|
நான் வேலை பார்க்கும் கட்டிடம் 20 மாடிகள் கொண்டது. அதில் 13-ஆம் மாடிக்கு
செல்லும் லிஃப்ட் பட்டனில் 12A என்று எழுதியிருக்கும். அங்கு வேலை
செய்பவர்கள் பெரும்பாலோர், எல்லாம் தெரிந்தவர்கள் போலவே இருந்ததால் ஏன்
என்று யாரிடமும் கேட்கவில்லை. நண்பர் ராம் குமார் தான் ஒருமுறை
தெளிவுப்படுத்தினார். 13 மேலை நாட்டு மக்களுக்கு ஆகாத எண்ணாம்.
பேய்களுக்கும் அந்த எண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்பப்படுவதாக
பேய் படங்களின் ரசிகரான ராம் ஒருமுறை சொன்னார்.
சரி தமிழர்களுக்கும் 13 எண் உவப்பில்லாத எண்ணாக மாறிவிட்டதோ என நினைக்கத்
தோன்றுகிறது. அண்மையில் நம் நாட்டின் 13 கலைஞர்கள் (ஓவியர்கள்,
புகைப்படக்காரர்கள், சிற்பி) ‘Winds of Desire’ என்ற தலைப்பில் தங்களின்
படைப்புகளை பொதுமக்களின் பார்வைக்குக் கண்காட்சியாக வைத்தனர். கிட்டதட்ட
அவர்களின் படைப்புகள் எல்லாம் விற்று முடிந்தன. ஆனால் வாங்கியவர்
பெரும்பாலோர் மற்ற இனத்தினர். இக்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்ததே ரம்லி
இப்ராஹிம் சார்ந்திருக்கும் கலை மன்றம்தான். பின்வருவன அந்த பதிமூன்று
கலைஞர்களைப் பற்றிய எளிய அறிமுகம் என வைத்துக் கொள்ளலாம். தன் பலத்தை
அறிந்திருப்பவன் வெற்றியாளனாகிறான். நல்ல கலைஞர்களை அறிந்திருக்கும் சமூகம்
முன்னகரவும், தம் ஆன்மாவை புடம்போட்டுக் கொள்ளவும் துணியும்.
துணியாவிட்டால் நட்டம் நிச்சயம் கலைஞர்களுக்கில்லை.
1. ஓவியர் டாக்டர். எஸ். சந்திரன்
ஓவியர் எஸ். சந்திரன் சிரம்பானில் பிறந்தவர். கோலாலும்பூரில் வளர்ந்தவர்.
ஐந்து வயதிலிருந்தே கலை அவரை ஆட்கொள்ளத் தொடங்கியது. கோயில்களில் இருக்கும்
சிற்பங்களும், நாட்காட்டிகளில் மிளிரும் ஓவியங்களும், சேலைகளில்
நெய்யப்பட்ட சரிகை வேலைப்பாடுகளும் அவரின் கலை உள்ளத்தை ஆட்கொள்ளத்
தொடங்கியது. பிறகு ரெம்பராண்டின் ஒளித் தீண்டும் ஓவியங்கள் அவரின் ஓவியம்
நோக்கிய நகர்வை மேலும் விரைவுப்படுத்தியது.
கலை அவர் குடும்பப் பின்னணியிலும் வேறூன்றி இருந்தது. அவர் மூதாதையர்கள்
நாடகம் போன்றவற்றில் ஈடுபாடு உள்ளவர்களாக இருந்தனர். அவருடைய அக்கா பரத
நாட்டிய பெண்மணியாக இருந்தார்.
அவருடைய பதின்ம வயதில் இந்தியாவிற்குச் சென்று கோவில்களில் நடக்கும்
கலைப்பணிகளில் தன்னை ஈடுப்படுத்திக் கொண்டார். அங்கிருந்தவாறே வர்ணம் கலைக்
கல்லூரியில் பெரும் புகழ்ப்பெற்ற ஓவியரான அல்போன்சோ தாஸ் மேற்பார்வையில்
ஓவியக் கலையில் நுட்பங்களை இன்னும் ஆழமாகக் கற்றுத் தேர்ந்தார்.
மலேசியாவிற்குத் திரும்பியவுடன் பெனெராங்கான் (Penerangan) இதழில் வேலையைத்
தொடங்கினார். இந்நேரத்தில்தான் அவருடைய ‘சித்தார் பெண்’ ஓவியம் முதன்
முதலில் வெளியிடப்பட்டது.
பிறகு அவருடைய திறமை சமுகத்தின் பார்வையை அவர் பக்கம் திரும்பச் செய்தது.
இந்திய சமுகத்தைச் சார்ந்த சிறந்த ஓவியராக அவர் அறியப்படத் தொடங்கினார். பல
சமுக நிதிச்சேகரிக்கும் திட்டங்களுக்கு உதவும் பொருட்டு அவருடைய ஓவியங்கள்
விற்கப்படத் தொடங்கின. அவருடைய கைவண்ணத்தைத் தாங்கிய சுமார் 500, 000
தீபாவளி வாழ்த்து அட்டைகள் வெளிவந்தன.
கலைநிகழ்வுகளில் பிரபலங்களின் ஓவியங்களை மூன்று நிமிடங்களில் வரைந்து
பிரபலமடைந்தார். பிறகு பப்ளிக் வங்கியின் ஆஸ்தான ஓவியராக 1987 முதல் 1992
வரை இருந்தார். அவ்வேளையில் அவ்வங்கியின் பல முக்கிய சின்னங்கள், ஓவியங்கள்
வடிவமைப்பத்தில் மும்முரமாக இருந்தார்.
இத்தனை வருடங்களில் இவரின் ஓவிய ஆக்கங்களில் ஆதார சுருதியாய் அன்பு,
அணிகலன்கள், சிற்ப வேலைபாடுகள் போன்றவை உள்ளன. மகாபலிபுரத்தில் அமைந்துள்ள
பழைய ஆலயங்கள் அவருடைய ஆக்கங்களுக்கு உத்வேகமாக அமைந்துள்ளன. சத்யஜித்ரே
படங்களில் வரும் நாயகிகளின் பாவங்களும் அவருடைய ஓவியங்களாக மாறியுள்ளன.
அவருடைய பணிகளுக்காக 2006-ஆம் ஆண்டு அமெரிக்க கெம்டன் பல்கலைக்கழகம் கெளரவ
டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது. 2009-ஆம் ஆண்டில் சென்னை கலைக்
கல்லூரியில் சிலப்பதிகாரத்தில் பயன்படுத்தப்பட்ட அணிகலன்களைப் பற்றி ஆய்வு
செய்திருக்கிறார்.
இவ்வாண்டு அவருடைய புத்தரைப் பற்றி ‘ஞானம்’ ஓவியம் மிகுந்த வரவேற்பைப்
பெற்றுள்ளது. தொடர்ந்து ஓவியங்களில் புதுமையைத் தேடும் இவர், தற்போது
Friends to Mankind அமைப்பின் கலைத் தூதுவராக பணிப்புரிகிறார்.
2. வி. சந்திரன்
ஒரு தற்காப்பு கலை நிபுணர் புகைப்படக் கலைஞரான கதை இது. சீ விளையாட்டுப்
போட்டியில் கராத்தே பிரிவில் இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி வென்றவரின்
ஆன்மாவில் ஆக்ரோசத்தோடு அமைதியான கலையும் கலந்திருந்தது இயற்கையின் பல
ஆச்சரியங்களில் ஒன்றுதான். ஃபிரிக்பீல்ட்ஸ் பகுதியில் பிறந்து வளர்ந்தவரான
வி. சந்திரன் புகைப்பட கலையில் ஈடுப்பட்டது தற்செயல்தான்.
