|
லும்பினி.கோம் எனும் இணையத் தளத்தில் பிரசுரமாகிய எனது நேர்காணலுக்கு சிவம்
தனது எதிர்வினையை வல்லினம் அகப்பக்கத்திற்கு எழுதியிருந்தார். நியாயப்படி
அது லும்பினிக்கு அனுப்பப் பட்டிருக்க வேண்டும். அல்லது அதை மறுபிரசுரம்
செய்த எனது புளோக்கிற்கே எதிர்வினையாக அனுப்பியிருக்கலாம். ஆனால் எந்த
வகையிலும் சம்பந்தப்படாத 'வல்லினம்' அகப்பக்கத்திற்கு அனுப்பியபோது முதலில்
குழம்பினேன். பின்னர் 'இலக்கியக் குற்றவாளியின் வாக்குமூலம்' எனும் அவர்
தலைப்பை பார்த்ததும் சமாதானம் அடைந்தேன். குற்றவாளிக்கு இதெல்லாம்
சகஜம்தானே.
முதலில் சிவம் எதிர்வினையாற்றிய குறிப்பிட்ட அந்தப் பகுதியை இங்குப்
பதிவிடுகிறேன்.
கவிதைகளின் போக்கு எவ்வாறு உள்ளது ?
ஆரோக்கியமாக உள்ளது. அகிலன் மற்றும் சிவத்தின் கவிதைகள்
தனித்துவமானவை.ஆரம்பத்தில் அகிலனிடம் இருந்த சில எழுத்தாளர்களின்
பாதிப்பு இப்போது இல்லாததை உணர்கிறேன். பரந்த வாசிப்பு பலரது கவிதை
சொல்லும் மொழியை மாற்றமடைய வைத்துள்ளது. அதில் முக்கியமாக
ஏ.தேவராஜன் மற்றும் பச்சைபாலனைக் குறிப்பிடலாம்.சிவத்தின் கவிதைகள்
என்னைப் பெரிதும் கவர்ந்தவை. தோட்ட வாழ்வு சார்ந்த அவரது கவிதைகள்
அதில் முக்கியமானது. ஆனால் கடந்த தீபாவளிக்கு அவரும் ‘தீபாவளி
கவிதை’ எழுதியதுதான் எனக்கு அச்சத்தை அளித்தது. பெரும்பாலும்
எனக்கு விழாக்கால கவிஞர்களைக் கண்டால் ஏற்படும் அச்சம் அது. அதே
பத்திரிகையில் அவர் ம.இ.கா கட்சியில் இளைஞர் பிரிவில் முக்கியப்
பொறுப்பில் படத்துடன் வெளிப்பட்டபோது நடுநடுங்கிப் போனேன். எனக்கு
மட்டமாகத் தெரியும் ம.இ.கா அவருக்கு மகத்தானதாகத் தெரிவதில்
தவறில்லை.அதே போல எனக்கு மகத்தானதாகத் தெரியும் ஒன்று சக
இலக்கியவாதிகளுக்கு மட்டமாகத் தெரியலாம்.ஆனால் ஒரு கவிஞன் தான்
கொண்டிருக்கும் கட்டற்ற சுதந்திரத்தை மதமும், கட்சிகளும்,
அமைப்புகளும், இயக்கங்களும் பறித்துக்கொள்ளும் என தீர்க்கமாக
நம்புகிறேன். நான் வாழும் காலத்தில் ஒரு நல்ல கவிஞன் இவ்வாறு
சிறைபடுவதால் ஏற்படும் நடுக்கமாக அது இருக்கலாம். (http://www.lumpini.in/sevvi_002.html)
தீபாவளி கவிதை எழுதுவது குற்றமா? அல்லது இலக்கிய மோசடியா? என்று
கேட்டுள்ளார். நிச்சயமாக இல்லை. எந்த மடையன் அப்படி சொன்னது? நான் கூறிய
கருத்து மிக எளிதானது. விழா காலங்களில் எழுதும் கவிஞர்களைப் பார்க்க
அச்சமாக இருக்கிறது என்று கூறினேன் அவ்வளவுதான். 'அச்சம்' என்று கூறியதற்கு
குற்றம் என்றும் இலக்கிய மோசடி என்றும் பொருளாகுமா என்ன? ஓ மறந்தே
விட்டேன். அவர் இலக்கிய குற்றவாளி அல்லவா... அப்படித்தான் பேசுவார். தொடக்க
காலங்களில் நானும் விழா காலங்களுக்கு ஏற்ற வகையில் கவிதைகள்
எழுதியுள்ளேன். அது போன்ற தருணங்களில்தான் கவிதையை உடனே பத்திரிகையில்
பிரசுரிப்பார்கள். தொடர்ந்த வாசிப்புக்குப் பின்தான் கவிதை உருவாகும்
