|
ஒரு நேர்காணலில், ம.நவீன் என்னைப் பற்றி குறிப்பிட்டுள்ள இரு கூற்றுகளுக்கு
விளக்கம் தர நான் கடமைப்பட்டுள்ளேன். அதற்காக இக்கட்டுரையை எழுதுகிறேன்.
நானும் தீபாவளிக் கவிதை எழுதியது உங்களுக்கு அச்சமூட்டுவதாகக்
கூறியுள்ளீர்கள். உண்மையைச் சொல்லப்போனால், இந்த கூற்றுக்கு நான்
விளக்கமளிக்க வேண்டிய அவசியச் சூழல் இல்லை. எனினும் பொது புத்தி சார்ந்த
ஒரு கருத்தை எவ்வளவு தவறாகப் பார்க்கிறீர்கள் என்பதைச் சுட்டிக்
காட்டுவதற்காகவாவது நான் எழுத வேண்டும். அதற்கு முன்னதாக ஒரு கேள்வி.
தீபாவளி கவிதை எழுதுவது என்பது ஒரு குற்றமா? அல்லது இலக்கிய மோசடியா? நான்
ஆண்டுதோறும், நாட்டிலுள்ள மூன்று பத்திரிக்கைகளுக்கு தீபாவளி கவிதைகளை
எழுதி அனுப்பி வைத்து விட்டு, அவை பிரசுரம் ஆவதற்காக வழிமேல்
இருவிழிகளையும் வைத்துக் கொண்டு காத்திருப்பவன் அல்ல. நான் சார்ந்திருக்கிற
மின்னியல் தகவல் ஊடகத்திலும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு தீபாவளி கவிதை
சொல்பவனும் அல்ல. கடந்தாண்டு ஒரு கவிதையை தீபாவளி மலரில்
பார்த்திருக்கிறீர்கள். அதற்காக, கிடைத்த தருணத்தில், கொட்டு
வைத்திருக்கிறீர்கள். வண்ண வண்ண தீபாவளி... வாசமுள்ள தீபாவளி... என கவிதை
எழுத எனக்கு சுட்டுப் போட்டாலும் வராது. தமிழ் நேசன் தீபாவளி மலரில்
வெளியான "யாதுமாகி நின்றாய்" எனும் அக்கவிதைக்கும் ஒரு கதையுண்டு...
பெரும்பாலும் எனது ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு கதை, அல்லது ஒரு சம்பவம்
ஆதாரமாக இருப்பது போல...
தகவல் ஊடக வாழ்க்கையைத் திருமணம் செய்த கொண்ட பின்னர், கடந்த ஆறு
ஆண்டுகளில், இருமுறைதான் தீபாவளிக்காக, தீபாவளியன்று, அல்லது தீபாவளி முதல்
நாளன்று வீட்டிற்குத்
திரும்பியிருக்கிறேன். மூன்றாண்டுகால இடைவெளியில், கடந்த ஆண்டுதான்
தீபாவளிக்கு, தீபாவளியின் முதல் நாளன்று வீடு திரும்ப, எனக்கு வரம்
கிடைத்தது. அதுவும் எனக்கு தலைதீபாவளிஎன்பதால், திருமண வாழ்வின் தவத்தால்,
அந்த விடுமுறை தரிசனம் கிடைத்தது. தீபாவளிக்கு தோட்டத்திற்குத் திரும்பாதது
என்ன ஓர் இழப்பு என்பதை ஒரு தோட்ட உள்ளத்திடம் கேட்டால்தான் தெரியும்...
புரியும்... எல்லாம். நீண்ட இடைவேளைக்குப் பின், (மூன்றாண்டுகள் என்பதை
நான் நீண்ட இடைவெளி என்று துணிச்சலாக கூறலாம் என்றுதான் எண்ணுகிறேன்)
தீபாவளிக்கு வீடு திரும்புகிற எனது அளவற்ற மகிழ்ச்சிக்கு எல்லை ஏது?