பதினெட்டு வயதிருக்கும்போது YMCA செயலாளர், டேவிட் வொங் என்ற புகைப்பட
கலைஞருக்கு உதவியாளராக இருக்க முடியுமா என கேட்டபோது ஆர்வமாக
ஒப்புக்கொண்டார். ஆனால் அது அவரை இவ்வளவு தூரம் தீவிர ஈடுபாட்டுக்கு
வழிவகுக்கும் என அவர் நினைக்கவில்லை.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு, வோங்கும் சந்திரனும் ஒரு விளம்பர
நிறுவனத்தில் பணிப்புரியத் தொடங்கினர். அங்கிருந்த ஐந்து வருடங்களும்
புகைப்பட கலையில் உள்ள நுட்பங்களைக் கற்று தேர்ந்தார்.
1990-ல் பெரித்தா வெளியிட்டாளர்களுக்குப் பணிப்புரியத் தொடங்கினார்.
அவர்களிம் வெளியீடான ‘Jelita’ மற்றும் ‘Malaysian Business’ சார்பாக பல
வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு அமைந்தது. பயணம் அவருடைய கலைக் கண்ணை
இன்னும் கூர்மைப்படுத்தியது எனலாம்.
இன்று சொந்தப் புகைப்பட நிறுவனத்தை வைத்திருக்கிறார் திரு. வி. சந்திரன்.
அவரின் பெரிய முயற்சியாக வரவேற்கப்பட்டது பகாங் அரசு குடும்பத்தினர்
ஏற்பாட்டில் நிகழ்ந்த ‘பகாங் பாரம்பரிய உணவு’ தொகுப்புகளுக்கு புகைப்படம்
எடுத்த போதுதான்.
கறுப்பு வெள்ளையில் புகைப்படம் எடுப்பதை இன்னும் விரும்பும் வி. சந்திரன்,
பாலி நடன மங்கை ஜரிடா மாலிக்கின் நடன அசைவுகளைப் பதிவு செய்த படங்கள்
பெரும் வரவேற்பைப் பெற்றன. நடன அசைவுகளில் இருக்கும் நளினத்தோடு அதன்
ஏகாந்தத்தையும் பதிவு செய்யப்பட்ட விதம் பார்ப்பவர் மனங்களைக் கொள்ளைக்
கொள்கிறது.
புகைப்படக் கலையிலுள்ள ஈடுபாட்டினால் தனது மனதுக்கு உகந்த விஷயங்களை செய்ய
இயலுவது மகிழ்ச்சியாக இருப்பதாக சொல்கிறார். தற்சமயம் தன்னுடைய
வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்தும் அளவுக்கு தான் உழைப்பதை நிறைவாகச்
சொல்கிறார். இருந்தும் எதிர்காலத்தில் தன் மனதுக்கு உகந்த விஷயங்களில்
மட்டும் ஈடுபட உத்தேசித்துள்ளதாகச் சொல்கிறார்.
எதிர்காலத்தில் புகைப்பட கலையில் ஒளியைப் பயன்படுத்தும் விதத்தை இன்னும்
கூர்மையாக சிந்திக்க போவதாக சொல்கிறார். ‘இப்போதெல்லாம் யாராலும் படம்
எடுக்க முடியும், இருப்பினும் சுற்றிலும் உள்ள ஒளியை எவ்வாறு உங்கள்
படங்களில் பிரதிப்பலிக்கிறீர்கள் என்பதுதான் உங்கள் படத்தை மிக சிறந்த
படமாக மாற்றும்’ என நம்பிக்கையாக சொல்கிறார். ஒளி எல்லோரிடமும் பரவட்டும்.
3. எரிக் பெரிஸ்
நாளிதழ்களின் பரபரப்பு சூழலிலும் தன் படைப்பு மனத்தைத் தக்க வைத்துக் கொண்ட
புகைப்படக்கலைஞர் எரிக் பெரிஸ். 1939-ல் முவாரில் பிறந்தவர், கொஞ்ச நாளில்
குடும்பத்துடன் சிங்கபூருக்குக் குடிப்பெயர்ந்தார். அங்குப் பல்கலைக்கழகம்
வரை தன் படிப்பைத் தொடர்ந்தார்.
ஸ்ட்ரேட் டைம்ஸ் இதழில் வேலைச் செய்துக் கொண்டிருந்தவர், மலேசிய
சிங்கப்பூர் பிரிவினைக்குப் பிறகு கோலாலும்பூருக்குக் குடிப்பெயர்ந்தார்.
1995 வரை அந்நாளிதழில் புகைப்படப் பிரிவில் வேலை செய்தார்.
நாளிதழ் வேலை தரும் வரமே தொடர்ச்சியான பயணம்தானே. மலேசியாவில் கடைக்கோடி
வரை கையில் புகைப்படக் கருவியுடன் அலைந்தார். மலேசியாவின் ரம்மியமான மலைக்
காடுகளை அவருடைய புகைப் பட கருவியில் பதிவு செய்தார். ஈய வயல் சார்ந்த
அவருடைய புகைப்படங்கள் நூலாக வந்து பெரும் வரவேற்பைப் பெற்றது.
என்பதுகளில் அவருடைய கவனம் இந்திய பாரம்பரிய நடன அசைவுகளின் மீது
திரும்பியது. ரம்லி இப்ராஹிமின் சுத்ரா நடன அமைப்போடு அவர் இணைந்து
உருவாக்கிய புகைப்படங்களும் அவருக்கு நல்ல பெயரைப் பெற்று தந்தது.
புகைப்படங்களின் மீது சொந்தமாக வர்ணம் தீட்டும் சிந்தனையும் அவரிடம்
இருந்தது. அவருடைய ‘Leaf abstract’ அம்மாதிரியான ஒரு முயற்சிதான்.
தற்போது எண்மய (digital) புகைப்படக் கருவியைப் பயன்படுத்தினாலும்,
புகைப்படங்களை கணிணியின் உதவியோடு அவர் உருமாற்றுவதில்லை. புகைப்படங்களின்
தெளிவையும் ஒளியையும் சரி செய்வதோடு சரி. கண்களே சிறந்த கணினி என இன்னும்
நம்புகிறார்.
புத்த மதத்தை சார்ந்தவரான எரிக், புத்தரின் சிந்தனைகளை தன் புகைப்படங்களில்
பிரதிப்பலிப்பதை முக்கியமாக உணர்கிறார். அதன் நிலையாமை தத்துவம் அவருடைய
படைப்புகளில் விரவிக் கிடக்கிறது. இது அவருடைய படைப்புகளை ஆழ்ந்து
பார்ப்பதற்கும் உணர்வதற்கும் வழிச் செய்கிறது.
2007-ல் சமாதி என பெயரில் வெளியான அவருடைய புகைப்படங்கள் இந்நிலையாமை
சிந்தனையை இன்னும் விரிவாக புரிந்துக் கொள்ள உதவியது. அதில் தாமரை அடங்கிய
புகைப்படம் காலத்தை மீறிய ஏகாந்த உணர்வைத் தருவதைக் கூர்மையாகப் பார்ப்பவர்
உணர்வர்.
40 வருடங்களுக்கு மேலாக புகைப்படங்கள் எடுத்தாலும் இன்னும் தான் கற்றுக்
கொள்ள நிறைய இருப்பதை அடக்கத்துடன் சொல்கிறார். சிறந்த புகைப்பட நிபுணர்
வரிசையில் தான் இருப்பதாக நினைக்கவில்லை என்கிறார். தான் மலேசியாவைச்
சார்ந்த எளிய புகைப்படக் கலைஞன் எனச் சொல்வதில் அவருக்கு எவ்வித
தயக்கங்களும் இல்லை. ஆனால் அவரின் புகைப்படங்களைப் பார்த்தவர்களும் அதன்
ஆழத்தை உணர்ந்தவர்களும் அப்படி நிச்சயம் சொல்ல மாட்டார்கள்.
