இதழ் 20 - ஆகஸ்ட் 2010   ம‌ண்ணின்றி வ‌ள‌ரும் ம‌ர‌ங்க‌ளும் சிங்கை இல‌க்கிய‌மும்
ல‌தா
 
 
 
  பத்தி:

'நான் கோமாளியாக இருக்கவே விரும்புகிறேன்' - சார்லி சப்ளின்

சு. காளிதாஸ்

வேட்கைக் காற்று : 13 ம‌லேசிய‌க் கலைஞர்கள் - ஓர் அறிமுக‌ம்
சு. யுவராஜன்

வ‌ற்றிப்போகும் சினிமா இசை!
அகில‌ன்

இயற்கை (5) - கடல்
எம். ரிஷான் ஷெரீப்

மெக்சிகன் சூப்பர் ஹீரோ - எல் சேன்டோ (El Santo)
கிரகம்

கட்டுரை:

கூட்டணிகளால் கொள்ளை போகும் இந்திய ஜனநாயகம்
நெடுவை தவத்திருமணி

ம‌ண்ணின்றி வ‌ள‌ரும் ம‌ர‌ங்க‌ளும் சிங்கை இல‌க்கிய‌மும்
ல‌தா

காதல் விபரீதங்கள்
சந்தியா கிரிதர்

சிறுகதை:

போலீஸ் வந்துவிட்டால்...
ராம்ப்ரசாத்


சங்கமம்
கிரகம்

தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...2
எம். ஜி. சுரேஷ்

எனது நங்கூரங்கள் ...13
இளைய அப்துல்லாஹ்

நடந்து வந்த பாதையில் ...8
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...10

ஏ. தேவராஜன்

லதா

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

வ. ஐ. ச. ஜெயபாலன்

எதிர்வினை:


இல‌க்கிய‌ விவாத‌மும் அக்க‌ப்போர்க‌ளும்!
முனைவர் எம். எஸ். ஸ்ரீ லஷ்மி
     
     
 

காற்றோடு மழை பெய்யும் போதெல்லாம் சிங்கப்பூரில் மரங்கள் சடார் சடாரென்று விழுகின்றன. போன ஜூன் மாதத்தில் மட்டும் 240க்கும் அதிகமான மரங்கள் விழுந்தன. வேரோடு விழும் இந்த மரங்களால் வாகனங்களும் மனிதர்களும் மாட்டிக்கொள்கின்றனர். அண்மையில் காரில் சென்ற ஒருவர்மீது மரம் விழுந்து, அவர் இறந்தே போனார்.

இந்தச் செய்தியைப் பற்றி படித்துக்கொண்டிருந்தபோது, அருகிலிருந்த இரு பெரியவர்கள் கூறினார்கள்:

“வேற இடத்தில முளைச்சு வளர்ந்த மரத்தைக் கொண்டு வந்து பாதியில நட்டா இப்படித்தான் விழும். மண்ணில நல்லா வேர் பிடிச்சு வளர்ந்திருந்தா இந்தக் காற்றுக்கெல்லாம் விழாது”

புதிய தெருக்கள், குடியிருப்புப் பேட்டைகள் அமைக்கப்படும்போது வேறோர் இடத்தில் வளர்க்கப்பட்ட மரங்கள் வேரோடு கொண்டு வந்து நடப்படுவதைப் பார்த்திருக்கிறேன். எனினும் மரங்கள் விழுவதற்கு இது காரணமில்லாமல் இருக்கலாம். அறிவியல்ரீதியாக இக்கருத்து ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கலாம்.

நிலம் பார்த்து, அதற்குத் தோதான மரம் பார்த்து, வளரும் இடம் பார்த்து, பார்த்துப் பார்த்துத்தான் மரங்களை வளர்க்கிறார்கள். ஆனாலும் மரங்கள் விழுகின்றன. இப்போது அதிகம் விழுகின்றன.

இந்த மரங்களைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தபோது, சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் நினைவில் வந்தது.

குடியேறிகள் இலக்கியம் - இந்த நாட்டிலேயே பிறந்து வளர்ந்தவர்கள் இலக்கியம் - என்பது குறித்து பலவாறு விவாதிக்கப்படுகின்றன.

இங்கே பிறந்தாலும் வேறு நாட்டிலிருந்து குடியேறினாலும் ஆழமான பிடிப்போடு, இந்நாட்டு வாழ்வோடு ஒன்றி வாழ்பவர்கள் எழுதும்போது, மொழி, இலக்கிய முயற்சிகளில் ஈடுபடும்போது, அது இந்நாட்டு மண்ணின் மணத்தோடு முகிழ்க்கிறது என்பது காலம் தரும் பதிலாக இருக்கிறது.

ஏறக்குறைய 130 ஆண்டு வரலாற்றைக் கொண்ட சிங்கப்பூரின் தமிழ் இலக்கியத்தையும் இலக்கிய வளர்ச்சிக்கான முயற்சிகளையும் ஆராய்ந்து பார்த்தால் இதில் பாதிக்கும் மேற்பட்டது இங்கு வந்து குடியேறியவர்களால், வெளிநாட்டவர்களால் மேற்கொள்ளப்பட்டது என்பதை அறியலாம்.

“இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் இங்கு குடியேறிய சதாசிவப் பண்டிதர், இரங்கசாமி தாசன், பொன்னுசாமி பிள்ளை, க. வேலுப்பிள்ளை, முகம்மது அப்துல் காதர் ஆகிய குடியேறிகளே சிங்கத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகள் என்ற சிறப்புக்குரியவர்கள்,” என்று ‘சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வளர்ச்சி (1979)’ பற்றிய தமது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் அமரர் நா.கோவிந்தசாமி.

சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தை உருவாக்கி வளர்த்ததில் பத்திரிகைகள் முக்கிய பங்கு வகித்துள்ளன. பெரும்பாலும் இங்கு தமிழ்ப் பத்திரிகைகளைத் தொடங்கி நடத்தியவர்கள் குடியேறியவர்களாக உள்ளனர்.

“1870ம் ஆண்டு வாக்கில் தமிழ் அச்சகங்கள் இங்கு நிறுவப்பட்டன. செய்தித்தாள்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றி இலக்கியப் படைப்புகளுக்கு முதல் வாயிலாகவும் தூண்டுகோலாகவும் அமைந்தன” என்று அமரர் திரு வை. திருநாவுக்கரசு ‘கடந்த நூற்றாண்டுகளில் தமிழ்ச் செய்தித்தாட்கள் (1979)’ என்ற தமது ஆய்வுக் கட்டுரையில் எழுதியுள்ளார்.

இந்த இரு கட்டுரைகளும்தான் சிங்கப்பூரில் பல ஆய்வுகளுக்கு ஆதாரமாகவும் அடியொற்றியாகவும் திகழ்கின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. வை. திருநாவுக்கரசும் நா. கோவிந்தசாமியும் முதுகொடிய உழைத்துச் செய்த ஆய்வை அப்படியே தங்களதாக எடுத்தாள்பவர்களும் உண்டு. ஆய்வு பற்றி பிறகு வருவோம்.

சிங்கப்பூரில் தமிழ் மக்களின் மேம்பாட்டுக்காகவும் தமிழ் மொழியின் வளர்ச்சி, உயர்ச்சிக்காவும் பாடுபட்ட தமிழவேள் கோ. சாரங்கபாணி தமிழ் நாட்டில் இருந்து சிங்கப்பூரில் குடியேறியவர். இங்கு தமிழ்ச் சமூக முன்னேற்றத்திற்காக உழைத்த பல தலைவர்கள், சிங்கப்பூரில் குடியேறிய முதல் தமிழரான நாராயணப் பிள்ளை உட்பட, பலரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்றே வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன.

இடைக்காலத்தில், அதாவது 1930களிலிருந்து தமிழ்ச் சிறுகதை, கவிதை, நாடகத் துறைகளில் முக்கிய பங்காற்றிய ந. பழநிவேலு, கா. பெருமாள், ஐ. உலகநாதன், சே. வெ. சண்முகம் என பலரும் குடியேறியவர்கள்தான்.

மொழித் துறை மட்டுமின்றி, கலைகள், விளையாட்டு என பலதுறைகளிலும் முன்னோடிகளாகவும் முயற்சி எடுப்பவர்களாகவும் குடியேறிகள் திகழ்ந்துள்ளனர், திகழ்கின்றனர்.

குடியேறிகளால் உருவான இந்நாட்டின் மொழியையும் கலை, இலக்கியத்தையும் போற்றி வளர்த்து வருபவர்கள் பெரும்பாலும் குடியேறிகள்தான். இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால், இவர்களில் பெரும்பாலோர் இங்கு குடியேறிய பின்னர் இந்த நாட்டையே தங்கள் நாடாகக் கொண்டனர்.

தமிழ் மொழி, இலக்கியம், கலை வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய தமிழவேள் இங்கேயே திருமணம் செய்து, குழந்தைகள் பெற்று, இறுதிவரை வாழ்ந்தார்.

சில காலம் தங்கி விட்டுப் போனவர்களும், வாழ்ந்த காலத்தில் இச்சமூகத்திலும் ஈடுபாடும் அக்கறையும் கொண்டிருந்தனர். எனவே அவர்களது செயல்பாடுகள் உணர்வோடு கலந்த ஒன்றாக அமைந்தது. மண்ணோடும் இங்குள்ள மக்களோடும் ஒன்றுகலந்து வாழும்போது, உண்மை உணர்வோடு எழுதவும் செயல்படவும் இவர்கள் பலரால் முடிந்துள்ளது.
சிங்கப்பூர் - மலேசியா இணைந்த மலாயா பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்த் துறைத் தலைவராக இருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தவத்திரு தணியாகம் அடிகளார், பின்னர் வந்த தமிழகத்தின் முனைவர் இரா.தண்டாயுதம் இருவரும் இதில் முக்கியமானவர். இவ்விருவரும் இப்பகுதியில் தமிழ் மொழி இலக்கியக் கல்வி, முறையான பார்வை, ஆய்வு போன்றவற்றுக்கு வித்திட்டவர்கள். உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு அமைப்பை அமைக்க அடிகோலிய தணிநாயகம் அடிகளார் முதல் மாநாட்டை மலேசியாவில் நடத்தினார். அதேபோல், மலேயாவில் வெளிவந்த நூல்கள் குறித்த தொகுப்பைத் தயாரித்தவர் முனைவர் இரா.தண்டாயுதம். மேலும் மலாயா தமிழ் இலக்கியம் குறித்த ஆய்வுப் பணிகளையும் அவர் செய்துள்ளார். இப்பகுதியில் தங்கியிருந்த சில ஆண்டுகளில் இவர்கள் செய்திருப்பவை மிகப் பெரும் பணிகளாகும்.

