|
இரத்த புஷ்டி `டானிக்’ விக்க வர்ற, சோமு மாமாவுக்கும்
செட்டியப்ப தாத்தாவோட மூத்த மக ருக்குமணி அக்காவுக்கும் கல்யாணம் பேசி
முடிச்சது, எங்க குடும்பம் சிலோனியா தோட்டத்துக்கு வர்றதுக்கு முன்னாடியே
நடந்துட்டதா, ஒருநாள் அப்பா, அம்மா, பாட்டி எல்லாருமா பேசிக்கிட்டு
இருந்தப்ப காதுல விழுந்துச்சு. சம்பளம் போடற தேதியில, மாசம் தவறாம சோமு
மாமா தோட்டத்துக்கு “இரத்த புஷ்டி” மருந்து விக்க வருவாரு. “ஆஸ்டின் ஏ 40”
ன்னு கருப்பு நெற காடியில தான், சோமு மாமாவும், அவரோட சீன முதலாளியும்
அவரோட மனைவி கூடவும், சோமு மாமா மருந்து விக்க வருவாரு.
மாமா நல்ல கருப்பு நெறமா இருந்தாலும், சட்டையும் சிலுவாரும் வெள்ளயிலதான்
இருக்கும். ஒல்லியாதான் இருப்பாரு. சுருட்டை முடி மாமாவுக்கு. சீன முதலாளி
கிட்டயும், அவரோட மனைவி கிட்டயும், சோமு மாமா சீனத்துலதான் பேசி வெளுத்து
வாங்கிக்கிட்டு இருப்பாரு. ரெண்டு லயத்துக்கும் நடுவுல இருக்குற மைதானத்துல
தான், இரத்த புஷ்டி மருந்து விக்குற சீனனோட காடி வந்து நிக்கும்.
காடி வந்து மைதானத்துல நின்னவொடனே, நாங்க சின்னப்பையனுங்க எல்லாம் கூடி
சுத்தி நின்னு வேடிக்கை பார்ப்போம். சோமு மாமாதான், பாட்டுப்பாடுற கொழாவத்
தூக்கி காடி மேலே வப்பாரு. சீனமுதலாளியும் அவரோட மனைவியும், மேசய எடுத்து
வச்சி, இரத்த புஷ்டி மருந்து போத்தல்ங்கள அடுக்கி வப்பாங்க. கொஞ்ச
நேரத்துல, லவூட் ஸ்பீக்கர் கொழாயில `வாராயோ வெண்ணிலாவே’ பாட்டு
பிச்சிக்கிட்டு கேக்கும். அப்பறம், `மாசிலா உண்மைக் காதலே’ அப்பறம்,
`கண்வழி புகுந்து கருத்தினில் கலந்து’ ன்னு தொடர்ந்து பாட்டுகளப் போட்டுக்
கிட்டு இருப்பாரு, சோமு மாமா. லவூட் ஸ்பீக்கர் கொழாயில பாட்டுங்க
படிச்சிக்கிட்டு இருக்கறப்பவே; சுத்தி நின்னு வேடிக்க பாத்துகிட்டுருக்கிற
பொடுசுங்க எங்களுக்கெல்லாம், சீன மொதலாளியோட மனைவி சின்னச் சின்ன குப்பியில
இரத்த புஷ்டி டானிக்க ஊத்தி ஊத்தி குடுப்பாங்க.
மாம்பிஞ்சி தொவர்ப்புள, `சாசி சர்பத்’ வாசனையோட இருக்கும் அது. அவுங்க
ஊத்தி குடுக்குற டானிக்க பொடுசுங்க யாரும் குடிக்க மறுத்தா, “ரொம்பத்தான்
பிகு பண்ணிக்காதீங்க.. ஆசயாதான குடுக்கிராங்க, குடிச்சித்தொலயேன்”னு அங்க
வந்திருக்கிற பெரியவங்க திட்டுவாங்க. எல்லாம் ரெடியாதனுக்கு அப்பறம் இரத்த
புஷ்டி டானிக் விக்குற இடத்தில, பெரியவுங்க 20-30 பேரு கூடிருவாங்க..
கேஷ்லைட் வௌக்கு வெளிச்சத்துல, சோமு மாமா, சும்மா பளபளன்னு மின்னிக்கிட்டு
இருப்பாரு.
