|
2003-ஆம் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த
ஆண்டு. நினைவில் கொள்ளமுடியாத மாதம் மற்றும் நாள். ஆனால் மழை பெய்துக்
கொண்டிருந்த இரவு என்பது மட்டும் நன்றாக நினைவிருக்கிறது. ‘சோ’ வென்றும்,
தூறலென்றும் சொல்ல முடியாத இரண்டிற்கும் நடுத்தரமான மழை. நான் வாடகைக்குத்
தங்கியிருந்த வீட்டின் வரவேற்பரையில் சிவா பெரியண்ணன நாற்காலியிலும் நான்
கீழே தரையிலும் உட்கார்ந்து தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தோம். எங்கள்
சிந்தனையின் மையமாக நான் அப்போது எழுதியிருந்த இரண்டு சிறுகதைகள் இருந்தன.
நான் படப்படப்பாகவும் பதற்றமாகவும் இருந்தேன். ஒரு புதிய கண்டுப்பிடிப்பைக்
கண்டடைந்து அதை பகிர்ந்துக் கொள்ள முடியாத இளம் அறிவியலாளனின் துயரமும்
பதற்றமமும் என்னை கவ்வியிருந்தது. ஆம், அதற்கு சில வாரங்கள் வரை வெறும்
இலக்கிய வாசகனாக மட்டுமிருந்த நான் ஒரே அமர்வில் இரண்டு கதைகளை
எழுதிவிட்டேன் என்றால் சும்மாவா? இரண்டையும் பேரவை கதைகள் போட்டிக்கு
அனுப்பி வைத்திருந்தேன். கதைகள் நன்றாகவே வந்திருப்பதாக சிவா சொன்னார்.
ஆனால் அன்று நான் சிவாவை ஒரு முக்கிய கருத்தாளராக ஏற்கவில்லை. அது
மட்டுமன்றி சிவாவின் அபிப்பிராய தொனி என்னைப் போல் புதிய எழுத்தாளனுக்கு
உத்வேகம் அளிக்கக்கூடியதல்ல. எடுத்துகாட்டாக கீழே உள்ள உரையாடலைப்
படியுங்கள்:
நான் : கதை எப்படி சிவா?
சிவா: (கொஞ்ச நேரம் யோசித்த பிறகு) ம்... ம்... பரவால நல்லாயிருக்கு.
(இன்னும் கொஞ்ச நேரம் யோசித்த பிறகு) வாங்க டீ சாப்பிட போலாம்.
தீவிர சிந்தனைக்குப் பிறகு, யாராவது எழுத்தாளர்களைச் சந்தித்துக் கதையைக்
கொடுத்து அபிப்பிராயம் கேட்கலாம் என்றார் சிவா. அந்த நேரத்தில் எனக்கு எந்த
எழுத்தாளரோடும் அறிமுகம் இருந்ததில்லை. சிவா அப்படியல்ல. 15 வயதிலிருந்தே
பல்வேறு பெயர்களில் நாட்டின் முன்னணி ஏடுகளில் சமுதாயப் புரட்சி ஏற்படுத்த
விளையும் கதைகளை எழுதிய அனுபவமுள்ளவர். 20 வயதுகள் நெருங்கும்போது
பெரும்பாலான இளம் எழுத்தாளர்களைப் போலவே கவிதைக்கு தாவி அணைத்துக்
கொண்டார். சும்மா சொல்லக் கூடாது. கவிதையும் அவரைக் கெட்டியாக அணைத்துக்
கொண்டது.
அப்போது செம்பருத்தி இதழின் கணபதி கணேசன் ஏற்பாட்டில் ஒவ்வொரு மாதம்
மூன்றாவது சனிக்கிழமை நடைப்பெற்ற கவிராத்திரி நிகழ்வைப் பற்றி சிவா
சொன்னார். அங்கு பல முக்கிய எழுத்தாளர்கள் வருவார்கள் என்றும் அவர்களிடம்
கதைகளைக் கொடுத்து அபிப்பிராயம் கேட்போம் என்றார். முக்கியமாக எழுத்தாளர்
மா. சண்முகசிவா அந்நிகழ்வுக்கு வருவதாக சொன்னார்.