சிங்கப்பூரிலும் கவிதை வகுப்புகள் நடத்தி, பல கவிஞர்களை வளர்த்தவர் கவிஞர் ஐ. உலகநாதன்.

இந்த நாட்டில் சில ஆண்டுகளே வாழ்ந்த, ப. சிங்காரம் எழுதிய “புயலிலே ஒரு தோணி” நாவல் மிகச் சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. எந்த விளரம்பரமும் இல்லாமல் தன்னந்தனியாக வாழ்ந்து மறைந்த அவரது இலக்கியப் பதிவு சிங்கப்பூரில் ஒரு காலகட்டத்து வாழ்வின் பிரதிபலிப்பாகத் திகழ்கிறது.

ஆனால், ஆதாயத்துக்காகவும் பெயருக்காகவும் வெறுமையான இடத்தில் எளிதாக இடம் பிடிக்கலாம் என்ற நோக்கத்திலும் அடி நுனி தெரியாமல், இந்த மண்ணிலேயே பிறந்து வளர்ந்து, வரலாற்றில் ஒன்றரக் கலந்தவர்கள் போன்று சிலர் பேசுவதையும் எழுதுவதையும்தான் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது.

சிங்கப்பூர் இலக்கியத்திற்குத் தாங்களே அடையாளம் என்பதுபோல குறைந்தபட்சம் சிங்கப்பூர் இலக்கியத்தையும் வரலாற்றையும் ஒட்டிய எந்த ஆழ்ந்த வாசிப்பும் அனுபவமும் இல்லாமல் பிதற்றுவதும் எழுதுவதும் அசூயை உணர்வை ஏற்படுத்துகிறது.

சிறுகதை, கவிதை, நாவல் என்று படைப்பிலக்கியங்களில் மட்டுமின்றி, சமூகப் பிரச்சினைகள் முதல் அரசியல் வரலாறு வரையிலான கட்டுரைகளிலும் மேலோட்டமாக சிலவற்றைத் தெரிந்துகொண்டு, சிங்கப்பூர் பிரதிநிதிப்போன்ற பாவனையில் எழுதப்படும் எழுத்துகள் மிக வேதனை தருகின்றன.

இத்தகைய எழுத்துகளால் சிங்கப்பூர் பற்றிய தவறான தகவல்களையே வெளிநாட்டில் வாழ்பவர்கள் மட்டுமின்றி, எதிர்கால சந்தியினரும் பெறுகின்றனர்.

தமிழ் நாட்டில் இருந்து இங்கு சுற்றுலா வந்துபோன கவிஞர் செவ்வியன் எழுதிய ‘சிங்கப்பூரில் தமிழர்களும் தமிழும்’ (1997) என்ற ‘ஆய்வு நூல்’ இதில் தலையாயது.

எந்தவிதமான ஒழுங்கிலும் இல்லாமல், ஆய்வாளருக்கு ஆதரவளித்தவர்களிலும் அவர்களது கருத்திலும் தொடங்கும் அந்த ஆய்வு நூல் ஏராளமான விடுபடல்கள், பல கருத்துப் பிழைகளுடன் ஒரு நூற்றாண்டு கால வரலாற்றின் ஆதார நூலாக சிங்கப்பூர் நூலகங்களிலேயே இடம்பெற்றுள்ளது. சிங்கப்பூரின் மூதறிஞர்களான முனைவர் சுப. திண்ணப்பன், முனைவர். அ. வீரமணி ஆகியோரின் முன்னுரைகளுடன்!

சிங்கப்பூரின் மூத்த அரசியல் தலைவர்களான மறைந்த எஸ். ராஜரத்தினம் பற்றி எம். கே. குமார் எழுதிய கட்டுரையை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். எவ்வித அடிக்குறிப்பும் இல்லாமல், இணையப் பக்கத்தில் இடம்பெற்றுள்ள அக்கட்டுரையில், மிகைப்படுத்தப்பட்ட புகழுரை மட்டுமின்றி தவறான தகவல்களும் இடம்பெற்றுள்ளன. 'மக்கள் செயல்கட்சி 1959ல் தொடங்கப்பட்டது' என்பது அதில் உச்சம். 1959ல் இக்கட்சி ஆட்சிக்கே வந்துவிட்டது.

மற்றவர்களைக் குறைசொல்லி என்ன, அக்கறையில்லாத இந்நாட்டினரை என்ன சொல்வது?

சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் ஆய்வு, தொகுப்பு விவரங்களைப் படித்தால் தலைசுற்றி விடும்.

மூத்த நூலக அதிகாரியான மலர்விழி இளங்கோவன் “சிங்கப்பூரில் தமிழ் இலக்கிய வளர்ச்சி” என்ற தலைப்பில் எழுதியிருக்கும் கட்டுரையில், மற்றவர் ஆய்வில் இருந்து பிரதி எடுத்ததைக் கூடச் சரியாக செய்யவில்லை.