மைக்க எடுத்து பேசுறப்ப, சோமு மாமா, சங்கிலியில கட்டிப் போட்ட “மனோகரா”
சிவாஜி மாதிரியே பேசுவாரு. ஆனாலும் மாமா போன மாசம் டானிக் விக்க வந்தப்ப
பேசுனதையேதான் இந்த மாசமும் பேசுவாருன்றது நான் மட்டும்
கண்டுபிடிச்சுட்டேன். இருந்தாலும், அங்க டானிக் வாங்கக் கூடியிருக்கிறவங்க
அவரு, பேசுறதக் கேட்டு சொக்கித் தான் போவாங்க... ஒரு வகயில, எங்க குப்பமா
பாட்டிக்கு சோமு மாமா சொந்தம்கிறதால, ரொம்ப பெருமையடிச்சுக்குவாங்க. சீன
முதலாளி, தோட்டத்துல கொண்டு வந்து விக்கிற இரத்த புஷ்டி டானிக் மருந்து
சாப்டுதான், 30 நாளும் திட்டியே போடாம வேல செய்ய முடியுதுன்னு, எங்கப்
பாட்டியும் மத்தவங்களும் பேசிக்குவாங்க.
“மைக்க புடிச்சி பேசி வுட்டார்னா, ஏறக்கொறய மழ பேஞ்சி வுட்ட மாதிரி
ஆயிடும், சிலோனியா தோட்டமே;அதோட, சீன முதலாளிகிட்ட சொல்லிட்டு, ருக்குமணி
அக்கா வீட்டுக்கு சாப்பிடப் போயிடுவாரு சோமு மாமா. இரத்த புஷ்டி, டானிக்
விக்கிற வேலய, சீன முதலாளியும் அவரோட மனைவியும் பாத்துக்குவாங்க.
ருக்குமணி அக்காவோட, அத்த மகன்தான், சோமு மாமாங்கிறதெல்லாம் எனக்கு ரொம்ப
நாள் கழிச்சிதான் தெரியும். தோட்டத்துல, சம்பளம் போடரன்னிக்கி, ருக்குமணி,
அக்கா கொஞ்சம் பரபரப்பா இருப்பாங்க. தலயில கனகாம்பரப் பூவெல்லாம் நெறைய
வெச்சிருப்பாங்க... எப்போதும் எங்கிட்ட தொண..தொணன்னு பேசிகிட்டு இருக்குற
அக்கா, அன்னக்கி மட்டும் ரொம்பப் பேச மாட்டாங்க.. கண்டுக்காத மாதிரி கூட
இருந்துடுவாங்க. அந்தத் தோட்டத்தலயே எனக்கு ருக்குமணி அக்கா வீடுதான் ரொம்ப
புடிக்கும்.
சம்பளத்தேதியில இரத்த புஷ்டி டானிக் விக்க சோமு மாமா சிலோனியாவுக்கு வர்ர..
அன்னிக்கு மட்டும் ருக்குமணி அக்காவுக்கு என்னய யேம் புடிக்காமப் போயிடுது.
இதபத்தி எனக்கு ஒன்னுமே வௌங்கள. ஏன்னா, பள்ளிக்கூடம் விட்டு வந்தவொடனே,
பையத்தூக்கி “வாங்கு” மேல கடாசிட்டு, ருக்குமணி அக்காவப் பாக்க அவங்க
வீட்டுக்கு ஓடிடுவேன். அந்த அக்கா வீட்டுல, வித விதமா சினிமாப்
போஸ்ட்டருங்கல செவர் பலகயில ஒட்டிவச்சிருப்பாங்க. மிஸ்ஸியம்மா, தேவதாஸ்,
சுகம் எங்கே, மந்திரிக்குமாரி, மர்மயோகி, மலைக்கள்ளன், பெண்ணரசி, வஞ்சம்,
எது நிஜம், தூக்குத் தூக்கி, சர்வாதிகாரி, பாதாளபைரவி, ஆயிரம் தலைவாங்கிய
அபூர்வ சிந்தாமணி, இல்லற ஜோதி, நாட்டியத்தாரா, ஜெயசிம்மன், ரத்தக்
கண்ணீர்ன்னு விதம் விதமா போஸ்ட்டருங்க.
இன்னெக்கெல்லாம் பாத்துக்கிட்டு இருந்தாலும் எனக்குச் சலிப்பே வராது.
