இதழ் 20 - ஆகஸ்ட் 2010   அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...2
எம். ஜி. சுரேஷ்
 
 
 
  பத்தி:

'நான் கோமாளியாக இருக்கவே விரும்புகிறேன்' - சார்லி சப்ளின்

சு. காளிதாஸ்

வேட்கைக் காற்று : 13 ம‌லேசிய‌க் கலைஞர்கள் - ஓர் அறிமுக‌ம்
சு. யுவராஜன்

வ‌ற்றிப்போகும் சினிமா இசை!
அகில‌ன்

இயற்கை (5) - கடல்
எம். ரிஷான் ஷெரீப்

மெக்சிகன் சூப்பர் ஹீரோ - எல் சேன்டோ (El Santo)
கிரகம்

கட்டுரை:

கூட்டணிகளால் கொள்ளை போகும் இந்திய ஜனநாயகம்
நெடுவை தவத்திருமணி

ம‌ண்ணின்றி வ‌ள‌ரும் ம‌ர‌ங்க‌ளும் சிங்கை இல‌க்கிய‌மும்
ல‌தா

காதல் விபரீதங்கள்
சந்தியா கிரிதர்

சிறுகதை:

போலீஸ் வந்துவிட்டால்...
ராம்ப்ரசாத்


சங்கமம்
கிரகம்

தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...2
எம். ஜி. சுரேஷ்

எனது நங்கூரங்கள் ...13
இளைய அப்துல்லாஹ்

நடந்து வந்த பாதையில் ...8
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...10

ஏ. தேவராஜன்

லதா

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

வ. ஐ. ச. ஜெயபாலன்

எதிர்வினை:


இல‌க்கிய‌ விவாத‌மும் அக்க‌ப்போர்க‌ளும்!
முனைவர் எம். எஸ். ஸ்ரீ லஷ்மி
     
     
 

கோட்பாடுகள் என்றால் என்ன?

ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு குறிப்பிட்ட சமூகம் நம்புவதற்கேற்ப விநியோகம் செய்யப்படும் 'உண்மை'கள் கோட்பாடுகள் எனப்படும். எடுத்துக்காட்டாக, பண்டைக்காலத்தில் 'பூமி தட்டையானது' 'சூரியன்தான் பூமியைச்சுற்றி வருகிறது' போன்ற 'உண்மைகள்' மக்களிடம் விநியோகிக்கப்பட்டதைக் கூறலாம்.

இவை எங்கிருந்து வருகின்றன?

எதுவுமே திடீரென்று வந்து குதிப்பதில்லை. ஒன்றிலிருந்துதான் வேறு இன்னொன்று உருவாகிறது. விதையிலிருந்துதான் செடி உருவாகிறது. செடி மரமாகிறது. விதையும் மரமும் ஒன்றல்ல. அதே சமயம் பரிணாம வளர்ச்சியின் படி பார்த்தால் இரண்டும் ஒன்றே. இந்தப் பிரச்சனையைத்தான் பௌத்தரான நாகார்ஜுனர், 'அது அதுவாகவும் இருக்கிறது; அதுவாக இல்லாமலும் இருக்கிறது' என்றார். யோசித்துப் பார்க்கும் போது, மரம் என்பது தனித்த பொருள் அல்ல என்பது தெளிவாகிறது. ஒரு விதை மரமாக மாறுவதற்கு, வளமான மண், தண்ணீர், சூரிய வெளிச்சம் எல்லாம் தேவை. இவை எல்லாம் சேர்ந்த மொத்தமான பொருள் மரம். எனவே, மரத்தை ஒற்றையாக வெறும் மரமாக மட்டுமே பார்க்ககூடாது. மொத்தமாகப் பார்க்க வேண்டும் என்பது பௌத்தத்தின் கருத்து. என்னதான் மரம் மொத்தமான பொருள் என்றாலும் அதை வேர், அடிமரம், கிளைகள், இலைகள் என்று தனித்தனியாகப் பகுத்துப் பார்க்க வேண்டும் என்பது பின் நவீனச் சிந்தனை. ஏனெனில், பின் நவீனத்துவம் மொத்தத்துவத்துக்கு (totality) எதிரான துண்டாடப்பட்ட தன்மையை (fragmentation) வலியுறுத்துகிறது. அது ஏன் என்பதைப் பின்னால் பார்ப்போம்.

