இதழ் 21
செப்டம்பர் 2010
  பிறந்த மண்ணின் இறந்த காலங்கள்
ஏ. தேவராஜன்
 
 
 
  பத்தி:

வல்லினம் க‌லை இல‌க்கிய‌ விழா 2

ம. நவீன்

மா. சண்முகசிவா : கனிவில் நனைந்த அக்கறை
சு. யுவராஜன்

பின்தொட‌ரும் ஓவிய‌ங்க‌ள்
யோகி

ஒரு மின்ன‌ஞ்ச‌லும்... த‌ற்கொலை செய்து கொள்ளும் த‌த்துவ‌ங்க‌ளும்!
ம‌. ந‌வீன்

இயற்கை (6) - காற்று
எம். ரிஷான் ஷெரீப்

கட்டுரை:

பிறந்த மண்ணின் இறந்த காலங்கள்
ஏ. தேவராஜன்

புனைவிலக்கியத்தில் நா. கோவிந்தசாமி... ஒரு மீள் பார்வை
கமலாதேவி அரவிந்தன்

‘கூர்’ - 2010 கனடா கலை இலக்கிய மலர் கட்டுரைகள் குறித்த கருத்துக் குறிப்பு
க. நவம்

புத்தகப்பார்வை:

எம். ரிஷான் ஷெரீஃபின் 'வீழ்தலின் நிழல்' - எனது பார்வையில்!
தேனம்மை லக்ஷ்மணன்

பதிவு:

நான் நிழலானால் சிறுகதைத் தொகுதி - விமர்சனக் கூட்டம்
வாணி பாலசுந்தரம்

சிறுகதை:

மார்க் தரும் நற்செய்தி
நாகரத்தினம் கிருஷ்ணா

தும்பிகள்
ஆர். அபிலாஷ்

பயணம்
சின்னப்பயல்

காசியும் கருப்பு நாயும்
ம. நவீன்

மௌனத்தின் உள்ளிருக்கும் மௌனங்கள்
க. ராஜம்ரஞ்சனி

தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...3
எம். ஜி. சுரேஷ்

நடந்து வந்த பாதையில் ...9
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...11

லீனா மணிமேகலை

தர்மினி

இரா. சரவணதீர்த்தா

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

ஏ. தேவராஜன்

ம. நவீன்

ராக்கியார்


எதிர்வினை:


இலக்கியக் குற்றவாளியின் வாக்குமூலம்
பா. அ. சிவம்

பா. அ. சிவத்தின் எதிர்வினைக்கான பதில்
ம. நவீன்

     
     
 

உலகின் எந்த மூலைக்குப் போனாலும் கிராமங்களும் தோட்டப்புறங்களும்தான் மனிதனின் ஒட்டுமொத்த பண்பாட்டுக் கலாச்சார பிறப்பிடங்களாகத் திகழ்கின்றன. மலேசியாவைப் பொறுத்தமட்டில் தோட்டப்புறங்கள்தான் நமது முதல் இருப்பு என்பதைத் தலைமுறை மறந்து வருகிறது. அங்கிருந்து கிளை விட்டுப் புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற தமிழர்கள் நகர்ப்புற வாழ்க்கை வெளியில் பழையவற்றை இழந்த தவிப்பில் போராட்டத்தினூடே பயணத்தைத் தொடங்கிக் கொண்டிருக்கிறார்கள். தாங்கள் ஒடிப்பிடித்து விளையாடிய தோட்டக் காடுகளை நினைவில் மட்டும் வைத்துக் கொண்டு ஆண்டுக்கொருமுறை நிகழ்கின்ற தீமிதி உற்சவத்தில் மாத்திரம் கலந்து கொண்டு பின் திரும்பவும் தங்கள் புறாக்கூடுகளுக்குப் பறந்து போய்விடுகிறார்கள். தவிர, அத்தோட்டங்கள் தமிழர்களின் வாழ்வில் நிகழ்த்திய சுகத் தழும்புகளை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் உள்ளுக்குள்ளே புதைத்துக் கொண்டு கால நரையின் எல்லைகளில் உதிர்ந்துவிடுகிறார்கள்.அப்படியொரு தோட்டப்புறத்திலிருந்து பிறந்து வளர்ந்தவன் என்ற முறையில் என்னை ஆளாக்கிய தோட்டத்தை நினைவுகூர்வதில் தாய்மையின் பூரிப்பை உள்வாங்குகிறேன்.

