|
விமர்சனம் என்பது காத்திரமான விவாதங்களுக்கு காள்கோளிடும் ஒரு பயன்மிகு
காரியமாகும். மாறாக, மேலெழுந்தவாரியான ‘அபிப்பிராயம் கூறல்’ எல்லாம்
விமர்சனங்களாக அங்கீகரிக்கப்படும் இன்றைய எமது இலக்கியச் சூழலில், கனடாவில்
வெளியிடப்பட்ட ‘கூர்’ - 2010 கலை இலக்கிய மலரில் உள்ள கட்டுரைகளைப் பற்றிய
‘அபிப்பிராயங்களை மட்டும்’ சொல்லிப் போக முற்படுதலும் ஒருவகையில் ஒரு
தற்பாதுகாப்பு முயற்சிதான்!
ஒரு படைப்புக் குறித்த விமர்சனமாயிருந்தாலும் சரி,
அபிப்பிராயமாயிருந்தாலும் சரி, அவற்றை முன்வைப்பவர்களது அறிவு, ஆளுமை,
உணர்திறன், அனுபவம், முதிர்ச்சி, தேர்ச்சி, இரசனை போன்றவற்றின்
அடிப்படையில் அவற்றின் தரமும் தன்மையும் மாறுபடும்; அவற்றின் ஏற்புடைமையும்
வேறுபடும். எனவே இக்குறிப்பு வழியாக முன்வைக்கப்படும் - ஆளுக்காள்
வேறுபடக்கூடிய - கருத்துக்களும் அபிப்பிராயங்களும் அறுதியானவையல்ல,
மாறிலிகளுமல்ல!
‘பகல் நம்மை எவ்வாறோ சரித்திரத்தின் மகா அவலத்தை மறந்திருக்க
வைத்துவிடுகிறது’ எனத் தமது ஆசிரிய தலையங்கத்தில் எழுதியிருக்கும் ‘கூர்’ -
2010 கனடா கலை இலக்கிய மலரின் ஆசிரியர் தேவகாந்தன் - இரவுதான் நமக்கான
காலமாக எஞ்சிநின்று - நமது தூக்கத்தை, இரவுக்கான இன்பங்களை, இயற்கையின்
மதுசாரத்தை எய்தவிடாமல் எரித்துக் கொண்டிருக்கின்றதாகவும் - இத்துயரின்
அடையாளமாகவே ‘இரவு எரிந்துகொண்டிருக்கிறது’ என்ற - டானியல் ஜீவாவின்
கவிதைத் தலைப்பினை இந்தத் தொகுப்பின் பெயராகத் தாம் தேர்ந்தெடுத்துக்
கொண்டதாகவும் குறிப்பிடுகின்றார். இதனைப் பிரதிபலிக்கும் வகையில் - மானுடன்
ஒருவன் உலைக்களத்தில் வெந்து தகிப்பதையொத்த - இந்த இரவின் கொடிய
வெப்பிசாரத்தை, வண்ணத்தில் வடித்திருக்கும் நந்தா கந்தசாமியின்
முகப்போவியம் மனதை ஒருகணம் துணுக்குறச் செய்கின்றது! இதனையும் தாண்டி உள்ளே
புகுந்தால் - ஏதோ ஒரு தாளமுடியாத சோகம் நம் எல்லோரையும் பெருஞ்சுமையாக
நசித்துக்கொண்டிருப்பதாகத் தொடர்ந்து கூறும் ஆசிரியர் - ஈழத் தமிழ்
மக்களின் அழிவும் அவலமும் கண்ணீரும்தான் அதற்குக் காரணம் என்கின்றார்.
மேலும் ‘தனது மொழியில், தனது சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியாத
ஒரு சிறுபத்திரிகை தன் வாணாளை ஒரு நூற்றாண்டு ஓட்டினாலும் ஒரு சல்லிக்
காசுக்கும் பயன் கிடையாது’ எனச் சலித்துக்கொள்ளும் அவர் - ‘கூர்’
மூச்சடங்கிப் போகக்கூடும் என்பதற்கான சாத்தியப்பாடுகளைக் காரண
காரியங்களுடன் பட்டியலிட்டுக் காட்டுகின்றார். “புத்தகங்களைப் பற்றிப்
பேசும் மதிப்புரை, விமர்சனங்களோடு தன் வாசக உளைச்சலை அடக்கிக்கொள்ளும்
வாசகன்போல, நேரமெங்கே இருக்கிறது எழுத எனப் படைப்பாளிக்கும் அவரவர்க்குமான
அரிதாரம் எளிதாகவே கிடைத்துவிடுகிறது, மறைந்துகொள்ள” என்ற அவரது
குற்றச்சாட்டை குற்ற உணர்வுடன் நாம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்!