விதை செடியாகி, மரமானதைப் போல கோட்பாடுகளும் ஒன்றிலிருந்து வேறு ஒன்றாக உருவானவையே.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டில், பண்டைய கிரேக்கத்தில் ஸ்டாயிசிசம் (Stoicism) என்றொரு கோட்பாடு புழக்கத்தில் இருந்தது. 'துன்பம், மகிழ்ச்சி, வெற்றி, தோல்வி போன்ற உணர்வுகளைப் பொருட்படுத்தாமல் செயலற்று இரு. எதிர்ப்படும் வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொள்' என்பது ஸ்டாயிசிசத்தின் கூறுகளில் ஒன்று. பின்னாளில் அமெரிக்காவில் தோன்றிய பிரக்மாடிசம் (Pragmatism) இந்தக் கூறையும் தன்னுள் கொண்டிருந்தது. பிறகு ஃபிரெஞ்சு சிந்தனையாளரான ஜீன் பால் சார்த்தர் கண்டடைந்த 'இருத்தலியம்' (existentialism) இந்தக் கூறைத் தன்னுள் உள்வாங்கி இருந்தது. ஃபிரெஞ்சு எழுத்தாளர்களான ஆல்பர் கெமூ மற்றும் சாமுவேல் பெக்கெட் ஆகியோர் வளர்த்தெடுத்த 'அபத்தக் கோட்பாடு'ம் இந்தக் கூறைத் தன்னுள் கொண்டிருந்தது என்பது கவனிக்கத்தக்கது.

நிற்க. 'கோட்பாடுகள்' என்றதுமே நாணி வெட்கத்துடன் கைகளில் முகத்தைப் புதைத்துக் கொள்ளும் எழுத்தாளர்களின் மனம் அவை பற்றி என்ன நினைக்கிறது? 'நம்மைக் கடந்து போயிருக்கும் நூற்றுக்கணக்கான வருடங்களில் கலை-இலக்கியத் தத்துவ வெளியில் ஏராளமான பிரதிகள் எழுதப்பட்டு குவிந்திருக்கின்றன. இவற்றை ஆய்வு செய்யும் வாசகன் அல்லது விமர்சகன் அவற்றை சில சட்டகங்களில் போட்டு அடைக்க முயல்கிறான். அந்த முயற்சியே கோட்பாடுகள் எனப்படும். உன்னதமான கலை இலக்கியப்படைப்பு இந்தக் கோட்பாட்டுச் சட்டகங்களை மீறி நிற்பது' என்று சொல்லிச் சிணுங்கும்.

சிந்தனையாளர்களோ, 'கோட்பாடு என்பது உலகையும், வாழ்க்கையையும் பற்றி எடுத்துரைக்க வந்த ஒரு கருத்து அல்லது கொள்கை; அது அடிக்கடி மாறும்' என்று மொண்ணையாக முணுமுணுப்பார்கள். 'இது வரை வந்திருக்கும் கோட்பாடுகள் எல்லாமும் வர்க்கப்போரட்டத்தின் விளைவுகளே' என்பது கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடாக இருக்கும்.

இவை யாவும் கட்டமைக்கப்பட்ட பொதுப் புத்திகளே. இந்தப் பொதுப்புத்திக்கு எட்டாத விஷயம் ஒன்று இருக்கிறது. கோட்பாடுகள் யாவும் மையம் கொண்டவை என்பதுதான் அது. ஆமாம், எல்லாக் கோட்பாடுகளும் மையம் கொண்டவை.

பழைய கோட்பாடு கடவுளை மையமாக்கினால், புதிய கோட்பாடு பகுத்தறிவை மையமாக்குகிறது. எப்படி சக்கரம் சுழல்வதற்கு மையத்தில் அச்சாணி தேவையோ, அதைப்போலவே கோட்பாடு சுழன்று இயங்குவதற்கு அச்சாணியாக ஒரு மையம் தேவை.

