|
‘அவங்கள எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு. ஞாபகத்துக்கு வர மாட்டுது...’
மெதுவாய் முணுமுணுத்துக் கொண்டேன்.
‘யாரு?’ முணுமுணுப்பு காதில் விழ என் பார்வை நிலைக்குத்தியிருந்த மளிகை
கடையை நோக்கியவள், ‘லைட் யெல்லொ சாரி கட்டிருக்காங்களே அவங்களா?’ என்ற
கேள்வியோடு என்னை நோக்கினாள்.
‘ம்ம்... ஆமா... எனக்கு படிச்சு கொடுத்த டீச்சர் மாதிரி தெரியுது’
‘ஓ.. உனக்கு அவங்கள தெரியுமா? ரொம்ப பேரு அவங்கள டீச்சருனுதான்
சொல்லிருக்காங்க’
‘எங்க எதிர்த்த வீடு தள்ளி இரண்டாவது வீட்லதான் இருக்காங்க. இவங்க இங்கெ
வந்து கொறைஞ்சது பத்து வருஷம் இருக்கும். அதுக்கு முன்ன அந்த வீட்டுல சீனன்
இருந்தான் இவங்ககிட்ட வீட்ட வித்துட்டு ஜோகூர் பக்கம் போயிட்டான். ஆனா
இவங்கள பத்தி எந்த விசயமும் இங்க உள்ளவங்களுக்கு தெரியாது துர்கா..’ நான்
கேள்வியை முன்வைப்பதற்குள் மீண்டும் சொல்லி முடித்தாள் வித்யா.
‘அதெப்படி இத்தன வருஷமா ஒரே இடத்துல இருக்காங்க, தெரியாம போகும்?’ கார்
நிறுத்துமிடத்தை அடைந்து காரில் அமர்ந்து கொண்டோம்.
‘இங்க வந்ததுலே இருந்து இவங்க யாருகிட்டயும் ஒரு தடவ கூட பேசுனதே இல்ல..
நாங்ககூட இவங்க வந்த புதுசுலெ ஊமையா இருப்பாங்களோ நினைச்சோம். ஆனா கை ஜாடை
காட்டி கூட இவங்க பேசுனதில்ல. அதனால ஊமையா இருக்க முடியாதுனு நாங்களாகவே
முடிவு பண்ணிக்கிட்டோம்.’
அவள் சொல்வது அனைத்தும் எனக்கு விந்தையாகவும் வியப்பாகவும் இருந்தன.
‘எங்களால முதல்ல நம்ப முடியலதான். ஆனா போக போக இவங்க கொஞ்சம்
வித்தியாசமானவங்கனு புரிஞ்சிகிட்டோம். குறிப்பா கிள்ளான்ல இருந்து யாராவது
இங்க வந்தா இவங்கள தற்செயலா பார்த்தா அடையாளம் கண்டுக்குவாங்க.
அப்படித்தான் எங்க இடத்துல உள்ளவங்களுக்கு இவங்க டீச்சர்னு தெரியும்.
கிள்ளான் பக்கம் இருந்தவங்கனு தெரிஞ்சுச்சு. இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா
நாங்க இவங்கள பத்தி தெரிஞ்சுகிட்டது’ பச்சை நிற சமிக்ஞை விளக்குக்குப்
பிறகு கார் மீண்டும் நகர்ந்தது.
‘அவங்க பேரு கூட தேவினு யாரோ சொல்லியிருக்காங்க. உனக்கு படிச்சு
குடுத்தாங்களா?’
‘ஆமாம். மூனாம் வகுப்பு படிக்கறப்ப மெதமெதிக்ஸ் சொல்லி குடுத்தாங்க.
அதுக்கப்புறம் வேற ஸ்குல் மாத்தி போயிட்டாங்க. இருபது வருஷம் கழிச்சு
இப்பதான் பார்க்கறன் வித்யா’
கார் வித்யாவின் வீட்டுக் குடியிருப்பு பகுதியில் நுழைந்து மூன்றாவது
வீட்டு வரிசையைக் கடக்கும்பொழுது காரை மெதுவாக செலுத்தினாள்.
