இதழ் 21
செப்டம்பர் 2010
  இயற்கை (6) - காற்று
எம். ரிஷான் ஷெரீப்
 
 
 
  பத்தி:

வல்லினம் க‌லை இல‌க்கிய‌ விழா 2

ம. நவீன்

மா. சண்முகசிவா : கனிவில் நனைந்த அக்கறை
சு. யுவராஜன்

பின்தொட‌ரும் ஓவிய‌ங்க‌ள்
யோகி

ஒரு மின்ன‌ஞ்ச‌லும்... த‌ற்கொலை செய்து கொள்ளும் த‌த்துவ‌ங்க‌ளும்!
ம‌. ந‌வீன்

இயற்கை (6) - காற்று
எம். ரிஷான் ஷெரீப்

கட்டுரை:

பிறந்த மண்ணின் இறந்த காலங்கள்
ஏ. தேவராஜன்

புனைவிலக்கியத்தில் நா. கோவிந்தசாமி... ஒரு மீள் பார்வை
கமலாதேவி அரவிந்தன்

‘கூர்’ - 2010 கனடா கலை இலக்கிய மலர் கட்டுரைகள் குறித்த கருத்துக் குறிப்பு
க. நவம்

புத்தகப்பார்வை:

எம். ரிஷான் ஷெரீஃபின் 'வீழ்தலின் நிழல்' - எனது பார்வையில்!
தேனம்மை லக்ஷ்மணன்

பதிவு:

நான் நிழலானால் சிறுகதைத் தொகுதி - விமர்சனக் கூட்டம்
வாணி பாலசுந்தரம்

சிறுகதை:

மார்க் தரும் நற்செய்தி
நாகரத்தினம் கிருஷ்ணா

தும்பிகள்
ஆர். அபிலாஷ்

பயணம்
சின்னப்பயல்

காசியும் கருப்பு நாயும்
ம. நவீன்

மௌனத்தின் உள்ளிருக்கும் மௌனங்கள்
க. ராஜம்ரஞ்சனி

தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...3
எம். ஜி. சுரேஷ்

நடந்து வந்த பாதையில் ...9
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...11

லீனா மணிமேகலை

தர்மினி

இரா. சரவணதீர்த்தா

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

ஏ. தேவராஜன்

ம. நவீன்

ராக்கியார்


எதிர்வினை:


இலக்கியக் குற்றவாளியின் வாக்குமூலம்
பா. அ. சிவம்

பா. அ. சிவத்தின் எதிர்வினைக்கான பதில்
ம. நவீன்

     
     
 

'ஊரெல்லாம் உறவினர்கள் - உற்றுப் பார்க்க யாருமில்லை' - விடுகதையைப் போலத் தோன்றும் இதைத்தான் காற்றுக் குறிப்பாக இடவேண்டும். அடர்ந்த கானகத்துக்குள் உலவும் சிறு விலங்கொன்றினையோ, சமுத்திரத்தின் ஆழத்துக்குள் நீந்தும் சிறிய நீர்ப் பிராணியொன்றையோ கூட எளிதில் பார்த்துவிடக் கூடிய காலமிது. ஆனால் உலகம் தோன்றிய காலத்திலிருந்து எல்லா உயிர்களையும் எங்கெங்கோ அலையவைத்தபடி உடலுக்குள்ளிருக்கும், ஆன்மாவைக் கண்களால் கண்டவர்கள் யாருமேயில்லை. அது ஒரு மாய உருவத்துடன் எல்லா உயிர்களினதும் அசைவுகளைத் தீர்மானிக்கிறது. காற்றானது உலகின் ஆன்மா. உலகை அசைய வைத்துக் கொண்டிருக்கும் உயிர். உலகின் அசைவுகளைத் தீர்மானிக்கும் பலம் வாய்ந்த மூச்சு.

