|
உலகின் மூன்றிலிரண்டு பங்கை ஒரே நேரத்தில் உங்கள் கண்களில் நிரப்பிக் கொள்ள
முடியுமா? முடியும். கடலைப் பார்ப்பதன் மூலம் நீங்கள் அதைத்தான்
செய்கிறீர்கள். கடல் ஒரு மாயக் கிடங்கு. அது காலத்தின் இரகசியங்கள்
பலவற்றைத் தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் ஒரு மனநோயாளியைப் போல,
வெளியுலகுக்குக் காட்டிடாத பல உயிர்களை, புதையல்களைத் தன்னுள்ளே புதைத்து
வைத்திருக்கிறது. உலகிலேயே அகன்ற நீர்ப் புதையல், கடல் மாத்திரமே. அதன்
ஈரப் பெட்டகம் எப்பொழுதும் திறந்தே இருக்கிறது. நீங்கள் உங்களுக்கு
விரும்பிய நேரங்களில் புதையல்களை அள்ளிவரலாம்.
அலையடிக்கும் சமுத்திரத்தின் குரல், எப்பொழுதுமே ஓயாதது. இரவோ, பகலோ,
உலகின் ஆரம்பம் தொட்டு இன்று வரை அதன் குரல் ஓய்ந்ததேயில்லை. எதைச்
சொல்கிறதோ, யாரை அழைக்கிறதோ எல்லாத் திசைகளுக்கும் எதிரொலிக்கும்படியாக
ஓயாமல் பேசிக்கொண்டிருக்கும் அகன்ற வாயைக் கொண்டது கடல். நிரந்தரமாக
அதனிடமொரு கட்டளை விதிக்கப்பட்டிருக்கிறது. நிலப்பரப்பு விலங்குகளுக்குக்
கேட்கும்படி ஓயாமல் ஓசையிட்டுக் கொண்டும், பார்க்கும்படி அசைந்து
கொண்டுமிருக்கத் தனக்கு விதிக்கப்பட்டதை அது தனது தொடக்கம் முழுதும்
நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறது. அதன் இயக்கம் எந்தவொரு புறவுலகக்
காரணிகளாலும் நிறுத்தப்பட முடியாதது. தான் உயிருடனிருப்பதை அது உணர்த்திக்
கொண்டே இருக்கிறது.
கடல் உலகிலேயே மிகப் பெரிய கண்ணாடி. ஆகாயம் அதில் தன் முகம் பார்க்கிறது.
வானத்தின் நீலத்தோற்றம் அதற்கே பிடித்துப் போக கடல் கண்ணாடியை, வானம்
ஆதரவோடு முத்தமிடுகிறது. அந்த முத்தத்தை மகிழ்வோடு கொண்டாடும் கடல்,
காலையில் சூரியனையும், இரவில் நிலவையும் பரிசாக வானுக்குக் கொடுக்கிறது.
கடலுக்குள்ளிருந்து கிடைத்த மாபெரிய முத்தென சூரியனையும் நிலவையும் கண்ட
வானம், பெரும் களிப்போடு அவற்றைக் கொண்டு உலகுக்கே ஒளி கொடுக்கிறது.
கடலின் இரகசியங்களைப் பூரணமாக அறிந்தவர்களென எவருமில்லை. ஒளி பாய்ச்ச
யாருமற்று இன்னும் அடர்ந்திருக்கிறது, அதன் ஆழத்துக்குள் இருள். எல்லா
நிறங்களையும் உலகம் எல்லோருக்கும் காட்சிப்படுத்திக் கொண்டே இருக்க, கடல்
மட்டும் அதனுள் ஒளிந்திருக்கும் வர்ணங்களை வெளிப்பார்வைக்கு மறைத்தே
வைத்திருக்கிறது. சூரியனும் தினந்தோறும் தனது கீற்றுக்களை அந் நீரினுள்
அனுப்பித் தேட முயற்சித்துக் கொண்டேயிருக்கிறது. தன்னுள் புகும் ஒளியை
விழுங்கும் கடல், அதன் தேடலைத் தோற்கடிப்பதில் தினந்தோறும் மகிழ்ந்து
அலையடிக்கிறது.