ஜாசின் லாலாங் என்பது அத்தோட்டத்தின் பெயர். இத்தோட்டம் இன்றளவும் இருப்பினும், 1980 களுக்குப் பின் நகர்மய வளர்ச்சியினால் தொண்ணூறு விழுக்காட்டினர் சுற்றியுள்ள நகரங்களுக்குப் பெயர்ந்துவிட்டார்கள். இத்தோட்டத்தைச் சுற்றி ஐந்து கல் தொலைவில் புக்கிட் செர்மின் டிவிஷன் (நான் பிறந்து வளர்ந்தது), பத்து லாங், கடலயம், சின் சின் ஆகிய சிறு தோட்டங்களும் 1990கள் வரை செழிப்பாக இருந்தன. தோட்டங்கள் யாவும் இருந்த இடம் தெரியாத அளவுக்கு செம்பனை விளைச்சலுக்காகச் சொற்ப வருவாயுடன் பணிபுரியும் இந்தோனேசிய, வங்காளதேசக் குடியேறிகளால் நிரப்பப்பட்டு மலாய்க்காரக் குத்தகையாளரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இப்பொழுது கோயில்கள் மட்டும் அம்போவென்று இருக்கின்றன. பாவம் தெய்வம்! இத்தோட்டங்கள் யாவும் 1920-ஆம் ஆண்டு வாக்கில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று பழையவர்கள் இன்னமும் சொல்கிறார்கள். அதிலும் குறிப்பாகப் புக்கிட் செர்மின் தோட்டத்தில், 1.6.1927 என்ற திகதியிட்ட C.A.Lacey என்பவரின் ஞாபகார்த்த தலமும் (சிறு கல்லறை) ஒரு குதிரைச் சிலையும் கிறிஸ்தவர்களின் கல்லறை சாயலில் ஆறடி உயரத்தில் இன்னமும் உள்ளது.தோட்டத்தின் மேலாளரான C.A.Lacey அவர்கள், மக்கள் நலன் மீது பெரும் அக்கறை கொண்டவர் என்று என் அம்மா திருமதி ரூத் ஏசுதாஸ் கூறக் கேள்விப்பட்டுள்ளேன். ஆண்டுதோறும் சம்பந்தப்பட்ட திகதியில் மெழுகுவர்த்தியை ஏற்றி வழிபட்டுவரும் வழக்கம் இன்றளவும் தொடர்கிறது.நானும் அவ்வழிபாட்டைச் செய்திருக்கிறேன். குதிரை மீது சவாரி செய்தவாறு தலத்தை ஒட்டியிருந்த மருத்துவமனையை மேற்பார்வையிட்டபடி வருவாராம் C.A.Lacey அவர்கள். அப்படிப் பார்க்கும்போது புக்கிட் செர்மின் தோட்டம் 1920-க்கு முன்பே தோன்றியிருக்கலாம். C.A.Lacey என்பவர் நோயாளிகளின் கனவில் தோன்றியதன் விளைவாக ஞாபகார்த்த தலம் எழுப்பப்பட்டது என்று சொல்லப்படுகிறது. ஜாசின் லாலாங் பின்னாளில் பெரிய தோட்டமாக உருமாறியது. ஆயிரத்துக்கும் அதிகமானோர் பால் வெட்டுத் தொழிலாளிகளாய்ப் பணிபுரிந்துள்ளனர்.விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே மலாய்க்காரர்களும் சீனர்களும் மரம் சீவியிருக்கின்றனர். இத்தோட்டத்தில்தான் தமிழ்ப்பள்ளி அமைந்திருந்தது. ஏழு மணிக்குப் பள்ளியென்றால் காலை ஆறு மணிக்கே நிலவொளியின் துணையோடு பொடிநடையாய்ப் பள்ளி வந்து சேர்ந்துவிடுவோம். பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது ரப்பர் காட்டுக் குறுக்கு வழியாகக் காய்கறிகளைப் பறித்துத் தின்றபடி மாலை நான்கு மணிக்கு வந்தடைவோம்.

