|
அம்மம்மா எனது அன்புக்குரியவர். அவவின் அன்பு அளவுகடந்தது. அம்மம்மாவின்
பாலுண்ணிதான் எனக்கு மிகவும் பிடித்தமானது. அது அம்மம்மாவின் முதுகின் இடது
பக்க சள்ளைக்கு மேலால் திரண்டு அழகான ஒரு சின்ன கொட்டப்பாக்கு அளவில்
இருக்கும்.
அம்மம்மா பாவாடைகட்டி குளிக்கும் போதும் குறுக்கை கட்டிக் கொண்டிருக்கும்
போதும் அது வெளியில் தெரிந்து வேடிக்கை காட்டும் “விடு.... சும்மா அங்காலை
போ... விடு” என்று கலைத்தாலும் கைகளால் மெதுவாக அந்தப் பாலுண்ணியை
விரல்களால் நசிப்பதிலும் அதனை மெதுவாக உறுட்டுவதிலும் நான் அடையும்
மகிழ்ச்சியே தனி. சில நேரம் பாலுண்ணியை வாயில் வைத்து “பப்பா” குடிப்பேன்
அம்மம்மா ஏசுவா திட்டுவா ஆனால் எனக்கு பாலுண்ணி என்றால் தனி ஆகர்ஷிப்பு.
அம்மம்மாவில் இருப்பதனால் அதிலும் எனக்கு தனிப்பிரியம்.
தங்கச்சியிலும் பார்க்க அம்மம்மா என்னோடு தான் சரியான விருப்பம்.
புளியமரத்தடிக் கடைக்கு போனாலும் ஒட்டுசுட்டான் பக்கம் போனாலும் கள்ளத்
தீனி வாங்கி வருவா. அம்மம்மா எப்பொழுதும் சேலைகட்டி இருப்பா. சேலை
முந்தானையை முன்பக்கமாக மடியாக்கி அந்த மடியுக்குள்ளை பிஸ்கட், ரொபி,
றோஸ்பாண், பணிஸ், சிறிய சொக்லட் என்று கட்டிக்கொண்டு வந்து தருவா. அம்மம்மா
எங்காவது பயணம் போய்விட்டு வந்தாவென்றால் வீட்டு ஜிம்மிக்கு நாக்கால்
தண்ணிவடிகிறமாதிரி எனக்கும் வாயில் தண்ணி ஊறும். அம்மம்மாவின் மடிக்குள்ளை
ஏதாவது கிடக்கும். அம்மம்மாவின் சேலை நூல் சேலையாக இருக்கும். அந்தச்
சேலையின் மணம் எனக்கு மிகவும் பிடிக்கும். பிடிக்காத ஒரு விசயம் அம்மம்மா
காலை அகட்டி நின்று கொண்டு மூத்திரம் பெய்வது.
“மனிதி” என்று தான் அம்மய்யா அம்மம்மாவை கூப்பிடுவார். செருமல் சத்தம் தான்
அவர்கள் இருவருக்கும் அழைப்பு மொழியாக இருக்கும். அம்மம்மாவை ஏதாவது
தேவைக்கு ஒரு செருமல். அம்மம்மாவுக்கு விளங்கும் அம்மய்யா என்ன சைக்கினை
செய்கிறார் என்று.
விறகெடுக்க ஒவ்வொரு நாளும் பின்னேரம் அம்மம்மாவோடு போவேன். அலகரை பக்கம்
நல்ல வீர விறகு இருக்கு. பல கதைகளை அம்மம்மா எனக்குச் சொல்லுவா. சின்ன
வண்டில் எனக்கு விருப்பம். சைக்கிள் “றிம்” ஐ தடிக்குள் செலுத்தி வண்டில்
ஓடுவோம் டயர் வண்டில், நொங்கு, கோம்பை வண்டில், குரும்பட்டிதேர் ஈக்கிள்
குத்தி அழகாய் இருக்கும்.
எங்கள் இருவரின் கதைகள், சில நேரம் பழைய கதைகளாக இருக்கும். அம்மாவின்
காதல் விவகாரம். ஐயா முரண்டு பிடித்து அம்மாவை கலியாணம் செய்து கொண்டது
என்று எங்களது கதை காடு வரை நீளும்.
