வல்லினத்தில் தேடுதல்

எழுத்துரு உதவி / Tamil Font Help 

 இதழ் 2
செப்டம்பர் 2007
முகப்பு  |  உள்ளடக்கம்

பத்தி

 

என் கடலோரத்தில் சில காலடிச்சுவடுகள்

பூங்குழலி வீரன்

 

       
 

வலியாய் வலி.

`வலி’. சொல்லும்போதே வலிக்கிறது. எழுதும்பொழுதும், உணரும்பொழுதும் எவ்வளவு வலித்திருக்கும். `வலி’ தொகுப்பில் உள்ள கவிதைகள் நமக்குள் ஏதோ ஒரு நெருடலைப் கோடு கிழித்தப்படியே நகர்கிறது. அண்மையில் ஈழப் போராட்டத்தில் நம் தமிழ் உறவுகளுக்குக் கிடைத்த வலிகள் அறிவுமதியின் வாயிலாக நம்மை வந்தடைந்திருக்கிறது.

அறிவுமதியின் `வலி’ கவிதைகள் பாசாங்கற்ற உண்மையின் குரலைப் பதிவு செய்திருக்கிறது. ஒரு கவிதையின் முக்கியமான கூறாக இவ்வுண்மை நிலையே கருதப்படுகிறது.

வாழ்வதற்கான இடப்பெயர்வு- அது ஓர் அடிமையாகவோ...அகதியாகவோ... சில நூறு மைல்களாகவோ... பல நூறு மைல்களுக்கு அப்பாலோ என்றாலும் அது தரும் வலி என்பது ஒன்றுதான். பெரும் துக்கத்தையும் வலியையும் தனிமையுணர்வையும் அது ஏற்படுத்திவிடும். மொழி, கலைப் பண்பாடு, வாழ்வுமுறை என அனைத்தும் அந்நியமாகிப் போன சூழலினான புலப்பெயர்வு ஏற்படுத்தும் தனிமையுணர்வும் அந்நியமாகிப் போகும் நிலையும் மிகப் பெரும் வலியைக் கொண்டு வரக்கூடியது.

அங்கே சேர்ந்திருந்தால்
செத்துப்
பிழைத்திருக்கலாம்

இங்கே சேர்ந்ததனால்
செத்துச்
செத்துப்
பிழைக்க
வேண்டியிருக்கிறது.

இருந்தாலும் இறந்தாலும் தாய்மண்ணில் இருப்பது போன்றதான உணர்வுகள் வேறெங்கும் கிடைக்காது. எமக்கான மண்ணில் நிற்கின்றோம் என்பதே பலருக்கு மிகப் பெரிய தன்னம்பிக்கையைக் கொடுத்துக் கொண்டிருக்கும். மண்ணைப் பிரிந்து வரும் வலியும் உயிரைப் பிரிந்து வரும் வலியும்... போராட்டத்தில் இணைந்திருந்தாலாவது கூட நாட்டைப் பிழைக்க வைத்திருக்கலாம். புலம்பெயர்வினால் செத்துச் செத்துப் பிழைக்க வேண்டியிருக்கிறது. இருப்பினும் வாழ்விருத்தலுக்காகச் சில சமாதான உடன்படிக்கைகள் செய்யப்பட்டே வருகிறது . எப்படியாகினும் வாழ்ந்தாக வேண்டுமே!

வந்து
திறப்பார்கள்
என்று காத்துக்கொண்டிருக்கிறது

கதவு

எந்நாள் வரைக்கும் நாமும் நமது துயரமும்? எல்லாரும் ஒரு நாள் தமக்கான வாழ்வு விடியும் என்ற நம்பிக்கையில் தான் இருக்கிறார்கள். எமக்கான வாழ்வின் விடியல் எப்போது? நீண்ட இரவு எப்படியிருந்தாலும் விடிகிறது. ஏன் வாழ்விற்கான விடியல் மட்டும் சாத்தியப்பாடுகளைத் துறந்து நிற்கிறது. கிழக்கில் கண் விழிக்கும் காலைச் சூரியன் மேற்கில் கண்மூடும் போதும் மீண்டும் நாளை விடியும் விடியலுக்காய் நம்பிக்கை தொடர்கிறது.

பறக்க வானமற்ற
ஊரிலிருந்து
வந்திருக்கின்றன

பறவைகளும்
அகதியாய்..

மானிடத் தேடல் ஓய்வதில்லை... இரவோ பகலோ தொடர்கிறது தேடல். நாளை பிறக்கும் புதுநாள் மீண்டும் மீண்டும் தேடலில்தான் தொடங்கும். ஆனால், இங்கு உயிர் வற்றிய, வலி வற்றிய மனிதங்கள் விழிகளில் ஜீவன் தேக்கி காத்து நிற்கின்றது. நேற்றும் இன்றும் எத்தனை முறை வந்தாலும் நாளை நமக்காக காத்துக் கிடக்கும். ஆனால், மரணங்கள் மறுபடியும் உயிர்க்குமா!

முல்லை
மருதம் விட்டு
நெய்தல் தாண்டி
நாங்கள்
குடியேறிய
இடமெல்லாம்
பாலை

காலம் வாழ்வினையே மாற்றி விடுகின்றது. காலம் என்னும் காட்டாற்று வெள்ளத்தில் கரைந்து மறையும் மானுடச் சருகுகளாய் மாந்த வாழ்வு. இல்லாத ஒன்று கிடைப்பதென்பது மகிழ்வினைத் தரக் கூடியது... காலம் காலமாய் இருந்த ஒன்று திடீரென்று இல்லாமல் போவது எத்தனைக் கொடுமையானது? உயிர் வற்றிப் போகும் வலி அல்லவா அது. என்ன செய்வது. எம் தமிழர் வாழ்வு என்று பெறப்போகிறது இழந்ததையும் தேடிக் கொண்டிருப்பதையும்.

பிழைக்க வந்தவர்கள்
உணர்வார்களா

பிழைக்க வந்தவர்களின்
வலியை

பிழைப்பு! பிழைப்பிற்காக வாழ்வதா... வாழ்விற்காக பிழைப்பதா... ஏதாவதொன்று சாத்தியப்பட வேண்டும். ணினால், பிழைப்பென்பது இங்கு பிழை என கருதப்படுகிற பொழுது வாழ்வு எதற்காக? வலிகள் சுமந்த பிழைப்பு, பிழைப்பு சுமக்கும் வலிகள் ஒரு துளி கண்ணீரைத் தவிர, நீளும் கரங்களைத் தவிர வேறென்ன நாம் செய்யலாம்...

அறுக்காமல்
விட்டுவிட்டு வந்த
வயலில்

பசியாற
வரும்
குருவிகளையாவது

சுடாமல்
இருப்பார்களா?

கவிஞனின் கவிதை மனம் குருவிக்காகவும் வருந்துகிறது...

விட்டு வந்த வயல்...
விட்டு வந்த வீடு...
விட்டு வந்த உறவுகள்
விட்டு வந்த வாழ்வு

இதுதான் `வலி’

 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
  முகப்பு  |  உள்ளடக்கம்  
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768