|
‘சிரி...
உன் இதயம் வலித்தாலும்
சிரி... அது உடைந்தாலும்
வானத்தில் இருக்கும் மேகத்தைக்கூட
வாங்கி விடலாம்.
நீ வலியில் சிரிக்கத் தெரிந்தால்
சிரி... நாளை அந்த சூரியனின் ஒளியும்
உன் முகத்தில் பிரகாசிக்கும்.
உன் முகத்தில் மகிழ்ச்சியை நிறைத்து
துன்பச் சுவடுகளை மறை.
கண்ணீர் உன் அருகில் நிரந்தரமாக இருந்தாலும்
நீ சிரித்தாலும் முயற்சியை கைவிடாதே.
சிரி... அழுவதால் என்ன லாபம்?
சிரி உன் வார்த்தையின் அர்த்தத்தை
கண்டு கொள்வாய்’
‘Modern Times’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற பாடலாகும் இது.
இப்பாடலுக்கு சாப்ளின் இசையமைக்க John Turner and Geoffrey Parsons
இப்பாடல் வரிகளை எழுதினார்.
சார்லி சாப்ளின், ஹாலிவுட் திரையுலகின் மிகப்புகழ் பெற்ற கலைஞர். இவருக்கு
நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட
தொகுப்பாளர், திரைப்படத்தயாரிப்பாளர் என்று பல பரிணாமங்கள் உண்டு. சார்லி
சாப்ளின் ஏப்ரல் 16-1889இல் லண்டனில் உள்ள வால்வொர்த்தில் சார்லசுக்கும்
ஹன்னா ஹாரியட் ஹில்லுக்கும் மகனாகப் பிறந்தார்.
5
வயதிலேயே நடிக்கத் தொடங்கி விட்டார் சாப்ளின். முதன் முதலில் 1894இல்
மியூசிக் ஹால்-இல் அவர் தாய்க்குப் பதிலாக ஒரு வேடத்தில் நடித்தார்.
சிறுவனாக பல நாட்கள் உடல் நலக்குறைவால் படுத்த படுக்கையாக இருந்தபொழுது,
இரவுகளில் அவரது தாய் ஜன்னல் ஓரம் அமர்ந்து வெளியில் நடக்கும் நிகழ்வுகளை
நடித்துக் காட்டுவார். சாப்ளினுக்கு பத்து வயது
இருந்தபொழுது, சிட்னி
லண்டன் ஹிப்பொட்ரொமில் ‘சின்ட்ரெல்லா‘ பாண்டொமைமில் ஒரு பூனையாக
(நகைச்சுவைக் கதாபாத்திரம்) நடிக்கும் வாய்ப்பை வாங்கித் தந்தார். 1903இல்
ஜிம் அ ரொமான்ஸ் ஆஃப் காக்கையன் (Jim A Romance of Cockayne) நாடகத்தில்
நடித்தார். இதற்குப் பிறகு அவருக்கு நிரந்தர வேலை கிடைத்து. செர்லாக்
ஹொம்ஸ் நாடகத்தில் செய்தித்தாள் விற்கும் சிறுவன் 'பில்லி' வேடத்தில்
நடித்தார். தொடர்ந்து கேசீஸ் கோர்ட் சர்க்கஸ் (Casey’s Court Circus)
நடத்திய பல்சுவை நிகழ்ச்சியிலும், Fred Karno’s Fun Factory Slapstick)
நகைச்சுவை நிறுவனத்திலும் கோமாளி வேடத்திலும் நடித்தார்.
சாப்ளினின்
திறமையைத் தயாரிப்பாளர் மாக் செனட் கவனித்து அவரது நிறுவனமான கீஸ்டோன்
திரைப்பட நிறுவனத்தில் (Keystone Film Company) சேர்த்துக் கொண்டார்.