ஒவ்வொரு நாளும், வேலவுட்டு வந்த உடனே;அந்தப் போஸ்டருங்களத் தொடக்கிறதுதான்,
ருக்குமணி அக்காவோட மொத வேலையா இருக்கும். அக்கா அதுங்களத்
தொடக்கிறப்பல்லாம், என் கிட்ட அந்தப் பேருங்கள எல்லாம் படிச்சு காட்டச்
சொல்லுவாங்க.. அதுல இல்லற ஜோதின்ற பேரை மட்டும் ஒரு அஞ்சி தடவயாவது
வாசிச்சு காட்டச் சொல்லுவாங்க.. அந்தப் போஸ்டருக்குப் பக்கத்துல நின்னு,
`களங்கமில்லாக் காதலிலே, காண்போம் இயற்கையெலாம்”, னு
முனுமுனுப்பாங்க.இந்தப் படத்த பாக்கறதுக்கு, அப்பா என்னய கூட்டிக்கிட்டு
போயிருந்தாரு.
படம் முடிஞ்சி, அப்பா ஒரு தேத்தண்ணி கடைக்குள்ள நுழைஞ்சப்ப பாத்தா, அங்க
பெரிய கூட்டம், படம் முடிஞ்சி வெளிய வந்நதவங்க ரொம்பப் பேரு அந்தக்
கடைக்குள்ள உட்கார்ந்திருக்கிறாங்க. அதுல, எங்க ஸ்கூல் பெரிய வாத்தியார்,
கோபால் சாரும் இருந்தாரு. அவரப் பாத்ததும் எனக்கு வெலவெலத்துப் போச்சி.
என்னயும் கையப் புடிச்சி கூட்டிக்கிட்டுப் போன அப்பா, பெரிய சார் கிட்ட
ரெண்டொரு வார்த்தைப் பேசிட்டு, காலியா இருந்த ஒரு மேசையாண்ட போட்டிருந்த
நாற்காலியில உட்கார வச்சாரு. கிளாசுல கொண்டாந்து வச்ச தேத்தண்ணி சூடா
இருந்திச்சின்னு அப்பாதான், அத சாசர்ல ஊத்தி குடிக்கவச்சாரு.
பெரிய சார், சாப்பிட்டுக்கிட்டே என்னய உத்து உத்துப் பாக்கிற மாதிரி
இருந்திச்சு, சாப்புட்டு முடிச்சிட்டு பொறப்படும் போதும் எங்க மேசக்கிட்ட
வந்து என்னப் பாத்து கேட்டாரு. “என்ன படம் பாத்துட்டு வந்தன்னு” நான்
கொஞ்சம் கூட தயங்காம இல்லற ஜோதி படம் சார்னு சொன்னப்ப லேசா சிரிச்சிட்டாரு.
போகும் போது என்னயத் தட்டிக்குடுத்துட்டு, நாளக்கி ஸ்கூலுக்கு வந்துரணும்..
என்னா..? சொல்லிக்கிட்டே போய்ட்டாரு. சார் கேட்டப்ப, நான் டக்குன்னு
படத்தோட பேர சொன்னது அப்பாவுக்கு ரொம்பப் புடிச்சிருச்சி.
அம்மா, கதவத் தெறந்து விட்டப்போ அப்பா, அம்மாகிட்ட சொல்லிச் சொல்லி
சிரிச்சாங்க. அதுக்கு அப்புறம் ரொம்ப நாள் வரைக்கும், என்னய வகுப்புல
பாக்கிறப்ல்லாம் பெரிய சார் கூப்பிட்டு, “அன்னக்கி உங்க அப்பா கூட பாக்க
வந்தியே அந்தப் படம் என்ன, படம்? பேரைச் சொல்லுன்னு” கேக்கறது
வழக்கமாயிடிச்சி. அந்தப் படத்தோட பேரச் சொல்லும் போதெல்லாம் பெரிய சாருக்கு
லேசா சிரிப்பு வந்திடும்.
அம்மா கிட்ட இதப் பத்திக் கேட்டப்ப, அம்மா சொன்னாங்க.. “நீ ரொம்பச் சின்னப்
பையனா இருக்கியா, அதிலயும் ரொம்பத் தெளிவா அந்தப் படத்தோட பேரச் சொல்றயா,
அதனாலதாண்டா உன்னக் கூப்பிட்டுப் பேரக் கேக்குறார்னு சொன்னதுக்கு
அப்பறம்தான், பெரிய சார எனக்கு ரொம்பவே புடிச்சு போச்சி. பெரிய சார் என்னய
பாக்கும் போதெல்லாம், அந்தப் படத்தோட பேரச் சொல்லச் சொல்லி கேக்கிற
மாதிரியேதான், இப்ப ருக்குமணி அக்காவும், அதே பேர திரும்பத் திரும்ப
படிக்கச் சொல்லி கேக்கிறாங்க.
