|
“சிங்கப்பரின் தமிழ்க் கவிதைச் சூழல் 90களுக்குப்பிறகு” என்னும் எனது
கட்டுரைக்கு எதிர்வினை என்ற பெயரில் பல அக்கப்போர்கள் வந்துள்ளன. “சூன்யா”
என்னும் பெயரில் கொச்சைத் தமிழில் பண்பற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தித்
தனிமனிதத் தாக்குதலில் ஒருவர் ஈடுபட்டிருப்பதைக் கண்டேன். படித்தவர்கள்
பண்பற்ற வார்த்தைகளைப் பயன்படுத்த மாட்டார்கள் (படிப்பறிவு என்பது
எழுத்தறிவு அன்று). இப்படிப்பட்ட சூன்யங்களுக்குப் பதில் எழுதுவது
தரக்குறைவான வேலை. ஆகவே சூன்யா சூன்யமாகவே இருந்துவிட்டுப் போகட்டும்!
மேலும் சிலர் ஓட்டை ஆங்கிலத்திலும் கொச்சைத் தமிழிலும் எழுதிய
பதில்களுக்கு விளக்கம் எழுதுவது வீண் வேலை! அவர்கள் அப்படி எழுதியே
புளகாங்கிதம் அடையட்டும்.
இந்திரஜித் ‘இரண்டு வார்த்தை’ என்னும் தலைப்பில் கிண்டல் செய்து
எழுதியிருப்பதை நோக்க அவர் திருத்தப்பணி செய்து எழுதவேண்டும். இதனை நாகராஜ்
மன்னிக்கவும்... இந்திரஜித்தே ஒப்புக்கொண்டுவிட்டார். நாகராஜ் கட்டுரை
எழுதுவதைவிட காமெராவைத் தூக்கிக் கொண்டு ஷூட்டிங் செய்வதே மேல்! இந்திரஜித்
நன்றி விசுவாசத்திற்குப் பெயர் போனவர். தனது கிண்டல்களை வெளியிடும்
உயிரோசையின் (உயிர்மையின் உரிமையாளர்) மனுஷ்யபுத்திரனையும் தனது நண்பர்
அரவிந்தனையும் எடிட்டராக சிபாரிசு செய்து விளம்பரப்படுத்தியுள்ளார்.
நாகராஜன்! மன்னிக்கவும் தாங்கள் கவிதைப்பயிர் செழிக்கத் தண்ணீர் ஊற்றி
வளர்த்த கதையைப் புதிய குடியேறிகளின் வரிசையில் சொல்லவில்லை என்பதற்காக
வருந்த வேண்டாம். சிங்கப்பூர்க் கவிதைச் சூழல் எனக்குத் தெரியாது என்றும்
சொல்ல வேண்டாம். என்னுடைய கட்டுரை 90களுக்குப் பிறகு உள்ள கவிதைச்சூழல்
பற்றியது. நாகராஜ் நீங்கள் 79, 80 என 90க்கு முந்திய கதையைச்
சொல்கிறீர்கள். கவிதைப்பக்கத்துக்கு 18 மாதம் பொறுப்பெடுத்துக்கொண்டதும்,
தாங்கள் கவிதை எழுதப் பழகிய பழைய கதைகளும் நான் அறியாதவை அல்ல,
சந்தர்ப்பம் பார்த்து எழுதுவேன்! இதற்காக அபத்தமான சொல் ஆராய்ச்சியில்
ஈடுபடவேண்டாம். என்னுடைய புத்தகங்ளைப் பார்த்தால் தங்களுக்கு என்ன
தெரியப்போகிறது! தங்களைப் போன்ற ‘அறிவுஜீவிகள்’ படிக்கவேண்டாமா?
புத்தகத்தைப் பார்த்த மாத்திரத்தில் சிந்தனைகளை எடைபோடும் மாயவித்தையைக்
கற்றுக்கொண்டு மலேசியாவிலிருந்து இங்குக் குடியேறியதன் மர்மம் இப்போது
புரிகிறது.
உண்மையைச் சொன்னால் நெஞ்சில் குத்துவது என்று வியாக்கியானம் செய்யும்
நாகராஜ்... இல்லை இல்லை இந்திரஜித்! அமிருத்தீன் என்ற பெயர் தவறாகத்
தட்டச்சு செய்யப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொண்டால் சரி!
கட்டுரைத் தலைப்பை விட்டுவிட்டுத் ‘தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போல’
வேறு விஷயங்களைப் பேசுவதால் நாகராஜ் நீங்கள் கரையோரம் காத்து நிற்க
வேண்டியவர்தான்!.
