|
நா.கோவிந்தசாமி அமரராகி, பத்தாண்டுகள் நிறைவுபெறும் இவ்வேளையில், தோழியர்
புஷ்பலதா, நா.கோ பற்றி ஒரு கட்டுரை எழுதுவதன் அவசியம் பற்றி பேசியபோது
கூட யோசிக்கவே இல்லை. ஆனால் எழுத பேனா பிடித்தபோதுதான், சில
நிமிஷங்களுக்குத் தொடரவே முடியாமல், ஸ்தம்பித்துப்போய், தாவரமாகிப் போனேன்.
நா.கோ ஓர் எழுத்தாளர், கணிணியாளர், கல்வியாளர் என்ற தலைப்பில் பலரும்
பேசியும் எழுதியும் விமர்சித்தும் வருவதை மெளனமாய் அவதானித்து வரும்
எனக்கு, புதிதாக என்ன எழுத என்று தோன்றவே இல்லை. புனைவிலக்கியத்தில் நா.கோ.
பற்றிய விமர்சனம் எல்லாமே ஏற்புடையதுதானா? என்பதே இக்கட்டுரையை எழுதவேண்டிய
கட்டாயத்தை வலியுறுத்துகிறது.
கணிணி, கல்வித்துறைக்கப்பால், இலக்கியத்தில் அவரது விழுமிய சிந்தனைகளை, ஒரு
இலக்கியவாதியாக இன்று நினைத்தாலும், பிரமிப்பில் நிமிடங்கள் கரைவதைத்
தவிர்க்க முடியவில்லை. சிறுகதைக்கான அவரது எதிர்பார்ப்பு, நாடகத்துறையில்
அவரது மதிப்பீடு,கவிதையில் அங்கதம், என இலக்கியத்தில் ஒவ்வொரு கூறுகளிலும்,
அவரது அவதானிப்பு, மிகக் கூர்மையானது. ஒற்றுப்பிழைகள், உள்முகப்பார்வையில்
தொய்வு, நடையில் செழுமையின்மை என சின்னச் சின்ன பிழைகளைக்கூடச் சுட்டி சில
கதைகளை என்னிடம் விமர்சித்துள்ளார்.
”கதையில் தூக்கலாகத் தெரியும் சம்பவக்கோர்வை, மென்மையாக மனசை வருடுகிறதே,
அதை நாம் பாராட்டவேண்டாமா?” என்று கேட்டால், ”ஒரு அழகான கதை சொல்லி என்று
வேண்டுமானால் திருப்திப்பட்டுக்கொள்ளலாம். ஆனால் அது வெறும் மிகை
யதார்த்தமே" என்பார் நா.கோ. மலையாள இலக்கிய ஆய்வுக்காக, பல
சந்தர்ப்பங்களில் கதைகளை தெரிவு செய்ய இவரது நுண்ணறிவுப் பார்வை, எனக்கு
உதவியுள்ளது. ஆனால் இதுவல்ல தகவல்.
70 களின் இறுதியில், சுட்டெரிக்கும் வெயில் தகிக்கும் மதிய வேளையில்,
தலைசுற்றலும் வாந்தியுமாக நான். கர்ப்பிணிப்பெண். புதிதாக மணமாகி வந்த ஒரு
இளம்பெண். துவண்டு கிடந்த வேளையில்தான் வானொலியில் அந்த நாடகம்
ஒலிபரப்பாகியது. சில நிமிஷங்கள் நிதானித்து கேட்டபோது, மயங்கிக்கிடந்த
நிலையிலும் அந்த நாடகம் என்னைக் கவர்ந்ததை நான் உணர்ந்தபோது
'அன்புக்கப்பால்' எனும் அந்த தொடர்நாடகத்தின் அன்றைய பகுதி
முடிந்துவிட்டது. அரை மணிநேரம் ஓடியதே தெரியவில்லை. ஆனால் மனசெல்லாம்
அப்படி பதைத்தது. அடுத்தவாரம் அடுத்தவாரம் என, பறவையாய்ப் பறந்தது மனசு,
நாடகம் கேட்க. ஆறு வாரமும் ஓடியதே தெரியவில்லை.