காற்று ஒரு பரம ஏழை யாசகனைப் போல எளிமையானது. உலகையே உயிர்ப்புடன் வைத்திருப்பது தான் தானென்ற மமதை சிறிதுமற்றது. அதனால்தான் காற்றால் எல்லா வறிய இடங்களையும் கூட எளிதில் சொந்தம் கொண்டாடிவிட முடிகிறது. எல்லா இடங்களுக்கும் ஒரு உரிமையுடன் சென்று வரமுடிகிறது. காற்று இல்லையேல் எவரும் உயிருடன் உலவ முடியாது. எல்லா உயிர்களிடத்திலும் எந்தத் தராதரமும் பார்க்காமல் பழகும் காற்று, ஒரு நாளைக்குள் எத்தனை வடிவங்களைத் தான் கொண்டுலவுகிறது? பெரும் மகிழ்வுடன் தன்னைப் பிடித்துச் சிறைவைக்கும் ஒரு குழந்தையின் பலூனுக்குள் மகிழ்வுடன் சிறைப்படும் காற்று, அப் பலூன் வெடிக்கும்போது கனத்த சப்தத்துடன் ஒப்பாரி வைத்து அழுகிறது. அன்றேல் குழந்தையே பலூனைத் திறந்து, காற்றை வெளியேற்றியனுப்பும் கணத்தில் அது சந்தோஷ ஊளையிட்டுப் பறக்கிறது.

வனாந்தரங்களுக்குள் ஊடுருவிச் சென்று, பச்சை இருளுக்குள் மறைந்திருக்கும் உயிர்களிடம் நலம் விசாரித்து வரும் காற்று, தனது உறவினைக் கண்ட மகிழ்ச்சியில் அங்கிருக்கும் பூக்கள் தந்தனுப்பும் வாசனைகளை அயல்கிராமங்களுக்குக் கொண்டு சேர்க்கிறது. ஒரு நேர்மையான தபால்காரனைப் போல, உலகின் அனைத்து வாசனைகளையும் சுமந்துசென்று எல்லா இடங்களுக்கும் இலவசமாக, எளிதாகப் பரப்புவதை ஒரு சேவையைப் போலச் செய்கிறது காற்று.

வாசனையை மட்டும்தான் என்றில்லை. எல்லோராலும் விரும்பியோ விரும்பாமலோ நேசிக்கப்படும் காற்றிடம் ஒரு திருட்டுக் குணமுமிருக்கிறது. கடற்கரையில் நனைந்துபோன பாதங்களோடு மணலொட்டிச் செல்வதுபோல, காற்று சற்று வீரியமாகச் செல்லும்போதெல்லாம் காணும் இலகுபொருட்களையெல்லாம் அபகரித்து எடுத்துவருகிறது. எத்தனை விலங்குகள், என்னென்ன பொருட்களை, எவ்வளவு காலமாகக் கஷ்டப்பட்டுச் சேமித்தனவோ...அது பற்றிய கவலை சிறிதேனுமின்றி அவற்றிடமிருந்து பலவந்தமாகப் பறித்துக் கொண்டு வரும் காற்று, அவற்றைத் தான் தொடர்ந்தும் வைத்திருப்பதுமில்லை. ஏதோ ஒரு ஆசையில் எடுத்து வந்த செல்வங்களை எறிந்துவிட்டுச் செல்லும் ஒரு துறவியைப் போல, காற்றானது தான் எடுத்து வந்தவற்றை இடைவழியில் விட்டுச் சென்று கொண்டேயிருக்கிறது..

