளிரும் திரையின் நிழல்

(The Motorcycle Diaries)

காளிதாஸ்

 

       
 

“Let the world change you, and you can change the world.”
“Peace is only found from within and needs to be shared with everyone there is my place and my hope”
“We all the same inside and out with ideas, goals, triumph and personal struggles compelled with corrupt governments and greedy religions.”

29 வயதான ஆல்பர்ட்டோ கிரனாடோவும் 23 வயதை தாண்டிய எர்னஸ்டோ குவேராவும் மேற்கொள்ளும் நான்கு மாத தென்னமெரிக்கப் பயணத்தின் நாட்குறிப்பின் பின்புலத்தை கொண்டு படைக்கப்பட்ட திரைப்படம்தான் “The Motorcycle Diaries”. பயணத்தின் நோக்கம் தென்னமெரிக்கா முழுவதும் (அதாவது அர்ஜென்டினாவிலிருந்து வெனிசுலாவரை) சென்று சுய அனுபவம் தேடுதல். அதற்கு மேலாக அவர்களுக்கிடையே உள்ள தொலைநோக்கு வாய்ந்த உள்ளுணர்வும் அசாதாரணமான அறிவுக்கூர்மை மற்றும் யதார்த்தவாத குண அம்சம் இருவரையும் ஒன்றிணைத்தப் பயணத்திற்கான தொடக்கப்புள்ளி.

பயணத்திற்கு பயன்படுத்திய வாகனம் மோட்டார் சைக்கிள். ஆல்பர்டோ வின் திட்டத்தின்படி அவரின் முப்பதாவது பிறந்தநாளில் இந்தப் பயணம் Peninsula of Gujira, Venezuela வில் நிறைவடைவதேயாகும். ஜனவரி மாதத் தொடக்கத்தில் துவங்கிய இந்தப் பயணம் இருவருடைய வாழ்வில் திருப்புமுனையாக மாறியது. இதுவரை அவர்கள் அறிந்திராத ஒரு கண்டத்தை அவர்கள் கண்டறிந்தார்கள். இந்தப் பயணத்திற்கு மூலக்காரணமாக இருந்த ஆல்பர்டோ கிரனாடோ உயிரியல் வேதியலாளர் (Biochemist). சக பயணியான எர்னஸ்டோ குவேரா ஒரு மருத்துவதுறை மாணவர், குஷ்ட வியாதி நிபுணர். அவர் (எர்னஸ்டோ) அடிக்கடி ஆஸ்துமா நோயால் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டவர். இந்த இரு காரணத்தினாலே எர்னஸ்டோவின் பெற்றோர் இந்தப் பயணத்திற்கு மறுப்பு தெரிவித்தனர்.

இந்தத் தடையை சாமர்த்தியமாக அணுகி தன் முதல் வெளிநாட்டு பயணத்தை துவங்கினார். ஆல்பர்ட்டோ வின் “1939 நார்ட்டன் 500” (மோட்டார் சைக்கிள் வகை) Buenos Aires சொகுசான வாழ்வை மற்றும் சொந்த வீட்டை விட்டு வெகு தூரம் பயணித்து செல்கிறது. இப்பொழுது “La Ponderosa” (நார்ட்டன் பெயர்) இருபக்க திறந்த வெளி பாதையையும் அடர்ந்த மலைத்தொடரையும் நோக்கி செல்கிறது. வழியின் இடையே விபத்துக்குள்ளாகிறார்கள். ஆல்பர்ட்டோ ஒரு நேர்காணலில், “சுமார் ஐம்பது தடவையாவது நார்ட்டன் விபத்துக்குள்ளாகியது. பயணத்தின் ஒரு சிறு பகுதி மட்டும்தான் நார்ட்டனின் மூலம் நடைப்பெற்றது. நார்ட்டன் லாஸ் ஏஞ்சலஸ், `சிலே’ வரைதான் தாக்குப்பிடித்தது. திரும்ப ஏற்பட்ட கோளாறுகளுக்கும் பழுது பார்த்தலுக்கும் பிறகு தெற்கு சிலேவிலிருந்த லாஸ் ஏஞ்சலஸ் எனும் கிராமத்தில் அதை (நார்ட்டன்) ஒரு லாரியில் ஏற்றிச்செல்ல வேண்டியதாயிற்று.”