விதத்திற்கும் செய்யப்படும் விதத்திற்கும் உள்ளபேதத்தை துல்லியமாக அறிய
முடிந்தது. கவிதை செய்யப்படும் போதும் உருவாகும் போதும் உண்டாகும் மன
நிலையின் வேறுபாட்டை உணர்ந்தேன். இதையே ஒரு பயிற்சியாகச் செய்து பார்த்த
போது எனக்கென்று ஒரு கவிதை ரசனை பிறந்தது. அது எல்லோருக்கும் பொதுவான கவிதை
ரசனை என்று சொல்ல வரவில்லை. ஒருவன் தனக்கான கவிதை ரசனையை தேர்ந்தெடுப்பதே
மிகப்பெரிய பயிற்சி. ஒரு வாசகன் தான் வாசிப்பது கவிதையா அல்லது கவிதை போல
செய்யப்பட்ட சொல் அடுக்கா என அடையாளம் கண்டுகொள்வதே இன்றைய சூழலில் பெரும்
சவாலானது. அந்த வகையில் நேர்காணலில் எழுந்த கேள்விக்கு எனது ரசனை சார்ந்த
கவிஞர்களாக சிவத்தையும் அகிலனையும் குறிப்பிட்டேன். அதே சமயத்தில் பாம்பின்
கால் பாம்பறியும் என்பது மாதிரி, சட்டென உருவாக்கும் கவிதையின் தன்மையையும்
அதன் பலவீனத்தையும் அறிந்திருப்பதால் அவர் எழுதிய தீபாவளி கவிதை என்னை
அச்சமுறச் செய்தது என்றேன். இப்போதும் அதே கருத்தில்தான் நிற்கிறேன். சிவம்
கேட்பார் இதை கேட்க நான் யார் என்று. இதை சொல்வதற்கு நான் யாராக இருக்க
வேண்டும் என்பதுதான் தெரியவில்லை. இதில் வேறு அவர் வாழ்க்கை வரலாறையெல்லாம்
எழுதியுள்ளார்... அவர் தலை தீபாவளி வரை... 'தயவு செய்து முழுமையாக
வெளியிடவும்' என குறிப்பு இருந்ததால் வேறு வழியில்லாமல் போட
வேண்டியதுள்ளது. கூடவே தான் சின்னக் கருப்பு நாயல்ல பெரிய கருப்பு பேயல்ல
என்று வேறு பினாத்துவார். அதோடு விடுவாரா? தீபாவளி கவிதை எழுதக் கூடாது
என்று எந்த மகான் சொன்னார் என்று கேட்பார். நான் எந்த மகானைக் கண்டேன்?
எனக்கு எளிய மனிதர்களைத்தானே தெரியும்.
இதோடு விடாமல் துணிச்சல் இருந்தால் கொட்டை போட்ட எழுத்தாளர்களை
விமர்சிக்கும்படி வேறு கூறியுள்ளார். யார் அந்த கொட்டை போட்டவர்கள். அப்படி
நான் யாரையும் கருதவில்லையே! ஒரு நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விக்கு
மட்டும்தானே நான் பதில் கூற முடியும். ஏன் சம்பந்தம் இல்லாமல் என்னென்னவோ
என்னை சொல்லச்சொல்கிறார் என்பதுதான் புரியவில்லை. இதில் இவற்றை கூற நான்
யார் என்றும் கேட்கிறார்... ஒன்றும் இல்லாத நான் கூறிய எளிய வார்த்தைக்கு
எட்டு பக்கத்தில் ஏன் கட்டுரை எழுதுகிறார் என்று புரியவில்லை. பொருட்படுத்த
தகுதியற்ற எனக்கே எட்டு பக்கம் என்றால் பொருட்படுத்தக்கூடிய எழுத்தாளனுக்கு
எத்தனை பக்கங்கள்!!! நான் சிவத்தை பொருட்படுத்தாமல் இருக்க முடியாது. இந்த
வாக்குவாதங்களில் அல்லது எதிர்வினையில் நான் சிவத்தின் இலக்கியம் தொடர்பான
ஆளுமையை குறைத்து மதிப்பிட விரும்பவில்லை. ஆனாலும் தொடர்ந்து வரும் அவர்
வரிகள் என்னை பெரிதும் குழப்பமடையச் செய்கின்றன. இதை உண்மையில் சிவம்தான்
எழுதினாரா அல்லது சிவத்தின் பெயரில் யாராவது மடையன் எழுதினானா? என்ற
குழப்பம். அந்த வாக்கியம் இவ்வாறு வருகிறது..
