|
காட்சி 1 : 1986 . புடு சிறையில்
நோயாளிகளைச் சோதிக்க வந்த நான்கைந்து மருத்துவர்கள் கைதிகளால்
பிணைப்பிடிக்கப்படுகின்றனர். போலிஸார்களும் என்ன செய்வதென்று தெரியாமல்
விழித்துக் கொண்டிருக்கின்றனர். ஊடகங்களுக்குத் தகவல் பறக்க செய்தியாளர்கள்
குழுமுகின்றனர்.ஒருவருக்கும் உள்ளே நுழைய அனுமதி இல்லை. அந்தச் சம்பவம்தான்
நாளை முதல் பக்கச் செய்தி.சரியான படம் வேண்டும். தயாரான கேமராவோடு
எல்லோரும் புடு சிறை வாசலில் காத்திருக்கின்றனர்.அதில் ஒருவர் மட்டும்
யாரிடமும் அனுமதி பெறாமல் எதிரே இருக்கும் ஐ.பி.கெ கட்டடத்தின் மீது
ஏறுகிறார். அப்போதும் காட்சியை சரியாக காண முடியாதபடி மரக்கிளைகள்
மறைக்கின்றன. அங்கிருந்து மற்றொரு கட்டடத்திற்கு தாவுகிறார். இப்போது
நடக்கும் காட்சிகள் தெளிவாகத்தெரிகின்றன. அவர் கேமராவில் காட்சிகள்
பதிவாகிறது.
காட்சி 2 : புக்கிட் ஜாலில் `மலேசிய கப்’ பந்துவிளையாட்டிற்கான இறுதிச்
சுற்று நடந்து கொண்டிருக்கிறது. எல்லோரும் விளையாட்டில் முழு கவனம்
செலுத்திய படி உள்ளனர். திடீரென திடலில் ஒரு குழந்தை நுழைகிறது. அந்தக்
குழந்தையைப் பிடிக்க காவலர்கள் பின் தொடர்ந்து ஓடுகின்றனர். குழந்தையைப்
பிடிக்கின்றனர். குழந்தைத் திமுருகிறது.காட்சி கேமராவில் பதிவாகிறது.
அவ்வருட தேசிய கிண்ண இறுதியாட்டத்திற்கான புகைப்படப் போட்டியில் அந்தப்படம்
முதல் பரிசை வெல்கிறது.
காட்சி 3: `சௌஜானா கோல்ப்’ திடலில் இருவர் கோல்ப் விளையாடிக்
கொண்டிருக்கின்றனர். புகைப்படக்காரர் மரத்தின் நிழலில் அமர்ந்த படி அந்தக்
காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். விளையாடிக்கொண்டிருந்த இருவரும்
நடந்து வரத் தொடங்குகின்றனர். திடீரென ஒரு பெருத்த உடும்பு மரத்திலிருந்து
இறங்கி திடலுக்குள் புகுந்து நடக்கிறது. விளையாட்டாளர்களை நேர் எதிர்
நோக்கி அது பயணிக்கிறது. அந்தக் காட்சி கேமராவில் பதிவாகி மறுநாள்
பத்திரிக்கையில் பிரசுரமாகி பரபரப்பையும் பாராட்டையும் பெருகிறது.
இது போன்ற இன்னும் ஏராளமான புகைப்படங்களுக்குச் சொந்தக்காரர் `ஸ்டார்’
கணேசன். இவர் எடுத்தப் புகைப்படங்கள் பரிசாகவும் பணமாகவும் பல போட்டிகளில்
வென்றிருக்கிறது. புகைப்படத்துறையில் ஏராளமான விருதுகள் பெற்ற அவரை
நேர்காணல் செய்ய அத்துறையைப் பற்றி நன்கு பரீட்சயம் உள்ள காளிதாஸை
அழைத்துக்கொண்டு சென்றோம்.எங்களோடு யுவராஜனும் `ஜோதி’ கார்த்திகாவும்
இடையில் சேர்ந்து கொண்டனர்.
