|
கடந்த ஆனி மாதம் ஈஸ்ற் யோர்க் நகர மண்டபத்தில் ஆசிரியர் ஸ்ரீரஞ்சனி
விஜேந்திரா அவர்களின் 'நான் நிழலானால் சிறுகதைத் தொகுதி' விமர்சனக் கூட்டம்
மி்கவும் சிறப்பான முறையில் நடந்தேறியது.
விமர்சனக் கூட்டத்திற்கு தமிழ் ஆர்வலர் அனைவரையும் மிக எளிமையான முறையில்
அழைத்திருந்தார் ஆசிரியர். அவ்வண்ணமே கூட்டத்திற்கும் எண்ணிச் சொல்லக்
கூடியளவு கூட்டமே காணப்பட்டது. இருந்தாலும் அத்தனையும் தமிழ்க்காலவர்கள்.
தமிழ் வளர்க்கும் பெரியோர்கள். தமிழ்துறையில் வித்தகர்கள்.
கூட்டத்தை வரவேற்புரையுடன் அழகாக ஆரம்பித்து வைத்திருந்தார் விஜேந்திரா.
அன்றைய விமர்சனக் கூட்டத்தை தலைமைதாங்கி நடத்தியிருந்தார் உதயன் பத்திரிகை
ஆசியர் திரு. லோகேந்திரலிங்கம் அவர்கள். இவ்விடத்தில் என் கருத்தொன்றை
வைத்துச் செல்ல விரும்புகின்றேன். தலைமை பொருத்தும் கூட்டத்திற்கு மிகவும்
கச்சிதமாக அமைந்திருந்தது என் பார்வையில். தலைவர் சகலவிதத்திலும்
பொருத்தமானவராக திரு லோகேந்திரலிங்கம் அவர்கள் காணப்பட்டமை பாடராட்டாமல்
இருக்க முடியாது. பத்திரிகை வாயிலாக எழுத்தாளர்களை ஊக்குவிப்பதுடன் அவர்கள்
வளர்ச்சியிலும் பெரும்பங்கெடுத்துக் கொள்பவர் அவர். வருந்தியழைத்தாலும்
வாரார் பலர். ஆனால் அவர் பெருந்தன்மையுடன் எந்த விழாக்களிலும் கலந்து
சிறப்பிக்கும் பண்புடையவர். அது அவரின் தனிப்பட்ட சிறப்பு. அத்துடன்
ஆசிரியரின் எழுத்துக்கு சிகரம் வைத்தவரும் அவரே. எனவே ஆசிரியர் கதைகளின்
விமர்சனக் கூட்டத்திற்கும் தலைமை தாங்க அவரைவிட சிறந்த ஒருவரை தேடிட
முடியாது என்றால் மிகையில்லை என்பது என்வாதம். அத்தோடு அன்றைய விழாவில்
ஒவ்வொருவர் கருத்துக்கும் தன்கருத்தை ஆணித்தரமாக வைத்து எழுத்தாளர்களுக்கு
பக்கபலம் கொடுத்து நின்றமை பாராட்டற்குரிய விடயம்.
அடுத்து அன்றைவிழாவில் விமர்சகர்களாக எழுத்தாளர் நவம், கவிஞர் சுல்பிகா,
கவிஞர் சேரன், கலாநிதி மைதிலி தயாநிதி அமர்ந்திருந்தார்கள். நவம் அவர்கள்
ஆசிரியர் ரஞ்சினி அவர்கள் பொழுது போக்குப் படைப்பாளியாக இல்லாமல் சமூக
அக்கறையுள்ள படைப்பாளி என்றும் மாறிவரும் பெண்களின் பிள்ளைகளின் மனநிலைகள்
கதைகளில் அழுத்தம் திருத்தமாக பதியப்பட்டுள்ளன என்றும் தன் கருத்துரையில்
கூறியிருந்தார்.
கவிஞர் சுல்பிகா, தனி மனித அசைவுகளைபும் முரண்பாடுகளையும் உளவியல் நோக்கில்
கூறும் இப்படிப்பட்ட கதைகள் கலாச்சார அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடியவை என்று
தன்னுரையில் குறிப்பிட்டிருந்தார்.
சேரன் அவர்கள், மொழியியல் அடிப்படையில் நின்று பிறமொழிக்கு எழுத்துருக்
கொடுக்கையில் உள்ள சிக்கல் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். ஆங்கில மொழிக்கு
தமிழ் உருக்கொடுக்கையில் கருத்தும், கதையின் அழுத்தமும் குறைவடையும்
என்னும் கருத்து வெளிப்படுத்தப்பட்டது. அத்தோடு எந்த மொழியிலும்
இலக்கியவாதிகள் மட்டுமே பேசாப்பொருளைப் பேசுகின்றார்கள் என்று
குறிப்பிட்டதுடன் ஸ்ரீரஞ்சனியும் புலம்பெயர் மண்ணில் உள்ள பிரச்சனைகள்
பற்றி துணிவுடன் கூறியமை பற்றி எடுத்துக்காட்டி அவர் எழுத்துத் துணிவை
பாராட்டியிருந்தார்.