“1888 இல் மகுதூம் சாயபு என்பவர் ‘வினோத சம்பாஷணை’ என்ற தலைப்பில் சிங்கப்பூரில் முதன் முதலில் சிறுகதைத் தொகுப்பு நூல் ஒன்று வெளியிட்டார். இதுவே சிங்கப்பூரில் தோன்றிய முதல் தமிழ்ச் சிறுகதையாகும். இச்சிறுகதைத் தொகுப்பு வெளிநாட்டு ஊழியர்களுக்கும் சிங்கப்பூரில் வசிக்கும் நிரந்தரவாசிக்கும் இடையே நடைபெறும் கருத்துப் பறிமாற்றங்கள், உரையாடல்கள் ஆகியவற்றைச் சித்திரிக்கின்றன” என்று ஆரம்பித்து, “அக்காலகட்டத்தில் சிங்கப்பூருக்குப் பிழைப்பைத் தேடி வந்த இந்தியர்களின் மனநிலை, புதிய பழக்கவழக்கங்கள், புதிய மொழிகள் ஆகியவற்றைப் பற்றிய அவர்களின் குழப்பங்கள், பயம், எப்படித் தங்கள் வேலையை தக்க வைத்துக் கொள்ள போகிறோம் என்ற அச்சம் போன்றவைகளை இக்கதைகள் விவரிக்கின்றன,” என்று இஷ்டத்துக்கு எழுதிக்கொண்டே போகிறார்.

நூலகத்திலேயே வேலை செய்யும் அவர் ‘சிங்கை நேசனை’ ஒரு தடவை கண்ணால்கூடப் பார்க்காமல், நா. கோவிந்தசாமி எழுதிய கட்டுரையின் கருத்துகளை எடுத்து தமது கற்பனையையும் கலந்து எழுதி இருக்கிறார். விவரம் தெரிந்தவர்களுக்கு இதன் தவறுகள் கண்ணை எரிக்கும். மகதூம் சாயுபு ‘வினோத சம்பாஷணை’ என்ற தலைப்பின் ‘சிங்கை நேசனி’ல் பத்தி போன்ற தொடரைத்தான் எழுதியுள்ளார். அவர் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டதாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை. அந்த காலகட்டத்தில் ஏது நிரந்தரவாசம்? நூலக அதிகாரி சுந்தரி பாலசுப்ரமணியம் சரிபார்ப்பில் எழுதப்பட்டுள்ள இந்தக் ‘ஆய்வுக் கட்டுரை’ நூலகத் தேடலில் இடம்பெற்றிருக்கிறது!

சிவகாமசுந்தரி பாலசுப்ரமணியம் என்பவர் “திரு வை. திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய கதைகள், கட்டுரைகள்” என்ற தலைப்பில் நூலகத் தேடலில் ஒரு விவரப் பட்டியல் குறிப்பைத் தருகிறார். அதில் வை. திருநாவுக்கரசு எழுதியதாக சில ‘கதைகளையும்‘ பட்டியலிடுகிறார்!

“ஒரே ஒரு சிறுகதைதான் எழுதியிருக்கிறேன்” என்று வை. திருநாவுக்கரசுவே கூறியுள்ளார். அதுவும் இளவயதில் தமிழ்நாட்டில் எழுதியது. பிறகு 90களில் தமிழ் முரசு மலர் ஒன்றில் ஒரு சிறுகதை எழுதினார், அதுவும் வை. திருநாவுக்கரசு என்ற பெயரில் அல்ல.

நமக்கு நன்கு தெரிந்த அண்மைக் காலத் தகவல்களே இவ்வளவு தப்பும் தவறுமாக வெளியிடப்படும்போது, நாம் அறிந்திராத தகவல்கள், தேடிப் பிடித்து வாசிக்கவும் வாய்ப்பில்லாதவை எப்படித் தலைகீழாக இருக்குமோ என்பது பெரிய கேள்வி.

சிங்கப்பூரும் மலேசியாவும் இணைந்த மலாயா மற்றும் சிங்கப்பூரில் தமிழ் மொழி, இலக்கியம், தமிழர்கள் பற்றித் தமிழில் எழுதப்பட்டுள்ள பல ஆய்வுகளைப் படித்தால் குழப்பமும் எரிச்சலும் கோபமும்தான் மிஞ்சும். தவறாக ஒருவர் எழுதியதை, அப்படியே பின்பற்றி எழுதுவதால் ஏற்படும் பிரச்சினையை இந்தக் கட்டுரைகளில் காணலாம்.

இவையெல்லாவற்றுக்கும் மேலாக, தமிழகத்தின் வெங்கட் சாமிநாதன், தமிழவன், இலங்கையின் தெளிவத்தை ஜோசப் போன்ற பல உலகறிந்த படைப்பாளர் - விமர்சகர்கள் தங்கள் கையில் கிடைக்கும் ஓரிரு நூல்களை கொண்டு அல்லது யாராவது ஒரு சிங்கப்பூர் படைப்பாளியிடம் பேசிய கருத்துகளை வைத்துக் கொண்டு “சிங்கப்பூர் தமிழ் இலக்கியம்” என்று தங்களது மேதாவிலாசத்தை வெளிப்படுத்த விமர்சனங்களை எழுதும்போதும் “சிங்கப்பூர் தமிழ் இலக்கியம்” என்று சில பிரபலமான எழுத்தாளர்கள் பட்டியிலிட்டு அறிமுகப்படுத்தும்போது, (அதுவும் உலகெங்கும் விரிந்த இணையத்தில்) சிங்கப்பூர் இலக்கியம் குறித்த ஒரு குறுகிய, மொக்கையான பதிவே செய்யப்படுகிறது.