பாலுமணிமாறனின் கேள்விகளுக்குரிய பதில்கள்:
ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவருக்கும் (இங்கே படைப்பினைப் பற்றி) கருத்துத்
தெரிவிக்கும் உரிமை உள்ளது. அந்த அடிப்படையில் கவிதை நூல்களைப் பற்றிய எனது
கருத்தினைத் தெரிவித்திருந்தேன். தங்களின் கவிதைகளைப் பாராட்டவில்லை
என்பதற்காக நான் உருப்படியான விமர்சகர் இல்லை என்று கூறவோ ‘என்னை
விமர்சிக்காதே’ என்று தடுக்கவோ உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?
பாலுமணிமாறன் அவர்களே!
ஆய்வு என்பதில் உண்மை நாட்டம், உண்மை இருக்க வேண்டும். நான் ‘வாசிப்புத்
தீவிரம் கொண்டவர்கள்’ என்று குறிப்பிட்டது தங்களையல்ல, நிஜமாகவே நிறையப்
படிப்பவர்களைத் தான். சிறந்த வாசகர் என்று சிறப்பிக்கப்பட்டவர்களைத் தான்.
சிறந்த வாசகர் என்று சிறப்பிக்கப்பட்டவர்களை - தேசிய நூலகத்தால்
பாராட்டப்பட்டவர்களை நான் நன்கறிவேன். தங்கள் துறைசார்ந்த நூல்களை
மட்டுமின்றித் தமிழ் நூல்களைப் படிப்பவர்களில் அதிகமானோர் நிரந்தரவாசிகள்
என்று குறிப்பிட்டதில் தவறு ஏதுமில்லை. பாராட்ட வேண்டியதைப் பாராட்டுவது
தவறா? ஆய்வு என்பது பாராட்ட வேண்டியதைப் பாராட்டுவதையும் குறை
கண்டவிடத்துக் கூசாமல் சொல்வதையும் உள்ளடக்கியதுதான். அதற்கு பெயர்
குழப்பமன்று; ஆய்வு நெறிப்படி உண்மையைக் கூறுபவர் குழப்பவாதியும் இல்லை.
ஆய்வைப் பற்றித் தங்களுக்கு என்ன தெரியும்? உங்களைப் போன்ற பலரும்
பாராட்டுமொழிகளை எதிர்பார்த்து ஏங்குகிறார்கள். குறை சொன்னால் குறைகளைத்
திருத்திக் கொண்டு வளர நினைப்பதில்லை.
“புதிய குடியேறிகள் நாங்கள் என்று உங்களைப் பிரகடனப்படுத்தவேண்டும்” என்று
நான் சொல்லவில்லை. குடியேறி என்பதை Immigrant என்று புரிந்து கொண்டால் ஏன்
இந்த வெற்றுக்கூச்சல்? என் கட்டுரைக்கு எதிர்வினையாற்றியவர்கள் பலரும்
குடியேறியை (வந்தேறி) என்று நான் எழுதியதாகக் கற்பனை செய்து கொண்டு
வம்புமடம் கூட்டி அக்கப்போர் செய்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. “இணையத்தில்
நிறைய எழுதுகிறார்கள்” என்ற உண்மை நிலவரத்தை (Fact) எழுதினால் பேதலித்த
மனத்தின் வெற்றுப்புலம்பல்கள் எனக் “கூட்டத்தில் கூடி நின்று கூடிப்
பிதற்றுவது” நீங்கள் தான்! அவரவர்க்கு எழுத்துரிமை உள்ளது எனக்குத்
தெரியாதா? “கள்ளத்தோணி ஏறி வந்தவர்களை வந்தேறி என்று கூறுவார்கள். நாங்கள்
அப்படியா வந்தோம்?” என உங்கள் நண்பர் குழாம் கூவுகிறது. குடியேறியவர்கள்
எப்படி வந்தனர் என்பது என் கட்டுரைக்குத் தேவையற்ற விஷயம்.
கவிதை எழுதிப் பணக்காரர் ஆனோர் பட்டியலைக் கேட்கும் பாலு மணிமாறன் அவர்களே!
பரிசு பெறும் நோக்குடன் கவிதை எழுதுபவர்கள் பணமோ பரிசோ வழங்கப்படாவிட்டால்
தொடர்ந்து எழுதுவார்களா? என்பதே என் உள்நோக்கம். ஒருவர் ஒரு கருத்தைக்
கூறினால் அதன் உள்நோக்கம் என்ன? ஏன் அக்கருத்து முன்வைக்கப்பட்டது
என்றெல்லாம் யோசிக்க மாட்டீர்களா?
ஏதற்காகத் தாங்கள் இந்தியாவிலிருந்து இங்கு வந்தீர்கள்? வளமான வாழ்க்கை
அதாவது பொருளாதார சுபிட்சம் தானே? இஃது உண்மைதானே? உண்மையைச் சொன்னால்
கவிதை எழுதும் மனப்போக்கை இழிவுபடுத்துவதாகப் புலம்பியுள்ளீர்கள். உண்மையை
மற்றவர்கள் சொன்னால் கவிதை பொங்கிப் பெருக்கெடுக்கும் உள்ளம் தடைப்படுமா?