“என்னைப் பேட்டிகாண என்ன இருக்கு? நுணுக்கமாகப் பார்த்தால் எல்லாமே
புகைப்படத்திற்கான காட்சி அமைப்புகள்தான். நான் அதை பதிவு செய்வதற்கான
கணங்களையும் கோணங்களையும் மட்டுமே தீர்மாணிக்கிறேன்” என்றபடி வந்தமர்ந்தார்
`ஸ்டார்’ கணேசன். பிரிக்ஃபீல்டில் உள்ள அவரது ஆடம்பர அடுக்குமாடி
குடியிருப்புப் பகுதியின் ஜந்தாவது தளத்தில் சிறுவர்கள் விளையாடிக்
கொண்டிருந்தனர். நீச்சல் குளத்தில் அடிக்கடி யாரோ குதித்து கரையேறுவது
போன்ற சப்தங்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போதுதான் நின்ற
மழைத்தூரல் அவ்வப்போது ஒருசில துளிகளை உதிர்த்துக்கொண்டிருந்தன.
“அதோ அந்தச் செடிய பாருங்க... அதன் பக்கத்தில் உள்ள கற்கள்... அதை
தாங்கியுள்ள சிறிய நாற்காலி இவற்றை ஒரு கலைஞன் கூர்ந்து பார்க்கையில்
அந்தக் காட்சியை எங்கிருந்து பார்த்தால் அழகாக இருக்கும் என்றும் எப்படி
அவற்றை கவரும்படி மறு அமைப்பு செய்யலாம் என்றும் சிந்தனை கிட்டிவிடும்”
“அது எல்லோருக்கும் சாத்தியம் கிடையாது என நினைக்கிறேன். உங்களுக்குக்
கிடைத்துள்ள இந்தக் கலை பார்வையை எப்படி எப்போது உணர்ந்தீர்கள்?” என
வினவினோம்.கணேசன் சற்று நேரம் அமைதியானார்.பழைய நினைவுகளை
மீட்டுக்கொணர்ந்தார்
“நான் படித்ததெல்லாம் காலவே தோட்டத்துத் தமிழ்ப்பள்ளியில் தான். இன்று
அந்தத் தோட்டம் `புத்ரா ஜெயா` வாகி காணாமல்போய்விட்டது. ஒரு முறை எங்கள்
பள்ளியில் மலாக்காவிற்குச் சுற்றுப்பயணம் ஏற்பாடாகியிருந்தது. அப்போதுதான்
முதன் முதலாக சுற்றுப்பயணத்தின் காட்சிகளை படம் பிடித்தால் என்ன என்ற
எண்ணம் தோன்றியது.அப்போது எனக்கு வயது பதினொன்று. எங்கள் வீட்டில் காமிரா
இல்லை.காமிரா வாங்க பணம் இல்லை. ஒரு கடைக்குச் சென்று அங்கு வைத்திருந்த
காமிராவை ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தேன். கடைக்கார சீனன் “ஐந்து ரிங்கிட்
கொடுத்தால் புகைப்படக்கருவி வாடகைக்கு கிடைக்கும்” என்றான். பல தடைகளையும்
தாண்டி... கண்ணீரெல்லாம் சிந்திய பிறகு அப்பாவிடம் ஐந்து ரிங்கிட்
கிடைத்தது. `பிளஷ்’ இல்லாத காமிரா அது. வலதுபுறம் சிறியதாக இருந்த பட்டனை
அழுத்தினால் படம் பிடிக்கும் என்பது மட்டும் தெரியும். சுற்றுலா முடிந்து
நான் பிடித்த படங்களைக் கழுவி பார்த்தேன். என் ஆசிரியரிடம் காட்டினேன்.
அவரும் தான் பிடித்தப் படங்களோடு என் படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து
வியந்தார். ஆச்சரியமாக என்னால் அந்த வயதிலேயே அவரது படங்களில் இருந்த
போதாமைகளை அடையாளம் காண முடிந்தது. ஆசிரியர் என்னை அன்று அதிகம்
உற்சாகப்படுத்தினார். அதன் பிறகு அவ்வப்போது காமிராவை எடுத்துக் கொண்டு
மாடுமேய்க்கும் போதும், அம்மா தோட்டத்தில் மரம் சீவும் போதும், ஏணி
உச்சியில் ஏறும் போதும், பால் எடுக்கும் போதும், சுற்றி சுற்றி திட்டு
வாங்கியபடி படம் பிடிப்பேன்.இன்று உலகில் சுமார் 46 நாடுகளுக்கு காமிராவோடு
சுற்றி அலைந்துவிட்டேன்.பலதரப்பட்ட காட்சிகளைப் பார்த்துவிட்டேன்.என்
தோட்டத்தில் காமிராவோடு சுற்றியபோது அகப்பட்ட காட்சிகளுக்கு நிகரான
ஒன்றுபோல் இதுவரை எந்தத் தரிசனமும் கிடைக்கவில்லை.