ஆதாரங்களைத் தேடி, உழைத்து ஆய்வுகளைச் செய்திருப்பவர்கள் என்று நான் படித்தவரை அமரர் இரா. தண்டாயுதம், அமரர் வை. திருநாவுக்கரசு, அமரர் நா. கோவிந்தசாமி, இளங்கோவன், மலேசியாவின் மா. ராமையா, திரு பால பாஸ்கரன் போன்று ஒரு சிலரைக் குறிப்பிடலாம். இவர்களது கட்டுரைகளைப் படிக்கும்போதே அதன் ஆழம் புரியும். பல புதிய தகவல்களை இவர்கள் தந்திருப்பார்கள்.

இங்கு சிலவற்றை அடையாளம் காட்டலாம் எனத் தோன்றுகிறது.

*‘சிங்கை நேசனுக்கு’ முன்னர், ‘தங்கை நேசன்’ என்ற பத்திரிகை சிங்கப்பூரில் வெளிவந்தது என்ற தகவலை முதல் முதலில் சொல்லியிருப்பவர் வை. திருநாவுக்கரசு.

ஏறக்குறைய 50 ஆண்டு காலம் சிங்கப்பூர் சமூகத்தில் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியிருக்கும் வை. திருநாவுக்கரசுவும் தமிழ் நாட்டிலிருந்து இளவயதில் சிங்கப்பூரில் குடியேறியவர். அவர் இலக்கியம் படைக்கவில்லை என்றாலும், மொழி, இலக்கிய வளர்ச்சியில் சொல்லத்தக்க பங்கை ஆற்றியுள்ளார். தமிழ் முரசு மூலம் தொடங்கப்பட்ட எழுத்தாளர் பேரவை, இலக்கிய ஆய்வு போன்றவற்றில் ஆரம்பித்து, பின்னாளில் கலாசார அமைச்சு, தமிழ் மொழி பண்பாட்டுக் கழகம் பிறகு மீண்டும் தமிழ் முரசு வழி தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பல வழிகளில் பங்காற்றியுள்ளார். தேசிய நூலகம் தொடங்கப்பட்டபோது, தமிழ் நூல்களை இடம்பெறச் செய்வதில் பேருதவி புரிந்துள்ளார். தமிழ் மொழி பண்பாட்டுக் கழகம் வழி, பாலர்களுக்கான கதை நூல்களை வெளிக்கொண்டு வந்தார். சுந்தரராமசாமியை சிங்கப்பூருக்கு முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் அவர்.

*முனைவர் அ. வீரமணியின் பங்கை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும்.

சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை மூலம் ஆக்கபூர்வமான ஆய்வுகளுக்கு வித்திட்டவர் அவர். இன்று பலரும் ஆதாரமாக எடுத்தாளும் கட்டுரைகள் இந்த ஆய்வரங்கங்களில் படிக்கப்பட்டவை. அக்கட்டுகளை தமிழ் ஆங்கிலம் இருமொழிகளிலும் தவறாமல் நூலாக வெளியிடும் முக்கிய பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 70, 80களில் தமிழ் உணர்வும் தமிழ் குறித்த அக்கறையும் தமிழ்ச் சமூகத்தில் குறிப்பாக இளைய தலைமுறையினரிடம் ஏற்பட இவர் தலைமையேற்ற தமிழ்ப் பேரவை ஆய்வரங்கங்களும் பின்னர் தமிழ் இளையர் மன்றமும் காரணமாக அமைந்தன. முனைவர் அ. வீரமணி சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்து, இங்கேயே பல்கலைக்கழகத்தில் தமிழ் படித்தவர்.

*வளரும் தலைமுறையினரிடம் தமிழ் மொழியில் குறிப்பாக படைப்பிலக்கியத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தியவர்களில் முக்கியமானவர் அமரர் நா. கோவிந்தசாமி.

சிங்கப்பூர் இலக்கியம் என்று குறிப்பிட்டுச் சொல்லத் தக்க சிறுகதைகள், வானொலி நாடகங்களை எழுதியிருப்பதுடன், தமிழ் இலக்கியத்தை, குறிப்பாக தற்கால இலக்கியத்தை சிங்கப்பூர் இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தி, பல படைப்பாளர்களை ஊக்குவித்து வளர்த்தவர் சிங்கப்பூரரான நா. கோவிந்தசாமி. படைப்பிலக்கியவாதியாக இலக்கிய தாகமுள்ள இளையர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு இலக்கியத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளார். சிங்கப்பூரின் தேசிய கல்விக் கழக விரிவுரையாளாரக இளம் தமிழாசிரியர்களுக்கு சிறந்த தமிழ் இலக்கியங்களை அறிமுகப்படுத்தி, வாசிப்பையும் படைப்பார்வத்தையும் வளர்த்தார்.

*கவிதை, சிறுகதை, நாவல் போன்றவற்றைக் காட்டிலும் சிங்கப்பூரின் மேடை, வானொலி, தொலைக்காட்சி நாடகங்கள் சமூகத்தையும் சமூகப் பிரச்சினைகளும் அதிகம் பிரதிபலிக்கின்றன.
பி. கிருஷ்ணனின் ‘அடுக்குவீட்டு அண்ணாசாமி’ வானொலி நாடகம் சிங்கப்பூர் தமிழர் வாழ்வின் ஒரு காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடி

*சமூக உணர்வுடன் கலைத்திறனிலும் சிறந்து, உலக அளவில் சிங்கப்பூர் படைப்புக்கு அடையாளம் தேடித் தந்தவை இளங்கோவனின் ஊடாடி, தலாக், பிளஷ் போன்ற நாடகங்கள். கலைக்கான அவர் ஆய்வும் உழைப்பும் நம்பகத்தன்மையும் பிரமிப்பும் ஊட்டக்கூடியவை.