உலகின் காலநிலையை தீர்மானிப்பதை காற்றே செய்கிறது. மேகங்களை நெருங்க வைத்து மழையைப் பிரசவிப்பதையும், அலைகளை ஒன்று கூட்டிக் கரைகளை அரிக்க வைப்பதையும் இன்னும் இதுபோலப் பலவற்றையும் உருவமில்லா அக் காற்றே ஒரு பொழுதுபோக்குப் போல நிகழ்த்துகிறது. காற்று, ஒரு நல்ல விவசாயியும் கூட. அது தாவரங்களிலிருந்து எடுத்து வரும் மகரந்தங்களைக் காணும் நிலங்களிலெல்லாம் விதைத்தபடி தொடர்கிறது. அந்த விதைகள் மண்ணுக்குள்ளிருந்து பிறந்துவருகையில் தாலாட்டுப் பாடலோடு வரும் காற்று, அவை வளர்ந்து பூக்களைப் பிரசவிக்கையில், அவற்றிடம் தான் நட்டு வளர்த்த பாசம் சொல்லி, அவற்றின் மகரந்தங்களைக் காவியபடி சென்று இன்னொரு நிலத்தில் விதைக்கிறது.

எனது அயலூரில் பெரும் மலையொன்று இருக்கிறது. அதன் உச்சியில் பெரும் மண்டபங்களும் பூங்காவொன்றும் குளமொன்றும் வழிபாட்டுத் தளங்களும் அமைத்து பொதுமக்களின் உபயோகத்திற்காக விட்டிருக்கிறார்கள். அங்கு நானும் எனது குடும்பத்தாரும் ஒரு முறை போயிருந்தோம். அடர்ந்த கானகத்தின் உச்சியிலிருக்குமொரு மலையில் இவற்றையெல்லாம் நிர்மாணித்திருக்கிறார்கள். எனவே, சூரியனுக்கு மிக அருகில் செல்வதைப் போல இருப்பதால் அதிக உஷ்ணம் தாக்குமென்றே எண்ணியிருந்தோம். எனினும், மேலே செல்லச் செல்ல குளிர்ந்த பனிக் காற்று வந்து ஒரு நல்ல நண்பனைப் போலத் தழுவிக் கொண்டது. அதன் வரவேற்பு அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தது. உச்சியை அடைந்ததும் அந்த நண்பனின் ஆனந்தத் தாண்டவத்தை உணர்ந்தோம். குழந்தையை மேலே போட்டுப் பிடித்து மனிதன் கொஞ்சுவது போல, காற்று ஆளைத் தூக்கவெனத் துரத்தி விளையாடியது. வியர்வை போக்கவும், கழுவிக் காயப் போட்ட துணி உலர்த்தவும் மட்டுமே காற்றை யாசிக்கும் மனிதர்களுக்கு, அணிந்திருந்த ஆடையை அசைத்துப் பார்க்கும் அக் காற்றின் உக்கிரம் ஒரு வினோதமான அனுபவத்தைத் தந்தது. கொண்டு போயிருந்த உணவுகளை விரித்துண்ண நிலத்துக்குத் துணியை விரிக்கையில், காற்று அத் துணியை அபகரித்துக் கொண்டு பறந்து விளையாட்டுக் காட்டியது. அன்று காற்றுக்கெதிரான ஆயுதமாக கற்களைக் கையாண்டோம். துணியின் நான்கு மூலைகளிலும் தொப்பை பருத்த காவல்காரர்களாகக் கற்களைக் கண்டும் காற்று சிறிதும் அச்சப்படவில்லை. அது தனது ஆட்டத்தைத் தொடர்ந்துகொண்டே இருந்தது.

வானில் தனது பயணப் பாதைகளைக் கொண்ட பறவைகளுக்கு, கண்ணுக்குத் தெரியாத காற்றுடனான அவற்றின் சினேகம் அற்புதமானது. கொடிய விலங்குகளிடமிருந்து தனது குஞ்சுகளைக் காப்பதுபோல, உலகில் எப்பொழுதும் மிக அதிகமான இரகசியங்களைத் தன்னகத்தே புதைத்து வைத்திருக்கும் பறவைகள், காற்றிடம் மட்டும் எல்லாவற்றையுமே வெளிப்படுத்தி விடுகின்றன. தமது ஒவ்வொரு பிரயாணத்தின் போதும் ஒரு பயணத் தோழியைப் போலக் கூடவே வரும் காற்றின் தோள்களில், தமது சிறகுகளைப் போட்டுக் கதை பேசிப் பேசியே பறந்துசெல்லும் அவை, காற்றின் துயர்களையும் கேட்டுக் கொண்டேதான் நகர்கின்றன. எப்பொழுதேனும் புறுபுறுத்துக் கொண்டிருக்கும் காற்றுக்கு, தமது இறகுகளைக் களைந்து அவற்றால் அதன் துயர் நீக்கத் தடவியும் விடுகின்றன பறவைகள்.