வேடிக்கைதான்! எதையும் தாங்கும் இதயமில்லாத, துணிச்சலில்லாத எழுத்தாளன்
எழுதுவதால் என்ன பயன் விளையப்போகிறது?
புதுமைப்பித்தன் இலக்கியச் சர்ச்சை 1951-52 என்ற நூலைப் புரட்டிப்
பார்த்துவிட்டு என் மீது பாய்ந்திருக்கலாம்! (உங்கள் நண்பர் குழாத்தின்
கருத்துப்படிக் கேள்விக்கணைகளைத் தொடுத்திருக்கலாம்) வெறும் மேலட்டையைப்
பார்த்துவிட்டுக் கேள்வி கேட்கும் தங்கள் அறியாமையை என்னென்பது!
புதுமைப்பித்தன் அமெரிக்காவில் பிறக்கவில்லை. உண்மைதான். அவர் எழுதிய
‘விபரீத ஆசை’ என்ற கதை இலக்கியச் சர்ச்சையாக உருவாக்கியது; அன்றைய
மலாயாவில் எழுத்தாளர்கள் உருவாக வழிவகுத்தது போன்ற செய்திகள் அந்த நூலில்
ஆராயப்பட்டுள்ளன. அன்றைய எழுத்துலகச் சூழலை வரலாற்றுக்கண்ணோட்டத்தின்
அடிப்படையில் அலசி ஆராய்ந்த ஆய்வு நூல் அது! “கழுதை அறியுமா கர்ப்பூரவாசனை”
என்ற பழமொழி தான் என் நினைவுக்கு வருகிறது. வெறும் பட்டயப்படிப்பைப் படித்த
உங்களுக்கு ஆய்வின் அருமைப்பாடு எங்கே தெரியப்போகிறது?.
நீங்கள் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் எனக்குச் சிங்கப்பூர் மீது ஆழமான
பற்றுத்தான்! அதனால் தான் சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் பற்றிய நூல்களைத்
தொடர்ந்து வெளியிட்டு வருகிறேன். நான் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு
வந்த குடியேறிதான். யார் இல்லையென்றார்கள்?
என்னுடைய முனைவர் பட்ட ஆய்வேடு சிங்கப்பூர்ச் சூழலை எப்படி மேம்படுத்தும்
என்று கேட்டிருந்தீர்கள். அந்நூலை 25 ஆண்டுகட்குப் பின் பெரும்பொருட்
செலவில் நான் வெளியிடுவதற்கான காரணத்தை “என்னுரையில்” கூறியிருந்தேனே!
படிக்காமல் மீண்டும் கேள்வி கேட்டால் என்ன செய்வது? தமிழ் ஆய்வுலகில் தவறான
தகவல்கள்; கருத்துத்திருட்டு; மேலோட்டமான ஆய்வுகள் போன்ற குறைபாடுகள்
நிரம்ப உள்ளன. இவை தவிர்க்கப்பட, தடுக்கப்பட வேண்டும் என்னும் நோக்கத்துடன்
அந்நூல் வெளியீடு கண்டது. பதிப்புரிமைச் சட்டத்தைப்பற்றி அறியாத தமிழ்
ஆய்வாளர்கள் இங்கும் நிரம்ப உள்ளனர். இப்படிப்பட்ட அவலநிலையை
மாற்றவேண்டியது யார்?
காசுக்காக நூல் வெளியீடு செய்வதாக என் முனைவர் பட்ட நூல் வெளியீடு பற்றி
அவதூறாக எழுதியிருந்தீர்கள். நான் நூல் வெளியிட்டில் நூலை உருவாக்க, நூல்
தொடர்பான ஆய்வுகளுக்குச் செலவிட்ட தொகை எல்லாம் சேர்த்தால் எத்தனையோ
லட்சங்களில் போய் நிற்கும். நான் நூல் வெளியீடுகளின் மூலம் நீங்கள்
நினைப்பது போல் பெரும்பணம் சம்பாதிக்கவில்லை. உங்களைப்போல் நன்கொடை
(sponsors) தேடி நான் அலையவில்லை. எனது சொந்த உழைப்பில் தான் நூல்களை
எழுதுகிறேன். வெளியிடுகிறேன்.
அடுத்தவர் முயற்சி கனிந்துவரும் சமயத்தில் அதர்மமாக நுழைந்து
குறுக்குச்சால் ஓட்டித் தாங்கள் புகழ் பெற நினைக்கும் தங்களின்
வண்டவாளத்தைப் பகிரங்கப்படுத்த வேண்டிய சூழலை உருவாக்கிவிட்டீர்கள்.
