|
நிழல்வெளி
இங்கே இப்பொழுது கூட
என்னால் ஓர் இடத்தைப் பார்க்க முடிகிறது
இந்நிழலில்
ஒரு சுதந்திரமான இடம்
இந்நிழல்
விற்பனைக்கல்ல
கடல்கூட
சமயங்களில் நிழலடிக்கும்
காலம் கூடத்தான்
நிழலின் போர்களெல்லாம்
விளையாட்டுக்கள்:
ஒரு நிழலும் தவறி
இன்னொன்றின் வெளிச்சத்தில் நிற்பதில்லை
நிழலில் வாழ்பவர்களை
கொல்வது கடினம்
கொஞ்ச நேரம்
நிழல்விட்டு வெளி வந்தேன்
கொஞ்ச நேரம்
ஒளியை அசலாய்
பார்க்க விரும்புவோர்
நிழலுக்குள் சென்று
ஓய்வெடுக்க வேண்டும்
சூரியனை விடப்
பிரகாசமான
நிழல்:
சுதந்திரத்தின் குளிர்ந்த நிழல்
முழுதாய் அந்நிழலில்
என் நிழல் மறைகிறது
நிழலில்
இப்போது கூட இடமிருக்கிறது
ஹான்ஸ் மேக்னஸ் என்சென்ஸ் பெர்கர் (1929)
பள்ளிப் பருவத்தில் அமெரிக்கர்களுக்கு பகுதி நேர மொழி பெயர்ப்பாளராகவும்,
மதுபானக்கடை உதவியாளராகவும் பணியாற்றி கல்வி கற்ற ஹான்ஸ், 1949 முதல் 1954
வரை பன்னாட்டு மொழிகளில் பயிற்சி பெற்றதோடு, மொழியியல், தத்துவம் போன்ற
துறைகளில் ஆர்வங்காட்டி புகழ்பெற்ற 'சோர்போன்' பல்கலைக்கழகத்தில் பட்டம்
பெற்றார். பத்து வருடங்களை நோர்வே நாட்டில் கழித்தார்.
இலக்கிய - அரசியல் - சமூகவியல் விமர்சனங்களோடு, கவிதை, கட்டுரை, வானொலி
நாடகங்கள், மொழி பெயர்ப்பு நூல்கள் என இவரது படைப்புகள் நீள்கின்றன.
அரசியல், சமூகவியல் விமர்சன ஏடான 'Kursburch'ன் ஆசிரியராகவும்
பணியாற்றியிருக்கிறார்.
|
|