|
வல்லினம் ஆசிரியர் எனது கட்டுரைகள் வாசகர்களால் விரும்பி
வாசிக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டு மெயில் அனுப்பியிருந்தார்.
உண்மைக்கு என்றைக்குமே வரவேற்பு இருப்பது உண்மைதானே.
அரசியல் கட்சிகள் தரமானவையாக இருந்தால் தான் ஜன நாயகம் தழைத்தோங்கி மக்கள்
சந்தோஷமுடன் வாழ்வார்கள். ஆனால் இந்தியாவில் அரசியல் செய்து கொண்டிருக்கும்
அரசியல் கட்சிகளின் போக்கினால் இந்தியா சுக்கு நூறாய் சிதறும் நிலைக்கு
தள்ளப்பட்டிருக்கிறது. மாநிலங்களுக்கிடையே தங்களின் அரசியல் லாபத்திற்காக
விரோத மனப்பான்மையை வளர்க்கின்றார்கள் அரசியல்வாதிகள். மதவாரியாக
கட்சிகளும், ஜாதி வாரியாக கட்சிகளும் வந்து கொண்டே இருக்கின்றன. மதத்தின்
பெயரால் உருவாக்கப்படும் கட்சிகளால் வேற்றுமையில் ஒற்றுமை கண்ட இந்திய
ஜனநாயகம் பெரும் ஆபத்தை எதிர் நோக்கியிருக்கிறது. ஜாதியின் பெயரால்
உருவாக்கப்படும் கட்சிகளால் பிற ஜாதியினர் தாக்கப்படுவார்களோ என்ற அச்சத்தை
தோற்றுவிக்கப்படுகிறது. பிராந்தியக் கட்சிகள் இந்தியாவைப் பற்றி சிறிது கூட
சிந்தித்துப் பார்ப்பதே இல்லை. நம்பிக்கை வாக்கெடுப்பின் போது விலைக்கு
வாங்கப்பட்ட பிராந்திய கட்சிகளின் எம்பிக்களைப் பற்றி மீடியாக்கள் எழுதிக்
குவித்தன. இப்படி எந்த அரசியல் கட்சியானாலும் சரி பொதுமக்களின் நன்மைக்கு
எந்த நன்மையும் செய்வதாகத் தெரியவில்லை. அப்படி ஒரு கட்சி இந்தியாவில்
இருக்கிறதா என்று இனிமேல் தான் தேட வேண்டும்.
மேலும் ஏதாவதொரு அரசியல் கட்சியின் தலைவர் சுத்தமாக இருக்கின்றாரா என்றால்
அவ்வாறு யாரையாவது சொல்ல முடிகிறதா? ஊழலற்ற அரசியல்வாதிகளைத் தேடினாலும்
கண்டுபிடிக்க முடியாது. ஊழலில் மூழ்கிப் போய், தன்னலமே கொள்கையாய், தன்
சுற்றத்தினர் நலனே கோட்பாடாய் வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கும்
அரசியல் கட்சிகளே இன்றைய இந்தியா ஆட்சியில் பங்கு பெற்றிருக்கின்றன என்பது
இந்தியத் தாய்க்கு ஏற்பட்ட களங்கம் தானே. இந்தியத் தாய் தன் மக்களால்
களங்கமுற்று கவனிப்பாரற்றுக் கிடக்கிறாள். நாளடைவில் தன் மக்களாலே அவளின்
கற்பும் சூறையாடப்படும் நிகழ்ச்சிகளும் நடக்கத்தான் போகின்றன.
உங்களிடம் வேலை பார்க்கும் ஒருவர், உங்கள் சொல் பேச்சு கேட்காமல்
உங்களுக்கு பக்கத்து வீட்டுக்காரர் சொல்வதைக் கேட்டு அதன்படி நடந்து
கொண்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்? இந்தியாவின் தலைவரான பிரதமர்
மன்மோகன் சிங்கால் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தன் அமைச்சரவையின்
உறுப்பினர் திரு ராஜாவை, என்ன செய்ய முடிந்தது? கோதுமை ஊழல் வழக்கில்
குற்றம் சாட்டப்பட்ட திரு சரத்பவரை என்ன செய்ய முடிந்தது? பிரதமரால்
அவர்களுக்கு எதிராய் ஒரு துரும்பையும் கிள்ளிப் போட முடியாது.
