|
அகிலா என்ற அகிலாண்டேஸ்வரிக்கு
இன்றைக்கு நெஞ்சின் படபடப்பு கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது. சரக்... சரக்
என்று தரையில் தேய்த்து நடக்கும் மாமாவின் கால் செருப்பின் சப்தம்தான்
அதற்குக் காரணம். சப்தம் நின்று அவர் அவரது அறைக்கதவை திறக்கும் போது,
அவளுக்கு வியர்க்க ஆரம்பித்தது. வயிற்றைப் புரட்டியது. மேஜையில் குனிந்து
வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டிருந்த அவளின் உள்ளங்கை வியர்வையில் பேனா
வழுக்கியது. நோட்டுப் புத்தகத்தின் தாள் ஈரமானது. மாமா இந்நேரம் தன்
பேண்ட்டை கழற்றிப் போட்டு விட்டு கைலியில் நுழைந்திருப்பார். இன்னும்
சிறிது நேரத்தில் மிக இயல்பாக, எதையோ வைக்கவோ அல்லது எடுத்துப் போகவோ
வருவது போல அகிலாவின் அறைக்குள் நுழைவார். அவள் அமர்ந்திருக்கும் மேஜையின்
முன்னிருக்கும் நிலைக்கண்ணாடியில் அவர் உள்ளே நுழைவது தெரியும்.
ஒருவித கோரமான புன்னகையின் படர்வில் முகம் விகாரம் கொண்டிருக்கும். காவி
ஏறிய மஞ்சள் பற்களும் சிவந்த ஈறுமாக தெரியும் இதழ் விரிப்பின் அருவருப்பில்
காமம் நெளியும். மேஜையின் மீதிருக்கும் அந்தச் சிறிய பிள்ளையார் சிலையை
உள்ளங்கையில் இறுகப் பற்றிக்கொள்வாள். “கணேஷாய நமஹ... கணேஷாய நமஹு கண்களை
இறுக மூடிக் கொள்வாள். மனசுக்குள் கணேஷாவும் முதுகை உரசியவாறு மாமாவுமாக
நிற்க சில்லிட்ட முதுகு தண்டின் வழியாக மின்சாரம் பாயும். அவளது ஓடி
ஷார்ட்” டை விலக்கியவாறு அவரது விரல்கள் ஊர்ந்து முன்னகரும். வெட்கமும்,
வலியும் தாங்காமல் அவள் விம்முவாள். பெருங்குரலெடுத்து “ஓ” வென அழ
நினைப்பாள். தொண்டைக் குழியில் அடைத்துக் கொண்டது அவமானமா அச்சமா எனத்
தெரியாத நிலையில் எந்தச் சப்தமும் அவளிடமிருந்து எழாது. இது மாமாவிற்கு
சாதகமான கணம். அவளது உடலின் நடுக்கம் நடு உச்சத்திற்கு செல்லும் வரை அவரது
விரல்கள் அவளிடம்தான் இருக்கும். எங்கே இனி உரக்க அழுதுவிடுவாளோ என்ற
அச்சமோ, அல்லது “இன்றைக்கு இது போதும்” என்ற உணர்வோ மேலிட அவர் அறையை
விட்டு அவசர அவசரமாக வெளியேறுவார். அவள் மேஜையின் மீது சரிந்து கவிழ்ந்து
சப்தமின்றி அழுவாள்.
