சிட்டுக்குருவியே... என் சிட்டுக்குருவியே...!
இப்போதெல்லாம்...
முற்றத்துப்பூமரங்களும் குப்பைகூளங்களை
உற்பத்திப்பதேயில்லை.
ஷம்பூ மணக்கும் குளியலறைத் தரைவிளிம்புகளில்
அழுக்குப் பாசிகளோ வளருவதேயில்லை.
துவைக்காத துணிகள்கூட
சலவைத்தூள் விளம்பரத்தில் மடமடக்கும்
அழுத்திமடித்த ஆடைகளாய்....
அலம்பாத பாத்திரங்களும் பளபளப்பில்
நட்சத்திரங்களை வென்றபடி...
இப்போதெல்லாம்.....
சமைக்காத சட்டிபானைக்குள்ளும்
கறிவேப்பிலையும் ஏலமும் கமகமக்கும் கறிசோறு
ஈரத்துணியுரசாத தரையோடுகளிலும்
படிவதாயில்லை தூசுத்துணிக்கை
இப்போதெல்லாம்.....
புதிதாய் அணிந்தும் அள்ளிப்போட்டுக் கொண்டுமான
மாலைநேரப் பயணங்களிலெல்லாம்
மனசு இஸ்டப்படுவதேயில்லை
மேசை இழுப்பறைக்குள் வாரப்பத்திரிகையின்
கவிதைப்பக்கங்களை நறுக்கிப்போடத் தோணுவதுமில்லை
இணையத்தில்கூட புதிதாயொன்றும்
இணைப்பதாயுமில்லை
சின்னத் திரைகளுக்குள்
மூக்குச்சிந்திக்கூட வெகுநாளாச்சு.
வழிபாடும் அது சார்ந்தவையும் தவிர்ந்து
முழுநாளின் தேடலுமே உன்
ஒற்றைப்பைக்குள்ளேயே ஒடுங்கிப்போனதா..?
சிட்டுக்குருவியே... சிட்டுக்குருவியே...
வெண்பஞ்சு மேகங்களை இறகாயணிந்தே என்
மனசு முழுக்கச் சிறகடிக்குமென்
சின்னக்குருவியே... கொஞ்சம் வாயேன்.
இன்றைய உன் வகுப்பறைக்குள் கடைசிமணி
எப்போது ஒலிக்குமென சொல்லிவிட்டுப் போயேன்.
கடைசி இருக்கை
மொழிபெயர்க்க முடியாத கிறுக்கல்களோடும்
சிறு உடைசல்களோடுமாய்
எல்லா வகுப்பறைகளுக்குள்ளும்
உட்கார்ந்திருக்கிறது
ஒரு கடைசி இருக்கை.
எண்ணெய் வரண்டும் செம்மை கலைந்துமான
பரட்டைத் தலையோடும்……
சொட்டுநீலம் சீராய் பரவிடாத
சுருக்கம் கலைந்திடாத சீருடையோடும்…
நிறமுதிர்ந்தும்பளபளப்பு கரைந்ததுமான ஷுக்களோடும்….
பாதிசோகமும் மீதிமுரட்டுப் பிடிவாதமுங் கலந்த
முகமணிந்தபடியுமாய்….
எப்போதுமேயதில் புதைந்திருக்கிறான்
அக்கதிரையின் சொந்தக்காரன்.
இதுவரை அணையாதெரிந்த
இனவன்முறையின் ஏதாவதொரு கிளைத்தீயிலோ
இல்லையேல் வேறெத் தழலிலுமோ
பொசுங்கிப்போன தம் வாழ்வெண்ணியே
பேதலித்துக் கிடக்கிறாளோ
அவனது விதவைத்தாய்.
கூரையில் மிதக்கும்
நிறைவேறாக் கனவுகள் யாவையுமே
ஒரேயொரு அதட்டலுக்குள்
புதைத்தவாறே பதகளிப்போடு
கிளரத் தொடங்குவான்
ஸிப்பறுந்த தனது புத்தகப்பையை
குடியிருப்பிலிருந்தும்
மிகத்தூரமாய் முளைத்திருக்குமொரு
எல்லைப்புறக்குடிசைபோலவே
எல்லா செயற்பாடுகளிலும்
தன் சகபாடிகளை விட்டும்
ஒதுங்கியே நிற்கிறான் அல்லது
ஒதுக்கப் பட்டிருக்கிறானவன்.
இவ்வாறே
ஒவ்வோர் பாடவேளையிலும்
பின்னூட்டலுக்கும் விசேட பரிவுக்குமான
தன்னிலைப்பாட்டினை
மருளும் விழிகளினூடே
ஒழுகவிட்டபடி
அன்பையும் கருணையையும்
அவாவி நிற்குமோர்
பிஞ்சு இதயத்தை
எப்போதுமே சுமந்தபடி
எல்லா வகுப்பறைக்குள்ளும்
உட்ககார்ந்திருக்கிறது
ஒரு கடைசி இருக்கை
கிழிந்த சிப்புடனோ அல்லது
பொத்தான் அறுந்த சட்டையுடனோ.
வேலியோரத்து ஒற்றைப்பனை
பாட்டன்வழியாய் வந்தமர்ந்திருக்கிறதென்
வேலியோரமாய் ஒற்றைப்பனை.
இன்னொரு கதியாலாகவும்
பழம் நுங்கு கிழங்கு மட்டையுமென
பயனதிகந் தந்தாலுமே
பயிரென விதைத்தவைகளுக்கோ
இல்லையேல்
பரம்பரைக்குமாய் கட்டி முடித்திருக்குமென்
இல்லத்திற்குமோ வில்லங்கமாக விடக்கூடாதென்றே
புழங்கும் சகலவித வெட்டிகொண்டும்
வெட்டிக்கொண்டேயிருக்கிறேன்
விரிக்குமதன் குருத்துகள் ஒவ்வொன்றாய்
எனினும் காற்றுவெளி தாண்டியும்
விரவிக்கிடக்குமதன் வேர்மயிர்களோ
இன்னமும்
துழாவிக் கொண்டேயிருக்கிறது மண்ணை
தன் உயிர்ப்பிற்கான ஈரலிப்பை வேண்டியபடி.
|