தீபாவளிக்கு இரு வாரங்களுக்கு முன்னரே எனது விடுமுறை அங்கீகரிப்பட்டு விட்ட
வேளை, எனது நண்பர் ப.சந்திரகாந்தம் என்னைத் தொடர்பு கொண்டு தீபாவளிக்காக
ஒரு கவிதை அனுப்பச் சொன்னார். அவர் தீபாவளியின் போது மட்டும் கவிதை
கேட்கும் பத்திரிக்கை ஆசிரியர் அல்ல. வழக்கமாகவே, அடிக்கடி கவிதை அனுப்பச்
சொல்வார். ஞாயிறு மலரில் பிரசுரிப்பதற்காக. என்னிடம் தொடர்ச்சியாக கவிதை
கேட்கும் ஒரே பத்திரிக்கை ஆசிரியர் அவர்தான் என்பதை நான் நிச்சயம்
இவ்வேளையில் குறிப்பிட்டாக வேண்டும். ஏனெனில், பலர் எழுத்தாளர்களை நாடி
அவர்களின் படைப்புக்களைப் பிரசுரிப்பதில்லை. பத்திரிக்கைகளில் நிகழும்
போக்கு இது. நான்கூட மக்கள் ஓசை பத்திரிக்கைக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர்,
14 வாரங்களுக்கான தொடர் கவிதையை அனுப்பி வைத்தேன். பல மாதங்கள் ஆகியும்
பிரசுரிக்காததால், தயவு செய்து பிரசுரிக்க வேண்டாம். உங்கள் லட்சணம்
புரிகிறது என ஒரு கடிதம் அனுப்பி வைத்தேன். எனவே, எனது படைப்புக்களை நாடி,
எனக்கு மதிப்பளிக்கிற ஒருவர், அதுவும் இந்நாட்டின் மூத்த எழுத்தாளர்,
என்னிடம் தீபாவளிக்காக கவிதை வேண்டும் எனக் கேட்கும் போது, என்னால் மறுக்க
முடியவில்லை.
மேலும், மூன்றாண்டுகால இடைவெளியில், தீபாவளிக்கு வீடு திரும்புவதற்கு
கடவுள் எனக்கு வரமளித்ததால், தலைதீபாவளி என்பதால் மாப்பிள்ளை முறுக்கு வேறு
உடலில் ஏறிக்கொண்டதால், ஒரு கவிதை எழுதி தொலைநகல் செய்வதில் பாவம் இல்லை
என்று நினைத்தேன். தீபாவளி கவிதை எல்லாம் நான் எழுத மாட்டேன் என்ற வறட்டுக்
கெளரவமோ... திமிரோ எனக்கு கிடையாது. இப்படி நான் சொல்வது, மற்றவர்களைக்
குறிப்பதாகாது. பா.அ.சிவம் எனும் எனது கேவலமான பெயர் பத்திரிக்கையில்
வரவேண்டும் என்பதற்காகவோ, ஆயிரக்கணக்கான எனது வாசகர்கள் எனது தீபாவளி
கவிதையை வாசித்து, தீபாவளி பண்டிகை மீதான எனது "நவீனத்துவ-பின்நவீனத்துவ
அல்லது அரசியல்-நுண் அரசியல் அல்லது மார்க்சிய-மாந்தீரிக பார்வையை வாசகர்
கடிதப் பக்கத்தில் எழுத வேண்டும் என்பதற்காகவோ நான் தீபாவளி கவிதை
எழுதவில்லை. ஆண்டுதோறும் நான் தீபாவளி கவிதை எழுதி, பத்திரிக்கையில் எனது
பெயர் வருவதற்காக, நான் வளர்த்து மடிந்த "சின்னக் கருப்பு" நாய் போல,
நாக்கை தொங்க போட்டுக் கொண்டு அலைபவனும் அல்ல. அவ்வாறு செய்தால், நீங்கள்
என்னை விமர்சிப்பதில் நியாயம் உண்டு. ஆனால், கடந்தாண்டு, ஒரு தீபாவளி கவிதை
எழுதியதற்காக, பொத்தாம் பொதுவாக, என்னைக் குறிப்பிடுவது, ஒரு தனி மனிதரின்
படைப்பாக்கத்தை இழிவுபடுத்துவது, ஒரு மட்டமான/ கீழ்த்தரமான புத்தியாகும்.
ஆனால் நீங்கள் எல்லாம் மட்டத்தைப் பற்றி பேசிக்கொண்டு, அடுத்தவர் செயலை
விமர்சித்துக் கொண்டு இருக்கிறீர்கள்.
தீபாவளி கவிதை எழுதுவது இழிவென்று எந்த மகான் சொன்னார்? அந்த மகானைக்
கன்னத்தில் அறைய வேண்டும் போலிருக்கிறது. தவறான கருத்தை எப்படி துணிச்சலாக
பேசுகிறீர்கள், பார்த்தீர்களா? தொடர்ந்து அவ்வாறு எழுதிக் கொண்டு அலையும்
கொட்டை போட்ட எழுத்தாளர்களை அல்லது கொட்டை போடாத எழுத்தாளர்களை துணிச்சல்
இருந்தால் விமர்சியுங்கள். ஆனால், மனதில் வேறொன்றை வைத்துக் கொண்டு, சந்தடி
சாக்கில், இப்படி சின்னத்தனமாக நடந்து கொள்ளாதீர்கள். பெருநாள் காலத்தில்
கவிதை எழுதுவது தவறு அல்லது குற்றம் என ஒரு தவறான கற்பிதத்தை உலகிற்கு
புகட்ட முனைந்திருக்கும் உங்கள் சிந்தனை போக்கின் லட்சணம் புரிகிறது.