தொடக்க காலத்தில் ஜாசின் லாலாங் தோட்டத்தில் மலையாள வகுப்பு நடந்ததாகவும் நான் பிறந்த புக்கிட் செர்மின் டிவிஷனில் தமிழ்ப்பள்ளி இருந்ததாகவும் 74 வயது திருவாட்டி பாரு குட்டி நினைவு கூர்ந்தார். பின்னர், பிரிட்டிஷாரால் தமிழர்கள் அதிகமாக அழைத்து வரப்படவே அத்தாப்புக் குடிசையிலிருந்த தமிழ்ப்பள்ளி விரிவாக்கம் கண்டதாகக் கடந்த இரண்டு தலைமுறையாக வசித்து வருகின்ற திரு.மயில்வாகனம் விவரித்தார். 1960-1961 ஆண்டு வாக்கில் இத்தமிழ்ப்பள்ளி ஜாசின் லாலாங் தோட்டத்திற்கு மாற்றப்பட ஏற்கெனவே புக்கிட் செர்மின் தோட்டத்திலிருந்த தமிழ்ப் பள்ளி நிறுத்தம் கண்டது. திரு. வெங்கடசாமி, திரு. பழனியாண்டி, திரு. அப்துல் காதர், திரு.நாகலிங்கம், திருமதி கனகாம்பரம், திரு. பத்மநாபன், திரு கோவிந்தசாமி, திரு காளியப்பன், திரு கே.டி.சமாதானம் போன்ற ஆசிரியர்களின் பெயர்களை இன்னும் பலர் ஞாபகத்தில் வைத்துள்ளனர். ஒவ்வொரு தோட்டத்திலும் ஆயாக்கொட்டகை இருந்துள்ளது. ஆயம்மா ஒருவரின் பராமரிப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் வளர்ந்துள்ளார்கள். அந்தப் பிள்ளைகளில் யாருமே வன்முறையாளர்களாக மாறியதில்லை. ஆமாம், இந்த ஆயம்மா எந்தப் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. படித்துவிட்டு வந்தார்! தமிழ்ச் சமுதாயத்தில் இன்று தலைவிரித்தாடுகிற வன்முறைகளுக்கு அன்றைய ஆயம்மாக்களைத் திரும்பவும் எண்ணிப் பார்க்கவேண்டியுள்ளது. இன்றைய தாய்மார்களின் குழந்தை வளர்ப்பு முறை ஏன் சீர்கெட்டுக் கிடக்கிறது?

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை வரலாற்றில் கொடுங்கோலர்களாகக் காட்டப்படும் சரித்திரப் பக்கங்களை நம்ப மறுக்கின்றனர் தமிழர்கள். தோட்டத் தொழிலாளர்களின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தினர் பிரிட்டிஷார்.ஒவ்வொரு தோட்டத்திலும் சிறு மருத்துவமனை இருந்தது.பிரசவ சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவ வண்டியும் இருந்தது.நோயாளிகள் எந்த நேரத்திலும் அதைப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது.எல்லாம் இலவசம்தான்! தோட்டத்தில் துக்க காரியம் நிகழ்ந்து விட்டால் எல்லோருக்கும் விடுப்பு வழங்கப்பட்டது. துக்கத்தில் பங்கெடுக்க ஊரே திரண்டு வரும்! ஒப்பாரியெனும் நமக்கே உரிய பாடலைப் படிப்பறிவற்ற, யாப்பிலக்கணமறியாப் பாட்டிமார்கள் சந்த ஓசை பிசகாமல் உருக்கமுடன் பாடுவார்கள். அந்தப் பாட்டிமார்களில் பலர் மறைந்து போக இன்னும் ஒருவர் மட்டும் உள்ளார் தோட்டத்தில் இப்போது.காலையில் பால்வெட்டுத் தொழிலாளர்கள் பெரட்டுக்குப் போவதற்கு முன்பு, எல்லாரும் ‘கொய்னா’எனும் ஒருவகை மருந்தைக் குடித்துவிட்டுத்தான் புறப்பட வேண்டுமாம். மேலும், கே.வி.நாயர், ஐயப்பன், சேகர் போன்ற ஹெச்.எ (மருத்துவர்கள்) திறம்பட சிகிச்சையளித்துள்ளார்கள் என்று 70 வயது நெருங்கும் தனமணி தெரிவித்தார். அந்த மருந்தைப் பற்றிப் பலர் முரண்பாடாகக் கூறினும், அதை உட்கொண்டவர்கள் இன்னமும் தெம்பாக இருக்கிறார்களே, எப்படி?