4. இந்துமதி கிருஷ்ணன்
தமிழகத்தைச் சேர்ந்தவரான திருமதி இந்துமதி கிருஷ்ணன் எழுபதுகளிலே சென்னை
கலைக் கல்லூரியில் ஓவியத்தை முறையாக பயின்றவராவார். ஓவியத்தோடு, சிற்பம்,
சுடுமண், குறிவரைப்படக் கலை என பல கலைகளை ஐந்து வருட படிப்பில் முறையே
கற்றுத் தேர்ந்தார்.
எல்லா இளம் ஓவியர்களைப் போலவே அவரும் ஆரம்பத்தில் எதார்த்த ஓவியங்களையே
வரையத் தொடங்கினார். அவரது இயல்பான திறமை அப்போதே வெளிப்பட்டு ஊக்கமான
வார்த்தைகள் அவருக்குக் கிடைத்தன. ஆனால் மாணவர்கள் சோதனை முயற்சிகளில்
ஈடுபட ஊக்குவிக்கப்பட்டபோது அவரும் பூடகமான சோதனை முயற்சிகளை நோக்கி
நகர்ந்தார்.
இந்துமதியின் ஓவியங்களில் மிளிரும் கோடுகள் வலிமையானவை. பெண்களே அவருடைய
வரைக் கருவாக பெரும்பாலும் உள்ளனர். பெண்களை வரையும்போது தான் மிகவும்
ஆத்மார்த்தமாகவும் ஈடுபாட்டுடனும் செயல்பட முடிவதாக கூறுகிறார் இந்துமதி.
அண்மையில் அவருடைய ‘மனதின் பாடல்’ என தலைப்பிட்ட கண்காட்சியில் வைக்கப்பட்ட
தன்னை மறந்து தாளமிட்டவாறே சித்தார் இசைக்கும் பெண்ணின் ஓவியம் மிகவும்
விதந்தோதப்பட்டது. ஓவியத்தில் இசை மற்றும் மகிழ்ச்சியை ஒருமுகமாய்
வெளிப்படுத்திய ஆற்றல் அவ்வோவியத்தில் இருந்தது.
பச்சை மற்றும் நீல நிறங்களைப் பெரிதும் பயன்படுத்தும் இந்துமதி ஓவியங்களில்
அமெரிக்க ஓவியர் மார்க் ரொட்கோ அவர்களின் பாதிப்பு உள்ளதைச் சொல்கிறார்.
ரொட்கோவின் வர்ண தெறிப்பு தன்னை மிகவும் கவர்வதாக சொல்கிறார்.
ஒவியக் கண்காட்சிகள் தனக்கு மிகவும் உவப்பை அளிப்பதாக சொல்கிறார் இந்துமதி.
தன்னுடைய ஒவியங்கள் மூலமாக தன் மனச்சாரளங்களை மற்றவருடன் பகிர்ந்துக்
கொள்ளும் ஊடகமாக கண்காட்சிகள் இருப்பதாக சொல்கிறார்.
ஓவியர் Dr. வி. கிருஷ்ணனை மணந்தப் பிறகு மலேசியாவில் குடியேறிய பின்
தொடர்ந்து ஓவியங்களை வரைந்து வருகிறார். ஓவியங்களோடு வரைப்பட கலையிலும்
தொடர்ந்து முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார். அவருடைய
ஓவிய ஆசிரியர்களும் சிறந்த ஓவியர்களுமான அல்போன்சோ தாஸ், அந்தோனி தாஸ்
மற்றும் சந்தனராஜ் போன்றவர்களின் வலிகாட்டுதலே தன்னுடைய நீண்ட ஓவிய
பயணத்திற்கு உறுதுணையாக இன்னும் இருப்பதாக நம்புகிறார்.
இந்துமதி அவர்களின் வாழ்வியல் பார்வை அவருடைய ஓவியங்களைப் போலவே ரம்மியமாக
இருக்கிறது. காலையில் கரிச்சான் குஞ்சுகளின் ஓசையோடு துயிலெழும் போது
வாழ்வின் சுதந்திரத்தை உணர முடிகிறது. நம்முடைய மூச்சிலும், தூய்மையான
நீரிலும், அகண்ட வானத்திலும், விழும் மழையிலும், நகரும் மேகங்களிலும்,
இரவின் விண்மீன்களும் சுதந்திரத்தை எனக்கு நினைவுபடுத்துகின்றன. என்னுடைய
ஓவியங்களும் சுதந்திரத்தின் பாடலைப் பாடி பறக்கும் பறவையை ஒத்தது என
கவித்துவமாக சொல்கிறார் திருமதி இந்துமதி. அவருடைய ஓவியத்தைப்
பார்ப்பவர்கள் அதனை ஆமோதிப்பர்.
5. ஜகன்நாதன் ராமச்சந்திரம்
இவர் சிறுவயதில் வங்கியின் ஊழியராக ஆசைப்பட்டவர். பள்ளிப் படிப்பு
முடிந்ததும் பதினேழு வயதில் ஃபிரிக்பீல்ட்சில் உள்ள அந்தோனியன்
புத்தகக்கடைக்கு வேலை நேர்முகத்திற்குச் சென்றார். கேட்கப்பட்ட 24
கேள்வியில் பத்து சதவிதம் கூட பதிலளிக்காத போதே தன் கனவு நொறுங்கிக்
கொண்டிருப்பதை அவர் உணராமல் இல்லை. வேதனையோடு வெளிவந்தபோது, அன்று
ஃபிரிக்பீல்ட்சில் ஓவியர் எஸ். சந்திரனின் ஓவிய கண்காட்சிக்குத்
தற்செயலாகச் சென்றார். அந்த ஓவியங்கள் அவருள் உறங்கிக் கொண்டிருந்த
ஓவியனைத் தட்டி விழிக்கச் செய்தது. அன்றே ஓவியத் தளவாடங்களை வாங்கினார்.
ஒரே வாரத்தில் அவர் வரைந்த ஓவியம் தமிழ் நேசனில் வெளிவந்து, அவரை
உற்சாகமடைய செய்தது. மூன்று வாரங்களுக்குப் பிறகு சஞ்சய் காந்தியின் திடீர்
மறைவு அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏனெனில் அதற்கு ஒரு வாரத்திற்கு
முன்புதான் சஞ்சய் காந்தியை ஓவியமாக தீட்டி ஒரு பத்திரிக்கைக்குத்
தந்திருந்தார். இப்படியான ஆச்சரியங்கள் அவர் வாழ்க்கையில் இன்னும் பல
இருக்கிறது.
பிறகு ஸ்ட்ரேட் டைம்ஸில் ஓவியராக பணிப்புரியத் தொடங்கினார். ஆனால் அவருள்
இருந்த கலைஞனின் தேடல் அவரைப் பயணம் போகத் துரத்திக் கொண்டே இருந்தது.
1982-ல் இந்தியாவிற்கு பயணமானார். அங்கு ஓர் ஓவியக் கல்லூரியில் சேர்ந்து
ஓவியம் கற்கத் தொடங்கினார். ஆனால் அது அவருக்கு உவப்பானதாக இருக்கவில்லை.
கல்வியை நிறுத்திவிட்டு வடக்கு நோக்கி பயணமானார். இமாலய பிரதேசங்களில்
சுற்றித் திரிந்தார்.
மீண்டும் தமிழகம் வந்தார். அங்கு தன் நண்பரின் மாமானாரான தங்கவேல்
ஆச்சாரியிடம் சேர்ந்து ஓவியம் கற்கத் தொடங்கினார். அவர் பெரும்பாலும் கண்டு
உள்வாங்கியே தன் திறமையை வளர்த்துக் கொண்டார்.
