வல்லினத்தில் தேடுதல்

எழுத்துரு உதவி / Tamil Font Help 

 இதழ் 2
செப்டம்பர் 2007
முகப்பு  |  உள்ளடக்கம்

பத்தி

 

'ஒழுக்கம் மயிரென ஓம்பப்படும்'

யுவராஜன்

 

       
 

29/6/07 தங்கைக்கு பகாங் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் வேதியியல் பொறியியல் துறையில் படிக்க இடம் கிடைத்ததால் செல்ல வாய்ப்பு கிடைத்தது. தங்கை என்றால் சித்தியின் மகள். சில வருடங்களுக்கு முன்பு வரை சுமாரான மாணவிதான். மூன்றாம் படிவ தேர்வுக்கு சில மாதங்களுக்கு முன் தங்கையின் மாத தேர்வு முடிவுகளை காண நேர்ந்தது. ரொம்ப ஆவேசம் வந்தது. திட்டோ திட்டென்று திட்டினேன்.

நாட்டிலுள்ள அத்தனை தன்முனைப்பு, தன்விழிப்பு, தன் எழுச்சி நிபுணர்களின் ஆவிகள் என் உடலில் புகுந்து கொண்டது போல் இருந்தது. தொடர்ச்சியான அறிவுரை அர்ச்சனையில் அவளுக்கு மயக்கமே வந்துவிட்டது. என் தோளைப்பற்றிக் கொண்டே பக்கத்தில் அமர்ந்து விட்டாள். பிறகு என்ன நடந்ததோ நான் அறியேன். கல்வியில் முழு கவனம் செலுத்த தொடங்கிவிட்டாள்.

சிலகாலமாக கல்லூரி பாடக் கல்வியின் மீதான எனது மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. வெறும் வேலை வாய்ப்பையும், சந்தையை நிறைவு செய்யும் உயிர் பொருட்களாக பட்டதாரிகள் உருவாக்கப்படுகிறார்கள். ஆயினும் படிக்காத பெற்றோர்களின் மகிழ்ச்சியும் நிறைவும் மேலும் முக்கியமானதல்லவா. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தங்கை பெற்றோரோடு என் பெற்றோரையும் அழைத்துக் கொண்டு பகாங் மாநிலத்திலுள்ள கடற்கரை சுற்றுலா தளமான `செராத்திங்’ (Cherathing) செல்லலாமென நான், தம்பி அன்பழகன் மற்றும் நண்பர் ராம் மூவரும் முடிவு செய்தோம்.

பகாங்கிற்கு இதுதான் என் முதல் பயணம். காடுகள் சூழ்ந்த சாலையில் பயணம் செய்வோம் என்று எண்ணியிருந்தேன். இருமருங்கிலும் பொட்டலாகவும் சில இடங்களில் செம்பனை மரங்கள் மட்டுமே இருந்தன. தங்கை என் காரில்தான் இருந்தாள். அவள் சுய அறிவின் மீது மிகவும் நம்பிக்கையிருந்ததால் எந்த அறிவுரையும் சொல்லக்கூடாது என்றும் கங்கணம் கட்டியிருந்தேன். அப்படியும் மீறி சொன்னது “உன் அறிவை செழுமையாக்கி கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டால் பாட புத்தகத்தை மீறி மற்றவற்றையும் படி, மனிதர்களோடு நன்றாக பழகு,” இதை தவிர்த்து மற்ற நேரத்தில் பேசிக்கொண்டும் `சிவாஜி’ பட பாடல்களை கேட்டுக் கொண்டும் வண்டி நகர்ந்து கொண்டிருந்தது.

பல்கலைக்கழகத்தை அடைந்ததும் இப்படியொரு வரவேற்பு கிடைக்கும் என்று யாரும் எண்ணியிருக்கமாட்டார்கள். பதிவு செய்யும் இடத்தை நெருங்கும் முன்பே ஒரு பெண் எங்களை நோக்கி வந்தார். தமிழ்ப் பெண். வரவேற்கத்தான் வருகிறார் என நினைத்திருந்தோம். நேரே என் தங்கையிடம் வந்தவர் சிலிப்பர் அணிந்து கொண்டு பதிவு செய்ய இயலாது, சப்பாத்து அணிந்தால் மட்டுமே முடியும் என்றார்.