அக்காவுக்கும் அந்தப் படத்தோட பேரக் கேக்குறதுல, அப்படி என்னா.. சந்தோஷம்
கிடைக்கும்னு எனக்குத் தெரியில. நாங்க அந்தத் தோட்டத்துக்கு வந்த புதுசுல,
ருக்குமணி அக்காவ, அக்கா..அக்கா...னு கூப்பிட்டப்போ அப்படிக் கூப்பிடக்
கூடாதுன்னும், இனிமே, சித்தின்னு தான் கூப்பிடனும்னு சொல்லிட்டாங்க. எனக்கு
ஒண்ணுமே புரியல. அப்பறம் இதப்பத்தி ஒருநாள் கேட்டப் போ, அப்படிக் கூப்புடச்
சொன்னா, கூப்பிட்டுட்டுப் போயேண்டான்னு கொஞ்சம் எரிச்சப்பட்ட மாதிரி
சொன்னாங்க. பெறகு மெதுவா, ருக்குமணி அக்காவப் பத்தி எங்கிட்ட சொன்னாங்க.
அப்பாவுக்கு, ருக்குமணி அக்காவ கட்டிவக்கத்தான் மொதல்ல முடிவு
செஞ்சிருந்தாங்கன்னும், அப்பாதான் அதுக்கு மறுப்பு தெரிவிச்சி, “நான்
தூக்கி வளத்தப் புள்ளய, நானே கட்டிக்கிறதான்னு” பாட்டிகிட்டயும், லச்சிமி
அத்த கிட்டயும் சத்தம் போட்டாருன்னும், “அதுக்கு அப்பறம் தான்
ஒங்கப்பாவுக்கு என்ன பொண்ணு பாத்தாங்கன்னும்”, அம்மா சொல்லி எனக்கு தெரிய
வந்துச்சி. “ஒங்க அப்பாவுக்கு, ருக்குமணி அக்கா மொறங்கிறதுனால தாண்டா,
அவுங்க அத இன்னும் மறக்காம சின்னம்மான்னு கூப்புடச் சொல்றாங்க.. அதனால என்ன
உனக்கு எப்படிக் கூப்பிடப் புடிக்குதோ அப்படியே அவங்களக் கூப்பிடுன்னு”,
சொன்ன அம்மா, “ டேய் ருக்குமணி அக்கா ரொம்ப நல்ல பொண்ணுடா அதுக்கு இன்னும்
நல்ல வழி ஒன்னு இன்னும் பொறக்காம இருக்குதேன்னு”, சொன்னப்போ, அம்மாவோட
கண்ணுங்க கலங்கிடுச்சி.
அம்மா சொன்னதுலயும், கண் கலங்குனதுலயும் எனக்கு எதுவும் புடிபடல.
இன்னொன்னயும் அம்மா சொன்னாங்க, “ இந்தப் பொண்ணு என்னமோ, சோமுவ ரொம்பவே
நம்பிக்கிட்டு கெடக்குறா. அவன் என்ன, செய்யப் போறான்னு தெரியலயேன்னும்”,
அம்மா முணுமுணுத்துக்கிட்டாங்க. ருக்குமணி அக்காவ சோமு மாமாவுக்கு கல்யாணம்
பேசி ரொம்ப நாளாகியும் இன்னும் நடக்காம இருக்கிற கவலையிலதான் அம்மா
இப்படிப் பேசுறாங்கன்னு நானா நெனச்சிக்கிட்டேன். எப்பவும் போல, நான்
அவுங்கள, அக்காண்ணே கூப்புடுவேன். அதுக்காகவெல்லாம், அக்கா என்ன
கோவிச்சுக்கிட்டதே கெடயாது.
ஒரு நா மத்தியானம் பள்ளியவிட்டு வந்தப்போ, பாத்தா அப்பா வீட்டுல இருந்தாரு.
எப்பவும் அவரு அந்தி வேலக்குப் போயிடுவாரு. வீட்டுக்கு வந்தவொடனே, புத்தகப்
பைய, `பெராஞ்சா’ மேல வீசிட்டு, அக்கா வீட்டுக்கு ஓட்டம் புடிச்சிடுவேன். இத
ஒரு நாளு. பாட்டி அப்பாகிட்ட வச்சி வுட்டுட்டாங்க. “உம் பையனுக்கு சினிமாப்
பைத்தியம் ரொம்ப ரொம்ப முத்திப் போச்சுன்னு”. அப்பாவோட கோவம் எனக்கு ரொம்ப
நல்லா தெரியும், சேட்ட எதுவும் பண்ணா `பெல்ட்டை’த்தான் உருவுவாரு. எங்க
வீட்டுத் துணி அலமாரியில, `திருக்க வால்’ ஒன்ன சுருட்டி வச்சிருக்கிறத..