“அதன் தொடர்ச்சியாய் எப்படி உங்களை வளர்த்துக் கொண்டிர்கள்?”
“கலைஞர்களுக்கு சுதந்திரம் அவசியம்.அவனது சுதந்திரம் ஜன்னல் கதவுகளில்
கிடைக்கும் காட்சியில் திருப்தியடைவதில்லை. எனக்குள் ஒரு கலைஞன் இருந்தான்.
அவன் என்னை வீட்டிலிருந்து வெளியேற வைத்தான். அதன் பின்னர் இந்த வாழ்வு
என்னை எங்கெல்லாமோ கொண்டு சென்றது.நான் கடந்து வந்த பாதையைத் திரும்பிப்
பார்க்கையில் இன்னும் ஆச்சரியம் கூடியபடிதான் செல்கிறது. முதலில்
நாய்களுக்குப் பயிற்சி கொடுக்கும் வேலையில் சேர்ந்தேன். பின்னர் ஒரு சீன
பத்திரிக்கையில் பாதுகாவலராக வேலைக்குச் சேர்ந்தேன். அந்தத் தொழிலின்
யூனிபோர்ம் எனக்கு அதிகம் பிடிக்கும். எந்த நேரமும் யூனிபோர்மோடுதான்
இருப்பேன். அந்த உடை எனக்கு ஏதோ அடையாளத்தைக்
கொடுப்பதாகத்தோன்றும்.அடையாளம் இன்றியிருந்த எனக்கு அது பெரிய ஆறுதலாக
இருந்தது.வேலை முடிந்த பிறகும் நான் அந்த உடையோடுதான் இருப்பேன்.இன்று
நினைக்கையில் நான் எனக்கான அடையாளத்தைத் தீவிரமாகத் தேடிக்கொண்டிருந்ததாகத்
தோன்றுகிறது.
எடிட்டர் நுழையும்போதும் வெளியேறும்போதும் கதவை திறந்து மூடும் எனது
கடமையுணர்வில் எடிட்டர் ஈர்க்கப்பட்டிருந்தார்.அப்போதெல்லாம் என் இரவு
உறக்கம் ஒரு ஸ்டால் கடை மேசையில்தான்.அதற்கு வாடகை தரும் வகையில் காலையில்
எழுந்ததும் ஸ்டால் கடை உரிமையாளருக்கு கொஞ்சம் உதவி செய்தும் வந்தேன்.எனது
நிலையைப் பார்த்த எடிட்டர் எனக்கு அலுவலகப்பையனாகக் பதவி உயர்வு
கொடுத்தார். ஆபிஸுக்கு வரும் செய்திகளை வகை பிரிப்பது என் வேலை. அங்குதான்
ஒரு நண்பரிடம் 120 ரிங்கிட்டுக்கு முதன்முதலாக இரண்டாம் கை புகைப்படக்
கருவியை வாங்கினேன். எந்தப் புதிய தொழில் நுட்பமும் இல்லாத பழையக் கருவி
அது.அதைக்கொண்டு நிறைய படங்கள் பிடித்தேன்”
“நீங்களாக பிடித்ததல்லாமல் ஒரு புகைப்பட கலைஞராக பத்திரிக்கையில்
உங்களுக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு?”
“ஒரு மோட்டார் பந்தயம். அதுதான் என் நிர்வாகம் எனக்கு கொடுத்த முதல்
எஸய்மென்ட்.மிகுந்த உட்சாகத்தோடு அதில் ஈடுபட்டேன்.அதற்கு முக்கிய காரணம்
ஒரு பொழுது போக்காக பிடிக்கும் படங்கள் பத்திரிக்கையில் பிரசுரமாகுமென்று
எந்த உத்தரவாதமும் இல்லை.ஆனால் அது வேலையாகிவிடும்போது பிரசுரமாகும் என்ற
நம்பிக்கையில் இன்னும் உற்சாகமாகப் பிடிக்கலாம்.”