நான்
மா. சண்முகசிவாவின் கதைகளைப் படித்திருந்தேன். விமர்சனங்களை உருவாக்கிக்
கொள்ளும் அளவுக்குத் திறன் இல்லாவிட்டாலும் அவரின் கதைகள் என்னை அப்போதே
கவர்ந்திருந்தன. கலகக்காரன், வீடும் விழுதுகளும் போன்ற அவருடைய கதைகளை
நாளிதழ்களில் வாசித்திருந்தேன்.
நான் சென்றிருந்த நிகழ்ச்சிக்கு கணபதி கணேசன் உடல்நிலை சரியில்லாததால்
வரவில்லை. கோ.முனியாண்டி வந்திருந்தார். மா.சண்முகசிவாவை முதன் முதலாக
அங்குதான் பார்த்தேன். அவர் ஒரு மருத்துவர் என்பதை அன்றுதான் அறிந்துக்
கொண்டேன். அன்று பகிர்ந்துக் கொள்ளப்பட்ட கவிதைகளும் கவிஞர்களும் எனக்கு
புதிதாக இருந்தனர். அறிவுமதி, கலாப்ரியா, சேரன் போன்றவர்களின் பெயர்கள்
அங்கு உச்சரிக்கப்பட்டன. எனக்கு அப்போது அறிமுகமாகியிருந்த மேத்தா, அப்துல்
ரகுமான், தமிழன்பன் போன்றவர்களை அங்கிருந்த யாருமே கண்டுக் கொள்ளவில்லை.
என் கதைகளை சண்முகசிவாவின் வழங்குவது மட்டுமே என் அன்றைய பிறவிப்பயனாக
இருந்ததால் இந்த விடுப்படல் பற்றியெல்லாம் நான் கண்டுக்கொள்ளவில்லை.
சண்முகசிவா கவிதை பற்றிய தன் கருத்துக்களை மென்மையாக ஆனால் அழுத்தமாக
குரலில் பதிவு செய்துக் கொண்டிருந்தார். அவரின் கருத்துகளில் ஓரத்தில்
மெல்லிய நகைச்சுவை இருந்தது. நிகழ்வு முடிந்ததும் என் கதைகளைக் கொடுத்தேன்.
அவசரமாக கிளம்பி கொண்டிருந்தார். என் கைபேசி எண்களைக் குறித்துக் கொண்டார்.
ஏனோ அவர் என்னைத் தொடர்பு கொள்ளமாட்டார் என நினைக்கத்தொடங்கினேன். நான்
எதிர்பார்த்ததைவிட சண்முகசிவா பிரபலமானவராக இருந்தார். வானொலியில்
குரலையும், தொலைகாட்சியில் முகத்தையும் அடிக்கடி கேட்கவும் பார்க்கவும்
முடிந்தது. பொதுவாக பிரபலமானவர்கள் பொதுவெளியில் ஒருமாதிரியும், தனிப்பட்ட
வகையில் வேறுமாதிரியும் இருப்பார்கள். சமுக அக்கறை என்பதெல்லாம் மேடைப்
பேச்சுதான் என்பதை உறுதியாக நம்பினேன். (இன்றுவரை இவ்வுறுதி 99%
செல்லுபடியாகும்). ஒரு வாரம் சென்றதும் இவ்விடயத்தை மறந்தும் விட்டேன்.
மூன்று வாரம் கடந்திருக்கும். மழையில்லா இரவில் சண்முகசிவா அழைத்தார்.
எனக்கு நிலமையைப் புரிந்துக் கொள்ள கொஞ்ச நேரம் பிடித்தது. தனக்கு கதைகள்
பிடித்திருப்பதாகவும், மலேசியாவில் இளையர்கள் இந்த தரத்தில் எழுதுவது
அரிதென்றும், நேரில் சந்தித்தால் தொடர்ந்து கதைகளைப் பற்றி பேசலாம் என்றும்
சொன்னார். நான் கதைகளைப் போட்டிக்கு அனுப்பியதைப் பற்றி சொன்னேன்.
