|
சிலாங்கூர் மாநிலத்தின் முன்னால் அரச நகரம் கிள்ளான்
என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நகரை வடகிள்ளான், தென் கிள்ளான் என்று
பிரித்து வைத்திருப்பது கிள்ளான் நதி. அக்காலத்தில் இந்த நதியில் பாலம்
கிடையாது. படகுகளே பயன்படுத்தப்பட்டனவாம். அதற்கு மூன்று காசு கட்டணம்
வாங்கினார்களாம்.
இந்த ஆற்றில் ஆங்கிலேயர் ஆட்சி, இரும்புப்பாலம் கட்டத்தொடங்கியது.
இம்மாதிரி புதிதாகப் பாலம் கட்டும் போது, இரகசியமாக மனிதர்களின் தலையை
வெட்டிப் போட்டு அதன் மேல்தான் பாலம் கட்டுவார்களாம். அப்படிச் செய்தால்
தான் பாலம் நிலைத்து நிற்குமாம். அப்படி ஒரு நம்பிக்கை!
இக்கூற்று உண்மையோ பொய்யோ தெரியவில்லை. ஆனால் இந்த தலைவெட்டும் சம்பவம்
மக்களிடையே பரவி, பெரும்பீதியை உண்டாக்கி விட்டிருந்தது என்பது மட்டும்
உண்மை. லங்காட் சாலை என்பது கிள்ளானில் இருந்து பந்திங் நகருக்குச்
செல்கின்ற ஒரு சாலை. கிள்ளானுக்கும் பந்திங்குக்கும் இடையில் ஓர் அன்னாசித்
தோட்டம், சாலையில் மேற்குப் பக்கத்தில் அமைந்திருந்தது. சாலையை ஒட்டி
பாட்டாளிகளின் லயங்கள் நீண்டு கிடந்தன.
சாலையின் கிழக்குப் பக்கத்தில் ஓங்கி வளர்ந்த இருண்ட காடு சாலையைத்
தொட்டுக்கொண்டிருந்தது. காட்டுக்கும் சாலைக்கும் இடையில் காட்டுத் தண்ணீர்
ஓடுகின்ற கருங்கானது எனப்படும் கால்வாய் ஒன்று நீண்டு கிடந்தது.
(`Black Canal’ என்பது தமிழன் நாவில் கருங்கானது என்று மருவிப்போனது.)
சுத்தமான வரத்தேநீர் போன்று கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்தத்
தண்ணீர் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் இந்தக்கருங்காணே காவிரி நதியாய்
விளங்கியது அத்தோட்ட மக்களுக்கு. இந்தக் கருங்காணில் விரால், மயிரை, போன்ற
மீன்கள் மிகுதியாய் இருந்தன. ஓய்வு நேரங்களில் சிறுவர்களும், பெரியவர்களும்
தூண்டில் கம்புகளுடன் அங்கே அமர்ந்து மீன் பிடிப்பது அன்றாடக் காட்சிகளில்
ஒன்று.
இவர்களில் நான் எல்லன் பற்றி கூற வேண்டும். எல்லன் என்ற ஒரு பாட்டாளி.
நண்டும் சிண்டுமாய் அவனின் குடும்பம் பெரிதாய் இருந்தது. தோட்டத்தில்
மாடாய் உழைத்த போதிலும் குடும்பம் அரைவயிற்றுக் கஞ்சி குடிக்கின்றன
நிலையில்தான் இருந்தது. எனவே தோட்டம் போடுதல், வேட்டையாடுதல், மீன்
பிடித்தல் போன்ற உபரித்தொழில்களையும் அவன் செய்து கொண்டிருந்தான்.
அந்தக் கருங்காணில் மீன் பிடிப்பதிலும் அவன் மிக வல்லவனாய் இருந்தான். இரவு
நேரத்தில் தூண்டில் போட்டால் நிறைய மீன்கள் கிடைக்கின்றன என்பதையும் அவன்
தெரிந்து வைத்திருந்தான். சமயத்தில் பத்துக்கட்டி மீன்கள் கூட
கிடைத்துவிடும். கட்டி ஐந்து காசு என்று அவற்றை விற்றுவிடுவான்.