"அமரர் ஆதி.குமணன் மறைந்து ஓராண்டு நிறைவடைந்தபோது, அதனையொட்டி நடைபெற்ற
ஒரு நிகழ்ச்சியில், டாக்டர் சண்முகசிவா ஒரு கவிதை வாசித்தார். அவர்
வாசித்தது குற்றமென்றால், தண்டிக்கப்பட வேண்டிய சமூக மீறல் என்றால்,
நரகாசுரனுக்கு நான் கவிதை எழுதியது ஒரு குற்றமாகவே இருக்கட்டும்" இவ்வாறு
அந்த வரிகள் உள்ளது. முதலில் அதை யார் குற்றமென்றது? தண்டிக்கப்பட வேண்டிய
சமூக மீறல் என்றது? இக்கருத்தை இந்த எதிர்வினையில் கூறவேண்டிய காரணம் என்ன?
'அச்சமாக உள்ளது' என்ற எனது ஒரு வரிக்கு இத்தனை பொருளா? தமிழின் பெருமையே
பெருமை. இதையெல்லாம் சொல்லிவிட்டு நீங்கள் என்ன கடவுளா? என்று வேறு
கேட்கிறார். ஐயா சாமிகளா நான் மகானையே பார்த்ததில்லை என்று கூறினேன்...
இப்போது கடவுள் வேறா! பயமாக இருக்கிறது!
சிவம் எதிர்வினையில் மிக சுவாரசியமானப் பகுதியும் இதுதான்.
இவ்வருடத்தின் மிகப்பெரிய நகைச்சுவை இது. அமரர் ஆதி.குமணனும்
டாக்டர் சிவாவும் நண்பர்கள். சிவம் சொன்னது போல ஓராண்டு நினைவு
தினத்தில் டாக்டர் சண்முகசிவா கவிதை வாசிக்கவில்லை. மறுநாள்
நடந்த அஞ்சலி கூட்டத்தில் வாசித்தார். இதனோடு சிவம் தான்
நரகாசுரனுக்குக் கவிதை எழுதியதையும் ஒப்பிடுகிறார். நரகாசுரனும்
சிவமும் நண்பர்களா? அல்லது நரகாசுரன் இறந்த மறுதினத்தில் சிவம்
கவிதை வாசித்தாரா? அல்லது ஆதி.குமணனும் நரகாசுரனும் ஒன்றா? என்ன
வகையான ஒப்பீடு இது?
விஷயத்திற்கு வருவோம். பொதுவாகவே இலக்கியம் தொடர்பாக
ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்தாக்கங்கள் இருக்கும். அவை வாசிப்பின்
மூலம் அடையப்பெறுவது. துரதிஷ்டவசமாக நமது நாட்டில் பலரும்
வாசித்தல் என்ற உழைப்பு இன்றி பிற இலக்கியவாதிகள் கூறிச்சென்றதை
தமது கருத்துகளாக வரிந்து கொள்கின்றனர். என்னளவில் நான் கவிதை
குறித்து வைக்கும் விமர்சனம் எனது வாசிப்பு மற்றும் புரிதல்
அடிப்படையானது. அதை முழுமுற்றாகயாரும் நிராகரிக்கலாம். அபத்தம்
என்று கூறலாம். என் விமர்சனங்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக எனது
படைப்புகளையும் குப்பை என ஒதுக்கி வைத்துவிடலாம். அதற்கு நான் செய்ய
ஒன்றும் இல்லை. என்னைப்போல வெவ்வேறான வாசிப்பு அனுபவம்
கொண்டவர்களுக்கு மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். நான் ஓர்
இலக்கியபிரதியை வாசித்து நெகிழ்ச்சியடையும் அளவில் வேறொருவர் நான்
முற்றிலும் நிராகரிக்கும் பிரதியை வாசித்து அடையலாம். கலை
இலக்கியங்களில் நான் இதை மிகச்சாதாரணமான நிகழ்வாகக் கருதுகிறேன்.