அடுத்து, Umberto Eco எனும் நாவலாசிரியர் எழுதிய Baudolino என்ற ஆங்கில
நாவலை வாசித்ததன் பயனாகக் கிடைத்த தமது அனுபவத்தை நிவேதா இத்தொகுப்பில்
பதிவு செய்திருக்கின்றார். 13ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இடம்பெற்ற 4வது
சிலுவைப் போரின்போது கொல்லப்படவிருந்த கீழை ரோமப் பேரரசின் முக்கிய
வரலாற்று ஆசிரியரான Niketas என்பவரைக் காப்பாற்றும் Baudolino தனது
சுயசரிதையை அவரிடம் சொல்வதிலிருந்து இந்த நாவல் ஆரம்பிக்கின்றது.
பொய் சொல்லும் திறமையையும், எந்த மொழியையும் இலகுவில் கிரகித்துக்கொள்ளும்
ஆற்றலையும் கொண்ட Baudolino வைச் சுற்றிச் சுழலும் இந்த நாவல், ‘ஒரு பொய்யை
நாம் தீவிரமாக நம்பத் தொடங்குகின்றபோது, அது உண்மையாகிவிடுகின்து’ என்ற
தத்தவ சாரத்தைக் கொண்டது என நிவேதா குறிப்பிடுகின்றார். வரலாறு என்பது
கறைபடிந்தது என்றும், அது பாதி புனைவும் உருட்டும் புரட்டும் கொண்டது
என்றும், ஒருவகையில் அது அதிகார வர்க்கத்தின் புகழ் புராணங்களே என்பதனால்
அது பெருமளவில் திரிப்புக்களையும் திணிப்புக்களையும் கொண்டது என்றும்
குறிப்பிடும் அவர், இலங்கை அரசாங்கத்தின் வரலாற்றுத் திருகு தாளங்களையும்
இங்கு நினைவுகூரத் தவறவில்லை. தமக்கே உரிய இயல்பான மொழி நடையில் தமது
வாசிப்பு அனுபவத்தை, பயன்தரு முறையில் பகிர்ந்திருக்கும் நிவேதா,
வரலாற்றின் நம்பகத் தன்மையை இக்கட்டுரை மூலம் கேள்விக்குள்ளாக்குகின்றார்.
ஈழத்து நவீன இலக்கிய உலகின் மூன்றாவது தலைமுறையைச் சார்ந்த எழுத்தாளர்களுள்
முக்கியமானவராகக் கருதப்படும் சாந்தனின் ‘விளிம்பில் உலாவுதல்’ எனும்
குறுநாவல் தொகுதி குறித்த டிசே தமிழனின் விமர்சனம் ஒன்றும் ‘கூர்’ - 2010
கனடா கலை இலக்கிய மலரில் இடம்பெற்றுள்ளது. மிக நீண்ட காலமாக சாந்தனின்
படைப்புக்களைப் படிக்க வாய்ப்பில்லாமல் இருந்த பலருக்கு, டிசே தமிழனின்
இந்த விமர்சனக் கட்டுரை, சாந்தனின் படைப்பாளுமையை மீண்டும் மனத்திரைக்குக்
கொண்டுவந்து இரைமீட்க உதவும் என நம்பலாம் ‘விளிம்பில் உலாவுதல்’ தொகுதியில்
உள்ள 5 குறுநாவல்கள் குறித்தும் தமது குறிப்பைச் சொல்லும் டிசே தமிழன்,
‘சாந்தனைப் போன்ற படைப்பாளிகளின் குரல்களை இலங்கை அதிகார வர்க்கங்களோ
அல்லது தமிழ்ப் போராட்ட இயக்கங்களோ செவிமடுத்திருந்தால், இந்தளவு அழிவுகள்
இடம்பெற்றிருக்க மாட்டா’ என ஆதங்கப்படுகின்றார்.