“உங்கள் திறமையை எப்படி பத்திரிக்கைக்கு ஏற்றபடி அமைத்துக் கொண்டிர்கள்?”
“நான் புகைப்படம் பிடிக்க சிறப்புப் பயிற்சிகள் ஏதும் எடுக்கவில்லை.
எல்லாம் அனுபவங்கள்தான். எந்த திசையிலிருந்து படம்பிடிப்பது, ஒரு படத்தின்
பின்புலத்தில் எதையெல்லாம் சேர்ப்பது போன்றவற்றை அங்குல அங்குலமாக
கற்றுக்கொண்டேன். அந்தச் சமயத்தில்தான் எனக்கு விளையாட்டுத்துறையில்
புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. அதற்கு அடிப்படையில் எனக்கு
விளையாட்டுத்துறையில் இருந்த ஆர்வம்தான் காரணம். அக்காலத்தில் மிகப்
பிரபலமாக இருந்த விளையாட்டு வீரர்களோடு நட்பு கொள்ளும் வாய்ப்பெல்லாம்
கிடைத்தது. தமிழர்களுக்கு அதிகம் விளையாட்டுத்துறையில் வாய்ப்பு கிடைத்த
பொற்காலம் அது. அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களின் ஆளுமைகளை
வெளிப்படுத்தும் வகையிலும் செய்திகளையோ, பேட்டிகளையோ, படங்களையோ எந்தத்
தமிழ்ப்பத்திரிக்கையும் வெளியிடவில்லை.அதற்கான முயற்சிகளில் நான் இறங்கிய
போது “இதையெல்லாம் யாரும் விரும்புவதில்லை” என கூறி புறக்கணித்த தமிழ்
பத்திரிக்கையும் விளையாட்டுத்துறையில் இன்றைய நமது ஓரங்கட்டலுக்குக்
காரணமாக இருந்திருக்கிறது.இன்றும் அந்நிலை தொடர்வது வேதனைக்குறிய உண்மை”
“ஆனாலும் இன்றளவும் விளையாட்டுத்துறையில்தான் தொடர்ந்து புகைப்படம்
எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறீர்கள்... இது உங்களின் விருப்பம்
சார்ந்ததா...அல்லது பழகிவிட்டதாலும் எளிமையாகி விட்டதாலும் இதை
தொடர்கிறீர்களா?”
“இன்னமும் நான் புகைப்படத்துறையில் நிறைய கற்றுக்கொண்டுதான்
இருக்கிறேன்.அது ஒரு கடல்.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றை காட்சிப்
படுத்துவதில் ஆர்வம் இருக்கும்.எனக்கு விளையாட்டு.மேலும் இது
எளிமையானதல்ல.சவால் மிகுந்தது.”
“பத்திரிக்கையில் புகைப்படம் எடுப்பதை கலைச்சார்ந்த ஒன்றாக
கருதுகிறீர்களா?”
“இதுவும் ஒருவகை கலைதான். பத்திரிக்கையைப் பொருத்தவரை அன்றைக்கு என்ன
நடக்கிறது என்பதுதான் முக்கியம். எதையும் மறுமுறை நிகழ்த்திப் பார்க்க
முடியாது. எல்லா தருணங்களும் மிக முக்கியமானது. ஒவ்வொரு அசைவும்
அவசியமானது. அதைப் பொருத்தமான கோணத்திலிருந்து படமாக்குவதுதான் கலை.
மற்றொரு வகையில் இதை நான் பத்திரிகையின் தேவைக்காகச் செய்கிறேன். இதில்
உள்ள கலைத்தன்மையான கணங்கள் புகைப்படத்திற்கான போட்டி நிகழ்வுகளில் எனக்கு
அதிகம் கிடைக்கின்றன என கூறலாம். அவைகளைப்பற்றி பேச நிறையவே இருக்கிறது.”
“ஒரு சம்பவம் உங்கள் முன் நடக்கையில் அதை உங்கள் கேமரவில் பதிவு
செய்யமுடியாத படி உங்கள் மனம் நெகிழ்ச்சியில் தவித்த அன்பவங்கள் உண்டா?”