ஜாசின் லாலாங் தோட்டத்திலிருந்து கடலயம், பத்து லாங் தோட்டம் செல்லும் செம்மண் சாலையிலிருந்து ஆறு கல் தொலைவில் இந்து மயானம் இருந்தது. உயிர் துறந்த உறவுகளின் நீள்துயிலுக்கான அத்தனை நீத்தார் கடன்களும் அங்குதான் நிறைவேற்றப்பட்டன. தோட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தந்துள்ளதாக வசந்தகுமார் தெரிவித்தார். இன்று அவ்வாறில்லை. ஏகப்பட்ட கெடுபிடிகளுக்கு மத்தியில்தான் இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது.

அன்றைய தோட்ட மருத்துவர்கள், பெரும்பாலான வேளைகளில் லயன்கள் வாரியாகச் சுற்றிக் கொண்டு கால்வாய், வீட்டின் சுற்றுப் புறம் போன்றவற்றைக் கண்டிப்புடன் கண்காணித்தார்களாம். அப்படித்தான், தோட்ட நிர்வாகம் அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தது. தவிர, ஆண்டுக்கு ஒரு முறையாவது தோட்ட வீடுகளுக்கெல்லாம் வெள்ளையடித்துத் தேவதையைப் போல் மாற்றியிருந்தார்கள். ஒரேயொரு அறை கொண்ட எங்கள் வீடும், நம்பியார் கோப்பிக் கடைக்கு மேற்குப் பக்கம் மாளிகையைப் போல் பொலிவாய் இருந்தது இன்னும் என் ஞாபகத்தில் பசுமையாய் உள்ளது! ‘Wales’ என்ற பெயர் கொண்ட வெள்ளைக்காரத் துரை எல்லார் வீடுகளையும் வந்து பார்த்துவிட்டுப் போவார். எனக்கு அப்போது ஏழெட்டு வயது இருக்கும். ஏனோ அந்த வெள்ளைக்காரரைப் பார்த்தால் இன்றைய உள்ளூர் வரலாற்றுப் புத்தகத்தில் வர்ணித்ததுபோல் கொடுமைக்காரனாய் இல்லை! அவர் மீதிலான அபிமானம் இன்னமும் குறையவில்லை. அவருடைய பங்களா வீட்டைச் சுற்றி ஏராளமான பழமரங்கள். அந்தப் பழங்களையெல்லாம் அவர் சாப்பிட்டாரா என்று தெரியவில்லை. திடீரென்று மூட்டைக் கணக்கில் பழங்களை எங்கள் தமிழ்ப்பள்ளிக்குக் கொண்டு வருவார். மாணவர் கூட்டத்தின் போது எல்லோருக்கும் கொடுத்து மகிழ்ந்த அந்த முகம் இன்னும் மறையவில்லை. கூடவே அவரது துணைவியும் எலிசபெத் மகாராணியைப் போல் வருவார். அவற்றில் ஒரு மூட்டை தலைமையாசிரியரின் ‘ஆமைக் காடிக்குள்’ பதுங்கிவிடும் என்பது வேறு விஷயம்!