என்னுடைய முனைவர் பட்ட ஆய்வை (தங்கள் கருத்துப்படிச் சிங்கப்பூர் சூழலை
மேம்படுத்தாத நூலை) தங்கமீன் பதிப்பாக வெளியீடாகக் கொண்டுவருவதற்குத்
தாங்கள் தூது அனுப்பிய கதையை, சிபாரிசு வைத்த கதையைத் தாங்கள்
மறந்திருக்கலாம். ஆனால் நான் மறக்கவில்லை.
நூல் வெளியீடு என்பது மலேசியா சிங்கப்பூரில் சமூகச்செல்வாக்கு மிக்க ஒருவர்
தலைமையிலோ அல்லது அரசியல் பிரபலங்களின் ஆதரவிலோ நடப்பது வழக்கம். அந்த
வழக்கப்படி நான் நூல் வெளியீடு நடத்தினேன். ஒவ்வொரு நூலும் என்னுடைய
உழைப்பு பெரும்பணம் போன்றவற்றை எவ்வளவு எடுத்துக்கொண்டுள்ளன என்பதை என்
நெருங்கிய நண்பர்கள் அறிவார்கள். தாங்கள் கூறியபடி என்னுடைய லட்சியம்
நூல்கள் மூலம் பணம் சம்பாதிப்பது அல்ல.
ஜெயந்திசங்கர் பற்றிய சொல்லாடல் வலிந்து புகுத்தப்படவிலை. அவரது
மொழிபெயர்ப்புக் கவிதைகள் பற்றிய கட்டுரையை நான் சமீபத்தில் நடந்த செம்மொழி
மாநாட்டில் வாசித்தேன். ஆகவே அவர் பெயர் இடம் பெற்றது.
தாங்கள் வெட்கப்படும் அளவுக்கு பாரதிராஜா தங்கள் கவிதைகளைப் புகழ்ந்தார்
என்பதால் நானும் பாராட்டுவேன்; மற்றவர்களும் பாராட்டுவர் என்று நீங்கள்
எதிர்பார்த்தால் அது உங்கள் தவறு. நீங்கள் வரவழைத்த அவர் உங்களைப்
பாராட்டத்தான் செய்வார். அப்படிச் செய்யாவிட்டால் அவர் வெற்றுப்புலம்பல்
புலம்பினார்; உருப்படியாகச் செய்யவில்லை என்று நிந்தாஸ்துதி பாடுவீர்களே.
அதற்காகக் கூட அவர் பாராட்டியிருக்கலாம். அவ்வாறு அவர் செய்வது அவருடைய
சொந்தக்கருத்து. “மற்றவர் பாராட்டுகிறார் நீயும் பாராட்டு” என்று ஒருவரைக்
கட்டுப்படுத்த உங்களுக்கு யார் உரிமை தந்தார்?
என்னுடைய கட்டுரை அவசரத்தில் அள்ளித் தெளிக்கப்பட்ட கோலம் என்றீர்கள்.
என்னுடைய முழுக்கட்டுரையும் எனது நூலில் இடம்பெறும். கையெழுத்துப்
பிரதியில் 40 பக்கங்களைத் தாண்டிவிட்டதால் நெப்போலியன், மா. அன்பழகன்
போன்றோர் பற்றிய செய்திகள் வெட்டப்பட்டன. நெப்போலியனின் நூல் என் கைக்குக்
கிடைக்கவில்லை. மா.அன்பழகனின் கவிதைக்குச் சான்று காட்டவில்லை என்றாலும்
அவர் மற்றவர்களின் கவிதை பற்றிக் கூறியவற்றை இணைத்துள்ளேனே
கவனிக்கவில்லையா? எனக்குச் சொந்த விருப்பு வெறுப்பு ஏதுமில்லை.
கேள்விக்கணை என்ற பெயரால் குதர்க்கமாகக் கேள்வி கேட்பதை இத்துடன்
நிறுத்திக்கொள்ளுங்கள். நவீன கவிதை எழுதுவோர் புதிய சொற்பிரயோகங்களை
உருவாக்குகின்றனர் என நான் எழுதியதற்கு லஷ்மி என்ற பெயரைப் பயன்படுத்தும்
உரிமையை வழங்கியது யார்? எனப் பைத்தியக்காரத்தனமாய்க் கேள்வி
கேட்டிருக்கிறீர்கள். உங்களின் கேள்வியை நினைத்தால் சிரிப்புத்தான்
வருகிறது. என் பெற்றோர் எனக்கிட்ட பெயரை நான் பயன்படுத்துவதற்கும் ‘காமுகி’
என்ற சொல்லைத் தாங்கள் உருவாக்கியதற்கும் என்ன தொடர்பு?
அசட்டுப்பிசட்டென்று உளற வேண்டாமே? இந்த கேள்வியிருந்து நீங்கள் தான்
புத்திபேதலித்தவர் என்பது நன்றாகவே புரிகிறது!