சட்டத்துணிமணிங்களத் தேடித் துலாவுனப்போ நான் பார்த்திருக்கேன்.
அதப்பத்தி எப்பவாச்சும், அம்மாகிட்ட கேக்கனும், கேட்டுத் தெரிஞ்சிக்கனும்னு
நெனப்பேன். அதோட சரி. மறந்து போயிரும். அப்பா யூனியன்ல இருக்கிறாறா, அதனால
சங்கமணி பேப்பர் எங்க வீட்டுக்கு வந்துடும். அந்தி வேளைக்குப் போகாம இருந்த
அன்னக்கி, நானும் வீட்டுல நல்ல புள்ளயா, சங்கமணி பேப்பர்ல இருந்த சி.கோன்
எழுதுன, “சிருஷ்டி” ங்கிற கதயப் படிச்சிகிட்டு இருந்தேன். திடுதிப்புன்னு
என்னயத் தேடிக்கிட்டு எங்க வீட்டுக்கு வந்த ருக்குமணி அக்கா, நான்
“சிருஷ்டி” கதயப் படிச்சிகிட்டு இருந்ததப் பாத்து ஆந்தாந்துப் போயிட்டாங்க.
இதப்போயி, சம்முவம் மாமா கிட்டயும், அவுங்க தங்கச்சி கிட்டயும், செட்டியப்ப
தாத்தாகிட்டயும், பாட்டிகிட்டயும் கூட சொல்லிச் சொல்லி,
சந்தோஷப்பட்டுகிட்டாங்க. ருக்குமணி அக்கா, சந்தோஷமா இருக்குறப்ப பாத்தா,
பத்மினி மாதிரியே இருப்பாங்க. ரெண்டு மாசமா, தோட்டத்துல சம்பளம் போடற
அன்னிக்கு இரத்த புஷ்டி டானிக் விக்கற, சீனத் தவுக்கயும் அவரோட மனைவியும்
மட்டும் வந்து லவூட் ஸ்பீக்கர் பாட்டெல்லாம் வச்சி, டானிக்க வித்துட்டுப்
போனாங்க. சோமு மாமா வராமயே, இவுங்களாவே லவூட் ஸ்பீக்கர் வச்சி, `எத்தனக்
காலம்தான் ஏமாத்துவார் இந்த நாட்டிலேன்னு’ பாட்டெல்லாம் வச்சி, டானிக்
வித்தாங்க. பசங்களோட பசங்களா அங்க இருந்து, சீனத்தவுக்க மனைவி
ஊத்திக்குடுக்கிற டானிக் குடிக்க எனக்கு பிடிக்கல.
சோமு மாமா, மனோகரா சிவாஜி வசனம் மாதிரி பேசா விட்டாலும் கூட தோட்டத்து
ஜனங்க, இரத்த புஷ்டி டானிக் வாங்கிக்கிட்டுதான் போனாங்க. ஜனங்க எப்பவும்
போல இரத்த புஷ்டி டானிக் வாங்கிக் கிட்டுப் போனதைப் பாத்து, சீனத்
தவுக்கயும் அவரோட மனைவியும், சீன பாஷையில பேசி சிரிச்சிகிட்டே இருந்தாங்க.
இரத்த புஷ்டி டானிக் விக்க, சோமு மாமா வராம இருந்தது எனக்கு ரொம்ப
வருத்தமாயிடுச்சி.
ருக்குமணி அக்காவப் பத்தி சொல்லவே வேணாம். அந்தப் பத்மினி அம்மாவோட
சிரிப்பு மாதிரியே, சிரிச்சிகிட்டு இருந்த ருக்குமணி அக்கா, இப்பல்லாம்
ரொம்பக் கவலயா இருந்தாங்க. சோமு மாமா வராம இருக்கிறதுனால என்னவிட ருக்குமணி
அக்காதான் ரொம்பக் கவலப் பட்டுக்கிட்டு இருந்தாங்க. சம்முவம் மாமா
“ஆப்பரேட்டர்” வேலப் பாக்கிற தியேட்டர்ல `மங்கையர் திலகம்’ படம். எங்க
குடும்பமும் ருக்குமணி அக்கா குடும்பமும் போயிருந்தோம். கூட்டம்னா கூட்டம்
அப்படியொரு கூட்டம். தோட்டத்து அம்மன் கோயில் திருவிழாவுல கூடுற மாதிரி
கூட்டம்.