2000 ஆம் ஆண்டு தொடக்கத்தில், நானும் பொங்கலுக்கு, தீபாவளிக்கு, சுதந்திர
தினத்திற்கு கவிதைகள் எழுதி, என்னை அறிமுகப்படுத்திக் கொண்டவன் தான்.
அதற்குப் பின்னர், அவ்வாறு தொடர்ந்து செய்யவில்லை. எதிர்காலத்தில், எந்தப்
பெருநாள் குறித்தோ அல்லது எந்த நடப்பு விவகாரம் குறித்தோ நான் எழுத
மாட்டேன் என்றும் சாத்தியப்பூர்வமாக இப்போது கூற இயலாது. தொடக்கத்தில்,
நான் பத்திரிக்கைகளின் வழிதான், அறிமுகம் ஆனவன் எனும் ஒருவகை விசுவாசம்
அல்லது பற்று என்னுள் இருப்பதால், அவ்வப்போது பத்திரிக்கைகளில் எழுத
கடமைப்பட்டுள்ளேன். ப.சந்திரகாந்தம் கவிதை கேட்டு, நான் அனுப்பாமல்
இருப்பது என்னைப் பொருத்தவரையில், எனக்கு மனநெருடலைதான்
ஏற்படுத்தியிருக்கும்.
தமிழ்நேசனில் நான் அவ்வப்போது எனது கவிதைகளையும், எப்போதாவது கதையையும்
அனுப்பி வருகிறவன். எனக்கு தேவைப்படும் போது, அவர்கள் என் கவிதைகளைப்
பிரசுரிக்க வேண்டும். அவர்கள் கேட்கும் போது, கொள்கை, மண்ணாங்கட்டி என்று
கூறிக் கொண்டு, நான் நிராகரிப்பது, என்னைப் பொருத்தவரையில்,
மகாகேவலம்...நவீன் சொல்வது போல், பிறருக்கு அது மகத்துவமாக இருக்கலாம்...
எனக்கு எனது எல்லைகளும், வரையறைகளும் தெரியும் என்பதைப் பிறருக்கு நான்
எப்படி தெரிவிக்க முடியும்?
அமரர் ஆதி.குமணன் மறைந்து ஓராண்டு நிறைவடைந்த போது, அதனையொட்டி நடைபெற்ற
ஒரு நிகழ்ச்சியில், டாக்டர் சண்முகசிவா ஒரு கவிதை வாசித்தார். அவர்
வாசித்தது குற்றமென்றால், தண்டிக்கப்பட வேண்டிய சமூக மீறல் என்றால்,
நரகாசுரனுக்கு நான் கவிதை எழுதியதும் ஒரு குற்றமாகவே இருக்கட்டும். அனைத்து
குற்றவாளிகளும், சிறையில்தான் இருக்கிறார்களா என்ன? அல்லது அனைத்து
குற்றங்களுக்கும் இங்கு தண்டனைதான் இருக்கிறதா என்ன? நீங்கள் என்ன கடவுளா?
எனது படைப்பையும் போக்கையும் தீர்மானிப்பதற்கு...? கடவுள் என்றாலும் எனது
உரிமையைப் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லைதான்...
இதற்கு முன்னர், பெருநாட்களின் போதும், அல்லது வேறு சில நிகழ்வுகளின்
போதும், கவிதை எழுதியதையும், வாசித்ததையும் நான் என்றும் சிறுமையாகவே
எடுத்துக் கொள்ள மாட்டேன். அது குறித்து கவலை கொள்ளவும் போவதில்லை.
ஏனெனில், நான் இன்று வளர, அல்லது அடுத்தக் கட்ட நிலைக்குச் செல்ல அவைதான்
எனக்கு உதவின. மறப்பதற்கும், உதறுவதற்கும், அ·றிணையிடம் என்றால் கூட, நான்
நன்றிக் கெட்டவன் அல்ல...
மற்றொன்று, நான் மஇகா இளைஞர் பிரிவில் முக்கியப் பதவியில் இருப்பதாகவும்,
நவீனுக்கு தெரிகிற மட்டமான மஇகா, சிவத்திற்கு மகத்தானதாகத் தெரிகிறது என்று
கூறிவிட்டு, தப்பிப்பதற்காக அல்லது ஒரு பாதுகாப்பிற்காக "எனக்கு தெரிகிற
மகத்துவம் பிறருக்கு மட்டமானதாகத் தெரியலாம்" என எழுதியிருப்பதைப்
பற்றியும் எதிர்வினை ஆற்ற, நான் கடப்பாடு கொண்டுள்ளேன். நான்
சிறைபடுவதாகவும் கோடிகாட்டப்பட்டுள்ளது.
