|

மேலே உள்ள படத்தை ஒரு முறை பாருங்கள்.
பார்த்து விட்டீர்களா?
நல்லது. அந்தப் படத்தில் இருப்பது என்ன என்று உங்களுக்குத் தோன்றுகிறது?
‘அது ஒரு மெழுகுவர்த்தியின் படம்”
இல்லை; இல்லை 'அது இரண்டு முகங்களின் படம்’
அந்தப் படத்தைப் பற்றி மேலே சொல்லப்படும் இரண்டு பார்வைகளில் எது சரி?
இரண்டுமே சரிதான். மேலே இருக்கும் படத்தை மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்
போது அது மெழுகுவர்த்தியின் படமாகவும், சற்று உற்று நோக்கும் போது இரண்டு
முகங்களின் படமாகவும் தெரிகிறது. இது ஜெர்மானிய உளவியல் சார்ந்த ஜெஸ்டால்ட்
(Gestalt) ஓவியம் ஆகும். இது போன்ற ஜெஸ்டால்ட் ஓவியங்கள் நிறைய
இருக்கின்றன. ஜெஸ்டால்ட் என்ற ஜெர்மன் சொல்லுக்கு ‘முழு வடிவம்’ (whole
form) என்று பொருள். நமது அன்றாட வாழ்வில் எத்தனையோ பொருட்களைப்
பார்க்கிறோம். ஆனால், அவற்றை முழு வடிவமாகப் பார்க்கிறோமா என்ற கேள்வியை
இந்த வடிவக் கொள்கை எழுப்புகிறது.
சரி. இப்போது ஓவியத்துக்கு வருவோம். இந்த ஓவியத்தை ‘மெழுகுவர்த்திதான்’
என்று அடித்துச் சொல்பவர்களை ‘மெழுகுவாதிகள்’ என்று அழைப்போம்.
‘முகங்கள்தான்’ என்று பிடிவாதம் பிடிப்பவர்களை ‘முகவாதிகள்’ என்று
அழைப்போம். ஆக, இந்த ஒரு படம் இரண்டு கோட்பாட்டுவாதிகளை உருவாக்கி விட்டது.
எப்படி ஒரு ஓவியம் இது போல் ஒன்றுக்கு மேற்பட்ட பொருளைக் கொண்டிருக்கிறதோ,
அது போலவே ஒரு சொல்லுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் உண்டு. உதாரணமாக,
‘படி’ என்ற சொல்லுக்கு படிப்பது, படிக்கட்டில் உள்ள படி, படிப்படியான
வளர்ச்சி, படி நிலை, படி என்ற அளக்கும் கருவி, படிந்து போவது, என்று அரை
டஜன் அர்த்தங்கள் இருக்கின்றன. அதே போல், பால் என்ற சொல் பசு தரும் பால்,
ஆண்பால்-பெண்பால் திணை போன்ற அர்த்தங்களைத் தாங்கி நிற்கிறது. ஆக, ஒரு
சொல்லுக்கும் அதன் பொருளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அர்த்தங்கள் கால
தேச வர்த்தமானங்கள் சார்ந்து ஆக்கிக் கொள்ளப்படுகின்றன. ஒரு சொல்லைப் போலவே
ஒரு பிரதியும் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்களைக் கொண்டது. பிரதியை
உருவாக்கும் ஆசிரியன் சொல்லும் அர்த்தம் ஒன்று. அதை வாசிக்கும் வாசகன்
புரிந்து கொள்ளும் அர்த்தம் வேறு. முன்னது கட்டமைப்பு (Construction).
இரண்டாவது கட்டவிழ்ப்பு (Deconstruction). உலகில் உள்ள எல்லா கலை,
இலக்கியம், தத்துவம் எல்லாமே கட்டவிழ்ப்பில் வேறு புதிய பொருளைத்
தருகின்றன. தெரிதா பல பிரதிகளைக் கட்டவிழ்த்துக் காட்டினார். பழைய வாசிப்பை
(Reading) தனது மறு வாசிப்பில் (Re-reading) தவறிய வாசிப்பு (misreading)
என்று சுட்டிக்காட்டினார். தெரிதா மேற்கத்திய பிரதிகளை கட்டவிழ்ப்பு செய்து
காட்டினார். நாம் ஒரு சங்க இலக்கியப் பாடல் ஒன்றை கட்டவிழ்த்துப்
பார்க்கலாம். கணியன் பூங்குன்றனார் இயற்றிய புறப்பாடல் இது. புகழ் பெற்ற
பாடலான இது உலகத் தமிழ் மாநாடு, தமிழ்ச் செம்மொழி மாநாடுகளில் முகப்பு
வரிகளாக ஏற்று கொண்டாடப் படுவது.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தணிதலும் அவற்று ஓர் அன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னாது என்றாலும் இலமே மின்னோடு
வானம் தான் துளி தலை இ ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப் படூம் புணை போல் ஆருயிர்
முறை வழிப்படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
இந்தப் புறப்பாடலின் முதல் வரியும், கடைசி இரு வரிகளும் பிரபலமானவை. தமிழன்
எல்லாம் என் ஊரே; அனைத்து மக்களும் என் உறவினரே என்று பிரகடனம் செய்வதாக
ஒரு வாசிப்பு உண்டு. அதே போல் கடைசி இரு வரிகளும் கணியன் பூங்குன்றனாரின்
பரந்த மனத்தை எடுத்துக் காட்டுவதாகவும் கூறுவார்கள். இடையில் உள்ள வரிகள்
பெரும்பாலும் பொருட்படுத்தப்படுவதில்லை. ஏனெனில், அந்த வரிகள் விதி வலியது,
நன்மை தீமை எல்லாமே விதிப்படிதான் நடக்கும் என்று புலம்புகின்றன.