அவ்வடிப்படையில் நான் சிலருடைய கருத்துகளை ஏற்றுக்கொள்ளவும்
நிராகரிக்கவும் செய்கிறேன். நான் துட்சமாக நினைக்கும் ஒருவரின்
கருத்தை சிவத்தை போல நிச்சயம் தூக்கிக் கொண்டு அழையமாட்டேன்.
'சூழலுக்குத் தக்கவாறு சொற்களைத் தூக்கிப்போட்டு உருவாகும் ஒரு
சொல்லடுக்கை... ஆழமற்ற ஆய்வற்ற மேலான மனநிலையை நான் கவிதை என்று
ஏற்றுக்கொள்வதில்லை... அத்தகையகவிஞர்கள் நிச்சயம்
அச்சமூடுபவர்கள்தான்... அவர்கள்தான் ஒரு சமூகத்தின்
இலக்கியசூழலை கீழானநிலைக்கு இழுத்துச்செல்வதால்.' இது என் தெள்ளத்
தெளிவான எண்ணம்.
அவர் கட்டுரையின் முக்கியமான பகுதி நான் டத்தோ சரவணனுக்கு காத்திருந்த
செய்தி. நிச்சயமாக சிவம் இந்தப் பகுதியில் உண்மையைதான் எழுதியுள்ளார்.
ஆனால் உண்மையை முழுதுமாகச் சொல்ல வேண்டாமா? ஓ... இலக்கிய குற்றவாளி
அப்படித்தான் போல. டத்தோ சரவணனை நான் ஒரு நிகழ்வில் சந்தித்த போது தான்
மலேசிய இலக்கியத்தை வளர்க்க அறவாரியம் அமைக்க இருப்பதாகவும் அதில்
பங்கெடுக்க இயலுமா என்று கேட்டார். பொதுவாகவே இதுபோன்று திடீரென
எதிர்ப்படும் மனிதர்கள் பழக்கமானவர்களாக இருந்தால் சாங்கியமாக இவ்வாறு சில
வார்த்தைகளை உதிர்ப்பதால் அது குறித்து பேசாமல் 'கலை இலக்கிய விழா'
தொடர்பாகவும் அதன் பண தேவை குறித்தும், வல்லினம் மூலம் நான் தொடர்ந்து சில
மலேசிய எழுத்தாளர்களின் புத்தகங்களைப் பதிப்பிக்க விரும்புவதாகவும்
கூறினேன். வல்லினத்திற்கு தான் உதவுவதாகவும் ஒரு நாள் அலுவலகத்தில் வந்து
பாருங்கள் என்றார். அதோடு முடிந்தது. பின்னர் சை.பீர் வெளியீட்டு விழாவில்
சிவம்தான் சரவணனை இப்போது சந்தித்தால்தான் உண்டு என்றார். நானும் சரி
என்றேன். சரவணன் இங்கு பேச வேண்டாம் ஸ்ரீ பாண்டி வாருங்கள் என்றார்.
நாங்களும் அங்குச் சென்றோம். எங்களோடு அங்கு யுவராஜன், ஸ்டார் கணேசன்,
தோழி, மணிமொழி இருந்தார்கள். நான் சிவத்திடம் 'நிகழ்வில் கலந்துகொள்ள
ஐம்பது பல்கலைக் கழக மாணவர்களுக்கான செலவை (RM 2500.00) சரவணன்
ஏற்றுக்கொண்டால் உதவியாக இருக்கும்' என்றேன். இறுதியில் அவர் ஸ்ரீ
பாண்டியிலும் சற்று நேரம் சிவத்திடம் ஏதோ கூறிவிட்டு போய்விட்டார்.