லாஸ் ஏஞ்சலஸில், இரட்டை சகோதரிகளின் தந்தையின் கடை கிடங்கில் அன்று இரவை கழித்தனர். அதே நாளில் இரவுக்கு முன் எர்னஸ்டோ ஒரு வயதான ஆஸ்துமா நோயாளியை சந்தித்தார். அன்று இரவில் தன் நாட்குறிப்பில் வேதனை நிறைந்த வர்ணனையில் எழுதுகிறார், “கண்ணுக்கு புலப்படும் அடிவானமாக மறுநாளை மட்டுமே கொண்டுள்ள இந்த மக்களது வாழ்வின் இறுதிக் கணங்களில்தான் உலக தொழிலாளி வர்க்க வாழ்வின் ஆழமான அவலத்தை நம்மால் காண முடியும். செத்துக் கொண்டிருக்கும் அந்தக் கண்களில் மன்னிப்பை இறைஞ்சும் தாழ்மையான வேண்டுதல் தெரிகிறது. நம்மை சூழ்ந்துள்ள மர்மத்தின் விரிந்த வானத்தில் இன்னும் சிறிது நேரத்தில் கரைந்து விட போகின்ற அவர்களின் உடல்களைப் போலவே வெற்றிடத்தில் கரைந்து போய்விட்ட, ஆறுதலைக் கேட்டு அடிக்கடி மன்றாடும் பயனற்ற வேண்டுதல்களும் தெரிகின்றன. அபத்தமான ஏற்ற தாழ்வின் அடிப்படையில் அமைந்த இந்த நியதி எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்ற கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. ஆனால் அரசாங்கம் தனது படைகளைப் பெருக்குவதில் செலவிடும் நேரத்தைக் குறைத்து கொண்டு. சமூகரீதியாகப் பயன் தருகின்ற பணிகளில் அதிக பணத்தை, மிக மிக அதிகமான பணத்தை செலவழிக்க வேண்டிய நேரம் இது.” (சே குவேரா நாட்குறிப்பிலிருந்து)

லாஸ் ஏஞ்சலஸிலிருந்து புறப்படும் தருவாயில் இடையில் ஒரு லாரியில் ஏறி `Valparaiso’ பட்டணத்திற்கு சென்றனர். சிச்சினாவிடமிருந்து வந்த கடிதம் எர்னஸ்டோ வின் மனதை உருகுலைத்தது. ஆல்பார்டோ வின் குறிப்பின்படி ஒரு வாரம் காலம் அவர் அந்தக் கடிதத்தை கடலோர திண்ணையில் உட்கார்ந்து பார்த்தபடியே இருந்தார். கடற்கரையில் கழித்த அந்த ஒரு வாரம் ஒரு சிறு காவியமாகவே இருந்தது. “நிகழ” இருந்த பிரிவின் கசப்பையும் சிறிதளவு கொண்டிருந்த அந்தத் தொடர்ச்சியான தேனிலவு ஒவ்வொரு நாளும் நீண்டு, எட்டு நாட்களையும் நெருங்கிவிட்டது. ஒவ்வொரு நாளும் நான் என் மறுபாதியை அதிகமாக விரும்பினேன் அல்லது காதலித்தேன். இறுதியாக நாங்கள் பிரியா விடை பெற இரண்டு நாட்களானது. அது நிறைவானதாகவும் இருந்தது. (ஆல்பர்ட்டோ கிரனாடோ குறிப்பு)