1984-ல் மலேசியா திரும்பியவர் இந்திய தொழிலாளர்களை மையமாக வைத்து ஓவியங்களை
வரையத் துவங்கினார். முழுநேரமாக கலைஞனாக இருந்ததால் வறுமை அவரை வதைத்துக்
கொண்டிருந்தது. இடையில் மாரடைப்பு வந்து மீண்டு வந்தார்.
நோய் அவருக்கு இன்னும் பல சாரளங்களைத் திறந்தது. தன் தமக்கையுடன் இணைந்து
இந்து அறிவியல் என ஓவியங்களைக் கொண்ட நூலை அச்சடித்து சொந்தமாகவே
விநியோகிக்கத் தொடங்கினார். மீண்டும் அவருக்கு ஓவிய சார்ந்த நல்ல
வாய்ப்புகள் வரத் துவங்கின.
ஜகன் அவர்களின் ஓவியங்கள் குறியியல் சார்ந்தவை. தன் முகத்தையே பல்வேறு
குறியீடுகளில் வரைந்திருக்கிறார். விநாயகர் பல்வேறு குறியீடுகளில் ஜகனின்
ஓவியங்களில் காட்சியளித்துக் கொண்டிருப்பது அவரைத் தொடர்ந்து வரும்
ரசிகர்கள் அறிவார்கள்.
ஜகன் அவர்களின் அபூர்வமான நகைச்சுவை உணர்வு அவருடைய ஓவியங்களிலும்
பிரதிபலிக்கும். அவரின் ஓர் ஓவியத்தில், மலாயா கணபதியின் முகத்தில்
மேய்ந்துக் கொண்டிருக்கும் நண்டுகள் எதன் குறியீடு தெரியுமா? உங்களுக்குப்
புரியவில்லை என்றால் நீங்கள் தமிழனே இல்லை.
6. டாக்டர். வி. கிருஷ்ணன்
சுங்கைவேவில் பிறந்தவர் டாக்டர். வி. கிருஷ்ணன். கேலிச்சித்திரங்கள் மீதான
ஈர்ப்பே அவரை ஓவியங்களை நோக்கி நகர்த்தியதென நினைவு கூர்கிறார். குறிப்பாக
பேனோ, டெண்டி மற்றும் டோப்பர் முதலிய கேலிச்சித்திரங்கள். சிறுவயதில்
ஃபிரிக்பீல்ட்ஸ் பகுதியில் சீனக் கேலிச் சித்திரங்களைப் பார்த்து
வளர்ந்ததும் முக்கியமான பாதிப்பாக உணர்கிறார். எளிய கோடுகளால் உருமாறும்
கேலிச்சித்தங்களின் பாதிப்பு இன்னும் அவர் ஓவியங்களில் காணலாம். குறிப்பாக
கிருஷ்ணரை ஒரு சமுராய் வீரனைப் போல் உருவகப்படுத்திய ஓவியம்.
ஒரு மருத்துவராக உருவாக சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரிக்கு 1964-ல்
பயணமானார். ஆனால் கலை மீதான ஆர்வம் அவரை சென்னை கலைக் கல்லூரி நோக்கி
திருப்பியது. ஏற்கெனவே கலைக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அவர்
நண்பர்கள் மூலம் கல்லூரி பேராசிரியர்களும் சிறந்த ஓவியர்களுமான அல்போன்சோ
தாஸ், சந்தானராஜ் மற்றும் அந்தோனி தாஸ் போன்றவர்களின் அறிமுகம் கிடைத்தது.
காலையில் மருத்துவத்திலும் மாலை நேரங்களில் கலைக் கல்லூரியில் கடினமாக
உழைத்துக் கற்கத் தொடங்கினார். சென்னையிலுள்ள கலைக் கூடங்களிலும்
அருங்காட்சியகங்களிலும் உள்ள முக்கிய ஓவியங்களைப் பார்வையிடுவதும்
வரைவதுமாக காலம் சென்றது. முக்கியமாக ஓவியர் ராஜா ரவிவர்மா ஓவியங்கள் அவரை
மிகவும் கவர்ந்திருந்தது.
வார இறுதியில் அவர் தன் நண்பர்களோடு தமிழகத்திலுள்ள மலேசிய தூதரகத்தில்
ஓவியங்கள் வரைவார்கள். அதை அப்போதைய துணைத் தூதுவரான அல்பிரட் குமரசேரி
வாங்கி தூதரக சார்பாக பரிசாக தந்து அவர்களை ஊக்கப்படுத்தினார். அதோடு
குமரசேரியின் ஊக்குவிப்போடு ‘மலேசிய ஓவியங்கள்’ என்ற தலைப்பில் ஒரு
கண்காட்சியும் இடம்பெற்றது. அவரோடு ஓவியங்களைக் காட்சிக்கு வைத்த மற்ற
மலேசிய ஒவியர்கள் முறையே சுசிலா சொக்கலிங்கம், K. கிருஷ்ணன் மற்றும் சையது
தாஜுதின் ஆவார்கள். அந்தக் கண்காட்சியில் பாத்திக் கலை சார்ந்த ஓவியத்தைக்
காட்சிப்படுத்தினார் வி. கிருஷ்ணன்.
கிருஷ்ணரின் உருவம் தொடர்ந்து அவருடைய ஓவியங்களில் இடம் பெறுகிறது. இதை
மதம் சார்ந்த ஒன்றாக அவர் நினைக்கவில்லை. கிருஷ்ணரை வீரத்தின்,
தத்துவத்தின், நற்பண்புகளின் பிரபஞ்ச அடையாளமாகவே வி. கிருஷ்ணன் அவர்களின்
ஓவியங்களில் இடம்பெறுகிறது. கிருஷ்ணர் மாயாவைக் வென்றதின் குறியீடாக,
சாராம்சமாக அவருடைய ஓவியங்கள் அமைந்திருக்கின்றன.
முப்பது வருடங்களாக மருத்துவராக இருந்துவரும் இவர், மருத்துவத்தையும்
ஓவியத்தையும் தன் இரு கண்களாக நினைக்கிறார். இரண்டையுமே மனித வாழ்க்கையின்
தரத்தை உயர்த்தும் ஊடகமாகவே இருப்பதாக சொல்கிறார். மருத்துவம் உடலையும் கலை
மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் சாதனமாக இருப்பதாக நம்புகிறார்.
அறிவியலும் கலையும் இணையும் இடத்தில் ஆரோக்கியமான சிந்தனைகள் வெளிப்படுவது
இயல்பு. வி. கிருஷ்ணனின் ஓவியங்கள் அதை வழிமொழிகின்றன.
7. K. கிருஷ்ணன்
டாக்டர் வி. கிருஷ்ணனைப் போலவே 1966-ஆம் ஆண்டில் மருத்துவம் பயில தமிழகம்
சென்றவர் K. கிருஷ்ணன். ஆனால் மருத்துவ படிப்பைத் தொடராமல் கலை கல்லூரியில்
சேர்ந்து பயிலும் அளவுக்குக் கலை தாகம் கொண்டவர். சுசிலா சொக்கலிங்கம், K.
கிருஷ்ணன் மற்றும் சையது தாஜுதின் போன்ற மலேசியாவைச் சார்ந்த மற்ற ஓவிய
நண்பர்களோடு தமிழகத்திலுள்ள மலேசிய தூதரகத்தில் தன் ஓவியங்களைக்
கண்காட்சிக்கு வைத்தவர்.
K. கிருஷ்ணன் கொஞ்சம் வித்தியாசமானவர். அப்பொழுதே பந்துமுனை மைக்கோலை
(ballpoint pen) ஓவியம் வரையப் பயன்படுத்தியவர். அவருடைய பெரும்பாலான ஓவிய
நண்பர்களைப் போலவே நவீன ஓவியம்தான் அவருடைய ஆரம்ப கால விருப்பமாக இருந்தது.