அத்தைக்கு கேட்டுவிடக் கூடாதென்று ஓசையற்ற அந்த அழுகையின் சப்தங்களை மிடறி
விழுங்கிக்கொள்வாள். மனசும் மார்பும் வேதனையில் தகிக்கும் போது
விரல்களுக்கிடையில் இருக்கும் பிள்ளையாரை நெஞ்சில் வைத்து கண்களை
மூடிக்கொள்வாள். “அகிலா” என்ற அழைப்பும் “ஆதிகேசவா” என்ற முணங்களும்
அத்தையின் அறையிலிருந்து கேட்டதும்கூட மாமா அறையை விட்டு வெளியேறியதற்குக்
காரணமாக இருக்கலாம். அத்தைக்கு இனிப்பு நீர். வலது காலை எடுத்து இரண்டு
வருடங்களாகிறது. வெட்டிய வாழைத்தண்டு போல் இருக்கும் வலது கீழ் தொடையில்
செருகி நடக்க அவளுக்கு செயற்கை காலொன்று இருந்தும், அதனைப் பயன்படுத்த
இன்னமும் அவள் மனசு இடம் கொடுக்கவில்லை. ஒரு விறைப்பான ராணுவ வீரனைப்போல
அந்தச் செயற்கை கால் எப்போதுமே காவலுக்கு நிற்பதுபோல அவளது கட்டிலின்
பக்கத்தில் நிற்கும். அதனை அவள் ஒருவித வெறுப்பும் பயமும் கலந்தே
பார்ப்பாள். வெளுத்திருக்கும் அத்தையின் முகத்தில் எப்போதுமே ஒரு சோகம்
இருக்கும். அது பொல்லாத இந்த வியாதி தந்த சோகமா இல்லை பிள்ளை பேறு
இல்லையென்ற துயரமா என்று தெரியவில்லை. வாழ்வின் மொத்த அவலங்களையும் மாமா
ரூபத்தில் அவள் மனம் சுமந்து கொண்டிருப்பதால் கூட இருக்கலாம்.
அத்தை கூப்பிடுகிற சப்தம் கேட்டால் ஓடி வந்துவிடுவாள் அகிலா. தன் கழுத்தைச்
சுற்றி ஒரு கையும், சுவரை பிடித்தவாறு மற்றொரு கையுமாக ஒற்றை காலில் தாவி
தாவி கழிப்பறை போவாள் அத்தை. அகிலா வெளியில் காத்திருப்பாள்.
“வெங்கடேஸ்வரா.. ஈஸ்வரா...” என்ற குரல் கேட்டவுடன், உள்ளே நுழைந்து
அத்தையின் கரங்களைப் பற்றித் தன் பின்னங்கழுத்திலும் தோள்களிலுமாகச்
சேர்த்துக் கொள்வாள். தனது மற்றொரு கையால் அத்தையின் இடுப்பைச் சுற்றி
வளைத்து அவளை தூக்கி நிறுத்துவாள். இருவருமாக மெல்ல படுக்கைக்கு வந்தபின்
அகிலாவைப் பார்த்து, “நீ சின்னப்பொண்ணு... என்னால ஒனக்கு எவ்ளோ சிரமம்”னு
சிரித்துக் கொண்டே சொல்வாள். மஞ்சள் பூசிய பொன்னிற முகத்தின் அந்தக் கனிவான
சின்னச் சிரிப்பு இதழ் பிரிந்த அவளது அதரத்தில் இருக்கும் வரை கண்களில் ஒரு
ஒளி இருக்கும். சிரிக்கும்போது அத்தை அழகுகொள்வாள். நெற்றி மையத்தின்
அந்தப் பெரிய வட்டமான குங்குமப் பொட்டின் வண்ணத்திலிருந்தும் கன்னங்கள்
பெறும் இளஞ்சிவப்பு நிறத்திலிருந்தும், மூக்குத்தியிலிருந்தும் அந்த அறை
கணநேர பிரகாசம் கொள்ளும்.
மீண்டும் எப்போது அத்தை சிரிப்பாள் என ஏங்க வைக்கும். அத்தையின் மடியில்
தான் பத்து வயதில் படுத்து களித்ததைப் போல் அத்தை தன் மடியில்
படுத்திருக்க, அவளை வருடி விட, தலையைக் கோதி நீவி விட வேண்டும்
போலிருக்கும். “அகிலா” என்று அத்தை அழைக்கும் அந்தச் சொல், அதன் தொனி, அதன்
குழைவு, அதன் உண்மை, அவள் காட்டும் மொத்த பாசத்தையும் முழுவதுமாக சுமந்து
வந்து சேர்க்கும். இந்த அத்தைக்காக, இவள் காட்டும் நேசத்திற்காக எதையும்
சகித்துக்கொள்ள தன்னால் முடியும் என அகிலா நம்பினாள். அகிலாவின்
ரணங்களுக்கும், அத்தையின் வியாதிக்கும் அவர்களுக்கிடையேயுள்ள
அன்னியோன்யம்தான் மருந்தாக இருந்தது.