“நிச்சயமாக.இன்றும் அதை நினைக்கையில் நான்
உணர்ச்சிவசப்படுவதுண்டு.சிட்னியில் ஒலிம்பிக் போட்டி நடந்து
கொண்டிருந்தது.பத்திரிக்கைக்குப் புகைப்படம் எடுக்கும் பொறுப்பில் நானும்
அங்குதான் இருந்தேன்.அப்போது ஓட்டப்பந்தயப்போட்டி நடந்து கொண்டிருந்தது.
பெண்களுக்கான ஓட்டத்தில் அப்போது பங்கேற்ற `Cazhey Freemay’ அனைவரின்
கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருந்தார்.அவர் ஒரு ஆஸ்த்திரேலிய பூர்வக்குடி
என்பது அதற்கு முக்கிய காரணமாக இருந்தது.போட்டி தொடங்கியதும் அவர் தனக்கே
உரிய தனி ஸ்டைலில் முன்னனியில் வந்து கொண்டிருந்தார்.எண்பதாயிரம்
பேருக்குமேல் அமர்ந்திருந்த அந்த அரங்கம் கைத்தட்டல்களால் நிரம்பி
வளிந்தது.எவ்வளவு முயன்றும் என் கரங்களும் கைதட்ட எத்தணிக்கிறதே தவிர
கடமையைச் செய்யவில்லை.இறுதியில் என்னை நானே சுதாகரித்தப்படி படம்
படித்தேன்.அந்த அரங்கத்தின் அதிர்வு இன்னும் என் காதுகளில்
ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.
“இது கணேசன் எடுத்த புகைப்படம்தான் என்று கூறும்படி ஏதும் தனி அடையாளங்கள்
தொடர்ச்சியாக உங்கள் படங்களில் உள்ளதா?”
இந்தக் கேள்வி கணேசனை கொஞ்சம் யோசிக்க வைத்தது. அப்படி ஏதும் இருக்கிறதா
என்பது போல தன்னை ஒருமுறை மீள் பார்வை செய்கையில் `ஜோதி’ கார்த்திகா
குறுக்கிட்டார்.
“தொடர்ந்து அவர் எடுக்கும் புகைப்படங்களைப் பத்திரிக்கையில் பார்த்து
வருகிறேன் என்பதால் நான் அதுபற்றி கூறுவது பொருத்தமாக இருக்கும் என
நினைக்கிறேன். அவர் எடுக்கும் படங்கள் பெரும்பாலும் உச்சக்கட்ட அசைவுகளைப்
பிரதிபளிப்பவை. அவர் படங்களில் விழுந்தவர்கள் இருக்கமாட்டார்கள்...
விழுவதற்கு முன் உள்ள அந்த நொடிதான் இருக்கும். அந்தப் பதற்றம் அவர்
படங்களில் பதிவாகியிருக்கும்.ஒரு உச்ச நிகழ்விற்கு முன் உள்ள கணங்கள் மிக
நுட்பமானவை.அதை கணேசனின் படங்களில் தொடர்ந்து காணலாம்.”
கணேசன் தொடர்ந்தார்....
“ஒரு தூண்டில் மீன் பிடிப்பவனின் பொறுமை புகைப்படம் பிடிப்பதில்
தேவைப்படுகிறது. எப்போதுமே என்னுடன் புகைப்படம் பிடிக்கும் சக
புகைப்படக்காரர்கள், நான் அமர்ந்து காத்திருக்கும் இடங்களை
கேள்விக்குறியோடு நோக்குவதுண்டு. அந்த இடத்தில் என்ன கிடைக்கும் என
வேடிக்கையாக கேட்பர். ஆனால் எனக்குத் தெரியும் தேவையான காட்சி அங்குதான்
நமக்காக காத்திருக்கிறதென்று. நான் முன்பே சொன்னது போல காட்சிகள் விரிந்து
கிடக்கின்றன.நமக்குக் கோணங்களைத் தேர்ந்தெடுப்பதில் திறமை வேண்டும் “
“இதில் ஏதும் இழப்புக்களை அனுபவித்துள்ளீர்களா..?”
“புகைப்படத்தைப் பொருத்தவரை தவறவிடும் தருணங்கள்தான் பேரிழப்புகள். ஒருமுறை
கோலாலம்பூரில் முக்கிய வர்த்தக மையத்தில் நான் உலாவிக் கொண்டிருக்கும் போது
வெளியில் இரு முறை வெடிச்சத்தம் கேட்டு ஓடிவந்தேன். ஏதோ நடந்திருக்கிறது
என்று தெரிந்தது. என்னவென்று ஊகிக்க முடியவில்லை. கால்போன போக்கில்
நடந்தேன். எதுவும் தட்டுப்படவில்லை. மீண்டும் திரும்பிவந்த போது
அலுவலகத்திலிருந்து தகவல். அப்பகுதியில் ஒரு வங்கி கொள்ளை நடந்திருந்தது.