1972-ல் மலேசியா திரும்பியவுடன் கோலாலும்பூரில் அமைந்துள்ள சமாட் கலைக்
கூடத்தில் தனது முதல் தனி ஓவிய கண்காட்சியை வைத்தார். எட்டு
வருடங்களுக்குப் பிறகு, பினாங்கு அருங்காட்சியகத்தில் தனது இரண்டாவது ஓவிய
கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தார். அவரிடம் அப்பொழுது 50-க்கும் அதிகமான
ஓவியங்கள் இருந்தன. நீர் வர்ணம், மை என பல்வேறு உபகரணங்களைப் பயன்படுத்தி
ஓவியங்களை எழுப்பியிருந்தார் K. கிருஷ்ணன்.
வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு சமுதாயத்தில் நேரும் புறக்கணிப்புகள் K.
கிருஷ்ணன் அவர்களுக்கும் நேர்ந்தது. ஓவியங்கள் மூலமான வருமானத்தில்
குடும்பம் நடத்துவது அவருக்குச் சிரமமாக இருந்தது. சிங்கப்பூரில்
பாதுகாவலர் வேலைக்குப் போகும் சூழல் அவருக்கு அமைந்தது. வாழ்வியல் சிக்கல்
வயிறைக் கட்டிபோடலாம். கலைஞனின் மனதைக் கட்டிப் போட இயலாது. அன்றாடம்
வேலைக்கு செல்லும்போது, எல்லையைக் கடக்கும் மனித கூட்டத்தின் பிம்பம்
அவரின் ஓவிய மனதை இன்னும் விரிவடையவே செய்தது. நெரிசல் உருவாக்கும் ஒளியும்
இருளும் அவருடைய கலைக் கண்களில் ஓவியங்களாக மிளிரத் துவங்கின.
உண்மையான கலைஞர்களை கலை உள்ளம் கொண்டவர்கள் சரியாக அடையாளம் கண்டு
விடுவார்கள். சிங்கபூரில் ஓவியக் கலைக் கூட உரிமையாளர் ஒருவர் K. கிருஷ்ணன்
அவர்களின் திறமையைக் கண்டு கண்காட்சி வைக்க உதவினார். அங்கு கண்காட்சி
வைக்கப்பட்ட ஓவியங்கள் பந்துமுனை மைக்கோலை பயன்படுத்தி வரைந்தவை.
எழுபதுகளில் K. கிருஷ்ணன் அவர்களின் பந்துமுனை மைக்கோல் ஓவியங்கள் கோடுகள்
மிகவும் அழுத்தமாகவும் இருளடர்ந்தும் இருந்தன, தற்போது அவருடைய கோடுகளில்
மெதுதன்மை தவழ்வது அவருடைய ஓவியத்தின் தொடர் ரசிகர்கள் உணர்வார்கள்.
உதாரணத்திற்கு அவருடைய வேட்டைக்காரன் (2009) ஓவியத்தைச் சொல்ல வேண்டும்.
உருவமும் பின்னணியும் நெருக்கமான கோடுகளால் பிணைந்து இருப்பதுபோல் வரைவது
K. கிருஷ்ணன் அவர்களின் பாணியாக இருக்கிறது.
காகிதங்களை பெரும்பாலும் வரைவதற்குப் பயன்படுத்துகிறார் K. கிருஷ்ணன்.
‘காகிதங்கள் என்னுடைய ஓவியங்களை விட முக்கியமானவை’ என சொல்லும் அளவுக்குக்
காகிதங்களை முக்கியமாக கருதுகிறார். அவை ஓவியங்களை எண்ணங்களைத் தாங்கும்
ஆவணங்கள் என்பார்.
பொதுவாக எந்த ஓவிய சிந்தனைகளோடும் தன்னை இணைத்துக் கொள்பவரில்லை K.
கிருஷ்ணன். ஆனால் அவர் புத்த தரிசனங்களை, கிரேக்க தத்துவத்தில், உலகப்
புராணங்களில் இன்னும் தனது வாசிப்பையும் ஆய்வையும் தொடர்ந்துக்
கொண்டிருக்கிறார்.
8. மைக்கல் அந்தோனி
மைக்கல் அந்தோனி அவர்களின் கலைவாழ்வு வர்ணமயமான நாடோடி வாழ்வை ஒத்தது.
சுங்கை சிப்புட் பிறந்தவரின் இன்றைய வாழ்வு பிரான்ஸ் தேசத்திற்கு
நகர்ந்திருக்கிறது. எட்டு குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் இரண்டாமவரான
மைக்கல் சிறுவயதிலேயே ஓவியத்தின் பால் ஈடுபாடு கொண்டவராக
இருந்திருக்கிறார். குடும்ப சூழலால் 13 வயதிலேயே பள்ளிப் படிப்புக்கு
முற்றுப் புள்ளி வைத்து விட்டு பெற்றோர்களோடு பால் மரம் சீவ உதவினார்.
பிறகு கோலாலும்பூருக்கு வந்து மளிகை கடைகளிலும், கிளினிக்களிலும் வேலை
செய்தார்.
பிறகு சுற்றுலா பயணிகளை பூக்கேட்டிலிருந்து பினாங்கிற்கு கொண்டு வரும்
இயந்திர படகில் உதவியாளராக பணிப்புரிந்தார். பிறகு நண்பர் ஒருவர் மத்திய
தரைக் கடல் நாடுகளுக்கு உல்லாசப் படகில் பயணம் செய்யும் வாய்ப்பை
வழங்கினார். ஆனால் அவருடைய பயணம் இலங்கையிலேயே முறிந்து மீண்டும் மலேசியா
வந்தார். மீண்டும் கடற்பயணம் அவரை அழைத்துக் கொண்டே இருந்தது. இம்முறை
சைப்ரஸ்.
ஐரோப்பாவில் கென் ஸ்கோட் என்ற ஆடை வடிவமைப்பாளரின் நட்பு கிடைத்தது. அவரின்
உதவியாளராக 1979லிருந்து 1991 வரை இருந்தார். பகட்டும், அலங்காரமும்
நிறைந்த உலகம் அது. வடிவமைப்பு சார்ந்த அனுபவம் அவரது பிந்தைய சிற்ப கலை
உருவாக்கத்திற்குப் பெரிதும் உதவியது. அவரது மற்ற நண்பர்களான சூசன்
நெவல்சன் (ஆடை மற்றும் வீடு அலங்கரிப்பு), சில்வி பிரேவர்மன்
(பொறிமுறைவரைதிறன் (draughtmanship) மற்றும் ஓவியங்கள்) போன்றவர்களின்
பாதிப்பும் அவருடைய கலைச்சிந்தனையில் பெரும் பங்கு வகித்தது.
மைக்கல், கென் ஸ்கோட் பற்றி இப்படி சொல்கிறார். ‘அவர் எனக்கு பாணி பற்றிய
ரசனையையும், வர்ணங்கள் பற்றிய நுட்பமான பார்வையையும் கற்று தந்தார். எதைப்
பார்த்தாலும் புதிய கண்ணோட்டத்தில் காணச் சொல்லி தந்தார்’.
மைக்கல் மிலான் நகரிலுள்ள ஸ்குலா ப்ரேரா கலைக் கல்லூரியில் இணைந்து நவீன
ஓவியங்கள், சிற்பங்களை புதிய பாணியில் உருவாக்குவதைக் கற்றார். மைக்கலின்
சிற்பங்களின் வளைவுகளில் இருக்கும் நளினம் முக்கியமானவை. அவருடைய
சிற்பங்களின் பின் வடிவமும் (post geometric) அச்சிற்பங்களுக்கு பெண்களின்
பெயரிடுதலும் பார்வையாளர்கள் சீண்டவும் கேலிச் செய்யும் தன்மை கொண்டவை.