“அம்மாவுக்கு போன் பண்ணும்மா... நல்லா படிக்கிறேன்னு சொல்லு, ஆறுதலா
இருக்கும்.. பரீட்சைக்கு இன்னும் எத்தன மாசமிருக்கு... நல்லா
செஞ்சிடுவே..படிக்கிறதானே... நீ சமத்துப் பொண்ணு...” வாஞ்சையோடு கேட்கும்
அந்த வார்த்தைகளில் நம்பிக்கை இருக்கும், ஆனால் எஸ்.பி.எம் பரீட்சைக்கு
இன்னும் நான்கு மாதமிருப்பதை எத்தனை தடவை சொன்னாலும் , அத்தையிடம் இந்தக்
கேள்வி தொடர்ந்து இருந்து கொண்டேதான் இருக்கிறது.
* * *
அத்தையை முதன் முதலில் பார்த்தது பீடோ ர் பக்கத்திலுள்ள
ஒரு தோட்டத்தில். அங்கே அப்பா வேலை பார்த்துக்கொண்டிருந்தார். கல்யாணம் ஆன
புதிதில் மாமா அத்தையை அங்கே அழைத்து வந்திருந்தார். “இந்த ஆளு எங்கிருந்து
கொண்டுவந்தான் இவ்வளவு அழகான பொண்ணை”, என்று எல்லோரும் பேசிக்கொண்டார்கள்.
அப்போது அகிலாவுக்கு பத்து வயது. அத்தையை ஒரு பிரமிப்புடன் வைத்தக் கண்
வாங்காமல் பார்த்துக் கொண்டே இருப்பாள்.
“என்னடி அத்தையை விழுங்குற மாதிரி பாக்குற..” என்று அம்மா கேலி செய்வாள்.
சிரித்துக் கொண்டே அத்தை அகிலாவை இழுத்து தன் மடியில் இருத்திக்கொள்வாள்.
ஒட்டி, உரசி அத்தையின் மடியில் படுத்து உறவாடும் அகிலா அத்தையின்
சௌந்தர்யம் தன்னையும் ஒட்டிக்கொள்ளாதா என ஏங்குவாள்.
அத்தை இருக்கும் இடத்தில் ஒரு வெளிச்சம் இருக்கும். அத்தைக்கு கொஞ்சமும்
பொருத்தமில்லாதவர் மாமா. அதிகம் பேசமாட்டார். அபூர்வமாக சிரிப்பார். அந்தச்
சிரிப்பும் விகாரமாக இருக்கும். எப்பவும் அலைபாய்கிற பார்வை, பெண்களைப்
பார்த்தால் நிலைக்குத்தி ஊடுருவும். அம்மாவுக்கு தூரத்துச் சொந்தம் இந்த
மாமா. குட்டி அரசியல்வாதி, தலைவருக்கு நெருக்கமானவர், பகுதி நேர காப்புறுதி
முகவர், வீட்டுத் தரகர் என்பதெல்லாம் விட பணம் சேர்க்கத் தெரிந்தவர்
என்பதுதான் முக்கியம். அப்பாவுக்குப் பணக்கஷ்டம் வரும்போதெல்லாம் மாமாதான்
பணம் கொடுத்து உதவுவாராம். ஓடி ஆடி விளையாடிக்கொண்டிருக்கும் அகிலாவை
இழுத்து அணைத்து, மூர்க்கமாக கன்னத்திலும், கழுத்திலும் முத்தமிடும்
போதெல்லாம் அகிலாவிற்கு மேனியெல்லாம் கூசும். அவரது வியர்வை நாற்றம்
குமட்டும். கோரைப் பற்களுக்கும், கூரிய நகங்களுக்கிடையில் அவள்
குதறப்படுவது போல் தோன்றும்.
“பிள்ளைய விடுங்க” என்று அத்தைதான் அவளை அவரிடமிருந்து விடுவிப்பாள். மாமா
முறைப்பார். அகிலாவுக்கு மாமாவை பார்க்கும் போதெல்லாம் பள்ளிக்கூட
கழிவறைக்குப் பக்கத்தில் விழி உருட்டி, சிலிர்த்து, உறுமுகிற ஒரு கறுப்புப்
பூனையின் ஞாபகந்தான் வரும். அந்தப் பூனை இன்றும் பதினெட்டு வயது அகிலாவின்
அறையில் வடிவம் பெருத்து, நிம்மதியற்று, வேட்கையோடு கரும்புலியாக உருமாறி,
மாமா வடிவத்தில் உலவுகிறது. மாமாவின் வியர்வை கசியும் உடலை தனது பிடரியின்
அருகில் அவளால் எந்த நேரத்திலும் அவர் அங்கு இல்லாத போதும்கூட நுகர
முடிகிறது.