காரணம் திரு ராஜா திமுக தலைவர் கருணாநிதிக்குக் கட்டுப்பட்டவர். திரு
சரத்பவார் ஒரு மாநிலக் கட்சியின் தலைவர். மாநிலக் கட்சிகளின் ஆதரவோடு
நடக்கும் கூட்டணி ஆட்சியில் மந்திரிகளைக் கட்டுப்படுத்தும் பவர் பிரதமரிடம்
இல்லை. தான் சார்ந்திருக்கும் கட்சியின் அமைச்சர் ஒருவரின் மீது
எழுப்பப்பட்ட ஊழல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் காரணமாக
சம்பந்தப்பட்ட அமைச்சரை பதவியில் இருந்து வீட்டுக்குத் துரத்திய பிரதமரால்
கூட்டணிக் கட்சியின் ஊழல் அமைச்சர்களிடம் கேள்வி கூட கேட்க முடியவில்லை
என்பதுதான் கூட்டணி ஆட்சியின் அவலம். மக்கள் சிந்திக்க வேண்டிய அம்சம் இது.
தன் கீழ் வேலை செய்பவரைக் கட்டுப்படுத்தும் அதிகாரமற்ற ஒரு தலைவரால்
அவருக்கோ அவரை நம்பியிருப்பவருக்கோ நன்மை செய்து விட முடியுமா? இந்தச் சூழ்
நிலையில் சுத்தமான கை உடையவர் என்று வர்ணிக்கப்படும் பிரதமர் மன்மோகன்
சிங்கால் இந்திய மக்களுக்கு என்ன நன்மை செய்து விட முடியும்? அன்னை சோனியா
காந்தியின் அன்பைப் பெற்றவர்கள் நாங்கள் என்று மார்தட்டிக் கொள்ளும்
திமுகவின் மத்திய அமைச்சரின் ஊழலை ஆதாரத்தோடு சமர்ப்பித்து குற்றம்
சாட்டின. மீடியாவில் இது பற்றிய கேள்விகள் எழுப்பபடும் போது பரிதாபமாய்க்
காட்சியளிக்கிறார் பிரதமர்.
கூட்டணி ஆட்சி இந்திய ஜனநாயகத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்
கொண்டிருக்கிறது. மாநிலக் கட்சிகளின் சுய நலன் காரணமாய் இந்திய மக்களின்
சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. கூட்டாக சேர்ந்து திருடப்படுகின்றன.
கூட்டணியின் கட்சித் தலைவரை அனுசரித்துச் செல்லவில்லை என்றால் ஆட்சியையே
இழக்க வேண்டியிருக்கும் என்பதற்கு அதிமுகவின் தலைவி ஜெயலலிதா ஒரு உதாரணம்.
ஜெயலலிதாவை அனுசரிக்கவில்லை என்பதற்காக பாஜக தன் ஆட்சியையே இழந்தது.
இன்றைக்கு மக்கள் நலன் பற்றி கொந்தளிக்கும் ஜெயலலிதாவின் செயலால் அன்றைக்கு
இந்தியாவின் மீது தேவையற்ற தேர்தல் செலவு சுமத்தப்பட்டதே அது மக்கள்
விரோதச் செயல் இல்லையா? கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் திமுகவிற்கு
எதிராய் அறிக்கைகளை வீசிக் கொண்டிருக்கும் ஜெயலலிதா, தான் செய்த செயலால்
இந்தியா முழுதும் ஒரு தேர்தலைச் சந்தித்ததை மறந்து விட்டார் போலும்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக தமிழக மக்கள் இன்றைக்கு இவரை நம்பியாக வேண்டிய சூழ்
நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். மக்களுக்கு வேறு வழியே இல்லாமல் போய்
விட்டது. எந்தத் திருடனில் நல்ல திருடன் என்று தேர்ந்தெடுக்க வேண்டிய
கட்டாயத்தில் இந்திய மக்கள் இருக்கின்றார்கள். இதுதான் இந்திய ஜனநாயகத்தின்
இன்றைய நிலை.
இதற்காகவா தங்கள் பெண்டாட்டி பிள்ளைகளை மறந்து, சுதந்திரக் களத்தில்
இரத்தம் சிந்தினார்கள் இந்தியர்கள்? இதற்காகவா சுதந்திரத்திற்காக தங்கள்
தலைகளை கயிறுகளில் தொங்க விட்டார்கள்? இதற்காகவா ஆங்கிலேய
கொடுமைக்காரர்களின் துப்பாக்கிக் குண்டுகளை தங்கள் நெஞ்சில் வாங்கினார்கள்?