சியாரா சமுகியோ என்ற பெண் புகைப்படக்காரரோடு கலைக் கூடத்தை பங்கு வைத்து
கொண்டிருக்கும், இடவசதியின்மையின் காரணமாக இப்போது ஓவியங்களை அதிகம் வரையத்
துவங்கியிருக்கிறார். புதிய சிந்தனைகளையும் பாணிகளையும் தன் கலைப்
படைப்பில் பயன்படுத்தத் தயங்காதவர் மைக்கல். அவருடைய படைப்புகளில் ஆதார
சுருதியாக மானுட ஒற்றுமை, சுதந்திரம், அமைதி போன்றவை குறியீடாக உள்ளன.
பன்மொழிகளில் உரையாடும் வல்லமை கொண்டவரான மைக்கல் மலேசியாவைத் தவிர
இத்தாலி, ஜப்பான், பிரான்ஸ் போன்ற நாடுகளில் தன் கலைக் கண்காட்சியை
வைத்துள்ளார். இன்னும் பல நாடுகளில் இந்த நாடோடி கலைஞனின் படைப்புகள்
வைக்கப்படும் வேண்டும் என்பது நம் அவா.
9. நிர்மலா கருப்பையா
குவாந்தானில் பிறந்த புகைப்படக் கலைஞர் நிர்மலா கோலாலும்பூரில் வளர்ந்தவர்.
மலேசிய காலைக் கல்லூரியில் படித்தவரான நிர்மலாவைப் புகைப்படக்கலை
உள்ளிழுத்துக் கொண்டது. தன்னுடைய இறுதி ஆண்டு கள ஆய்வாக அவர் தெரிவுச்
செய்தது இந்திய பாரம்பரிய நடனமான ஒடிசியை. அங்கிருந்து தொடங்கியதுதான்
கலைஞர் ரம்லி இப்ராஹிமுடனான நட்பு.
படிப்பு முடிந்ததும் சில காலம் குறிவரை வடிவமைப்பாளராக பணியாற்றியவர் பிறகு
ஸ்டார் நாளிதழில் புகைப்படக்காரராக இணைந்தார். அங்கு ஒன்பது வருடங்கள்
பணியாற்றினார்.
2005-ல் வேல்வர்ஹெம்டன் பல்கலைக்கழகத்தில் புகைப்படத்துறையில் முதுகலை
படிக்கச் சென்றது அவரது புகைப்படக் கண்களை இன்னும் கூர்மையடையச் செய்தது.
ஒடிசி நடன படத்தை பட்டுத் துணியில் பதிவுச் செய்து அவருடைய ஆய்வுக்குச்
சமர்ப்பித்தார். பட்டுத் துணியின் மிருதுத் தன்மையும் மிளிரும் ஒளியும்
ஒடிசி நடன அசைவுகளை மேலும் மெருகேற்றின.
நிர்மலாவுக்கு எப்போதுமே புகைப்படக் கருவியில் இருக்கும் நம்பிக்கையைவிட
அதை உபயோகிக்கும் மனிதனின் திறமையே முக்கியம்.
நிர்மலாவிற்குப் பாரம்பரிய நடனங்கள், அதற்கான ஆயத்தங்கள், நடனத்திற்குப்
பின்பான ஓய்வு போன்றவற்றை பதிவுச் செய்வதில் அலாதி ஆர்வம் உண்டு. இந்திய
நடனங்கள் தவிர்த்து மலாய் நடனங்களைப் பற்றிய புகைப்படங்களும் அவருடைய
சேமிப்பில் உள்ளன. எடுத்துக்காட்டாக Main Petri Makyong என்ற கிளந்தானைச்
சேர்ந்த பார்வையாளர்கள் அருகிவரும் நடனம் குறித்து அவருடைய புகைப்படங்கள்
முக்கியமானவை. அதிலும் அந்நடனத்தில் பெயர்பெற்ற மெக் செபியாவை (Mek Sepiah)
பதிவு செய்த படங்கள். இப்புகைப்படங்கள் எடுக்கப்பட்ட சில வாரங்களிம் மெக்
செபியா காலமானார்.
பதினேழு ஆண்டுகளாக புகைப்படகாரராக இருந்துவரும் நிர்மலா தன்னுடைய புகைப்பட
ஆர்வங்களை பல மாதிரிகளாக மாறி வந்திருக்கின்றன. சுற்றுச்சூழல், பட்டண
அமைப்பு, கட்டட அமைப்புகள், மனித உருவங்கள் என அவருடைய விருப்பங்கள்
புகைப்படங்களாக மாறியுள்ளன.
2009-ல் ஃப்ரிமன் உதவி தொகை கிடைத்து அமெரிக்காவில் உள்ள வெர்மண்ட்
நிலையத்தில் தங்கி தன் புகைப்பட திறமையை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு
அமைந்தது. அங்கு மேபல் (maple) இலைகளைத் தனது புகைப்பட பொருளாக எடுத்துக்
கொண்டார். மேபல் இலைகளைப் பற்றிய அவரது தேடல் செவ்விந்தியர்களில் மேபல்
நடனம் வரை இட்டு சென்றது. மேபல் நடனத்திற்கும் ஒடிசி நடன அசைவுகளுக்கும் பல
ஒற்றுமைகள் இருப்பதை அவரது புகைப்படங்கள் வாயிலாக கண்டுணர்ந்தார். எது
எப்படியோ நிர்மலா அவர்களின் பயணம் முழுவதிலும் நடனங்கள் மேலெழுந்து வந்து
கொண்டே இருக்கின்றன.
10. சையது தஜூடின் ஷேக் அபு தாலிப்
1943 ஆண்டு அழகன் குளத்தில் பிறந்தவர் தஜுடின். அவருடைய பெற்றோர்கள்
இந்தியாவில் விடுமுறைக்காக தங்கியிருந்தபோது பிறந்தார். அச்சமயம் ஜப்பானிய
படையெடுப்பால் அங்கேயே தங்கியிருந்து 1954-ல் பினாங்கு தீவிற்கு திரும்பி
வந்தனர்.
மீண்டும் உயர்கல்வி பெரும்பொருட்டு 1960களில் தமிழகம் சென்றார்.
சென்றதென்னவோ மதுரை மருத்துவ கல்லூரியில் படிக்கும் பொருட்டுதான். ஆனால்
கலை ஆர்வம் அவரை சென்னை கலைக் கல்லூரியில் சேரச் செய்தது.
அக்கல்லூரியில் காலையில் ஓவிய நுட்பங்களை பயில்வதிலும் மாலை ஓவிய பரிசோதனை
முயற்சிகளில் ஈடுபடவும் உதவியது. அங்கு அவர் கற்ற இராமாயணமும் மகாபாரதமும்
அவருடைய கலை சிந்தனையை மேலும் செழுமைப்படுத்தின.
கலைக் கல்லூரி ஆசிரியர்கள் அவரை காசி, கஜராஹோ போன்ற ஓவியம்,
சிற்பங்களுக்குப் பெயர் போன இடங்களுக்குப் பயணம் போக ஊக்குவித்தனர். அதில்
அஜுந்தா ஓவியங்கள் அவரைப் பெரிதும் பாதித்தன. இன்றும் அவருடைய ஓவியங்களில்
அந்தப் பாதிப்புகள் உள்ளன.
தமிழகத்தில் இருக்கும்போதே அவருடைய நண்பர்களான சுசிலா, வி.கிருஷ்ணன்,
K.கிருஷ்ணன் போன்றவர்களோடு இணைந்து மலேசிய தூதரகத்தில் அவருடைய
ஓவியங்களையும் கண்காட்சிக்கு வைத்தார்.
மலேசிய திரும்பியதும் மாரா தொழில்நுட்ப கல்லூரியில் ஓவிய ஆசிரியராக
பணிப்புரிந்தார். இந்தியாவில் படித்து அங்கு வேலை செய்தது அப்போது அவர்
ஒருவரே. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைய CIMB வங்கியில் இணைந்து 26
வருடங்கள் அங்குப் பணியாற்றினார்.