முதலில் சாப்ளினுக்கு கீஸ்டோன் நடிப்பு முறைக்கு தன்னை மாற்றிக் கொள்வது
சற்று கடினமாக இருந்தது. ஆனால் மிக விரைவில் தன்னை பழக்கிக் கொண்டு
கீஸ்டோனின் சிறந்த கலைஞராக வளர்ந்தார். இவரது அசாதாரண வளர்ச்சிக்குக்
காரணமாக அமைந்தது அவர் தனக்கென்று உருவாக்கிக் கொண்ட நாடோடி வேடமும்,
நிறுவனத்தில் இவருக்கு இயக்கவும் புது படைப்புகள் படைக்கவும் கொடுக்கப்பட்ட
உரிமையாகும். 1914இல் சாப்ளின் வாரத்திற்கு $150 சம்பளம் வாங்கினார். ஆனால்
மூன்றே வருடங்களில், 1 மில்லியன் ஊதியம் பெற்ற முதல் நடிகர் என்ற பெருமை
இவரையே சாரும்.
இவர் 1919இல் மேரி பிக்போர்ட், டக்லஸ் ஃபேர்பேங்க்ஸ் மற்றும் கிரிபித்துடன்
இணைந்து யுனைடெட் ஆர்ட்டிஸ் ஸ்டூடியோவைத் துவக்கினார். 1927இல் டாக்கீஸ்
(ஓசையுடன் கூடிய திரைப்படங்கள்) வெளிவரத் துவங்கி மிகவும் பிரபலம்
அடைந்தாலும் 1939வரை சாப்ளின் பேசும் படங்களில் இருந்து ஒதுங்கியே
இருந்தார். சினிமாவின் பல துறைகளில் கைதேர்ந்தவராகத் திகழ்ந்தார். சாப்ளின்
1952இல் வெளிவந்த ‘லைம் லைட்’ திரைப்படத்தில் (Lime Light) திரைப்படத்தில்
நடன அமைப்பையும் 1928இல் திரைப்படம் ‘தி சர்க்கஸ்’ (The Circus)
இன்
தலையங்க இசையமைப்பையும் இவரே செய்தார். இவர் இசையமைத்த பாடல்களில்
அதிகப்புகழ் பெற்றது ஸ்மைல் (Smile).
இவரது
முதல் டாக்கீஸ் 1940இல் வெளியான தி கிரேட் டிக்டேட்டர் (The Great
Dictator). இது அடால்ஃப் ஹிட்லரையும் அவரது பாசிஸ்ட் கொள்கையையும்
எதிர்த்து குரல் கொடுத்த படம். இப்படம் அமெரிக்கா இரண்டாம் உலகப்போரில்
புகுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு அஙகு வெளியிடப்பட்டது. இதில் சாப்ளின்
‘ஹிட்லர்’ மற்றும் நாஜியர்களால் கொடுமையாக கொல்லப்படும் யூத
இனத்தைச்சேர்ந்த ஒரு நாவிதன் என இருவேடங்கள் பூண்டிருந்தார். சினிமா மீது
மோகம் கொண்ட ஹிட்லரும் இப்படத்தை இருமுறை பார்த்துள்ளார். (போர் முடிந்து
ஹிட்லரின் கொடுமை உலகத்திற்கு தெரிய வந்த பிறகு சாப்ளினுக்கு இக்கொடுமைகள்
எல்லாம் தெரிந்திருக்காமல் ஹிட்லரையும் நாஜியர்களையும் கிண்டல் செய்திருக்க
முடியாது என திரைத்துறையைச் சார்ந்தவர்கள் பலவாறாக கருத்து கூறினர். எல்லா
கருத்துக்கும் பதிலாக சாப்ளின் “நான் யாரையும் குற்றம் சொல்ல
விரும்பவில்லை. என்னால் இயன்றளவு அனைவருக்கும் உதவுவேன். நாம்
ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும். துக்கத்தோடு அல்ல” என எளிய
மனிதராகத் தன்னை உருவகித்தார்.