இதற்காகவா ஆங்கிலேய ராணுவத்திடம் அடியும், உதையும் வாங்கி ரத்தம் கக்கி
கக்கிச் செத்தார்கள்?
ஒவ்வொரு மாநிலக் கட்சிகளும் தங்களது கொள்கைகளை மறந்து, மக்கள் நலன் பற்றிச்
சிந்திப்பதை மறந்து தன் நலன், தன் குடும்ப நலன் பற்றிச் சிந்தித்து அதன்படி
செயல்படவும் ஆரம்பித்து விட்டன. மக்களுக்கு பணி செய்கிறேன் என்று
திருவாரூரிலிருந்து புறப்பட்ட திமுகவின் தலைவர் தன்னைப் புகழும்
ஜால்ராக்களின் கூட்டங்களில் கலந்து கொண்டு குதூகலமாயிருக்கிறார். மக்களைப்
பற்றிச் சிந்திக்காமல் எனக்கும் ஒரு குடும்பம் இருக்கிறதே என்று அறிக்கை
விடுகிறார். இதோ அவரின் குடும்ப உறுப்பினர்களின் சொத்தாக ஒரு பதிவர்
எழுதியிருந்ததை படித்துப் பாருங்கள்.
http://thurkai.blogspot.com/2009/09/blog-post.html
நன்றி : இட்லிவடை (பதிவர்)
மேற்படிச் சொத்துக்கள் ஒரு கட்சித் தலைவரின் குடும்பத்தாரிடம் இருக்கின்றன.
இந்தியாவில் 29 மாநிலங்கள் இருக்கின்றனவே. அவைகளில் எல்லாம் கட்சிகளும்,
தலைவர்களும் இருக்கின்றார்களே அவர்களின் சொத்துக்களை எழுத ஆரம்பித்தால்
வல்லினம் நாள்தோறும் பதிப்பை வெளியிட வேண்டியிருக்கும் போல. ஆசிரியர் நவீன்
அனுமதியளித்தால் எழுதி விடலாமென்றிருக்கிறேன்.
இனி அடுத்த கூத்தைப் பார்ப்போம். ஒருவன் கூட குடும்பம் நடத்தும் பெண்மணி
மற்றொருவன் வந்து அதிகப்பணம் தருகிறேன் வா என்று அழைத்தவுடன் அவனோடு சென்று
விடுவது என்பது தான் இன்றைய அரசியல் ராஜ தந்திரமாக ஒவ்வொரு தேர்தலின் போது
சில கட்சிகளால் நடத்தப்படுகிறது. பத்திரிக்கைகளில் பேரம் பேசுவது
என்பார்கள். ஒவ்வொரு தேர்தலின் போதும் அதிக சீட் தரும் கட்சியோடு கூட்டணி
வைப்பதை அரசியல் தர்மம் என்று சொல்வார்கள்.
ஆனால் இன்னொரு பெயரும் உண்டு. அரசியல் விபச்சாரம். இப்படி ஒவ்வொரு
தேர்தலின் போது சீட்டினை முன்வைத்து கூட்டணி சேரும் அரசியல் கட்சிகளின்
தலைவர்களை என்ன பெயர் சொல்லி அழைக்கலாம் என்பதை நீங்களே முடிவு செய்து
கொள்ளுங்கள். அரசியல் அயோக்கியத்தனத்திலும் உச்சப்பட்ச அயோக்கியத்தனம்
என்பது பேரம் பேசும் கட்சிகளின் தலைவர்கள் செய்வதுதான். இவர்களை
நம்பித்தான் உதிரிக்கட்சிகளை நம்பும் மக்கள் இருக்கின்றார்கள்.
பெரும்பாலும் இந்த மாதிரியான கட்சிகள் ஜாதிச்சாயம் பூசியே வருகின்றன.
முறையற்ற வழிகளில் சம்பாதிக்கும் பணத்தைப் பாதுகாப்பாக வைக்கவும், தனக்கொரு
பாதுகாப்பும் கிடைக்க வேண்டுமென்பதற்காக சிலர் தன் ஜாதியை முன்வைத்து
அரசியல் கட்சியைத் தொடங்குகின்றார்கள். அதைத் தொடர்ந்து பிரபலமான கட்சியோடு
கூட்டணி வைக்கிறார்கள். கூட்டணி தர்மம் என்பது என்ன தெரியுமா? தன்னுடன்
கூட்டணியில் இருக்கும் கட்சியினர் கொலையே செய்தாலும் உடனே அரசியல் உள்
நோக்கம் கொண்டது என்று அறிக்கை விடுவது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி
செய்துவரும் கூட்டணி தர்மம் பற்றி பத்திரிக்கைகள் கதை கதையாய் எழுதுகின்றன.
