|
சிலர்
வந்ததும்
வந்து
சென்ற
பிறகும்
சூன்யமாகவே
மிஞ்சுகிறார்கள் - சிலர் (நகுலன் கவிதைகள்)
`தமிழ் இனி 2000’ மாநாட்டில் யுவன் சந்திரசேகரால்
வாசிக்கப்பட்ட `தமிழகக் கவிதையின் அரை நூற்றாண்டு - சில பிரதிபலிப்புகள்’
எனும் கட்டுரையில் நவீன கவிதையில் மிகத் தனித்துவம் வாய்ந்த கவிஞர்களாக
நால்வரைக் கருதுகிறேன் எனக் கூறி அந்தப் பட்டியலில் நகுலனையும்
சேர்த்திருந்தார்.எனக்குப் பிடித்தக் கவிஞர்கள் வரிசையில் யுவனும்
இருந்ததால் அவரின் அந்தக் கூற்று எனக்குள் பெரிய தேடலை ஏற்படுத்தியது.
அதற்கு முன்பு நகுலனின் கவிதைகள் பற்றி நான் அறிந்திருந்தாலும் அவரை
வாசிக்க அவரின் பெயரே முதல் பெரிய தடையாக இருந்தது.
ஐந்தாம் படிவத்தில் என்னால் தாடை பெயர்ந்து, வெளியிலிருந்து ஆட்களை அழைத்து
வந்து என்னை துவசம் செய்தவனின் பெயர் அது .பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் நவீன
இலக்கியத்தில் ஈடுபடும் ஒருவன் நகுலனை வாசிக்க வேண்டிய அவசியம் உணர்ந்து
நகுலனைத் தேடிப் படித்த போது எனக்கு முதலில் ஏற்பட்ட கேள்வி `நகுலன்
எழுதியதையே நான் எழுதினால் கவிதையாக ஏற்றுக்கொள்வார்களா` என்பதுதான். பல
கவிதைகள் பிதற்றலாகவும் ஒன்றுமற்ற சொற்களை முன்னிருத்துபவையாகவும் எனக்குக்
காட்சியளித்தன. அதை உறுதி செய்வது போல ஒருதரம் எனது தமிழகப் பயணத்தில்
`தமிழினி’ வசந்தகுமாரை சந்திக்கச் சென்றிருக்கையில் காகிதத்தில் இருந்த
எனது புத்தகப் பட்டியலில் நகுலனின் கவிதைத் தொகுப்பைப் பார்த்துவிட்டு,
கேலி செய்யும் குரலில் “நகுலன் கவிதைகளை விமானத்தில் ஏற்றிச்செல்வதை
நினைக்கும் போது உங்களை நினைத்து பாவப்படுகிறேன்” என்றார்.
இது போன்ற மனத் தடைகளை நீக்கி இளம் சிவப்பு வண்ண அட்டையில் நவீன ஓவியத்தோடு
கூடிய அவரது மொத்தக் கவிதைத் தொகுப்பைக் கடையில் புரட்டிப்பார்த்தப் போது
பெரிய அதிருப்தியோடு மட்டுமே புத்தகத்தைத் வாங்க முடிந்தது.நான் பார்த்த
மோசமான பதிப்புகளில் அந்தத் தொகுப்புக்கு எப்போதும் இடம் உண்டு.நகுலனுக்கு
மரியாதை செய்வதாகக்கூறி அவரது மொத்தக் கவிதைகளையும் எடுத்து குவித்து
திணித்தது போல் இருந்தது. ஒரு கவிதைத் தொகுப்பைப் படிக்க இத்தனை தடைகள்
ஏற்படுவதே நகுலனை மீண்டும் மீண்டும் நாடிச்செல்ல உதவியாக இருந்தது.