உங்கள் கருத்துக்கே வருகிறேன்... மஇகா மட்டமானது என்றால், நீங்களும்
நானும், டத்தோ சரவணனின் உதவியைக் கேட்பதற்காக, நண்பர் சை.பீரின். நூல்
வெளியீட்டு நிகழ்ச்சியில், கலா மண்டபத்தில், காத்திருந்திருக்க
வேண்டியதில்லை. அவர் பிரிக்ஸ்பீல்ட்ஸ் ஸ்ரீ பாண்டி உணவகத்திற்கு வருவதாகச்
சொன்ன போது, அங்கும் காத்திருக்க வேண்டியதில்லை... இருந்தும்
காத்திருந்தோம். இதற்கு இப்போது நீங்கள் வேறு காரணங்களைச் சொல்லக்கூடும்.
அல்லது உங்களுக்கான தற்காப்பு வாதங்களைத் தயாரித்துக் கொள்ளக்கூடும். அவர்
இறுதி வரை உதவி செய்யாததை, நான் இங்கு குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும்.
என்னைப் பொருத்த வரையில், இந்திய சமூகத்தின் இன்றைய நிலைக்கு, மஇகாதான்
காரணம்
என்பதை என்னால் எப்போதும் ஏற்றுக் கொள்ள இயலாது. மஇகாவும் ஒரு முக்கியக்
காரணம் என்பதே உண்மை. மற்றொரு முக்கியக் காரணம் இந்தியர்களே என்பது எனது
அசைக்க முடியாத நம்பிக்கை. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர், எஸ்.டி.பி.எம்
தேர்வில் நான்கு "ஏ" மதிப்பெண்களையும், ஒரு "பி" மதிப்பெண்ணையும் பெற்று,
சுங்கை சிப்புட் வட்டாரத்தில் சிறந்த மாணவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு,
கோலாகங்சார் மாவட்டத்தில் முதல் மூன்று சிறந்த மாணவர்களில் ஒருவனாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டு, மதிப்பெண் பத்திரத்தை எடுத்துக் கொண்டு, அப்போது
சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலுவிடம்
சென்று நின்றேன். Mied கடனுதவி பாரத்தை மட்டுமே தந்து அனுப்பினார்.
பல்கலைக்கழகச் செலவுக்குக் கூட ஒரு ஐம்பது ரிங்கிட் கொடுக்கவில்லை.
இத்தனைக்கும் எனது பெற்றோர், பால்மரத் தொழிலாளிகள் டோவன்பி தோட்டத்தில்.
எனது கெட்ட நேரம்,
நான் பல்கலைக்கழகம் செல்லும் போது, எனது தோட்டத்திலிருந்த பால்மரங்களை
அடியோடு தள்ளிவிட்டு, வேலை இல்லை என கைவிரித்து விட்டு, சொற்ப இழப்பீட்டை
வழங்கினார்கள். அது பெரிய கதை. அதுதான் நான் எழுதி இன்னும் வெளியிடாத எனது
முதல் நாவலும் கூட. அந்த வலி இன்னும் மனதில் அப்படியே இருக்கிறது... மஇகா
மீது எனக்கு இருக்கிற ஆத்திரம் நமது இளவட்ட எழுத்தாளர்களில் வேறு
எவருக்கும் இருக்க முடியாது என நினைக்கிறேன்.
ஆறாம் ஆண்டு பயிலும் போதே, தேர்தலின் போது தேசிய முன்னணிக்காக, கொடி கட்டி
வளர்ந்தவன்-தான் நான். அதைச் சொல்லுவதை நான் அவமானமாகக் கருதவில்லை. நான்
வளர்ந்த - வளர்க்கப்பட்ட சூழல் அவ்வாறு. எனது தந்தை, இருபத்து ஐந்து
ஆண்டுகாலமாக, எங்கள் தோட்டத்தில், தொழிற்சங்கத் தலைவராகவும், கம்பத்து
தலைவராகவும், ரேலா தலைவராகவும், டோவன்பி தோட்ட பெற்றோர் ஆசிரியர் சங்கத்
தலைவராகவும் இருந்தவர். அப்போது சுமார் 130 குடும்பங்கள் வாழ்ந்த கம்போங்
ராமசாமி, டோவன்பி தோட்டத்திற்கு, தேர்தலின் போது வருவதற்கு, டத்தோ ஸ்ரீ
சாமிவேலு, எனது தந்தையை முதலில் சந்தித்து விட்டு, பின்னர்தான் வருவார் என
இன்றும் மிஞ்சியிருக்கிற மூத்த குடிமக்கள் கூறுகின்றனர்.
நான் இதைப் பெருமைக்காகச் சொல்லவில்லை. அப்படிப்பட்டவரின் ரத்தம், மரபணு
எனக்குள்ளும் இருக்கிறது உண்மையானால், நான் வேறு எப்படி இருக்க முடியும்?