பாண்டித்துரையின் எதிர்வினைக்குச் சில விளக்கங்கள்:
1. நான் எனது கட்டுரையின் கையெழுத்துப்பிரதியைத் தான் வல்லினத்துக்கு
அனுப்பினேன். நான் தட்டச்சு செய்யவில்லை. தட்டச்சுப் பிழைகளுக்கு நான்
பொறுப்பல்ல. தமிழை நன்கு கற்ற நான் ஒரு முறைக்கு இருமுறை படித்துப்
பார்த்துவிட்டுத்தான் அனுப்புவது வழக்கம். உங்கள் எழுத்தில் பிழை இருந்தது
என்பதை நான் சொன்னதற்குப் பதிலாக நானும் பிழைபட எழுதுகிறேன் என்று
விதண்டாவாதம் செய்யவேண்டாம்.
2. ஜெயந்திசங்கர் பெயர் அடிபட்டதற்குக் காரணம் அவரது மொழிபெயர்ப்புக்
கவிதைகள். (செம்மொழி மாநாட்டுக் கட்டுரையில் இக்கவிதைகள் பற்றிய விமர்சனம்
இடம் பெற்றது)
3. தங்கமுனை விருது பெற்றோர் பட்டியலில் என்ன தவறு கண்டீர்கள்? தேசியக்
கலைகள் மன்ற வெளியீடுகளை ஆதாரமாகக் கொண்டவை அத்தகவல்கள்.
4. வாசகர்வட்டத்தின் பொழுதுகளைக் ‘களவாடிக் கொண்டிருப்பதாகக்’ குற்றம்
சுமத்துகிறீர்கள்! களவாடுதல் உமக்குக் கைவந்த கலை போலும்! ரமேஷ்
சுப்பிரமணியத்தின் அனுமதியின் பேரில் நான் அதை நடத்தினேன். உம்முடைய
வலைப்பூ நண்பர்களும் நீரும் கூடத்தான் வாசகர் வட்டப் பொழுதுகளைக்
களவாடுகிறீர்கள்! நீர் அடிக்கடி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யச் சொல்லிக்
கேட்டது மறந்து போனதா?
5. எந்த எழுத்தாளனையும் யாரும் நிர்ப்பந்திக்க முடியாது. அகத்தைப் பற்றிப்
பாடம் கேட்டபின் ‘அகம்பிரம்மாஸ்மி’ எனக் கவிதை படைக்க உங்களைப் போன்றோர்
தயாராக இருப்பது உங்களின் புரிதல் எவ்வளவு மொண்ணையானது என்பதைத் தெளிவாகவே
காட்டுகிறது. ரமேஷ் சுப்பிரமணியத்தின் கவிதைகள் குறித்த பகுதி என்னுடைய
நூலில் இடம்பெறும். எத்தனை நாளைக்குப் பாடம் கேட்டபின்னே கவிதை
படைப்பீர்கள்?
6. ரமேஷிடம் எதிர்பார்த்துப் பெறும் அளவுக்கு எனக்கு எந்தத் தேவையும்
ஏற்படவில்லை. ரமேஷ் சுப்பிரமணியம் சென்னையில் நடந்த என் நூல்
வெளியீட்டுக்கு வரவில்லை என்ற கோபத்தில் நான் அவரைப்பற்றிக் குறை எழுதியதாக
கற்பனை செய்துள்ளீர்கள். ரமேஷ் சுப்பிரமணியத்திற்கு நான் அழைப்புக்கூட
அனுப்பவில்லையே! அவரது முகவரி கூட எனக்கு தெரியாது. அவரது தற்கால இலக்கிய
ஆர்வத்திற்கும், என் முனைவர் பட்ட ஆய்வுக்கும் எவ்விதத் தொடர்பும்
இல்லாததால் நான் அந்த அழையா விருந்தாளி பற்றி எண்ணிப்பார்க்கவில்லை.
7. மேலும் ரமேஷ் சுப்பிரமணியம், ஜெயந்திசங்கர் ஆகியோர் மீது நான்
காழ்ப்புக் கொண்டுள்ளதாக எழுதியிருப்பது அபத்தம்! யாரைப் பார்த்து யார்
காழ்ப்புக் கொண்டிருக்கிறார்கள் என்பது பாண்டித்துரையின் கற்பனாசக்திக்கு
மட்டுமே எட்டும். அவர்கள் மீது நான் காழ்ப்புக் கொண்டுள்ளதாகக் குற்றம்
சாட்டும் பாண்டித்துரைக்கு நான் நினைவுபடுத்த விரும்புவது ஒன்று. நீங்கள்
சொன்ன இருவர் மீதும் வயிற்றெரிச்சல் படுவதாக மாயையில் உளரவேண்டாம்.