ஆக, ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில் இந்த நாட்டின் வாழ்வில் உண்மையான அக்கறையுயோடும் பொறுப்புணர்வோடும் எழுதப்படுபவற்றை “சிங்கப்பூர் படைப்பிலக்கியம்” எனலாம். அதை எந்தப் படைப்பாளியும் தர முடியும்.

இங்கு எனது ஆதங்கம் யார் சிங்கை இலக்கியத்தை படைக்கிறார்கள் என்பதல்ல. மூன்றாம் தலைமுறைத் தமிழர்களின் படைப்பிலக்கியப் போக்கு தொடர்பானது.

சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளில் ஒன்றாக சம உரிமையுடம் தமிழ் மொழி உள்ளது என்பதும், தாய் மொழிக் கொள்கையைக் கட்டிக்காப்பதில் அரசாங்கம் மிக உறுதியாக இருக்கிறது என்பதும் சிறிதும் மறுக்க முடியாத உண்மை. அரசாங்க ஆதரவுடன் தமிழ்ப் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி அனைத்தும் செயல்படுகிறது.

தேசிய கலைகள் மன்றத்தின் $10,000 தங்க முனைப் பேனா பரிசு, புத்தக மேம்பாட்டு மன்றத்தின் சிறந்த நூலுக்கான $10,000 விருது, எழுத்தாளர் கழகம் நடத்தும் சிறுகதை, கட்டுரைப் போட்டிகள் மற்றும் சமூக அமைப்புகள், பள்ளிகள் நடத்தும் போட்டிகளும் வழங்கும் விருதுகளும் இருக்கவே செய்கின்றன.

இது தவிர நூல்கள் வெளியிடவும் நிகழ்ச்சிகள் நடத்தவும் நாடகங்களை மேடையேற்றவும் அரசாங்கமும் அறநிறுவனங்களும் கலை நிதியங்களும் உதவுகின்றன.

நூல் வெளியீடுகள் தொடர்ந்து நடக்கின்றன. நூலகங்களில் ஏராளமான தமிழ் நூல்களும் சஞ்சிகைகளும் உள்ளன.

இலக்கிய நிகழ்ச்சிகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. தமிழ் மொழி மாதம் என்ற பெயரில் ஆண்டில் ஒரு மாதம் முழுவதும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மொழி வளர்ச்சிக்கான ஏராளமான அமைப்புகள் உள்ளன. அந்த அமைப்புகளுக்கு ஆதரவளிப்பதற்கே ‘வளர் தமிழ் இயக்கம்’ என்ற அமைப்பும் உள்ளது.

இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை தேசிய அளவில் ‘எழுத்தாளர் விழா‘ நடத்தப்படுகிறது. தவிர இடையிடையே பல பிரபலமான தமிழ் எழுத்தாளர்களும் வந்து உரைகள், கலந்துரையாடல்களை நடத்திப் போகிறார்கள்.

பணத்தைக் கொட்டி இன்னும் பலவற்றை அரசாங்கமும் சமூக ஆதரவாளர்களும் செய்யத்தான் முற்ப‌டுகிறார்க‌ள்.

என்றாலும் இன்றைய சிங்கைத் தமிழ் இளையர்களின் ஆர்வம் தமிழ் இலக்கியம் பக்கம் திரும்புவதில்லை. அதற்கு அந்த இளையர்கள்கூறும் காரணங்கள் பல.

அதில் முக்கியமானது தமிழ்க் கல்வி.

பள்ளிகளில் ஆசிரியர்களாக முன்வந்து நல்ல இலக்கியங்களை அறிமுகப்படுத்தினாலன்றி, பாடத்திட்டம் மூலம் மாணவர்கள் தமிழார்வத்தைப் பெற முடியாது.

புகுமுக வகுப்பு மாணவர்களுக்கான ‘தமிழ் மொழி இலக்கிய’ கருத்தரங்கு வழி, இளையர்களிடம் தமிழ் மொழியில் ஈடுபாட்டை வளர்த்த யீசூன் தொடக்கக் கல்லூரித் தமிழாசிரியார் வீ.ஆர்.பி.மாணிக்கம்; மாணவர்களிடம் நல்ல நூல்களைத் தேடிப்படிக்கும் வாசிப்பு ஆர்வத்தை ஏற்படுத்தியதுடன் தொடக்கக்கல்லூரி, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக நாடகப் போட்டியைத் தொடர்ந்து நடத்தி, நாடகம் எழுதும், நடிக்கும் ஆர்வத்தையும் வளர்த்த, இங்கு சில ஆண்டு காலம் நன்யாங் தொடக்கக் கல்லூரியில் தமிழாசிரியராப் பணியாற்றிய தமிழ் நாட்டைச் சேர்ந்த திருநாவுக்கரசு; பல்கலைக் கழக மாணவர்களுக்கு உள்ளூர் இலக்கியத்தை ஓரளவு அறிமுகப்படுத்தி வரும் முனைவர் சுப. திண்ணப்பனின் அண்மைய பணிகள் போன்றவற்றை இங்கு குறிப்பிடலாம்.