‘இந்த வீடுதான் அந்த டீச்சர் வீடு’ என இள நீல நிற சாயம் பூசப்பட்டிருந்த
வீட்டைக் காட்டினாள். வித்யாவின் வீட்டு எதிர்ப்புற வரிசையில் இரண்டாவது
வீடு. அந்த வீட்டைக் கடந்த பின்னரும் என் கண்கள் அந்த வீட்டை விட்டு
அகலவில்லை. திரும்பி பின்னால் பார்த்தேன். வித்யா அவள் வீட்டீன்
வெளிப்புறமே காரை நிறுத்தினாள். காரை விட்டிறங்கியும் சிறிது நேரம்
டீச்சரின் வீட்டையே பார்த்தேன். வீட்டை தெளிவாக பார்க்க முடிந்தது. பல
வருடங்களாக வீட்டுக்குச் சாயமே பூசவில்லை போலும். நிறம் மங்கி இருந்தது.
வீட்டைச் சுற்றிலும் சிமெண்ட் தரை. பூச்செடிகளோ மரங்களோ இல்லை. அதனால்
காய்ந்த இலைகள், பூக்கள் கொட்டாமல் தரை சுத்தமாய் இருந்தது. வெளிப்புற
இரும்பு கதவு, முன்புற வாசல் கதவு, ஜன்னல்கள் எல்லாமே மூடியிருந்தன.
வித்யாவின் வீட்டைப் போலவே தரை வீடு. கார், மோட்டார் சைக்கிள், சைக்கிள்
எதுவும் வீட்டின் முன் நிறுத்தி வைக்க பட்டிருக்கவில்லை.
‘டீச்சர் காடி ஏதும் வச்சிருக்காங்களா வித்யா?’
‘இல்ல துர்கா.. நடந்துதான் எங்கயும் போவாங்க. நம்ம எங்காச்சும் போகும்போது
நடந்து போறாங்களேனு காடிய நிப்பாட்டி கூப்டாலும் ஏற மாட்டாங்க. திரும்பி
கூட பார்க்காம போயிடுவாங்க’
வீட்டின் உள்ளே நுழைந்த போதும் என் எண்ணங்கள் யாவும் டீச்சரின் வீட்டின்
வெளியே நின்று கொண்டிருந்தன.
கூலிமிலிருக்கும் வித்யாவின் வீட்டுக்கு நான் வருவது இதுவே முதல் முறை.
என்னுடைய வீடு, குடும்பம் எல்லாம் சிலாங்கூரில் உள்ள ஷா ஆலாம் பட்டணத்தில்.
நானும் வித்யாவும் மலாயா பல்கலைக்கழகத்தில் ஒன்றாய்ப் படித்தோம். ஒன்றாய்
படித்தது நான்கு வருடங்களாக இருப்பினும் பல வருடங்கள் பழகிய ஆழ்ந்த நட்பு
எங்களுள் உருவாகியிருந்தது. படிப்பிற்குப் பின்னர் சொந்த ஊருக்கே திரும்பி
வேலை செய்ய தொடங்கிவிட்டிருந்தாள். ஐந்து வருடங்களுக்குப் பின்னர்
இப்பொழுதுதான் மீண்டும் சந்திக்கின்றோம். நீண்ட இடைவெளிக்குக் காரணம் என
வேலையின் மீது தாராளமாக பழி சுமத்தலாம். சந்தோசமாய் சுற்றித் திரிந்த காலம்
கடந்து களைப்பு, மன அழுத்தத்தை நிறைவில்லாமல் அள்ளித் தரும் வேலை
உலகத்திற்கு நுழைந்த இருவரும் இதைப் புரிந்து கொள்ள ரொம்ப நாள்
எடுக்கவில்லை. தொலைப்பேசி தொடர்பு எங்கள் நட்பின் ஆழத்தைக் குறைக்காமல்
நிலைநிறுத்திக் கொண்டிருந்தது. இப்போதுகூட வேலைப் பயிற்சிப்
பட்டறைக்குத்தான் கூலிம் வந்திருந்தேன். வேலை இடத்திலிருந்து என்னைப்
பயிற்சிக்கு அனுப்பி இருந்தார்கள். மூன்று நாட்கள் நடந்த பட்டறை
வியாழக்கிழமையோடு முடிவடைந்தது. அதன் பின்னர் வித்யா என்னை அவள் வீட்டுக்கு
அழைத்து வந்து விட்டாள். அதுவரையிலும் பட்டறைக்கு செல்ல வசதியாக
அருகிலிருந்த ஹோட்டலில் தங்கியிருந்தேன்.