இது மட்டுமா? இதோ அரசியல்வாதிகளின் அடுத்த விளையாட்டு. அரசியல் கட்சிகளின்
தலைவர்கள் தங்கள் வாரிசுகளையும் அரசியலுக்குள் நுழைத்து விடுகின்றார்கள்.
அரசியலில் மட்டுமல்ல இன்ன பிற துறைகளில் எல்லாம் தங்கள் ஆதிக்கத்தைப் பரவ
விடுகிறார்கள். டாட்டாவை மிரட்டிய மத்திய அமைச்சர் என்ற செய்திகள்
மீடியாக்களில் சிரிப்பாய் சிரித்தன. நானோ, என் குடும்பத்தாரோ ஆட்சிப்
பதவிக்கு வந்தால் மரத்தில் கட்டி வைத்து அடியுங்கள் என்று அரைகூவல் விட்ட
ஜாதிக் கட்சியின் தலைவரின் மகன் அமைச்சரானாரே அது பற்றி அவரை நம்பி ஓட்டுப்
போட்ட எவராவது கேள்வி எழுப்பினார்களா? அப்படி எழுப்பினால் அவன் துரோகி
என்று முத்திரை குத்தப்பட்டு வெளியேற்றப்படுவான். இன்னும் அதிகமாய்
குரலெழுப்பினால், ரோட்டோரமாய் கொன்று போடப்படுவார்கள். காங்கிரஸில்
பாருங்கள் - நேரு - இந்திரா காந்தி - ராஜீவ் காந்தி - சோனியா காந்தி இன்று
ராகுல் காந்தி என்று கிட்டத்தட்ட 50 வருடங்களாக இந்தியாவின் ஆட்சி ஒரு
குடும்பத்திடமே முடங்கிக் கிடக்கிறது. தமிழகத்தில் சொல்லவே வேண்டாம்.
திராவிட முன்னேற்றக் கழகம் - திரு மு. கருணாநிதி குடும்பமாகி விட்டது. ஜன
நாயகத்தை எள்ளி நகையாடும் இந்த வாரிசுகள் போக்கு நாளடைவில் மக்களாட்சியை
மன்னராட்சியாக்கி விடும். இப்போது மட்டும் வாழ்கிறதோ என்று கேட்கின்றீர்கள்
போல.
அடுத்து, இந்தக் கூத்து தான் பெரிய கூத்து. ரவுடிகள் என்றால் அடித்துக்
கொள்வார்கள். ஒரு சட்டமன்றத்தில் அடித்துக் கொள்கின்றார்கள். ஜன நாயகம்
என்றால் எதிர்த்துப் பேசினால் அடி உதை அதன்பிறகு சிறை என்றாகி விட்டது.
தமிழகச் சட்டசபையில் சேலை உறிந்த வைபவமெல்லாம் நடந்தது. ரவுடிகள் தங்களைச்
சட்டத்தின் பிடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அரசியலில் நுழைகின்றார்கள்.
சட்டத்திற்குப் புறம்பாய் சம்பாதித்த கோடீஸ்வரர்களும் தங்களைப்
பாதுகாத்துக் கொள்ள அரசியலில் புகுந்து கொள்கின்றார்கள். கர்நாடகத்தில்
ரெட்டி சகோதரர்களின் அடாவடி சுரங்கத் தொழில் பற்றித் தெரியாதவர்களே இருக்க
முடியாது. ஆனால் பிஜேபி அரசாங்கம் ரெட்டி சகோதரர்களுக்கு ஆதரவாய்
நிற்கிறது. ஏனென்றால் ரெட்டி சகோதரர்களின் பணத்தால் வெற்றி பெற்றவர்கள்
கர்நாடக பிஜேபியினர். தற்போது தங்களை எதிர்க்கும் காங்கிரஸ் கட்சியினரின்
சுரங்கத் தொழில் ரகசியங்களை அம்பலப்படுத்துகிறார்கள் ரெட்டி சகோதரர்கள்.