தஜுடின் வேலைகளுக்கு இடையில் தொடர்ச்சியாக வீட்டிலேயே ஓவியங்கள் வரைந்தார்.
பிறப்பும் வாழ்வும் அவருடைய வரைப் பொருள்களாக இருந்தன. பிறகு மலேசியா
ஒட்டிய ஓவியங்களை வரையத் துவங்கினார். எடுத்துக்காட்டாக பரமேஸ்வரா, மலாய்
அரச பரம்பரை இசைக்கலைஞர்கள் மற்றும் பாத்திக் போன்றவை மீது அவர் ஆர்வம்
இருந்தது.
பிறகு ஒடிசி நடனத்தைப் பிரதிபலிக்கும் ஓவியங்களை வரைந்தார். நடனத்தின் போது
பயன்படுத்தப்படும் ஆபாரணங்கள், உடைகளை ஒளி மிகுந்து வரைந்தது அதன்
கலைத்தன்மையை மேலும் மெருகேற்றின. நம் நாட்டின் பல்லின கலாச்சாரத்தின்
வெளிப்பாடாகவும் அவருடைய ஓவியங்கள் இருந்தன. ‘கண்களின் சந்திப்பு’ (2005)
பிரதிபலிக்கப்படும் மரச் சன்னல் ஓவியம் குறிப்பிடத்தக்கது.
காதலையும் பெண்களையும் தொடர்ந்து வரையும் தஜுடின் ஒரு ஓவியத்தை வரைந்து
முடிக்க குறைந்தது ஆறு மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். ‘நீங்கள்
பொறுமையாகவும் உங்கள் ஓவியத்திற்கு உண்மையாகவும் இருக்க வேண்டுமென்றால்
இந்த காலம் தேவையே’ என்கிறார். அவருடைய பல் அடுக்குகளும் நுட்பமான
ஓவியங்களுமே அதற்கு சான்று.
11. சிவம் செல்வரத்னம்
சிவம் செல்வரத்னம் 1950-களில் பீட்டர் ஹெரிஸின் புதன் கலை குழுவில்
அங்கத்தினராக இருந்தவர். அக்குழுவில் சையட் அமாட் ஜலால், சியோங் லை தோங்,
ஜோலி கோ, பெட்ரிக் ங் கா ஓன் போன்றவர்களும் இருந்தனர். புதன்கிழமைதோறும்
ஃபிரிக்பில்ட்சில் அமைந்துள்ள பெண்கள் மெதடிஸ்ட் பள்ளியில் கூடுபவர்கள்,
அங்குள்ள இளம் ஓவியர்களுக்குப் பயிற்சி வழங்குவார்கள். மேலை நாட்டில்
படித்து விட்டு வந்தவர்களான அவர்கள் தங்கள் அனுபவங்களை இளையோர்களிடம்
பகிர்ந்து கொள்ளும் களமாக இது அமைந்தது.
கோதா பாருவிலும் பிறகு ஆசிரியர் வல்லுனர் பயிற்சி கழகத்திலும் தனது படிப்பை
முடித்தப் பிறகு லண்டன் தொழிட்நுட்ப கல்லூரியில் ஆடை வடிவமைப்பில்
கல்வியைத் தொடர்ந்தார். ஆனால் அங்கு அச்சு, ஓவியம் போன்றவற்றிலும் ஆழமாக
கற்றுக் கொள்ளும் வாய்ப்பிருந்தது. தன் இறுதியாண்டு ஆய்வாக ஒலி மற்றும்
வர்ணங்கள் ததும்பும் உடலை ஓவியமாக வரைந்திருந்தார்.
அவருக்கு இசைமேதைகள் ரவிசங்கர் மற்றும் அலி அக்பர் கான் மீது பெரிய ஈர்ப்பு
இருந்தது. இது அவரை ஓவியத்தில் இசையின் சாத்தியங்களை முயல உதவியது. மலேசிய
திரும்பியதும் 1970-ல் பிரிட்டிஷ் தூதரகத்தில் தன்னுடைய முதல் தனி ஓவிய
கண்காட்சியை வைத்தார். ஒன்பது வருடங்களுக்குப் பிறகு சிங்கபூர் இளையர்
கல்லூரிக்கு கலை ஆசிரியராக பணிப் புரிய சென்றார்.
பிறகு அவருடைய கணவர் வேலை நிமித்தமாக லண்டன் சென்றபோது அவரும் லண்டன்
செல்லும்படி ஆயிற்று. லண்டனில் தனது கலை மற்றும் வடிவமைப்பில் முதுகலை
பட்டம் பெற்றார்.
சிவம் அவர்களின் ஓவியங்கள் பெரும்பாலும் இந்திய கலாச்சாரத்தைப்
பிரதிபலிப்பதாக இருக்கிறது. குறிப்பாக மரபிசை, யந்திரங்கள், இயற்கை அவருடைய
தொடர்ச்சியான வரைப் பொருளாக இருக்கிறது. சிறுவயதில் இயற்கை அழகு கொஞ்சும்
காஜாங் பகுதியில் வசித்தது காரணமாக அமைந்தது. அவர் வீடு அமைந்திருக்கும்
பகுதியில் ஆறும், பழமரங்களும், மிருகங்களும் இருந்ததாக கூறுகிறார்.
சிறுவயதில் பல மணி நேரங்கள் இங்கு விளையாடியதைச் நினைவு கூர்கிறார்.
சிவம் அவர்களின் ஓவியங்களில் மேற்கத்திய பாதிப்புகளும் இல்லாமல் இல்லை.
அவருக்கு பவுல் கண்டிஸ்கி, பவுல் லீ போன்றவர்கள் ஆதர்சமாக இருந்துள்ளனர்.
தற்சமயம் வரைந்து கொண்டிருக்கும் ஜெக்சன் பொல்லாக்கும் அவருக்கு
விருப்பமானவராக இருக்கிறார். இம்மூவருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. மூவருமே
சிவம் போல ஓவியத்தோடு இசையிலும் விருப்பமுள்ளவர்கள்.
சிவம் ஓவியம் வரையும்போது கர்நாடக இசையின் ராகங்களைக் கேட்டவாறே வரைகிறார்.
‘இசைக் கலைஞர்கள் ராகங்களின் ஒத்திசைவில் கவனம் கொள்கின்றனர், ஓவியர்கள்
வர்ணங்களின் ஒத்திசைவில் அக்கறை கொள்கின்றனர்’ என்கிறார் சிவம். சிவத்தின்
அக்கறையை அவரது ஓவியங்கள் பிரதிபலிக்கின்றன.
12. சிவராஜா நடராஜன்
சிவராஜா வளர்ந்ததென்னவோ கோலாலும்பூர்தான். தஞ்சையில் பிறந்து மலேசியாவிற்கு
குடிப்பெயர்ந்த அவரது தந்தையின் அரவணைப்பு சிவராஜா அவர்களுக்கு ஓவிய
ஆர்வத்திற்குத் துணையாக இருந்தது.
மலேசிய கலை கல்லூரியில் நுண்கலையில் பட்டம் பெற்ற சிவராஜாவிற்கு அங்கு
ஆசிரியர்களாக லு ஃபோ சாங், பீட்டர் லியு, யோ ஜின் லியோங், அங் போன்றவர்கள்
ஆசிரியர்களாக இருந்து வழிநடத்தினர். ஆரம்பத்தில் சிவராஜாவிற்கு உடலியல்
சார்ந்த ஓவியங்களை வரைவதில் ஆர்வம் இருந்தது. ஓர் ஆய்விற்காக அவரது
ஆசிரியர் நடன அசைவுகளை பற்றி தெரிந்து கொள்ள சுத்ரா நடன குழுவை நாட
சொன்னார்.