என் மண்டைக்கு உடனே மணி அடித்தது. நான் நின்றிருப்பது பல்கலைக்கழகமா இல்லை ஏதாவது இராணுவ பயிற்சிப் பள்ளியா என்று சந்தேகம் வந்தது. என் தங்கையும் சப்பாத்து கொண்டுவரவில்லை. நல்ல வேளையாக தம்பியின் தோழி கோமதியின் சப்பாத்தால் நிலைமையை சமாளித்தோம்.

சோதனைகள் எப்போதுமே மெகா சீரியல்கள் போல சீக்கிரத்தில் முடிவதில்லை. நண்பகலை நெருங்கி கொண்டிருந்ததால் வேர்வையில் குளிக்க தொடங்கியிருந்தோம். பதிவுக்கு முன் மாணவர்கள் குழு குழுவாக பிரித்து அமர்த்தப்பட்டிருந்தனர். பல்கலைகழகத்தில் நுழையும் மகிழ்ச்சி ஒருவர் முகத்திலும் இருப்பது போல் தெரியவில்லை. கொலைக்களத்திற்கு அனுப்பப்படும் ஆடுகளைப்போல் பீதியும் அயர்ச்சியும் அந்த இளம் முகங்களில் இருந்தன.

நாங்கள் அறிவிப்பு செய்யும் கூடாரத்தின் அருகினிலேயே நின்றிருந்தோம். பாட்டி மற்றும் அம்மா மட்டும் நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர். அறிவிப்பு என்ற பெயரில் அவர்கள் அறிவித்த விஷயங்கள் கோபத்தையும் சிரிப்பையும் ஒருங்கே கொண்டு வந்தன. அவற்றில் ஒன்று இப்படி ஒலித்தது. “ ஐந்து மணிக்கு பள்ளிவாசலுக்கு பக்கத்தில் இருக்கும் விளையாட்டு மைதானத்தில் கூட வேண்டும். ஆண்கள் கழுத்து பட்டை கொண்ட சட்டையும், விளையாட்டு சிலுவார் மற்றும் காலணியோடு இருக்க வேண்டும். பெண்கள் நூல்கள் அடர்த்தியான, உடலை முழுவதும் மூடிய சட்டை (கழுத்துப் பட்டை ஏனோ இல்லை) மற்றும் மற்ற விளையாட்டு உடை அணிந்திருக்க வேண்டும். முஸ்லீம்கள் முக்கியமாக `தூடோங்’ (முக்காடு) அணிந்திருக்க வேண்டும். `தூடோங்’ வெள்ளை அல்லது கறுப்பு நிறத்தில் மட்டுமே இருக்கவேண்டும்”.

என் தம்பிகளும், நண்பர் ராமும் ஏற்கனவே அங்கிருந்து நழுவியிருந்தனர். விவரம் குறைந்த வயதில், இளையர்கள், பெரியவர்கள் விருப்பத்திற்கேற்ப உடையணிவதை , நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அவரவர் பொருளாதார மற்றும் தட்பவெட்பத்தை ஒட்டி எளிமையான ஆடைகளை இளையோர்களை அணிய ஊக்குவிப்பது உகந்ததுதான்.

ஆனால், சுய சிந்தனையும், புதுமைத் தேட்டமும் கொண்ட பல்கலைகழக மாணவர்களுக்கு சிறுபிள்ளைக்கு சொல்வதுபோல ஆடை ஒழுங்கைக் கற்பிப்பது மிகவும் பிற்போக்கானது மட்டுமல்ல தனிமனித சுதந்திரத்தை மீறுவதும் ஆகும். உண்மையில் தலைமுடியை ஒட்ட வெட்டாதவர்கள் பதிவு செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற அறிவிப்புதான் என்னை இக்கட்டுரை எழுத தூண்டுதலாக இருந்தது. முறையாக முடிவெட்டி வராதவர்களுக்கு முடி வெட்டிவிடும் சேவை இருப்பதாகவும் வெறும் 2 வெள்ளி வசூலிக்கப்படும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். நானும் ராமுவும் ஒருவருக்கொருவரை பார்த்து சிரித்துக் கொண்டோம்.