டத்தோ சரவணன் என்ன டத்தோ சாமிவேலுவையே சிலமுறை சந்தித்து பேசியுள்ளேன்.
தொலைபேசியில் உரையாடியுள்ளேன். பெரும்பாலும் என் பள்ளிக்கூடம் தொடர்பான
விஷயத்திற்கு. மலேசியாவின் இலக்கிய தேவைகளை அவரிடமும் குறிப்பிட்டுள்ளேன்.
இன்னும் வாய்ப்பு கிடைத்தால் ம.இ.காவில் உள்ள இதர தலைவர்களிடமும் பேசுவேன்.
இயன்றால் பிரதமரிடம் கூட தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பணம்
ஒதுக்கச்சொல்வேன். நான் கேட்பது அரசாங்கத்திடம் நாம் செலுத்தும்
வரிப்பணம். கேட்பதில் எனக்கு எந்தத் தடையும் இல்லை. அதற்காகச்
செயல்பட வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உள்ளது என அழுத்தமாகக் கூறுவேன்.
நான் ஒரு புத்தக வெளியீடு வைத்து அதற்கு அவர்கள் பையில் உள்ள ஆயிரத்தையோ
இரண்டாயிரத்தையோ யாசித்து நிற்கவில்லை. மலேசிய இந்திய சமூகத்துக்கும்
அரசாங்கத்துக்கும் இடைத்தரகராக இருக்கும் ம.இ.கா இலக்கியத்திற்காக நிரந்தர
ஓர் நிவாரிணியை ஏற்படுத்த வேண்டும் என்கிறேன். டேவான் பாஹாசா போல
அரசாங்கத்திடம் தமிழுக்கு மாபெரும் அமைப்பை உருவாக்க மனமில்லை என்றாலும்
நமது மலேசிய தற்கால தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு அரசிடம் பணம் பெற்று தருவது
ம.இ.காவின் பொறுப்பு. ஆனால் ஏதோ அரசவையில் வந்து கவிதை பாடும் புலவனுக்கு
தரும் வெகுமதி போல நமது அரசியல் தலைவர்கள் இலக்கியத்திற்குப் பெரும் தொண்டு
செய்யும் பாவனையில் எழுத்தாளனுக்குத் தரும் சில்லரைகள் எழுத்தாளனை
அவமானப்படுத்துவது போல உணர்கிறேன். நமக்குத் தேவை அவர்கள் சில்லரை அல்ல.
மலாய் இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் பணம் செலவளிக்கும் அரசிடம் தமிழுக்கான
தொகையை கேட்டு ஒரு நிரந்த தீர்வுக்கு வழிவகுக்காமல், அதற்கான ஒரு முறையான
அமைப்பை உருவாக்காமல், புத்தக அச்சு செலவை சரிகட்ட "உங்க திகதிக்காகக்
காத்திருக்கிறேன் டத்தோ..." என்று எழுத்தாளன் அரசியல்வாதிமுன் நிற்பது
இழிவாகப்படுகிறது. நான் சரவணனை உன் கடமையை செய் என்கிறேன்... அவர் ஒரு
தியாகியின் தோரணையைக் காட்டியவுடன் எனக்கு அது தேவையில்லை என்று பட்டது.
அந்த நிமிடமே அவர் உதவி தேவை இல்லை என்று முடிவெடுத்தேன்.
அந்த இரவு எனக்கு உண்மையில் தூக்கமில்லை. அதிகாரம் எவ்வாறெல்லாம் ஒருவனை
அடிமையாக்குகிறது என்றே எனது யோசனை இருந்தது. தொடர்ந்து வல்லினத்தை
நடத்துவது எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நினைக்கையில் அச்சமாக
இருந்தது. நாமாக வலிந்து திணித்துக்கொள்ளும் சில கடமைகளுக்கு நாமே
அடிப்பணிந்து நம்மை சமரசத்தில் ஈடுபடுத்துவது தொடர்பான தெளிவு பிறந்தது.