கேட்டதும் பெருமூச்சுவிட்டார். உங்களுக்கு பரிசு கிடைக்காவிட்டால்
வருந்தாதீர்கள்... (மற்றதெல்லாம் என்னிடம் தனிப்பட்ட முறையில்
நம்பிக்கையின் அடிப்படையில் சொல்லப்பட்டதால் தணிக்கை செய்யப்படுகிறது) நாம்
சந்திக்கலாம் என தன் கிளினிக் முகவரியைத் தந்தார்.
இரண்டு மூன்று முறை பாதையைத் தவறிய பிறகு ஒருவாராக அவருடைய கிளினிக்கை
அடைந்தோம். நோயில்லாமல் ஒரு மருத்துவரை அவருடைய கிளினிக்கில் சந்திப்பது
தயக்கமாக இருந்தது. நாங்கள் சண்முகசிவாவைப் பார்க்க வந்திருக்கிறோம்
என்றதும் வரவேற்பிடத்தில் இருந்தவர் எங்களை ஒரு மாதிரியாக பார்த்தார்.
‘உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா?’ என்பது போன்ற பார்வை. எங்களின்
பெயர்களைக் குறித்துக் கொண்டப் பிறகு காத்திருக்கச் சொன்னார். அன்று
நோயாளிகள் கொஞ்சம் அதிகம்தான். நோயாளிகளைச் சந்திக்க இரண்டு அறைகள் கொண்ட
கிளினிக்.
கிட்டதட்ட ஒரு மணிநேர காத்திருப்பிற்குப் பிறகு எங்கள் பெயர்கள்
அழைக்கப்பட்டன. ‘வாங்க யுவராஜன், சிவா’ என எழுந்து எங்களை வரவேற்றார். ஒரு
புதியவரை சந்திக்கும் மனத்தடை எல்லாம் சில வினாடியிலேயே நொறுங்கத்
தொடங்கின. சில நிமிடங்களுக்குப் பிறகு மனதுக்கு நெருக்கமான ஒரு நண்பருடன்
பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதை உணர முடிந்தது. எங்களைப் பற்றி பொதுவான
விடயங்களைப் பற்றி கேட்டு தெரிந்துக் கொண்டார். நாங்கள் இருவரும் கெடா
மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றதும் பலமாக சிரித்தார். கெடாவை தமிழகத்தில்
திருநெல்வேலி, கும்பகோணத்தோடு ஒப்பிடலாம் என்றார். கெடாவில் பல நல்ல
எழுத்தாளர்களைத் தொடர்ந்து உருவாகி வருவதை சொன்னார். (சீ. முத்துசாமி,
எம்.ஏ.இளஞ்செல்வன், க.பாக்கியம், வ.முனியன், கோ.புண்ணியவான்,
ரெ.கார்த்திகேசு போன்ற மூத்த எழுத்தாளர்களும் இப்போது முக்கியமாக எழுதிக்
கொண்டிருக்கும் சிவா பெரியண்ணன், ம. நவீன், கே. பாலமுருகன் ஆகியோரும் கெடா
மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவ்வளவு ஏன்? சண்முகசிவா-வும் கெடாவைச்
சேர்ந்தவர்தான்.)
பிறகு என்னுடைய இலக்கிய வாசிப்பைப் பற்றி கேட்டார். நான் சண்முகசிவாவைச்
சந்திக்கும்போது ஜெயகாந்தனை விரிவாக வாசித்து விட்டு சுந்தரராமசாமியிடம்
வந்து சேர்ந்திருந்தேன். ஆனால் எல்லா ஆரம்ப நவீன இலக்கிய வாசகனைப் போலவே
இலக்கியத்தின் பிரதான நோக்கமே சமுக விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் என்ற
மன அமைப்பு எனக்குள் உறுதியாக இருந்தது. இதன் அடிப்படையில் வண்ணதாசன்,
சு.ரா, ஜெயமோகன், அசோகமித்திரன், கு.ப.ராஜகோபாலன் போன்றவர்கள் யாருக்கு
எழுதுகிறார்கள் என அவர்களைப் படித்தபோது நினைத்துக் கொண்டேன். தீவிரமான
எழுதினாலும் மொழிநடையில் எளிமையாய் இருந்த வண்ணநிலவன், சா.கந்தசாமி,
கந்தர்வன், தி.ஜா, கி.ரா போன்றவர்களை உள்வாங்க முடிந்திருந்தது.