மாமா எப்பொழுதும் பொல்லாதவர் போலவே எங்களுக்கு காண்பிக்கப்பட்டார்.
குடிப்பவர் மாமியோடு உறவு மேம்பாடு இல்லாதவர். ஓட்டுத் தொழிற்சாலையில் வேலை
செய்பவர் என்று மட்டுமே எங்களுக்குத் தெரியும். அம்மாவையும் ஐயாவையும்
பிரிப்பதற்கு செய்வினை செய்தவர் முகமாத்து செய்வினை அது. அம்மம்மாவை
எப்பொழுதும் ஒரு எதிரியைப் போலவே அம்மா பார்ப்பா. இருவருக்கும் திரிவெடி
மாதிரி ஏதாவது ஒரு உரசலில் பத்திவிடும். அந்த சண்டையில் அர்த்தம் இருக்காது
பழைய கோபம் ஒன்றின் தொடர்ச்சியாய் இருக்கும் பழைய கோபம் என்றால் சில நேரம்
இருபது வருடப் பழையதாக இருக்கும்.
அம்மம்மா சுருட்டுப்பத்துவா. என்ன சுருட்டு என்று “பிரான்ட்” இல்லை.
கிடைக்கிறதை பத்துவா. அம்மய்யா மண்டான் சுருட்டுத்தான் பத்துவார்.
கோடாப்போட்ட சுருட்டு நல்லாய் இருக்கும் என்று அம்மய்யாவும் முன் வீட்டு
செல்லையாஅண்ணரும் கதைப்பார்கள். ஒரேயடியாக அம்மம்மா சுருட்டைப் பத்தி
முடிக்கமாட்டா. அம்மய்யாவும் அப்படித்தான். குறையன் சுருட்டை வீட்டு
வளையில் செருகி வைத்திருப்பா. கால் வாசி சுருட்டை வைத்து விட்டு அம்மம்மா
தேடுவா. சுருட்டு காணாமல் போயிருக்கும்.
குறையன் சுருட்டுகளை சேர்த்து எடுத்து வயல் கொட்டிலுக்கு கொண்டுபோய் நூல்
கழட்டி மறைத்து பத்துவதே தனி சுகம். சுருட்டின் காரம் சுகமாக இருக்கும்.
சிகரட் குடிப்பதில் கொள்ளை ஆசை. அதன் மணம் மிகவும் பிடிக்கும்.
அந்தக்காலத்தில் பீக்கொக் சிகரட் வாங்கி களவாகப் குடித்தோம். கண்டால்
அம்மா தோலை உரிப்பா. காவிளாய் வேரினால் அடித்தால் அடையாளம் அடுத்த
நாளுக்கும் இருக்கும்.
நெடுங்கேணிப் பக்கம் இருந்துவரும் பஸ் ஒன்று எங்களது வீட்டுக்கு முன்னால்
வந்து நின்றது. வேலங்குளம் போன அம்மம்மா ஒரு பெரிய சாக்கு கட்டோடு வந்தா.
பஸ்ஸில் இருந்து இறக்கும் போது கடகட என்று சத்தம் என்னவாக இருக்கும்.
சாறக்கட்டோடு ஓடிவந்து சாக்கை தூக்கிக் கொண்டு வந்து அவிழ்த்துப்
பார்த்தால் அதுக்குள் ஒரு குட்டி வண்டிலின் பாகங்கள். உடனடியாக எடுத்து
பொருத்தினால் வண்டில் தயார். உச்சபட்ச மகிழ்ச்சி எனக்கு. ஆசை ஆசையாய் ஒரு
வண்டில் கிடைத்துவிட்டது.
வருத்தம் வந்தால் அம்மம்மா. காச்சல் வந்தால் அம்மம்மா. அம்மம்மாவைக்
கட்டிப்பிடித்தபடி படுத்தால் தான் உடம்பு உழைவு எடுபடும். எனக்காக அம்மம்மா
வாழ்ந்திருக்கிறா என் சுக துக்கங்களில் எல்லாம் அவ பங்கெடுத்திருக்கிறா.
அம்மாவுக்கும் அம்மம்மாவுக்குமான உறவு திடீர் திடீரென்று அறுபடும் பின்னர்
கொஞ்ச நாட்களில் ஒட்டுப்படும்.