* * *
ராமராவ் எஸ்டேட் ஆபிசில் கிராணியாக வேலைப்பார்த்து
வந்தார். `ரொம்பவும் நம்பிக்கைக்குரியவர்’ என்பதால் மானேஜர் எப்பவும் அவரை
கூடவே வைத்துக்கொள்ளுவார். நண்பர்கள், விருந்தினர்கள் என்று விருந்து,
பார்ட்டி என்றால் ராமராவ் கைவசம்தான் பிராந்தி, விஸ்கி பாட்டில்கள் எல்லாம்
இருக்கும். எல்லாருக்கும் அவரவர் தகுதி, ருசி, தேவைக்கேற்ப பக்குவமாக
ஊத்திக் கொடுத்துக் கொண்டே இருப்பார். எஜமான் விசுவாசம் கருதி மேனேஜர்
முன்பாக அவர் குடிக்கமாட்டார். ஆனால் மானேஜருக்கு போதை ஏற ஏற முதலாளி,
தொழிலாளி பேதம் நீங்கி ராமராவை பக்கத்தில் அழைத்து குடிக்கச் சொல்லி
வற்புறுத்துவார். மறுப்பேதும் சொல்லாமல் அதற்காகவே காத்திருந்தது போல மடக்
மடக்கென்று குடித்துவிட்டு கண்களை துடைத்துக் கொள்வார் ராமராவ்.
விருந்துகள் நடக்கும் போதுதான் இந்தப் பிரமாண்டமான எஸ்டேட் பங்களாவின் அழகை
ரசிக்க முடியுமென்று அகிலா அங்கே அப்பாவிற்கு துணையாக வந்துவிடுவாள்.
சுவர்களில் மான்கொம்பு, தரையில் ஊன்றிய துப்பாக்கியுடன் நிற்கும்
வெள்ளைக்கார துரைமார்களின் ஆளுயர போட்டோ க்கள், பதப்படுத்தப்பட்ட காட்டுப்
பன்றியின் முகங்கள், வேலைப்பாடு மிகுந்த மேஜை, நாற்காலிகள், அலங்கார
விளக்குகள், வானத்துக்கும் பூமிக்குமாகத் தொங்கும் திரைச்சீலைகள்...
ஆச்சரியங்களின் கிடங்கு அது அகிலாவிற்கு.
ஒருநாள் அவளது கைகளைப் பற்றிக் கொண்டு மேனேஜர், “ஏய் ராமா.. ஒம் பொண்ணு
செவப்பா அழகா இருக்கா..” என்றார். அகிலா கைகளை விடுவித்துக் கொண்டு
அப்பாவிடம் ஓடி அவரை அணைத்துக் கொண்டாள். அப்பா ஒன்றும் பேசாமல்
சிரித்துக்கொண்டிருந்தார். அன்றிரவு அவளுக்கு ஜுரம் வந்தது. ஒரு வாரமாக
காய்ச்சலில் கிடந்து மீண்டாள். நல்ல ஊழியன் என்பதை நிருபிக்கும் விதமாக
எஜமானரைக் காட்டிலும் அதிகமாக குடித்த ராமராவ் வாழ்நாளை சுருக்கிக்
கொண்டார். “பிள்ளை குட்டி இல்லாத எங்களுக்கு அகிலா பிள்ளையா இருக்கட்டுமே”
என்று அத்தையும் மாமாவும் சொன்னபோது அம்மா “ஹே ஹரி வெங்கடேஸ்வரா” என்று
சொல்லி கைகளை விரித்து வானத்தைப் பார்த்து சொல்லிவிட்டு கண்ணீரை துடைத்துக்
கொண்டாள்.அகிலாவின் அம்மா மானேஜரின் சமையல்காரி ஆனாள். அகிலாவின் அக்கா
படிப்பை நிறுத்திவிட்டு ஒரு தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தாள்.
* * *
அத்தை தன் சோகத்தை வெளியே காட்டமாட்டாள். அவளது சோர்ந்த
முகத்தைப் பார்க்க அகிலாவுக்கு மனங்கொள்ளாது. அத்தையிடம் பேச வேண்டும்.