சம்முவம் மாமா, சொல்லிவச்சிருந்த எடத்துல எங்க ரெண்டு குடும்பமும்
நின்னுக்கிட்டு இருக்கிறோம். மொதக் காட்சி இன்னும் முடியில. அப்பதான்,
கொஞ்ச தூரமா இருந்த, மங்கையர் திலகம் சிவாஜி பத்மினி “பேனர்” மாட்டி
வச்சிருந்த கம்பத்துக்கு கீழ நல்ல வெளிச்சமான எடத்துல, நாலஞ்சி
பிரண்டுங்களோட. சோமு மாமா பேசிக்கிட்டு இருந்தத நான் பாத்துட்டேன். நான்
மட்டும்லே எல்லோருமே பாத்துக்கிட்டுதான் இருந்தோம்.
எங்களப் பத்தியோ, அவருக் கல்யாணம் கட்டிக்கிறதா பேசி வச்சிருக்கிற,
ருக்குமணி அக்காவையோ, சோமு மாமா கண்டுக்கிடவே இல்ல. இரத்த புஷ்டி டானிக்
விக்க வந்து, ருக்குமணி அக்கா வீட்டுல வந்து சாப்டுட்டு, அக்காவ சந்தோஷமா
சிரிக்க வச்சிட்டுப் போன சோமு மாமா, எங்க வீட்டுக்கு வந்து, அம்மாவ, அக்கா
அக்கான்னு கூப்பிட்டு, எங்களுக்கெல்லாம், முட்டாய் வாங்கித் திங்க
காசெல்லாம் குடுத்துட்டுப் போன, சோமு மாமா, எங்க எல்லோரையும் பாத்தும்
பாக்காம அலட்சியம் செஞ்சது எனக்கு ரொம்ப வேதனயா இருந்துச்சி.
ருக்குமணி அக்கா மொகத்துல, படம் பாக்க வந்த சந்தோஷமே இல்ல. அதப் பாக்கும்
போது ரொம்ப வேதனயா இருந்திச்சி. இரத்த புஷ்டி டானிக் விக்க வந்து லவூட்
ஸ்பீக்கர்ல வாராயோ வெண்ணிலாவே, பாட்டெல்லாம் வச்சி, மனோகரா வசனம், மாதிரி
பேசுன சோமு மாமாவா இப்படியெல்லாம் எங்க எல்லாரையும்
அலட்சியப்படுத்தராருன்னு பட்டது எனக்கு. எங்க யாரையுமே கவனிக்காத மாதிரி
சோமு மாமா அலட்சியப் படுத்துனது கூடப் பரவாயில்ல. பத்மினி மாதிரி
அழகாயிருக்கிற ருக்குமணி அக்காவ, கருப்பா இருக்கிற சோமு மாமா அலட்சியப்
படுத்தனது பொறுக்காம நான்தான் “சோமு மாமா”ன்னு சத்தம் போட்டு கூப்பிட்டேன்.
பிரண்டுங்க கூட பேசிகிட்டு இருந்த சோமு மாமா சட்டுன்னு திரும்பிப்
பாத்துட்டு, பிரண்டுகளோட அந்த இடத்த விட்டு கூட்டத்துல கலந்திட்டாங்க. சோமு
மாமா போன பக்கமே பாத்துக்கிட்டு இருந்த என்ன இழுத்து அம்மா முதுகுல ஒன்னு
வச்ச பிறகுதான், என்னோட பார்வய நாந் திருப்பினேன். ரெண்டாவது காட்சிக்கு
ஆளுங்க தியேட்டருக்குள்ள போக ஆரம்பிச்சாங்க. சம்முவம் மாமா, ஆப்ரேட்டர்
ரூம்லருந்து இறங்கிவந்து `டிக்கெட்’ கொண்டாந்து குடுத்தாரு. ஒரே வரிசை
நாக்காலியில எங்க ரெண்டு குடும்பமும் உக்காந்துக்கிட்டோ ம். எனக்குப்
பக்கத்து சீட்டுல ருக்குமணி அக்கா.
படத்துல, சிவாஜி சின்னப் பிள்ளையா என்ன மாதிரி இருக்கும் போது,
`கண்டுக்கொண்டேன், நான் கண்டுக்கொண்டேன்’னு பாட்டெல்லாம் பாடுறாரு. ஏனோ
தெரியல, பத்மினியம்மா பாதிபடத்துல செத்துப் போயிடராங்க. அவுங்க
வீட்டுக்காரரு, எஸ். வி. சுப்பையா, பத்மினி அம்மாவ பொதச்சிருக்கிற
இடத்துக்கு வந்து, அழுதுகிட்டே, ` நீ வரவில்லையெனில் ஆதரவேதுன்னு’ பாடராரு.