காங்கிரஸ் கட்சியினரும் சுரங்கத்தொழில் செய்கிறார்கள். பிஜேபியினரும்
சுரங்கத் தொழில் செய்கின்றார்கள். இதற்கிடையில் முன்னாள் முதல்வரொருவர் 150
கோடி பெற்றார் என்றும் மீடியாவில் சொல்லுகின்றார்கள் ரெட்டி சகோதரர்கள்.
இதுவரை நான் எழுதியதற்கு இந்த ஒரு சம்பவமே சாட்சியாய் நிற்கிறது.
இப்போதாவது அரசியல் கட்சியினரைப் பற்றி கொஞ்சமாவது புரிந்து கொள்ளுங்கள்.
உழைக்கும் தொழிலாளர்களுக்கு ஆதரவாய் குரல் கொடுத்த கம்யூனிஸ்ட்டுகளின்
இன்றைய நிலையோ எள்ளி நகையாடும் அளவுக்கு தரம் தாழ்ந்து விட்டது. சீட்டுக்கு
ஆளாப் பறக்கும் நிலைக்கு தமிழக கம்யூனிஸ்டுகள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்
என்பது சோகம்.
அரசியல் என்றாலே சட்டத்திற்குப் புறம்பானவர்கள் இருக்குமிடம் என்று
சொல்லுமளவிற்கு தரம் தாழ்ந்து இருக்கிறது. அரசியல் கட்சிகள் தாங்களாகவே
தங்களின் தரத்தைக் குறைத்துக் கொண்டு விட்டன. இவர்களை நம்பி தங்களை ஆளும்
பொறுப்பை வழங்கும் மக்கள் என்றைக்கும் திருந்தவே போவதில்லை. ஏனென்றால்
மேற்கண்ட அரசியல்வாதிகள் இந்திய மக்களின் பெரும்பான்மையானவர்களை ஏழைகளாக
மாற்றிக் கொண்டே வருகின்றார்கள். மேலும் இவ்வகை அரசியல் கட்சிகளின் மற்றொரு
சாதுர்யம் தேர்தலில் பெறும் வெற்றி. வெறும் பதினைந்து சதவீதம் ஓட்டுப்
பெறும் கட்சி ஆளும் பொறுப்பு ஏற்கலாம் என்று சொல்லும் சட்டமும்
அவர்களுக்குத் துணை செய்கின்றன. சட்டங்கள் அரசியல்வாதிகளுக்காகவே
உருவாக்கப்படுகின்றன. ஏழைகள் ஏழைகளாகவே இருந்தால் தான் ஏமாற்றுக்கார
அரசியல்வாதிளால் பிழைக்க முடியும். இதோ எங்கள் தமிழகத்தில் ஒரு ரூபாய்க்கு
ஒரு கிலோ அரிசியும், இலவசங்களையும் வழங்கி உழைக்கும் மக்களை உழைக்க விடாமல்
செய்து மேலும் தங்களைப் பலப்படுத்திக் கொண்டுள்ளார்கள் தமிழக
அரசியல்வாதிகள்.
குழந்தை பிறந்ததும் அதன் மேல் மதச்சாயம் பூசப்படுவது போல, நாளைய
இந்தியர்கள் பிறக்கும் முன்பே எந்தக் கட்சியைச் சார்ந்தவர் என்ற முத்திரை
குத்தப்படும் சூழ் நிலையினையும் உருவாக்கி விடுவார்கள் இந்திய
அரசியல்வாதிகள். அவர்களின் பிழைப்பும், அவர்களின் குடும்பத்தாரின்
பிழைப்பும் ஏழை மக்களின் பசியால் எரியும் வயிற்று நெருப்பில் ஜெக ஜோதியாய்
நடக்கும். விவசாயிகளும், ஏழைகளும் தற்கொலை செய்து கொள்வார்கள். ஜன
நாயகத்தின் நான்காவது தூணாகிய பத்திரிக்கைகளில் அது செய்தியாய் ஏதோ ஒரு
மூலையில் வெளியிடப்படும். இந்தப் பத்திரிக்கைத் துறையும் அரசியல்வாதிகளால்
நடத்தப்படுகின்றன. அல்லது நடத்த வைக்கப்படுகின்றன.
இனியொரு சுதந்திரப் போராட்டம் நடந்தால் தான் அரசியல்வாதிகளின்
பிடியிலிருந்து இந்தியாவை மீட்க முடியும் என்பது நம் முன்னே நிற்கும் மிகப்
பெரிய சவால்.
|
|