ஒரு சண்டையில் அம்மா அழுதா. கேவிக்கேவி அழுதா. சண்டை பெரிதாகி
விட்டிருந்தது. பொறுமை, விட்டுக்கொடுப்பு, உதவியாய் இருத்தல் என்ற
ஒன்றுக்குமே இருவருக்கும் அர்த்தம் தெரியாது. அம்மாவும் சாறிதான் கட்டுவா.
அன்று சாறி முந்தானையை முகத்தில் மூடி கேவிக் கேவி அழுதா.
ஒட்டுசுட்டானுக்கு சைக்கிளில் கூட்டிக்கொண்டு போகச் சொல்லி சொன்னா அம்மா.
பக்கத்து வீட்டு சைக்கிளில் கூட்டிக்கொண்டு போனேன். மாணிக்கப்பிள்ளையார்
கோவிலுக்கு போய் கனநேரம் அம்மா அழுதா. ஆனால் மாணிக்கப்பிள்ளையார்
அவர்களுடைய சண்டையை நிறுத்தி விடவில்லை. சண்டை தொடர்ந்து கொண்டே இருந்தது.
புளியங்குளத்தில் கொலனி காணிகளை அரசாங்கம் கொடுக்கும் போது ஐந்து ஏக்கர்
குளத்துத் தரையை தெரிவு செய்தவர் அம்மய்யா. அது ஒரு ஊர் ஆவதற்கு
அந்தக்கிராம மக்களின் அர்ப்பணிப்பு பெரியது. காணிகளை காடு வெட்டி
களனியாக்கினார்கள். அந்தக்காணிக்கு அம்மய்யாவின் பங்களிப்புக்கு சமமாக
அம்மம்மாவின் பங்கும் இருந்திருக்கிறது. “நீ வேர்ப்பகுதியை தூக்கினால்
மரத்தின்ரை நுனியை நான் தூக்கி பாடுபட்டிருக்கிறன்” அம்மம்மா ஒரு முறை
சண்டையில் அம்மய்யாவுக்குச் சொன்னா.
புளியங்குளத்தில அம்மம்மாவும் நானும் குளிக்கப்போவோம். குளிக்கப்போனால் என்
கவனம் முழுக்க பாலுண்ணியில் தான் இருக்கும் “முதலை வந்திடும்
ஆழத்துக்குப்போகாதை, சேறு, வழுக்கும்” என்று அம்மம்மா எப்பொழுதும்
சொல்லிக்கொண்டே இருப்பா.
அம்மம்மாவை யாரோ கிண்டி விட்டிருக்கினம். காணி அம்மய்யாவுக்கு பின்பு உரிமை
அம்மம்மாவுக்கு அதுக்கு பின்னுரிமை அம்மாவுக்கு அதுக்கு பின்னுரிமை
தங்கச்சிக்கு அம்மம்மா சொன்னா “வயல்காணியிலை என்ரை பங்கை பிரிக்கப்போறன்”.
அம்மய்யா கண்ணை மூடினாப்பிறகு ஏற்பட்ட குடும்பப் பிளவு இது தான். காணியைத்
தானே கேக்கிறா குடுக்கிறது தானே. அம்மம்மா மிக நல்லவா.
அம்மய்யா சாக முதல் ஒரு நாள் அம்மம்மா சொன்னவா “கொம்மாக்கு தெரியாம காணி
உறுதியை ஒருக்கா ரங்குப்பெட்டிக்கை இருந்து எடுத்துக் கொண்டு வந்து தா”
என்று அம்மா முள்ளியவளைக்குப் போனாப் பிறகு காணி உறுதியைக் கொண்டு வந்து
குடுத்தேன். தெரிஞ்சால் தோலுரிபட்டிருக்கும். அம்மம்மா சொன்னா செய்தேன்.
அடி விழுந்தாலும் பரவாயில்லை.
ரங்குப்பெட்டி தான் வீட்டில் பாதுகாப்பான பொக்கிஷம் மற்றது அம்மய்யாவின்
ஒரு மரப்பெட்டி. அதற்குள் மூன்று நாலுமுழம் மூன்று சால்வை. காசுப்பை, ஒரு
வேட்டி என்பன இருக்கும். அம்மய்யா எளிமையாளவர். அழகாக ஒரு குடும்பி
கட்டியிருப்பார். எனக்கு பள்ளிக்கூடத்தில் பட்டப்பெயர் அம்மய்யா.