பேசிப் பேசி அத்தைக்குள் இறங்க வேண்டும். படிப்படியாக இறங்கி அவளது ஆழமான
துயரத்தில் கால் நனைக்க வேண்டும் .அப்புறம் ... தெரியவில்லை, ஒருவேளை
அத்தையை அணைத்தபடி நீந்தி கரைசேர வேண்டும். முடியாவிட்டால் மூழ்கி
மாய்ந்துபோகவும் சம்மதம்தான். எல்லோருடைய மனசின் ஆழத்திலும் ஒரு துயர நதி
ஓடிக்கொண்டுதானிருக்குமா?
அத்தை தனிமையில் விசும்பி அழுது கொண்டிருந்த ஓர் இரவில் அகிலா மெல்ல
நுழைந்தாள். “அத்தை ...ஏன் அழறீங்க..?” “ஒன்னுமில்லைம்மா... நீ இன்னுமா
தூங்கல..?” அத்தையின் கைகளை பற்றிக்கொண்டாள். வெளுத்திருந்த அந்த மிருதுவான
விரல்களின் ஸ்பரிசத்தில், அதன் அழுத்தத்தில் “அழாதிங்க அத்தே,
தலைவலிக்குதா... கொஞ்சம்..பிடிச்சு விடவா..?” “இல்லம்மா.. மனசு
வலிக்குது...” சடச்சடவென முறிந்து விழும் மனசின் சப்தம் கேட்டது.
“.....”
“சும்மா சொல்லுங்கத்தே... மாமா பத்திதானே..?”
அகிலாவின் விரல்களோடு தன் விரல்களையும் சேர்த்து கோர்த்துக் கொண்டாள்.
கனத்த ரகசியத்தை வெளியே விடாதபடி அதை அகிலாவின் கைகளுக்குள் வைத்து “இறுக
மூடிக்கொள்” என்பதுபோல் இருந்தது அகிலாவின் கைகளோடு தனதையும்
சேர்த்துக்கொண்டவிதம்.”சத்யமா யார்கிட்டேயும் சொல்லக்கூடாது... அகிலா”
அத்தை இளகிக் கொண்டிருந்தாள். குழைவானக் குரலில் மன்றாடும் தொனி. “இதுக்கு
ஏன்த்தே அழனும் நீங்க? சத்யமாத்தே.. ஆருகிட்டேயும்.. சொல்லமாட்டேன்”.
* * *
அன்று விடுமுறை. காலையிலேயே மழை பெய்ய ஆரம்பித்து
விட்டது. அத்தை குளித்துவிட்டு நீண்ட ஈரக்கூந்தலை காய வைத்துக்
கொண்டிருந்தாள். மஞ்சள் பூசிய முகத்தின் வட்டமான அகலப் பொட்டு
பளிச்சென்றிருந்தது. பொட்டில்லாத அத்தையின் நெற்றியைப் பார்த்ததில்லை
யாரும். நெற்றியில் பொட்டு என்றில்லாமல், பொட்டில் தான் அத்தை தன் முகம்
முழுவதையும் பொருத்திக்கொண்டிருப்பது போல் இருந்தது. பொட்டு இல்லாவிட்டால்
அத்தை இல்லலையோ. ஏதோ ஒரு தெலுங்கு கீர்த்தனையில் மனம் ஒன்றி லயித்துப்
பாடிக் கொண்டிருந்தாள் அத்தை. “பிரம்மம் ஒக்கட்டே...” என்று ஆரம்பமாகும்
அதன் வரிகள்.
அவள் குரல் இழையோடி கட்டிலுக்கு அருகிலுள்ள பெரிய வெங்கடாஜலபதியின்
படத்தின் சட்டத்தில் செருகியிருந்த ஊதுபத்தியின் புகையோடு நெளிந்து
மேலெழுந்து கொண்டிருந்தது. உயிரை கரைத்து பெருக்கெடுக்கும் பாடலில்
வாழ்வின் கடைசித்துளிகள் ஒட்டிக்கொண்டிருப்பது போன்ற ஒரு சோகம் கவ்வ, இனம்
புரியாத கலவரத்துடன் அமர்ந்திருந்தாள் அகிலா. பாடலை பாதியில்
நிறுத்திவிட்டு, “அகிலா.. மாமாதான் காலையில இன்சுலின் ஊசிப்போட்டாரு.
கொஞ்சம் கூடுதலா போட்டுட்டாரு போலிருக்கு.. அந்த பிளாஸ்கில இருக்கிற
ஹார்லிக்ஸ கொஞ்சம் டம்ளர்ல ஊத்திக் கொடு....”