ஒரு மொழி, அதுவும் தமிழ் மொழியில் ஆர்வம் ஏற்படவேண்டுமென்றால் தமிழின் சுவையையும் அழகையும் அவர்கள் ருசிக்க வேண்டும். அதற்கான வாய்ப்பே இல்லாமல், எளிமை எளிமை என்று பாடத்திட்டத்தில் இலக்கியச் சுவையே இல்லாததாகி விட்டது.

எனக்குத் தெரிந்தே 20 ஆண்டுகளுக்கும் மேலாக இன்னமும் தொடக்கக் கல்லூரி (11, 12ம் வகுப்பு ) தமிழ் இலக்கிய நூல்களாக மு. வரதராசனின் நூலும் தமிழ் நாட்டின் அய்க்கணின் சிறுகதைகளுமே உள்ளன. மற்ற எந்த மொழியிலும் இல்லாத ஒரு ‘தனிச் சிறப்பு’ இது.

புத்திலக்கியங்களைப் புகுத்த மனத்தடைகள் இருந்தால் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களை இப்படி விடாப்பிடியாக பாடநூல்களாக வைத்திருந்தாலும் அர்த்தமும் நியாயமும் இருக்கும். ஆனால் மு.வா-வின் நாவலிலும் அய்க்கணின் கதைகளிலும் அப்படியென்ன காலம் கடந்த பொருளும் மொழியும் இருக்கிறதென்று தெரியவில்லை.

பெரும்பாலும் தமிழ் நூல்கள் வாசிக்கும் பழக்கமில்லாத சிங்கப்பூர்ச் சூழலில் இளையர்களிடம் தமிழ் ஆர்வத்தை பள்ளிகள்தான் ஏற்படுத்த முடியும். ஆனால் ஏனோ தமிழ்ப் பாடத்திட்டக் குழுவினர் இதில் போதுமான கவனம் செலுத்தாதுள்ளனர்.

இரண்டாவது தமிழ் அமைப்புகள்.

ஒரு வட்டத்துக்குள்ளேயே ஒருவரை ஒருவர் பாராட்டி, விருது கொடுத்து, பொன்னாடை போர்த்தி, மாலை அணிவிப்பதுடன் ஆடல், பாடலுடன் கலைநிகழ்ச்சிகளை நடத்துவதும் கூட்டம் கூட்டும் பேச்சுகளை நடத்துவதுமே அமைப்புகளின் முக்கிய பணியாக உள்ளது. யார் நடத்திய நிகழ்ச்சி, எத்தனை பேர் வந்தார்கள் என்பதே முக்கியம். வந்தவர்கள் யாராக இருந்தலாம் சரி. தூங்க இடமில்லாமல் அலையும் ஒருவர் வந்து, கோப்பி குடித்து, தூங்கிவிட்டுப் போனாலும் பரவாயில்லை.

ஒரு காலத்தில் முழு மூச்சாக இலக்கியம் வளர்த்த, பத்திரிகை, வானொலியில் இப்போது படைப்பிலக்கியத்துக்கு இடமே இல்லாமல் போய்விட்டது.

இன்று, சிங்கப்பூர் மக்களை, இளையர்களைக் கவர்பவையாகவும் பேசப்படுவையாகவும் உள்ளவை உள்ளூர் தொலைக்காட்சி நாடகங்கள் மட்டுமே. உரையாடல்களும் விமர்சனங்களும் தமிழ்ப் படங்களையும் விஜய் டிவி தொடர்களையும் அடுத்து, உள்ளூர் நாடகங்களைச் சுற்றியே உள்ளன. வீட்டில், வெளியில், தொலைபேசியில், பேஸ் புக்கில் எந்தப் பேச்சிலும் இவை இடம்பெறுகின்றன.

அவை மிகச் சிறந்த படைப்புகளாக இல்லாவிட்டாலும், உள்ளூர் கலைஞர்கள் நடிக்கும் இந்தத் தொடர்களின் கதைகளும் சிங்கப்பூரின் வாழ்வைப் பிரதிபலிப்பதாகவும் உள்ளது அதற்கு முக்கிய காரணம். தொலைக்காட்சி மக்களை எளிதாகச் சென்றடைவதும் மற்றொரு காரணம்.

இணையம், வெளிநாட்டுத் தொலைக்காட்சிகள், திரைப்படங்களுக்கு நடுவே உள்ளூர் தொடர்களால் மக்களை ஈர்க்க முடியும்போது, படைப்புகளாலும் முடியும் என்றே தோன்றுகிறது.

முதலில் சிறந்த உள்ளூர் படைப்புகள் அதிகம் உருவாக வேண்டும். சிங்கப்பூர் நூல்கள் என்ற பட்டியல் பெரிதாக இருக்கலாம். எனினும் நூலாக வெளிவருவதெல்லாம் இலக்கியம் அல்ல. ஒருவேளை திரு இளங்கோவன் குறிப்பிடுவதைப் போல, “இந்நாட்டு வாழ்க்கையின் அம்சங்களைத் தவிர வேறெந்த வெளித்தொடர்புகளின் சுமையாலும் ஆகர்ஷிக்கப்படாத இளைய தலைமுறையினர் பிரதிநிதிகளால்தான் படைக்கப்படக்கூடும்,” (சிங்கப்பூரில் தமிழ்ப் படைப்புகளின் போக்கு 1965-1981).