அப்பதான் ருக்குமணி அக்கா, என்னோட தோள் மேல சாஞ்சிக்கிட்டு குலுங்கி
குலுங்கி சத்தம் வெளியே வராம அழுவுராங்க. எனக்கும் அழுகை வந்திருச்சி.
அன்னயில இருந்து, கருப்பு நெறமா இருக்கிற சோமு மாமாவ ரொம்பவே எனக்குப்
புடிக்காமப் போயிடுச்சி. சோமு மாமா பத்தி எப்ப வீட்டுல பேச்சு எழுந்தாலும்
பாட்டி மாமாவுக்கு சப்போர்ட்டாதான் பேசுவாங்க. அந்தச் சம்பவம் நடந்த பெறவு.
வீட்டுல எல்லாருக்குமே, சோமு மாமாவப் புடிக்காமப் போயிடிச்சி.
எப்போதும் போல, பள்ளிக்கூடம் விட்டு வந்தப்பறம் ருக்குமணி அக்கா
வீட்டுக்குப் போரத நான் நிறுத்திக்கவே இல்ல. அக்காதான், இல்லற ஜோதி படப்
போஸ்டர தடவிக் குடுக்கும் போதெல்லாம் பாடுவாங்களே, `களங்கமில்லாக் காதலிலே
காண்போம் இயற்கையெல்லாம்’னு அத இப்பவெல்லாம் பாடுறது இல்ல. போஸ்டருங்ககளத்
தொடக்கிறது கூட இப்பல்லாம் நான்தான் அக்காவ, சந்தோஷப் படுத்துறதா நெனச்சி
ரெண்டொரு தடவ, “களங்கமில்லாக் காதலிலே” பாடிக் காட்டுவேன். அக்கா
பத்மினியம்மா மாதிரியே சின்னதா சிரிச்சிகிட்டுப் போயிடுவாங்க, அவங்க
மொகத்துல கவல விழுந்திடும். அப்பறம் அந்தப் பாட்ட பாடறத நான் விட்டுட்டேன்.
ருக்குமணி அக்கா வீட்டுக்குடும்பம். இந்தத் தோட்டத்த விட்டு வேற
தோட்டத்துக்கு மாறிப் போறதுக்கு முந்தி, அவுங்க வீட்டுக்கு, அக்காவோட
தங்கச்சி செங்கமலத்த பொண்ணுப் பாக்க வந்தாங்க. அதுக்கு முந்தி, ஒரு நாளு,
வீட்டுக்கு வந்த செட்டியப்பா தாத்தா வீட்டுப் பாட்டி, அப்பாகிட்டயும்,
அம்மாகிட்டயும் ருக்குமணி அக்காவப் பத்தி சொல்லி அழுதாங்க. “இன்னும் அவனயே
மனசுல போட்டுகிட்டு மருகிறாடா தம்பி, அவ”ன்னு சொல்லி அழுதாங்க. இப்ப
கல்யாணமே வேண்டாம்னு, அவ புடிவாதம் புடிச்சிகிட்டு இருக்கிறா. அதனாலதான்,
சின்னவளுக்கு மாப்பிள்ள வந்திருக்கு அதயாவது முடிச்சிடாலாம்னு இருக்கம்”னு
சொல்லி வீட்டுக்கும் வரச்சொல்லிட்டுப் போனாங்க அந்தப் பாட்டி.
ருக்குமணி அக்காவோட தங்கச்சி கல்யாணம், வேற தோட்டத்துல தான் நடந்திச்சி.
அந்தக் கல்யாணத்துக்கு, நாங்க குடும்பத்தோட, நண்டுக்காரன் பிரைவேட் காடியில
போய்ட்டு வந்தோம். எங்க குடும்பத்தப் பாத்தவொடனே ருக்குமணி அக்காவுக்கும்
பாட்டிக்கும் செட்டியப்ப தாத்தாவுக்கும், சம்முவம் மாமாவுக்கும் ரொம்ப
சந்தோஷம். இந்தத் தோட்டத்துல இருக்கிற `சோல் கிரேப்’ அரைக்கிற
பேக்டிரியிலதான் ருக்குமணி அக்காவுக்கு இப்ப வேலையாம். அதனால, முன்ன
இருக்கிறதவிட, இப்ப ரொம்ப ரொம்ப அழகா இருந்தாங்க. பாக்கிறதுக்கே ரொம்ப
புடிச்சிருந்துச்சு. கல்யாண வீடுங்கறதுனால, ரெக்கார்டெல்லாம் போட்டு
`நெத்தியில நீல நெறப்பொட்டு’ பாட்டெல்லாம் வச்சாங்க.