அகிலா கொடுத்ததை குடித்துவிட்டு படுத்துவிட்டாள் அத்தை. உடம்பு
ஜில்லிட்டிருந்தது. வியர்வையில் ரவிக்கை நனைந்திருந்தது. மூச்சு சற்று
வேகமாக இருந்தது. அத்தையின் முகம் துடைத்து துப்புரவாக இருந்தது
போலிருந்தது. அகிலா தன் அறைக்குச் சென்று புத்தகத்தை விரித்து மேஜையில்
வைத்தாள். மனமெல்லாம் மாமா என்ன செய்துகொண்டிருக்கிறாரோ என்று அலைபாய்ந்து
கொண்டிருந்தது. ஓடிப்போய்விடலாம் என்று தோன்றியது. எங்கே என்றுதான்
தெரியவில்லை. எப்பொழுது என்றுதான் விளங்கவில்லை. புத்தகத்தில் மனம்
பதியவில்லை. இன்னும் நான்கு மாதங்களை எப்படி இங்கே போக்குவது என்று
நினைக்கும் போது மனம் கலவரம் கொண்டது. மனசெல்லாம் பீதி பற்றி எரிந்து
கொண்டிருந்தது. ஒரு மகத்தான சூன்யம் கழுத்தருகே விழுங்க காத்திருப்பது
போலிருந்தது.
மேஜை மீதிருந்த சின்ன பிள்ளையார் சிலையின் பிம்பம் எதிரேயிருந்த
நிலைக்கண்ணாடியில் தெரிந்தது. அதன் உருவம் சிறுத்து சுருங்கி புள்ளியாகி
மறைந்தது. அந்தப் புள்ளியிலிருந்து மெல்ல வளர்ந்த உருவம் அடைந்த தோற்றம்
இப்போது மாமாவாக இருந்தது. கண்களை மூடிக் கொண்டாள். கதவு திறக்கும் சப்தம்
கேட்டது. நிலைக்கண்ணாடியில் இப்போது மாமாவேதான். பதற்றத்துடன் எழுந்து
நின்று திரும்பிப் பார்த்தாள். உதடுகள் பயத்தில் துடித்தன. மாமா
சட்டையில்லாமல் கைலியில் இருந்தார். கைலியுங்கூட தொப்பையின் கீழ் தளர்வாக
இருந்தது. மார்பிலும், வயிற்றிலும் மண்டிக் கிடக்கும் சுருண்ட உரோமங்கள்
பரந்த புல்வெளியில் கூட்டமாக மேயும் காட்டெருமை கூட்டத்தை வானத்திலிருந்து
பார்ப்பது போலிருந்தது.
பதட்டத்தில் மேஜையின் விளிம்பில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த புத்தகங்கள்
சரிந்து விழுந்தன. அன்று காலையில்தான் கட்டிலுக்கு புதிய வெளிர் நீல
பெட்ஷீட் விரித்திருந்தாள். கட்டிலுக்கு அருகிலுள்ள ஜன்னல்
திறந்துதானிருந்தது. ஆனால் குறுக்காக நிற்கும் இரும்புக் கிராதி ஜன்னல் வழி
தப்பிக்க முடியாமல் தடுத்தது.அவரது முகத்தை ஏறிட்டுப்பார்க்கத் திராணியற்று
நின்றிருந்தாள். கதவுகளை மூடிவிட்டு மாமா கால்களைப் பரப்பி எதற்கோ
காத்திருப்பதுபோல் நின்றிருந்தார். என்றைக்குமிருக்கும் அந்த விகாரமான
சிரிப்பு கூட இன்றைக்கு இல்லை. முகமெல்லாம் வியர்த்திருந்தது, “சத்தம்
போடாதே” என்பதுபோல் உதட்டின் முன் ஒற்றை விரலை வைத்துக் காட்டினார். சற்று
குனிந்த மாதிரிப் பார்வை. ஒரே பார்வை. ஊடுருவது போல் அவர் விடும் மூச்சின்
காற்று நெஞ்சின் ஏற்ற இறக்கங்களில் வெளியாகிக்கொண்டிருந்தது. கண்களுக்குள்
பதுங்கியிருந்த பயங்கரம் மெல்ல மெல்ல பிதுங்கிக்கொண்டு வந்தது.