இளம் தம்பதிகளின் அற்புதமான நடப்பியல் பாணியிலான, பாசாங்கற்ற கதைக்கரு.
புதிதாக மணமாகி வந்த அந்த இளம்பெண்ணை, அந்தக் கதைமாந்தர்கள் அப்படி
கவர்ந்தார்கள். அடுத்த சில வாரங்களிலேயே, அலைகள் ஓய்வதில்லை எனும் மனநிலை
பிழறிய ஓர் இளம்பெண்ணின் கதைப்பின்னலில், இன்னொரு தொடர் நாடகம்.
இத்தனைக்கும் a simple plot, thin plot, why not a common plot too?
இரண்டுமே மனிதமனத்தின் மெல்லிய நுட்பமான உணர்வு இழைகளால் நெய்யப்பட்ட
நினைவோடை உத்திகளால் ஆன நாடகங்கள். ஆனால் உவமித்து எழுதும் வரிகளில் கூட
இலக்கியம் தேடும் எனக்கு, இந்த இரண்டு நாடகங்களும் ஏனோ அப்படி கவர்ந்தது.
அதுவரை ஒரு சிறுகதை எழுத்தாளராக, தொடர்கதை எழுத்தாளராக, மகளிர்
கட்டுரையாளராக, மட்டுமே பவனி வந்த எனக்கு... ஏனோ, முதன் முதலாக நாடகம்
எழுதும் ஆசை வந்தது .
நாடக இலக்கியத்தில், பிள்ளையார் சுழி போட்ட நா.கோவின் பாதிப்பில், சிங்கை
வானொலியில் நாடகம் எழுதத் தொடங்கினேன். அப்பொழுது யாரிந்த கோவிந்தசாமி
என்றே தெரியாது. மலேசியாவிலிருந்து என்னைக்காண வந்த எழுத்தாளர் மலபார்
குமார், என்னைச் சந்தித்தபிறகு, நா.கோவைச் சந்திக்கச்சென்றார். அங்கிருந்து
தொலைபேசியில் நா.கோ பேசினார். எனது நாடகங்களில் ஒன்றை மட்டுமே
கேட்டிருப்பதாகக் கூறினார். ஆனால் மலேசிய பத்திரிகைகளுக்குத்தானே அதிகம்
எழுதுகிறீர்கள்? ஏன்? என்ற அவரது கேள்வியையும், அப்பொழுதே மறந்தும் போனேன்.
மலேசிய வானொலியின் அனைத்து மாநில நிலையங்களிலும் எனது நாடகங்கள்
ஒலிபரப்பாகியுள்ளது. மலேசிய நாடகப்போட்டிகளில் பல முறை முதல் பரிசும்
பெற்றிருக்கிறேன். கிட்டத்தட்ட 30 ஆண்டுகட்கும் மேலாக, சிங்கை, மலேசிய
வானொலிக்கு எழுதுகிறேன். இன்றும் சிங்கை வானொலியில் சிறப்பு நாடகங்கள்
எழுதும்போதும், அவ்வப்போது நா.கோவின் நினைவை, நன்றியறிதலோடு
நினைக்காதிருக்க முடியவில்லை.
மலையாள நாடக இலக்கியத் துறையில், குறிப்பிட்ட சில விருதுகளும் பெற்றவள்
நான், என்றாலும் அனைத்துமே நா.கோவிந்தசாமி எனும் மகத்தான ஒரு
பாதிப்பால்தான் என்பதை எல்லாபேட்டிகளிலுமே நெகிழ்வோடு கூறியது வெறும்
வாய்ப்பந்தலல்ல. சிங்கையின் சிறந்த நாடகாசிரியர், சிறந்த பெண் எழுத்தாளர்,
சிறந்த கதையாசிரியர், என மூன்று விருதுகள் பெற மலையாள மேடையேறியபோது,
கமலாதேவி எனும் நாடகாசிரியரை உருவாக்கிய, நா.கோ. வின் இலக்கியம்தான் அங்கு
பட்டொளி வீசியது. அப்பொழுதுதான் கூத்துப்பட்டறையைப் பற்றி என்னிடம்
பேசினார். பின் நவீனத்துவ சிந்தனையாளராகிய, ந.முத்துசாமியிடம் நான்
சென்னையில் பயிற்சிக்குப்போனதே, நா.கோவிந்தசாமியின் அறிவுரையால்தான்.