மேலும், ‘இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டும்கூட, சாதி பார்க்கும் தமிழனை
சாந்தன் கேலி செய்தாலும், சாதியத்தை முழுமையாக, தெளிவாக மறுக்காமல், ஒரு
ஏளனப் புன்னகையால் கடந்துவிட முடியுமா?’ என்றும் சாந்தன் மீது கேள்வி
தொடுக்கின்றார், டிசே தமிழன். ‘தேரும் திங்களும்’ கவிதையில் மகாகவி
வெளிப்படுத்திய சாதிய எதிர்ப்பினை “அருவருத்து முகம் சுழிக்கும் ஒரு
கானவானின் முணுமுணுப்புக்கு ஒப்பாகும்” என்றும் - அங்கு “மகாகவிக்கு
கௌரவமான ஒரு அங்கதத் தொனியே போதுமானதாகி விடுகிறது” என்றும் கவிஞர் சாருமதி
அன்று ஒருமுறை விமர்சித்தது போன்றே, டிசே தமிழன் இன்று விசனப்படுவதாக
உணரமுடிகிறது. ‘சங்கானைகென் வணக்கம்’ எனச் சங்காய் முழங்கிய கவிஞர்
சுபத்திரன் போலவே சகல படைப்பாளிகளும் சாதிக்கெதிராக ஆவேசக்
குரலெழுப்புவார்கள் என எதிர்பார்க்கவும் முடியாதுதான்!
‘வாக்கு’ என்ற தலைப்பில் மணி வேலுப்பிள்ளை அவர்கள் இந்த இதழில்
எழுதியிருக்கும் பத்தி ஒன்றில் ‘எத்தகைய சுதந்திரம் எங்களுக்கு
மறுக்கப்பட்டாலும், சிந்திக்கும் சுதந்திரத்தை எவராலும் அபகரிக்க முடியாது’
எனக் குறிப்பிடுகின்றார். ‘சிந்திக்கும் சுதந்திரத்தைக் கொண்டு ஏனைய
சுதந்திரங்கள் அனைத்தையும் ஈடுசெய்யவோ மேம்படுத்தவோ எங்களுக்கு
வாய்ப்புள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளமை, இன்றைய அரசியல் சூழ்நிலையில்
சிந்திக்கும் திறனற்று முடமாகிப்போய்க் கிடக்கும் எங்கள் எல்லோருக்குமான
செய்தி ஒன்றைத்தான் பூடகமாகச் சொல்லிவைக்கின்றதோ என எண்ணத் தோன்றுகின்றது!
ஆனாலும் மொழி பற்றிய Noam Chomskyயின் வரைவிலக்கணத்துடன் ஆரம்பமாகும்
இப்பத்தியானது, சமூகப் பிராணியான மனிதன் பற்றியும், பின்னர் அரசியல் கலை
பற்றியும், அதனைத் தொடர்ந்து சமூக அரசியல் ஆய்வுகள் பற்றியும், முடிவில்
மனிதனின் சிந்தனைச் சுதந்திரம் பற்றியும் அங்கொன்றும் இங்கொன்றுமாக
தொடர்பற்று நகர்ந்து செல்வது, சொல்லவந்த பொருளின் சீரமைதியைக்
குலைத்துக்கொண்டாற் போலத் தோன்றுகின்றது.
அடுத்து, முற்போக்கு இலக்கியம் என்றாலே ஒரு ‘துடக்குச் சாமாச்சாரம்’ எனச்
சில நவீன படைப்பாளிகள் முகம் சுளிக்கும் இன்றைய காலகட்டத்தில் ‘இலங்கை
முற்போக்கு எழுத்தாளர் சங்க வரலாறு, சாதனைகள், பாரம்பரியம்’ எனும்
தலைப்பிலான பிரேம்ஜியின் கட்டுரை இத்தொகுப்பில் தேவை கருதியே
பிரசுரிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. சகல கடந்தகால – சமகால இலக்கியக்
கோட்பாடுகளைப் போலவே முற்போக்கு இலக்கியமும் சாதக பாதக அமசங்களைத்
தன்னகத்தே கொண்டிந்திருந்தது என்பதனை உணர்ந்தறியச் சூத்திரங்களோ,
சமன்பாடுகளோ தேவையில்லை. சமூக வாழ்வும் இலக்கியமும் பற்றிய பார்வைத்
தெளிவுக்கும், ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகள் பற்றிய மக்கள் கவனக்
குவிப்புக்கும், பண்டிதர்களினது - பழமைவாதிகளினது பிடியிலிருந்து
தமிழினதும் தமிழிலக்கியத்தினதும் விடுவிப்புக்கும் ஈழத்தில் காரணமாய்
இருந்தது முற்போக்கு இலக்கிய எழுத்தாளர் சங்கம். பேச்சு வழக்கு மற்றும்
கிராமிய இலக்கிய மறுமலர்ச்சிக்கும், அயலூர் வர்த்தக எழுத்துக்
குப்பைகளுக்கான தடைவிதிப்புக்கும் வித்திட்டது இந்த முற்போக்கு இலக்கிய
எழுத்தாளர் சங்கம்தான் என்ற வகையில் பிரேம்ஜியின் கட்டுரை புதியவர்களுக்கான
ஒரு வரலாற்றுப் பாலபோதினியாக அமையும் என நம்பலாம். சுமார் 10
தசாப்தங்களுக்கு முற்பட்ட முதுநடையில் இது எழுதப்பட்டுள்ள போதிலும், ஈழத்
தழிழ் இலக்கியச் செல்நெறியைச் சரிவர விளங்கிக்கொள்வதற்கு உபயோகமான ஓர்
ஆவணமாக இக்கட்டுரையைக் கருதலாம்.