எனக்கு யார் மீதும் பொறாமை இல்லை. குறையொன்றும் இல்லாத வாழ்க்கை எனக்கு
வாய்த்திருக்கிறது. ஜெயந்திசங்கரும் குடியேறிகளுள் ஒருவர் என்பதால்
நீங்கள் அவருக்குக் காவடி தூக்கலாம்; அது பற்றி எனக்குக் கவலையில்லை.
கல்லூரியில் படிக்கும் காலத்தில் தேர்வுசமயத்தில் பாண்டித்துரைக்கு ‘பிட்’
கொண்டு போன அனுபவம் இன்னும் மறக்க முடியவில்லை போலும்! பாவம் ‘பிட்’
சேர்த்து நான் கட்டுரையை வல்லினத்துக்கு அனுப்பியுள்ளதாகப் ‘பரிகாசம்’
செய்கிறார். மௌனம், வல்லினம் இதழ்களின் ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டதற்காக
அனுப்பப்பட்ட கட்டுரை அது. (இதன் முழுவடிவமும் என் நூலில்
இடம்பெற்றுள்ளது.)
மாதங்கியின் ‘கதை சொல்ல வரும் குழந்தை’ பற்றியும், விமர்சனம் குறித்த அவரது
மனநிலை பற்றியும் நான் அவருடன் உரையாடியது பாண்டித்துரைக்குத் தெரியாது.
நான் என் கருத்தை உறுதிப்படுத்த அதனை மேற்கோளாகக் காட்டினேன். ஆய்வில்
மேற்கோள் காட்டுவது தவறன்று எனப் பாண்டித்துரை புரிந்து கொண்டால் சரி.
திரு. வெங்கட்சாமிநாதன் நான் மதிக்கும் ஆளுமைகளில் ஒருவர். அவரை அனாவசியமாக
(என் கட்டுரைக்குச் சற்றும் பொருத்தமில்லாத வகையில்) வம்புக்கு
இழுத்திருப்பது என்ன நியாயம்! உம்முடைய கவிதைப்புத்தகத்துக்கு அணிந்துரையோ
அல்லது நீங்கள், உங்கள் நண்பர்களுடன் இணைந்து நடத்தும் ‘நாம்’ இதழுக்குப்
பத்திக் கட்டுரையோ எழுதவில்லை என்ற காழ்ப்பில் தான் இதனை
எழுதியிருக்கிறீர்கள் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
கவிஞர் மா. அன்பழகனின் நூல்களை (புதிய) நான் மிக அண்மையில்தான் வாங்கினேன்.
கவிதை, இலக்கியம் பற்றிய உம்முடைய அக்கறை, சிங்கப்பூர் பற்றிய பக்தியுணர்வு
ஆகியவை எல்லாம் ‘நுணலும் தன் வாயால் கெடுவது போலவே’ உமது எதிர்வினையில்
இடம்பெற்றுவிட்டன. சிங்கப்பூரைத் துதிபாடினால் ஒரு வெள்ளி சம்பளத்தில்
உயரும் என்ற நப்பாசை உமக்கும் இருந்திருக்கிறது என்பது இப்போது
தெரியவருகிறது.
இறுதியில் “நிராகரிக்கப்பட வேண்டிய விமர்சனம்” என்று தலைப்பிட்ட உமது
எதிர்வினையும் நடுநிலையாளர்களால் நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்று தான்! ஆனால்
‘காவடி தூக்கும்’ மனநிலை கொண்டோர் கருத்துச் சுதந்திரம் பற்றி உணர்ந்து
கொள்ள வேண்டும். என் கருத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று மன்றாட வேண்டிய
தேவையும் எனக்கில்லை. இன்றைய உலகம் உண்மைகளை நிராகரித்து விட்டு போலிகளைத்
தானே போற்றிக்கொண்டிருக்கிறது. இதில் பாண்டித்துரையும் அவர்தம்
நண்பர்குழாமும் விதிவிலக்கா என்ன?
ஜெயந்திசங்கர் பாண்டித்துரையின் எதிர்வினை குறித்து எழுதியுள்ள பதிலுக்குச்
சில விளக்கங்கள்:
கவிமாலை, கவிச்சோலையில் பங்குபெறுபவர்கள் தமிழ்ப்பற்று, நட்புவட்ட விரிவு
போன்ற பல காரணங்களுக்காக அல்லது காரணம் ஏதுமின்றியும் செல்லட்டும்.