உலகின் இறுதிக் காலம்வரை நிரந்தரமானவை சமுத்திரங்கள். அவை கண்ணுக்குப்
புலப்படாத பாதைகளைக் கொண்டவை. அந்தப் பாதைகளை நட்சத்திரங்கள் இரவுகளில்
விழித்திருந்து வரைகின்றன. திசைகாட்டிகளெனக் குறியீடுகளாகின்றன. நகரத்துத்
தெருக்களைப் போல விதவிதமான காட்சிகளைப் பார்த்துக் கொண்டே போக முடியுமான
பாதைகளல்ல அவை. ஒரே காட்சியை கணங்கள் தோறும் காட்டியலைபவை. எங்கும்
பரந்திருக்கும் தண்ணீர்ப் பாதைகளை முடிவுக்குக் கொண்டுவரவென கரையில்
கலங்கரை விளக்குகளை நிறுவுகிறான் மனிதன். நீர்ப்பாதை ஒடுங்குகிறது. கரையோடு
நின்று விடுகிறது.
ஒரு காலை நேரம், இலங்கையின் அழகான கடற்கரைப் பிரதேசங்களிலொன்றான
பேருவளைக்கு நண்பர்கள் கூடிச் சென்றிருந்தோம். வனப்பு மிக்க பச்சைக் கடலின்
மத்தியில் ஒரு தீவு. கண்ணுக்குத் தெரியாத கடலின் பாதையில் ஆடியசைந்தபடி
விரைந்து சென்ற இயந்திரப்படகு எங்களைத் தீவில் விட்டுவந்தது. தீவின் கரை,
மணலாலானதல்ல. சிவப்பு, மயில்நீலம், தூய வெள்ளை, கபிலம், மஞ்சள் என அழகழகான
வர்ணங்களில் வித வித வடிவங்களில், அளவுகளில் சிப்பியோடுகள். கரையில்
தோண்டத் தோண்ட அவைதான் வந்துகொண்டிருந்தனவேயொழிய, தொட்டுப் பார்க்கக் கூட
எங்கும் மணல் இல்லை. கரையோடு அழகிய தென்னந்தோட்டம். அதனூடு மேலே செல்லும்
அழகான அகன்ற பழங்காலத்துப் பாதை. மேலே ஒரு கலங்கரை விளக்கம் இருக்கிறது.
விருந்தினர் வந்தால் தங்குவதற்கென்று வசதியானதொரு கட்டிடம் இருக்கிறது.
காலையில் போன நாங்கள் இருள் சாயும்வரை அங்கிருந்தோம். தூண்டிலிட்டு மீன்
பிடித்தோம். நீந்தி விளையாடினோம். சிப்பிகள் பொறுக்கிச் சேகரித்துக்
கொண்டோம். தடுப்புச் சுவர்களில் பொறிக்கப்பட்டிருந்த வந்துபோன காதல்
ஜோடிகளின் பெயர்களை மனதில் குறித்துக் கொண்டோம். இறுதியாக கலங்கரை
விளக்கத்துக்கு ஏறினோம். அதன் உச்சிக்கு ஏறிப் பார்த்த பிறகுதான் தெரிந்தது
கடலினதும் கடல் சார்ந்த இடங்களினதும் பெருவனப்பு.
அவ் வனப்பினை எந்தப் பசித்த கண்களினாலும் கூட ஒரே தடவையில் பருகிவிட
முடியாது. ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு அழகு. அதுவும் அந்தி மஞ்சள் மாலை,
தன் தூரிகை கொண்டு வர்ணங்களைத் தெளிக்கும் நேரம், தென்னைகளில் நெளியும்
மஞ்சள், நீலத்தில் குளிக்கும் சிவப்பு, எல்லா வர்ணங்களிலும் வானம்
மின்னும். இந்த நிறங்களிலிருந்து யாசகம் பெற்றுத் தான் இக் கரையோர
சிப்பியோடுகள் வண்ணமயமாகினவோ? பேரழகென மிளிர்கின்றனவோ? தன்னை மறந்து
லயித்துக் கிடப்பதாகப் பொறாமை கொண்ட காலம், இருள் போர்வையை மெதுமெதுவாகப்
போர்த்தி எழிலை மூடியது. மூடுண்டதைத் திறக்க கலங்கரை வெளிச்சம் போராடியது
விடியும் வரை. நூற்றாண்டுகாலமாக கட்டடமொன்றுக்குள் அடைபட்டுக் கிடக்கும்
அம் மௌனப் பூதம், இருட் கரங்களின் மெல்லிய தடவலில் உயிர்த்து வெளிவரும்.