8 ஆண்டுகளுக்கு முன், நாங்கள் பல்கலைகழகத்திற்கு விண்ணப்பிக்கும் நேரம் அது, நகல் செய்யப்பட்ட சான்றிதல்களை ஒப்புதல் வாங்குவதற்காக பள்ளிக்கு சென்றிருந்தோம். பள்ளி முதல்வரோ அல்லது பாட பொறுப்பாசிரியர்களோ ஒப்புதல் அளிக்கலாம். ஆசிரியர் ஓய்வறையில் கணக்கியர் பொறுப்பாசிரியை இருந்தார். ஆறாம் படிவம் தேர்வு முடிந்து ஆறு மாதம் ஓய்வில் இருந்ததால், எங்களது தலைமுடி தோள்பட்டைக்கும் கீழே அலைந்து கொண்டிருந்தன. அன்று ராம் மார்பு முடி தெரிய நீல நிற கோடு போட்ட பணியனும் மேலே மெல்லிய சட்டையும் அணிந்திருந்தான். வெயில் வெளியே கொளுத்திக் கொண்டிருந்தது. எங்களைப் பார்த்ததும் ஆசிரியருக்கு கோபம் வந்து விட்டது. இப்படி ஒழுங்கீனமாக உடையணிந்தா பள்ளிக்கு வருவது என திட்டினார்.

அவர் திட்ட தொடங்கியதுமே ராம் அங்கிருந்து சென்று விட்டான். என்னுடைய கோப்பு அவரிடம் இருந்ததால் அங்கே நிற்க வேண்டியதாகிவிட்டது. ஆடை ஒழுக்கத்தைப் பற்றி எனக்கு வகுப்பெடுத்துக் கொண்டே ஒப்புதல் கையொப்பம் இட்டு கொண்டிருந்தார். அமைதியாக கேட்டு கொண்டிருப்பதை விட வேறு என்ன வழி. முடிந்தவுடன் ஆசிரியை “இந்த மாதிரி பையனோடு சேராதே. உருப்பட்டமாதிரிதான்” என்றார். ராம், பள்ளி முதல்வரிடமே கையொப்பம் வாங்கிவிட்டு என்னை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான்.

சிந்தித்து பார்க்கும்போது ஆடை மற்றும் தலைமுடி பராமரிப்புக்கும் உருப்படுவதற்கும் ஏதும் சம்பந்தம் இருப்பதுபோல் இல்லை. எனக்கு தெரிந்து உலகின் சிறந்த அறிவியலாளர்கள் பெரும்பாலோர் இவ்விஷயத்தில் அக்கறை செலுத்தாதவர்களே. பாபாவும், `எலிகேட்சும்’ ஒரே மாதிரி தலைமுடியில் காட்சியளிக்கின்றனர். ரமணர் கோவணம் மட்டுமே அணிந்திருந்தார். அப்துல் கலாம் நீண்ட தலைமுடியோடு அதிபராக இருக்கிறார்.

நடுநிசி நேரம் அது. நானும் ராமுவும் இரவு காட்சியில் படம் பார்த்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். நாற்சந்திப்பில் சிவப்பு விளக்கை அனுசரித்து காரில் நின்றுக் கொண்டிருந்தோம். மற்ற புறங்களில் எந்த வண்டிகளும் இல்லை. கேமரா பொருத்தப்படாத சாலை விளக்கு அது. “யாருமே இல்லையே போகலாமே ராம்” என்றேன். “எனக்காகத்தான் நின்று கொண்டிருக்கிறேன்”, இது ராம். அந்த ஆசிரியை இதை கேட்டிருக்க வேண்டும்.

அன்று முழுவதும் அலைந்து பக்கத்தில் இருந்த சிற்றூரில் தங்கைக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்தோம். உடலின் வெளியே வேர்த்து காய்ந்திருந்தாலும் உள்ளே சூடு அப்படியே இருந்தது. தங்கையை மட்டும் அப்பல்கலைப்`பள்ளி’யிலேயே விட்டு `செராந்திங்’கை நோக்கி பயணமானோம்.

செராந்திங் கடலும் ஆற்றமுடியாத உட்சூடு இது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது.

 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
  முகப்பு  |  உள்ளடக்கம்  
     

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768