எங்கோ தொலைவில் தனியாக ஊளையிடும் விலங்குகள், குரலெழுப்பும் பட்சிகள், கைக் குழந்தைகள், வெறுமனே தனியாகக் கதைத்தபடியிருக்கும் சித்தம் பிசகிய மனிதர்களென அனைத்துமே ஒரு நெருங்கிய நண்பனுடன் உரையாடுவதைப் போல காற்றுடன் தான் உரையாடுகின்றன. அவற்றின் மன்றாட்டம் என்னவோ காற்று அமைதியாகக் கேட்டுக் கொள்கிறது. ஆனால் இரகசியம் பாதுகாக்கும் எண்ணம் சிறிதுமற்ற அது அருகிலிருக்கும் எல்லா அயல்விலங்குகளிடமும் அவ் உரையாடல்களைக் கொண்டுசேர்த்து விடுகிறது. உண்மையில் சித்தம் பிசகியவர்கள் தனியாகக் கதைத்துக் கதைத்து காற்றுடனான தமது நெருக்கத்தைத் தாம் அறியாமல் வளர்த்துக் கொண்டேயிருக்கின்றனர். காற்றுடனான நட்பு எளிதில் வாய்த்துவிடுகிறது அவர்களுக்கு. சித்தம் பிசகிய மூதாட்டியொருத்தியை நான் பார்த்திருக்கிறேன். வளைந்த முதுகைச் சுமந்தவண்ணம் எப்பொழுதும் ஒரு கோலினை ஊன்றியபடி நடமாடும் அவள், தானறியாமலேயே தூங்கிவிடும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களிலெல்லாம் காற்றுடன் கதைத்துக் கொண்டேயிருப்பாள். அவளது மொழி எவருக்கும் புரியாது. உலகில் வயது முதிர்ந்த காற்றுத்தான் தன் நெருங்கிய தோழி என்பது போல, பரந்த தெருவழியே, கோலினை ஊன்றி ஊன்றி ஊரூராகச் செல்லும் அம் மூதாட்டியோடு கூடவே போகிறது காற்று.

காற்றுதான் உலகின் முதல் தூதுவர். மணல், முழுமையாகத் தண்ணீரை உறிஞ்சிக் கொள்வது போல அது உலகின் எல்லா உயிர்களினதும், சடப் பொருட்களினதும் குரல்களை எளிதாகப் புரிந்துகொண்டு விடும் அபார ஆற்றல் கொண்டது. அதற்கென்றொரு குரல் இல்லை. ஆனால் எல்லா ஒலிகளையும் சிரமம் பாராது சுமந்துசென்று அவை எங்கு சென்று சேரவேண்டுமோ அங்கு கொண்டுபோய்ச் சேர்த்துவிடுகிறது. காற்றைத் தவிர உலகில் எதுவுமே இலவசமாக இல்லை. அதே போல காற்றைத் தவிர, இயற்கையிலிருக்கும் எல்லாமுமே மனிதனின் தற்கொலைகளுக்கு எல்லாவிதத்திலும் உதவக் கூடியன. காற்றிடம் அப் பழக்கம் இல்லை. மனிதனானவன் தற்கொலையின் மூலமும், பிறரைக் கொல்வதன் மூலமும் காற்றுக்கு, சம்பந்தப்பட்ட மனிதனுடனான உறவைத் துண்டித்துவிடுவதைத்தான் முதலில் செய்கிறான். காற்று துணையாக இருக்கும்வரையில் தன்னால் அக் காரியத்தை வெற்றிகரமாகச் செய்துமுடிக்க இயலாதென அவனுக்குத் தெரிந்திருக்கிறது. காற்று இங்கு ஒரு காவல் பிராணியாகிறது. இயன்றவரை அக் கொலைச் செயலிலிருந்து அவ் விலங்கைக் காப்பாற்றப் போராடுகிறது. இயலாமல் போய்விடும் இறுதிக் கணத்தில் ஒரு பெருமூச்சோடு வெளியேறுகிறது.