அதன் பிறகு அடாசாமா பாலைவனத்தை இரவு நேரத்தில் கடந்தார்கள். பிறகு சூக்கிகாமாட்டாவைச் சேர்ந்த சுரங்கத் தொழிலாளர்களான கம்யூனிஸ்ட் தம்பதிகளை சந்தித்தனர். அன்று அவர்களுக்கு நீண்ட இரவாக இருந்தது. “பாலைவன இரவில் உறைந்து, ஒருவர் மீதொருவர் சாய்ந்து உட்கார்ந்திருந்த அந்த ஜோடி உலக தொழிலாளி வர்க்கத்தின் வாழும் பிரதிநிதிகள். என் வாழ்க்கையிலேயே நான் அனுபவித்த மிகக்குளிரான நாள் அது. அது மட்டுமல்ல வினோதமாகத் தோன்றிய இந்த மனிதர்களுடன் மிக நெருக்கமாக நான் இருந்து கழித்த ஓர் இரவும் அதுதான். ஒரு சமூகத்தின் ஆரோக்கியமான வாழ்வுக்கு “கம்யூனிஸ் புழு” ஏற்படுத்தும் அல்லது ஏற்படுத்தாத அபாயத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், தொடரும் பட்டினிக்கு எதிரான ஒரு எதிர்ப்பாக, இதைவிட மேலான ஒரு வாழ்க்கைக்கான ஒரு விருப்பமாக கம்யூனிஸம் இங்கு இயல்பாக எழுகிறது. தங்களால் புரிந்து கொள்ளப்பட முடியாத அந்தக் கோட்பாட்டை இந்த மனிதர்கள் நேசிக்கிறார்கள்.அவர்களை பொருத்தவரை அதன் அர்த்தம் “ஏழைகளுக்கு உணவு” என்பதுதான். இந்த அர்த்தம் அவர்களால் புரிந்து கொள்ளப்படக்கூடியது. அவர்களின் வாழ்வை நிரப்பக்கூடியது.(சே குவேரா நாட்குறிப்பிலிருந்து) அடுத்து அவர்கள் பெருவிய மலைச்சிகரங்களை அடைத்தார்கள். இடையே கிராமத்துத் தெருக்களில் கடந்து சென்ற அந்நியர்களை, தோற்கடிக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த மக்களை எதிர்கொண்டார்கள். “அந்த மக்கள் பணிவானவர்களாகவும், ஏறத்தாழ அச்சமடைந்தவர்களாகவும், புற உலகத்தைப் பற்றி அக்கறையற்றவர்களாகவும் காட்சியளித்தார்கள். பின் இருவரும் குஸ்கோவிலிருந்து மச்சு பிச்சுவின் சிதிலமடைந்த நகர்களுக்கு இரயிலில் சென்றார்கள். இன ஏற்றத்தாழ்வின் கொடுமைகளை நேரடியாக அறிந்தார்கள். பிறகு இருவரும் பெருவிற்குள் நுழைந்தவுடன் கட்டிடக் கலையிலும், அது வெளிப்படுத்தும் பண்பாட்டிலும் மேற்கத்திய ஸ்பேனிஷ் மற்றும் இந்தியக் கூறுகளைத் தன்னிடத்தில் ஒருங்கே கொண்டிருந்த காலானீயக் கட்டிடங்களால் கவரப்பட்டனர். அந்த நகரை சுற்றிக் காட்ட அவர்களுடன் `Don Nestor’ என்ற குள்ளமான வயதான பெண்ணுடன் இருந்தனர். ஆற்றிய மலைகளிலிருந்து இரு பயணிகளும் லீமாவுக்கும், பிறகு பெருவிய அமோசோன் காடுகளுக்கு சென்றார்கள்.

கம்யூனிஸ்ட் மருத்துவர் ஹியூகோ பெஷியால் நடத்தப்பட்டதொரு நோயாளிக்களுக்கான குடியிருப்பைச் சேர்ந்த சமூகப் பணியாளர் ஸொரெய்யர் பொதுவார்த்தேலிடம் நட்பு கிடைத்தது. ஹியூகோ அவர்களுக்கு உணவு மற்றும் புதிய உடைகளை கொடுத்து உதவுகிறார். அவர் Mariategui and Caser Vallejo இரு நாவல்களை அறிமுகம் செய்தார். இரண்டு பயணிகளும் பிறகு உகாயவி நதியின் வழியாக ஸான் பாப்லோவில் இருந்த தொழுநோயாளிகளின் குடியிருப்புக்குச் சென்றார்கள். அந்தப் பகுதியிலிருந்துதான் அமோசன் நதி கடலை நோக்கிய நீண்ட மெதுவான பயணத்தைத் தொடங்குகிறது. புழுக்களும் பூச்சிகளும் நிறைந்த காட்டின் நடுவில் எர்னஸ்டோ வை ஆஸ்த்மா தாக்கியது.