மனிதன் சிந்திக்க ஆரம்பித்ததிலிருந்து பிரபஞ்சம், மனித இருப்பு, சமூக நியதிகள் ஆகியவற்றுக்கான பொது விதிகளைக் கண்டு பிடிக்க முயன்றான். அந்த முயற்சியின் விளைவாக அறம் கண்டு பிடிக்கப்பட்டது. அறத்தின் அடிப்படையில் வாழ்வு சார்ந்த மதிப்பீடுகள் உருவாக்கப்பட்டன. அந்த மதிப்பீடுகளை மையமாக வைத்து பிரதிகள் உற்பத்தி செய்யப்பட்டன. காலங்கள் தோறும் அந்தப் பிரதிகள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்தத் தலைமுறைக்கு விட்டுச் செல்லப்பட்டன. தவிரவும், ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பழைய பிரதிகளைப பின் பற்றிப் பல புதிய பிரதிகளும் உற்பத்தி செய்யப்பட்டன. அந்தப் பிரதிகளும் பழைய பிரதிகளில் இருந்த அதே மையத்தை சுவீகரித்துக் கொண்டன.

அறிவியல் கண்டு பிடிப்புகள் புதிது புதிதாகத தோற்றம் கொண்ட போது பழைய கோட்பாடுகள் ஆட்டம் கண்டன. புதிய கோட்பாடுகள் கால் கொண்டன. புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் பழைய தத்துவ, மத, அரசியல் கோட்பாடுகளையும், நிலைப்பாடுகளையும் அவற்றின் பீடங்களிலிருந்து கீழே தள்ளின. இதன் விளைவாக கோட்பாடுகள் யாவும் ஊகங்களாக உருமாற்றம் எய்துகின்றன. பழைய ஊகத்தைத் தவறு என்று புதிய ஊகம் நிரூபிக்கிறது. அல்லது பழைய ஊகத்தின் போதாமையை புதிய ஊகம் சுட்டிக்காட்டுகிறது. எது எப்படி இருந்த போதிலும், எந்த ஊகமும் கோட்பாட்டின் மையம் குறித்து எதையும் ஊகிக்கவில்லை என்பது மனங்கொள்ளத்தக்கது. காரணம், பழைய ஊகத்தைப் போலவே புதிய ஊகமும் தன்னுள் ஒரு மையத்தைக் கொண்டிருந்ததுதான்.