மறுநாள் டாக்டர் சண்முகசிவாவுடனும் நண்பர் யுவராஜன் மற்றும் சிவாவிடம் பேசி
வல்லினத்தை அகப்பக்கமாகக் கொண்டுவந்தேன். அன்று நான் எடுத்த அந்த முடிவு
எத்தனை சுதந்திரமானது என்று இப்போது புரிகிறது. ஒருவேளை நான் சரவணனிடம்
பணம் வாங்கியிருந்தால் அடுத்த நிமிடமே அவர்கள் அடிமை பட்டியலில் நானும்
இடம்பெற்று சிவத்தின் அனுமதியில்லாமல் அவருக்கு ம.இ.காவில் முக்கியப்பதவி
வழங்கி அவரைக் கேட்காமலேயே அவர் facebookல் படத்தையும் எடுத்ததை எப்படி
வெட்கம் இல்லாமல் சொல்கிறாரோ அப்படிதான் நானும் புலம்பவேண்டி
வந்திருக்கும்.
என்னைப் பொருத்தவரையில் ஒரு விஷயத்தில் மிக உறுதியாக இருக்கிறேன்.
இந்தியர்களைப் பிரநிதிக்கும் எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, நமது மொழி,
கலை, இலக்கிய வளர்ச்சிக்காக அரசிடம் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து
பணத்தைப் பெற்றுத்தர வேண்டியதும் எவ்வாறு அரசிடம் இருந்து பணத்தைப் பெறலாம்
என வழிகாட்டுவதும் அக்கட்சியின் கடமை. இவ்வாறு வழங்கப்படும் பணம் தனி
ஒருவரின் வங்கிக்கணக்கில் முடங்கிக் கிடக்காமல் தொடர்ந்த இலக்கிய
வளர்ச்சிக்கு வழிவகுக்க வேண்டும் என விரும்புகிறேன்.
மேலும் ஒன்றை இங்கே தெளிவு படுத்த விரும்புகிறேன். நாம் அரசிடமோ
அல்லது தொழிலதிபர்களிடமோ பெறப்படும் பணம் இறுதியில் எங்கு சென்று
சேர்கிறது என்பதிலிருந்துதான் பணம் பெறுவதின் அடிப்படை நோக்கம்
உள்ளது. கலை இலக்கிய விழாவிற்காக நான் பெற்ற பணம் என் சொந்த
தேவைக்கானதல்ல. அப்பணத்தில்தான் சந்துருவின் ஓவியத்திற்கும் ஸ்டார்
கணேசனின் நிழல்படத்திற்கும் கண்காட்சி நடத்தினேன். இரண்டு
புத்தகங்களை வெளியீடு செய்தேன் (மஹாத்மன் சிறுகதைகள் மற்றும்
சிவத்தின் மொழிப்பெயர்ப்பு கவிதை). எனது சொந்த செலவில்தான் எனது
கவிதை புத்தகத்தையும் அச்சிட்டேன். இதையெல்லாம் விளம்பரம் செய்து
கொள்ளும் நோக்கில் இங்கு கூறவில்லை, ஒரு பொது கலை வளர்ச்சிக்காக
பணம் பெறுவது தவறில்லை என்பது என் கருத்து. ஆனால் அப்பணம்
மீண்டும் பொது வளர்ச்சிக்கே பயன்பட வேண்டுமன்றி தனிநபர்
பணப்பைக்குச் சென்று சேரக்கூடாது. கலை இலக்கியம் வளரவேண்டும் என
மேடையில் அங்கலாய்ப்பவர்களும் இது போன்ற எந்தத் தரப்பினர்
செய்யும் முயற்சிகளுக்கும் உதவ வேண்டும் என எதிர்ப்பார்க்கிறேன்.
பொதுவாகவே மனிதன் அதுவும் எழுத்தாளன் கருத்துகளால் கட்டமைக்கப்பட்டவன். அது
வெறும் கருத்தாக மட்டுமே இருந்துவிடாமல் அக்கருத்தோடு தனது அகங்காரத்தையும்
இணைத்துக் கொள்கிறான். அக்கருத்து மறுக்கப்படும் போது அகங்காரத்திற்கு
வலிக்கிறது. சிவத்தின் குமுறலைப் பார்க்கும் போது என்னால் இதை தெளிவாக
உணரமுடிகிறது.