கூத்துப்பட்டறை பயிற்சிக்குப்பிறகு நான் எழுதி, இயக்கிய, அரங்கேற்றிய,
மலையாள நாடகங்களை இன்றும் பெருமிதத்தோடு என்னால் விரல் சுட்ட முடியும்.
இத்தகு சிறப்புப் பெற்ற நா.கோவின் 'தேடி' எனும் சிறுகதைத்தொகுப்பை,
மலையாளத்தில் நான் அறிமுகப் படுத்தியபோது, மலையாள இலக்கியக்
கர்த்தாக்களால், சிங்கப்பூர் இலக்கியம் மிகவும் பேசப்பட்டது. எந்த நல்ல
சிறுகதைக்கும் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்படும் உத்தியும், நடையழகும், கதை
சொல்லும் செய்நேர்த்தியும், அத்தியாவசியம். அதைவிட முக்கியம் classism,
aestheticism, romanticism, realism, symbolism, என அனைத்துக்
கோட்பாட்டுணர்வையும், அந்தந்த கால கட்டத்துக்கேற்ப, எழுதப்படும் திறன்
பொதிந்த கதைகளே வெற்றி பெறுகின்றன.
ஒவ்வொரு படைப்பாளிக்கும் இலக்கியம் வழி பயணிக்கும்போது, அகமும் புறமும்
நோக்கிய கற்பனை ரூபம், நிஜ ரூபமாக, வாக்கியப்படிமங்களில், வடிவம்
பெறும்போதுதான், படைப்பாளியின் மீட்சி, செப்புப்பட்டயமாய், மின்னுகிறது.
'தேடி' நூல் பற்றி, அவரது மறைவுக்குப்பிறகு, அவரவர் தோரணையில் ஒரு சிலரது
விமர்சனங்கள் படித்தபோது, எழுதாதிருக்க முடியவில்லை. தமிழ், மலையாளம், என
இரண்டு மொழிகளிலும் எழுதிவரும் எனக்கு, இந்நூலின் [தேடி] கனமான பார்வையை,
எக்காரணம் கொண்டும் புறந்தள்ள முடியவில்லை. நா.கோவின் சமகாலப்பிரக்ஞையும்,
சமுதாயம் பற்றிய அக்கறையும், பிரச்சினைகளை மனிதாபிமானத்தோடு அணுகும்,
நேர்மையான பார்வையும், அவரது எல்லா கதைகளிலுமே பரிமளிப்பதைப், புரிந்து
கொள்ளவும் கூட, தீவிர இலக்கியத்தின் துளியாவது தெரிந்திருக்க வேண்டும். நா.
கோவின் திசைகள், எழுதி முடித்ததும், அதை முதலில் என்னிடம்தான் காட்டி எமது
கருத்தை அப்படியே கூறுமாறு கேட்டார்.
பிறகு இளங்கோவனின் அழகான ஆங்கில மொழிபெயர்ப்பில் அக்கதை, “ஸ்ட்ரெய்ட்
டைம்ஸில் வெளிவந்தபோது, இலக்கியம் சார்ந்த பலராலும் இக்கதை மெச்சப்பட்டது
கண்கூடு.
இவரது எழுத்தில், மொழியை மீட்டுருவாக்கம் செய்வதை விட, ஆன்மாவின்
தவிப்பையும், தேடல்களையும்,மனிதம் சார்ந்த, வரிவடிவங்களில் பயணிப்பதிலேயே,
கதைகளை நகர்த்திச்செல்லும் ஆற்றல்தான் இவரது முத்திரையாக எனக்குப்
படுகிறது.