என்னுடைய கட்டுரை அவர்கள் உணவுக்காக வருகிறார்கள்; நட்புக்காக வருகிறார்கள்
என்றெல்லாம் கூறவில்லை. அவர்கள் ஒருவரும் குரல்விடுவதில்லை. (அதென்ன குரல்
விடுவது? உங்கள் பாஷை உங்களுக்கே வெளிச்சம்) அதனால் எந்தத் திறனுமற்றவர்கள்
என்று முடிவெடுத்ததாகத் தாங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள்
புரிதல் “போகாத ஊருக்கு வழிசொல்ல முயல்வது”. என்னுடைய கட்டுரை அவர்களின்
கவிதைத் திறன் பற்றி மட்டுமே பேசுவது. ஆனால் தாங்கள் ‘கூஜா தூக்குவது’
‘காவடி தூக்குவது’ எனப் பல அற்புதமான (அற்பமான) திறன்களைக்
கண்டுபிடித்திருக்கிறீர்கள்! வாழ்க!
“அதென்ன சிறியதும் பெரியதுமான வயிற்றெரிச்சல்”. ஜெயந்தி சங்கர்
உங்களிடம் சொல்லிக்கொள்ள ஒன்றுள்ளது. ஒரு படைப்பாளிக்கான முழு
சுதந்திரத்துடன் என் கருத்துகளை நான் முன் வைக்கிறேன். உங்கள்
சுதந்திரம் குறித்து நான் இவ்வேளையில் பேசுவது அநாகரிகம் என அடக்கி
வாசிக்கிறேன்.
தாங்கள் ஒருவர்தான் சிங்கப்பூர்த்தமிழ் இலக்கியத்தைத் தூணாக நின்று
தாங்குகிறீர்கள் என்ற மாயையில் உழன்று ஆங்காங்கே அதனைப் பதிவு செய்தும்
வருகிறீர்கள். நான் குரலை உயர்த்திவிட்டதாகக் கருதினால் அதற்குக் காரணம்
நீங்கள் ஆழ்ந்திருக்கும் மாயையே! தன் முதுகு தனக்குத் தெரியாது என்பது போல
உங்களிடம் உள்ள பலவீனத்தை உங்களைச் சுற்றியிருக்கும் மாயை காரணமாக
மற்றவர்கள் மீது பழியாகச் சுமத்தாதீர்கள். உங்கள் புனைவுகளைக் கதைகளோடு
நிறுத்திக் கொண்டால் நலம் பயக்கும்.
ஒரு படைப்பைக் குறித்துச் சொல்லும் போது படைப்பாளியை மறந்துவிடச் சொல்லி,
அந்தப் படைப்பை (ருசிப்பதற்கும் ரசிப்பதற்கும் வேறுபாடு தெரியாமல்)
ருசிக்கச் சொல்லி படைப்பை ஆஹா! ஓஹோ! என்று ஒரே தூக்காக தூக்கி விமர்சனம்
செய்யும் கலையை இனிமேல் ஜெயந்திசங்கர் தனது ‘தூக்குத்தூக்கிகளுக்கும்’
‘காவடி தூக்கிகளுக்கும்’ கற்றுத்தரட்டும். அவர் இன்னும் பழம் பஞ்சாங்கமாக
இருப்பது நகைப்பிற்குரியது! இன்று திறனாய்வுத்துறை புதிய போக்கில்
செல்கிறது. தமிழ்ப்பற்றாளர்கள் மத்தியில் புதிய போக்குகள் தெரியாமல் போவது
இயல்பே! ஒரு படைப்பின் மூலம் அப்படைப்பாளியை ஆராயும் Biographical
criticism பற்றிக் கேள்விப்பட்டதில்லையா? நீங்களும் உங்கள் நண்பர் குழாமும்
பாராட்டுமுறைத் திறனாய்விலேயே ஊறித் திளையுங்கள்! நடுநிலை தவறாத
திறனாய்வாளன் பாராட்டுவதோடு குற்றங்களையும் தான் கூறுவான். இந்த உண்மை கூட
“முதிர்ச்சியடைந்த” (சிறுபிள்ளைத்தனமில்லாத) எழுத்தாளரான ஜெயந்திக்கு
தெரியாமல் போனது என்ன மாயையோ?
கே. பாலமுருகனின் எதிர்வினை குறித்து!
பாலமுருகன்! உங்களால் ஆங்கிலத்தைப் பிழையின்றி எழுத முடியாது என நீங்களே
என்னிடம் கூறியுள்ளீர்கள்; போகட்டும்! உமக்குத் தமிழையும் பிழையின்றி
எழுதத் தெரியாது என்பது இப்போது பலர் அறிந்த உண்மையாகிவிட்டதே! உமக்குள்
எரியும் பல பிசாசுகளை என்ன செய்ய உத்தேசம்!