சாப்ளினின் அரசியல் சிந்தனைகள் இடது சாரியானதாக கருதப்படுகிறது. இதனையே
இவரது திரைப்படங்களில், முக்கியமாக ‘மாடர்ன் டைம்ஸ்’ (Modern Times)
பிரதிபலித்தன. இப்படம் தொழிலாளிகள் மற்றும் ஏழைகளின் கவலைக்கிடமான நிலைமையை
சித்தரித்தது. இவர் அமெரிக்க கொள்கைகளுக்குப் புறம்பான நடவடிக்கையில்
ஈடுபடுவதாகவும், கம்யூனிஸ்ட் எனவும் சந்தேகிக் கப்பட்டார். FBI (ஜே.
எட்கார் ஹவர்) இவரை கண்காணிக்குமாறு உத்தரவிட்டு, அமெரிக்காவில் சாப்ளின்
வாழும் உரிமையை நீக்க முயற்சித்தார். அவர் பிரிட்டிஷ்
குடியுரிமையிலேயே
கடைசிவரை நீடித்தார். வாழ்வின் கடைசி நாள்களில் அவர் பெரும்பாலும்
சுவிட்சர்லாந்தில் வாழ்ந்தார். 1972, ஆஸ்கார் வாழ்நாள் சாதனை விருதைப்
பெறுவதற்காக அமெரிக்கா திரும்பினார்.
சாப்ளின்
1914-1923 (Between Shaver முதல் The Pilgrim)வரை மொத்தம் 69
குறும்படங்களையும் 17 முழு நீளப்படங்களையும் இயக்கி நடித்திருந்தார். ‘The
Kid’ அவர் நடித்து இயக்கிய முதல் முழு நீளப் படம். அப்படம் ஆஸ்கார்
விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் வெற்றி பெறவில்லை. பின்னர் 1928இல்
வெளியான ‘தி சர்க்கஸ்’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் மற்றும் சிறந்த
இயக்குநர் ஆஸ்கார் விருதுகளுக்கு தேர்வு பெற்று வெற்றி அடைந்தார். அவருடைய
இரண்டாவது ஆஸ்கார் 44 ஆண்டுகளுக்குப்பின் 1972இல் ‘சினிமாவை
இந்நூற்றாண்டின் கலை வடிவாக்குவதில் அளவிட முடியாத பங்கிற்காக’
வழங்கப்பட்டது.
சாப்ளின், 1977ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று அவரது எண்பத்தி எட்டாவது
வயதில் வெவெயில் இறந்தார். அவரது உடல் (vaud) நகரிலுள்ள கார்சியர்
-சர்-வெவெ கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
சார்லி சாப்ளினின் பிம்பத்தை அவரது ரசிகர்களும், விமர்சகர்களும் பலவாறாகத்
தொடர்ந்து கட்டமைத்த வண்ணம் உள்ளனர். எல்லா காலத்திலும் சார்லி சாப்ளினின்
கூற்று அதன் அர்த்தங்களை மாற்றி வடிவமைத்து கடந்து கொண்டே இருக்கிறது.
'நான் பிறருக்காகவே வாழ்கிறேன். நான் கோமாளியாக இருக்கவே விரும்புகிறேன்.
அரசியல்வாதிகளுக்கு மேலாக அது என்னை உயர்த்துகிறது. வாழ்க்கை அழகானதுதான்.
போராடாமல் தோற்பதே நீ செய்யும் தவறு. வாழ்க்கை மரணத்தைப் போன்று நம்
வாழ்வில் தவிர்க்க முடியாதது. நிலத்தைப் பெயர்த்து மரங்களைத் தருவிக்கும்
பூமியின் சக்தியை நினைத்துப் பார். உன்னுள் இருப்பதும் அதே சக்தியே;
உன்னிடம் அதே அளவு நம்பிக்கையும் அதை உபயோகிக்கும் உத்வேகமும்
இருக்குமானால் அதற்காக இறுதி வரை போராடு......’
|
|