சிங்கப்பூர் தமிழர் -தமிழ்ச் சமூகம் குறித்து இளைய தலைமுறையினர் மேற்கொண்டிருக்கும் சில ஆய்வுக் கட்டுரைகளைப் படிக்கும் இது சாத்தியம் என்றே தோன்றுகிறது. வசந்தகுமாரி நாயர் (சிங்கப்பூர் பல்கலைக்கழகம், 1972), திணேஷ் சத்தீஷன் (The Heritage Journal, 2009) இருவரது ஆய்வுகளையும் இங்கு எடுத்துக் காட்டலாம்.

இன்று பள்ளிப் போட்டிகளைத் தவிர்த்து தமிழில் எழுதும் இளையர்கள் இல்லை என்றே சொல்லாம். ஆங்கிலத்திலும் விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள்தான் எழுதுகிறார்கள். இவர்கள் ஆர்வமும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெரியாது.

பணமும் பரிசுகளும் மட்டுமே இன்றைய இளையர்கள் எழுதத் தூண்டாது. அங்கீகாரம், ஊக்குவிப்பு, வழிகாட்டுதல் தேவை.

வாசிப்பும் விவாதிப்பும் அலசல்களும் தளமும் இல்லாமல் படைப்பிலக்கியம் வளர சாத்தியமே இல்லை.

இங்கே படைப்பிலக்கியங்களுக்கு இணையத்தைத் தவிர வேறு தளங்கள் இல்லை. வாசிப்பவர் இல்லை. ஆரோக்கியமான விமர்சனங்களை முன் வைப்பவர் இல்லை. உட்கார்ந்து இலக்கியம் பேசுபவரும் இல்லை.

முனைவர் இரா. தண்டாயுதம் (ஓர் இலக்கிய ஆய்வு - தற்காலம், 1985) குறிப்பிடுவதைப் போல, “இலக்கியத்தை உருவாக்கி வளர்க்கவும் பண்பாட்டு மரபினைப் போற்றிப் பாதுகாக்கவும் சிங்கப்பூரின் தமிழ் மக்கட்தொகையினர் போதுமானவர்கள். செய்யவேண்டியதெல்லாம், இந்தச் சிறுபான்மையினரை சிந்தித்துச் செயலாற்றும் ஆக்ககரமான எண்ணிக்கையாக மாற்றுவதே.”

அவர் குறிப்பிடுவதைப்போல, சிங்கப்பூரின் மிகவேக பொருளியல் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் தமிழ் மொழி இலக்கியமும் கலைகளும் பங்கை ஆற்றும்போதே சமுதாய முன்னேற்றம் நாட்டு முன்னேற்றத்துடன் இணைந்து செல்ல முடியும்.

“ஒரு மொழி பண்பாட்டுச் சூழலில் இயங்குவதைக் காட்டிலும் பலமொழி - பண்பாட்டுச் சூழலில் இயங்கும்போது இலக்கியத்தின் பங்கும் பொறுப்பும் அதிகமாகவே உள்ளது” (இரா.தண்டாயுதம், 1985).

சிங்கப்பூரில் குடியேறிகள், பல மொழிகள் பேசுபவர்கள் அதிகரிக்கவே செய்வார்கள். 2020க்குள் மக்கள் தொகையை 6.5 மில்லியனாக்கும் இலக்கில் அரசாங்கம் முனைப்பாக உள்ளது. தமிழில் மட்டுமின்றி, மற்ற இந்திய மொழிகளிலும் வெளிநாட்டுக் குடியேறிகள் கலையும் இலக்கியமும் படைக்கவே போகிறார்கள்.

சிங்கப்பூரில் ஹிந்தி பேசாதவர்களிடமும் ஹிந்தி மொழியில் ஆர்வம் அதிகரித்து வருவதாக, அண்மையில் ஹிந்தி நிலையங்கள் தினக் கொண்டாட்டத்தில் பேசிய கல்வி அமைச்சர் டியோ சீ ஹியன் குறிப்பிட்டுள்ளார். ஹிந்தி மொழிப் பயன்பாட்டை ஊக்குவிக்க, வாசிப்புத் திட்டங்கள், இலக்கிய விழாக்கள், புதுமையான மொழி நடவடிக்கைகள் போன்றவற்றையும் ஹிந்தி சங்கம் ஏற்பாடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். உலக அளவில் அடையாளம் காணப்படும் சிங்கப்பூர் ‘இந்தியர்’ வாழ்வைப் பிரதிபலிக்கும் இலக்கியம் ஹிந்தியில் எழுதப்படலாம்.

எது இலக்கியம் என்பதை காலம் சொல்லும்.

எது இலக்கியம், யார் எழுதுவது இலக்கியம் என்ற விவாதங்களையும் ஆய்வுகளையும் விடுத்து, இலக்கியம் வாசிக்கும் ஆர்வத்தை வளர்ப்பதில் இலக்கிய ஆர்வலர்கள் ஈடுபட்டால் அது பெரும் பணியாக இருக்கும்.

தெரிந்தோ தெரியாமலோ அந்தப் பெரியவர்கள் சொன்ன மரங்கள் போல சிங்கை தமிழ் இலக்கியமும் கால மழையில் சாய்ந்து விடாமல், வேரும் விழுதும் விட்டு வளரும்.

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768