இதைப்பற்றி கேட்டபோது சண்முகசிவாவின் பதில் இப்படியாக அமைந்தது, ‘சமுகம்
என்பது என்ன யுவராஜன், தனிமனிதர்கள் கொண்ட கூட்டம்தானே, சமுக அமைப்பு
எப்படி தனிமனிதர்களின் அகத்தை பாதிக்கிறதோ, அதேபோல் தனிமனிதர்களின்
அகநெருக்கடிகளும் சமுகத்தைப் பாதிக்கத்தானே செய்யும். என்னை கேட்டால் சமுக
எழுத்து, அகநெருக்கடிகளை முன்வைக்கும் இருண்மை எழுத்து என்ற பாகுபாட்டில்
உடன்பாடில்லை. எழுத்தை நான் நல்ல எழுத்து, மோசமான எழுத்து என்றுதான்
பிரிப்பேன். நல்ல எழுத்து வாசித்து முடித்ததும் வாசித்தவன் அகத்தை ஒரு
சுற்றளவு விரிய செய்திருக்கும். வாசிக்கும் முன் இருந்தவனை வாசித்து
முடித்ததும் வேறொரு தளத்தில் உயர்த்தி வைத்திருக்கும்.’ நான் வாசிப்பை
மேலும் கூர்மைப்படுத்தவும் விரிவான தளத்தில் வாசித்தவற்றைச் சிந்திக்கவும்
என்னை முதலில் தூண்டியவர் மா.சண்முகசிவாதான்.
பொதுவாக சண்முகசிவா மென்மையானவர், யார் மனதையும் புண்படுத்தும்படி பேச
மாட்டார். அப்படி புண்படும் என நினைத்தால் மெளனமாக இருந்து விடுவார். இதை
அவருடைய பெரிய குறையாக பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இது முற்றிலும்
பொய்யல்ல. எனக்கே மலேசிய இலக்கியத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியை
மட்டுப்படுத்த, பின்னோக்கி இழுக்கிற அத்தனை வேலையும் செய்யும் ராஜேந்திரன்
முன்னேற்றக் கழகம் என்கிற மலேசிய எழுத்தாளார் சங்கம் என்கிற பாசிச
சங்கத்தின் குறைகளை சண்முகசிவா மெளனமாக கடந்துச் செல்வது குறித்து பெரிய
வருத்தம் உண்டு. அச்சங்கத்தில் உள்ளவர்கள் பலர் அவரின் நெடுங்கால நண்பர்கள்
என்பதால் அவரால் வெளிப்படையாக கருத்துகளைச் சொல்லாமல் இருக்கலாம்.
தனிப்பட்ட முறையில் பதிவு செய்திருக்கலாம். அடிப்படையில் சண்முகசிவா ஒரு
மனோவியல் நிபுணர். தன் எதிர்வினையை பதிவு செய்வதில் அவருக்கென ஒரு வழிமுறை
உள்ளது. அந்த வழிமுறையை விமர்சனம் செய்யும் உரிமை நமக்கு இருப்பது போல்
அந்த வழிமுறையை பின்பற்றும் முழு உரிமை அவருக்குண்டு.
ஆனால் இலக்கியங்களை ஒட்டிய அபிப்பிராயங்கள் என வந்து விட்டால் இந்த
சமரசங்கள் எல்லாம் அவரிடம் காண முடியாது. மலேசியாவில் பல நூல்களுக்கு
முன்னுரை எழுதிக் கொடுத்திருக்கிறார். படித்தால் ஆஹா ஓஹோ என்று இருக்கும்.