‘நாளைக்கே கிளம்புனுமா துர்கா? இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போகலாம்ல?’
‘இல்ல வித்யா. நாளைக்கு நான் போய் ரெஸ்ட் எடுத்துட்டு திங்க கிழம வேலைக்கு
போணும். லீவு எடுக்க முடியாதுலா.’
‘சரி, ஆனா நீ திரும்பியும் வரணும். ஓகேவா?’
‘கண்டிப்பா வரேன் வித்யா’
‘அந்த டீச்சரை மீட் பண்ண முடியுமா?’ என் கேள்வியைக் காதில் வாங்கியவள்
என்னை நிமிர்ந்து பார்த்தாள்.
‘மீட் பண்றது கொஞ்ச கஷ்டந்தான். அவங்க வீட்டுக்கு போய் கூப்பிட்டா கதவ
தெறக்கவே மாட்டாங்க. காலிங் பெல் கூட இல்ல. இங்க வந்தப்புறம் வேலைக்கு
எங்கயும் போனதா தெரியலெ. வீட்டிலேதான் இருப்பாங்க. ஒருமுறைகூட போஸ்ட்மேன்
அவங்க வீட்டு முன்ன நின்னத நான் பார்த்ததில்ல. கல்யாண பத்திரிக்கை,
பெர்த்டெ கார்ட் குடுக்க கூப்டாலும் வெளியெ வர மாட்டாங்க. கொஞ்ச பேர் கோபமா
போயிடுவாங்க, கொஞ்ச பேர் போஸ்ட் போக்ஸ்ல போட்டுட்டு போவாங்க. ஆனா அது
போஸ்ட் போக்ஸ்லயே கிடக்கும். இதெல்லாம் அவங்க இங்க வந்த மொத வருஷம்
மட்டும்தான். அதற்கப்புறம் யாரும் கூப்டவும் மாட்டாங்க, போஸ்ட் போக்ஸ்ல
போடறதும் இல்ல.’ கடந்து விட்ட ஆச்சர்யமான விஷயத்தைச் சாதாரணமாக விளக்கினாள்
வித்யா.
‘ஏன் வித்யா அவங்கள எங்கயாவது பார்க்கறப்பயாவது பேசி பார்த்துருக்கலாமே?’
‘எத்தனையோ பேர் பேசிருக்காங்க. ஆனா அவங்க பேசவே மாட்டாங்க. முன்ன ஒரெ
ஸ்குலெ வேல செஞ்ச டீச்சர் கடைப்பக்கம் பார்த்தப்ப போய் பேசிருக்காங்க.
அவங்ககிட்டகூட இவங்க பேசலயாம். கடைகாருதான் சொன்னாரு. கடைகாரு விசாரிச்சப்ப
அவங்களும் தேவி டீச்சர் குடும்பத்தை பத்தி தெரியலெனு சொன்னாங்கலாம். அந்த
கடைக்குத்தான் தேவி டீச்சர் சாமான் வாங்க போவாங்க. மாசத்தில ஒரு முறை வாங்க
வேண்டிய சாமான்கள லிஸ்ட் போட்டு எடுத்துப் போவாங்களாம். கடைக்காரு போட்ட
வெலயக் குடுத்துட்டு ஏதும் பேச மாட்டாங்களாம்’
‘வித்யா நான் அவங்கள எப்படியாவது மீட் பண்ணனும். முடியுமா?’ ஆவலாய்
இருந்தது.