முழுப் பிரபஞ்சத்துக்குமே வன்மையான கோபம், காற்றுடையதுதான். அது உக்கிரமாகக் கோபம் கொள்ளும் கணத்தில், அதன் நடை மாறுபடுகிறது. பெருஞ்சினத்துடன் சுழன்று சுழன்று ஒரு இராட்சசப் பூதம் போல வருமது, தன்னைக் கொண்டாடிய வனாந்தரங்களின் அழுகுரல்களைக் கண்டுகொள்ளாது. இலைகளைக் கிளைகளைப் பலி கொடுத்து, தனக்கு தலைசாய்த்து நிற்கும் பெருவிருட்சங்களைக் கண்டுகொள்ளாது. எப்பொழுதுமே அமைதியாகப் படுத்திருந்த மலைகள், பாறைகளை உருளச் செய்தழும் அவற்றின் திடுக்கிட்ட அதிர்வுகளைக் கண்டுகொள்ளாது. சமுத்திரங்களும், நதிகளும், நீர் நிலைகளும் தங்கள் மேனியில் வரிவரியாகக் காற்றுக்கு எழுதும் மன்றாட்டக் கடிதங்களைக் கண்டுகொள்ளாது. அவ்வளவு காலமும் தன்னால் அசைந்த விலங்குகளின் ஓலங்களையும், ஒப்பாரிகளையும், கண்ணீர்களையும் கூடக் கண்டுகொள்ளாது. அது தனது கோபத்தை, பெரும் அழிவுகளாக மாற்றிவிட்டுத்தான் ஓயும்.

பிறப்பு முதல் இறப்பு வரை தன்னுடன் கூடவே இருக்கும் காற்றை எப்பொழுதாவதுதான் மனிதன் நேசிக்கிறான். காற்றை எல்லோருமே ஞாபகித்துப் பார்க்கட்டுமெனக் காற்றாடிகளைப் பறக்கவிட்டு, அவற்றைக் காற்றுடன் உறவாட வைக்கிறான். அவையும் மனிதன் தீர்மானிக்கும் எல்லைகளுக்குள் பறந்த வண்ணம் காற்றுடன் உரையாடுகின்றன. காற்று அவற்றைத் தன் திக்குகளுக்குள் எடுத்துச் செல்ல எத்தனித்துக் கொண்டேயிருக்க, ஜோஸியக்காரன் தாயத்துக் கயிறொன்றால் உலகின் பிசாசுகளனைத்தையும் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவருவதைப் போல, மனிதன் மெல்லிய நூலொன்றினால் காற்றையும், தனது காற்றாடிகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறான்