சிவத்தின் இன்னொரு கேள்வி 'ம.இ.கா மட்டமானதாகத் தெரிந்தால் காதல் இதழை
ம.இ.கா தலைவர் டத்தோ ஸ்ரீ சாமிவேலுவிடம் காண்பித்து, அதை ஏன் இதழில்
போட்டுக்கொண்டீர்கள்?' அதைத் தொடர்ந்து இணைக்கேள்வியாக 'அதற்கு நீங்கள்
பொறுப்பில்லையா?' என்று கேட்டுள்ளீர்கள். நான் பொறுப்பு இல்லை என்பதுதான்
என் பதில். 'அதற்கு நியாயம் உள்ளதா?' என்று கேட்டுள்ளீர்கள். என்னிடம் எந்த
நியாயமும் இல்லை. நான் அவ்விதழின் துணையாசிரியர் மட்டுமே. முழுமுற்றான
தீர்வு என்னிடம் இல்லை. தொடர்ந்து அடுத்தக் கேள்வியாக 'நீங்கள்
சொல்லப்போகும் நியாயமும் தெரிந்த கதைதான்...' என்று கூறியுள்ளீர்கள்.
தெரிந்தால் எதற்கு கேட்கிறீர்கள். நீங்களே பதில் சொல்லியிருக்கலாமே. எனக்கு
வேலை குறைவு இல்லையா? இங்கு நான் வலியுறுத்த விரும்பும் செய்தி
ஒன்றுள்ளது. ம.இ.காவிற்கும் சாமிவேலுவிற்கு என்ன சம்பந்தம்? அவர்
அக்கட்சியின் தலைவர் என்பதை தவிர! ம.இ.கா எனும் கட்சியின்
இயலாமைகளை, பின்னடைவுகளை, கீழறுப்புகளை நாம் சாமிவேலுவை வைத்து
மட்டும் மதிப்பிட இயலுமா என்ன? நான் ஒட்டுமொத்தமாக கட்சி குறித்து
பேசுகிறேன், சிவம் சாமிவேலு குறித்து பேசுகிறார். நான் குழம்பு
சுவைக்கவில்லை என்கிறேன், சிவம் கோழிக்கு ஏன் தீனி போட்டாய் என்கிறார்.
அடுத்து மிக முக்கியமாக விருது குறித்தும் சிவம் கூறியுள்ளார். சிலாங்கூர்
மாநில அரசாங்கம் வழங்கிய 'இளம் கவிஞர்' விருதைப் பெற்றுக் கொண்டதற்கான
கேள்வி அது. விருதுக்காக எழுத்தாளன் செய்து கொள்ளும் சமரசங்கள் பற்றி நான்
அவ்வப்போது விமர்சித்து எழுதியதுண்டு. இன்னாரின் மூலம் விருது கிடைக்கும்
என்பதற்காக அவரின் இலக்கியச் சுரண்டல்களுக்குத் துணை போகக் கூடாது என
பலமுறை கூறியுள்ளேன். அதேபோல விருது கொடுத்தார்கள் என்ற நன்றி
உணர்ச்சிக்காக மோசடிகளை ஆதரிக்கக்கூடாது என்றும் கூறியுள்ளேன். அதில்
இப்போது மாற்றமில்லை. மாறாக விருதைப் பெருவதை எப்போது நான்
தூற்றிப்பேசினேன் என சிவம்தான் நினைவு கூற வேண்டும். மேலும் 'ம.இ.கா
மட்டமாகவும் மக்கள் கூட்டணி மகத்தானதாகத் தெரிகிறதா?' என்று கேட்டுள்ளார்.
ஒருவேளை அப்படி எனக்குத் தோன்றினாலும் அதில் தவறென்ன இருக்கிறது. ம.இ.கா
ஆளும்கட்சி... மக்கள் கூட்டணி எதிர்க்கட்சி... இரண்டு கட்சியையும்
ஆதரித்துதான் ஆகவேண்டுமா என்ன? ஓட்டு செல்லாதே!
சிவம் கட்டுரையில் மிக முக்கியமான வரிகள் இவை. எனவே நானும் இதை
பயன்படுத்திக்கொள்ளலாம் என இருக்கிறேன். "முடிந்து போன, காலத்தால்
மறக்கடிக்கப்பட்டிருக்கும் பல்வேறு விஷயங்களை பற்றியும் என்னால் பேச,
விவாதிக்க முடியும்... நானும் அதை விரும்பவில்லை."