கிரவல் கற்களென்றாலும் சாலை வசதி நேர்த்தியாகவே இருந்தது. நினைத்த நேரத்தில் பக்கத்துத் தோட்டத்துத் திருவிழாவுக்கு மிதிவண்டியிலோ, நடந்து போகவோ வசதியாகவே இருந்தது. அன்றைய பெண்கள் குளித்து முடித்துவிட்டு இரவில் சுதந்திரமாக நடந்துபோய் வந்திருக்கிறார்கள். பக்கத்துத் தோட்டத்தில் திரைப்படம் என்றால் அதையும் பார்த்துவிட்டு விடியற் காலையில்தான் வருவார்கள். அந்தச் செந்நிற மண்ணை இனிப் பார்க்க முடியாது. அந்த மண்ணின் மணத்தை இன்றைய தேர்தல் காலத்தில் செப்பனிடப்படும் தார்ச் சாலையிலும் பார்க்க முடியாது! காரணம், முன்னது மனம் சார்ந்தது. பின்னது பணம் சார்ந்தது.

மாதத்திற்கு இரண்டு முறை சம்பளம். மாதம் முழுக்க பத்துப் பிள்ளைகளுக்குச் சோறு போட போதுமானதாயிருந்தது. அவ்வப்போது யாசகம் வேண்டி அறிமுகம் இல்லாதவர்கள்கூட வருவதுண்டு. இல்லையென்று மறுக்காது பணமோ அரிசியோ கொடுத்து அனுப்பியுள்ளனர் தோட்டத்து மக்கள். யாசகர்கள் இங்குள்ள தோட்டத்து ஆலயத்தில் தங்கிவிட்டு மறுநாள் காலையில் பாதுகாப்புடன் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

எங்கள் தோட்டத்தைச் சுற்றிலும் அகன்று விரிந்த நெல் வயல்களும், காய்கறிகளைப் பயிர் செய்ய கொல்லைகளும் இருந்துள்ளன. அன்றைய தோட்ட நிர்வாகம் இதனை வெகுவாக ஆதரித்தது. அப்படிப் பார்த்தால் எல்லாருக்கும் சிறு சிறு கொல்லைகள் இலவசமாகவே கிடைத்தன. மாலையில் எமது நேசமணி பாட்டியோடு கடலையைப் பிடுங்கியது ஞாபகத்திற்கு வருகிறது. வீட்டைச் சுற்றி காய்கறிகளையும் பூச்செடிகளையும் விருப்பம் போல் நட்டுள்ளோம். பாம்பு, பூரான் போன்ற நச்சுப் பிராணிகளின் தொல்லையைத் தவிர்க்கும் பொருட்டு அவற்றைப் பாதுகாப்புடன் பயிர் செய்ய தோட்ட நிர்வாகம் கட்டளை பிறப்பித்ததானது எல்லாம் எங்கள் நன்மைக்கே! 'Wales’ துரை தோட்டத்து மக்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். மக்களின் பொது நல வசதிகளைக் கருத்திற்கொண்டதோடு மாசுமறுவற்ற தமிழர் உழைப்பின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளார். தமிழர்களின் வேண்டுகோள் யாதாயினும் அதனை மனங்கோணாமல் நிறைவேற்றியுள்ளார். ஜாசின் லாலாங் தோட்டத்தில் மட்டுமல்ல,நாட்டின் எல்லா `டன்லப்’ தோட்டங்களிலும் கோயில் எழுப்பவோ, அதற்குரிய நிலத்தை ஏற்பாடு செய்யவோ, திருவிழாவை நடத்தவோ சகல உதவிகளையும் செய்துள்ளாராம். திருவிழா களை கட்டுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே இங்கிலாந்திலுள்ள தமது பிள்ளைகளையும் அழைத்து வந்துவிடுவாராம். அவருக்குப் பிடித்தமான `குந்திங் பெருமாள்’ (குந்திங் என்பது முடி திருத்தும் பணியைக் குறிக்கும் மலாய்ச் சொல்) பூக்குழி இறங்குவதை அணு அணுவாகக் கண்டு அதைத் தமது ஒளிப்படக் கருவியில் பதிவு செய்து கொள்வாராம். மேலும், தமிழர்களின் வழிபாட்டு முறையை மதித்ததோடு, உடன் நடைபெறும் அன்னதான நிகழ்விலும் மனைவி மக்களோடு சாப்பிட்டுவிட்டுத்தான் செல்வார். அன்று நமது கோயில்கள் பெருகின. கோயில்கள் உடையும் சப்தம் அப்பொழுதெல்லாம் அறவேயில்லை! அங்கு அரசியலெல்லாம் நுழையவில்லை! இந்தப் புத்தாயிரத்துக்குப் பிறகு, இந்துக்களின் வழிபாட்டுத் தலங்கள் அதிகமாகவே காவுகொடுக்கப்பட்டு வருகின்றன.