நகுலன் என்பது புனைப்பெயர் என்றும் டி.கே.துரைசாமி என்பதுதான் இயற்பெயர்
என்று பிறகு தெரிந்து கொண்டேன். ஏறக்குறைய அரைநூற்றாண்டு காலம் தமிழிலும்
ஆங்கிலத்திலும் கவிதை, நாவல், சிறுகதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு எனத்
தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார். இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்
தமிழிலும் ஆங்கிலத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றவர்.பின்னர் ஆங்கில
ஆராய்ச்சிப் பட்டமும் பெற்று திருவனந்தபுரம் இவானியர் கல்லூரியில் ஆங்கிலப்
பேராசிரியராக வேலை பார்த்தும் வந்துள்ளார்.தமிழ்ச் சிற்றிதழ் இயக்கத்தில்
மிகுந்த ஈடுபாடு கொண்டு அனைத்துச் சிற்றிதழ்களிலும் எழுதியதோடு `நிழல்கள்’,
`நினைவுப்பாதை’, `நாய்கள்’, `நவீனன் டைரி’, `இவர்கள்’, `சில அத்தியாயங்கள்’
,’வாக்குமூலம்’ என 7 நாவல்களும் `மூன்று’, `ஐந்து’, `கோட்ஸ்டாண்ட்
கவிதைகள்’,`சுருதி’,`இரு நீண்ட கவிதைகள்’ என ஐந்து கவிதைத் தொகுதிகளையும்
இலக்கிய உலகிற்கு அளித்துள்ளார். அதோடு மட்டுமின்றி ஆங்கிலத்திலும் Words
To Listening Air, Poems Nakulan,Tamil Writers Journal Vol-1, Vol II,
Nonbeing என 5 கவிதைத் தொகுதிகளைக் கொண்டு வந்துள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.
நகுலனைப் புரிந்து கொள்ள எனக்கு உதவியவர் கவிஞர் மனுஷ்ய புத்திரன். அவர்
மலேசியா வந்திருந்த போதும் நான் தமிழகத்தில் அவர் வீட்டில் தங்கியிருந்த
போதும் ஏற்பட்ட உரையாடல்களில் நகுலன் எப்படியும் வந்து அமர்ந்து
கொள்வார்.அந்த உரையாடல்களின் போது மட்டும் மனுஷ்ய புத்திரனிடம் ஏற்படும்
குரல் மாற்றமும் உயர்ந்த ரசனை சுவடுகளும் மீண்டும் ஒரு முறை நகுலனை
தீவிரமாக வாசிக்கத் தூண்டியது.
நேர்மையாகக் கூறவேண்டுமென்றால் அந்த மொத்தத் தொகுப்பில் ஆரம்பக் கவிதைகள்
பல சளிப்பூட்டுபவையாகவும் அடுத்தடுத்த பக்கங்களை நதர்த்த தடைசெய்பவையாகவும்
இருந்தன.(அதற்கு எனது இரசனைக் கோளாரும் காரணமாக இருக்கலாம்.)ஆனால் அவரின்
குறிப்பிட்ட சில தொகுப்புகளில் உள்ள கவிதைகள் மட்டும் பெரும் விரிவையும்
அமைதியாக சுழன்று கொண்டிருக்கும் புயலின் வீரியத்தையும் நாலாபக்கமும்
வீசியபடி ஆக்கிரமிப்பதை உணர முடிந்தது.தன்னை இரண்டாகப் பகுத்து ஒன்றில்
மட்டும் தன்னை நிறுத்தி மற்றொன்றுக்கு அந்நியமாகிவிடுகின்ற தன்மை தமிழ்
கவிதை உலகிற்கு புதிதுதான்.
எனக்கு/ யாருமில்லை/ நான்/ கூட...
நான் வாழ்ந்து கொண்டிருக்கும் அல்லது வாழ்வதாக நம்பிக்கொண்டிருக்கும்
இந்தத் தொகுக்கப்பட்ட தருணங்களில் ஏற்படும் அர்த்தமற்ற கணங்களை நகுலனின்
கவிதைகள் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி செல்கிறது.அவை சில சமயங்களில்
ஒன்றும் செய்யாமல் படுத்திருக்கும் புலியைக்காணும்போது ஏற்படும் ஒரு
பதற்றத்தையும் பின் ஆச்சரியத்தையும் பின்னர் அது கொடுக்கும் படிமத்தையும்
பற்றிக்கொண்டு பயணிக்கிறது.அது கதவுகளற்ற மிகப்பிரமாண்டமான வீட்டில்
நுழைந்ததும் சட்டென வீடு காணாமல் போய் வெற்று வெளியில் நிற்கும் தருணம்
கிடைக்கும் வெறுமைக்கு கொண்டுபோய் நம்மை மீண்டும் மீண்டும் நிறுத்துகிறது.