“ஓடிவிடு அகிலா...ஓடு...ஓடு...” என்று எங்கோ தொலைவிலிருந்து யாரோ....
அம்மாவின் குரலோ, அத்தையின் குரலோ தெரியவில்லை, தொடர்ந்து கேட்டது.
ஆபத்தின் அருகாமையில் மயிர்கால்கள் குத்திட்டு நின்றன. ஓடிச்சென்று
மாமாவின் மார்பில் பலங்கொண்ட மட்டும் கையை வைத்து தள்ளிவிட்டு கதவை திறந்து
கொண்டு வெளியே ஓடினாள். வாசல் கதவும் திறந்தே கிடந்தது. தெருவில் இறங்கி
வேகமாக ஓட ஆரம்பித்தாள். அக்காவிடம் போய், “என்னைக் காப்பாத்துக்கா...”
என்று அவளைக் கட்டி அணைத்து அழ வேண்டும் என்று எண்ணிக்கொண்டே ஓடினாள்.
பதைப்பும் தவிப்புமாக அவள் பாதங்கள் தரையில் பாவாமல் ஓடிக்கொண்டிருந்தன.
“கின்னஸ்” எதிரேயுள்ள பஸ் நிலையத்தில் யாருமில்லை. மழை ஓய்ந்து, வெயில்
அடிக்க ஆரம்பித்திருந்தது. கிள்ளான் போகும் பஸ் நின்று இவளை ஏற்றிக்
கொண்டது. பஸ்ஸின் உள் நான்கைந்து பேர்கள்தான். தூரம் தூரமாக
அமர்ந்திருந்தார்கள். கடைசி சீட்டில் சென்று அமர்ந்து கொண்டாள். நடுங்கும்
கைகளைச் சேர்த்து இரு தொடைகளுக்கும் நடுவில் வைத்துக் கொண்டாள். எதிரே
பயணச்சீட்டை நீட்டியவாறு நின்றவனிடம் “காசு இல்லை” என்று மலாயில் சொன்னாள்.
அவன் அவளை மேலுங்கீழுமாகப் பார்த்தான். காசில்லாமல் பயணம் செய்வதும்,
கால்களில் செருப்பில்லாமல் அமர்ந்திருப்பதும் அவளுக்கு வெட்கமாக இருந்தது.
அவளை நிமிர்ந்து பார்த்த அவன் ஏதோ சொன்னான். புரியவில்லை. தலையசைத்துவிட்டு
கேலியாகச் சிரித்தான். முன்னால் சென்று டிரைவரின் காதில் ஏதோ கிசு
கிசுத்தான். கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்த டிரைவர் கண்ணாடி வழியாக அவளை
தேட முயன்று, பின் ஒரு முறை அவளை திரும்பிப் பார்த்து விட்டு சிரித்தான்.
ஒவ்வொருவராக இறங்கிய பின் இப்போது பஸ்ஸில் அவள் மட்டுமே பயணி. பஸ் ஷா
ஆலாமின் தொழிற்பேட்டையில் ஏதோ ஒரு வீதியில் சென்றுகொண்டிருந்தது.அவள்
அங்குள்ள தொழிற்சாலையை அடையாளம் கண்டுக் கொண்டாள். அவன் அவளிடம் கோபமாக ஏதோ
சொன்னான். அவன் இந்தோனோசியனாக இருக்க வேண்டும். மொழி சரியாக
புரியவில்லை.ஆனாலும் அவன் கோபமாக இருக்கிறான் என்பதைப் புரிந்து
கொண்டாள்.’எழுந்து ஓடு’என உள் மனது சொன்னது. வேகமாக எழுந்து கதவு நோக்கி
ஓடினாள். படியில் இறங்கினாள். அவன் சத்தமாக, “ஏய்..ஏய்...” என்று
கத்தினான். டிரைவர் பதற்றத்துடன் திரும்பிப் பார்த்து “என்ன..என்ன..” என்று
கேட்டது காதில் விழுந்தது. சாலையில் குதித்து ஓட ஆரம்பித்தாள்.
தார்ச்சாலையின் சூட்டில் பதியும் பாதங்களின் எரிச்சலில் ஓட்டம் தொடர்ந்தது.
வழியில் அவளது அக்கா வேலை செய்யும் பேக்டரியின் பெயரைச் சொல்லிக் கேட்டாள்.