பகுத்தறிவுக்கு எதிராக இருப்பதால் அந்த வரிகள் இருட்டடிப்பு
செய்யப்படுகின்றன.
மேற்கண்ட பாடலை நாம் மறுவாசிப்பு செய்து பார்ப்போம்.
இந்தப் பாடல் சங்க காலம் எனப்படும் ஒரு பண்டைய காலக்கட்டத்தில் எழுதப்பட்ட
பாடல். பண்டைய கிரேக்கத்தில் ஏதென்ஸ், ஸ்பார்ட்டா போன்ற நகர அரசுகள்
இருந்தன. அவற்றுக்கிடையே அடிக்கடி சண்டை நடக்கும். இதனால் அந்த அரசுகளை
போர் அரசுகள் (Garrison States) என்று குறிப்பிடுவார்கள். அதே பண்டைய
தமிழகமும் போர் புரியும் அரசுகளால் ஆளப்பட்டு வந்தது. சேர, சோழ, பாண்டிய
அரசுகள் சதா போரிட்டுக் கொண்டிருந்தது கவனிக்கத்தக்கது. ஒரு நாடு இன்னொரு
நாட்டின் மீது படையெடுத்து போரிட்டு வென்று விட்டது. இப்போது போரில் தோற்ற
நாட்டின் மீது, வெற்றி பெற்ற நாடு தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட வேண்டும்.
அதற்கு இலக்கியத்தின் மூலம் அறத்தை போதிக்க வேண்டும். இதற்கு உதவ முன்
வருகிறார் ஒரு புலவர். வெற்றி பெற்ற மன்னன் ‘இந்த ஊரும் என் ஊர்தான்; இங்கு
உள்ளவர்களும் என் உறவினர்கள்தான்’ என்று அறிவித்துத் தன் இருத்தலை
நியாயப்படுத்துகிறான். மேலும், ‘எல்லாம் விதிப்படிதான் நடக்கும்; நம்
கையில் ஒன்றுமில்லை.nஎனவே, தோல்வியடைவது உங்கள் விதி; வெற்றி பெற வேண்டியது
என் விதி அதன்படி நடந்து விட்டது. இனி நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை. நான்
ஜெயித்து விட்டதால் என்னைப் பெரியோன் என நான் மார் தட்டிக் கொள்ளவும்
மாட்டேன்; தோற்ற உங்களை சிறியோன் என் இகழவும் மாட்டேன். நாம் சமமாக ஒரே
நாட்டு மக்களாக வாழ்வோம்’ என்று செய்யுள் இயற்றிப் பாடுமாறு புலவரைப்
பணிக்கிறான். புலவரும் பரிசில் தொகையை மனக்கண்ணால் பார்த்துப்
பரவசப்பட்டவாறு அரசன் கூறிய கருத்தின் அடிப்படையில் பாடல் இயற்றுகிறார்.
அதுதான் இது. ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர் படத்துக்குப் பாடல் எழுதியவர்கள்
எம்.ஜி.ஆர் மனம் குளிரும் விதமாக ‘காலத்தை வென்றவன் நீ; காவியமானவன் நீ’
என்றெல்லாம் எழுதி பரிசில் பெற்றார்கள். இன்றைக்கு ரஜினிகாந்தின்
படங்களுக்குப் பாடல் எழுதுபவர்கள் அதே போல் ரஜினியை ஒரு அவதார புருஷனாகப்
போற்றிக் கொண்டாடி எழுதி அவர் மனதில் இடம் பிடிக்கிறார்கள். தொடர்ந்து
பாடல் எழுதும் வாய்ப்பும் பெறுகிறார்கள். இந்த வியாதி அந்தக் காலத்துப்
புலவர்களிடமிருந்து தொற்று நோயாகப் பரவி இன்றைய புலவர்களைப் பாதித்து
விட்டதோ என்னவோ.
சங்கப் பாடல்கள் ஒரே காலக்கட்டத்தில் உருவானவை அல்ல. வெவ்வேறு காலங்களில்
எழுதப்பட்ட பாடல்கள், பிற்காலத்தில் ஒன்றாகத் தொகுக்கப்பட்டன. அந்த அந்தக்
காலக்கட்டத்தில், தேவையின் பொருட்டு இப்பாடல்கள் இயற்றப்பட்டன. பின்னாளில்
அவற்றுக்கு உரை எழுத வந்தவர்கள் கால தேச வர்த்தமானத்தை மறந்து தங்கள் சொந்த
விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் ’வாசித்து’ விளக்கம் எழுதினார்கள்.