நாம் உயிர் வாழ உதவும் காற்றுக்குத் துரோகம் செய்ய மனிதனைத் தவிர, உலகில் வேறு எதுவுமேயில்லை. நாம் பிறந்தது முதல், நமது உயிரைப் போல கண்ணுக்குத் தெரியாமல் கூடவே இருப்பதால், நாம் காற்றினைக் கண்டுகொள்வதேயில்லை. அதன் அருமையை உணர்வதுமில்லை. மனிதன் நன்றிகெட்டவனாக மாறி, இலகுவாக மாசுபடுத்திவிடுபவற்றில் முதலாவதாகக் காற்றே இருக்கிறது. நாகரீகமான முறையில் மனித வாழ்வு முன்னேறிக் கொண்டே செல்கையில், மனிதன் உருவாக்கி உலகில் உலவ விடும் இயந்திரங்களும் மழைக் காலத்தில் புற்றுகளிலிருந்து வெளிப்படும் ஈசல்கள் போல பெருகுகின்றன. அவை வெளிப்படுத்தும் அழுக்குகள், சூழலில் கலந்து காற்றினை மாசுபடுத்திக் கொண்டேயிருக்கின்றன.

இயற்கையின் பெரும் கொடையான மழை, தான் வருகையில் மண்ணின் வாசனையால் காற்றினைத் தூய்மையாக்கியபடிதான் வருகிறது. கானகங்கள், விருட்சங்கள், சிறு தாவரங்கள் என இயற்கையின் எல்லாமும் கூட விலங்குகள் வெளியிடும் அழுக்குக் காற்றினைத் தனக்குள்ளெடுத்து, சுற்றுச் சூழல் காற்றினைத் தூய்மைப்படுத்தவென கணங்கள் தோறும் உழைத்துக் கொண்டிருக்கையில், அதற்கு எதிர்மாறாக மனிதன், காற்றினைத் தொடர்ந்தும் குப்பையாக்கும் நடவடிக்கையையும், அதைத் தொடர்ந்தும் செய்வதற்கான ஆய்வுகளையுமே மேற்கொண்டபடியிருக்கிறான். குழந்தையறியாமல் அதற்குக் கொடுக்கப்படும் மருந்துக்குள் இனிப்பைத் தடவிக் கொடுப்பதுபோல, நாமே அறியாமல் எமது சுவாசக் காற்றோடு மாசுக்களும் உள்ளே செல்கின்றன. தூய்மையான காற்று அற்றுப் போனதால், புதிதுபுதிதான நோய்கள் எல்லா உயிர்களையும் பீடிக்கின்றன. உப்பு நிலத்தில் இரும்பு இலகுவில் துருப்பிடித்துவிடுவதைப் போல, மாசுற்ற காற்றுலவும் பூமியில் எல்லா உயிர்களினதும் ஆரோக்கியமான தேகங்களைக் குப்பைக் காற்று மட்டுமே அரவணைக்கின்றது. அது அவ்வுயிர்களின் அனைத்தையும் இலகுவில் பாழாக்கிவிடுகிறது.

உலகில் இலவசமாகக் கிடைத்தபடியிருக்கும் காற்றையும், விலைபேசி விற்கும் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில், தூய காற்றின்மைதான் உலகில் அனைத்து வியாதிகளின் பரவலுக்கும் காரணமென்பதை உணர்ந்த பல நிறுவனங்கள் சுத்தமான காற்றைச் சுவாசிக்க, கணத்துக்கு இவ்வளவு விலையென கட்டணம் அறவிட்டு, காற்றினை வாடகைக்குக் கொடுக்கின்றன. தினந்தோறும் புதிது புதிதாக முளைக்கும் இந் நிறுவனங்களுக்குள், தன்னைச் சிறைப்படுத்தி ஆரோக்கியம் தேடித் திரிகிறான் மனிதன். ஒரு வகையில் காற்றினை மிகக் கொடியதாக மாசுபடுத்தி, சுவாசிக்கவும் கட்டணம் கேட்கும் இது போன்ற நிறுவனங்களிருக்கும் நாடுகளை, உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளெனச் சொல்வது எவ்வளவு பொய்யானது? அவை சுயநலமானவை. உயிரைச் சேதப்படுத்திக் களிப்புறும் மன விகாரம் பிடித்தவர்களைப் போலவே உலகில் அந் நாடுகள் உருவாகிக் களிப்புற்றுக் கிடக்கின்றன. மனிதன் ஏமாளியாக இருக்கிறான்.