ஓடி சென்று பார்த்தேன், சம்பவம் நடந்து முடிந்திருந்தது. கொஞ்சம் முன்பு
வந்து படம் பிடித்திருந்தால் மறுநாள் பத்திரிக்கையின் விற்பனையே
அதிகரித்திருக்கும். அன்று இரவு முழுவதும் உறக்கம் வரவில்லை.”
“ஒரு செய்தியில் உள்ள படம், அதன் விற்பனைக்கும் எப்படி உதவுகிறது ?
செய்தியை மீறி ஒரு படம் எந்தவகையில் முக்கியத்துவம் பெறுகிறது?”
“இதற்கு என்னால் ஒரு அனுபவத்தைதான் உதாரணமாகக் கூற முடியும். `தோமஸ் கிண்ண’
போட்டி நடந்துகொண்டிருந்தது. நான் பார்த்த விளையாட்டுகளில் மிகச் சிறந்த
ஒரு விளையாட்டு அது. மலேசியாவைப் பிரதிநிதித்து ஒங் பெங் கியோங் மற்றும்
சியா சுன் கிட்டும் இந்தோனேசியாவைப் பிரதிநிதித்து ஹெர்தான்தோ மற்றும் லிம்
சுவி கிங் விளையாடிக்கொண்டிருந்தனர். ஒரு சந்தர்ப்பத்தில் சியா சுங்கிட்
உயரே பறந்து அடித்த ஸ்மேட்ச் என்னை கடந்து செல்கின்றது. அந்தப் பந்தை
எடுக்க லிம் சுவி கிங் கீழே பாய்ந்து பந்தை எதிர்கொள்கிறார்.தொடர்ந்து சியா
சுங்கிட் கொடுத்த மற்றொரு ஸ்மெட்சில் ஹெர்தான்தோ கீழே பாய்ந்து பந்தை
நழுவவிடுகிறார். இந்தோனேசியாவின் இரு ஜாம்பவான்கள் கீழே குனிந்த படியும்
சியா சுங்கிட் உயரே பறந்த படியும் காட்சி பதிவானது. மறுநாள் அந்தப் படம்
கீழே படுத்தவர் தோற்றார் என்றும் உயரே பறந்தவர் வென்றார் என்றும் படத்தைப்
பார்த்த மாத்திரத்தில் செய்தியைக் கூறிவிட்டது. மக்கள் செய்தியைப்படிக்கும்
போதே அதோடு இரத்த நாளமாய் ஒட்டிக்கிடக்கும் காட்சியையும் மனதில்
ஓட்டிப்பார்க்கின்றனர். அதற்கு புகைப்படங்கள் மிகத் தேவையாக உள்ளது.
“உங்கள் புகைப்பட அனுபவத்தில் பெரும்பாலும் வெகுசன இரசனை சார்ந்ததாக
உள்ளது.இதை மீறி ஒரு சமூகப்பிரச்சனையை மையமாக வைத்து உங்கள் புகைப்படங்கள்
அமைந்துள்ளனவா?”
“நான் சந்திக்கும் சமூகப்பிரச்சனைகள் பட்டியலிட்டுச் சொல்லக்கூடியது
அல்ல.அவை ஏராளம்.பத்திரிக்கையில் பணிபுரிவதால் மனிதனுக்கு இந்நாட்டில்
ஏற்படும் அவலங்களை என்னால் எளிதில் காண முடிகிறது.ஆனால் அவற்றை
வெளிப்படுத்தவும் பிரசுரிக்கவும் ஏற்ற ஊடகங்கள் இல்லை.பிரசுரித்தப் பின்
நான் ஆபத்துகள் நிறைந்த பாதையில்தான் என் மீதி வாழ்வை செலுத்த
முடியும்.உதாரணமாக இன்று கோலாலம்பூரில் புதியதொரு கலாசாரம் உருவாகி
வருகிறது.காதலர்களால் ஏமாற்றப்படும் பதினாறுக்கும் குறைந்த வயது தமிழ்
மாணவிகளால் பெரும் பிரச்சனைகள் உருவாகி வருகிறது.குறிப்பாக திருமணமான
ஆண்களுக்கு.என்னால் இதனை விரிவாக கூற முடியாவிட்டாலும் இது போன்ற மாணவிகள்
அணுகினால் கவனமாக இருக்க ஒரு எச்சரிக்கையை மட்டும் நண்பர்களிடம் கூறிச்
செல்கிறேன்.