பின்நவீனத்துவம், சர்ரியலிசம் போன்ற கோட்பாடுகளின் விளக்கங்களை முழுமையாகப்
புரிந்துகொண்டீர்களா? உங்களுக்குள்; ஆணவப்பேய், கர்வமெனும் பிசாசு ஆகியவை
இருப்பதால் தலைகொழுத்துப் பேயாட்டம் ஆடுகிறீர்கள்; உங்களை நான் என்
கட்டுரையில் “என் கருத்துக்களை வாந்தி எடுத்திருப்பதாக” எழுதியதைத்
தாங்கிக்கொள்ள முடியாமல் சம்பந்தமில்லாமல் ‘கேட்பார் பேச்சுக் கேட்டு’
எழுதியிருக்கிறீர்கள். இப்போது உங்களுக்கு எனச் ‘சொந்தச் சரக்கு’
இல்லாமல் போய்விட்டதே! ஐயோ! பாவம்! மதில் மேல் பூனை ஆகிவிட்டதே உம் நிலை!
இலக்கியப்பிரதி என்றால் TEXT என்று பொருள். இதனை நூல்களுக்குச் சொல்வது
(பின்நவீனத்தின்படி) உண்டு. நூலுக்கும் நூலாசிரியருக்கும் வேறுபாடு (உம்
எதிர்வினை பத்தி 5, வரி 2) தெரியாமல் உங்களை ஆட்டிப்படைக்கும் அறியாமைப்
பேயை என்ன செய்யப் போகிறீர்கள்?
ஜெயந்திசங்கர் பெற்ற நல்ல மதிப்பு, பாராட்டு என்பவை எல்லாம் நீங்கள்
அறிந்தவரையில் உங்கள் கிணற்றுத்தவளைப் பார்வையில் உயர்வாக இருக்கலாம். அதை
நீங்களே கொண்டாடுங்கள். அவரைப் பற்றிய - அவரது எழுத்துக்களைப் பற்றிய
மாற்றுப் பார்வைகளும் உள்ளன என்பதை நீங்கள் எப்படி அறிவீர்கள்? நிறைய
எழுதினால் நிறைவான எழுத்தாகுமா? புனைகதைக்கென ஆராய்ச்சி எதுவும் செய்து
மெனக்கெடாமல் “என் கதையை எழுது” என்று யார்யாரோ தொலைபேசியில் கூப்பிட்டுக்
கதை தானம் செய்ய அதை எழுதுவதைப்பார்த்து என்ன வயிற்றெரிச்சல் யாருக்கு
வரப்போகிறது? நெருப்பு எரியும் போது புகை வரும் என்றுதான் நாமறிவோம். ஆனால்
உலகமஹா அறிவுஜீவியான பாலமுருகன் “ஒரு புகை எரிந்து வெளிப்பட்டதன்” (பத்தி
7, 19ஆம் வரி) மர்மத்தைக் கண்டுபிடித்து விட்டார். அவருக்கு “இளம்
கண்டுபிடிப்பாளர்” விருது கிடைக்க யாராவது அவர் பெயரைச் சிபாரிசு
செய்யலாம்! பாலமுருகன் குறிப்பிட்ட ஒப்பந்தப்படி ஜெயந்திசங்கரே அதற்குப்
பொருத்தமானவர்!
மற்றவர் பத்திரிகை நடத்தினால் தானும் அப்படியே பத்திரிகை நடத்துவது;
மற்றவர் கலை இலக்கிய விழா நடத்த நினைத்தால் தானும் அதையே செய்ய நினைப்பது
என மற்றவர் சொல்வதைச் சொல்லும், செய்யும் கிளிப்பிள்ளை தான் பாலமுருகன்!
இதனை மலேசியாவில் பலரும் நன்கு அறிவார்கள்.
கருத்துத்திருட்டு என்பது என்ன? என்று சரியாகக்கூடப் புரிந்து கொள்ளாமல்
விதண்டாவாதம் செய்துள்ளீர்கள் என்பதற்குப் பாரதியையும்
புதுமைப்பித்தனையும் சான்று காட்டியுள்ளதே போதுமானது. ஓய்விருக்கும் போது
கருத்துத்திருட்டு பற்றிய புத்தகங்களைப் படிப்பது நல்லது.
எனது புத்தகங்களின் காப்புரிமை பற்றிக் கிண்டல் செய்துள்ளீர்கள்! உம்முடைய
புத்தகங்களின் காப்புரிமை பற்றிப் பேச எவ்வளவு நேரமாகும்? என் கட்டுரையை
ஒட்டிய விஷயங்களுக்கு மட்டுமே என்னால் பதில் கூற முடியும். கட்டுரையைப்
பற்றிக் கேள்விகளை முன்வைக்காமல் தனிமனிதக் காழ்ப்பு, ஜால்ரா போடும்
மனப்பாங்கு ஆகியவற்றில் உளறிக் கொட்டினால் அதற்குப் பதில் எப்படிக் கூற
முடியும்?
உம்முடைய ஓரிரு கேள்விகள் கூடப் பாலுமணிமாறன் கேட்ட கேள்விகளின்
எதிரொலிதான். ஆகவே பாலுமணிமாறனுக்கு எழுதிய விளக்கங்களைப் படிக்கவும்.
|
|