‘ம்ம்ம்... மீட் பண்ணனும்னா ஒரு வழிதான் இருக்கு. அவங்க தெனமும் காலையில
முன்னுக்கு இருக்கிற விநாயகர் கோயிலுக்கு போவாங்க. வேணும்னா நாளைக்கு காலைல
கோயிலுக்கு போலாம். ஓகேவா?’ யோசித்துச் சொன்னாள்.
‘ஓகே. நான் அவங்கள பாக்கணும்’ என் ஆவல் நிறைவேறும் தருணத்தை எண்ணி மனம்
குதூகலித்தது.
விளக்கை அணைத்துவிட்டு படுக்கையில் சாய்ந்த பின்னரும் கூட என்னைச்
சுற்றியிருந்த தேவி டீச்சரின் நினைவலைகள் மீளாமல் உறக்கத்தை நெருங்க
விடாமல் செய்து கொண்டிருந்தன.
நான் மரகத தமிழ்ப்பள்ளியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது தேவி
டீச்சர் கணிதப்பாடம் போதித்தார். கண்டிப்பானவர். அவர் வகுப்புக்குள்
நுழைந்தாலே வகுப்பறை முழுவதும் அமைதியான சூழலைத் தழுவிவிடும். மற்ற
சமயங்களில் அமைதி என்ற வார்த்தைக்கே இடமிருக்காது. கட்டொழுங்கு ஆசிரியர்
கடந்து போனால் மட்டும் சில நிமிடங்கள் அமைதி தலை காட்டும்.
கணிதத்தைக் கற்றுத் தரும் பாணி அவருக்கே உரிய தனித்திறமை. அவர் சொல்லிக்
கொடுக்கும் ஒவ்வொன்றும் மனதின் உள்ளே ஆழமாய் பதிந்து வேரூன்றி விடும்.
சுலபமான எடுத்துக்காட்டுகளைக் கொண்டு பாடத்தைத் தொடங்கி அதிலேயே எங்களைத்
திளைக்க செய்து சிரமமான கேள்விகளை எங்களையும் அறியாமல் உட்புகுத்தி நாங்கள்
சரியான விடையளிக்க செய்யுமளவுக்குக் கைத் தேர்ந்தவர். அந்த சமயத்தில்
வகுப்பில் உள்ளவர்கள் அனைவருமே கணிதத்தில் சிறப்புத் தேர்ச்சி
பெற்றுவிடுவோம். அவர் கொடுக்கும் வீட்டுப்பாடங்களைச் செய்து
முடிக்காவிட்டால் அவர் பார்வையே தீக்கனலாகி சுடுவதுபோல் இருக்கும். ஒரு
முறை என் வகுப்பில் தீபன் வீட்டுப்பாடத்தைச் செய்யாமல் வந்ததற்கு 200 முறை
தோப்புக்கரணம் போடச் சொல்லிவிட்டார். அதனால் ஒரு வாரம் அவனுக்கு ஏற்பட்ட
கால் வலி கணித வீட்டுப்பாடத்தை மறக்காமல் இருக்க செய்துவிட்டது. இறுதி
ஆண்டு தேர்வில் கணிதத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற்றபோது தோப்புகரணத்தையும்
அதனால் ஏற்பட்ட வலியையும் மறந்து மிகவும் மகிழ்ந்து போனான். தேவி
டீச்சரிடமே ‘ரொம்ப சந்தோசமா இருக்கு டீச்சர்’ என்றான்.