இந்தக் கட்டுரையில் சிவம் என்னோடு விடுவார் என்று பார்த்தால் ஜெயமோகன்,
எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன்வரை வம்பிழுத்துள்ளார். அதாவது கட்சி
சார்ந்த செயல்பாடுகள் ஒரு கவிஞனின் சுதந்திரத்தைப் பறிக்கிறது என்று நான்
கூறியதற்கு மாற்றாக 'ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன் என
பலரும் சினிமாவுக்கு வருகிறார்களே... அவர்கள் சிறைபடவில்லையா' என
கேட்டுள்ளார். நானென்ன கேட்பது ஏற்கனவே தினமலரின் இருந்த ஜெயமோகனின்
நேர்காணல் முழுக்கவே இதை அடிப்படையாகக் கொண்டதுதான். ஒரு வசதிக்காக அதை
இவ்வாறு சுருக்கலாம்:
'நான் ஒரு அரசாங்க ஊழியன். என் வாழ்க்கையில் பெரும்பான்மையான நேரத்தைச்
சொற்பமான சம்பளத்திற்காகச் செலவிட்டு இருக்கிறேன். ஆனால் ஒரு நாளைக்கு
அலுவலகத்தில் செலவிடும் நேரத்தை நான் சினிமாவில் செலவிட்டால் இதை விட பத்து
மடங்கு வருமானத்தை என்னால் ஈட்டமுடிகிறது. நேரத்தை மிச்சம் செய்து
கொடுக்கிறது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருப்பதற்கான சுதந்திரத்தைக்
கொடுக்கிறது. பயணத்திற்கான சுதந்திரத்தைக் கொடுக்கிறது. நான் இலக்கியத்தை
கைவிட்டு சினிமாவுக்கு போகவில்லை. அரசாங்க வேலைக்கு பதிலாக சினிமாக்கு
போயிருக்கேன்.' (http://www.jeyamohan.in/?p=7301)
ஜெயமோகனோ அல்லது அவரைப் போன்ற பிற எழுத்தாளர்களோ சினிமாவை ஒரு தொழிலாகப்
பார்க்கின்றனர். அது சம்பாதிக்கும் இடம். அது தவறும் இல்லை என்பது என்
கருத்து. நான் இங்கு கூறுவது அரசியல் கட்சி. சிவம் கட்சியோடு சினிமாவையும்
ஒப்பிடுவதில் ஒன்று தெளிவாகப் புரிகிறது. சினிமா போல அரசியல் கட்சியும்
சம்பாதிக்கும் இடம் என்று சிவம் புரிந்துவைத்துள்ளார். பிழைப்பு நடத்த
தோதான இடமாகத்தான் சிவம் கட்சியைப் பார்க்கின்றார். இந்த அடிப்படையில்
சிவம் கூறியது போல எனக்கு அரசியல் பார்வை மொண்ணையாகத்தான் உள்ளது.
இவ்வளவு பேசும் சிவம் குறித்து இரண்டு விஷயங்கள் மனதில் உறுத்துகின்றன...
1. யார் யாருடைய கவிதையையோ கட்டுரையில் இணைத்த சிவம் அந்த தீபாவளிக்
கவிதையை இணைக்கவில்லையே...
2. நான் மனதில் வேறொன்றை வைத்து கொண்டு சந்தடி சாக்கில் கூறுகிறேன்
என்கிறாரே... நான் மனதில் வைத்துள்ளதாக அவர் எண்ணுவது எதை?
இந்தக்கட்டுரையை முடிக்கும் தருணத்திலும் சின்னதாக மனதில் ஏதோ
நெருடுகின்றது. ஒரு தனிப்பட்ட புளோக்கில் வர வேண்டிய சிவத்தின் எதிர்வினையை
வல்லினம் இதழில் போட்டு அசுத்தத்தை ஏற்படுத்தியதல்லாமல் அதற்கான எனது
எதிர்வினையையும் இவ்விதழிலேயே பிரசுரிக்கும்படியாகிவிட்டது. வேறென்ன
செய்வது சிவம் கூறியது போல கேவலமான பெயரை ஒரே மாதத்தில் போட்டு
முடித்துவிட்டால் தொல்லை தீர்ந்ததல்லவா? அடுத்த எதிர்வினையையாவது அவர் வேறு
இதழ்களுக்கு அனுப்பினால் சரி!
|
|