இடம்:
தான் ஸ்ரீ சோமா அரங்கம், விஸ்மா துன் சம்பந்தன்,
கோலாலம்பூர்
நேரம்:
மாலை 6.00 - இரவு 10.00
நாள்:
12.9.2010 (ஞாயிறு)
நிகழ்வு:
மலேசியா சிங்கப்பூர் 2010 புத்தக வெளியீடு,
ஜெயமோகனின் இலக்கிய உரை, இயக்குனர் ராமுடன் (கற்றது தமிழ்)
கலந்துரையாடல்
கடந்தாண்டு போலவே இவ்வாண்டும் கலை இலக்கிய விழா
நடத்த வேண்டும் என முடிவெடுத்து தொடர்ந்து பல இரவுகள் தூக்கம்
இழந்து; பல திட்டங்களுக்குப் பின் இம்மாதம் 12ஆம் திகதி
கோலாலம்பூரில் உள்ள தான் ஸ்ரீ சோமா மண்டபத்தில் மாலை மணி 6.00க்கு
பெரும் உழைப்பைப் போட்டு கலை இலக்கிய விழா 2ஐ நடத்துகிறேன் என்றெழுத
ஆசைதான்.
ஆனால் அப்படி எந்தச் சுவாரசியமும் இம்முறை இல்லை.
உண்மையில் நான் செய்ய விரும்பியது ஒன்றுதான். மலேசியா சிங்கப்பூர் 2010
எனும் இதழை இவ்வருடத்திற்குள் கொண்டுவர எண்ணினேன். இந்த முடிவை
கடந்தாண்டே எடுத்துவிட்டேன். கடந்தாண்டு தற்செயலாய் சந்திக்க
நேர்ந்த சில ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்களால் இந்த எண்ணம்
தோன்றியது. அதிக பட்சம் அவர்கள் தெரிந்து வைத்திருந்தது மு.வ,
அகிலன், ரமணி சந்திரனை மட்டுமே. மலேசிய இலக்கியம் குறித்தும்
எழுத்தாளர்கள் குறித்தும் அவர்களிடம் எவ்வகையான அறிமுகமும்
இல்லாதது கவலை அளித்தது. மலேசியா மற்றும் சிங்கப்பூர்
இலக்கியத்தை, தமிழை முக்கியப்பாடமாகக் கொண்டு பயிலும் ஆசிரியர்
பயிற்சி கல்லூரி மாணவர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களும்
குறைந்தபட்சமாவது தெரிந்திருக்க வேண்டும் என எண்ணினேன். இதே
காலக்கட்டத்தில் வல்லினம் அகப்பக்கத்தில் வந்திருக்கும் சில
முக்கியமான படைப்புகளையும் தொகுத்துக்கொண்டிருந்தேன். ஒருசில
படைப்புகளைத் தொகுத்து பார்த்ததும் அது தற்கால மலேசிய சிங்கப்பூர்
இலக்கியத்தை அடையாளம் காட்டும் எனப்பட்டது. எவ்வகையான
திட்டமிடலும் இல்லாமல் அவ்வப்போது இதழை தொகுத்துக்கொண்டிருந்த
எனக்கு இதை முழுமை படுத்தினால் தற்கால மலேசியா சிங்கை இலக்கிய
அறிமுகத்திற்கு ஓராளவாவது உதவுமே என தோன்றியது. இதழை கொண்டு செல்லும்
திசை ஓரளவு புரிந்தபின் அதை நோக்கியே புதிய படைப்புகளை சேகரிக்கத்
தொடங்கினேன்.
இதழ் உருவாகும் போதே இவ்விதழை எல்லா ஆசிரியர் பயிற்சி கல்லூரிக்கும்,
ஒரு சில பல்கலைகழகங்களுக்கும் இலவசமாகவே கொடுத்துவிடலாம் என்று
முடிவெடுத்திருந்தேன். ஒரு புத்தக வெளியீட்டு விழா செய்து அதில்
கல்லூரிகளுக்கு வழங்குவதோடு பொதுமக்களுக்கும் வழங்கலாம் என்பது
திட்டம். இந்த சூழ்நிலையில்தான் மீண்டும் எனக்கு சுவாமி பிரமானந்தா
சரஸ்வதியின் அறிமுகம் கிடைத்தது.
இங்கு நான் மீண்டும் என்று கூறுவதற்கு காரணம் உண்டு. நான் கெடாவில்
வாழ்ந்த சமயங்களில் மாதத்திற்கு இரண்டு முறையாவது சுவாமி
பிரமானந்தா நடத்தி வரும் தியான ஆசிரமத்திற்கு செல்லும் வாய்ப்பு
கிடைக்கும். சுவாமி பிரமானந்தாவின் பேச்சு என்னை வெகுவாக
ஈர்த்திருந்தது. நிறைய கதைகள் சொல்வார். அதைவிட அவர் முக்கியமாக
சொல்லும் ஒரு வாசகம் இப்போதும் என் நினைவில் உள்ளது. அவர் அந்த
வாசகத்தைச் சொல்ல சொல்ல நாங்கள் பின்தொடரவேண்டும். அந்த
வாசகங்கள் இவ்வாறு ஒலிக்கும்:
நான் நேர்மையாக இருப்பேன்...