சுத்ரா நடன குழுவின் ரம்லி இப்ராஹிமிற்கு சிவராஜா அவர்களை வடிவமைத்ததில்
பெரும் பங்குண்டு. ரம்லியின் நடன ஒத்திகைக்கு அழைத்து நடன அசைவுகளின்
கலாப்பூர்வமான அர்த்தங்களை மேலும் உணரச் செய்தார். 1993-ல் தன்
பட்டப்படிப்பை முடித்த கையோடு பெட்டாலிங் ஜெயா சிவிக் மையத்தில் (Civic
Centre) ‘வாசனை’ என கருப்பொருளில் தன் ஓவியங்களை கண்காட்சிக்கு வைத்தார்.
பிறகு சுத்ரா நடன குழுவின் நிகழ்வுகளுக்கு பிந்திரை ஓவியங்களை உருவாக்க
ரம்லி அவர்களால் கேட்டுக் கொள்ளப்பட்டார். இன்றோ அந்நாடக குழுமத்தின் அரங்க
வடிவமைப்பு, உடைகள், மேடை மேலாண்மை, என அத்தனையும் பார்த்துக் கொள்ளும்
அளவுக்கு அவர்களிடையிலான கடந்த இருபது வருடங்களாக நட்பு வளர்ந்துள்ளது.
சிவராஜாவின் ஓவியங்களில் நடன தொடர்பான வரைப்பொருள் தொடர்ந்து உள்ளது. அவரது
நடன சம்பந்தமான தேடல் ஒடிசியிலிருந்து பிறகு பரதநாட்டியம், கொதிபுவா (ஒரிசா
சிறுவர் நடனம்), நவீன நடனம் மற்றும் பாரம்பரிய மலாய் நடனங்களான மாக்யோங்,
மாய்ன் பெத்ரி, மற்றும் மெனொரா என இன்று விரிவடைந்துள்ளது. நடனத்தை ஒட்டிய
அவரது ஆழ்ந்த ஈடுபாடு அவரது ஓவியங்களில் மிகவும் நுட்பமான நடன அசைவுகள்,
முகபாவங்கள் போன்றவற்றை மிகுந்த ஆற்றலுடன் வெளிப்படுத்த முடிகிறது.
2007-ல் எண்மய (digital) அச்சு தொழில்நுட்பத்தைப்
பயன்படுத்தி தன்
முகங்களையே ஓவியங்களாக மாற்றினார். அவருடைய மற்றொரு முக்கிய சாதனை அவருடைய
‘மாலை ராகம்’ என ஓவியம் குறிக்கப்படுவதில் இருக்கிறது. அதில் பிண்ணிய
நிலையிலுள்ள பாம்புகளை பிரிக்கும் பாம்பு போன்ற வெள்ளை கோடு தாந்திரீக
ஆற்றலை அந்நடனத்தில் கொண்டு வரும் முயற்சியில் செய்யப்பட்டது.
சுத்ரா நடன குழுமத்தோடு உலக முழுவதும் பயணம் செய்து பல அரிய இடங்களை, நடன
ஒத்திகைகளை, நடன விழாவை புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு அவருக்கு அமைந்தது.
அவருடைய ஒலி அமைப்பு அனுபவமும் ஓவிய ஆற்றலும் ஒன்றில் ஒன்றை நிறைவு
செய்யும் தன்மை கொண்டது. அதனால் இரண்டையும் கலை நேர்த்தியோடு கையாள அவரால்
முடிகிறது. இருப்பினும் நடன அமைப்புகளில் அவருடைய ஈடுபாடு ஒரு கூட்டு
நடவடிக்கை என்பதை அவர் உணராமலில்லை. அதனால் தன்னுடைய சுய அடையாளத்தை வெளிக்
கொண்டுவரும் ஓவியத்திலேயே இனி அதிகம் கவனம் செலுத்த வேண்டுமென்பது அவரது
விருப்பமாக உள்ளது.
13. ஸ்டீபன் மேனன்
குவாந்தான் பகாங்கில் பிறந்தவர் ஸ்டீபன் மேனன். நம் நாட்டின் சிறந்த
உடலியல் ஓவியர் என அறியப்படுகிறார்.
அவருடைய ஓவிய ஆர்வம் 1990-ல் மலேசிய கலை காட்சியகத்தில் அம்ரோன் ஓமாரின்
‘சுய ஓவியங்களை’ கண்ணுற்றபோது துளிர்த்தாக சொல்கிறார். கைலி கட்டிக் கொண்டு
பிரம்பு நாற்காலியில் இறுகிய முகத்துடன் அம்ரோன் ஒமார் அமர்ந்திருக்கும்
காட்சி அவரை வெகுவாக கவர்ந்தது.
இடைநிலை கல்வியை முடித்ததும் கோலாலும்பூர் கலைக் கல்லூரியில் குறிவரை
வடிவமைப்பில் படிக்கத் தொடங்கினார். படிப்பு முடிந்ததும், அனிமேட்டராக
பணிப்புரிந்து கொண்டே உடலியல் அசைவுகள் பிரதிபலிக்கும் ஓவியங்களை வரைய
முற்பட்டுக் கொண்டிருந்தார்.
2000-த்தில் மேனன் தான் குருவாக நினைக்கும் அம்ரோனிடம் தன் ஓவிய கல்வியைத்
தொடங்கினார். வெள்ளிக்கிழமை கோலாலும்பூர் வந்து அம்ரோனிடம் கற்றுவிட்டு
ஞாயிறு மீண்டும் குவாந்தானுக்குத் திரும்புவார்.
கரித்துண்டைப் பயன்படுத்துவது மேனனின் விருப்பத்துக்குரிய ஒன்றாகும். அவர்
ஆழமாகவும் முரண்பட்டும் நிற்கும் வெள்ளை கருப்பு கோடுகள் மிகவும்
பிரியமானவை. வர்ணங்களையும் அவர் பயன்படுத்துவதுண்டு. அவருடைய பன்முக
ஆளுமையை அவரது ‘கண்ணோடு கண்’ என்ற தலைப்பில் வரைந்த ஓவியங்களில் காணலாம்.
பெரும்பாலும் தன் முகத்தையே ஓவியமாக வரையும் மேனனின் ஓவியங்களில் அவரது
கண்கள் துணியால் கட்டப்பட்டிருக்கும்.
அவர் தன்னைச் சுற்றியுள்ள இயற்கையோடு எதிர்வினையாற்ற விரும்பவில்லை என
குறிப்பிடுகிறார். ‘கண்ணோடு கண் தலைப்பு ஓவியங்களில் நான் என் கண்களைக்
கட்டிக் கொண்டேன். நான் எனக்குள் என்னை அறிந்து கொள்ள விரும்புகிறேன். நான்
எந்த கருத்துகளும் சொல்ல விரும்பவில்லை. மாறாக நான் நானாக இருக்க
விரும்புகிறேன். சில நேரங்களில் என கண்களைக் கட்டிக் கொள்ளும்போது என்னுடைய
உள்ளணர்வின் வலிமையை உணர்கிறேன். இது என்னுடைய என் அனுபவத்தை நோக்கிய
உள்முகபயணம்’ என தொடர்ந்து குறிப்பிடுகிறார்.
சமீப காலங்களில் கேலிச்சித்திரம் வகைப்பட்ட ‘இன்னும் தொடரும்’ தலைப்பில்
ஓவியங்களை 2009-ல் வெளியிட்டார். தற்சமயம் சீன ஓவியர் மவோ ஜெடோங் அவர்களைப்
பின்பற்றி ஓவியங்களை வரைந்து வருகிறார். 2010-ல் 60களில் வெளியான
சுவரொட்டியில் கருப்பு வண்ணத்திலான தனது கை அச்சை வைத்து ஓவியங்களை
உருவாக்கியிருக்கிறார் உள்முக பயணத்தை பெரிதும் நம்பும் இந்த ஒவியர்.
துணை நூல்: Winds of Desire
|
|