தினமும் நான்கு முறை அட்ரினலின் மருந்தைச் செலுத்திக் கொண்டு அவர் படுக்கையிலேயே நாள் முழுவதும் இருக்க வேண்டிருந்தது. கிரானாடோ வின் மிகவும் விரிவான குறிப்புகளில், “எர்னஸ்டோ வுக்கு ஏறத்தாழ தினமும் ஆஸ்த்மா தாக்குதல்கள் ஏற்பட்டதாக தனது தோழர் ஆஸ்த்மாவின் தாக்குதலுக்கு எப்படி இரையாகினார் என்பதையும், அவருக்கு அட்ரினலின் மருந்தையோ அல்லது கைவசமுள்ள எந்தவொரு மருந்தையோ ஊசி மூலம் செலுத்துவதற்காக ஊசிகளை கிருமி நீக்கம் செய்வதற்கு தண்ணீரையும் நெருப்பையும் பெற்றுத் தரும்படி வழிப்போக்கர்களிடம் கேட்டதை விவரிக்கிறார்”. இந்தச் சமயங்களில் எர்னஸ்டோ வுக்கு இருந்த துணிச்சலுக்கும், மனவலிமைக்கும் சவால் விடும் வகையில் ஆஸ்த்மா தாக்குதல்கள் அடிக்கடி ஏற்பட்டன. தொழுநோயாளிக் குடியிருப்பில் நிலவிய ஆரோக்கியமற்ற அவலமான சூழ்நிலையில் கழித்த பதினைந்து நாட்கள் அவருடைய உடல் குணமடைவதற்கு உதவியது. பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் தொழுநோயின் பயங்கரமும், தொழுநோயாளிகள் சமூகரீதியாக நடத்தப்படும் விதமும் எர்னஸ்டோ வை பாதித்தன.

அவர் தன்குறிப்பில் “நாங்கள் இதுவரையில் கண்டவற்றிலேயே மிகவும் பயங்கரமான ஒரு காட்சி; வலதுகையில் ஒரு விரல்கூட இல்லாமல் அவற்றுக்குப் பதிலாக சில குச்சிகளை தனது மணிக்கட்டில் கட்டிக் கொண்டு அக்கஸ்டியன் வாசிக்கும் ஒரு கலைஞன். பார்வையற்ற ஒரு பாடகன், அந்த நோய் நரம்பு மண்டலத்தைப் பாதித்ததால் ஏறத்தாழ அனைவருக்கும் முகங்கள் விகாரமாக இருந்தன. தொழுநோய் காப்பகத்தில் சில்வியா என்ற இளவயது பெண் தொழுநோயாளியை சந்திக்கும் காட்சியில் அவர்கள் இருவரின் உரையாடல்:

(எர்னஸ்டோ மற்றும் சில்வியாவின் உரையாடல். சில்வியாவை சந்திக்கும் போது சில்வியா படுக்கையில் படுத்திருக்கிறார். எர்னஸ்டோ சில்வியாவின் பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். ஆஸ்துமா தொல்லையால் எர்னஸ்டோவிற்கு மூச்சு திணறுகிறது.)

சில்வியா: ஏன் மூச்சு இப்படி..?

எர்னஸ்டோ: பழுதடைந்த நுரையீரலோடு பிறந்தவன் நான்

சில்வியா: பாவம் நீ

எர்னஸ்டோ: அப்படியொன்றும் மோசமில்லை, என்னைக் கட்டாய ராணுவ சேவையிலிருந்து இதுதான் காப்பாற்றியது. யாருடைய பூட்சையும் நான் துடைக்காமல் தப்பிச்சேன்.