பொய் சொல்ல மாட்டேன்...
பெற்றோரை மதிப்பேன்...
ஆசிரியரிடம் அன்பு செலுத்துவேன்...
எல்லா உயிர்களிடமும் கருணையுடன் நடந்து கொள்வேன்...
இது சத்தியம்!
என முடிப்பார். நாங்களும் சத்தியம் செய்துவிடுவோம். உடனே சுவாமி
"ஐயையோ போச்சி... சத்தியம் பண்ணிட்டீங்களா? அப்ப சத்தியத்த மீறினா
சாமி வந்து கண்ணை குத்துமே" என பயம் காட்டுவார். பின்னர்
மர்மமாகச் சிரிப்பார். நாங்கள் திகிலடைந்து போவோம். அதுவும் எனக்கு
திகில் எம்பி குதித்து வாய்வழியாக வந்து எட்டிப்பார்க்கும். எந்த
சத்தியத்தையும் அப்போதே என்னால் மூன்று நாட்களுக்கு மேல் கடைப்பிடிக்க
முடிந்ததில்லை. குழந்தைகளுக்கு இது போன்ற பொய்கள்தான் அவர்கள்
மனங்களை உருவாக்குகின்றன. நான் எனக்குள் சில கட்டுப்பாடுகளைக்
கொண்டிருக்க தியான ஆசிரமமும் சுவாமி பிரம்மானந்தாவுமே காரணமாக
இருந்தார்கள். அவர் ஏற்பாட்டில் ஒவ்வொரு வாரமும் நவீன இலக்கியச்
சிந்தனை களம் கூடுவதை கேள்வி பட்டபோது முதலில் அதிர்ச்சியாகவும்
பின்னர் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவரின் ஆன்மீக அனுபவம் தரும்
கட்டுரைகளை வாசித்திருந்தாலும் அவர் நவீன இலக்கியத்திலும் நாட்டம்
கொண்டவர் என அப்போதுதான் தெரிந்தது. எம்.ஏ.இளஞ்செல்வன் புத்தக
வெளியீடு தியான ஆசிரமத்தில் நடந்தபோது பிரமானந்தா அவர்களின்
உரையைக் கடைசியாகக் கேட்டதோடு சரி. ஆனால் அவர் இலக்கிய ஆர்வம்
இவ்வளவு வளர்ந்திருக்கும் என நான்
நினைத்துப்பார்க்கவில்லை.
அவருடன் பேசி உறவை புதுப்பித்த சமயத்தில்தான் அவர் ஜெயமோகனின்
தீவிர வாசகர் என அறிந்துகொண்டேன். ஜெயமோகனை முழுவதுமாக
வாசித்திருந்தவர் தமிழகத்திற்குச் சென்று அவரைச் சந்தித்ததோடு
ஜெயமோகனின் மலேசிய பயணத்திற்கும் ஏற்பாடு செய்திருப்பதாகக்
கூறினார். கோலாலம்பூரில் 'வல்லினம்' இதழும் நிகழ்ச்சி ஏற்பாடு
செய்யலாம் என அனுமதி அளித்தார். நானும் தாராளமாக ஒத்துக்கொண்டேன்.
மலேசியா சிங்கை புத்தக வெளியீட்டில் ஜெயமோகனின் இலக்கிய உரையும்
வருவதென முடிவானது.
'கற்றது தமிழ்' திரைப்படம் மூலம் இயக்குனர் ராம் என்னைப் பெரிதும்
கவர்ந்திருந்தார். பலமுறை அப்படத்தைப் பார்த்து பார்த்து இறுதியாக
பார்த்த ஒருநாள் உணர்ச்சிவசப்பட்டு எங்கெங்கோ அவர் எண்களைத்
தேடத்தொடங்கி கிடைத்தது. தாமதிக்காது அழைத்தேன். பேசினார். என்ன
பேசினேன் என முழுவதுமாக மீட்க முடியவில்லை... ஆனால் பேசி
முடிந்தவுடன் சந்தோஷமாக இருந்தது. சிவா பெரியண்ணனிடம் நிகழ்ச்சி
குறித்து பேசிக்கொண்டிருந்தபோது, இயக்குனர் ராம் அவர்களையும் அழைக்க
முடிவானது. ஏற்கனவே இயக்குனர் ராம் 'அழைக்கும் போது கண்டிப்பாக
மலேசியா வருவேன்' என்று கூறியது நினைவுக்கு வர அழைத்தேன்.