எனது இயக்க ஈடுபாடு எப்படி இருக்கும்? எனக்கென்று அரசியல் - சமூக பார்வை
இருக்கக் கூடாதா? இத்தனைக்கும் இன்றைய தேதி வரை, நான் மஇகாவில் ஓர்
உறுப்பினரே கிடையாது. நவீன், உங்களுக்கு எழுதுவதில் இருக்கிற
துணிச்சல்போல், நான் மஇகாவில் உறுப்பினரா இல்லையா என்பதை உறுதி செய்து
கொள்ளலாம்.
அரசாங்க செய்தியாளர் என்ற ரீதியில், அடிக்கடி மக்களைச் சந்திக்கிற
செய்தியாளர் என்ற முறையில், அவர்களே மிகுந்த நம்பிக்கையில் நியமித்து
விட்டு, என்னிடம்
தொலைபேசியில் கூறினார்கள். நான் உறுப்பினரே கிடையாது என்று கூறினேன்.
பரவாயில்லை உறுப்பினராக ஆகிவிடலாம் என்றார்கள். அந்த சமயத்தில்தான்
பத்திரிக்கையில் புகைப்படமும் பெயரும் வந்தது. அதுகூட எனது facebook
படம்தான். அவர்களாக எடுத்துக் கொண்டார்கள். ஆனால், நான் மஇகா இளைஞர்
பிரிவின் முதல் உச்சமன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். என்னதான்
பேசுகிறார்கள் என்பதை வேடிக்கை பார்ப்பதற்காக... இவ்வாண்டு நடைபெற்ற மஇகா
இளைஞர் பிரிவின் ஆண்டுக் கூட்டத்தில் கூட, ஒரு செய்தியாளராகத் தான் கலந்து
கொண்டேனே தவிர, என்னையும் மீறி, எனக்காக மேடையில் ஒதுக்கப்பட்டிருந்த
நாற்காலியில் அமரவில்லை. எனக்கு அது எல்லாம் பெரிதாகத் தோன்றவில்லை. ஆனால்,
அரசியல் ஆர்வம் என்னுள் பன்மடங்கு உள்ளது. ஆனால், எனக்குள் குழப்பமும்
உள்ளது. எனது இலக்கியத்தை மீறி, எழுத்தை மீறி, என்னால் அதற்குள் நுழைய
முடியவில்லை. இத்தனைக்கும், அவர்களாகவே வழங்கிய இப்பதவியை நான் முறையாகப்
பயன்படுத்திக் கொண்டால், குறுகிய காலத்தில் "அரசியலில் வளரலாம்"... நண்பகல்
12 முதல் இரவு எட்டு வரையிலான அலுவல் நேரம் (செய்திப்பணி) எனது எழுத்துப்
பணிக்கும், சமூக ஈடுபாட்டுக்கும், அரசியல் பிரவேசத்திற்கும் தடையாகவே
உள்ளது. எனவே, நான் அரசியல்வாதி அல்ல என்பதைச் சொல்லவே எனது இன்றையச் சூழலை
இங்கு விளக்கினேன். அப்படி அரசியல் வாய்ப்பு வந்தால், அதை ஏற்றுக்
கொள்வதும், மறுதலிப்பதும் எனது அடிப்படை சுதந்திரம், அதைப்பற்றி பேச
நீங்கள் யார் நவீன்? அதற்கும் படைப்பாக்கத்திற்கும் முடிச்சு போட நீங்கள்
யார் நவீன்? என் நண்பர் என்றால், முதலில் என்னிடம் தகவல்களை உறுதிபடுத்திக்
கொண்டு எழுதுங்கள். ஆனால், நீங்கள் ஒரு பத்திரிக்கையாளர் மட்டும்தானே
எனக்கு... ஓர் எழுத்தாளர் அனைத்து வித விமர்சனங்களுக்கும் உட்பட்டவர்
என்பதை நான் நன்கு அறிவேன். படைப்பு மட்டுமின்றி, அவரது செயல்பாடுகளும்
விமர்சனத்திற்கு உட்பட்டவையே... ஆனால், தவறாக, திரித்து விமர்சனம்
செய்யாதீர்கள்... இலக்கியவாதிகள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்பது எழுத்து
தர்மத்தின் எத்தனையாவது விதிமுறை? இலக்கியவாதிகள் ஏன் வணிகர்களாகவும்
இருக்கக் கூடாதா? அரசியல்வாதிகளாகவும் இருக்கக் கூடாதா? பல ஆளுமைகளைக்
கொண்டவர்களை நீங்கள் உங்கள் வாழ்வில் அறிந்து வைத்ததில்லையா? ரவிக்குமாரின்
"அவிழும் சொற்கள்" எனும் கவிதைத் தொகுப்பை வாசித்த போது, அவர் ஒரு சட்டமன்ற
உறுப்பினர் எனும் அவர் மீதான அடையாளம் உடைந்தே போய் விட்டது எனக்கு...