சில்வியா: இதனால்தான் டாக்டரானாயா? நீயும் நோயாளியாலா?

எர்னஸ்டோ: இருக்கலாம். நான் கத்துக்கிட்ட முதல் வார்த்தை ஊசி குத்தறது. ஏதோ ஒரு வகையில் பயனா இருக்கனும்னு ஆசைப்பட்டேன்.

சில்வியா: நீ நேரத்த வீணடிச்சிக்கிட்டு இருக்க...

எர்னஸ்டோ : ஏன்?

சில்வியா: வாழ்க்கை ரொம்ப கஷ்டம்

எர்னஸ்டோ : உண்மைதான். நாறி போய்தான் கிடக்குது. ஆனா வாழ்கிற ஒவ்வொரு வினாடி கடுமையாக போராடி மரணத்தையே நரகத்துக்கு விரட்டி அடிக்கணும். இல்லையா?

“சூக்கிகாமாட்டாலில்தான் 1952 மார்ச் 13-18க்கு இடைப்பட்ட காலத்தில்தான் எர்னஸ்டோ குவேரா 'சே’வாக மாறத் தொடங்கினார். வறுமை, அநீதி, மற்றும் கொடுங்கோன்மை ஆகியவற்றைப் பற்றி அவருடைய உணர்வுகள் மிகவும் தீர்மானமாக இருந்தன. சமத்துவமின்மை, ஏழை மக்களின் ஆதரவற்ற நிலை ஆகியவற்றிலிருந்து உருவாகும் வறுமை மற்றும் துயரம் ஆகியவற்றைக் கண்டு அவர் வேதனையடைகிறார். உருக்கமான இக்காட்சி படமாக்கப்பட்ட விதம் ஆழமானது. சக நடிகர்களின் உடல் மொழியும் குறைவான வசனமும் இந்தக் காட்சியை உயிர்ப்பாய் அமைந்துள்ளது.

(சே குவேராவின் ஆற்றைப் பற்றிய உரையாடல். எர்னஸ்டோ கயிற்று கட்டிலில் அமர்ந்து ஆழமாக ஆற்றையே பார்த்துக் கொண்டிருக்கிறார்)

ஆல்பர்ட்டோ : ஏன் Fuser

சே: இந்த ஆற்றை பார்த்தியா?

ஆல்பர்ட் : ஆமாம்

சே: இது நோயாளிகளையும் நலமானவர்களையும் பிரித்து வச்சிருக்கு.

அடுத்த காட்சியில் சே குவேரா தனது பிறந்த நாள் விருந்தில் கலந்து கொண்ட அமோசன் காட்டு கிராமமொன்றின் மக்களுக்கு நன்றி கூறும் விதமாக ஆற்றிய தனது முதலாவது “மக்களுக்கான” உரையில் கவித்துவத்துடனும் கூறுகிறார். “மெக்ஸிகோவிலிருந்து மெகல்லன் நீர்சந்திவரையில் தனி சிறப்பான இனவரைவியல் ரீதியான ஒத்த தனிமைகளுடன், நாம் அனைவரும் ஒரே மெஸ்டிஸோ இனத்தைச் சேர்ந்தவர்களாவோம். உரையாற்றிய பின் அவர் அக்கரையிலுள்ள தொழுநோயாளிகளுடன் தன் பிறந்த நாளை கொண்டாட முடிவு செய்தார். அந்த இரவில் படகு கிடைக்காததால் நீரில் குதித்து அக்கரைக்குச் செல்ல தொடங்கினார். ஆல்பர்ட்டோ சேவை இச்செயலிலிருந்து தடுத்தும் அதற்கு சே குவேரா, “எத்தனை முறைதான் நம்மால் முடியாதென நினைத்திருப்பது?” என கூறி நீரில் குதித்தார். இந்தக் காட்சி சே குவேராவின் ஒடுக்கப்பட்ட மனிதர்கள் மீதான நேசத்தையும் அவர்களுக்காகப் போராடும் மனநிலையையும் பெற தொடங்குகிறார்.