நேற்று ஒரு கனவு/ முதல் பேற்றில்/ சுசிலாவின்/ கர்ப்பம் அலசிவிட்டதாக/ இந்த
மனதை/ வைத்துக் கொண்டு/ ஒன்றும் செய்ய முடியாது
நகுலனின் கவிதைகளை அறிய முதலில் அவர் வாழ்வையும் அறிந்து வைத்திருப்பது
அவசியமாகத்தான் படுகிறது. துரதிஷ்டவசமாக மலேசியர்களுக்கு அந்த வாய்ப்புக்
குறைவுதான். கவடியார் செல்வந்தர்கள் வசிக்கும் அமைதியான குடியிருப்புப்
பகுதியில் இருந்த புரதான கட்டிடத்தில் தன்னிச்சையாக வளர்ந்து கிடக்கும்
தாவரங்களுக்கு மத்தியில் பகலிலும் இருள் மங்கிய வீடு அவருடையது. அவருடன்
எப்போதும் சுற்றித்திரிய ஒரு பூனை. ஒரு பழைய சைக்கிளை உருட்டிக்கொண்டே
வரும் மெலிந்த குனிந்த தோற்றம். அவ்வப்போது பேச்சினூடே தோன்றும்
வெடிச்சிரிப்பு. இறுதி வரை பிரம்மச்சாரியம்...இந்த அம்சங்கள் கொண்ட நகுலனை
நகுலனே மறந்திருப்பார் என்றே தோன்றுகிறது. அவர் நம்பிக்கொண்டிருந்த நகுலன்
வேறு. அவரை அவர் கவிதையினூடே பயணிக்கும் போதே சந்திக்க முடிகிறது.
இவர்கள்/ பார்வையில்/ தினம் தினம்/ நான்/ பட்டுத்தெறிக்க/ வேண்டும்/ என்ற
அவசியம்?
இருண்மையாகவும் முறுக்கப்பட்ட மொழியின் மூலமாகவும் தினம் தினம் புலமையைக்
காட்ட எல்லா சிரத்தையும் எடுத்துக் கொண்டு நகரும் கவிஞர்களுக்கு மத்தியில்
எந்த உபரிகளையும் கையிலேந்தாது தனது பாதையில் தன்னந்தனியாய் நடக்கும் ஒரு
நிர்வாண குழந்தையின் தடம் நெடுகிலும் தென்படும் இரத்தத்துளிகள் போல
நகுலனின் வரிகள் எளிமையையும் நெடிய அதிர்வையும் ஒருங்கே தருகின்றன.அவற்றில்
பயணிக்கும் ஒரு நுட்பமான வாசகன் அடையக்கூடிய இடம் மௌனங்கள் நிரப்பிய ஒரு
திறந்த வெளி.
எதைத் திறந்தால்/ என்ன கிடைக்கும்/ என்று/ எதை எதையோ/ திறந்துகொண்டே/
இருக்கிறார்கள்.
* * *
`சாட்’டில் இருந்தபோதுதான் மனுஷ்ய புத்திரனின்
பக்கத்திலிருந்து நகுலனின் கவிதை வரிகள் வெளிபட்டன. காரணம் கேட்டேன்.
நகுலன் இறந்து விட்டதாகக் கூறினார். ’எப்படி’ என்றேன். ’நோய்மை’ என பதில்
வந்தது. தமிழ் வளர்ப்பதாகப் போட்டிப்போட்டுக் கொண்டிருக்கும் இந்நாட்டு
மூன்று தமிழ்ப் பத்திரிகைகளிலும் எந்தச் செய்தியும் வராதது
ஆச்சரியமளிக்கவில்லை. ஆனால், அவர் மரணம் எனக்கு எந்த ஒரு சிறு உணர்ச்சி
மாற்றத்தையும் நிகழ்த்தாதது மட்டுமே ஆச்சரியமாக இருந்தது. நகுலன் என்பது
கவிதைதானே என நான் நம்பியிருந்தது கூட அதற்கு காரணமாக இருக்கலாம்.
குறிப்பு : நகுலனின் கவிதை, கட்டுரை தலைப்பாக்கப்பட்டுள்ளது.
|
|