தேவி டீச்சர் விதைத்த கணித விருட்சம்தான் என்னுள் ஒரு ஆழ்ந்த வேரை
உருவாக்கி படிப்பை முடிக்கும் வரையிலும் கணிதத்தில் புள்ளிகள் சரியாமல்
இறுக்கமாய் பிடித்திருந்தது. பல்கலைக்கழகத்திலும் கணிதத்தில்தான் இளங்கலை
பட்டம் பெற்றேன். மூன்றாம் ஆண்டுக்குப் பின்னால் தேவி டீச்சர் பள்ளி
மாற்றலாகி சென்றுவிட்ட போதிலும் என் வாழ்க்கையில் கலந்துவிட்டிருந்த
கணிதத்தைப் போலவே அவருடைய நினைவுகளும் கலந்திருந்தன. மறந்திருந்த அவருடைய
குரலை நினைவுக்குக் கொண்டு வர முயன்று தோற்றுப்போனேன். ஏன் இப்படி மாறிப்
போனார்? எனக்குப் போதித்தப்போது எத்தனை வயதிருக்கும்?. அதற்குள் வேலை ஓய்வு
கிடைத்திருக்குமா? அப்படிப் பார்த்தாலும் இங்கே வந்ததிலிருந்து வேலைக்கு
போகலைனு வித்யா சொன்னாளே... ஆமாம்..இப்பதான் இண்டர்நெட்லயே வேல
செய்யலாமே..அவங்களோட குடும்பம் எங்க இருக்காங்க? குடும்பமே இல்லாமல்
இருந்திருக்குமா? இவங்களாகவே படிச்சி டீச்சராகியிருப்பாங்களா? இப்படி பல
கேள்விகள் என்னைச் சுற்றி மற்றுமொரு தடித்த வலையைப் பின்னி உறக்கம்
நெருங்காமலே இருக்க ஒரு தடுப்பாகி இருந்தது.
புரண்டு படுத்தேன். இவரின் மௌனதிற்கான காரணம் என்னாவாயிருக்கும்? திருமணம்
செய்து விவாகாரத்தில் முடிந்து, அவருடைய மனதில் தழும்பை உண்டு
பண்ணியிருக்குமோ? ஒரு வேளை காதல் தோல்வி பேரிடியைத் தாக்கி விழ
செய்திருக்குமா? இன்னும் என்னைச் சுற்றியிருந்த வலை பலமாய் இறுக்கமானது.
இந்த கேள்விக்கெல்லாம் தேவி டீச்சர் மட்டும்தான் பதில் சொல்ல முடியும்.
சுற்றியிருந்த வலையினூடே உறக்கம் எப்பொழுது புகுந்தது என்று தெரியவில்லை.
ஆறு மணிக்கு அலாரம் அடித்தபோது கண்களைத் திறக்கவே முடியவில்லை. தேவி
டீச்சரே வந்து தட்டி எழுப்பியதுபோல் இருந்தது. எழுந்து கிளம்பி நானும்
வித்யாவும் கோயிலுக்குப் போனோம்.
எதிர்பார்த்ததுபோலவே தேவி டீச்சர் வந்தார். சாதாரண நூல் புடவை
கட்டியிருந்தார். அவர் அணிந்திருந்த புடவை ரவிக்கை முழு கை வரை நீண்டு
முதுகையும் இடுப்பையும் முழுதுமாய் மறைத்திருந்தது. கழுத்தில் தங்க நகை
இல்லை. துளசி மாலை மட்டும் இருந்தது. காதில் மட்டும் ஒரு சின்ன தோடு.
நெற்றியில் கறுப்பு பொட்டும் திருநீறும். தலைமுடியை வாரி ஒற்றை சடை
பின்னியிருந்தார்.
நாங்கள் கோயிலைச் சுற்றி வந்து அமர்ந்துவிட்டோம். அவர் கும்பிட்டு வந்து
அமர்ந்தார். புறப்பட எழுந்தபோது இதுதான் சரியான தருணம் என்றெண்ணி எழுந்து
சென்று அவர் எதிராக நின்று ‘வணக்கம் டீச்சர்’ என கைகளைக் கூப்பினேன். அவர்
என்ன சொல்வார் என என் கண்கள், செவிகள் அனைத்தும் அவரை மட்டுமே உற்று
நோக்கின. அவர் ஏதும் உணராதவராய் சிறு மெல்லிய புன்னகையை மட்டும் உதிர்த்து
விட்டு நடந்தார். நான் மட்டும் அவர் செல்லும் திசையை நோக்கித் திரும்பி
நின்றேன். என் வணங்கிய கரங்கள் அப்படியே இருந்தன.
|
|