கைகள் காட்டிய திசையில் தொடர்ந்து ஓடினாள்.
வேலை முடிந்து கூட்டமாக வெளியேறிக் கொண்டிருந்தனர். ஆண்களும் பெண்களுமான
கூட்டத்தில் அக்காவை தேடினாள். “அகி... என்ன…என்னாச்சு...” பதற்றத்துடன்
அகிலாவின் கைகளைப் பற்றினாள் அக்கா. விழிநீரும் விம்மலுமாய் நின்ற அகிலாவை
ஹாஸ்ட்டலுக்கு அழைத்துச் சென்றாள். ஆடையைக் கழற்றிக் கொண்டே “சொல்லு அகி...
ஏண்டி செருப்புக்கூட இல்லாம இப்படி வந்து நிக்கிற” என்றாள். பதற்றம் தணிந்த
குரலில் “கடைக்கு போனே.. யாரோ ஒரு இந்தோனிசியாக்காரன் என்னை
விரட்டிக்கிட்டு வந்தான். தப்பிக்க பஸ்ல ஏறி இங்க வந்துட்டேன்..ஓடும்போது
செருப்பு கழண்டுருச்சி...” என்றாள். “ச்சே.. இனிமே வெளியே தனியே போவாதே..
நல்ல காலம் தப்பிச்சே...”
“அக்கா நா அம்மாவ பார்க்கனும்... தோட்டத்துக்கு போவனும்... என்னை அங்கே
அனுப்பி வைக்கிறியா?” கெஞ்சும் குரலில் கேட்டாள் அகிலா. ஜன்னலுக்கருகில்
நின்றுகொண்டிருந்த புறாக்கள் யாரோ விரட்டி விட்டதைப்போல சிறகுகள் படபடக்க
மேலெழுந்து பறந்தன. ஒரு விதமான ஈரமும், பாசிவாசனை, பறவையின் எச்சமும் கலந்த
வாடை உள்ளே வந்தது. துவைப்பதற்கான துணிகளை தோளில் போட்டுக் கொண்டு
குளியலறைக்குப் புறப்பட்ட அக்கா சற்று நேரம் நின்று திரும்பி பார்த்தாள்.
அகிலாவின் கைகளைப் பற்றி அழைத்து வந்து கட்டிலில் அமர்த்தி பக்கத்தில்
அமர்ந்து கொண்டாள். “அகி, அம்மா, நீயோ நானோ அங்க வரவேக் கூடாதுன்னு
கண்டிப்பா சொல்லிட்டாங்க. அந்த மானேஜர் ரொம்ப மோசமானவனாம். ஒன்னமாரி..
என்னமாரி இருக்கிற பொண்ணுங்கள விட்டு வைக்க மாட்டானாம். அம்மாவ இங்க வந்து
உன்ன பாக்கச் சொல்றேன். நீ பேசாம அத்தக்கிட்டேயே இரும்மா. பரீட்சைக்கு
இன்னும் நாலுமாசந்தானே... நீ இங்க தங்கக்கூடாது. வார்டன் பார்த்தா
போச்சு... அவ ஒரு பிசாசு.அப்புறம் நம்ம ரெண்டு பேரையுமே விரட்டிருவா.
பொல்லாதவ. ப்ளீஸ் கொஞ்சம் பொறுத்துக்க... அத்தையும் மாமாவும்தான் உன்ன
நல்லா பார்த்துக்கிறாங்கதானே..?”
எல்லாவற்றையும் கொட்டி தீர்த்துவிடலாம் என்றுதான் தோன்றியது அகிலாவிற்கு.
முடியவில்லை. அத்தையின் முகம் மனசை அழுத்தியது. அப்படியே சொன்னாலும்
அக்காவும் என்னதான் செய்வாள். என்னோடு சேர்ந்து அழுவாள்.பாவம் அவளையும் ஏன்
என்னுடைய சோகத்துக்குள்ள இழுக்கனும்.அவளால என்னதான் செய்ய முடியும்.
அக்கறையும் கவலையும் கலந்த, ஆனால் அதே நேரத்தில் நிதானம் சிதறாத
திட்டவட்டமான பேச்சு அக்காவுக்கு.சே...இவ்வளவு தைரியம் எனக்கில்லையே.
கண்களை துடைத்துக் கொண்டே, “சரிக்கா...” என்றாள் அகிலா.
|
|