தன்னை வெளியே எடுத்தவருக்கே சேவகம் செய்யவேண்டுமென்ற ஆதிக்
கொள்கையிலிருந்து தப்பி, தன்னைத் தீண்டிய இருளையே விரட்டவென சலிப்பின்றி
முயற்சித்துக் கொண்டே இருக்கும் விளக்கு.
உலகிலேயே மிகப் பிரமாண்டமான மயானம், கடல். பேராறுகள், பெரும் நதிகளின்
தற்கொலைகள் எல்லாம் கடலிலேயே நிகழ்கின்றன. வானில் காய்ந்துருகும் நீர்த்
துளிகளும் கடலே தமக்குப் பாதுகாப்பென எண்ணி மழைத் துளிகளாகிக் கடலுக்குள்
குதிக்கின்றன. வாழ்வு சூனியமான மனித உயிர்களும் கூட கடலில் விழுந்து தம்மை
மாய்த்துக் கொள்கின்றன. அவற்றின் உயிர்கள் நீருடன் கலந்து ஆவியாகி வானை
அடைந்திருக்கும். காலம் காலமாக, பல நூறாண்டுகளாக கடல் இவ்வாறான எத்தனை
தற்கொலைகளைப் பார்த்திருக்கும்? எல்லா உயிர்களுக்கும் தாய் ஒருத்திதான்
என்பதுபோல, உலகின் தாய் கடல்தான். தாயின் அன்பு குறைவதேயில்லை என்பது போல
கடலின் ஆழமும் குறைவதுமில்லை... ஒரு போதும் வற்றுவதுமில்லை. உண்மையான ஆதரவை
எங்கும் கண்டுகொள்ள முடியாமல் போன உயிர்கள் ஓடோடி வந்து தாயின் மடியில்
விழுவதைப் போல, கடலின் பரப்புக்குத் தங்களைக் கொடுத்து விடுகின்றனர். கடல்
அந்த உயிர்களைத் தனக்குள் அரவணைத்துக் கொள்கிறது.
கடல் பார்க்க வரும் சனங்களின் முகங்களைப் பார்த்திருக்கிறீர்களா? அவை
எல்லாவிதமான மனித உணர்வுகளையும் ஒரு திரைக்காட்சியைப் போல கடலுக்கு
வெளிப்படுத்தும். மனித முகங்களில் வெளிப்படும் உவகை, அழுகை, கூச்சம்,
இயலாமை, களைப்பு, ஆரவாரம், கொண்டாட்டம், மரணம் எல்லாவற்றையும் தினமும்
சலிப்பின்றிப் பார்த்து வருகிறது கடல். மனிதர்களின் பல தரப்பட்ட கதைகள்
காற்றில் கலந்து கடலோடு உரையாடும். ஒரு மெல்லிய இறகு காற்றில் அசைந்து
அசைந்து தனது இருப்பை உணர்த்துவது போல, அக் கதைகளும் கடலுக்கு நிலத்தில்
மனிதர்களின் இருப்பை உணர்த்தும்.
கடல் எங்களூரிலிருந்து மிகத் தொலைவில் அலையடித்தபடி இருக்கிறது. சிறு
வயதில் நேரில் கண்டதில்லை. கடல் பற்றிய பிம்பங்களை போத்தலில் அடைக்கப்பட்ட
பூதமொன்று அலையில் மிதந்து வந்து சிறுவனொருவனுக்கு எட்டிய கதையினூடாக
குழந்தைப் பராயத்தில் அறிந்திருக்கிறேன். ஆழக் கடலெனில் அது நிறைய என்றும்
வற்றா நீரிருக்கும் என்ற தந்தையிடம் நீர் எப்படி வற்றுமெனக் கேட்டுத்
தெரிந்த பின்னர் , கடல் பிரதேசங்களில் சூரியன் அலையாதா எனக் கேட்டுத்
திண்டாடச் செய்திருக்கிறேன். முதல்முறையாகப் பள்ளிக்கூடச் சுற்றுலா போய்
கடல் பார்த்து வந்த பின்னர், வெயில் வராத தெருக்களோடு, எல்லா ஊர்களிலும்
என்றுமே வற்றாத கடல்கள் இருப்பின் எவ்வளவு நன்றாக இருந்திருக்குமெனக்
கூட்டாளிகளுடன் கூடிக் கதைத்த கதைகளும், கடற்கரை இரவுகளின் மணல் நடையும்
நிலாச் சோறுண்ணும் ஆசையும் சில வருடங்களுக்கு முன் வந்து சென்ற
சுனாமியுடனும், பின் வந்த அடைமழையுடனும், அது கொண்டு வந்த வெள்ளத்துடனும்
வடிந்து போயிற்று.