1978 -குப் பிறகு தோட்ட நிர்வாகப் பொறுப்பு உள்ளூர் எசமானர்களிடம் கை மாறியது. `Wales’ துரை இங்கிலாந்துக்குப் புறப்பட்டுப் போனபோது தோட்ட மக்கள் அலையெனத் திரண்டு அவரது பாதப் படியில் கண்ணீரை அஞ்சலியாகச் செலுத்தினர் என்று அவரோடு அணுக்கமாக இருந்த திரு சங்கர நாராயணன் கண்ணீர்க் கொப்புளங்கள் துளிர்க்க தமது கடந்த காலத்தை அசை போட்டார். இன்றும் ஜாசின் லாலாங் தோட்ட மக்களுக்குச் சமூக சேவையாற்றி வருகின்ற சங்கர நாராயணன், அன்றைய காலத்திலேயே துரையின் உதவியால் தோட்ட மக்களுக்கு அரிய பெரிய சேவைகளையெல்லாம் ஆற்றி வந்துள்ளார்.மணிமன்ற நடவடிக்கைகளை நடத்தவும், தோட்டத்தில் மீன் வளர்ப்பு, கோழி வளர்ப்பு போன்ற அன்னாரின் முயற்சிகளுக்கெல்லாம் பக்க பலமாக இருந்தவர் `Wales’ துரைதான். நான் சிறுவனாக இருந்தபோது இதனை நேரடியாகவே பார்த்து நெகிழ்ந்துள்ளேன். `Wales’ துரை சிறிது காலத்திற்குப் பிறகு மறைந்து விட்டதாகக் கூறியபோது சங்கர நாராயணனின் வளர்ச்சியில் துரையின் பங்கு அதிகமுள்ளது என்பதை உணர்ந்தேன். அவரால் பேசவே முடியவில்லை; விக்கித்தார்! என் மனமும் கலங்கியது!

1978-குப் பிறகு தோட்டம் பலரது கைகளுக்கு மாறியபோது தென்றல் வீசப்போகிறது என்று நினைத்திருந்தோம். நாடு சுதந்திரமடைந்து 53 ஆண்டுகள் ஆகி, ஒரு சிலருக்கு மட்டுமே தென்றல் வீசியது. அத்தகையோர் இன்று செல்வச் செழிப்போடு வாழ்ந்து வருகிறார்கள். கூலிகள் மேன்மேலும் குனிந்தபடியேதான் உள்ளனர். தோட்டம் கை மாறியபோது பழைய சாதகங்கள் மறைந்து போயின. மேல் மட்டத்திலிருந்து அதிகப்படியான கறைச்சலும், உரிமை மறுப்பும் தலைவிரித்தாட கடன் உடன் பட்டுப் படிப்படியாய்ப் பலர் வெளியேறினர். அப்பொழுது எனக்கு 15 வயது. இந்த ஒடுக்குமுறையை முன்வைத்து 1982-இல் முதன் முதலாகச் சிறுகதை ஒன்றை மலாக்கா காஜா பெராங் மணிமன்றத்தின் இலக்கியப் போட்டிக்கு அனுப்ப, அது முதல் பரிசை அப்பொழுதே வாங்கிக் கொடுத்தது.