சம்மதித்தார். அழைக்கும் போது என் கைத்தொலைபேசியில் 2 ரிங்கிட் மீதம்
இருந்தது. பேசி வைத்தபோது 1.20 சென் இருந்தது. இவ்வளவு சுருக்கமான
உரையாடலில் ஓர் இயக்குனரின் வருகைக்கு ஏற்பாடு செய்தது என்னவோ போல
இப்போது வரைக்கும் இருக்கிறது. சரியாகத்தான் பேசினேனா என அவ்வப்போது
கேட்டுக்கொள்கிறேன்.
ஆக, மலேசிய சிங்கை 2010 புத்தக வெளியீடு, எழுத்தாளர் ஜெயமோகனின்
உரை, இயக்குனர் ராமுடன் கலந்துரையாடல் என போகும் ஒரு நிகழ்ச்சிக்கு
என்ன பெயர் வைக்கலாம் என யோசித்தபோது இருக்கவே இருக்கிறதே 'கலை
இலக்கிய விழா' என யோசனை தோன்ற அதன் பக்கத்தில் இரண்டைச் சேர்த்து
'கலை இலக்கிய விழா 2' எனும் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளோம். இம்முறை
வல்லினத்தோடு இலக்கியகமும் (மலேசிய தமிழ் இலக்கிய ஆசிரியர்
கழகம்) இணைந்துள்ளது கூடுதல் மகிழ்ச்சி.
எழுத்தாளர் ஜெயமோகன் செப்டம்பர் 5ஆம் திகதி மலேசியா வருகிறார். 6ஆம்
திகதி முதல் 12ஆம் திகதி வரை அவரது இலக்கியப் பயணம் தொடர்கிறது.
சுவாமி பிரமானந்தா அவர்களுடன் நவீன இலக்கிய சிந்தனைக்களம் இணைந்து கூலிம்,
சுங்கைப்பட்டாணி, பினாங்கு போன்ற இடங்களில் இலக்கிய நிகழ்வுகளை
நடத்தவிருக்கிறது. அவற்றின் விவரம்:
06.09.2010
எழுத்தும் இலக்கிய எழுத்தும்
ஆசிரியர் பயிற்சி கல்லூரி - பினாங்கு (துங்கு பைனுன்)
மாலை மணி 4.30க்கு
07.09.2010
இலக்கியம் எதைக் கற்பிக்கிறது?
சுங்கைப்பட்டாணி ஆசிரியர் பயிற்சி கல்லூரி
மாலை மணி 7.30க்கு
8.09.2010
“இந்திய ஞான மரபும் காந்தியும்”
காந்தி மண்டபம் பினாங்கு- மாலை மணி 7.30க்கு
09.09.2010
கீதையும் யோகமும்
கூலிம் தியான ஆசிரமம்
இரவு மணி 8.00க்கு
10.09.2010
இலக்கியமும் நவீன இலக்கியமும்
கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கம்
மாலை மணி 5.00க்கு
11.09.2010 கோலாலம்பூர் வருகை
12.09.2010
சிறுகதை பட்டறை
காலை 9 முதல் மதியம் 1.00 வரை
மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம்
மாலை 6.00 மணிக்கு
தமிழில் எழுதப்பட்ட முக்கிய நாவல்கள்
வல்லினம் கலை இலக்கிய விழா 2
இதே போல இயக்குனர் ராம் அவர்களும் 10 ஆம் திகதி மலேசியா வருகிறார்.
விவரம்:
11.09.2010
இயக்குனர் 'ராமுடன் ஒரு மாலை பொழுது' என அழைக்கப்பட்ட
சிலருடன் மட்டும் கலந்துரையாடல் நடைப்பெறும். (சினிமா மட்டும்
அல்லாது இயக்குனர் ராம் இலக்கியத்திலும் நாட்டம் கொண்டவர் என்பதும்
கவிதை, சிறுகதை போன்றவற்றை எழுதியுள்ளார் என்பதும்
குறிப்பிடத்தக்கது.)
12.09.2010
தற்கால தமிழ் சினிமா எனும் தலைப்பில் இயக்குனர் ராம்
பேசுவார். தொடர்ந்து அவருடனான கலந்துரையாடல் இடம்பெறும்.
அனைவரும் திரண்டு வந்து ஆதரவு அளிக்குமாறு அன்புடன்
கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு: கல்லூரிகளுக்கும் பல்கலைகழகங்களுக்கு மலேசிய சிங்கை
2010 புத்தகம் இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளோம். அழைப்பு வராத
கல்லூரிகள் தயவு செய்து எங்களைத் தொடர்புகொள்ள கேட்டுக்கொள்கிறோம்.
வல்லினம் கலை, இலக்கிய விழா
2 தொடர்பான தகவல்களுக்கு:
ம. நவீன் - 0163194522
na_vin82@yahoo.com.sg
|