இன்னும் பலரைச் சுட்டிக் காட்டலாம்... நவீனின் என் மீதான விமர்சனத்தைக்
கண்ட போது, முதலில் சட்டென நினைவுக்கு வந்தது, நான் மிகவும் நேசிக்கும்
அழகுநிலாவின் ஒரு கவிதை... "பலூன்காரன் வராத தெரு" எனும் தொகுப்பில்
உள்ளது. நேர்காணலை வாசித்தப் பின்னர் வீட்டிற்குச் சென்றதும், நான் முதலில்
செய்தது, அக்கவிதையை மீண்டும் முழுமையாக வாசித்ததுதான்...
உங்களுக்குச் சொல்லித் தந்தது யார்
இப்படி மிகச் சரியாகவும்
மிகத் தவறாகவும் என்னை விமர்சிக்க...
அமைதியாக வாருங்கள்
என் இறுதி ஊர்வலத்திலாவது...
(அழகுநிலா... பலூன்காரன் வராத தெரு... பக்கம் 32)
மஇகா மட்டமானதாகத் தெரிந்தால், முன்பு ஒருமுறை, காதல் இதழை மஇகா தலைவர்
டத்தோ ஸ்ரீ சாமிவேலுவிடம் காண்பித்து, அதை ஏன் இதழில் போட்டுக்
கொண்டீர்கள்? அதற்கு நீங்கள் பொறுப்பில்லையா? அல்லது அதற்கு நியாயம்
உள்ளதா? நீங்கள் சொல்லப்போகும் நியாயமும் தெரிந்த கதைதான்... மக்கள்
கூட்டணியின் சிலாங்கூர் அரசாங்கம் வழங்கிய "இளம் கவிஞர்" விருதை வாங்கிக்
கொண்டு, புகைப்படம் பிடித்து, பதிவேற்றம் செய்து, செய்தியும் போட்டுக்
கொள்கிறீர்கள்... அதைப்பற்றி நான் விமர்சித்தது கிடையாது... விருது
வாங்குவதைப் பற்றி பல்வேறு தருணங்களில், பலரைக் கிண்டல் செய்து, கடுமையாகத்
தாக்கிப் பேசியுள்ள நீங்கள், மக்கள் கூட்டணி என்பதால் விருதை ஏற்றுக்
கொண்டீர்களோ? மஇகா மட்டமாகவும், மக்கள் கூட்டணி மகத்தானதாகவும்
தெரிந்திருக்கிறது உங்களுக்கு... என்னவோர் அரசியல் சித்தாந்தம் இது...?
நான் இதனை இங்கு குறிப்பிட்டது கூட, உங்கள் செயலை முதலில்
பாருங்கள்... பின்னர் அடுத்தவர் லட்சணத்தைப் பற்றி எழுதலாம் என்பதைச்
சுட்டிக்காட்ட மட்டுமே ஒழிய, உங்களின் அச்செயலை நானாகவே முன் வந்து
விமர்சிப்பதற்கு அல்ல... ஊருக்கு இலக்கிய நாட்டாமை செய்யும் நீங்கள் நல்ல
நாட்டாமையாக இருந்தால், இதனைப் புரிந்து கொள்வீர்கள்... நல்ல நாட்டாமையாகத்
திகழ்வதும், கெட்ட நாட்டாமையாகத் திகழ்வதும் வெறும் வாசிப்பை மட்டுமே
வைத்து அல்ல... வாழ்க்கை அனுபவத்தையும், மன ஓட்டத்தையும், அறிவாற்றலையும்
உட்படுத்தியது என்பது எனது வாழ்வில் நான் இதுவரை கண்ட தரிசனம்...
இன்னும் முடிந்து போன, காலத்தால் மறக்கப்பட்டிருக்கும் பல்வேறு விஷயங்கள்
பற்றியும் என்னால் பேச, விவாதிக்க முடியும். ஆனால் நான் விரும்பவில்லை...
ஓர் எழுத்தாளரின் ஒருசில நடவடிக்கைகளைத் தெரிந்து வைத்துக் கொண்டு, அவை
பற்றி முழுமையாக அறிந்து வைத்திருக்காமல், "கவிஞர் சிறைபடுகிறார்"
என்றெல்லாம், பல்லாயிரக்கணக்கானோர் புழங்குகிற இணைய தளத்தில் தனக்கு
எல்லாம் தெரிந்த மாதிரி கருத்துரைக்கக் கூடாது. மேல் விவரம் கேட்க, நீங்கள்
கைத்தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டால், எளிதில் நான் எடுக்க மாட்டேன்
என்று நானே சொல்கிறேன். ஆனால், ஒரு குறுந்தகவலுக்கு நிச்சயம் பதில்
அனுப்புவேன். நான் முழுமையானவன் அல்ல... நானும் பலவீனங்கள்
கொண்டவன்தான் என்பதைக் காலக் கண்ணாடி எனக்கு காட்டிக் கொண்டுதான்
இருக்கிறது.