அதன் அடிப்படையில் கட்டப்பட்ட அர்த்தத்தை நாம் மறு வாசித்தலில்
கட்டவிழ்த்துக் கண்டடைய வேண்டியவர்களாக இருக்கிறோம்.
இதனை அறிவு உற்பத்தி என்று சொல்லலாம். மனிதனை மனிதன் கொன்று தின்னும் ஒரு
ஏற்ற தாழ்வான சமூகத்தில் அதை நியாயப்படுத்துவதற்கு அறிவு உற்பத்தி
தேவைப்படுகிறது. இதனை அதிகாரத்தின் உரையாடல் என்கிறார் ஃபிரெஞ்சு பின்
நவீனவாதியான மிஷல் ஃபூக்கோ. உற்பத்தி செய்யப்படும் அறிவுகளில் சில
சிந்தனைகள் சமூக மரியாதையைப் பெறுகின்றன. சில கருத்துகள் இகழ்ச்சியை
அடைகின்றன. அதிகாரத்தின் உரையாடலை முன் வைக்கும் அறிவுகள் மதிப்புக்கும்,
எதிரானவை மிதிப்புக்கும் ஆளாகின்றன.
ஏதென்ஸ் அரசு சாக்ரட்டீஸுக்கு மரண தண்டனை விதித்தபோது, அவர் உயிரைக்
காப்பாற்ற பலர் முயற்சி செய்தார்கள். அதன் விளைவாக ஏதென்ஸ் அரசு
சாக்ரட்டீஸ் விரும்பினால், அண்டை நாடான தெஸ்ஸாலிக்குத் தப்பித்துப் போய்
மரணதண்டனையில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று ஒரு சலுகை
அளித்தது. ஆனாலும் சாக்ரட்டீஸ் அதனை ஏற்கவில்லை. அவர் அரசு விதித்த
மரணதண்டனையை ஏற்றுக் கொண்டார். இதனை வரலாற்று ஆசிரியர்கள் சாக்ரட்டீஸ்
மாபெரும் வீரர். ஏதென்ஸ் அரசிடம் மன்னிப்போ அல்லது சலுகையையோ பெற விரும்பாத
தன்மானச்சிங்கம் என்ற ரீதியில் எழுதித் தள்ளுகிறார்கள். இதில் உள்ள
உண்மையைக் கட்டவிழ்க்கும் போது விஷயம் வேறாக இருக்கிறது. சாக்ரட்டீஸ்
காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட அறிவின் படி அரசு என்பது பெற்றோருக்குச்
சமம். தனனை ஆளாக்கிய பெற்றோரை ஒரு மகன் எப்படி அவமதிக்கக்கூடாதோ அதே போல்
தன்னைக் காக்கும் அரசையும் ஒருவன் அவமதிக்கக்கூடாது. சாக்ரட்டீஸ் அதன்படி
நடந்து கொண்டார். தனது அரசை தன் பெற்றோர் என்ற நிலையில் அவர் வைத்துப்
பார்த்தார். அரசு தரும் தண்டனையை அப்படியே ஏற்றுக் கொள்வது ஒரு நல்ல
(குடி)மகனின் கடமை என்று கருதினார். எனவே, அரசுக்கு எதிரான சிந்தனைகளைப்
பரப்பியவர் என்று குற்றம் சாட்டப்பட்ட ஒரு மனிதர் அந்த ‘அரசுக்குத் தனி
மனிதர்களை தகுந்தவாறு உருவாக்கிக்கொள்ளும் உரிமை உண்டு’ என்று நினைத்தது
ஒரு நகை முரண்.
இதனால் உண்மை, யதார்த்தம் போன்ற விஷயங்கள் பொதுவானவை அல்ல. ஒவ்வொருவரின்
பார்வைக்கும் ஒவ்வொரு விதமான தோற்றத்தைக் கொண்டவை என்பதை நாம் புரிந்து
கொள்ளலாம். ரஷ்ய சிந்தனையாளரான மிகயீல் பக்தின் கூறுவார்: ‘என்
முதுகுக்குப் பின்னால் இருப்பதை நீ பார்க்க முடியும்; நான் பார்க்க
முடியாது. அதே போல், உன் முதுகுக்குப் பின்னால் இருப்பதை நான் பார்க்க
முடியும்; நீ பார்க்க முடியாது. நாம் இருவரும் செய்து கொண்டிருப்பது ஒரே
செயலைத்தான். ஆனால் வேறு வேறு இடங்களில் இருந்து செய்து கொண்டிருக்கிறோம்.
நாம் இந்த உலகையும், நம்மையும் வேறு வேறு மையங்களிலிருந்து நோக்குவதால்
நமது இடங்கள் வேறுபடுகின்றன’
(தொடரும்)
|
|