கிள்ளான் ஆற்றுப்பாலம் கட்டுவதற்காகத் தலைவெட்டுகிறார்கள் என்ற வதந்தி
அங்கேயும் பரவியிருந்தது. எனவே இரவில் தூண்டில் போடுகிறவர்கள் பலரும்
அப்பழக்கத்தைக் கைவிட்டிருந்தனர். ஆனால் எல்லன் மட்டும் இரவில் தூண்டில்
போட்டு வந்தான். அன்று இரவில் அவன் தூண்டில் போட்டுக் கொண்டிருந்தான்.
அவனுக்குப் பின்னால் இருந்த லயத்துக்காடு அரவம் ஒடுங்கி உறங்கிக் கிடந்தது.
சாலையில் கிள்ளான் பக்கம் இருந்து வண்டி ஒன்று வந்து கொண்டிருப்பது
தெரிந்தது. அதைக் கண்டு கொள்ளாமல் தூண்டில் மேலேயே கண்ணாய் இருந்தான்
எல்லன். வேகமாக வந்த வண்டி அவனின் அருகில் வந்ததும் டக்கென்று நின்றது.
வேகமாக இருவர் இறங்கினர்.
அவ்வளவுதான்..!
“இன்னைக்கி நம்ம தலைபோச்சுடா” என்று மிரண்டு போன எல்லன், `சாலைப் பக்கம்
ஓடினால் மாட்டிக்குவோம்’ என்று அஞ்சி எதிரே அகன்று கிடந்த கருங்காணை ஒரே
தாவில் தாண்டிக் குதித்து, காட்டுக்குள் பாய்ந்து விட்டான். `கும்’ இருட்டு
என்று சொல்வார்களே, அப்படி ஒரு இருட்டாய்க் கிடந்தது காடு. பள்ளம், மேடு,
மரம், செடி என்று தெரியாமல் கண்ணிருந்தும் குருடனாய் விழுந்தும் எழுந்தும்
முட்டி மோதிக் கொண்டு கால்போன போக்கில் போய்க்கொண்டிருந்தான்.
ஆங்காங்கே மேய்ந்து கொண்டிருந்த காட்டுப்பன்றிக் கூட்டங்கள் மிரண்டு ஓடிக்
கொண்டிருந்தன. உயர்ந்த மரக்கிளைகளில் உறங்கிக் கொண்டிருந்த குரங்குக்
கூட்டங்கள் அகாலமாய் விழித்துக் கொண்டு அலற ஆரம்பித்தன. இவற்றை எல்லாம்
கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் பைத்தியக்காரன் போன்று அவன் நடந்து
கொண்டிருந்தான். இப்படி விடிய விடிய அவன் நடை ஓயவே இல்லை.
விடிந்ததும் கிழக்கே கம்போங் ஜாவா, பூச்சோங் சாலையில் வந்து
ஏறிவிட்டிருந்தான். அப்பொழுதுதான் அவனுக்கு நிதானம் வந்தது. “வூட்டுல
பொஞ்சாதி, புள்ளைய எல்லாம் அழுது புலம்பிக்கிட்டு இருப்பாகளே! சீக்கிரம்
வீடு போய்ச் சேரணுமே!” என்ற ஏக்கத்தோடு பசியும் களைப்பும் அவனை மிகவும்
வருத்திக் கொண்டிருந்தன.
என்றாலும் பெரும்பாதை வழியே அவன் மீண்டும் நடந்தான். நண்பகல் வாக்கில்
வீட்டை அடைந்தான். அங்கே தோட்டமே கூடியிருந்தது. ஒப்பாரியும் ஓலமுமாய்
எல்லன் வீடு அங்கே துக்க வீடாய் ஆகிப்போயிருந்தது!
எல்லனுக்கு ஏனோ சிரிப்பு வந்தது!
|
|