கடல், சுனாமியாய் வந்த அந்த ஞாயிறன்று எல்லாத் தொலைக்காட்சிகளும்
வானொலிகளும் கடலனர்த்தம் குறித்துச் சொல்லிக் கொண்டிருக்கையில்தான் அப்
பாய் வியாபாரி எம் வீட்டுக்கு வந்தார். இவ் அசம்பாவிதங்கள் குறித்து ஏதும்
அறியா அவரிடம் தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காட்டி ஊரை விசாரித்ததில் கடலுக்கு
அண்மையிலுள்ள 'காத்தான்குடி கிராமம்' என்றார். சமையலறைக் கழிவு நீரைக்
கடலுக்குள் வீசியெறியும் தூரத்தில்தான் அவர் வீடிருப்பதாகச் சொல்லி இரு
கைகளையும் தலையில் வைத்துக் கொண்டு செய்வதறியாது நிலத்தில் அமர்ந்து
விசித்து விசித்தழத் தொடங்கினார். வாழ்வில் முதல்முறையாக கடலலைகளின்
சீற்றம் குறித்து அறியக்கிடைத்தது அவருக்கும் எங்களுக்கும்.
எப்பாடுபட்டாவது இப்பொழுது ஊருக்குப் புறப்படவேண்டும், கர்ப்பிணி
மனைவியும், இரு சிறுகுழந்தைகளும், பாரிசவாத நோய் தாக்கிப் பாயோடு முடங்கிய
வயோதிபத்தாயும் குடிசையில் தனித்திருப்பதாகச் சொல்லி அவர் உடனே ஊருக்குப்
புறப்பட்டார். வானம் இருட்டியிருந்தது. சூரியன் வெட்கி எங்கோ
ஒளிந்திருந்தது.
அன்றைய நாள் மாலைவேளையில் கடல் பிரதேச மக்களுக்கு உதவுவதற்காய் நிவாரணப்
பொருட்களோடு ஊரிலிருந்து பயணித்த பேரூந்துகளிலொன்றில் மனம் முழுதும்
வியாபித்திருந்த துயரச் சலனத்தோடு நானுமிருந்தேன். முன்பு போல கடல்
பார்க்கப் போகும் உல்லாசப் பிரயாணமாக அது இல்லை. கேள்விப்படும் எல்லாமும்
சடலங்களும், இழப்புக்களுமென அழிவுகள் பற்றியே எதிர்வு கூற, எந்த உற்சாகமான
மனநிலையும் எவரிடமுமில்லை. பல மணி நேரப் பிரயாணம் எனினும் எவருக்கும்
உண்ணவோ, குடிக்கவோ மனமில்லை. அங்கு சென்று கடல் விழுங்கிய சடலங்கள் பலவற்றை
மீட்டெடுத்து மண்ணில் புதைத்தோம். உயிர் தப்பியவர்கள் அதிர்ச்சியில்
உறைந்தும், கடலைத் திட்டிய படியும், சித்தம் பிசகிச் சிலரும்
அழுதுகொண்டேயிருந்தனர். அவர்களைத் தேற்றும் வார்த்தைகள்
எவரிடமுமிருக்கவில்லை. அவ்வளவு நாளும் ஓருறவாய் சினேகித்துக் கிடந்த கடல்
இப்படியானதொரு சீற்றம் கொள்ளுமென்றோ, துரோகமிழைக்குமென்றோ யார்
எண்ணியிருந்தார்கள்? அவ்வளவு நாளும் தன் பாட்டிலிருந்த, பல பொக்கிஷங்களை
வாரித் தந்த கடலின் ஆழ் மௌனம், அன்றைய நாளில் ஒரு பெரும் அனர்த்தக்
குறிப்பாய் உலக வரலாற்றில் பதியப்பட்டது.