“புகைப்படத்துறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப மாற்றத்தை இந்நாட்டு
பத்திரிக்கைகள் உணர்ந்து செயல்படுகின்றதா”
“ஆங்கில மலாய் பத்திரிக்கைகள் இந்த தொழில் நுட்ப மாற்றத்திற்கு ஏற்ற
வகையில்தான் பயணிக்கின்றன.உலகில் எந்த மூலையில் தங்கள் நிருபர்கள்
இருந்தாலும் எடுக்கக்கூடிய செய்திகளை அல்லது படங்களை உடனுக்குடன்
அனுப்பும்படி வகை செய்கிறது.தமிழ்ப் பத்திரிக்கைகள் இன்னும் இருபது முப்பது
ஆண்டுகள் பின்தங்கி இருக்கின்றனர்.இந்தப் பின்தங்கள் தொழில் நுட்பத்தை
ஒட்டி மட்டுமல்ல.தேவையற்ற செய்திகளைக் கொட்டி நிரப்புவதிலும் ஒருவருக்கு
துதிபாடுவதிலும் அவரின் பிம்பத்தைப் பெரிது படுத்திக் காட்டுவதிலும் தங்கள்
சக்திகளை இழக்கத் தயாராக இருக்கின்றனர்.எனக்குத் தமிழ்ப்பத்திரிக்கைகளில்
நண்பர்கள் உண்டு.தங்களது சொந்த செலவில் கேமரா வாங்கி புகைப்படக்காரர்களாக
பணிபுரியும் நண்பர்கள் தங்கள் சோதனைகளை சோகமாக என்னிடம் பகிர்ந்து
கொள்வர்.நவீன கருவிகளின் மீதும் கண்டுபிடிப்புகளின் மீதும் நமது தமிழ்ப்
பத்திரிக்கைகள் கவனம் செலுத்த வேண்டும்.அதோடு மட்டுமல்லாமல் பதவி...பட்டம்
பெற்றவற்களுக்காக வாழ்த்துச்செய்தி ஒதுக்கும் பக்கங்களில் மக்களுக்கு
அவசியமான பல தகவல்களை நிரப்பலாம் என்பதை உணர வேண்டும்”
“எதிர்காலத் திட்டம் குறித்துக் கூறுங்கள்?”
“புகைப்படத்துறை மட்டுமல்ல...நம் நாட்டில் தமிழர்கள் இன்னும் பல துறைகளில்
திறமையாக உள்ளனர்.ஆனால் அவற்றை மக்களிடம் கொண்டுச் செல்ல பொருத்தமான
ஊடகங்கள் இல்லாமல் தவிக்கின்றனர்.ஊடகங்களும் இவர்களைக் கண்டுகொள்வதில்லை.
இவர்களின் திறமைகளை வெளிபடுத்த வானொலி அறிவிப்பாளர்களால்தான் முடியும் என
நம்புகிறேன்.அந்தத் துறையில் புகுந்து பலதரப்பட்ட ஆளுமை கொண்ட
மனிதர்களையும் அவர்களின் திறமைகளையும் வெளிக்கொணர திட்டமிட்டிருக்கிறேன்.”
நேர்காணல் முடிய நள்ளிரவானது. அவர் அடுக்குமாடி வீட்டில் இருந்தபடி கீழே
பார்த்தேன்.தூக்க கலக்கத்தில் கீழே வரிசையாகச்சென்ற கார்கள் மங்களாகி ஒளி
உருண்டு செல்வது போல் இருந்தது. கேமராவினால் கண்களை வெல்ல முடிவதில்லை என
மனதில் சட்டென தோன்றி மறைந்தது.
நேர்காணல் / புகைப்படம் : காளிதாஸ் / யுவராஜன்
எழுத்து : ம.நவீன்
|
|