ரங்குப்பெட்டிக்குள் கலியாண வீட்டுக்கு உடுக்கும் சேலைகள் எங்களது நல்ல
உடுப்புகள் இருக்கும் ரங்குப்பெட்டிக்குள்யாரும் கை வைப்பது கிடையாது.
ஆனால் அதனைத் திறக்க எனக்கு ஆசை அம்மா அதற்குள் பூச்சி முட்டைகளைப் போட்டு
வைத்திருப்பா. பூச்சி முட்டை வாசம் எனக்கு விருப்பம் ரங்குப் பெட்டிக்குள்
இருந்து ஒரு சேலை எழுத்துக் கட்டினால் அம்மாவின் சேலையை அடிக்கடி
கொஞ்சியபடி இருப்பேன்.
அம்மம்மாவுக்கு ஒரு அக்கா இருந்தா அவ வலு துப்பரவு. காலையில் எழும்பி
குளித்து முழுகி வெள்ளைச் சேலை கட்டி பார்ப்பதற்கு அழகாகவும் லட்சணமாகவும்
இருந்தா. அவவோடு நான் பெரிதாக ஒட்டவில்லை. முருகன் பக்தை அவ.
அம்மம்மாவின் உறவினர்கள் வேலங்குளத்திலும் முன்ளியவளையிலுமே அதிகமாக
இருந்தார்கள். அம்மம்மாவுக்கென்று பொழுதுபோக்கு ஒன்றுமில்லை. காலையில்
எழும்புவது முகம் கழுவுவது பின்னர் தேத்தண்ணி, சாப்பாடு, சாப்பாடு
செய்வதில் அம்மாவுக்கு உதவி செய்வா மீன் வெட்வது, பயித்தங்காய் உடைப்பது
வாழைக்காய் சீவுதல், முருங்கைக்காய் வெட்டுதல். வெங்காயம் உரித்தல்,
வெள்ளைப்பூடு உரித்தல் இப்படியான உதவிகள் தான் செய்வா.
அம்மாவோடு கோபம் என்றால் அதுவும் இல்லை. முன் வீட்டு வள்ளியக்காவோடு கதை.
தங்கராசா வீட்டுக்குப் போவது என்பதோடு பொழுது போய்விடும். அத்தோடு நானும்
அம்மம்மாவும் பின்னேரம் விறகு எடுக்கப்போவோம்.
காலையில் அம்மம்மா பழங்கறியோடு பழஞ்சோறு தின்னுவா. தண்ணி ஊத்தி வைச்ச சோறு
முத்துப்போல இருக்கும். காலையில் சுட சுட அவிச்ச புட்டோ இடியப்பமோ
இருக்கும் தின்னச் சொன்னாலும் தின்னாமல் பழஞ்சோறை தானே போட்டு சாப்பிட்டு
விட்டு அன்று முழுக்க புறுபுறுத்தபடி திரிவா. “நான் ஒருத்தி இருக்கிறன்
பழஞ்சோறு தின்னுறதுக்கு போட்டு வடிக்கிறது எனக்கு என்னவினை பழசு
தின்னுறதுக்கு என்று அன்று முழு நாளும் பழஞ்சீலை கிழிஞ்ச மாதிரி இருக்கும்.
அம்மம்மாவுக்கு ஆசை கடைசி காலத்தில் தங்களின் உறவுக்கார ஆக்கள்
யாருக்காச்சும் என்னை கலியாணம் செய்து குடுக்க வேண்டும் என்று. அதற்காக ஒரு
மச்சாள் முறை உள்ள ஒரு பிள்ளையையும் குறிப்பாக காட்டினா.
ஓசைப்படாமல் எத்தனை கனவுகள் அம்மம்மாவின் மனதில் இருந்திருக்கும். எத்தனை
விடயங்களை சொல்ல முடியாமல் தத்தளித்திருப்பா. சொன்னால் நிறைவேறுமா என்ன
ஏக்கங்கள் இருந்திருக்கும். அம்மய்யா சாகும் போதும் அம்மம்மா உயிருடன்
இருந்தவா. ஒரு இரவு படுத்த அம்மம்மா எழுந்திருக்கவேயில்லை என்று தங்கச்சி
சொன்னாள்.
|
|