நீங்கள் விரைவில் சந்தித்துப் பேசவிருக்கும் எழுத்தாளர் ஜெயமோகனிடம்
கேளுங்கள், சினிமாவுக்கு வசனம் எழுதுகிறீர்கள், நீங்கள் சிறைபடுகிறீர்களா
என்று...? எஸ்.ராமக்கிருஷ்ணன் முதல் மனுஷ்யபுத்திரனும் வந்தாகிவிட்டது
சினிமாவுக்கு... அதுபோல்தான், பல ஆளுமைகளைக் கட்டி வைக்க முடியாது. காலம்
அவற்றைப் பெயர்த்துக் கொண்டு, வெளிப்படுவது நிச்சயம். அரசியல் பற்றி உங்கள்
பார்வை மொண்ணையாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். ஆனால், இவ்வளவு
மொண்ணையாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கட்சி சார்ந்த
நடவடிக்கைகளில் ஈடுபடுவர்கள் மட்டுமே அரசியல்வாதிகள் என்றால்,
இலக்கியத்திலும் இன்னும் பிற துறைகளிலும் அரசியல் செய்து கொண்டு,
அட்டூழியம் நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு என்ன பெயர்? நாம் சார்ந்துள்ள
இலக்கியத்திலேயே, ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு மாதிரி பேசிக் கொண்டு, ஒவ்வொரு
மாதிரி விமர்சித்துக் கொண்டு, எதையும் நேரடியாகக் கேட்க திராணியற்று,
காலத்தின் மீதும், பொத்தம் பொதுவாக குறிப்பிட்ட ஒருவர் மீதும்
பழித்துரைத்துக் கொண்டு வாழ்பவர்களுக்கு என்ன பெயர்? படைப்புகளுக்கு
தரத்தைப் பார்க்காமல் முகத்தைப் பார்த்து பரிசளிப்பவர்களுக்கு என்ன பெயர் ?
அங்கும் அரசியல் நிகழும் போது, கட்சியில் சுழல்பவர்களை மட்டுமே
அரசியல்வாதிகள் என்பது என்ன ஒரு மடத்தனம்? இன்று வரையில், சிவத்தின்
கவிதைகள் கவிதைகளே இல்லை என்று வாதிடுபவர்களும் உண்டு. அவர்கள் எப்படி
பட்டவர்கள் என்றால், வல்லினத்தின் கலை-இலக்கிய விழாவில், அரங்கேறிய ஒரு
கொச்சை நாடகத்தில், வரும் "உனது மனைவி, இன்னொருத்தனை நினைத்துக் கொண்டு,
உன்னிடம் கலவியில் ஈடுபடுகிறாள்" என்பதைப் போன்ற வசனத்தைப் போன்றவர்கள்.
எங்கோ உள்ள எழுத்தாளரின் படைப்பை நுகர்ந்து விட்டு, இங்குள்ளவர்களின்
படைப்பில் அந்த வாசத்தைத் தேடி ஏமாறும் கோமாளிகள்... என் படைப்பை எனது
முந்திய படைப்புடன் தான் ஒப்பிட வேண்டுமே தவிர, இன்னொருவரின் படைப்புடன்
அல்ல. நான் பெயர்கூட சொல்ல விருப்பமில்லாத எனது பழைய நண்பர்
அப்படித்தான்... ந.முத்துக்குமார் எழுதிவிட்டார்... அகிலன் எழுதி
விட்டார்... நீங்கள் எழுதவில்லையா? என்று கேட்டு கேட்டு எனது தூக்கத்தைக்
கலைத்தவர். இவர்கள் எல்லாம் கூட, கட்சியைச் சாராத அரசியல்வாதிகள்... கட்சி
அரசியலை விட, சமூகக் கட்டமைப்பில் நிகழும் இதர அரசியல் நடவடிக்கைகளும்,
அவற்றை நிகழ்த்தும் நபர்களும், உத்தமர்கள் போல நவீனுக்கு... அல்லது அவர்
அச்சமூட்டுபவர்கள் அல்ல போல நவீனுக்கு... நீங்கள் சை.பீரையோ...
கோ.புண்ணியவானையோ சீண்டினால், அவர்கள் ஏதும் கருத்துரைக்காமல் இருக்கலாம்.
ஆனால், உங்கள் பார்வையில், என்னையும் என் நடவடிக்கைகளையும் தகுந்த
ஆதாரங்கள் இன்றி அல்லது உங்களின் சிந்தனைக்கு ஏற்ப, விமர்சிப்பதைக் கண்டு,
நான் அமைதி காக்க மாட்டேன்.
இவ்வேளையில் வண்ணநிலவனின் ஒரு கவிதையைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன்.