‘எம்மை நாமே சிலுவையில் அறையலாம்’ என்ற தலைப்பில் சுதர்ஸன் ஸ்ரீநிவாசன்
எழுதியிருக்கும் கட்டுரையை இந்த இதழின் மிகவும் பயன்மிக்க முயற்சிகளில்
ஒன்றாகும். கடின உழைப்பின் ஊடாக கல்வி, பொருளாதாரத் துறைகளில் கனடாவில்
துரித முன்னேற்றமடைந்த ஒரு சமூகத்தவர் எனப் பிறரால் விதந்துரைக்கப்பட்ட
தமிழர் முகத்தில், கரிபூசிய சம்பவங்களுள் எமது இளைஞர்களுக்கிடையே
இடம்பெற்று வரும் குழு மோதல்கள் முக்கியமானவை. இங்கு வாழும் தமிழ்
இளைஞர்கள் மத்தியிலான குழு மோதல்களின் வரலாற்றுப் பின்னணி, தோற்றம்,
தோன்றுவதற்கான காரணங்கள் - இதன் பின் விளைவுகள், பாதிப்புக்கள் போன்றவை
ஆதாரங்களுடன் கூடிய தகவல்களுடன் இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளன.
மூத்த தலைமுறையினரின் மூளைக்குள் இலகுவில் அகப்பட முடியாத இளைய
தலைமுறையினரின் இரகசியங்களையும் தந்திரோபாயங்களையும் தகிடதத்தங்களையும்
இக்கட்டுரை மூலமாக அறிகின்றபோது அதிர்ச்சியடையாமல் இருக்க முடியவில்லை.
ஊர்த் திமிர், சாதிவெறி, காதல் மயக்கம், காசாசை, அதிகார வேட்கை, நாயக
வழிபாடு, தாழ்வு மனம், ‘அமர்க்களம்’ மாதிரியான தமிழ்ப்பட மயக்கம், போர்
தந்த போதை போன்ற பல்வேறு காரணிகளின் பக்க விழைவாகப் பிறந்த இந்தக்
‘குழுமாட்டுக் குழுக் காலசாரம்,’ எமது சமூக அசைவியக்கத்தின் இன்னொரு
வெட்கக் கேடான வெட்டுமுகமாகும். இது சமூகவியற் புலமையாளர்களுக்கான
ஆய்வுக்குரியது@ புலம்பெயர் இலக்கியங்களுக்கான பேசுபொருளுக்குரியது.
புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர் மத்தியில் இத்தகைய மோசமான பிரச்சினை
இன்னமும் இருப்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும், அதனைத் தீர்த்து
வைப்பதற்கென காத்திரமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்;டும்
என்றும், தவறும் பட்சத்தில் எம்மை நாமே சிலுவையில் அறைந்துகொள்ள வேண்டி
ஏற்படலாம் என்றும் சுதர்ஸனால் விடுக்கப்பட்டள்ள எச்சரிக்கை அலட்சியம்
செய்யப்படக்கூடிய ஒன்று அல்ல.
அடுத்து ‘காலம்’ சஞ்சிகை ஆசிரியர் செல்வம் அருளானந்தம் அவர்களது நேர்காணல்.