உள்ளடக்கம் பெரும் ஏமாற்றமாக இருக்கும். மீண்டும் ஒருமுறை படித்து
பார்த்தால் அதன் வரிகளுக்கிடையில் சண்முகசிவா நமட்டு சிரிப்பு சிரித்தப்படி
இருப்பார். முன்னுரையில் கதைகளைப் பற்றி ஒரு வரி இருக்காது. நூலாசிரியரோடு
தமக்கிருக்கும் நெருக்கமான, ஈரமான தருணங்களை பதிவு செய்திருப்பார். ‘ஏன்
சார் இப்படி எழுதுகிறீர்கள்’ என சற்று கோபமாகவே ஒருமுறை கேட்டேன். ‘நீங்களே
சொல்லுங்கள், மலேசியத் தமிழ்க்கல்வியை மட்டும் பெறும் ஒருவன் ஜனரஞ்ஜக
எழுத்துக்கு கூட வந்து சேரமாட்டான், இதில் சொந்தமான வாசிப்பில்தான்
சிரமப்பட்டு கொஞ்சம் தரமாக எழுத வருகின்றனர். இவர்களின் எண்ணிக்கை இன்னும்
வளரவேண்டும். அந்நேரத்தில் தளிரோடு களையும் வளரத்தான் செய்யும். நல்ல
இலக்கியம் ஒரு விசித்திரமான மண். களையை அதுவாகவே அழித்துவிட்டு தளிரை
செழிப்பாக வளரச் செய்யும், நம்புங்கள்’ என்றார் அமைதியாக.
சண்முகசிவா நல்ல இலக்கிய ரசனையாளர். தனக்குப் பிடித்த கதைகளை அவர் பேசக்
கேட்டால் அக்கதை எழுதப்பட்ட விதத்தைவிட சிறப்பாகச் இருக்கும். தனக்கு
உவப்பில்லாத விடயத்தை நாசுக்காக அதே நேரத்தில் அழுத்தமாகவும் பதிவு
செய்துவிடுவார். இன்றும் இலக்கிய கூட்டத்தில் முக்கிய பேச்சாளராக
சண்முகசிவா இருப்பதை பலரும் விரும்புகிறார்கள். சரளமான மொழி, உறுத்தாத
நகைச்சுவை, சொல்ல வந்ததை அழுத்தமாக சொல்வது, மாற்றுக் கருத்துகளை திறந்த
மனதோடு ஏற்பது எல்லாம் அவரை பலரும் விரும்பும் மனிதராக வைத்துள்ளது.
இருந்தும் அவருக்கிருக்கும் நுட்பமான இலக்கிய மனதுக்கு அரண் சேர்க்கும்
கதைகளை அவரால் அதிகம் எழுத முடியவில்லை என்பது அவரின் முக்கியமான
வாசகர்களுக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. ‘கூத்தனின் வருகை, வீடும்
விழுதுகளும், கலகக்காரன்’ போன்ற சிறப்பாக வந்திருக்கும் சில சிறுகதைகளள
அவர் எழுதியிருந்தாலும் அவருடைய ஆளுமைக்கு இவை சொற்பமான சாதனைகளே. அவரை
இன்னும் ஆழமான இலக்கியம் படைக்கத் தடையாக இருப்பதாக நான் கருதுவது அவருடைய
நேரத்தை பெருமளவு எடுத்துக் கொள்ளும் மருத்துவமும் சமுக சேவையும் (இதன்
உண்மையான புரிதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுகிறேன்) என்பேன்.
மருத்துவம் அவரின் தொழில். எளியவர்களைச் சக்கையாக சுரண்டும் இன்றைய
மருத்துவத்திற்கும் அவருக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அவ்வகையில்
மருத்துவம் ஒரு சேவையாக நினைக்கப் பட்ட பழைய தலைமுறையின் எஞ்சிய சிலரில்
ஒருவராக சண்முகசிவாவைக் கொள்ளலாம். அவர் வெறும் மருந்து கொடுக்கும்
மருத்துவரல்ல. முதல் சில நிமிடங்கள் நயமாக பேசி அவர்களின் பின்புலனை
அறிந்து கொள்வார். வசதி குறைந்தவர்கள் என்றால் கட்டணமும் குறைவுதான்.