எப்போதும் என்னை
எங்காவது அழைக்கின்றனர்
நண்பர்கள்
சிந்தனை சிறகடித்துப் பறக்க
கூட்டத்திற்குக் கூப்பிடுகிறார்கள்
வேறு சிலர்
நாட்டைத் திருத்த வா என்கின்றனர்
பிரம்மானந்த சுவாமிகளோ
ஞானம் தேட வாயென் என்கிறார்
இதில் பூனைகள் வேறு
தங்களோடு
விளையாட வரவில்லையென்று
கோபிக்கின்றன
யாரோடு போவேன் ?
யாருக்கென்று வாழ்வேன்...
(வண்ணநிலவன், விருட்சம் கவிதைகள், பக்கம் 123)
எனது இந்த கட்டுரையில், பதில் விமர்சனம் செய்யக்கூடிய வரிகளை
அடிக்கோடிட்டு, எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யுங்கள்... எனது
இக்கட்டுரையின் நோக்கமே
என் மீது நீங்கள் வீசிய இரு குற்றச்சாட்டுகள், அடிப்படை அற்றவை என்று
கூறுவதே ஆகும். நிரூபிக்கத் தேவையில்லை.
ஏற்கனவே, நீங்கள் குறுந்தகவலில், நான் இந்நாட்டு இலக்கியத்திற்கு ஒன்றுமே
செய்யவில்லை என்று சுமத்தியப் பழிக்கு, மின் அஞ்சலில் பதில் அனுப்பி வைத்து
விட்டேன்.
இலக்கியம் என்ன செடி, கொடியா வளர்ப்பதற்கு என்ற கேள்வி எப்போதும் எனக்கு
உண்டு... எனது படைப்பு, எனது சமூகத் திட்டங்கள் என நான் எனது வழியைத்
தேர்ந்தெடுத்து
செய்து கொண்டிருக்கிறேன். நீங்கள் மட்டுமே இலக்கியச் செடி, கொடிகளை
வளர்ப்பதாக எண்ணினால், தொடர்ந்து உங்கள் வழியில் செல்லுங்கள். அதற்காக,
அடுத்தவர் வழியும்,
அடுத்தவரும் தவறு என்றெல்லாம் தம்பட்டம் அடிக்காதீர்கள்.
டாக்டர் சண்முகசிவா மீது எனக்கு இருவகை விமர்சனங்கள் உண்டு. அவற்றையும்
மீறியது அவர் என்னிடம் கூறிய வார்த்தைகள். கொண்டாட்டத்தை எழுது /
மகிழ்ச்சியை எழுது /
சோகம் தேவையில்லை / நம்பிக்கையாய் எழுது... எனும் சொற்கள் என்
வாழ்க்கையில், ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. அதனால்தான், கடுமையான,
negative விமர்சனங்களை
முற்றாக ஒதுக்கி வைத்து விட்டு, ஆரோக்கியமான, வளமான விமர்சனங்களை எழுதிக்
கொண்டிருக்கிறேன். சீ.முத்துசாமி அவர்களின் மண்புழுக்கள் நாவல் மீதான
கட்டுரையும், மெளனத்தின் உரையாடல்கள் தொடர் கட்டுரையில், கோ.புண்ணியவான்,
ம.நவீன், ஏ.தேவராஜன் கவிதைகள் பற்றி நான் எழுதிய கட்டுரைகளும் அதன்
நீட்சிதான்... ஆனால், தீவிர இலக்கியம் என்பதே, சாடி எழுதுவதும், கடுமையாக
விமர்சிப்பதும், இலக்கியவாதிகளின் படைப்புகளைப் பற்றி பேசாமல்,
விவாதிக்காமல் அவர்களின் செயல்பாடுகளை மட்டுமே விவாதிப்பதாகவும் ஒரு
தோற்றம் இங்கு ஏற்பட்டுள்ளது.
எனது மருத்துவ நண்பர் ஒருவர் கூறினார்... "சிவம், நீ சந்தோஷப்படலாம்...
சிவம் தீபாவளி கவிதை எழுதியது குறித்து, நவீன் நான்கு எழுத்தாளர்களிடம்
பேட்டி கண்டு, வெளியிடாமல் போனவரை, மகிழ்ச்சிதானே" என்றார். எனது பதில்
இப்படித்தான் இருந்தது... "அவர் அதையும் செய்வார்" என்று...
காலம் தோறும், இளம் கவிஞராகவே இருக்க, மற்றவர் பற்றி தெரியாமல்
கருத்துரைக்க, உங்களின் கருத்தே உலகக் கருத்து என வற்புறுத்த, அடுத்தவர்
கண்ணாடியில்
உங்கள் முகம் தெரிய வேண்டும் எனும் ஆவல் நிறைவேற எனது வாழ்த்துக்கள்,
நவீன். சுதந்திர தின வாழ்த்துக்கள்.
|
|