ருக்குமணி அக்கா என்னயத் தனியாவே விடல. கையப் புடிச்சி அவங்க கூடவே
வச்சிக்கிட்டாங்க. அவுங்க கூட்டாளிங்க கிட்டயெல்லாம் கூட என்னக் காட்டி
எங்க மாமா மகன்னு சொன்னாங்க. `புண்டுட்’ தோட்டத்துல இருந்து லச்சிமி
அத்தையும் நடேச மாமாவும், மூணு பிள்ளைங்களயும் கூட்டிக்கிட்டு
வந்திருந்தாங்க. லட்சிமி அத்த குடும்பத்த கல்யாண வீட்டுல பாத்தவொடனேயே,
குசினிப் பக்கம் ஏதோ வேல இருக்கிற பாவனையில பின்னாடி போய்ட்டாங்க.
அதப் பாத்த லட்சிமி அத்தக்கி ஏகப்பட்ட கடுப்பு வந்திருச்சி. அங்க இருந்த
அப்பாவப் பாத்து, “கல்யாணத்துக்கு யேன், அம்மாவக் கூட்டிக்கிட்டு
வரலேன்னு”, சத்தம் போட்டாங்க. ருக்குமணி அக்காவ ஒட்டிக்கிட்டு நின்னிருந்த
எங்கிட்ட வந்து கட்டிப்பிடிச்சி நெத்தியிலயும் கன்னத்துலயும் மாறி மாறி
முத்தம் வச்சாங்க. எனக்கா.. வெக்கம் தாங்கல. இந்த அத்த எப்பவும்
அப்படித்தான். எம்பேர்ல உசிரா இருப்பாங்க. எந்த எடத்துல பாத்துப்புட்டாலும்
இப்படித்தான் பண்ணுவாங்க.
பத்துப் பதினஞ்சி நாய்ங்க தோட்டத்துக்குள்ள பூந்த புது ஆளுங்களப் பாத்து
சுத்தி வளச்சிகிட்டு நகரவுடாமக் கொலைக்குதுங்க. அதுங்க போட்டச் சத்தத்துல,
வீட்டுல எல்லாருமே முழிச்சி அலாரத்தப் பாத்தா விடிகாலை நாலுமணிதான்
ஆகியிருந்துச்சி. வெளியே யாரோ அப்பா பேர சொல்லி வெசாரிக்கிறதும், அவங்களப்
பேசவிடாம, நாய்ங்க `வள்ளு வள்ளுனு’ பெரிய சத்தத்தோட கொலைக்குறதும்,
வந்தவங்க என்னத்த விசாரிக்கிராங்கங்கிறதயும் வௌங்கிக்கவே முடியாம
பண்ணிகிட்டு இருந்ததுங்க.
பெரிய கங்காணி மகன், கோயிந்தன் தான் கம்பாயோ, கட்டைங்களயோ தூக்கி வீசி,
நாய்ங்கள வெரட்டுனாரு. அதுக்குள்ள, கதவத்தெறந்துகிட்டு அப்பாவும் வெளியே
போய் வந்திருந்தவங்களப்பாத்து என்ன ஏதுன்னு வெசாரிக்கிறாரு. சைக்கிள்ள
வந்தவங்ககிட்ட, அப்பா என்ன ஏதுன்னு வெவரம் கேட்டவரு, அப்படியே அங்கயே
ஒக்காந்து விசும்புராரு. வந்தவங்க ருக்குமணி அக்காவப் பத்துன சேதிய
சொல்றதுக்கு செட்டியப்ப தாத்தா வீட்டுலருந்து அனுப்புன ஆளுங்கதான்.
அப்பாகிட்ட சேதிய சொல்லிட்டு சட்டுன்னு சைக்கிளுங்கல எடுத்துக்கிட்டு
பொறப்பட்டு போயிட்டாங்க. மொதல்ல என்ன, ஏதுன்னே புரியாம இருந்த பாட்டிக்கு
விஷயத்த அப்பா சொன்னவொடனே, “அடிப் பாவி மகளே, இப்படி பண்ணிட்டுப்
போயிட்டயேடி”ன்னு கதறி ஒப்பாரி வெச்சு அழுது நெஞ்சில அடிச்சிகிட்டு தரயில
பொரண்டது, லயத்துல தூங்கிக்கிட்டிருந்த மத்தவங்களயும் எழுப்பி என்ன ஏதுன்னு
வெசாரிக்க வச்சிடுச்சி.
|
|