மிகவும் அன்னியமான உலகங்கள், சமூகங்கள், இனங்கள் மற்றும் பண்பாடு ஆகியவற்றை தொடர்ச்சியாகத் தொடர்ந்து எதிர்கொண்டு அடுத்தப்படியாக வெனிசூலாவுக்கு சென்றனர். வெனிசூலாவில் தங்குவதையே கிரனாடோ விரும்பிய போதிலும் , ஒரு அர்ஜென்டினா நண்பரின் மூலமாக பந்தயக் குதிரைகளை ஏற்றிச் செல்லும் விமானத்தில் தனது நாட்டுக்கு எர்னஸ்டோ வுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. விமானம் உயரே பறக்க நிஜமான ஆல்பர்டோ திரையில் தோன்றி வானத்தைப் பார்த்தபடி திரைப்படம் நிறைவடைகின்றது.

இந்தத் திரைப்படம் 2004ம் ஆண்டு வெளியாகி பல முக்கிய விருதுகளை வென்றது. குறிப்பாக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. படத்தின் இயக்குனர் Walter Salles. இவர் பிரேசில் நாட்டை சேர்ந்தவர். “Behind The Sun” “Central Station” போன்ற உலகத்தரமான திரைப்படங்களை இயக்கியவர். படத்தில் எர்னஸ்டோ கதாபாத்திரத்தில் நடித்தவர் (Gael Garcia Bernal) மெக்ஸிக்கோ நாட்டை சேர்ந்தவர். இவர் நடித்து வெளிவந்த Amores Perros படம் மூலம் தனது அபார நடிப்பால் சிறந்த இள நாயகன் விருதை பெற்றார். எர்னஸ்டோ முக சாயல் அறவே இல்லாவிட்டாலும் கதாப்பாத்திரத்தில் மிக ஒட்டியே நடித்துள்ளார்.

ஆல்பர்டோ கதாபாத்திரத்தில் நடித்த Serna அவர் அர்ஜென்ட்டினாவை சேர்ந்த அறிமுக நாயகர். படத்தின் தயாரிப்பாளரான Robert Redford கூற்றுப்படி இவ்விரு நாயகர்களும் சுமார் 3 மாத காலம் பயிற்சிக்கு பின் படப்பிடிப்பு களத்தில் இறங்கினர். பின்னனி இசை படக்காட்சியை இன்னும் பலப்படுத்தியது. Gustavo Santaollala ஸ்பேனிஷ் நாட்டை சேர்ந்தவர் பின்னனி இசையை லாவகமாக பயன்படுத்தியுள்ளார். மிக முக்கியமாக தொழுநோயாளியை படகில் ஏற்றிச் செல்லும் காட்சி மிக நேர்த்தியாகவும் நுட்பமாகவும் கையாண்டுள்ளார்.

“பயணம் அவசியமானது, வாழ்க்கை அவசியமற்றது” (சேவின் குறிப்பிலிருந்து) ஏறத்தாழ எட்டு மாதங்களில் 5 நாடுகள் பயணம் இந்த இரு பயணிகளின் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட முதிர்ச்சியையும், புதியதற்கான ஏக்கமும் தணிந்து அந்த இரு இளைஞர்களும் செய்ய விரும்பிய அனைத்தையும் சுதந்திரமாக செயல்படத் துவங்கின. சேவுக்கு இந்த தென்னமெரிக்க பயணம் தனிப்பட்ட வகையிலும் , அரசியல் ரீதியாகவும் இருந்த பல விஷயங்களை தெளிவுப்படுத்தியது. இப்பயணத்தின் எட்டு வருடங்களுக்குப் பிறகு, பிடல் காஸ்டரோவோடு இணைந்து வெற்றிகரமாக கியூபா புரட்சியை நடத்திய புரட்சியாளராக எர்னஸ்டோ சே குவேரா உருமாறியிருந்தார்.

 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
  முகப்பு  |  உள்ளடக்கம்  
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768