116 பக்கங்களைக் கொண்ட இந்த இதழின் 24 பக்கங்களைத் தனதாக்கிக்ககொண்ட ஒரு
நீண்ட நேர்காணல். “முதலாவது இந்த நேர்காணலில் எனக்கு முழுமையான உடன்பாடு
கிடையாது” இந்த வசனத்துடன்தான் செல்வம் முதலாவது வினாவுக்கான தமது விடையை
ஆரம்பிக்கின்றார். அவர் தொடர்ந்து இவ்வாறு சொல்லிச் செல்கின்றார் -
“ஏனென்றால் இங்கு எவ்வளவோ இலக்கிய ஆளுமைகள் இருக்கின்றார்கள். நான் எதைச்
செய்திருக்கின்றேன் என்ற கேள்வி முன்னால் வந்து ஒரு இடைவெளியாக
இருந்துகொண்டிருக்கிறது” செல்வத்தின் ஒப்புதலில் உண்மை உண்டோ இல்லையோ
என்பதல்ல முக்கியம். அவரது தன்னடக்கமும், எளிமையும், நேர்மையும்தான்
விருப்புடன் இந்த நேர்காணலைத் தொடர்ந்து படிக்கத் தூண்டிய விடயங்கள். இதே
பண்புகளைப் பின்பற்றியவராகவே இந்த நேர்காணல் முழுவதும் தமது பலங்களையும்
பலவீனங்களையும் - வெற்றிகளையும் தோல்விகளையும் - சாதனைகளையும் வேதனைகளையும்
ஒளிவு மறைவின்றிச் சொல்லிச் செல்கின்றார். பெரும் எடுப்புடன் கூடிய
இலக்கியப் பாசாங்கோ பந்தாவோ இன்றி, தனது உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளும்
செல்வத்தின் நேர்காணல் முழுவதும், ஒரு ஏழை எழுத்தாளனுக்குரிய – ஒரு
பஞ்சப்பட்ட பத்திரிகையாளனுக்குரிய – ஒரு வெகுளித்தனமான வெளியீடாளனுக்குரிய
மெல்லிய சோகம் ஊறிக் கிடப்பதை உணரமுடிகின்றது!
இந்த நேர்காணலுக்கெனக் கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பான – “ஓர்
இலக்கியக்காரனாக இருப்பது வரமா சாபமா என்று தெரியாமல் காலம் நடந்துகொண்டே
இருக்கிறது” என்ற அவரது கூற்றும் இதே செய்தியைத்தான் இரகசியமாகச்
சொல்லுகின்றது. மேலும், மேலாண்மை ஆதிக்கத்தை நிலைநாட்டும் விடயத்தில் -
தடித்த யாழ்ப்பாண கத்தோலிக்க வேளாளர் சமூகத்தவர், கந்தப் புராணக்
கலாசாரத்தைக் கட்டிக்காத்து வந்த யாழ்ப்பாண சைவவேளாளர் சமூகத்தவரைவிட, எந்த
விதத்திலும் குறைந்தவர்களல்ல என்பதை செல்வத்தின் சிறுபராய அனுபவங்கள்
கோடிட்டுக் காட்டுகின்றன. தான் சார்ந்த, தன்னைச் சூழ்ந்திருந்த சமூகத்தின்
அநீதிகள் அவரது இளகிய மனத்தில் ஏற்படுத்திய காயங்களும் வடுக்களுமே
பிற்காலத்தில் அவரை ஓர் இலக்கியக்காரனாக ஆக்கியிருக்கின்றன என்பதை அவரது
நேர்காணலில் இருந்து காணமுடிகின்றது.
சராசரி யாழ்ப்பாண மனிதன் ஒருவனது சமூகப் பின்புலம், புலம்பெயர்வு,
அகதிவாழ்வு, குடும்பவாழ்வு, இரசனை வாழ்வு, இலக்கிய நாட்டம், சமூக ஊடாட்டம்,
இன்பதுன்பம், ஏற்ற இறக்கங்களை எளிமையாகவும் நேர்மையாகவும் கூறும்
கதையொன்றைப் படித்த இனிய அனுபவத்தை இந்த நேர்காணலைப் படிப்பதன் மூலம்
பெறலாம்;. “இலக்கிய வேலைகளால் நான் பெற்ற அனுபவம் நிறைய. இலக்கியத்தின்
தீவிர பக்கத்தில் இயங்குகிறேன். வெளியிலும் மதிப்பில்லை; அவ்வாறே
வீட்டிலும் மதிப்பில்லை. நல்லதாகவோ கெட்டதாகவோ ஒரு குறிப்பிட்ட சிலருக்கு
அறிமுகமாயிருக்கிறேன்”
இந்த நேர்காணலைப் படிப்பவர்களின் மனதை உறுத்தும் பல உண்மை வாக்கு
மூலங்களுக்கான ஒரு சின்ன உதாரணம் இது!
‘கூர்’ - 2010 கனடா கலை இலக்கிய மலரின் உருவாக்கத்திற்கென தமது தமது
நேரத்தையும் உழைப்பையும் பணத்தையும் தன்னலமின்றி முதலீடு செய்திருக்கும்
நண்பர்கள் தேவகாந்தன், கௌசலா, டானியல் ஜீவா, ஓவியர் நந்தா கந்தசாமி மற்றும்
தோன்றாத் துணையாய் நிற்போர் பலரும் பாட்டுக்குரியவர்கள்தான்!
|
|