ஏழைகள் மிகுந்திருக்கும் கம்போங் மேடான் பகுதியில் தொடர்ந்து பல மருத்துவ
முகாம் ஏற்பாடு செய்திருக்கிறார். குண்டர் கும்பல் நடவடிக்கைகள் அதிகமுள்ள
இந்தப் பகுதியில் இளைஞர்களுக்கு முறையான வேலை வாய்ப்புகளுக்கு ஏற்பாடு
செய்து தந்திருக்கிறார். கம்போங் மேடான் கலவரத்தில் பாதிக்கப்பட்டு
கைகால்கள் ஊனமான இளைஞர்களுக்கு, மறு வாழ்வு திட்டங்கள் ஏற்பாடு
செய்திருக்கிறார். இதை அவர் செம்பருத்தி இயக்கத்தோடு இணைந்து செய்தார்.
அப்படி கைகள் இரண்டும் ஊனமான ஒரு இளைஞர் இன்று சொந்தமாக வேலை செய்வதோடு ஒரு
ஏழை மாணவியின் உயர் கல்விக்கு உதவியாகவும் இருப்பதை நான்
பார்த்திருக்கிறேன்.
இப்படிதான் ஒருமுறை அவரைச் சந்திக்க அழைத்திருந்தபோது தான் ஒரிடத்திற்குச்
செல்வதாகவும் அலுவல் இல்லாவிட்டால் தன்னோடு வரலாமென்றார். நமக்கெல்லாம்
எப்போது அலுவல் இருந்திருக்கிறது? அன்றுதான் முதல் முறையாக அவர்
வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவர் துணைவியார் கொடுத்த தேநீருக்குப் பிறகு
கிளம்பினோம். பூச்சோங் பகுதியில் சிலரைச் சந்திக்க ஸ்டெல்லா என்பவர்
ஏற்பாடு செய்திருப்பதாக சொன்னார். சன்வேயில் ஸ்டெல்லா அவர்களும் எங்களோடு
இணைந்து கொண்டார். 55 வயதிற்கும் மேலான பெண்மணி. ஆண்களைப் போல கட்டையான
வெள்ளை சுருள் முடிகளில் சில கருப்பு முடிகளும் இருந்தன. ஸ்டெல்லா முன்னாள்
தாதி ஆவார், சண்முகசிவாவின் கிளினிக்கில் கொஞ்ச காலம் வேலை
செய்திருக்கிறார். இளவயதில் கன்னியாஸ்திரியாக ஆசைப்பட்டவர் சில
கசப்புகளினால் தாதியாக பணிப்புரியத் தொடங்கினார். அவரோடு இன்னும் இரு
தோழிகளும் திருமணம் செய்யாமல் சமுக சேவையிலேயே தங்கள் வாழ்வைக் கரைத்து
கொண்டவர்கள். தங்களின் துறையான மருத்துவ ஒட்டிய உதவிகள் தேவைப்பட்ட
எளியவர்களுக்கு முறையான மருத்துவ ஆலோசனைகளும், சிகிச்சைகளும் பெற தங்களால்
இயன்ற எளிய வகைகளில் உதவிக் கொண்டிருந்தனர்.
சமுக சேவை என்றதும் சில விளக்கங்கள் இங்கு தர வேண்டியது என் கடமையாக
உள்ளது. இவர்கள் கலை நிகழ்ச்சி நடத்துவதாக கொள்ளைப் பணம் சேர்த்துவிட்டு
ஒப்புக்கு இரண்டு சக்கர நாற்காலிகளோ இல்லை அறுவைச் சிகிச்சைக்குக் கொஞ்சம்
பணமோ தருபவர்களல்ல. கொட்டிக் கிடக்கும் பணத்தில் சொற்பத்தை கொடுத்துவிட்டு
கன்னத்தில் கை வைத்தோ, பலர் புடைச்சூழ புகைப்படத்திற்கு ஒய்யாரமாக
காட்சியளிப்பது போன்ற ‘சமுக சேவைகளை’ ஸ்டெல்லா போன்றவர்கள்
அறியமாட்டார்கள். மண்ணில் நகரும் எறும்புகளைப் போன்று அவர்களின்
செயல்பாடுகள் அமைதி நிறைந்தவை.