நல்லவேளையாக இதை வாசித்துக் கொண்டிருக்கும் நாம், இப்பொழுது வாடகைக் காற்றில் உலவவில்லை. இதைத் தொடரச் செய்ய, நமக்கு அந் நிறுவனங்களின் தேவையற்றுப் போக என்ன செய்யலாம்? நம்மைச் சுற்றியுள்ள இயந்திரங்களும் மனிதர்களும் மாசுபடுத்தும் நமக்குச் சொந்தமான, எப்பொழுதும் நம்முடனேயே இருக்கின்ற காற்றினைத் தூய்மைப்படுத்த என்ன செய்யலாம்? புதிதாகப் பிறந்த குழந்தையை தூய தண்ணீரில் கழுவியெடுத்ததும் அதன் கறைகள் நீங்கி தூய்மையடைந்துவிடுவதைப் போல, எதைச் செய்தால் காற்று தூய்மையாகும்? ஆளுக்கொன்றென, பெரு விருட்சங்களின் சிறு கன்றுகளைத் தமது அருகாமை நிலப்பரப்புக்களில் நடலாம். அவை தளைத்தோங்கி வருகையில் நம் அருகாமைக் காற்றும் தூய்மையாகும். அக் காற்று, நமக்கு மருத்துவத் தேவையற்றுப் போகவும், நம் வாழ்நாளை நீடிக்கவும் செய்து நமது இறுதிக் கணம் வரை கூடவே வரும். நிச்சயமாக!

சூறாவளியின் பாடல்

பலம் பொருந்திய
பாடலொன்றைச் சுமந்த காற்று
அங்குமிங்குமாக அலைகிறது

இறக்கி வைக்கச் சாத்தியமான
எதையும் காணவியலாமல்
மலைகளின் முதுகுகளிலும்
மேகங்களினிடையிலும்
வனங்களின் கூரைகளிலும்
நின்று நின்று தேடுகிறது

சமுத்திரவெளிகளிலும்
சந்தைத் தெருக்களிலும்
சுற்றித்திரிய நேரிடும்போது
இரைச்சல்கள் எதுவும் தாக்கிடாமல்
பொத்திக்கொள்கிறது பாடலை

பறவைகள் தாண்டிப் பறக்கையிலும்
காத்துக்கொள்ளப்படும்
இசை செறிந்த பாடல்
சலித்துக் கொள்கிறது
ஓய்வின்றிய அலைச்சலின்
எல்லை எதுவென்றறியாது

தனிமைப்பட்டதை
இறுதியிலுணர்ந்தது
தெளிந்த நீர் சலசலக்கும்
ஓரெழில் ஆற்றங்கரை
மரமொன்றின் துளைகளுக்குள்ளிருந்து
வெளிக்கசிந்து பிறந்த நாதம்

இருளுக்குள் விசித்தழும்
பாடலின் கண்கள் துடைக்கும் காற்று
அதைச் சில கணங்கள்
அந்தரத்தில் நின்று
பத்திரமாகப் பார்த்திருக்கச் சொல்லி
ஆவேசத்தோடு கீழிறங்கும்

பின்னர் பாடலை அழ வைத்த
காரணம் வினவி
தான் காணும்
வெளி, தெரு, சமுத்திரம், நதி, வனமென
அத்தனையிலும் தன் சினத்தினைக் காட்டி
அடித்துச் சாய்க்கும்

இயலாமையோடு எல்லாம்
பார்த்திருக்கும் பாடல்
இறுதியில் கீழிறங்கி
எஞ்சிய உயிர்களின்
உதடுகளில் ஒப்பாரியாகி
கோபக் காற்றெதிரில் செத்துப்போகும்

காலம்
இன்னுமோர் பாடலை
காற்றுக்குக் கொடுக்கக் கூடும்

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768