சுமேரியர் காலத்திலிருந்து, ரோமாபுரியின் வீழ்ச்சி வரையுள்ள காலத்தை தொன்மை யுகம் என்று வரலாற்றாசிரியர்கள் வரையறுக்கிறார்கள். அந்த யுகம் அடிமைச் சமூகம் நிலவிய யுகம். அந்த யுகம் இரண்டு விதமான கோட்பாடுகளை உற்பத்தி செய்தது. தேல்ஸ், அனாக்சிமாண்டர், எபிகூரஸ், டெமாக்ரடிஸ், போன்றோரின் பொருள் முதல்வாதச் சிந்தனைகளும், சாக்ரடீஸ், பிளேட்டோ ஆகியோரின் கருத்து முதல்வாதச் சிந்தனைகளுமே அவை. அதன் பின்னர் வந்த யுகம் மத்திய யுகம் என்று அழைக்கப்படுகிறது. கி.பி 5 ம் நுற்றாண்டு முதல் கி.பி 14 ம் நுற்றாண்டு வரை நிலவிய இந்த யுகம் 'மதத்தின் வேலைக்காரி' என்று வர்ணிக்கப்படுகிறது. ஏனெனில், அந்த அளவுக்கு அது மதவாதிகளின் யுகமாக இருந்தது. மத்திய காலத்தில்தான் கிறிஸ்துவ மதம் முழு வீச்சுடன் இயங்க ஆரம்பித்தது. தொன்மைக்கால கிரேக்கத் தத்துவங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. ஏதென்சில், பிளேட்டோவின் அகாடமி இழுத்து மூடப்பட்டது. மத்திய யுகத்தில் தோன்றிய முக்கியமான தத்துவவாதியாக புனித அக்வினாசைக் குறிப்பிடலாம். இவர் தொன்மைக்காலப் பகுத்தறிவுக் கோட்பாட்டையும், மத்தியகால மத நம்பிக்கையும் இணைத்து ஒரு சமரசம் காண்பதைத் தனது கோட்பாடாக்கினார். அரிஸ்டாட்டிலின் சிந்தனைகளை கிறிஸ்தவமயமாக்க முயன்றார். மத்திய யுகத்தைத் தொடர்ந்து வந்த யுகம். மறுமலர்ச்சி யுகம். அந்த யுகம் மனித குலம் பற்றிய புதிய பார்வைகளைத் தோற்றுவித்தது. கலீலியோ கலீலி, ஃபிரான்சிஸ் பேகன், கோப்பர் நிக்கஸ் போன்றோர் அது வரை அறியப்பட்டிருந்த கோட்பாடுகளை கேள்விக்கு உள்ளாக்கினார்கள். அடுத்ததாக 17 ம் நூற்றாண்டில் பிறந்த 'பரோக்' யுகம் தெகார்த்தே, ஸ்பினோசா போன்ற முக்கியமான சிந்தனையாளர்களின் யுகமாக இருந்தது. தெகார்த்தேயின் புகழ் பெற்ற வாசகமான, 'நான் சிந்திக்கிறேன்; எனவே நான் இருக்கிறேன்' என்னும் அறிவுவாதக் கோட்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது. அடுத்ததாக வந்தது, 'ரொமாண்டிசிசம்'. அதன் விதைகளைத் தூவியவராக ஜெர்மன் தத்துவவாதி இம்மானுவேல் காண்ட் கருதப் படுகிறார். காண்ட் பகுத்தறிவைக் கேள்விக்குட்படுத்தினார். இம்மானுவேல் காண்ட் ஒரு கட்டுரை எழுதினார். அதன் தலைப்பு: 'அறிவொளி என்றால் என்ன என்ற கேள்விக்கான பதில்'. அந்தக் கட்டுரையின் நீட்சியாக அடுத்து வந்த யுகம் அறிவொளி யுகம் என்று அழைக்கப்படுகிறது. 19 ம் நூற்றாண்டின் இறுதியில் தெகார்த்தேயின் அறிவுவாதக் கோட்பாடு மறுக்கப்பட்டது. இவ்வாறாக வரலாறு முழுக்க, ஒரு புதிய கோட்பாடு ஏற்கெனவே நிலவிக் கொண்டிருந்த பழைய கோட்பாட்டை வெறும் ஊகம் என்று ஒதுக்கித் தள்ளிய நிலைதான் நீடித்தது.

1966 ஆம் ஆண்டு இந்த ஊகங்கள் யாவும் ஒரு முடிவுக்கு வந்தன. ஏனெனில், அந்த ஆண்டுதான் ஒரு ஃபிரெஞ்சுக்காரர் அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் ஓர் உரை நிகழ்த்தினார். அவர் பெயர் ழாக் தெரிதா. தனது உரையில் அவர் ஒரு புதிய சொல்லைப் பயன் படுத்தினார். அந்தச்சொல்: Deconstruction. தமிழில், கட்டுடைப்பு, நிர்நிர்மாணம், சிதைவாக்கம், தகர்ப்பமைப்பு, ஒழுங்கவிழ்ப்பு என்று பலவாறாகப் புழங்கப்படும் அந்தச் சொல்லை முதன் முதலாக அவர் உச்சரித்த போது அரங்கத்தில் நிசப்தம் நிலவியது. அதைப்பற்றி அவர் தொடர்ந்து பேசியபோது
அரங்கத்தில் இருந்த அனைவரும் தங்கள் கால்களின் கீழே இருந்த தரை நழுவிப் போனது போல் உணர்ந்தார்கள். விரைவிலேயே எல்லாக்கோட்பாடுகளின் பாதங்களும் தரையிலிருந்து நழுவி, அவை தலைக்குப்புற விழப்போகின்றன என்பது அப்போது அரங்கத்தில் இருந்த யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

(தொடரும்)

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768