திசைகள், ஒட்டுண்ணிகள், தேடல், என மூன்று சிறுகதைகளிலும்,
நுண்விவரிப்புக்கள், வாசகனை அட, என்று நிமிர்ந்து உட்கார வைக்கிறது. A well
organised story... என திசைகள் படித்த தமிழரல்லாத, இலக்கியவாதியொருவர்,
என்னிடம் சிலாகித்துள்ளார். ஒட்டுண்ணிகள் கதையில், கதை சொல்லும் உத்தியில்
வாசகனிடம் ஒரு நெருக்கமிருக்கிறது. கதை சொல்லும் நடையழகுக்காகவே இக்கதை
முழுமையாக, படித்து ரசிக்கமுடிகிறது. 'தேடல்', இத்தலைப்புக்காகவே என்னை
மிகவும் கவர்ந்த கதை இது. மிகுந்த ஆளுமையுடன், மிகவும் கவலையோடு ஒரு
சிங்கப்பூரியனின்,மன விதானத்தை பதிவு செய்த கதை இது.
'ஓர் ஆன்மாவின் திரை அகற்றப் படுகிறது', அச்சு அசலாய், மனித மனத்தின்
பலவீனங்களை, மிக யதார்த்தமாய் படம் பிடித்துக் காட்டுகிறது. இலக்கியத்தின்
ஆதாரமே மனித மனத்தின் ஊற்றுதான் என்றார் பிரேம் சந்த். இக்கூற்றுக்கு
சான்றாக, கற்பனைச்செறிவோடு, துலங்கும் வரிகள், இக்கதையில் பல இடங்களில்
வருகிறது.
'அமைப்பு' பெண்விடுதலை, பெண்ணியம் எனப்பேசும் ஒவ்வொரு பெண்ணும் அவசியம்
படிக்கவேண்டிய கதை. எப்பேர்ப்பட்ட ஜாதிமானாக சுதந்தரப்பறவையாக,
வளையவந்தாலும், வயிற்றில் கருவைச் சுமக்கும் கட்டத்தில், பெண் எப்போதுமே
ஒரு சராசரிப் பெண்ணே எனும் போதனைக்காகவே வாசகனை சுண்டியிழுக்கும் கதை.
தாய்மையும் பெண்மையும் வெறும் உயிர்த்தத்துவம் மட்டுமல்ல, என்பதை பூடகமாக
விளக்கும்கதை.
'மதிப்பீடுகள்' கதை அருமையான தகவல் தொகுப்பு. இன்னும் சற்று விவரித்து
எழுதியிருந்தால், மலாக்கா செட்டி இனத்தவரைப்பற்றி, ஓர்ஒரு ஆவணத்தொகுப்பாக,
ஒரு நாவலாகவே எழுதியிருக்கலாமே என வாசகனை நினைக்க வைக்கும் கதை
மதிப்பீடுகள்.
'வேள்வி' இத்தொகுப்பிலேயே முத்திரைப் படைப்பு இக்குறு நாவல். தமிழ்
சமுதாயத்தின், நகமும் சதையுமாகிப்போன, சாதீயம், இறைவழிபாடு என்ற பெயரில்
எப்படியெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு வாழ்கிறோம், நெய்விளக்கு
ஏற்றுவதற்கும், கோயில் செங்கல்லுக்கும், கோபுரம் கட்டவும் என்றெல்லாம்
அநாயாசமாய் செலவுசெய்யும் நமக்கு ஒரு பள்ளிக்கூடம் கட்டவோ, அனாதையாக
உயிர்விடும் இந்திய சடலங்களை அனுப்பிவைக்கும் ஒரு கிரியை சாந்திக்கான
சராசரி அமைப்பு கூட இல்லாத நிலை என அனைத்து பலவீனங்களையும்
உரத்துச்சொல்லும் அற்புதமான நாவல். தனிமனித வழிபாடும், தலைவன் வழிபாடும்,
ஒரு மந்தைக் கூட்டத்தை உருவாக்குமே தவிர, சிந்தனைவாதிகளை உருவாக்காது,
எனும்
சாட்டையடி, இந்நாவல் முழுவதும் ஒலிக்கிறது. ஆனால், நாவல் எழுதி 10
ஆண்டுகட்குப் பின்னரே வெளியிடும் துணிபு ஏற்பட்டது எனும் இவரது நேர்மையான
வாதத்தை,
அது நா.கோவின் கோழைத்தனமே என்று ஒரு விமர்சகி, அவரது மறைவுக்குப்பின்னர்,
விமர்சிக்கிறார்.