இப்பொழுது மனம் கவலையுறுகின்றபோது தோட்டத்திற்குத் தன்னந்தனியனாய்ச் சென்று வருவதுண்டு. குண்டும் குழியுமான பாதைகளும் வெறிச்சோடிய கடை வீதிகளும் மெளனம் கப்பிய வீடுகளுந்தான் எஞ்சியுள்ளன. முன்பு வளர்க்கப்பட்ட கோழிகளும் நாய்களும் தலைமுறை தலைமுறையாய்க் குடும்பம் சகிதமாய் வாழ்ந்து வருகின்றன. தமிழ் வளர்த்த மணிமன்ற நிகழ்வுகளும் இலக்கியப் போட்டிகளும் நடைபெற்ற `சங்கத்துக் கொட்டாய்’ பாழடைந்து சோம்பிக் கிடக்கிறது.புதர் மண்டி, நெல்வயல்களுக்கான தடயங்கள் கூட காணமுடியல்லை. காலி வீடுகளுக்குள் வெளவால்களும் பறவைகளும் சேமமுடன் இருக்கின்றன. இந்தோனீசியர்களோடு வங்காளதேசிகளும் நேப்பாளிகளும் வழக்கம்போல் உழைப்பதிலேயே கருத்தாய் இருக்கிறார்கள். தலைவர்கள் முதல் பள்ளிகள் வரை பேசப்படுகின்ற விவகாரம்போல கொஞ்ச நஞ்ச தமிழர்களும் வந்தேறிகள் போலவே இருக்கிறார்கள். ஒரு சிலரைத் தவிர பெரும்பாலோர் ஏதோ இருக்கிறோம் என்பது மாதிரி பேசுகிறார்கள். வயதை மீறிய மூப்பின் ரேகைகள் முகமெங்கும் கோடுகளாய் விழுந்துள்ளன. அவர்களுக்கான வட்டம் இன்னும் விரிவடையவில்லை அல்லது வட்டத்தை விட்டு வெளியே வரவில்லை. எல்லோரும் செம்பனைக் காடுகளில்தான் உழைக்கிறார்கள். `மூசாங்’ பெரியசாமி, சண்முகம், பூபாலன், இராஜேந்திரன், முருகன், மணி, பிரேமன், சீயோ, குணா, வத்தலு போன்றோர் தோட்டத்து மாரியம்மன் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் வெல்வதில் குறியாய் இருக்கிறார்கள். மகாலிங்கம் என்ற நண்பர் பிறவியிலேயே உடல் பாதிப்புற்றவர். இருப்பினும், தன்னம்பிக்கை கொண்ட நல்ல மனிதர். தோட்ட நிகழ்வுகளில் அவரது ஒலிப்பெருக்கிதான் பயன்பட்டு வருகிறது. புதிய தலைமுறையில் சுகந்தி, தனம், சாந்தி போன்றோர் கல்வியின் மூலம் பல்கலைக்கழக வாயிலை நேசித்துக் கொண்டிருக்கிறார்கள். என்னோடு படித்து நல்ல நிலையில் இருக்கின்ற நண்பர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை! என் அப்பாவும் சிற்றப்பா அமிர்தவாசகமும் எப்போதும் சொல்வார், `பழச மறந்துடாதேடா!’ அதற்காகத்தான் இந்தச் சிறிய பதிவு. தற்போது நண்பர் சீ.அருண் போன்ற பொறுப்புள்ள ஆய்வாளர்கள் தேசிய அளவில் ஆழமான ஆய்வில் இறங்கி அர்த்தமுள்ள பதிவை ஆவணமாகத் தரவுள்ளார்கள். நமது வலியை நாமே சொன்னால்தான் எதையும் இட்டுக்கட்ட முடியாது அல்லவா?

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768