இது போல கடலை அண்டிய தேசங்களுக்கு, நல்லதும் தீயதுமாகக் கடல் குறித்த பல
வரலாறுகள் இருக்கின்றன. பல சாதனைகளும், பல சோகங்களும் அவற்றினிடையே விரவிக்
கிடக்கின்றன. மக்கள் வாழ்ந்துவரும் சிறு சிறு தீவுத் தேசங்களை கடல்
விரைவில் தனக்குள்ளே எடுத்துக் கொள்ளுமென உலக ஆருடங்கள்
எதிர்வுகூறியிருக்கின்றன. எந்தச் சட்டங்களுக்கும் வசப்படாத கடல், உலகின்
ஒரு பகுதியில் உறைந்தும், பனியாகக் குளிர்ந்தும் குளிர்ப் பிரதேசத்து
விலங்குகளுக்காகத் தன்னைச் சிலையாக்கிக் கொள்ளும் கருணையும் கொண்டதுதான்.
எல்லாச் சேதங்களையும் கடலே விளைவிக்கிறதெனில், கடலுக்கு நாம் எந்த
அநீதியும் இழைப்பதேயில்லையா என்ன? உலகின் எல்லா அழுக்குகளையும் கொட்டும்
மிகப் பெரும் குப்பைக் கிடங்காக தற்பொழுது கடலே உள்ளது. எல்லாவிதமான
அணுவாயுதக் கழிவுகள், பூமியில் உக்காத பிளாஸ்டிக் குப்பைகள், விஷக்
கிருமிகளைக் கொண்டவைகள் எல்லாமும் மனிதர்களால் கடலிலேயே கொட்டப்படுகின்றன.
அண்மையில் மெக்ஸிக்கோ கடலில் கசிந்து வரும் எண்ணெய்யின் அளவு ஐம்பதினாயிரம்
கொள்கலன்களுக்கும் அதிகம் என்பதை முதல்முறையாக ஒப்புக் கொண்டுள்ளது
அமெரிக்க அரசு. அந்த எண்ணைய்க் கசிவினால் தினந்தோறும் இழந்துவரும் நீர்வாழ்
ஜீவராசிகளின் உயிர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவது எவ்வாறு? இந்த
அநீதிகளுக்கெதிராக கடல் ஒரு நாள் சீற்றம் கொண்டெழுந்தால் பூமி தாங்குமா?
கடலின் மௌனம், அதன் பொறுமை எப்படியும் ஒரு நாள் வெடித்தழியத்தான் போகிறது.
அந்த நாளைத் தள்ளிப் போடுவதற்கு ஏதேனும் செய்ய வேண்டியிருப்பதே தற்பொழுது
மனிதனின் முக்கிய கடமை. கடலையே தங்கள் வாழ்வாதாரமாக நம்பி வாழும் எல்லா
உயிரினங்களதும் வாழ்வை, இருப்பைத் தீர்மானிப்பதெல்லாம் மனிதனது
நடவடிக்கைகளே. அவை இனி தூயதாகட்டும்.
கண்ணீர்ப் பிரவாகம்
ஒரு சமுத்திர உடலின் மேல்
பனிமுகில் போர்வை விழுந்தது
எதன் ஈரத்தை
எது வாங்கிக் கொண்டதென்ற
கணக்குகளேதுமற்ற வெளியின் காற்று
எல்லாத் திசைகளிலும்
துளிகளாய்ப் படிந்தது
அம் மலையினுச்சியில் சிறகடிக்கிறது
ஒரு பெரும் விஷப்பறவை
கூடுகளைக் கிளைகளை
அடைந்திருக்கும் சிறுகுருவிகள்
அச்சத்தில் நடுங்கிடத் தன்
சொண்டூறி வழியும் எச்சிலில்
நகங்களைக் கூர்படுத்துகிறது மாமிசப்பட்சி
உன்னைப் போல
நான் மணற்கரை
கடும்விசை கொண்டு
உன் பாதச்சுவடுகளைத் தழும்பாக்கியபடி
என் மேனி முழுதும் நடக்கிறாய்
உனது தடங்களிலிருந்து தொடர்ந்தும்
எனதுள்ளிருக்கும்
கண்ணீரூற்றுக்கள் பிரவகிக்கின்றன
இருப்பினும் எப்பொழுதும்
இருட்டறைப் பிணங்களை எட்டாது
சுடுகாட்டு நிலாக்கீற்று
|
|