தேடி, நூலை வெளியிட்டு பல ஆண்டுகட்கு பின்னரே நா.கோ. இவ்வுலகை
விட்டுப்பிரிந்தார். அவர் உயிருடனிருந்த காலத்தில் இப்படியொரு விமர்சனத்தை
முன் வைக்கும் துணிச்சல் இந்த விமர்சகிக்கு ஏனில்லாமல் போய் விட்டது?
கேட்டிருந்தால், நா.கோ. தன்னுடைய உறைப்பான பதிலால், கூர்மையாக, விளக்கம்
கொடுத்திருப்பாரே? யாருடைய எழுத்தை யார் விமர்சிப்பது என்ற விவஸ்தையே
இல்லையா? ஒருவருடைய மறைவுக்குப் பின்னால், தத்துப்பித்தென்று எதையாவது
எழுதுவதுதானே வடிகட்டிய கோழைத்தனம். எதையாவது எழுதி விமர்சனம் என்ற
போர்வையில் குளிர் காய்வது, என்பது இப்பொழுதெல்லாம் பலருக்கும்
பொழுதுபோக்காகவே மாறிவிட்டது.
நா.கோவிந்தசாமி சிங்கப்பூரின் தலை சிறந்த புத்திலக்கிய எழுத்தாளர்களில்
ஒருவராகத் திகழ்ந்தவர். தமிழ்நாட்டுக்கும், சிங்கப்பூருக்குமிடையே
மட்டுமல்ல, மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்குமிடையே கூட எழுத்தாளர்களுக்கு
நல்லதோர் இலக்கியப் பாலமாகத் திகழ்ந்தவர். தனிமனித முயற்சியாலேயே,
சொந்தச்செலவிலும் கூட இலக்கிய உயர்வுக்கு பாடு பட்டவர். பலருக்கு இலக்கிய
ஆசானாகத் திகழ்ந்தவர், என்பதை மறுப்பதற்கில்லை. சமுதாய விழுமியங்கள்
நீர்த்துப்போவதை மரபு என்ற பெயரில் நடக்கும் இருட்டடிப்பைகூட,
வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதையே துணிச்சலாக, எழுத்தில்
நடத்திக்காட்டியவர்.
அன்னாரைப் பற்றி என்ன சொல்ல? இன்னும் என்ன எழுத? ஓர் இலக்கிய ஆசானாய், எமது
மதிப்பிற்குரிய ஆசிரியராய் மட்டுமே, வணங்கி ஆத்மாஞ்சலி செலுத்தத்
தோன்றுகிறது.
தமிழ், மலையாள, எழுத்தாளராக, நாடகாசியராக, ஆய்வாளராக, எமது அனுபவத்தில்,
இன்றும் சிங்கை இலக்கியத்தில் நா.கோ. வாழ்கிறார். பிறகு ஏன் மறைந்து
விட்டார் என்று நினைக்க வேண்டும்? சிங்கப்பூர் இலக்கியத்துக்கு வரலாறு
உண்டு. அவ்வரலாற்றில் முத்திரை பதித்தவர் நா. கோவிந்தசாமி. அந்தப்
பெருமிதத்தை சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் சிரித்துக்கொண்டிருக்கும் அவரது
புகைப்படத்தைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம். சிங்கப்பூர் இலக்கியம்
உள்ளளவும் நா.கோ. எனும் கலைஞனின் பெயர் நிலைத்திருக்கும் என்பதில்
ஐயமில்லை.
|
|