நாங்கள் சென்ற இடம் பூச்சோங் பகுதியில் உள்ள குறைந்த விலை அடுக்குமாடி
வீடுகள் கொண்ட பகுதி. மருத்துவ ஆலோசனைத் தேவைப்பட்டவர்கள் ஒரு வீட்டில்
குழுமியிருந்தனர். இருவர் நோய்மையினால் மத்திய வயதிலேயே வேலை செய்யும்
சக்தியை இழந்தவர்கள். இருப்பினும் சொக்சோ உதவி தொகை கிடைக்காமல்
சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர். மருத்துவத்தில் கூட நிலவும் இனப் பாகுபாடு
குறித்து ஸ்டெல்லா சொல்லிக் கொண்டிருந்தார். சண்முகசிவா தலையை மட்டும்
ஆட்டிவிட்டு அவர்கள் சந்திக்க வேண்டிய தன் நண்பர்களின் முகவரிகளைத் தந்து
கொண்டிருந்தார். இன்னொரு பெண் தன் காதுகளில் தற்கொலை செய்துக் கொள்ள
தூண்டும் குரல்கள் கேட்பதாக சொன்னார். தொடர்ந்து அதையே சொல்லிக்
கொண்டிருந்தார். எனக்குப் பயத்தில் வியர்க்கத் தொடங்கியது.
சண்முகசிவாவிற்கு எல்லாம் பழகியிருக்க வேண்டும். அந்த பெண்ணுக்கு ஆறுதல்
சொல்லிவிட்டு அவர் சந்திக்க வேண்டிய மருத்துவருக்குக் கடிதம் தந்தார்.
அந்த கூட்டத்தில் ரவி என்ற பையன் இருந்தான். ஆரம்பத்திலிருந்தே
சப்பணமிட்டவாறே தலையை மேலும் கீழும் ஆட்டிக் கொண்டிருந்தான். வயது
பதினான்கு இருக்கும். அம்மா இல்லை. அப்பா பாதுகாவலராக பணிப்புரிந்தார்.
அண்ணனும் எங்கோ வேலை செய்வதாக சொன்னார்கள். வீட்டில் தனிமையில் இருந்து
இப்படியாகிவிட்டான். யாரிடமும் பேசுவதில்லை. பதிலுக்கு உறுமுவது போல் ஒரு
சத்தம். சண்முகசிவா அவனிடம் பேசிக் கொண்டிருந்தார். எனக்கு மூச்சு அடைப்பது
போல் இருந்தது. அந்த வீட்டிலிருந்து வெளியே வந்து நின்று கொண்டேன்.
ஸ்டெல்லாவை அவர் வீட்டினருகில் இறக்கி விட்டோம். இருவரின் அமைதியில் கார்
நகர்ந்து கொண்டிருந்தது. நான் மிகவும் நெகிழ்ந்திருந்தேன். நோய்மையின்
அவலங்களை இதற்கு முன் இத்தனை நெருக்கமாக கண்டதில்லை. என் மனதை சண்முகசிவா
அறிந்திருக்க வேண்டும். ‘நமது சமுகத்தின் மறுபக்கம் பெரும்பாலும் இதுதான்
யுவா, இரட்டை கோபுரங்களுக்கு அடியில் எத்தனை மனிதர்களின் வாழ்வு
நசுக்கப்பட்டிருக்கிறது. சமுகத்தின் ஆன்மாவை அறியாத தலைவர்கள் நமது
சமுகத்தின் சாபம், ஸ்டெல்லா போன்றவர்கள் சிலரால்தான் இன்னும் அன்பு அக்கறை
போன்ற வார்த்தைகளுக்கு உரிய அர்த்தம் இன்னும் இருப்பதை உணர்கிறேன்’ என்றார்
சண்முகசிவா. உங்களுக்கும் அந்த பட்டியலில் ஓர் இடமுண்டு என்பதை மட்டும்
அவரிடம் சொல்லாமல் மனதிற்குள் நினைத்துக் கொள்ள அப்போது முடிந்தது...
|
|