கலாநிதி மைதிலி அவர்கள் கலாச்சார காவிகளாகச் சிக்கித் தவிக்கும் பெண்களின்
மன உணர்வுகளை, புலம் பெயர் நாடுகளில் பெண்கள் அநுபவிக்கும் துன்பங்கள்
ஒடுக்கு முறைகள் என்பவற்றை சொல்லும் ஸ்ரீரஞ்சனியின் கதைகள் வாசகர்களை
சிந்திக்க வைப்பதுடன், குடும்பத்தை மையமாகக் கொண்ட இவர் கதைகள் புலம்பெயர்
இலக்கியத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கின்றன என்று
குறிப்பிட்டிருந்தார்.
பின்னர் சபையிலிருந்து சிலர் கருத்துத் தெரிவித்தனர். சிந்தனைப் பூக்கள்
பத்மநாதன் பிரபல்யமான பத்திரிகைகள் சஞ்சிகைகள் எல்லாவற்றிலும் இவர் கதை
வெளிவந்தமையின் சிறப்பினைக் குறிப்பிட்டுக் காட்டியதுடன் அக்கதைகளில்
எழுத்தாளரின் ஆற்றல் தெட்டத்தெளிவாகவே தெரிகிறது என்று சுருங்கக்கூறி
விளக்கியே வைத்தார்.
கவிஞர் கந்தவனம் அவர்கள் ஆசிரியர் வாழ்வுப் பிரச்சனைகளையே சுட்டிக்காட்டி
நிற்கிறது. அது சமுதாயப்பார்வையாகாது என்று குறிப்பிட்டதுடன், இலக்கிய
உலகில் ஆசிரியரது எழுத்து ஆரம்பபடிக்கல் என்றும் சமுதாயப்பிரச்சினைகள்
பலவற்றை எடுத்துக்காட்டி அத்துறையிலும் கதைகள் எதிர்காலத்தில்
வெளிவரவேண்டும் என்றும் குறிப்பிட்டமையே அவரது துணிச்சலான எழுத்தை ஏற்று
மேலும் எழுதப்படவேண்டும் என்று விதந்துரை செய்வதாக அமைந்தது என்பார்வையில்
அங்கு.
யாழ் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் கணபதிப்பிள்ளை அவர்கள் அவர்
கதைகள் முழுவதும் கருத்தூன்றி ஆர்வத்துடன் படித்ததாகவும், மிகவும்
உணர்ச்சிபூர்வமான அநுபவப் பகிர்வாக இருந்தது என்றும் குறிப்பிட்டமை, அவரது
கதைகள் ஒரு குடும்பத்தையோ, ஒரு தனிமனித பாத்திரத்தையோ குறிப்பிட்டு
நிற்கவில்லை. கதைக்கான கரு சமுதாய பொதுமையான நிகழ்வு, பிரச்சனை,
எடுத்துக்காட்டுவதாக அமைகிறது என்பதை எடுத்துக்காட்டியது என்றே
கூறவேண்டும்.
இவர்களுடன் ரஞ்சினி கதிர்; கவிஞர் சிவபாலு, எழுத்தாளர் குரு அரவிந்தன்,
சபையிலிருந்து எழுத்தாளர் ஜெகதீசன், திரு.முத்துலிங்கம், திரு.
கதிர்காமநாதன், கவிஞர் முரளி, திரு. தயாநிதி, திரு. ஸ்ரீகதிர்காமநாதன்
போன்றோரும் தம்கருத்துக்களை கூறி நின்றார்கள். மொத்தத்தில் ஒரு இலக்கிய
பரிமாற்றம் சிறுகதையின் அமைவு எதிர்கால எழுத்தின் தேவை, அதன் வடிவம்
என்பனவும் கதைகளின் விமர்சனத்தினூடே இழையோடிச் சென்றது புரிந்தது. இதுவரை
நாளிலும் இப்படியான ஒரு விமர்சனக் கூட்டத்தை யாரும் அமைத்துத் தரவில்லை.
இப்படியான அமர்வுகள் எழுத்துலகுக்கு அவசியம் என்பது அன்றைய நிகழ்வில்
புலனானது. இதனை அமைத்துக்கொடுத்த ஆசிரியரை மீண்டும் ஒருமுறை பாராட்டுவதுடன்
நன்றியும் கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
சமூக அக்கறையுள்ள படைப்புகளே நிலைத்து நிற்கும் என்று கூறிய எழுத்தாளர்
நவம் அவர்களின் கருத்துக்கிணங்க ஸ்ரீரஞ்சனி அவர்களின் எழுத்துக்களும்
நிலைத்து நிற்கும் என்பது என்கருத்து. அத்துடன் இது அவரின் இலக்கியப்
பயணத்தின் முதல் மைல் கல். தொடர்ந்தும் அவர் பல படைப்புக்களை இலக்கிய
உலகிற்கு வழங்க வேண்டும் என்று கேட்பதுடன். இந்நாள் வரையில் அவர் கதையின்
முதல் வாசகி என்ற அந்தஸ்தை எனக்களித்தை எனக்கு கிடைத்த பெருமை என்றும்,
தொடர்ந்தும் அவர் எழுத்துக்களை பிரசவித்ததும் கைகளில் ஏந்தும் முதல்
யாசகியாக இருக்க வேண்டும் என்று இத்தால் அவரை கேட்டுவைக்கிறேன்.
|
|